அத்தியாயம் 1
அமெரிக்காவிலுள்ள மிஸஸ் ராக்ஃபெல்லரின் நாத்தனார் பெண் லோரிட்டாவும், நியூயார்க் நகரில் உள்ள யுனெஸ்கோ ஸ்தாபனத்தில் பணிபுரியும் மிஸஸ் மூர்த்தியின் மகள் வசந்தாவும் கலாசாலைத் தோழிகள். இணைபிரியா சிநேகிதிகள். கீழே தடுக்கி விழுவதாயிருந்தால் கூட, இருவரும் சேர்ந்தாற் போல் பேசி வைத்துக்கொண்டுதான் விழுவார்கள். வசந்தாவுக்கு சாக்லெட் என்றால் உயிர். லோரிட்டாவுக்கு ‘கமர்கட்’ என்றால் ‘லைஃப்’ !
"கமர்கட் வெரி நைஸ் ! ஐ லைக் இட் வெரி மச்! இங்கிலீஷ் நேம் போலவே இருக்கிறது" என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போவாள் லோரிட்டா !
வசந்தா, கும்பகோணத்திலுள்ள தன் பெரியப்பாவுக்கு லெட்டர் எழுதி, டின் டின்னாகக் கமர்கட்டுகளை நியூயார்க்குக்குத் தருவித்து லோரிட்டாவிடம் கொடுப்பாள். அந்த பைத்தியக்காரப் பெண், ஆசையோடு கமர்கட்டுகளை வாங்கித் தின்றுவிட்டு வசந்தாவுக்கு விலை உயர்ந்த சாக்லெட்டுகளாக வாங்கிக் கொடுத்துக் கொண்டிருப்பாள்!
மிஸஸ் ராக்ஃபெல்லரின் நாத்தனார் கேதரின் ஹஸ்பெண்ட் ஹாரி ஹாப்ஸும், கும்பகோணம் டி.கே.மூர்த்தியும் ஒரே ஆபீஸில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால் கேதரினுக்கும், மூர்த்தியின் மனைவி லோசனாவுக்கும் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு, ‘நாளொரு டிரஸ்ஸும் பொழுதொரு பவுடரு’மாக வளர்ந்து கொண்டிருந்தது.
ஒரு சமயம் கேதரினின் நாய் இறந்து போனபோது மிஸஸ் மூர்த்தி மூன்று நாள் தீட்டுக் காத்தாள்! அதைப்போலவே மிஸஸ் மூர்த்தியின் பனாரஸ் பட்டுப் புடவை சாயம் போய்விட்டது என்பதை அறிந்த கேதரின் துக்கம் விசாரிக்க வந்தாள்.
மிஸஸ் மூர்த்தி அடிக்கடி மெட்ராஸ் ஸ்டேட்டின் அழகு பற்றி கேதரினிடம் அளந்து விடுவாள்.
"எங்கள் தென்னிந்தியாவில் தென்னை மரங்கள் ரொம்ப ஒசத்தி. நியூயார்க் ‘ஸ்கைஸ்க்ரேப்பர்’களைப் போலவே உயரமாயிருக்கும். மரத்தின் உச்சியில் இளநீர்க் காய்கள் இருக்கும். அந்தக் காய்களுக்குள் வாட்டர் இருக்கும். அந்த வாட்டர் ரொம்ப ஸ்வீட்டாயிருக்கும்" என்பாள்.
"அப்படியா! அவ்வளவு உயரத்தில் போய் அந்தக் காய்களை எப்படி எடுப்பார்கள்? ஒவ்வொரு மரத்துக்கும் ‘லிஃப்ட்’ இருக்குமா?" என்று வியப்புடன் விசாரிப்பாள் கேதரின்.
மிஸஸ் மூர்த்தி சிரித்துக் கொண்டே, "லிஃப்டும் இருக்காது, படிக்கட்டும் இருக்காது. எங்கள் ஊரில் மனிதர்களே மளமளவென்று மரத்தின் உச்சிக்கு ஏறிப் போய்விடுவார்கள்" என்பாள்.
"இஸ் இட்? ஒண்டர்ஃபுல் ஆச்சரியமாயிருக்கிறதே!" என்பாள் கேதரின்.
