அத்தியாயம் 1
முதலில் சிம்னிவிளக்கின் வெளிச்சம் தெரிந்தது. அதற்குப் பின்னால் அவனது முகம் மங்கலாகத் தெரிந்தது. சுந்தரமூர்த்தி சைக்கிளை நிறுத்தினான். சர்க்கரை சொன்ன இடத்துக்கு வந்துவிட்டோம் என்கிற நிம்மதியும், இனி என்னாகப்போகிறது என்கிற பதற்றமும் மூர்த்தியிடம் இருந்தது. சர்க்கரையின் கையில் கண்ணாடி தம்ளர் இருந்ததை மூர்த்தி பார்த்தான். அதில் மஞ்சள் நிறத்தில் பிராந்தி இருந்தது. சர்க்கரை கையை நீட்டி, வேண்டுமா என்பது போல அவனைப் பார்த்துக் கேட்டான். மூர்த்தி வேண்டாமென தலையாட்டினான்.
சர்க்கரைப் பெட்டிக்கடைக்குள் அமர்ந்திருந்தான். பெட்டிக்கடைக்காரன் அவனுக்குப் பக்கத்தில் நின்றிருந்தான். ஒரு கையில் சிகரெட்டும், மற்றொரு கையில் கண்ணாடி தம்ளருமாக அவன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும், மூர்த்திக்கும் ஆசையாக இருந்தது. இந்தக் கண்ணாடி தம்ளருக்கும் பிராந்திக்கும் ஆசைப்பட்டு, மூன்று மாதங்களுக்கு முன்பாக சர்க்கரையிடம் நூறு ரூபாய் கந்துக்கு பணம் வாங்கி, சுந்தரமூர்த்தி குடித்தான். இன்னமும் கந்துப் பணத்தை அடைக்கவில்லை.
சுந்தரமூர்த்தி, பட்டறை வீதியிலிருந்த குணசேகரின் பட்டறையில் வாரச் சம்பளத்துக்கு வேலை செய்துவந்தான். வாரத்துக்கு 150 ரூபாய் சம்பளம். தினமும் ஐந்து ரூபாய் பேட்டா பணம் என்று, அவனது அப்பா சுருளி ஆசாரி அவனை வேலைக்குச் சேர்த்துவிட்டார். தினமும் தனக்குக் கொடுக்கிற பேட்டா பணத்தை, அவனது அப்பா வாங்கிய கந்துக்குக் கொடுப்பதற்குச் சரியாக இருந்தது. வாரச் சம்பளத்தை அப்படியே வீட்டுக்குக் கொடுத்துவிடவேண்டும். இல்லையென்றால் மறுநாள் மூர்த்தியின் அப்பா, அம்மா யாராவது ஒருவர் பட்டறையின் வாசலில் வந்துநின்று முதலாளியிடம் கேட்பார்கள். மூர்த்தி இதற்குப் பயந்துகொண்டு பணத்தைக் கொடுத்துவிடுவான்.
மூன்று மாதங்களுக்கு முன்பு சர்க்கரையிடம் நூறு ரூபாய் கந்துக்கு வாங்கியிருந்தான். சர்க்கரையைப்போல ஒரு கையில் கிளாசும், மற்றொரு கையில் சிகரெட்டுமாக இருக்க ஆசைப்பட்டு வாங்கிய பணம். ஜான்னெக்ஸ்ஸா குவாட்டர் வாங்கி, பழைய பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்திலிருக்கிற புரோட்டா கடைக்குச் சென்றான். ஹோட்டலில் உட்கார்ந்து குடிக்க வேண்டுமென்றால், மட்டன் சுக்கா கோழிக்கறி என்று ஏதாவது வாங்க வேண்டுமென்று சப்ளையர் சொன்னான். முட்டைப் புரோட்டாவும் மட்டன் சுக்காவும் வாங்கினான்.
