அத்தியாயம் 1

137.8k படித்தவர்கள்
36 கருத்துகள்

ல்ல இருள். சாலையோர மரங்களினிடையே புகுந்து, தார்ச்சாலையில் படிந்திருக்கும் கறுப்பு நிழலைத் தன்னால் முடிந்த அளவுக்குக் கழுவித் தள்ளிக்கொண்டிருக்கிறது மங்கலான நிலா வெளிச்சம். அந்த அந்தகார இருளில், வெண்ணிறப் புடவை அணிந்த ஒரு மங்கை பதற்றத்தோடு எங்கோ சென்றுகொண்டிருக்கிறாள். பின்னால் வரும் ஒரு காரின் ஹெட்லைட் வெளிச்சம் தன் மீது விழுவது கண்டு திரும்பிப் பார்க்கிறாள். தொப்பி அணிந்த ஒரு கனவான் அதைச் செலுத்தி வருகிறார். லேசான தூறல். தார்ச்சாலை ஈரமாக இருக்கிறது. கார்க் கண்ணாடியில் புகையாய்ப் படியும் நீர்த்திவலைகளை வைப்பர் கர்மசிரத்தையாய்த் துடைத்துக்கொண்டிருக்கிறது. கார் தன்னைப் பின்தொடர்வதைக் கண்டு அந்தப் பெண் கால்களை எட்டிப் போடுகிறாள். லேசான ஓட்டம். பின்பு ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது. இருளில் கார் ஹெட் லைட்டின் இரு வெளிச்ச வட்டங்கள் அவளைப் பின்தொடர்கின்றன. அவள் இன்னும் விரைந்து ஓடுகிறாள். சாலையிலிருந்து இறங்கி, காட்டுப்பாதையில் ஓடுகிறாள். கணுக்கால் வரையிலான நீர்ப் பரப்பைக் கடந்து மேலேற, ரயில்வே லைன். தண்டவாளங்களுக்கு நடுவே ஓடுகிறாள். எதிரே வரும் ரயிலின் முகப்பு வெளிச்சம் கண்ணைக் கூச, விக்கித்து நிற்கிறாள். சடுதியில் ரயில் அவள் மீது மோதித் தூக்கி எறிகிறது. வீலென்ற அலறலோடு, பக்கத்திலிருந்த ஒரு நீர்ப்பாதையில் ரத்தக்களறியாக உருண்டு விழுகிறாள் அந்தப் பெண்…

“வாவ்… அம்பது அம்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வந்த படம் இதுன்னா நம்ப முடியுதா… டைட்டில் காட்சியே என்னவொரு த்ரில்லா இருக்கு பாருங்க!” என்று அருகில் இருந்த ராஜசேகரிடம் சிலாகித்தார் ஈஸ்வர்.

ஜெயா மூவீஸில் மாலை 4 மணிக் காட்சியாக ‘புதிய பறவை’ தொடங்கியிருந்தது.

“சரியாச் சொன்னீங்க. படம் முழுக்கவே ஒரு சஸ்பென்ஸோட கதை நகரும். அதிலும், க்ளைமாக்ஸ்ல அசத்தியிருப்பார் நம்ம நடிகர் திலகம். ‘ஆசை மரத்துல கல்லைக் கட்டினது, என்கூட ஆடிப்பாடினது எல்லாம் நடிப்பா..? சொல்லு லதா, நடிப்பா?’ன்னு அடி வயித்துலேர்ந்து பொங்கி வர்ற ஆத்தாமையோட, சரோஜாதேவியைப் பார்த்துக் கேட்பார் பாருங்க ஒரு கேள்வி, யப்பா..! இப்பெல்லாம் அந்த மாதிரி நடிக்கிறதுக்கு யார் இருக்கா?” என்றார் ராஜசேகர் தன் பங்குக்கு.