"நீ ஒரு தடவை மெட்ராஸுக்கு வந்து பாரேன். அதெல்லாம் நேரில்தான் பார்க்க வேண்டும். சொல்லித் தெரியாது" என்றாள் மிஸஸ் மூர்த்தி.
"எனக்கும் மெட்ராஸுக்கு வர வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசைதான். அதற்கு நீதான் ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும்" என்பாள் கேதரின்.
"அடுத்த மாதம் என் டாட்டர் வசந்தாவுக்கு டாஞ்சூரில் மேரேஜ். பையனுக்கு டெல்லி செக்ரடேரியட்டில் வேலை. நீ, உன் ஹஸ்பெண்ட், உன் டாட்டர் மூவரும் வந்து விடுங்களேன்" என்றாள் மிஸஸ் மூர்த்தி.
"ஷயூர்! ஷ்யூர்!" என்றாள் கேதரின்.
‘டாஞ்சூர்’ என்றதும், கேதரின் மகள் லோரிட்டாவுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அவள் வசந்தாவின் மூலமாக டாஞ்சூர் பற்றி ஏற்கனவே நிறையக் கேள்விப் பட்டிருக்கிறாள். டாஞ்சூரில் வீதிகள் ரொம்பக் குறுகலாக இருக்கும். இரண்டு பேர் எதிர் எதிராக வந்துவிட்டால், அவர்களில் ஒருவர் இன்னொருவரைக் குனியச் சொல்லிப் ‘பச்சைக் குதிரை’ தாண்டிக் கொண்டுதான் போகவேண்டும். ‘கிரீன் ஹார்ஸ் ஜம்பிங்’ பார்ப்பதற்கு ரொம்ப வேடிக்கையாக இருக்கும்! டாஞ்சூர் டெம்பிள் வெரி பிக் டெம்பிள்! டெம்பிளிலுள்ள ‘புல்’ வெரி வெரி பிக். கோபுரத்தின் நிழல் கீழே விழாது. தினம் தினம் விழுந்து கொண்டிருந்தால் அதற்கு பலத்த காயம் ஏற்படும் என்பதற்காக சிற்பிகள் அவ்வாறு கட்டியிருக்கிறார்கள்.
டாஞ்சூர் ஃபிளவர் - பஞ்ச் (கதம்பம்), கேஷுநட் (முந்திரிப் பருப்பு), அம்ப்ரல்லா சில்லிஸ் (குடை மிளகாய்), தெருப் புழுதி (ரோட்-டஸ்ட்) எல்லாம் ரொம்ப பேமஸ்!
டாஞ்சூர் என்றதும் லோரிட்டாவுக்கு இவ்வளவு விஷயங்களும் ஞாபகத்துக்கு வந்தன. டாஞ்சூரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஒவ்வொரு நாளும் அவள் பிடரியை உந்தித் தள்ளியது. அதனால் இராத் தூக்கம் இல்லாமல் போய் விடவே, பகலிலேயே உறங்கிக் கொண்டிருந்தாள்.
"வஸண்டா! உன் மேரேஜுக்கு நான் டாஞ்சூர் வரப் போகிறேன். அங்கே கோகனட் ட்ரீ, டெம்பிள் டவர் பார்க்கப் போகிறேன்! ஒரு சாக்லெட் டப்பா நிறைய ‘ரோட்- டஸ்ட்’ டை அடைத்துக் கொண்டு வரப் போகிறேன். எனக்கு ரோட்-டஸ்ட் என்றால் ரொம்பப் பிடிக்கும். நியூயார்க் ஸிடி ரொம்ப ரொம்ப ஒர்ஸ்ட்! இங்கே ரோட்-டஸ்ட்டே கிடைப்பதில்லை. டாஞ்சூர் ஸிடி தான் ஜாலி!" என்றாள்!
மறுநாளே, மூர்த்தி தம்பதியர், தங்கள் மகள் வசந்தாவுடன் கேதரினையும், அவள் குடும்பத்தாரையும் கல்யாணத்துக்கு அழைப்பதற்காக அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.
