அத்தியாயம் 1

129.44k படித்தவர்கள்
23 கருத்துகள்

ண்டாளின் கோபத்தை நினைக்க நினைக்க, சந்தோஷமாக இருந்தது. யார் கோபப்பட்டாலும், அதைத் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது சந்தோஷம்தான். கோபம் மிருகத்தனமானது. ஒரு மனிதனிலிருந்து கோபம் வெளிப்படுகிறபோது, அவனிடமிருந்து பீறிடும் மிருகத்தனமான பார்வையும், சொல்லும், செயலும் வியப்புக்குரியன. வியப்புக்குரியன எல்லாம் சந்தோஷம் தருவன. வியந்து சந்தோஷப்படுவது, மனத்தில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்தப் புத்துணர்ச்சி, வாழ்க்கையை ரசமுள்ளதாகச் செய்கிறது. சந்திர உதயமும், சூரிய உதயமும், அலை கடலும், உயர்ந்த மலையும் சந்தோஷம் தருவது வியப்பினால்தான். இந்த வியப்பு ஓர் அமைதியான சந்தோஷம் தருகிறது. மனிதர்களின் கோபம் பல்வேறு வகைப்படும். எல்லாக் கோபமும் விலகிப் பார்க்க வியப்பு தரும். ஆண்டாளின் கோபம், வியப்பால் சந்தோஷத்தையும் கொடுத்தது.

“வாசுதேவன்... இன்னொரு தடவை அந்தப் பாட்டைப் படியும்...” மாருதியை ஓட்டிக் கொண்டே, மணி பின்சீட்டில் உட்கார்ந்திருந்த கிழவருக்குக் கட்டளையிட்டான். கட்டளையிட்ட பிறகு, முன்னேயிருந்த நிலைக் கண்ணாடியில் அவர் முகத்தை ஒருமுறை பார்த்தான்.

ஆழ்வார்ப்பேட்டையிலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை நோக்கி வேலைக்குப் போக, முக்கால் மணிநேரம் காரில் பிரயாணம் செய்ய வேண்டும்.

“முக்கால் மணிநேரத்தை நல்லபடியாகக் கழிக்கலாமே” என்று வாசுதேவன் சொன்னபோது, “எப்படி?” என்று மணி கேட்டான்.

“தினம் பத்துப் பாட்டு, திவ்யப் பிரபந்தம் படிக்கலாமா?” வாசுதேவன் அனுமதி கேட்டார். ஐம்பத்து மூன்று வயசான வாசுதேவனுக்கு திவ்யப் பிரபந்தம் வேதப் புத்தகம். பெரியாழ்வாரை முடிப்பதற்குள் அவர் பல முறை உணர்ச்சி வசப்பட்டுவிட்டார். கண்ணனைத் தாம்புக் கயிற்றால் கட்டிப் போட்டதைப் பாடலாய்ப் படித்தபோது, கண்ணீர் விட்டு அழுதார். கோபம் போல மனிதனின் அழுகையும் ஒரு விநோதமான விஷயம். ஆனால், இந்த வியப்பு சிறிது தாமதமாய் சந்தோஷம் தருகிறது. மறுபடி நினைவு கூரும் போது, சிரிப்பு வருகிறது.

“என்ன வாசுதேவன்... நேத்து அழுது ரகளை பண்ணிட்டீங்க...” என்று மறுநாள் கேட்டபோது, அவரும் நாணிச் சிரித்தார்.

“சிரமமாயிருந்தா படிக்க வேண்டாம்”.

வாசுதேவன் பரபரத்தார். “இதுல ஒரு சிரமமுமில்லை. முக்கால் மணி நேரத்த இப்படிச் செலவழிக்கறது மகாபாக்கியம். ஏ.சி. கார்ல ஓ.சி.ல ஏத்திண்டு போய், நடுவில நான் படிக்கிற பாசுரத்தையும் கேட்கறது சாதாரண விஷயமா? இருவத்தாறு வயசு யங்ஸ்டர் நீங்க. உங்களுக்குப் புடிச்ச விஷயம் ஆயிரம். இத்தனை ஆர்வமா இதக் கேட்டுண்டு வரேளே. ... இதுவே சந்தோஷம்.”

