அத்தியாயம் 1

81.34k படித்தவர்கள்
74 கருத்துகள்

வந்த திசையைத் திரும்பிப் பார்த்தாள் வெங்கண்ணி... முயல்தீவு இருண்டு கிடந்தது. சற்று தெற்கே துறைமுக வெளிச்சம் தெரிந்தது. சரக்குக்கப்பல் வந்திருக்க வேண்டும். நிலையான வெளிச்சம் மட்டுமல்லாமல் ஊர்திகளின் வெளிச்சம் போல சில அங்குமிங்கும் நகர்ந்தபடி ஒளிர்ந்துகொண்டிருந்தன.

"தாயி கரையிலேருந்து வெளங்க வந்துட்டமாதிரி இருக்கு. இங்கனயே நங்காரத்த

தள்ளிடுவம்மா" என்றார் அவளின் வயது முதிர்ந்த தந்தை சடையன்.

“………..”

“நங்காரத்த தள்ளு தாயி.”

"யப்பா இன்னும்  கொஞ்சம் ஓடிப்போயி தள்ளுவமே..."

"ராலு வலதான தாயி எலக்க போறம். தாவுல போறாதாக்கும். இங்கனக்குள்ளயே வச்சி

பாத்துறலாம்."

"ஒனக்கு பயமாருக்கா?"

"இந்தக் கடலே பத்து பாவத்துக்கு மேலதான். இதுக்கு மேலயும் எப்புடி தாவு

எடுத்து ஓட?"

“இது தாவு வராதுப்பா."

"இல்லாட்டினாதான் என்ன இப்ப. இதுவும் ராலு வுழுவுற எடந்தான். இதுல வச்சி எலக்கிருவம். நங்காரத்த தள்ளு தாயி.”

வெங்கண்ணிக்கு அந்த கொடமுத்திப் பாறைக்குப் போகவேண்டும். அங்குதான் முதன்முதலாக அவனை அவள் பார்த்தாள். அவளைப் பொறுத்தவரை அன்று நடந்ததும் சிலாவம்தான். இசக்கிமுத்து என்னும் உயிர்முத்தை அவள் எடுத்தது அன்றுதான். சிலாவத்தில் எல்லோரும் மூழ்கித்தான் முத்தெடுப்பார்கள். இவளுமேகூட மூழ்கினாள்தான். ஆனால், முத்து அவளை அள்ளியெடுத்து கரை சேர்த்திருந்தது. அன்றைய நினைவுகள் மனதை இதமாய் வருட, அவள் தன் அப்பா கூறிய வார்த்தைகள் எதுவும் காதில் விழாதவளாக தனது தோணியை செலுத்திக்கொண்டிருந்தாள்.

"யாந்தாயி புயல் மதிரியில்ல தோணி பறக்க..."

"ஏ யப்பா பயந்துட்டியாக்கும். பாரு தோணி மெல்லத்தான் போகுது."

"எப்பா முனியா நீதான் எம்மகள பாத்துக்கணும்."

"எப்பா, பாரு இப்ப நான்  ஒண்ணு சொல்லப்போறன்."

"சரிதான் என்னத்த சொல்லப்போற?"

"சொல்றன். நீ பயப்படக்கூடாது பாத்துக்கோ." இந்த ஒரு வார்த்தை போதாதா சடையனை பீதியடைய வைக்க? அதே பீதியடைந்த கண்களால் அவளை ஏறிட்டுப்பார்த்தார்.

"பாத்தியா சொல்றத்துக்குள்ளயே பீத்தவலயில சிக்குன ஓந்தி மாரியில்ல முழிக்க."

"நான் எங்க முழிக்கன். அப்புடி என்னத்த சொல்லப்போற சொல்லேன் பாக்கன்."

"பங்குனி உத்திரத்துக்கு திருச்செந்தூர் போயிருந்தியில்ல?"

"ஆமா..."

"என்ன வீட்லயே இருக்கச்சொல்லி போன."

"ஆமா. நீ எம்பேச்ச எங்க கேட்ட?"

"அன்னைக்கு வீட்ல சும்மா இருக்கமேண்டுல்ல கடலுக்கு வந்தன்..."

"....."

"கட்டுமரத்துலதான் வந்தன்."

"....."

"கரய ஒசப்புகூடி நண்டுவல எலக்கலாமெண்டுதான் போனன். கடல்ல எறங்கவும் வெளங்க போவமுண்டு தோனிச்சி." மகளின் பேச்சைக் கேட்டு அதிர்ந்தவராய் அவளைப் பார்த்தார்.

"நீவாடு வேகத்துக்கு மரம் அதுபாட்டுல போச்சி."

"....."

"பாத்தா கொடமுத்திபாறு பக்கமா வந்து நிக்கன். அப்பத்தான் புத்திக்கு ஒறைக்கிது. அடடா ஒத்தாளா வந்து கெடக்கமே. அதுவும் கட்டுமரத்துல வந்து கெடக்கமேண்டு மனசு படபடத்துப் போச்சி."

"பொழுதும் அப்பத்தான் விடிஞ்சி வருது. கரையப்பாக்கன். கரமோப்பு ஒண்ணுமே கண்ணுக்குத் தெரியல. ஆடிப்போயி நிக்கன். அப்பத்தான் சோளபுறத்துலேருந்து பாய் ஒண்ணு வருது. அந்த வத்தய கண்டபெறகுதான் மூச்சு வருது எனக்கு. பத்து பேருருக்கும். ஆளுக்கொரு மெதப்புல எறங்குனாங்க"

"வேதகாரங்க வத்தையாக்கும்?"