ஹோட்டலில் சர்பத் கண்ணாடி தம்ளர் இல்லை. டீ குடிக்கிற சின்ன டம்ளர் இருந்தது. சப்ளையர் கழுவிக் கொடுத்தான். சாயங்காலம் ஐந்து மணிக்குச் சென்றதால், ஹோட்டலில் அவனைத் தவிர யாருமில்லை. மனதாரத் தின்று குடித்தான். குடிக்கக் குடிக்க ஆசையாக இருந்தது. தின்னத் தின்ன இன்னமும் பசித்தது. சினிமா டிக்கெட்டுக்கு காசை எடுத்து வைத்துவிட்டு, மிச்ச பணத்தை சாப்பிட்டு முடித்தான். சாப்பிட்டதற்குக் காசு கொடுத்துவிட்டு, ஹோட்டலின் முன்பாக நிறுத்திவைத்திருந்த சைக்கிளை உருட்டிக்கொண்டு நடந்தான். அவனது கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து சினிமா தியேட்டருக்குச் செல்வது மட்டும்தான் கண்களுக்குத் தெரியவேண்டும், வேறு எதுவும் தனக்குத் தெரியக்கூடாது என்று நூல் பிடித்தது மாதிரி நடந்தான். ஆடாமல் அசையால் சைக்கிளை மெதுவாக உருட்டினான். அவனுக்கு சைக்கிளை ஒட்டிச்சென்றால் விழுந்துவிடுவோம் என்கிற பயம் இருந்தது. மெயின் பஜாரில் நடக்காமல் சந்து வழியாக நடந்தான். அந்தப் போதையிலும் ஒரு சந்திலிருந்து மற்றொரு சந்துக்குப் போய், பிறகு அந்தச் சந்திலிருந்து இன்னொரு சந்து வழியாக நடப்பதை கவனமாக வைத்திருந்தான்.
ஜீவன் தியேட்டரில் ‘மனிதன்’ சினிமா படம் அன்று ரிலீஸாகியிருந்தது. தியேட்டருக்குச் சென்றான். டிக்கெட் எடுக்கும் இடத்தில் கூட்டம். மூன்று கவுன்டர்களும் திறந்திருந்தன. சைக்கிளை நிறுத்திவிட்டு பாஸ் வாங்கிக்கொண்டான். வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு மூன்று கவுன்டர்களில் எந்த கவுன்டரில் கூட்டமில்லையென்று நிதானமாகப் பார்த்தான். எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தன. நடுவிலிருந்த கவுன்டருக்குள் நுழைந்தான். வரிசையில் நின்று டிக்கெட்டு வாங்கிக்கொண்டு தியேட்டருக்குள் சென்றபோது, படம் போட்டு முதல் பாட்டும் முடிந்திருந்தது. கதவுக்குப் பின்னால் கூட்டத்தோடு கூட்டமாக நின்றுகொண்டான். ஏப்பம் விடும்போது அவனுக்கு முன்னாலும் பின்னாலும் நின்றிருந்தவர்கள் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். இடைவேளைக்குப் பிறகு உட்காருவதற்குச் சீட் கிடைத்தது. உட்கார்ந்துகொண்டான். யாரும் அவனை எதுவும் சொல்லவில்லை. போதையும் கொஞ்சம் தெளிந்திருந்தது. அன்று குடித்ததோடு சரி. அதற்குப் பிறகு இப்போதுதான் சர்க்கரையின் கையில் கண்ணாடி தம்ளரைப் பார்க்கிறான். அன்று கந்துக்கு வாங்கிய பணத்தை சில்லறையாகக் கொடுத்து வந்தான். இன்னமும் கழியவில்லை.
சர்க்கரையிடம் பணம் வாங்கி மூன்று மாதங்களாகப் போகிறது. ஒரு வாரம், இரண்டு வாரம் என்று இழுத்தடித்து நகட்டி, மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், சர்க்கரை விடுவதாக இல்லை. நேராக அவன் வேலை செய்யும் பட்டறைக்கு வந்து நின்றுவிட்டான்.
"பணத்த இன்னக்கி நீ தரலன்னா வீட்டுக்கு வந்து உங்கம்மாக்கிட்ட கேப்பேன்டா. உங்கப்பா வேல செய்யுற இடத்துக்குப் போவேன்டா. ரோட்டில நின்னு அசிங்கமா பேசுவேன்டா. ஒழுங்கா சாமி தோட்டத்துல இருக்கிற மயில்சாமி பெட்டிக்கடைக்கு ஏழு மணிக்கு வந்து பணத்த கொடுத்துட்டுப் போயிரு" என்று அரட்டினான்.