"நாங்கள் அடுத்த வாரமே மெட்ராஸுக்குப் புறப்படப் போகிறோம். முகூர்த்தத்துக்கு நீங்கள் மூவரும் அவசியம் டாஞ்சூர் வந்துவிட வேண்டும். மெட்ராஸ் ஏர்போர்ட்டிலிருந்து உங்கள் மூவரையும் டாஞ்சூருக்கு அழைத்துச் செல்ல எங்கள் கார் காத்திருக்கும்" என்று கூறி, ஹாரி ஹாப்ஸிடம் முகூர்த்த அட்சதையும், மஞ்சள் நிறக் கல்யாணப் பத்திரிகையும் கொடுத்தார் மூர்த்தி.
‘ஒ எஸ்! வித் ப்ளெஷர்!’ என்று சொல்லிக் கொண்டே, ஹாப்ஸ் அந்தச் சிவப்பு நிற அட்சதையில் நாலைந்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்.
அதைக் கண்டபோது மூர்த்தி குடும்பத்தாருக்குச் சிரிப்பு வந்துவிட்டது!
"அட்சதையைத் தின்னக் கூடாது. அது மங்களகரமான சின்னம். அதை எங்காவது கண்ணில் படுகிற இடமாக ஒரிடத்தில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அதைப் பார்க்கும் போதெல்லாம் கல்யாணம் என்கிற ஞாபகம் வரும். முகூர்த்தத்துக்குப் போக வேண்டும் என்பதை அது நினைவுபடுத்திக் கொண்டிருக்கும்" என்றார் மூர்த்தி.
"ஒ, வெரிகுட் ஐடியா" என்றார் ஹாரி ஹாப்ஸ்.
மிஸஸ் மூர்த்தி குங்குமப் பரணியில் வைத்திருந்த குங்குமத்தைக் கேதரினிடம் நீட்டினாள். கேதரின் அதை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாள். வசந்தா சரிகை போட்ட பட்டுப் பாவாடையும், தாவணியும் அணிந்து ‘அட்ராக்டி’ வாயிருந்தாள். லோரிட்டாவுக்கு அந்தப் பாவாடையும், தாவணியும் ரொம்பப் பிடித்திருந்தன. தான் அதை அணிந்துகொள்ள வேண்டுமென்று பிரியப்பட்டாள். ‘லைஃப்’ தோழி ‘லைக்’ பண்ணும்போது, வசந்தா சும்மா இருப்பாளா? தன்னுடைய பாவாடையையும், தாவணியையும் அவளிடம் கொடுத்துக் கட்டிக் கொள்ளச் சொன்னாள். பதிலுக்கு லோரிட்டாவின் கவுனை வாங்கித் தான் அணிந்து கொண்டாள்.
பாவாடை தாவணி அணிந்து வந்த லோரிட்டாவுக்கு, வசந்தா சவுரி வைத்துப் பின்னி, பிச்சோடா போட்டு நெற்றியில் குங்குமத்தையும் இட்டாள்.
"உன்னைப் பார்த்தால் வெள்ளைக்காரப் பெண்ணாகவே தோன்றவில்லை. நீதான் கல்யாணத்தில் எனக்குத் தோழியாக இருக்க வேண்டும்" என்றாள் வசந்தா.
"நான் தோளியாக இருக்க வேண்டுமென்றால், நாள் ஒன்றுக்கு ஒரு பாஸ்கெட் கமர்கட் தரவேண்டும்" எனக்கு என்றாள், லோரிட்டா.
"கமர்கட் என்ன? நல்ல கமறாத கட்டாகவே வாங்கித் தருகிறேன்" என்றாள் வசந்தா.
லோரிட்டாவுக்குத் தோழி என்று சொல்லத் தெரியவில்லை. ‘ழி’ என்ற எழுத்தை அவளால் உச்சரிக்க முடியவில்லையாகையால், ‘தோளி தோளி’ என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். ஒருநாள் முழுவதும் வசந்தா லோரிட்டாவின் வீட்டில் தங்கி, ‘ழ ழா ழி ழீ ’ கற்றுக் கொடுத்தும், அவளுக்குத் தோழி என்று சொல்லத் தெரியாமல் போகவே, "எனக்கு நீ தோளியாகவே இருந்துவிடு - பரவாயில்லை. எனக்கு "ளி" சொல்ல வரும். ஆகையால் நான் உன்னைத் தோளி என்றே கூப்பிடுகிறேன்” என்றாள்.
"டாஞ்சூரில் ‘போர்’ அடித்தால் என்ன செய்கிறது வஸண்டா? என்று கேட்டாள் லோரிட்டா.