“முதல்ல, இப்பெல்லாம் எங்கே இந்த மாதிரி கதையம்சமுள்ள படம் வருது… அத்தச் சொல்லுங்க. எதையோ எடுக்கிறாங்க… ஆரம்பமும் இல்லாம, முடிவும் இல்லாம, நடுவுல ஒரு சம்பவத்தை எடுத்துட்டு, இதுதான் படம்கிறாங்க. அதுதான் நல்ல படம்னு யங்ஸ்டரும் கொண்டாடுறாங்க. நமக்குத்தான் ஒரு எழவும் புரிய மாட்டேங்குது…”

“நீங்க வேற, இதைச் சொன்னா, ‘நீங்க அப்டேட் ஆகலே டாடி. அந்தக் காலத்துலேயே நின்னுட்டீங்க’ங்கிறா எம் பொண்ணு.” 

பொண்ணு என்று ராஜசேகர் சொன்னதும், “ஆமா, இவ எங்கே இன்னும் ஆளையே காணோம். மத்தியானம் ரெண்டு மணிக்கெல்லாம் வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போனாளே..” என்று ஞாபகமூட்டினாள் பிரேமா.

“நாலரை ஆறு ராகு காலம் வேற…” என்றாள் சௌம்யா. ஈஸ்வரின் மனைவி.

“இன்னிக்கு ஞாயித்துக்கிழமைதானே… இன்னிக்குமா ஆபீஸ்..?” என்றாள் ப்ரியா சுப்பிரமணியன். ஜெயந்த்தின் அக்கா.

சிணுங்குகிற தங்கள் குழந்தையைத் தோளில் போட்டுத் தட்டியவாறு ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடைபயின்றுகொண்டிருந்த சுப்பிரமணியன், “மீடியாவுல இருக்கிறவங்களுக்கு ஞாயிறாவது திங்களாவது…? தீபாவளி, கிறிஸ்துமஸ்லாம்கூடக் கிடையாது அவங்களுக்கு. மேட்டர் எங்கே எங்கேன்னு ட்வென்ட்டி ஃபோர் பை செவன்,  மூவி கேமராவையும் சேனல் மைக்கையும் தூக்கிட்டு ஓடிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்!” என்றான்.

வாசலில் மாவிலைத் தோரணத்தோடும், கனத்த மாலையோடும், நிலைக்கதவில் பூசப்பட்ட சந்தனத்தின் மணத்தோடும், மாடிப்படியின் கீழ் எலெக்ட்ரிக் மீட்டர் பாக்ஸ் அருகில் கழற்றிவிடப்பட்ட ஏராள செருப்புகளோடும், சற்று நேரத்தில் தொடங்க வேண்டிய ஓர் இனிய நிகழ்வுக்காக உற்சாகமாகக் காத்திருந்தது சென்னை, அசோக் நகர் 18-வது அவென்யூவில் உள்ள ஸ்ரீராம் அப்பார்ட்மென்ட்டின், ‘சி’ பிளாக், 2-ம் எண் கிரௌண்ட் ஃப்ளோர் வீடு.

‘சோனி’ 55 இன்ச் எல்ஈடி டி.வி. சுவரை அலங்கரித்திருக்க, கப்பல் மேல் தளத்தில் நின்றபடி பைனாகுலரில் கடலை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார் ‘கோப்பால்’. எதிரே ‘எல்’ வடிவ உயர்தர சோபாவில் ராஜசேகர், ஈஸ்வர், சௌம்யா, ஜெயந்த் ஆகியோர் ஆக்கிரமித்திருக்க, சோபாவுக்கு முதுகை முட்டுக்கொடுத்தவாறு வசதியாகக் கீழே அமர்ந்திருந்தாள் ப்ரியா.

