அத்தியாயம் 1

66.54k படித்தவர்கள்
5 கருத்துகள்

வாதாபி சக்கரவர்த்தி புலிகேசியின் படைகள், மகேந்திர பல்லவரின் காலத்தில் காஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டது, தென்னாட்டின் சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற சம்பவம். ஏறக்குறைய எட்டு மாத காலம் அந்த முற்றுகை நீடித்திருந்தது. எனினும், காஞ்சிக் கோட்டையின் மதில்கள் கன்னியழியாமல் கம்பீரமாகத் தலைதூக்கி நின்றன. வாதாபிப் படையைச் சேர்ந்த வீரன் ஒருவன் கூடக் காஞ்சிக் கோட்டைக்குள்ளே கால் வைக்கவும் முடியவில்லை. வாதாபி வீரர்கள் காஞ்சிக் கோட்டையைச் சூழ்ந்து கொண்டவுடனே, வைஜயந்தி பட்டணத்தில் செய்தது போலவே ஒரே மூர்க்கமாய்க் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்ற யத்தனித்தார்கள்.

காலாட் படையைச் சேர்ந்த கணக்கற்ற வீரர்கள் ஏக காலத்தில் கோட்டையின் நாற்புறத்திலும் அகழிகளை நீந்திக் கடக்க முயன்றார்கள். கோட்டை மதில்களின் மேல் மறைவான இடங்களிலிருந்து மழை போல் பொழிந்த அம்புகளும் அகழியிலிருந்த முதலைகளும் அவ்வீரர்களையெல்லாம் எமலோகத்துக்கு அனுப்பின. தப்பித் தவறிக் கரையேறிய வீரர்கள் கோட்டை மதிலோரமாகக் கண்ணுக்குத் தெரியாமல் அமைந்திருந்த பொறிகளில் அகப்பட்டுத் திண்டாடினார்கள். ஆங்காங்கு அகழிகளில் இறங்கிய யானைகளுக்கும் அகழியிலிருந்த முதலைகளுக்கும் பயங்கரமான போராட்டம் நடந்ததில், அகழியில் நிறைந்திருந்த தண்ணீரெல்லாம் செந்நீராக மாறியது. 

முதல் முயற்சியில் தோற்ற பிறகு, கோட்டை வாசல்களுக்கு எதிரே அகழியைத் தூர்த்துக் கோட்டைக் கதவுகள் மேல் யானைகளை மோதச் செய்ய முயன்றார்கள். காஞ்சியைச் சுற்றியிருந்த பெரிய பெரிய விருக்ஷங்களையெல்லாம் மத்த கஜங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு வந்து அகழியில் போட்டுத் தூர்த்தன. ஆனால், இந்த வேலை அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. கோட்டை வாசலின் மேல் மாடங்களில் மறைவான இடங்களிலிருந்து பல்லவ வீரர்கள் வேகமாய் எறிந்த வேல்கள் யானைகளின் கண்களிலும் மற்றுமுள்ள மர்ம ஸ்தானங்களிலும் தாக்க, அவை வீறிட்டுக் கொண்டு திரும்பியோடிச் சளுக்கர் படைகளுக்குச் சேதமுண்டாக்கின. 

பெரும் பிரயத்தனத்தின் பேரில் கோட்டை வாசல்களுக்கு எதிரே அகழிகள் தூர்க்கப்பட்டன. யானைகள் கோட்டைக் கதவுகளை முட்டிய போது, வௌிக் கதவுகள் தகர்ந்தன. ஆனால், வௌிக் கதவுகளுக்கு உள்ளே எதிர்பாராத அதிசயம் யானைகளுக்குக் காத்திருந்தது. புதிதாய் அமைக்கப்பட்டிருந்த உட்கதவுகளில் நூற்றுக்கணக்கான வேல் முனைகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த வேல் முனைகளில் வேகமாய் மோதிக் கொண்ட வாதாபி யானைகள், பயங்கரமாகப் பிளிறிக் கொண்டு திரும்பி, தங்களுக்குப் பின்னாலிருந்த காலாட் படை வீரர்களையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு ஓடின. பெரிய பெரிய மரக்கட்டைகளைக் கொண்டு வந்து அந்த வேல் முனை பொருந்திய கதவுகளையும் தகர்த்தார்கள்.