"நாம் இருவரும் சோழி வைத்துக் கொண்டு பல்லாங்குழி ஆடலாம்" என்றாள் வசந்தா.
"ஒ, சோளி,... பல்லாங்குளி! எனக்கு அது வராது."
"சரி சரி; ‘ழ’ வராத விளையாட்டாகப் பார்த்து உனக்குச் சொல்லித் தருகிறேன், கவலைப்படாதே!" என்றாள் வசந்தா. -
டி.கே.மூர்த்தி, அவர் மனைவி லோசனா, மகள் வசந்தா மூவரும் அடுத்த வாரமே இந்தியாவுக்குப் புறப்பட்டு விட்டார்கள். ஹாரிஹாப்ஸ், கேதரின், லோரிட்டா மூவரும் நியூயார்க் விமான கூடத்துக்கு வந்து அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள்.
அப்புறம் பத்து நாட்கள் கழித்து, ஹாப்ஸ் தம்பதியரும் அவர் மகளும் கல்யாணத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
டாஞ்சூரில் நாலுநாள் கல்யாணம் தடபுடல் பட்டது. ஹாப்ஸ் குடும்பத்தாருக்குத் தனி ஜாகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாலு நாளும் கேதரின் கவுன் அணியவில்லை. பதினெட்டு முழம் பட்டுப்புடவைதான். லோரிட்டாவுக்குப் பாவாடை தாவணிதான். ஹாப்ஸுக்கு வேஷ்டி அங்கவஸ்திரம் தான்.
நீளமான அந்தப் பட்டுப் புடவையைக் கேதரினுக்குக் கொசுவம் வைத்துக் கட்டி விடுவதற்குள் வசந்தாவின் அத்தைக்குப் பெரும்பாடாகிவிட்டது. அதைக் கட்டிக் கொண்ட கேதரின் நடக்கத் தெரியாமல் தடுக்கித் தடுக்கி விழவே, ‘வீல் சேர்’ வரவழைத்து, ‘போலியோ பேஷண்ட்’ போல் அதில் உட்கார்ந்தபடியே அங்கங்கு போய்க் கொண்டிருந்தாள். எல்லாப் பெண்களும் அவளை "கேதரின் மாமி, காப்பி சாப்பிட்டீர்களா? நியூயார்க் மாமி, மஞ்சள் பூசிக் குளித்தீர்களா?" என்று ஓயாமல் விசாரித்தபடியே இருந்தார்கள். சுமங்கலிப் பிரார்த்தனையின்போது, எல்லாப் பெண்டுகளோடும் சேர்ந்து அந்த நியூயார்க் மாமியையும் உட்கார வைக்காத குறைதான்!
ஹாரி ஹாப்ஸ் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு, கல்யாணச் சடங்குகளிலேயே கண்ணும் கருத்துமாயிருந்து படம் எடுப்பதும், குறிப்புகள் எழுதிக் கொள்வதுமாயிருந்தார். நாதசுர வாத்தியம், தவில், ஜால்ரா, தென்னங் கீற்றுப் பந்தல், ஒமப் புகை, வாழை மரம், தாலிச் சரடு, அம்மிக்கல், அருந்ததி, மருதாணி, கண் மை, இத்தனையும் பற்றிக் கேள்விமேல் கேள்வியாகக் கேட்டுக் குறிப்பு எடுத்துக் கொண்டார். சில சமயம் அவர் குறிப்பெழுதிக் கொண்டே ஒவ்வொரு இடமாகப் போகிறபோது, அவர் கட்டியிருந்த பஞ்ச கச்சம் வேஷ்டி பின்பக்கமாக அவிழ்ந்து, தரையெல்லாம் பெருக்கிக் கொண்டே போகும். வேஷ்டி அவிழ்ந்ததுகூடத் தெரியாமல் அவர்பாட்டுக்கு ஒடிக் கொண்டேயிருப்பார். அடிக்கடி அவிழ்ந்து போகும் பஞ்ச கச்சத்தை எடுத்துச் செருகிவிடுவது சாத்தியமில்லாமல் போகவே, அவர் போகிற இடத்துக் கெல்லாம் அவர் பஞ்ச கச்சத்தைப் பின்னாலேயே துக்கிப் பிடித்துக் கொண்டு செல்லத் தனியாகவே ‘பேஜ் பாய்’ (உடை தாங்கி) ஒருவனை நியமித்து விட்டார்கள்!