இன்ன வயசுக்கு இன்ன ஆர்வம் என்பது அவரவர் வளர்ப்பால் நிர்ணயிக்கப்படுகிறது. சூழ்நிலையால் உருப்பெறுகிறது. பள்ளிக்கூடத்தில் தமிழ் படித்ததே இல்லை. ஆபீஸ் வேலையில் தமிழ் புழங்க அவசியமில்லை. வாசுதேவனல்லாத மணியின் மற்ற நண்பர்களுக்குத் தமிழ் பேசக் கூடத் தெரியாது. இருபத்தி நாலு மணி நேரத் தினசரி வாழ்க்கையில், முக்கால் மணி நேரத் தமிழ் சுகமாக இருந்தது, புதிதாய்த் தெரிந்தது. மனசில் ஒரு பகுதி கார் ஓட்டியும் இன்னொரு பகுதி கவிதை கேட்டும் வந்தது, காரோட்டும் களைப்பைக் குறைத்தது. சில பாடல்கள் சந்த நயத்தால் கேட்டதுமே மனப்பாடமாகிவிட்டன. நடுவே ஒரு வரி மறந்து போக, நடுநிசியில் எழுந்து, அப்பாவின் லைப்ரரியைத் திறந்து பிரபந்தம் தேடி எடுத்து, 'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு... பல கோடி நூறாயிரம்...' என்று உரக்கப் படித்து ஒரு முறை மனனம் பண்ண, அப்பாவும் தன் அறையை விட்டு வெளியே வந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ன பண்ற?”

“பிரபந்தம் மனப்பாடம் பண்றேம்பா...”

“யாருடைய பாசுரம்?”

“பெரியாழ்வார்துப்பா.” 

“நேத்திக்கி டாலர் ரேட் தெரியுமோ?”

“முப்பத்தொண்ணு அம்பதுப்பா..” 

“பவுண்ட்?”

“அம்பத்தி நாலுப்பா” 

“நேத்திக்கி நம்ம ஷேர் என்னாச்சு தெரியுமா?”

“எட்டு ரூவா குறைஞ்சுதுப்பா. இருநூத்தி நாப்பத்து நாலு ரூபா ஒரு ஷேர்.”

“ஏன் தெரியுமா?”

“புரொடக்ஷன் மார்க்கெட் ரீச் பண்ணலை.”

“ஏன் ரீச் பண்ணலை?”

“ரா மெட்டீரியல் ப்ராப்ளம்.. இரும்புத் தகடு வந்து சேரலை. நாளைக்கு வரும்.”

“நாளைக்கு பாம்பேக்கு வருது. க்ளியர் பண்ணி மெட்ராஸுக்கு வரதுக்கு ஏழு நாள் ஆகும். ஏழு நாளைக்குள்ள ஷேர் எவ்ளோ குறையும் தெரியுமா? எவ்ளோ வதந்தி வரும் தெரியுமா?”

“முப்பது ரூபா குறையும்ப்பா. நிறைய வதந்தி வரும். வந்தா நல்லது. நம்ம ஷேரை நாமே வேற பேர்ல வாங்கலாம். இந்த மாதக் கடைசீல புரொடக்ஷன் இன்க்ரீஸ் ஆகும்போது நாமே விற்கலாம். பயப்பட வேண்டிய அவசியமில்லை.”