ஹாலை ஒட்டிப் பின்னால் ஒரு பெரிய டைனிங் ஹால். வட்டமான கண்ணாடி மேஜையும், நாற்காலிகளும் ஓர் ஓரமாகப் போடப்பட்டிருக்க, மையத்தில் அகலமும் நீளமுமான பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டு, பித்தளைத் தாம்பாளங்களில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழங்கள், ஆப்பிள், ஆரஞ்சு, மல்லிகை, முல்லை, கதம்பம் எனப் பூச்சரங்கள், உதிரி ரோஜா, சாமந்திப் பூக்கள் இடம்பிடித்திருந்தன. எவர்சில்வர் டப்பாக்களில் மைசூர்பாகு, லட்டு இனிப்பு வகைகளும், அலுமினிய பேசின்களில் மிக்சர், ரிப்பன் பக்கோடா வகையறாக்களும் நிரம்பியிருந்தன. சுவர் ஓரமாக பிரேமாவும் அவளுடன் எதிர் ஃபிளாட், பக்கத்து ஃபிளாட் பெண்டிர்களும் உட்கார்ந்திருந்தார்கள். அந்த பிளாக்கில் வேறு வேறு ஃபிளாட்டுகளில் இருந்த பெண்களும் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்துகொண்டிருந்தார்கள். 

இடைக்குறிப்பு (முன்குறிப்பு, பின்குறிப்பு இருக்கலாம்; இடைக்குறிப்பு இருக்கக்கூடாதா?!): அங்கிருந்தோர் யாரும் மாஸ்க் அணியவில்லை. அதற்காக அவர்களைக் கோபிக்க வேண்டாம். மாஸ்க் அணிய வேண்டியிராத, ஒற்றை மாஸ்க் போதுமா, இரட்டை மாஸ்க் வேண்டுமா எனக் கேள்விகள் எழாத, சானிட்டைஸர் உபயோகம் பரவலாக ஆகாத, ‘சானிட்டைஸர் தடவிக்கொண்ட கையோடு கிச்சனுக்குள் நுழைந்தால் கையில் தீப்பற்றிக்கொள்ளும்; ஜாக்கிரதை!’ என்பது மாதிரியான பயமுறுத்தல் வாட்ஸப் மெசேஜ்கள் பகிரப்படாத, சமூக இடைவெளி விடவேண்டிய அவசியம் இராத, மூன்றாவது அலை தொடங்கிவிட்டதா, இல்லையா, அது குழந்தைகளை அதிகம் பாதிக்குமா பாதிக்காதா என்றெல்லாம் விவாதங்கள் எழாத, இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பொற்காலத்தில் இந்தக் கதை நிகழ்கிறது.)

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“ஃபங்ஷன் ஆரம்பிச்சாச்சா? ஸாரி, நான் கொஞ்சம் லேட்டு. எங்க மாமிக்கு டீ போட்டுக் கொடுத்துட்டு வரதுக்கு டயமாயிடுச்சு. ஹாசினி வந்துட்டாளா?” என்றபடியே வந்தாள் மூன்றாவது ஃப்ளோரில் இருக்கும் நிவேதிதா. ஹாசினி வயசுதான். காலேஜ்மேட்டும் கூட.

“இன்னும் வரக் காணம். அதான் கெதுக்குனு இருக்கு. மத்தியானம் ரெண்டு மணிக்கே வரேன்னுட்டுப் போச்சு. ‘வேலை அதிகம் இருக்காதும்மா. ஹார்டு டிஸ்க் ஒண்ணு தரணும். கொடுத்துட்டு சீக்கிரம் வந்துடுவேன்’னுட்டுப் போச்சு. இன்னும் காணோம்” என்றாள் பிரேமா கவலையாக.

“நாலரையாகப் போகுதே. போன் பண்ணிப் பார்த்தீங்களா?” என்றாள் நிவேதிதா.

“அதானே… ஏங்க, அவளுக்கு ஒரு கால் பண்ணிப் பாருங்களேன். ‘கிளம்பிட்டாளா, எங்க வந்துட்டிருக்கா?’ன்னு கேளுங்களேன்” என்றாள் பிரேமா, “இங்க இத்தனை பேரும் அவளுக்காக மதியத்துலேர்ந்து காத்துட்டிருக்கோம்! கொஞ்சமாவது யோசனையிருக்கா அதுக்கு?” என்றாள்.