*****
"வாழை மரம் என்பது டாஞ்சூரில் நிறையப் பயிராகிறது. அதனால் அவற்றை வெட்டி வந்து பந்தல் முழுவதும் கட்டிவிடுகிறார்கள். வாழை இலைகளைச் சாப்பிடுவதற்கு உபயோகிக்கிறார்கள். காய்களை வெட்டிச் சமைத்து விடுகிறார்கள். வாழைப் பட்டைகளில் இருந்து நார் என்னும் ஒருவகை ‘த்ரெட்’ தயாரித்து அதில் பூத்தொடுக்கிறார்கள். வாழைக்கும் பூ உண்டு. ஆனால், அந்தப் பூவைத் தலையில் சூடிக் கொள்வதில்லை.
கல்யாணத்துக்கு முதல் நாள் ‘ஜான் வாசம்’ என்ற பெயரில் ஒரு ‘ப்ரொஸெஷன்’ நடக்கிறது. அப்போது ‘பிரைட் க்ரூம்’ ஸூட் அணிந்து கொள்கிறார். இந்த "ஃபங்ஷ"னின்போது மாப்பிள்ளை ஆங்கில முறையில் டிரஸ் செய்து கொள்வதால் ஒருவேளை இதை ‘ஜான் வாசம்’ என்று ஆங்கிலப் பெயரிலேயே குறிப்பிடுகிறார்களோ, என்னவோ?
ஜான்வாசம் என்பது பிள்ளையை மட்டும் காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லும் ஒரு ‘பங்ஷன்’. பந்துக்களும், நண்பர்களும் காரைச் சூழ்ந்து கொண்டு மெதுவாக நடந்து செல்கிறார்கள். எல்லோருக்கும் முன்னால் நாதசுரக்காரர்கள் போகிறார்கள். தவில் என்பது ‘டபிள் ஹெடட் இன்ஸ்ட்ருமெண்ட்’. இதை வாசிப்பவருக்குக் குடுமி உண்டு. இவர் ஒரு பக்கத்தை ‘ஸ்டிக்’கால் ‘பீட்’ செய்து கொண்டு, மறுபக்கத்தைக் கையால் அடிக்கிறார். எப்படி அடித்தாலும் தவில் கிழிந்து போவதில்லை. தாலி கட்டும் நேரத்தில் சிலர் ஆள்காட்டி விரலை வேகமாக ஆட்டி இவரைப் பயமுறுத்துகிறார்கள். உடனே தவில்காரர் பயந்து ‘டமடம’ என்று தவிலைக் கொட்டி முழக்குகிறார். அப்போது இவருடைய குடுமி அவிழ்ந்து போகிறது. உடனே வாசிப்பை நிறுத்திவிட்டுக் குடுமியைக் கட்டிக் கொள்கிறார். இவருக்குக் குடுமி கட்டுவதற்கென்று தனி ஆசாமி போட வேண்டும்.