அப்பாவுக்கு மணியின் பதில் பிடித்து விட்டது. அப்பாவின் கம்பெனியில் மணிக்கு விற்பனை வேலை. ஆனால், கூவி விற்க வேண்டிய அவசியமே இல்லை. நாலு சக்கர வண்டியின் சக்கரங்களைத் திருப்ப, ஸ்டியரிங் ராட் என்கிற விஷயத்தை அவர்கள் உற்பத்தி செய்து கொண்டிருந்தார்கள். இந்தியாவிலுள்ள பதினாறு வகை வண்டிகளுக்கும் விதவிதமான அளவில் ஸ்டியரிங் ராட் தயாரிப்பதில் அவர்களே முதன்மையாய் விளங்கினார்கள். கார் கம்பெனிகளும், லாரி கம்பெனிகளும் காத்திருந்து வாங்கிக் கொண்டு போயின. ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனையாளர்கள் கெஞ்சி, காலில் விழுந்து, காசு கொடுத்துக் காத்திருந்து வாங்கிப் போனார்கள். கம்பெனியின் வருமானம். தொப்புளுக்கு மிஞ்சின கஞ்சி. உண்டு முடித்து ஏப்பம் விடுகின்ற லாபம். ஆனாலும் திட்டமிடுதலில் செய்த சிறு தவறினால் ஐம்பது சதவிகிதம் குறைந்தது. லோக்கல் இரும்பு வாங்கலாம். தரம் குறையும். இறக்குமதி இரும்புதான் என்று கைகட்டி நின்றதில், கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டுவிட்டது.

ஓர் அண்ணன், பம்பாயில் கப்பலுக்கு நகம் கடித்துக் காத்திருக்கிறான். இன்னும் ஓர் அண்ணன்,டெல்லியில் இன்னோர் இறக்குமதி லைசன்ஸ் விண்ணப்பித்துவிட்டு கைக்கு வர அலைகின்றான். மூன்றாவது அண்ணன், ‘ரிஜெக்டட்’ என்று தட்டப்பட்டு ஓரம் போடப்பட்ட ஸ்டியரிங் ராடுகளைச் சரி செய்ய முடியுமா என்று தவிக்கிறான். எண்ணூற்றி நாற்பது பேர் வேலை செய்யும் கம்பெனியில் பாதிப் பேர் பீடி பிடித்துக் கொண்டு கக்கூஸ் சந்தில் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்பா தூக்கமில்லாமல் தவிக்கிறார். அப்பாவால் அம்மாவும் கவலைப்படத் தொடங்கி விட்டாள்.

“பம்பாய்ல மான்ஸூன் பீரியட். கப்பல் கரைக்கு வந்து நிக்கறதுக்கே இரண்டு நாளாகும். மழை அடிச்சுப் பெஞ்சா, எறக்கறதெல்லாம் கஷ்டம். ஒருநாள் மழை இல்லாம இருந்தா, ரெண்டாயிரம் டன் இரும்பு ராடையும் வெளியே கொண்டு வந்துடலாம்.”

அம்மாவுக்கு டைனிங் டேபிளில் விஷயம் சொல்லப்பட்டபோது, “வந்துரும், நிச்சயம் வந்துரும்” என்று அடித்துச் சொன்னாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“நான் மாதவப் பெருமாளுக்கு வேண்டிண்டிருக்கேன், வெள்ளிக் கிரீடம் சாத்தறதா. கப்பல் வர்ற அன்னிக்கு மழையே இருக்காது பாருங்கோ.”

எல்லாரும் அவள் நம்பிக்கைக்கு ஆறுதலடைந்தார்கள். ஆனால். நம்பிக,கை இல்லாமல் இருந்தார்கள்.

“சரின்னு சொல்லாம இருக்கேளே?...” அம்மா அந்தக் காணிக்கைக்கு அனுமதி கேட்டாள். அப்பா தலையசைத்தார். கப்பல் பற்றிக் கவலைப்பட்டார். இரும்பு வந்து ஸ்டியரிங் ராட் தயாரித்து வெளியே போக பதினைந்து நாளாகும். தயாரிப்பைப் பிரித்து, தேசத்தின் நான்கு மூலைக்கும் அனுப்புவது மட்டும் மணியின் வேலை. மணியின் வேலை கூட இல்லை. மணியின் கீழ் வேலை செய்கிற சேல்ஸ் என்ஜீனியர்கள் வேலை. லேசான மேற்பார்வையும் கையெழுத்திடுதலுமே மணியின் காரியம். ஆனால், கப்பல் இன்னும் கண்ணுக்கே தென்படவில்லை. வேலையில்லை என்பதால், தொழிற்சாலைக்குப் போகாமல் இருக்கக் கூடாது. டிபார்ட்மெண்டின் தலைமை சுணங்கினால் கீழேயும் சுணங்கும்.