“பண்ணாம இருப்பேனா? ரிங் போகுது; எடுக்கலை. ‘ஆன் த வே’ல இருப்பாளாயிருக்கும். டிரைவ் பண்ணும்போது கால் வந்தா அட்டெண்டே பண்ணாதேன்னு அவ கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்கேன்” என்றார் ராஜசேகர்.

“அதுல ஒரு வேடிக்கை பாருங்க ராஜசேகர்… நீங்க கவனிச்சிருப்பீங்களான்னு தெரியாது. மெகா சீரியல்கள் பாப்பீங்கள..? அதுல இப்படித்தான்… பரபரப்பான ஸீன் போயிட்டிருக்கும். வரவேண்டிய நபர் வரத் தாமதமாகும். எல்லாரும் என்னாச்சோ ஏதாச்சோன்னு பதறிட்டிருப்பாங்க. எல்லார் கையிலயும் மொபைல் போன் இருக்கும். ஆனா, சம்பந்தப்பட்ட நபருக்குப் போன் பண்ணிப் பார்க்கணும்னு யாருக்குமே தோணாது. வரலையே, இன்னும் வரலையே, ஏன்னு தெரியலையேன்னு தவியாத் தவிச்சிட்டிருப்பாங்க. இதைப் பார்த்துட்டிருக்கிற எங்க மாமியாருக்குதான் பிபி எகிறும். ‘என்னா ஆளுங்களோ… ஒவ்வொருத்தர் கையிலயும்தான் போன் இருக்கே, எதுக்கு, வெச்சுக் கும்புடறதுக்கா? போன் பண்ணிப் பார்க்க வேண்டியதுதானே? தரித்திரங்க’னு சபிப்பாங்க. அதுக்கப்புறம்தான் அங்க ஸ்க்ரீன்ல யாராவது ஒருத்தர் ஞாபகப்படுத்த, இன்னொருத்தர் போன் பண்ணுவாங்க. ஒரு சீரியல் தப்பாம எல்லா சீரியல்லயும் இப்படி ஒரு காட்சி கட்டாயம் இருக்கும்” என்று சொல்லிச் சிரித்தார் ஈஸ்வர்.

“அது சீரியலோட டி.ஆர்.பி. ரேட்டிங்கை ஏத்துற உத்திங்க மாமா” என்றான் சுப்பிரமணியன். “ஸ்க்ரீன்ல இருக்கிற கதாபாத்திரங்களை கொஞ்சம் மந்தமா காண்பிச்சு, பார்த்துட்டிருக்கிற லேடீஸை புத்திசாலியா உணரும்படி பண்ணினாத்தான், தொடர்ந்து அவங்க அந்த சீரியலைப் பார்ப்பாங்க. எடுக்கிறவன் ஒண்ணும் கேனையன் இல்லை. இதெல்லாம் சைகலாஜிக்கல் டாக்டிக்ஸ்” என்றான். 

“என்னாக் கருமமோ, எல்லா சீரியல்கள்லயும் ஒரே அழுகை; சாப்பாட்டுல விஷம் வைக்கிறது, கார் டிக்கியில ஆள் கடத்துறதுன்னு திரும்பத் திரும்ப ஆட்டின மாவையே போட்டு ஆட்டிக்கிட்டிருக்காங்க” என்றார் ஈஸ்வர்.

“அப்பதாம்ப்பா ஸ்க்ரீன் ப்ளே ரொம்ப நைஸா இருக்கும்” என்று ஒரு மொக்கை ஜோக் அடித்துவிட்டுச் சுற்றிலும் பெருமிதத்துடன் பார்த்தாள் ப்ரியா. அவளின் ஜோக் புரியவில்லையா, அல்லது வரவேண்டிய ஹாசினி இன்னும் வராதது குறித்த கவலையில் எல்லாரும் ஆழ்ந்துவிட்டார்களா என்று தெரியவில்லை… ப்ரியாவின் ஜோக்குக்கு நோ ரெஸ்பான்ஸ்!