"அண்ணே, இன்னும் ரெண்டு நாளில கொடுத்துர்றேன்."
"அலோவ், என்னா மொனையா? வகுந்துருவேன் வகுந்து. ராத்திரிக்குத் துட்டு ஏங்கைக்கு வரணும்டா சொல்லிட்டேன்" என்று சர்க்கரை சைக்கிளை எடுத்துக்கொண்டுச் சென்றுவிட்டான்.
அதற்குப் பிறகு பட்டறையில் உட்கார்ந்து அவனால் வேலை செய்ய முடியவில்லை. சனிக்கிழமையாக இருந்தால் பட்டறையை எடுத்து வைத்துவிட்டு எங்காவது போய்விடலாம். வியாழக்கிழமை. சந்தைக்குப்போய் எவ்வளவு நேரம் ஒளிந்திருக்க முடியும்? அங்கும் சர்க்கரை வருவான். சந்தையில் கடைப் போட்டிருக்கிற கடைக்காரர்களிடம் கந்து வசூலிக்க நோட்டும் பேனாவுமாக அலைவான். சினிமாவுக்குப் போனால் படம் முடிந்து வெளியே வரும்போது தியேட்டா் வாசலில் நின்றிருப்பான். பெரியாற்றுக்குச் சென்றால், வழியில் ரெயில்வே டிராக்கில் சைக்கிளைப் போட்டு உட்கார்ந்து சிகரெட் புகைத்துக்கொண்டிருப்பான். எங்கு போவது? அவனுடைய கையில் ஐந்து ரூபாய் மட்டும் இருந்தது. பேட்டா காசை வாங்கிக்கொண்டு சுந்தரமூர்த்தி, சாமி தோட்டத்துக்குச் சென்றான்.
******
மயில்சாமிப் பெட்டிக்கடை, மெயின் ரோட்டிலிருந்து விலகி சந்துக்குள் அடங்கியிருந்தது. வேறு கடையெதுவும் அந்த இடத்தில் இல்லை. தூரத்திலிருந்துப் பார்த்தபோது, முதலில் இருட்டுக்குள் சிம்னிவிளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது தெரிந்தது. கடைக்குப் பக்கத்தில் சென்று நின்றபோது, கடை முழுக்க இருட்டாக இருப்பது போலிருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் அந்த இடம் முழுக்க சிம்னிவிளக்கின் வெளிச்சம், ஏதோ மஞ்சள் பலூன் காற்றில் மிதந்து அசைவது போல், அவனது கண்களுக்குத் தெரிந்தது. சர்க்கரைக்கும் கடைக்காரனுக்குப் பின்னால் கலர் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஸ்டாலில் மிட்டாய் பாட்டில்களும் வரிசையாக இருந்தன. ஸ்டாலின் மையத்தில் வெற்றிலைப் பாக்குத் தட்டும், கண்ணாடி தம்ளர் வைத்திருந்த தட்டும் இருந்தது. அவர்களது முகங்களை மறைப்பது போல் இரண்டு வயக்காட்டு வாழைத்தார்கள் தொங்கிக்கொண்டிருந்தன.
சுந்தரமூர்த்திக்கு சோடா குடிக்க வேண்டுமென்று ஆசையாக இருந்தது. பட்டறை வீதியிலிருந்து சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்தது தாகமாகயிருந்தது. சோடா பாட்டில் வைத்திருக்கும் இடத்தைத் தேடினான். பெட்டிக்கடை ஸ்டாலில் பிளாஸ்டிக் குடத்துக்குப் பக்கத்தில், மூன்று கிரேடு மரப்பெட்டிகளில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருந்தனர். கண்ணாடி குண்டுகள் ஒவ்வொன்றும் சிம்னிவிளக்கு வெளிச்சத்தில் கருப்பு கலரில் உருண்டு தெரிந்தன.