“போன வருஷத்து விற்பனையை எடு” என்று மிரட்ட வேண்டும். தயாரிப்பு முடிந்தால் யாருக்கு முதல் டெலிவரி என்று லிஸ்ட் போட வேண்டும். வேலையில்லாத வேலை செய்து கொண்டிருக்கும் நேரத்தை விட, பாசுரங்கள் ஈர்த்ததற்கு இந்த ஓய்வான நேரமும் காரணம். பாடலை ஊன்றிக் கவனித்து ஆண்டாளின் கோபத்தை இனம் கண்டு கொள்ள, வேறு வேலையில்லாததே காரணம்.

வாசுதேவன் பாடலைப் படிக்கத் தொடங்கினார்: 

“வானிடை வாழும்அவ் வானவர்க்கு

   மறையவர் வேள்வியில் வகுத்தஅவி 

கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து

   கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப

ஊனிடை யாழிசங் குத்தமற்கென்று

    உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்

மானிட வர்க்கென்று பேச்சுப்படில்

   வாழகில் லேன்கண்டாய், மன்மதனே!”

“வாசுதேவன்...?”

“சொல்லுங்கோ மணி”

“எவனோ ஆண்டாளை டாவடிச்சிருக்கான்யா....” 

“என்ன?”

“எவனோ சைட் அடிச்சிருக்கான்” 

“புரியலையே?”

“எனக்குப் புரியறது...” 

“எப்படி?”

“வீட்டு வாசல்ல எங்கேயோ போற மாதிரி குறுக்கு நெடுக்க நடந்து, இவளைப் பார்த்திருக்கான். எதிர் வீட்டுத் திண்ணைல ஒக்காந்து எதையோ பேசற மாதிரி இவளைக் கவனிச்சிருக்கான். இவ நம்ம லேடி அப்படின்னு கமெண்ட் அடிச்சிருக்கான்...”

“கிருஷ்ணா ... கிருஷ்ணா ...” வாசுதேவன் அந்தத் தவற்றைத் தான் செய்தது போலக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

“ஆண்டாளுக்குக் கோவம் வந்துடுத்து. இட்ஸ் நாட் ஃபார் யுன்னு எச்ச துப்பியிருக்கா. போடா நாயேன்னு சொல்லியிருக்கா.”

“எது?” வாசுதேவன் வியப்பாய்க் கேட்டார். 

“உன்னித்தெழுந்த என் தட முலைகள்...”

வாசுதேவன் மௌனமாக இருக்க மணி தொடர்ந்தான்.

“மறையவர் வகுத்த வேள்வியவி... அதாவது, யாகத்தில் கிடைத்த பிரசாதத்தை நாயோ, நரியோ இப்படியும் அப்படியும் நடந்து போய் நோட்டம் போட்டு கொஞ்சம் தைரியமாகி கிட்டவந்து மோந்து பாக்கற மாதிரி, என்னைப் பார்க்கறே. ஜாக்கிரதைன்னு சொல்லியிருக்கா. கிட்ட வராதேன்னு சொன்னது மட்டுமில்லை. இது யாருக்குன்னும் டிக்ளேர் பண்ணிட்டா. ‘ஊனிடை யாழிசங் குத்தமற்கென்று

- உன்னித்தெழுந்த என் தட முலைகள்’னு சொல்லிட்டா. ஏன் சார் கத்தி, கதைன்னு சொல்லாமே, கைல விசேஷமா இருக்கற சக்கரத்தைச் சொல்லாத சங்குன்னு சொன்னா...?”

“தெரியலையே?”

“எனக்குத் தெரியறது. இந்த நரியை ஓட்ட, கத்தியும் வேண்டாம். கதையும் வேண்டாம். 'பம் பம்'னு ஒரு சங்கு முழக்கம் கொடுத்தாப் போறும். வாலை இடுக்கிண்டு நரி தலைதெறிக்க ஓடிப் போயிடும். விஷ்ணுவுடைய நேரடியான இருப்புக் கூட வேண்டாம். வரார்ங்கற சத்தம் போறும். வாசலை விட்டுக் காணாதே ஓடிப் போயிடும்..”