அதைக் காட்டிக்கொள்ளாமல், “சரி, சீரியல்ல வர்ற மாதிரியே நானும் கேக்கறேன்… அவ காலை அட்டெண்ட் பண்ணலைன்னா என்ன, அவளோட ‘மூவி பசார்’ கம்பெனிக்கு போன் போட்டுப் பாக்குறதுதானே?” என்றாள்.

“அதுக்குத்தான் போட்டுட்டிருக்கேன்” என்றாள் நிவேதிதா, மொபைலை காதில் ஒற்றியவாறு. எல்லார் பார்வையும் அவள் மேல் படிந்தது.

“ஹலோ… ஷோ புரொடியூசர் ஹாசினி இருக்காங்களா?”

“………………”

“நான் அவங்களோட ஃப்ரெண்ட் நிவேதிதா. அவங்க வீட்லேருந்துதான் பேசறேன். இன்னிக்கு அவளோட மேரேஜ் எங்கேஜ்மென்ட் ஃபங்ஷன். ரெண்டு மணிக்கெல்லாம் வந்துடுவேன்னுட்டுப் போனாங்க. இன்னும் வர்ல. அதான்…”

“………………”

“அப்படியா… ஆனா, இன்னும் வர்லியே? ஓகே சார்.. வந்தா இன்ஃபார்ம் பண்றோம். தேங்க்யூ சார்!” என்றுவிட்டு மொபைலை அணைத்தாள் நிவேதிதா.

“மாமி, அவளோட சீஃப்தான் பேசினாரு. ஹாசினி மதியம் ரெண்டு மணிக்கெல்லாம் கிளம்பிடுச்சாம்” என்றாள் பிரேமாவிடம்.

“கிளம்பிட்டாளா? பின்னே இன்னும் வீட்டுக்கு வராம எங்கே சுத்திட்டிருக்கா? தோ இருக்குது தௌசண்ட் லைட்டு. அங்கிருந்து டூ வீலர்ல வீட்டுக்கு வர அரை மணி ஆவுமா?” என்று மீண்டும் கவலைப்படத் தொடங்கினாள் பிரேமா.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“அதுக்குத்தாங்க நான் என் மவளை இந்த விஸ்காம், புஸ்காம்லெல்லாம் சேர்க்கவேயில்லே. அரசியல் கூட்டம், கலவரம் நடக்கிற இடம் இங்கெல்லாம் மொழ நீளத்துக்கு சேனல் மைக்கைத் தூக்கிட்டு ஓடணும்; அங்கே அவங்களுக்கு விழுகுற அடியில ரெண்டு நம்ம மேலயும் விழும். தேவையா நமக்கு?” என்றாள் இரண்டாவது ஃப்ளோர் சுந்தரம்மாள், கால நேரம் எதுவும் தெரியாமல்.  

யாரும் பார்க்கப்படாமல் டி.வி-யில் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. “சவுண்டைக் கொஞ்சம் கம்மி பண்ணுங்க. யாரும் பார்க்கலேன்னா அதை அமத்திருங்க!” என்றாள் பிரேமா. 

“கரெக்ட்! எதுக்கு இப்போ டி.வி.? ஏண்டா ஜெயந்த், நீ பாக்குறியா?” என்று மகன் பக்கம் திரும்பினார் ஈஸ்வர். அவன் குனிந்து மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான்.

“அமத்திருங்க மாமா. ஏற்கெனவே ஒருவாட்டி பார்த்ததுதான். மறுக்காவும் போடுவான். அப்ப பாத்துக்கிட்டாப் போச்சு!” என்றாள் ப்ரியா. 

ராஜசேகர் எழுந்து சென்று வால் டி.வி. ஸ்டாண்டில் பார்க்க, இரண்டு ரிமோட்டுகள் இருந்தன. “இதுல எதும்மா டி.வி. ரிமோட்டு?” என்றார் குழப்பமாய்.