மணப் பெண் என்பவள், தலையைக் குனிந்தபடி, எந்நேரமும் தரையைப் பார்த்தபடியே இருக்கிறாள். அவள் எதையோ தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருப்பவள் போல் தோன்றுகிறது. இதனால் ஃபோட்டோவில் அவள் முகம் சரியாக விழுவதில்லை. மணமகனுக்கும், மணப்பெண்ணுக்கும் முன்னால் ‘ஹோமம்’ செய்யப்படுகிறது. ‘சமித்து’ எனப்படும் குச்சிகளில் நெய்யை ஊற்றி ‘ஸ்மோக்’ உண்டாக்குவதற்கு ஹோமம் என்கிறார்கள். நெய்யை ஹோமத்தில் கொட்டி வீணாக்குவது நேருஜிக்குப் பிடிக்கவில்லை. எனக்கு நெய்யே பிடிக்கவில்லை. இந்த ‘ஸ்மோக்’ சுற்றி உட்கார்ந்திருப்பவர்களின் கண்களில் புகுந்து எரிச்சலை உண்டாக்குகிறது. கல்யாண மண்டபத்தில் ஹோமம் நடக்கிற முற்றத்தில் தொழிற்சாலைகளில் உள்ளதுபோல் ஒரு புகை போக்கி கட்டி, புகையை மேலே அனுப்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மணப்பெண் தாலி கட்டிக் கொள்வதற்கு முன்னால், கூறைச் சேலை கட்டிக் கொள்கிறாள். ஆங்கிலத்தில் இதை ‘Roof Saree’ என்று கூறலாம். மணப் பந்தலில் எல்லோரும் சப்பணம் போட்டுக் கொண்டு மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தட்சணை என்கிற ‘பூரி’ வழங்கப்படுகிறது. அதாவது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் ‘டிப்ஸ்’ தரப்படுகிறது. இந்தியாவில் வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் பணம் தருகிறார்கள். இது கொஞ்சம் கண்டிக்கத் தக்கது. ஆனாலும் சப்பணம் போட்டு உட்காரும் கலையில் இந்தியர்கள் வல்லவர்களா யிருக்கிறார்கள். இவ்வளவு நேரமாக மணப் பந்தலில் உட்கார்ந்திருப்பவர்கள், உடனே சாப்பாட்டுக்கும் அதே போஸில்தான் உட்காருகிறார்கள். இது எப்படித்தான் அவர்களால் முடிகிறதோ, தெரியவில்லை. இப்படிச் சப்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டிருப்பதற்காக அவர்களுக்கு இரண்டு ரூபாயும் கொடுக்கலாம், இருநூறு டாலரும் கொடுக்கலாம்.
பந்தலில் கூடியிருப்பவர்கள் எந்நேரமும் ‘சளசள’வென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் ஸ்திரீகள் புதுப் புடவைகளைக் கட்டிக் கொண்டு, குறுக்கும் நெடுக்கும் அலையும்போது உண்டாகும் ‘சரக் சரக்’ என்ற புடவைச் சத்தம் வேறு. இதனாலெல்லாம் மந்திர சத்தம் நம் காதில் சரியாக விழுவதில்லை.
தாலி கட்டும்போது மணப்பெண் தன் தந்தையின் மடியில் உட்கார்ந்து கொள்கிறாள். மணமகன், மனைவியாகப் போகிறவளின் எதிரில் நின்றுகொண்டு, அவள் கழுத்தில் தாலியைக் கட்டுகிறான். இவ்வளவு நேரம் செலவு செய்து திருமணம் செய்கிறவர்கள் தாலி கட்டிக் கொள்ளும் நேரத்தில் மணப்பெண் செளகரியமாக உட்கார்ந்து கொள்வதற்கு ஒரு சோபா செட் வாங்கிப் போட்டிருக்கலாம்.
அட்சதை எனப்படும் ‘ரைஸ்’களை ரெட் பவுடரில் கலந்து அவ்வப்போது மணமக்கள் தலையில் இறைக்கிறார்கள். ரைஸ்தான் தென்னிந்தியாவில் முக்கிய உணவுப் பொருள். அதை இப்படி வீணாக்குவது எனக்குச் சரியாகப் படவில்லை. என்னிடம் கொடுத்த எல்லா அட்சதைகளையும் நான் வாயில் போட்டுத் தின்றுவிட்டேன். அரிசியை ‘ரா’வாகச் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கிறது. அதை வீணாகச் சாதமாக்கிக் கொடுத்து விடுகிறார்கள். இவ்வளவு அரிசிகளையும் பெரிய பெரிய பாத்திரங்களில் போட்டுக் கொதிக்க வைக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு அரிசியை மட்டும்தான் கையில் எடுத்து நசுக்கி, வெந்து போய்விட்டதா என்று பார்க்கிறார்கள். இதற்குப் ‘பதம் பார்ப்பது’ என்று சொல்கிறார்கள். ஒரே ஒரு பருக்கையை மட்டும் எடுத்துப் பதம் பார்த்துவிட்டு, ஒரு பானைச் சோறும் வெந்துவிட்டது என்று எப்படித்தான் கண்டுபிடிக்கிறார்களோ, தெரியவில்லை! .
சாப்பாட்டில் அப்பளம் என்னும் வட்டமான ஒரு ‘வஸ்து’வைப் போடுகிறார்கள். ‘அதை எப்படி வட்டமாகச் செய்கிறார்கள்? எப்படி நொறுங்காமல் செய்கிறார்கள்?’ என்பதெல்லாம் விளங்காத மர்மங்களாயிருக்கின்றன.