சர்க்கரை அவனைப் பார்த்ததும், தன்னுடைய ஜேப்பிலிருந்த பாக்கெட் டைரியை எடுத்துப் பார்த்தான். டைரியில் துண்டுத் துண்டுக் காகிதங்களாக இருந்தன. மூன்று நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த அழுக்குக் காகிதங்களில் ஒன்றைப் பிரித்து, சிம்னிவிளக்கு வெளிச்சத்தில் பார்த்தான். ஒரு கையால் கண்ணாடி தம்ளரும், மற்றொரு கையால் சிகரெட்டும், கூடவே காகிதத்தையும் வைத்திருந்ததைப் பார்த்தபோது சுந்தரமூர்த்திக்கு, சர்க்கரை அவனது விரல்களை பழக்கப்படுத்தியிருந்தது ஆச்சரியமாக இருந்தது.
சர்க்கரை சிட்டையைப் பார்த்துவிட்டு, "சரியா மூணு மாசமாச்சு மூர்த்தி"என்று சொன்னான்.
"மூணு மாசமா நீ என்னா செஞ்சுட்டு இருந்த சக்கர?" என்று பெட்டிக்கடைக்காரன் அவனுக்கு எடுத்துக் கொடுத்தான்.
சிகரெட்டை எடுத்து வாயில்வைத்து பற்றவைப்பது போல் அவன் பேச்சு. சுந்தரமூர்த்தி அவனை முறைத்துப் பார்த்தான். சர்க்கரை, சிட்டையைக் கடையின் ஸ்டாலில் வைத்ததும், அதற்காகக் காத்திருந்த கடைக்காரன், காகிதத்தை எடுத்துப் பார்த்தான். திரும்பவும் காகிதத்தை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு, "சக்கர, நாட்டுப் பழம் கேட்டே… நல்லா கனிஞ்சு இருக்குப்பா" என்று அவன் சம்மதத்தைக்கூடக் கேட்காமல், பழத்தாரிலிருந்து பழத்தைத் திருகிப் பிய்த்தான். சர்க்கரை வாங்கிக்கொண்டான்.
"சரி பணத்தை எடு" பழத்தை வாயில் அதக்கி வைத்துக்கொண்டு சர்க்கரை பேசியதைக் கேட்டபோது, அவனது குரல் அவனுடையதாக இல்லை. வேறு யாரோ பேசுவது போலிருந்தது. கன்னங்கள் இரண்டும் உப்பி அசைந்தன. அவனது கையில் வெறும் தோல் மட்டும்தான் இருந்தது. அதை எந்தப் பக்கமாகத் தூக்கி எறியப்போகிறான், அதுக்குத் தோதாக எந்தப் பக்கம் ஒதுங்கி நிற்பது என்பது தெரியாமல் சுந்தரமூர்த்தி நின்றிருந்தான்.
சுந்தரமூர்த்தி தன்னுடைய பாக்கெட்டிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்துக் கொடுத்தான். சர்க்கரை தம்ளரிலிருந்ததை ஒரே மடக்கில் விழுங்கிவிட்டு எழுந்தான். அவனுக்குக் கோபம் வந்துவிட்டது என்பது சுந்தரமூர்த்திக்குத் தெரிந்தது. உட்கார்ந்த இடத்திலிருந்து தன்னுடைய சட்டையைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்துவிடுவான் என்று பயந்தவன், சற்று பின்னால் தள்ளி நின்றுகொண்டான். அவன் ஒதுங்கி நிற்பதைப் பார்த்ததும் மேலும் கோபமான சர்க்கரை, விருட்டென எழுந்து கடையிலிருந்து வெளியே வந்தான். சிகரெட்டை ரோட்டில் போட்டு செருப்புக் காலில் தேய்த்தான். தீப்பொறி நசுங்கி தரையோடு தரையாகப் பறந்தது.
"ஏன்டா கம்மாளப்பயபுள்ள, நீ குடிச்சுட்டு புரோட்டா திங்குறதுக்கு ஏம் பணம்தான் கிடச்சுச்சா. பணத்த எடுறா வெண்ணேய்" என்று சுந்தரமூர்த்தியின் சட்டையைப் பிடித்துக்கொண்டான்.