“நீளமா இருக்கிறதுதான் டி.வி. ரிமோட். மத்தது டாடா ஸ்கையோடது” என்ற பிரேமா, “எத்தினி தடவ சொன்னாலும் மறந்துர்றாரு. இங்கே டி.வி. என் கன்ட்ரோல்தான். அவருக்கு நியூஸ் பார்த்தாப் போதும். போட்டுவிட்டா பார்த்துட்டேயிருப்பாரு. சேனல் மாத்தத் தெரியாது. திடீர்னு கூவும். வால்யூமை ஏத்தி எறக்கத் தெரியாது” என்று அருகில் இருந்த பெண்மணிகளிடம் சொல்லியவள், ஹாலுக்குச் சென்று, “நவுருங்க. நான் ஆஃப் பண்றேன். நீங்க இங்கிட்டு வாங்க” என்று, அவரிடமிருந்து ரிமோட்டை வாங்கி டி.வி-யை அணைத்தாள் பிரேமா.

“டி.வி. கிட்டேயே போய் ஆஃப் பண்றோம். ஆனா, பேரென்னவோ ‘ரிமோட்’. வேடிக்கையாயில்லே?” என்று மறுபடி இன்னொரு மொக்கையைப் போட்டாள் ப்ரியா. பரிதாபமாக இந்த முறையும் அவளின் நகைச்சுவை யாராலும் கண்டுகொள்ளப்படாமல் போனது.

வால் கிளாக் மணி ஐந்தைக் காட்டியது. “லேட்டாகும்னா ஒரு மெசேஜாவது பண்ணியிருக்கலாம்ல? என்ன பொண்ணு இவ” என்று சலித்துக்கொண்டாள் பிரேமா.

“மாமி, நான் கிளம்பட்டுங்களா? நான் போய்த்தான் நைட்டு டிபனுக்கு எதுனாச்சும் பண்ணணும். உங்க பொண்ணு வந்தா சொல்லுங்க, வரேன்” என்று கிளம்பிவிட்டாள் சுந்தரம்மாள்.

“நானும் உத்தரவு வாங்கிக்கிறேங்க. வெளியில ஷாப்பிங் போக வேண்டியிருக்கு. காய்கறியெல்லாம் கொஞ்சம் வாங்கணும்” என்றபடி கிளம்பினாள் வேறொரு பெண்மணி.

ஒவ்வொருவராகக் கழல, வீட்டில் கலகலப்பு குறைந்து, நிசப்தமானது. ஜெயந்த், தான்தான் இன்றைய ஃபங்ஷனின் கதாநாயகன் என்கிற நினைப்பின்றி, மொபைல் ஸ்க்ரீனைத் தள்ளித் தள்ளி கர்ம சிரத்தையாக ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களுக்கு லைக் போட்டுக்கொண்டிருந்தான்.

மீண்டும் ஹாசினியின் மொபைலுக்கு ட்ரை பண்ணிப் பார்க்கலாமா என்று நிவேதிதா தன் ‘ரெட் மி’யை உயிர்ப்பித்த வேளையில், ராஜசேகரின் மொபைல் ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ பாடியது. எடுத்துப் பார்த்தார். கான்டாக்ட் ஐகானில் சிரித்தாள் ஹாசினி. பரபரப்புடன் கிரீன் டிக்கை ஸ்வைப் செய்து, காதில் வைத்து, “ஹாசினி, எங்கேம்மா இருக்கே? நாங்கெல்லாம் உனக்காக மதியத்துலேர்ந்து வெயிட் பண்ணிட்டிருக்கோம். ஏன் லேட்டு…” என்று பேசிக்கொண்டே போனவரை மறித்து,

“சார், வணக்கம். என் பேர் சித்தார்த்” என்றது, கரகரத்த ஓர் ஆண் குரல். 

- தொடரும்