தென்னிந்தியாவில் பாட்டிமார்கள் என்றொரு கூட்டம் இருக்கிறது. அவர்களால் தான் இவை தயாரிக்கப் படுகின்றனவாம். அப்பளம் தின்பதற்கு ருசியாக இருக்கிறது. நான் எவ்வளவோ முயன்றும் ஒரு அப்பளத்தைக்கூட அப்படியே முழுசாக வாயில் போட்டு விழுங்க முடியவில்லை. சாப்பிடுகிறவர்கள் இதைத் துண்டு துண்டாக்கிச் சாப்பிடுகிறார்கள். அப்பளத்தை உடைக்கும் போது, மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஏனெனில் துண்டுகளாக உடைத்துச் சாப்பிடுவதென்றால் அவ்வளவு பிரயாசைப்பட்டு வட்டமாகச் செய்திருக்க வேண்டியதில்லை அல்லவா? இன்னும் ஜவ்வரிசிப் பாயசம், காராபூந்தி, பருப்புத் தேங்காய், ஜாங்கிரி, இட்டிலி, கை முறுக்கு இவை பற்றிப் புரிந்து கொள்வதே கடினமாயிருந்தது."
இதெல்லாம் ஹாரி ஹாப்ஸ் எழுதி வைத்திருந்த குறிப்புக்களில் ஒரு பகுதிதான்.
நாலு நாள் கல்யாணத்தையும் பார்த்துக் களித்த பிறகு, ஹாப்ஸ் தம்பதியர் தஞ்சாவூர்ப் பெரிய கோயிலையும் கண்டு மகிழ்ந்துவிட்டு, அமெரிக்காவுக்குப் புறப் பட்டார்கள். அவர்களுக்கு ஒரு பாஸ்கெட் நிறையச் சீர் முறுக்கு, அதிரசம், தேன்குழல் முதலிய கல்யாண பட்சணங்களைக் கொடுத்து அனுப்பினாள் லோசனா!
அன்றைய விமானத்திலேயே ஹாரி ஹாப்ஸ் தம்பதியரும், லோரிட்டாவும் நியூயார்க் திரும்பிச் சென்றனர். மிஸஸ் ராக்பெல்லரிடம் டாஞ்சூரில் தாங்கள் கண்ட கல்யாண விமரிசைகளைப் பற்றி ஒரு ‘டிடெயில்’ கூட விடாமல், நாலு நாள் மூச்சு விடாமல் சொல்லித் தீர்த்தார்கள். ஹாரி ஹாப்ஸ், தாம் எடுத்துச் சென்ற புகைப்படங்களையும், குறிப்புகளையும் காட்டினார்.
அவற்றையெல்லாம் கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க, பார்க்கப் பார்க்க மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு ஒரே வியப்பாக இருந்தது. உடனேயே தென்னிந்தியர் கல்யாணம் ஒன்றைப் பார்க்க வேண்டும்போல் ஆசை ஏற்பட்டது. அவ்வளவுதான்; அமெரிக்காவில் ஒரு தென்னிந்தியத் திருமணம் நடத்துவதற்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள் என்று தம்முடைய கணவரிடம் கேட்டுக் கொண்டார் அந்தச் சீமாட்டி.
“ஆமாம்! நாங்கள் எவ்வளவுதான் வர்ணித்தாலும் அதையெல்லாம் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. தென்னிந்தியாவிலிருந்து ஒரு கல்யாண பார்ட்டியை வரவழைத்து, கல்யாணத்தை இங்கேயே நடத்திப் பார்த்தால்தான் எல்லாவற்றையும் விவரமாகத் தெரிந்து கொள்ள முடியும்" என்றார் ஹாப்ஸ்.
"ஆல் ரைட் வெரிகுட் ஐடியா!" என்றார் ராக்பெல்லர்.
உடனே, மிஸஸ் ராக்ஃபெல்லர் புதுடெல்லியில் உள்ள தன் சிநேகிதியை டிரங்க் டெலிஃபோனில் அழைத்து, ‘அமெரிக்காவில் தென்னிந்தியத் திருமணம் ஒன்று நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். அதற்காக எவ்வளவு செலவானாலும் சரி’ என்றாள்.