“நன்னாருக்கு நீங்க சொல்றது... ரசனை... ரசனை...”

வாசுதேவன் பவ்யமாய் வியந்தார். 

“இன்னொண்ணு கூடத் தோண்றது...”

“ஆண்டாளின் தடமுலைகளும் விஷ்ணுவின் சங்கும் ஒன்று. உலகமே நடுங்குகிற சங்கை ஏந்துபவன் கைக்கே என் முலைகள் சொந்தம். நாய்ப் பசங்களுக்கு இல்லைன்றா...”

ஐம்பத்து மூன்று வயது வாசுதேவன், ஆண்டாளின் முலைகளைப் பற்றி எண்ணப் பயந்து போய் மௌனமாய் இருந்தார்.

“ஆனா... ஆண்டாளுக்கும் பயம். கிருஷ்ணன் வருவாரோ மாட்டாரோன்னு சந்தேகம். சின்ன அவ நம்பிக்கை. ஒரு வேளை, கிருஷ்ணன் வராம இருந்து, எதிர் வீட்டு நாயைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆயிடுத்துன்னா ?..”

“கிருஷ்ணா...கிருஷ்ணா!” வாசுதேவன் மறுபடியும் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

“ 'வாழகில்லேன் கண்டாய் மன்மதனே' அதானே கடைசி வரி? செத்துப் போயிடுவேன்றா. வாழ மாட்டேன்னு சொல்லலை. வாழ முடியாதுன்னும் சொல்லலை. வாழகில்லேன் என்ன வரி அது? வாழகில்லேன்... அடுத்த வார்த்தை, 'கண்டாய் மன்மதனே' செத்துப் போயிடுவேன் - பாத்துக்கோ, அங்கதான் கோபம்... கிட்டத்தட்ட சத்யம் பண்ற அளவுக்குக் கோபம். தற்கொலை பண்ணிப்பேன்ற கோபம். நரின்னு திட்றதை விட அதிகமான கோபம்.”

“அடடா., அடடா.” வாசுதேவனுக்கு அதற்கு மேல் பேசத் தெரியவில்லை. முன்சீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்த மணியை முன்நோக்கிக் குனிந்து வியந்து பார்த்தார். 'பெரியவருடைய நாலு பசங்கள்ல இவங்கிட்டதான் ஏதோ ஒரு பொறி இருக்கு.’

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

வாசுதேவன் டெஸ்பாட்ச் கிளார்க். கம்பெனி தொடங்கியதிலிருந்து இருபத்தேழு வருடமாய் அதே வேலை. குடுமியும் திருமண்ணுமாய் இருக்கிற வாசுதேவனுக்கு, பெரிய பொறுப்புகள் கொடுத்து கம்பெனி கஷ்டப்படுத்தவில்லை. சம்பளத்திலும் குறை வைக்கவில்லை. வயசும் வைதீகத்தனமும் அவருக்குத் தனி மரியாதையை கொடுத்திருந்தன. அதைத் தவிர, கம்பெனியின் முதலாளியின் பிள்ளையோடு காரில் வருவது மதிப்பைக் கூடுதலாக்கியிருந்தது.

“எனக்கு பஸ் பிரயாணம் முடியலை. உங்களோட கார்ல வரலாமா...?” கை கூப்பி மணியைக் கேட்டபோது பயமாகத்தான் இருந்தது.

“தாராளமா வாங்களேன். தனியா வர்றதுக்கு எனக்கும் போரடிக்குது.”

முதல் இரண்டு மாதம் 'ஹிண்டு' பேப்பரை உரக்கப் படித்துக் கொண்டு வந்தார். பிறகு திவ்யப் பிரபந்தம் படிக்கலாமா என்று தயக்கமாய்க் கேட்டார்.