அப்படித் தகர்த்து விட்டுப் பார்த்தால், அக்கதவுகளுக்குப் பின்னால் கோட்டை வாசலை அடியோடு அடைத்துக் கொண்டு கருங்கல்லாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட கெட்டிச் சுவர் காணப்பட்டது. இவ்விதமாக, ஏறக்குறைய ஒரு மாதகாலம் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றுவதற்கு முயன்று தோல்வியடைந்த பிறகு, நீடித்து முற்றுகையை நடத்திக் கோட்டையிலுள்ளவர்களைப் பட்டினி போட்டுப் பணியச் செய்வதென்று புலிகேசி தீர்மானித்தான். வாதாபிப் படைகள் காஞ்சியைச் சுற்றிலும் நெடுந்தூரம் வரை கூடாரம் அடித்துக் கொண்டு தண்டு இறங்கின. 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

முற்றுகையை ஆரம்பித்து ஆறு மாத காலம் ஆன போது, கோட்டைக்குள் இருப்பவர்களுக்கு என்ன ஆபத்து நேரிடுமென்று புலிகேசி எதிர்பார்த்தானோ அந்த ஆபத்து வாதாபிப் படைகளுக்கே நேரலாயிற்று. அதாவது உணவுப் பஞ்சம் நேர்ந்தது. இலட்சக்கணக்கான வீரர்களும், ஆயிரக்கணக்கான போர் யானைகளும், வண்டி இழுக்கும் மாடுகளும் ஒரே இடத்தில் இருந்து கொண்டு எவ்வளவு காலத்துக்கு உணவு பெற முடியும்? வடபெண்ணைக் கரையிலிருந்து காஞ்சி வரையில் உள்ள வழியில் புலிகேசியின் படைகளுக்கு யாதொரு உணவுப் பொருளும் கிடைக்கவில்லை. ஏனெனில் வடபெண்ணையிலிருந்து மெல்ல மெல்லப் பின்வாங்கி வந்த பல்லவ சைனியம், வாதாபிப் படைக்கு உணவுப் பொருள் ஒன்றும் கிடைக்காதபடி நன்றாய்த் துடைத்து விட்டிருந்தது.

அவ்வாறே, காஞ்சியைச் சுற்றிலும் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் உள்ள கிராமங்களையெல்லாம் சூனியமாக விட்டு விட்டு ஜனங்கள் போய் விட்டபடியால், வாதாபிப் படைக்கு உணவுப் பொருள் எதுவும் கிடைக்கவில்லை. இரண்டு மூன்று மாத காலத்திற்குள் காஞ்சியைச் சுற்றியிருந்த காடுகள், தோட்டங்கள் எல்லாவற்றையும் வாதாபியின் யானைகள் அழித்துத் தின்று விட்டன. அப்புறம் அவற்றுக்கு ஆகாரம் தேடுவதற்காகப் பல காத தூரம் போக வேண்டியிருந்தது. அப்படிப் போனாலும் அந்த வருஷத்துக் கடுங் கோடையில் பசுமையைக் கண்ணால் பார்ப்பதே அபூர்வமாயிருந்தது. இதையெல்லாம் காட்டிலும் மிகப் பயங்கரமான இன்னோர் அபாயம், கோடை முற்றிய போது வாதாபிப் படைகளுக்கு ஏற்பட்டது, அதாவது, குடிதண்ணீருக்கே பஞ்சம் உண்டாகி விட்டது. 

அந்த வருஷத்தில் காஞ்சியைச் சுற்றிலும் ஏழெட்டுக் காத தூரம் பரவிய பிரதேசங்களில் சில அதிசயங்கள் நடந்து வந்தன. கார்த்திகை, மார்கழியில் தண்ணீர் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்த பெரிய பெரிய ஏரிகளெல்லாம், தை, மாசி, மாதத்தில் எப்படியோ திடீர் திடீரென்று கரை உடைத்துக் கொண்டு சுற்றுப் பிரதேசங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தன. இது காரணமாக, சித்திரை மாதத்தில் ஏரிகளில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. ஆங்காங்கு இருந்த கிணறுகளும், குளங்களும், ஏரிகள் உடைத்துக் கொண்டு வெள்ளம் வந்த போது தூர்ந்து போய் விட்டன. எங்கேயாவது கொஞ்சம் தண்ணீர் கண்டால் குடிப்பதற்குப் பயனில்லாதபடி அழுகி நாற்றமெடுத்துக் கிடந்தது. 