சுந்தரமூர்த்தியால் நகரமுடியவில்லை. ஒரு கையால் அவனது உடம்பை இறுகப் பற்றியிருந்தான் சர்க்கரை. பழைய சட்டை… கொஞ்சம் அசைந்தால் சட்டையின் கழுத்துப்பட்டி, கம்புக்கோடு என்று ஏதாவது டார்டாராக கிழிந்துவிடுமென அசையாமல் நின்றான். சர்க்கரையிடமிருந்து ஜான்னெக்ஸ்ஸாவின் வாசம் வந்தது. கூடவே சிகரெட்டின் வாசம். சர்க்கரையின் கண்கள் கலங்கலாக இருந்தன. நெற்றி நரம்பு புடைத்துத் தெரிந்தது. பற்களைக் கடித்துக்கொண்டு, “பணத்தக் கொடுறா’’ என்று கத்தினான்.
"அண்ணே, சனிக்கிழமக்குள்ள கொடுத்துர்றேண்ணே" என்று பயந்துபோய் சொன்னான் சுந்தரமூர்த்தி.
உண்மையில் அவனுக்குப் பயம். அவனுக்குத் தெரியாத தெரு. கூடவே சர்க்கரைக் குடித்திருக்கிறான். தன்னுடன் யாரும் வரவில்லை. கையிலும் காசில்லை. பொறுமையாக பேச வேண்டுமென நினைத்தான்.
"உனக்கு எத்தன சனிக்கிழம, எத்தன புதங்கிழம?"
"அண்ணே, கையில கெடைக்கிற காசைக் கொடுத்துட்டுதானே இருக்கேன்."
"நா உனக்குக் கந்துக்குத்தான்டா பணம் கொடுத்தேன். ஓஞ்சௌகரியத்துக்குத் தர்றதுக்கு கைமாத்துக்கா பணம் கொடுத்தேன்? பணத்த கொடுறா" என்று திரும்பவும் கத்தினான்.
சர்க்கரை சலம்பல் செய்வதை ரோட்டில் போகிறவர்கள் யாரும் நின்று பார்க்கவில்லையென்ற வருத்தம் அவனுக்கு வந்திருக்க வேண்டும். இல்லையென்றால், சர்க்கரை இவ்வளவு சத்தமாகப் பேசக்கூடியவன் இல்லை என்பது மயில்சாமிக்குத் தெரியும். அவன் கடையைவிட்டு ரோட்டுக்கு வந்தான். அவர்களுக்கு இடையில் நின்று பஞ்சாயத்து செய்வதுபோல பேசினான்.
"சரி விடுப்பா, அவன்தான் சனிக்கிழம வாய்தா கேட்டிருக்கானில்ல… அதுவரைக்கு நீ பொறுத்திரு. இல்லன்னா நேரா வீட்டுக்குப் போய் நின்னுரு" என்றான்.
சர்க்கரை, சட்டையின் பிடிமானத்தை விட்டான். சட்டையை விட்டதும் ஒதுங்கி நின்றுகொண்டான் சுந்தரமூர்த்தி. சட்டையின் முதல் பித்தான் பிய்ந்துத் தெறித்திருந்தது. இருட்டில் தேடமுடியாது என்று விட்டுவிட்டான். சட்டையை மேலும் கீழுமாக இழுத்துவிட்டான். அப்படியிருந்தும் கழுத்துப்பட்டிக்கு அருகிலிருந்த சுருங்கல் போகவில்லை. கழுத்துப்பட்டியைத் திருப்பிவிட்டான். பட்டன் இல்லாத இடம் ஓவாய்யாக அசிங்கமாகத் தெரிந்தது.
மயில்சாமியும் சர்க்கரையும் ஏதோ பேசுவது தெரிந்தது. என்ன பேசுகிறார்கள் எனக் கேட்கவில்லை. சர்க்கரை திரும்பவும் கடைக்குள் அமர்ந்துகொண்டதும், மயில்சாமி சிகரெட்டை எடுத்து அவனிடம் நீட்டினான். அவன் உதட்டில் வைத்துக்கொண்டதும், மயில்சாமி தீ பொருத்தி பற்றவைத்தான்.
சர்க்கரை நீளமாகப் புகைவிட்டான். பிறகு, தலையில் கை வைத்து ஏதோ யோசிப்பவன்போல முகத்தை வைத்துக்கொண்டான். இன்னொருமுறை புகையை இழுத்துவிட்டான். பிறகு முடிவு செய்தவனாக, "மொத்தம் 167 ரூபா. சனிக்கிழம வாரச் சம்பளம் வாங்குனதும் என்னய தேடிவந்து தந்துட்டுப் போகணும். இல்ல, மவனே நடக்குறது வேற" என்று நாக்கைத் துருத்திக்கொண்டு பேசினான்.