மணி சரியென்று தலையசைத்து, பிறகு தன்னை ஈடுபடுத்திக் கொள்ள அவன் குணம் கண்டு வியந்தார். சந்தோஷமானார். “இது படிச்சா நல்லது. போற வேளைக்குப் புண்ணியம் கிடைக்கும்” என்று சொல்ல, அவன் உடனே மறுத்தான்.

'இல்லை; தமிழ் நல்லாருக்கு,” என்று பதில் சொன்னான். சில பாடல்களை பலமுறை கேட்டு மனனம் செய்தான்.

“உங்களுக்கு நான் படிக்கறது உபயோகமாக இருக்கா?” வாசுதேவன் வலிய பதக்கம் வாங்கிக் குத்திக் கொள்ள முயன்றார்.

“தெரியலை.” நறுக்கென்று பதில் சொன்னான். “நாளைக்கு உபயோகப்படும்னு படிக்கலை. கேக்கற நேரம் நல்லாருக்கு; அது போறாதா?”

'போறும்.. போறும்” வாசுதேவன் புரியாமல் பதில் சொன்னார். இன்று வேறு கோணத்தில் அந்தப் பாடலை அவன் பார்ப்பதைக் கேட்டு அவரும் ஆர்வமானார். மூத்தவன் முசுடு. இரண்டாமவன் எதற்குக் கோபப்படுவான் என்று தெரியாது. மூன்றாமவன் வேலையைத் தவிர வேறெதுவும் பேசாதவன். இவன் மட்டுமே எல்லோரையும் விட, இளமையாய், இனிமையாய் இருப்பவன். இந்த மூன்று பேரும் மணியை அதிகம் மதிப்பதில்லை.

மணியும் இதுபற்றிக் கவலைப்படுவதில்லை. சேல்ஸ் டிபார்ட்மெண்ட், கத்தல் கூச்சல் இல்லாது ஸ்நேகிதமாய் இயங்க அவன் தலைமையும் காரணம்.

“அந்தக் 'காப்பதும், மோப்பதும் செய்தொப்ப.' அந்த வரியில ஒரு டிராயிங் போட்டாங்கல்ல அந்த அம்மா?..”

“எந்த அம்மா ?”

“ஆண்டாள்.”

“ஆமா... ஆமா...”

“ஒரு கிராமம்; ரெண்டு பக்கமும் ஓட்டு வீடு. எல்லார் வீட்டிலும் திண்ணை. பெரிய மரக்கதவு. ரெண்டு வீட்டு வரிசைக்கும் நடுவுல மண் தெரு. குடுமி வச்சிண்டு, கருப்பா ஒல்லியா ஒரு பய இடுப்புல நாலங்குல வேஷ்டியோட இப்படியும் அப்படியும் அலையறான்... பதினாறு பதினேழு வயசிருக்கும். ஆண்டாளுக்குப் புரிஞ்சு போச்சு. 'இவனுக்கா நான்.' - அப்படீன்னு ஓர் ஆத்திரம் வருது. 'என்னைச் சுத்தாதே'ன்னு ஓர் எரிச்சல் வருது. கூடவே பயமும் வருது. ஒரு செகண்ட், ‘இவனா என் புருஷன்'னு யோசனை பண்றா. யோசனையை உதறிட்டு, 'செத்துருவேன்டா'ன்னு கத்தறா. நான் சொல்றது சரியா?”

“ரொம்ப சரி. இதுக்கு வேற ஓர் அர்த்தமும் சொல்றதுண்டு...”

“என்ன அர்த்தம்?” மணி திரும்பாமல் கேட்டான்.

“இந்தக் கவிதைய நான் என் கவிதையா எடுத்துக்கறேன். என்னை ஆண்டாளாப் பார்க்கறேன். என் மனசோட என் மனசு பேசறது. இறைவனுக்குன்னு என் மனம், உடல், ஆவியை அர்ப்பணம் பண்ற ஆசை இருக்கு; தாபம் இருக்கு. ஆனா, இந்த உலகம் என்னை வேறு வேலைக்கு உபயோகப்படுத்தப் பார்க்கறது. மிக அற்புதமான பிறவியான நான் நாய்க்கு, நரிக்கு - அதாவது உலக ஆசைகளுக்கு இரையாயிடுவேனோன்னு பயமா இருக்கு. அப்படி ஆகறதைவிட, செத்துடறது உத்தமம். புருஷனான இறைவனுக்குப் பெண்ணான என் ஆத்மா திருமணப்படுவதை விட உயர்வு எதுவுமில்லை. இங்க இறைவனைத் தவிர வேறு புருஷனில்லை. உலகம் என்னை விழுங்கிவிடக் கூடாதென்பதே என் கவலை!”