அந்த நாளில் பாலாற்றில் மூன்று இடங்களில் அணைக்கட்டு கட்டித் தண்ணீரைத் தேக்கி வைத்திருப்பார்கள். வேனிற்காலத்தில் சிறிது சிறிதாக விடுவார்கள். இந்த வருஷத்தில் அந்தத் தேக்கங்களை முன்னமே உடைத்து விட்டிருந்தபடியால் கோடைக் காலத்தில் பாலாறும் வறண்டு விட்டது. பாலாறு வறண்ட காரணத்தினால் காஞ்சியையும் கடலையும் ஒன்று சேர்த்த கால்வாயிலும் தண்ணீர் வற்றிப் போய் விட்டது. கோட்டையைச் சுற்றியிருந்த அகழித் தண்ணீரோ, இரத்தமும் நிணமும் சேர்ந்த சேற்றுக் குட்டையாக மாறியிருந்தது. எனவே, வாதாபியின் இலட்சக்கணக்கான வீரர்களுக்கும் யானைகள், குதிரைகள், மாடுகள் எல்லாவற்றிற்கும் பாலாற்றில் ஊற்றெடுத்தே குடி தண்ணீர் கிடைக்க வேண்டியிருந்தது. பசி, தாகங்களின் கொடுமையினால் போர் யானைகள் அவ்வப்போது வெறி பிடித்துச் சிதறியோட, அவற்றின் கால்களில் மிதிபட்டு வீரர்கள் பலர் எமலோகம் சென்றார்கள். 

ஆனி மாதத்திலே ஒரு நாள் வராகக் கொடி வானளாவப் பறந்த கூடாரத்திற்குள்ளே புலிகேசியின் யுத்த மந்திராலோசனை சபை கூடிற்று. முன்னே வடபெண்ணை நதிக்கரையில் நாம் பார்த்த அதே படைத் தலைவர்கள் ஏழெட்டுப் பேர், எதிரில் விரித்திருந்த கம்பளத்தில் உட்கார்ந்திருக்க, வாதாபி மன்னன் தந்தச் சிங்காதனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தான். முன்னைக் காட்டிலும் புலிகேசியின் முகத்தில் கடூரமும் கோபமும் அதிகமாகக் கொதித்துக் கொண்டிருந்தன. படைத் தலைவர்களைப் பார்த்து, அவன் கூறினான்; "இந்த மகேந்திரவர்மனுக்குத் தகப்பன் பெயர் சிம்மவிஷ்ணு; மகன் பெயர் நரசிம்மன். ஆனால், மகேந்திரனோ வெறும் நரியாக இருக்கிறான். வளையில் நரி புகுந்து கொள்வது போல், இவன் கோட்டைக்குள்ளே புகுந்து கொண்டிருக்கிறான். நரி வளையிலிருந்து வௌியே வருமென்று எத்தனை நாளைக்குத்தான் காத்துக் கொண்டிருப்பது? உங்களில் யாருக்காவது ஏதாவது யோசனை தோன்றுகிறதா?" 

படைத் தலைவர்கள் மௌனமாயிருந்தார்கள். ஒருவராவது வாய் திறந்து பேசத் துணியவில்லை. "ஏன் எல்லோரும் மௌனம் சாதிக்கிறீர்கள்! வெற்றி மேல் வெற்றி கிடைத்துக் கொண்டிருந்த போது, நான் நீ என்று எல்லோரும் யோசனை சொல்ல முன்வந்தீர்கள். யோசனை தேவையாயிருக்கும் போது வாயை மூடிக் கொண்டிருக்கிறீர்கள். ஆகா! நமது பிக்ஷு மட்டும் இப்போது இங்கிருந்தால்...." என்று சொல்லிப் புலிகேசி பெருமூச்சு விட்டான். சபையில் ஒருவன், "பிரபு! பிக்ஷுவைப் பற்றி எந்தவிதமான தகவலும் வரவில்லையா?" என்று கேட்டான். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

"பிக்ஷுவிடமிருந்து சேதி வந்து நெடுங்காலம் ஆகிறது. வடபெண்ணைக் கரையில் வஜ்ரபாஹு என்னும் களப்பாளத் தலைவனிடம் அனுப்பிய ஓலைக்குப் பிறகு அவரிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. மதுரைப் பாண்டியனைப் பார்ப்பதற்கு அவர் போயிருந்த சமயத்தில், ஏதேனும் நேர்ந்து விட்டதோ, என்னவோ? ஆகா! பிக்ஷு மட்டும் இப்போதிருந்தால் உங்களைப் போல விழித்துக் கொண்டு இருப்பாரோ? ஒற்றர் தலைவரே! புத்த பிக்ஷு என்ன ஆகியிருப்பாரென்று கண்டுபிடிக்கும்படியாக எட்டு மாதத்திற்கு முன்னாலேயே சொன்னேனே? இதுவரை ஏதாவது தகவல் கிடைத்ததா?" என்று கேட்க, ஒற்றர் படைத் தலைவன் தலை குனிந்து கொண்டான். 