"அண்ணே, எழுபத்திஅஞ்சு ரூபா கொடுத்துருக்கேன். நா கொடுத்த பணத்தை நீங்க சிட்டயில வரவு வெச்சிருக்கிங்க. எடுத்துப் பாருங்க. மிச்சம் இருபத்தி அஞ்சு ரூபாய சனிக்கிழம கொடுத்துருவேன்" என்று சுந்தரமூர்த்தி பதறிப்போய்ப் பேசினான்.
"வாப்பே வா... நீ முப்பது நா கந்துக்குத்தான்டா நூறு ரூபா வாங்குனே. மூணு மாத்தைக்கு யாரு வட்டி தருவா? ஏன்டா ஆசாரிப் பயலே, நான் என்னா உனக்கு இளுச்சவாயன்னு நெனப்பா?"
"அண்ணே, அதெல்லாம் முடியாதுண்ணே. மீதிப் பணத்த மட்டுந்தான் தர்வேன்."
"அஜ்ஜேய்… என்னா வாய் நீளுது? இழுத்தேன்னு வெச்சுக்க, அந்தளவில காது கைக்கு வந்துரும்டீ."
"சும்மா ஏண்ணே கத்துறீங்க."
"ஏய்… என்னடா பேசிட்டே போறே, பெரிய இவனுன்னு நெனப்பா?"
"என்னமோ தெரியாத ஆளுக்கிட்ட பேசுறது மாதிரி பேசுறீங்க. சாதியப் பத்தி பேசுறீங்க. நானும் உங்க சாதியப் பத்தி பேசவா? தண்ணியப் போட்டு வாய்க்கு வந்தத பேசாதீங்க. காலையில பட்டற பஜாருக்கு வந்தா எல்லார் முன்னாடியும் சொல்லி உங்கள அசிங்கப்படுத்திருவேன்" என்று படபடவென பேசினான் சுந்தரமூர்த்தி.
அவனுக்கும் கோபம் இருந்தது. ஆத்திரமாக இருந்தது. எத்தனை தடவை சாதியைச் சொல்லி திட்டுகிறான் என்று கோபத்தில் மொத்தமாகப் பேசிவிட்டான். வாங்கிய பணத்தை இல்லையென்று சொன்னது அவனுக்கு ஆத்திரத்தை தந்தது.
"ஏன்டா, ஒத்த முட்ட புரோட்டாவ நாலு பேரு சேர்ந்து திங்கிற வக்கத்தப் பய நீங்க. நீங்க இருக்குறது ஒரு பஜாரு. அந்த பஜாருக்கு வந்தா என்னய நீ அசிங்கப்படுத்திருவீயா? அடீங் ஒங்கம்மா" என்று சர்க்கரை தன் முன்னால் இருந்த வெறும் கண்ணாடி தம்ளரைத் தூக்கி எறிந்ததும், சுந்தரமூர்த்தி ஒதுங்கிக்கொண்டான். தம்ளர் நடுரோட்டில் விழுந்து சில்லு சில்லாக உடைந்தது.
சுந்தரமூர்த்திக்கு அவன் சொன்ன வார்த்தை, கண்ணாடி தம்ளரின் சில்லு, குதிங்காலில் குத்தி இறங்குவது போல நெஞ்சில் வலித்தது. கல்லை விட்டெறிந்து மண்டையை உடைத்துவிட்டு, பட்டறை பஜாருக்கு ஓடிப்போகலாமா என்று சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தான். பொடிக்கல்லாகத்தான் ரோட்டில் கிடந்தது. பெரிய கல் எதுவும் அகப்படவில்லை. முதலில் சைக்கிளை எடுத்துத் தயாராக வைக்க வேண்டுமென்று நினைத்தான். சைக்கிளைப் பார்த்தான். சைக்கிள் பெட்டிக்கடைக்குச் சற்றுத் தள்ளி நின்றிருந்தது.