“உன்னித்தெழுந்த தடமுலைகள்னா உம் அர்த்தம் என்ன?”

“என் தாபம். கடவுளைக் குறித்த என் தாபம், என் தாபத்தை இறைவன்தான் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். சற்று மேலோங்கி திடமாய் வளர்ந்த என் இறை வேட்கை, இறைவனால் அங்கீகரிக்கப்படவேண்டும். இல்லையெனில், இந்த உலகம் என் இறை தாபத்தைக் கையாண்டு என்னைச் சிதலப்படுத்தி, அதைக் கேலிக்குரிய விஷயமாக்கிவிடும். நான், அதாவது என் மனம், நாய் தின்ற அவிப் பொருளாகிவிடும். அதற்கு மரணமே மேல்.”

“அப்படியானா வாசுதேவன், சங்கு என்கிற வார்த்தை இங்கு எப்படி பொருந்துகிறது?”

“ஒரு மனத்துக்குள் இறைவனுடைய முதல் தோற்றம் ஒலி ரூபம். சங்குச் சத்தம் காதில் கேட்பதே இறை விஷயத்தின் தொடக்கம். எப்போதும் இடைவிடாத சங்குச் சத்தம் இறை வேட்கை உள்ளவர்களுக்குக் கேட்கும்.”

“உங்களுக்குக் கேட்கறதா?”

“எனக்கெப்படிக் கேட்கும். நான் நாய், நரி.” வாசுதேவன் அடக்கமாய்ச் சிரித்தார். எதிரே வந்த லாரி ரோடிலுள்ள பள்ளம் பார்த்து வலப்புறம் ஒதுங்கியது. மணி ஓட்டி வந்த காரைப் பார்த்து விட்டு மறுபடியும் இடப் புறம் ஒதுங்கியது. பள்ளத்தில் விழுந்து தடுமாறி மணியின் காரின் வலப்பக்கப் பின் கதவைத் தாக்கியது. மணியின் கார், சுண்டி விடப்பட்ட சோடா மூடி போல் நாலு முறை தெருவில் திசை தெரியாது சுழன்றது. சுவரிலடித்து, பக்கவாட்டாய்த் திரும்பி, சோடா மூடியை நெட்டுக் குத்தலாய் வைத்தது போல நின்றது.

மணி ஸ்டீரிங் பிடித்து உள்ளே தொங்கினான். அவன் மணிக்கட்டு ஹாரனை அழுத்திக் கொண்டிருந்தது. இடைவிடாத ஹாரன் சத்தம் கேட்டது. இது கார் ஹாரனா? இல்லை சங்கொலியா?

மணி மயக்கமானான்.

மனிதர்கள் சூழ்ந்து கொண்டார்கள். காரின் இடமும் வலமும் பார்த்துக் கடந்து போனார்கள். நரி முகர்வது போல் உள்ளே எட்டிப் பார்த்தார்கள். விபத்தில் மாட்டியவர்களைக் காப்பாற்றினால் வேதனை வருமோ என்று தயங்கினார்கள்.

வாசுதேவன் கதவை இடித்துத் தள்ளிக் கொண்டு வந்தார். அவர் முகமெங்கும் கண்ணாடித் துணுக்குகள் குத்தியிருந்தன. ஆண்டாளின் பாசுரத்துக்கு மூன்றாவதாக ஓர் அர்த்தம். அந்தப் பாதி மயக்க நிலையிலும், மணிக்குத் தோன்றியது. மணி முழுவதும் புரிந்ததான பாவனையில் மெல்லச் சிரித்தான்.

- தொடரும்