பிறகு புலிகேசி அங்கே எல்லோருக்கும் முதலில் இருந்தவனைப் பார்த்து, "சேனாதிபதி, உமக்கு என்ன தோன்றுகிறது? முற்றுகையைத் தொடர்ந்து நடத்த வேண்டியதுதானே? மகேந்திர பல்லவனைப் பணியச் செய்ய இன்னும் எத்தனை காலம் பிடிக்கும் என்று நினைக்கிறீர்?" என்று கேட்டான். அதற்கு வாதாபி சேனாதிபதி, "மதில் மேல் காணப்படும் பல்லவ வீரர்கள் கொஞ்சம் கூட வாட்டமின்றிக் கொழுத்தே காணப்படுகிறார்கள். ஆனால், நம்முடைய வீரர்களுக்கு இப்போது அரை வயிறு உணவுதான் கொடுக்கிறோம். இன்னும் ஒரு மாதம் போனால் அதுவும் கொடுக்க முடியாது. சுற்றுப்புறத்தில் பத்துக் காததூரத்திற்கு ஒரு தானிய விதை கூடக் கிடையாது" என்றார். 

புலிகேசியின் முகத்தில் கோபம் கொதித்தது, "ஆமாம்! ஆமாம்! எப்போது பார்த்தாலும் இந்தப் பஞ்சப் பாட்டுத்தான்! இம்மாதிரி மூக்கால் அழுவதைத் தவிர, வேறு ஏதாவது யோசனை சொல்லுவதற்கு இங்கு யாரும் இல்லையா?" என்று கோபக் குரலில் புலிகேசி கேட்க, படைத் தலைவர்களில் ஒருவன், "பிரபு! காவேரிக் கரையில் ஆறு மாத காலமாகப் பாண்டிய ராஜா காத்துக் கொண்டிருக்கிறார். சோழ வளநாட்டில் சென்ற வருஷம் நன்றாக விளைந்த தானியம் ஏராளமாக இருக்கிறது. ஜயந்தவர்ம பாண்டியருக்கு ஓலையனுப்பினால், ஒருவேளை அவர் உணவு அனுப்பக்கூடும்," என்றான். 

இதைக் கேட்ட புலிகேசி சற்று நேரம் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். பிறகு திடீரென்று துள்ளிக் குதித்து எழுந்து, எல்லாரையும் ஒரு தடவை சுற்றிப் பார்த்து விட்டு, "என்ன செய்வதென்று தீர்மானித்து விட்டேன். இனிமேல் நான் இங்கேயே சும்மா உட்கார்ந்திருந்தால் எனக்குப் பைத்தியமே பிடித்து விடும். சேனாதிபதி! நீர் இங்கேயே நமது சைனியத்தின் பெரும் பகுதியுடன் முற்றுகையை நடத்திக் கொண்டிரும். ஓர் இலட்சம் வீரர்களுடன் நான் தெற்கே புறப்பட்டுச் சென்று பாண்டிய மன்னனை நேரில் பார்த்து விட்டு வருகிறேன். யானைப் படை என்னுடன் வரட்டும். ஆஹா! வாதாபியிலிருந்து புறப்பட்ட போது கொழு கொழுவென்றிருந்த நம் யானைகள் உணவில்லாமல் எப்படி மெலிந்து போய் விட்டன! காவேரிக் கரையில் நம் யானைகளுக்கு நிறைய உணவு கிடைக்குமல்லவா?" என்றான். 

அப்போது ஒற்றர் படைத் தலைவன், "பிரபு! தாங்கள் அப்படிச் சிறு படையுடன் போவது உசிதமா? பாண்டியனுடைய நோக்கம் எவ்விதம் இருக்குமோ?" என்று கூறியதற்குப் புலிகேசிப், "பாண்டியனுடைய நோக்கம் என்னவாக இருந்தாலும் என்ன? அவன் நம்மோடு போர் செய்யத் துணிய மாட்டான். அவன் மோசக் கருத்துள்ளவனாயிருந்தாலும் என்ன செய்து விடமுடியும்? காவேரிக் கரையில் ஒளிந்து கொள்வதற்குக் கோட்டை ஒன்றும் இல்லை. எதிரி போர்க்களத்தில் நிற்கும் வரையில் எனக்குப் பயமும் இல்லை" என்றான்.