சுந்தரமூர்த்தி எதையோ தேடுகிறான் என்பதைத் தெரிந்துகொண்ட சர்க்கரை, விருட்டென மற்றொரு சோடா பாட்டிலை உறுவியெடுத்துக்கொண்டு வந்தான். "ஓம் மண்டைய உடைக்காம விடமாட்டேன்டீ" என்று கத்தினான்.
மயில்சாமி பதறிப்போய், "அய்யா சாமி, ஸ்டேஷனுக்கு என்னால அலைய முடியாது. இந்தளவில விட்டுட்டு ரெண்டு பேரும் வீட்டுக்குப் போய் சேருங்க. காலையில உங்க இடத்தில வெச்சு பேசி முடிங்க" என்று ரோட்டில் இறங்கி அவர்களை சமாதானப்படுத்தினான்.
சர்க்கரை அவனது சமாதானத்தை கண்டுகொள்ளவில்லை. சுந்தரமூர்த்தியின் மண்டையை குறிவைத்து ஓங்கிக்கொண்டு வந்தான். சுந்தரமூர்த்தியைவிட மயில்சாமி சர்க்கரையிடமிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டுமென தவித்தான். சுந்தரமூர்த்தியைத் தள்ளிவிட்டான். அவன் ஸ்டாலுக்கு அருகில் சென்று நின்றான். அவன் நின்ற இடத்தில் பிளாஸ்டிக் குடமும், சோடா பாட்டில் கிரேடு பெட்டியும் இருந்தன. சர்க்கரையின் கையிலிருந்த சோடா பாட்டிலைப் பார்த்தான். வெறும் பாட்டில். சர்க்கரை கையை அசைக்க அசைக்க, சோடாவிலிருந்த குண்டு கிளிங் கிளிங் என்று சத்தம் கொடுத்தது.
சுந்தரமூர்த்தி ஏதோ நினைப்பில் புது சோடா பாட்டிலை உறுவி எடுத்தான். பெட்டிக்கடை ஸ்டால் பலகையில் ஓங்கியடித்தான். சோடா பாட்டிலிலிருந்து கேஸ் வெளியேறி பாட்டில் உடைந்தது. டப்பென்ற அதன் சத்தம் தெருவில் நடந்துகொண்டிருந்தவர்களைத் திரும்பிப் பார்க்கச் செய்தது.
சர்க்கரை அந்தச் சத்தத்துக்குப் பயந்துபோய் சுந்தரமூர்த்தியின் முகத்தையும், அவனது கையிலிருந்த உடைந்த பாட்டிலையும் மாறி மாறிப் பார்த்தான். மயில்சாமி இருவருக்குமிடையே நின்று, "டேய், வேண்டான்டா டேய்… பாட்டில சாக்கடையில போட்டுட்டு ஓடிப்போயிருடா" என்று சொன்னதையும் மீறி சுந்தரமூர்த்தி, “எவன்டா வக்கத்தப் பய’’ என்று வேகமாக சர்க்கரையின் வயிற்றில் குத்தினான்.
சர்க்கரை வலி பொறுக்க முடியாமல் கத்தினான். சுந்தரமூர்த்தி சோடா பாட்டிலை அவனது வயிற்றிலிருந்து உறுவினான். அவனால் முடியவில்லை. பாட்டிலை எடுக்க முடியாமல் அப்படியே விட்டுவிட்டு வேகமாக நடந்தான்.
"அய்யய்யோ… சக்கரய குத்திட்டான்… சக்கரய குத்திட்டான்" என்று மயில்சாமி கத்தினான்.
சுந்தரமூர்த்தி சைக்கிள் ஸ்டாண்டை எடுக்கும்போது, சர்க்கரை தரையில் விழுந்து கத்துவது கேட்டது. மூர்த்தி சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்றான். எங்கு போவது என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், எங்காவது போகவேண்டுமென்று சைக்கிளை வேகமாக ஓட்டினான்.
காலையில் பஜாருக்குத் தேடி சர்க்கரையின் வீட்டிலிருந்து ஆட்கள் வந்துவிடுவார்கள். இல்லையென்றால் ராத்திரி போலீஸ்காரர்கள் வீட்டுக்கு வந்துவிடுவார்கள் என்கிற பயம் அவனை வேகமாக சைக்கிளை ஓட்டச் செய்தது.
(தொடரும்...)