"எறங்கும்போது அம்பா போட்டுல்ல எறக்குனாங்க?"

"அம்பா போட்டா, அப்ப நம்ப ஆளுகளாக்கும்."

"நானும் அதான் நெனச்சன்."

"எல்லாரும் எடம்பெற எடம்பெற கெடந்தாங்க. திருக்கவல போட்டிருப்பாகண்டு நெனைக்கன்."

"எனக்கும் பயம் அத்துப்போச்சி. வலய எலக்கின. எடம்பெற கெடந்தாலும் தொணயிருக்கில்ல. எது ஆனாலும் பாத்துக்கிடலாமெண்டு ஒரு துணிச்சல் பாத்துக்க. வலய எலக்கிட்டன். வாங்கி பாத்தா வலயில ஒண்ணுமே கெடையாது. மறுபடி மறுபடி எத்துன நேரம் போட்டாலும் என்ன செய்ய கட்டமண்ணாதான் வருது."

"பாரு தாயி இப்புடியே பொய்கத சொல்லியே தோணிய சிலோனுக்கு கொண்டு போயிடுவியோ?"

"நான் என்னக்கி ஓங்கிட்ட பொய் சொல்லியிருக்கன்? பாருப்பா நான் இன்னக்கிம் அந்த  பாறுல கொண்டுபோயி வைக்கிறன். அதுக்குப் பிறகு சொல்லு பொய்க்கதயா நெசக்கதயாண்டு"

சடையன் கேட்டதிலும் தவறில்லைதான். வெங்கண்ணி எதையெதையோ பேசினாலும்கூடதான் போக நினைத்த இலக்கையும் வேகத்தையும் சற்றும் மாற்றிக்கொள்ளவில்லை. சடையனால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. இவ்வளவு ஆழக்கடலுக்கு அவர் அவளை ஒருநாளும் அழைத்து வந்ததில்லை.  

அவருக்கு இந்தக் கடலின் ஒவ்வொரு அங்குலமும்  அதன் ஆழமும்  பாறையும் அதன் அமைப்பும் அத்துபடி என்றபோதும்பெண்பிள்ளை என்பதால் வெங்கண்ணியை அவர்  பத்து பாகத்துக்கு மேல் ஆழம் உள்ள கடலுக்கு அழைத்து வந்ததில்லை. எத்தனையோ முறை வெங்கண்ணி கெஞ்சிக்கேட்டும்கூட அவர் இதற்கு சம்மதித்ததில்லை. அதற்கு மேலும்பிடிவாதம் பிடித்தால்,

 "யான் ஒருத்தன் உழப்பே போதுந்தாயி. நம்ம ரெண்டு பேரு உண்கவும் உடுத்தவும்  என்ன கொறஞ்சிடப்போகுது. நீ வீட்டுலயே இருந்துக்க. பொம்பளப்புள்ளய கடல்தொழில் காட்டாமயே வளத்துட்டானே சடையண்டு யாரும் சொல்லிடக்கூடாது பாத்துக்க. அதுனால மட்டும்தான் ஒன்ன நான் தொழில்போக்கு கூட்டிப் போனனாக்கும். ஓம் அம்மய கேட்டுப்பாத்திருந்தா தெரியும். ஒருநாளும் தாவு கடலுக்கு அவள கூட்டிப் போனதேயில்ல" என்பார்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அதனால்தானோ என்னவோ அவரில்லாத நாளில் அவள் அவ்வளவு துணிச்சலாய் நடுக்கடலுக்கு வந்திருக்கிறாள்.

"சொல்லு தாயி."

"நீதான் நம்பலயில்ல. அப்பறம் எதுக்கு கேக்க? வேண்டாம் போ."

"இந்த கெளட்டு அப்பன் ஓம்பேச்ச  நம்பாம எங்க போவப்போறன் தாயி."

"யப்பா இதுமாதிரியெல்லாம் பேசாதண்டு எத்தனை தடவ சொல்லியிருக்கன்?"

"தப்புதான் தாயி. நீ சொல்லு."

"யப்பா இந்த போரியாதான்  நான் கெடந்தன் அன்னைக்கி. "

"கொடமுத்தி பாறுல்ல இது. இவ்வள தூரம் ஓடிவந்துருக்க?. பயமில்லாமதான் ஓடிவந்தியா?"

"நங்காரத்த தள்ளவாப்பா?"

"எதுக்கு?"

"வலய எலக்குவமே..."

"தாவு கடல் தாயி. இருவது பாவத்துக்கு மேல இருக்கும். மேலக்கடல்தான் பாக்க

சாதுவாருக்கு. உள்ள நீவாடு வேகமால்ல இருக்கும். இதுல வலய எலக்குனா வல

நம்ம கைக்கு கெடைக்காது. வெறும் கயிறுதான் கெடைக்கும்.”

"நெசமாவாப்பா?"

"பொய் சொல்ல தேவ என்னருக்கு?"

"அப்படின்னா இங்கிட்டு வர்றவிய்க எல்லாம் என்ன புடிப்பாகளாம்?"

"பாறுல சிப்பி கெடக்கும்.  பாறுக்கு பக்கமா சங்கு கெடக்கும்.

பாறசுத்தியும் உள்ளயும் பெரிய மீன்க கெடக்கும்."

“……”

"குளியாளுகதான் இங்க ஓடுவாக."

"யப்பா இந்த பாறுல ஓடிருக்கியா நீ?"

"இங்கேருந்து சுலோன் வரைக்குமே  நான் ஓடாத தாவுமில்ல. தடவாத பாறுமில்ல.”

“……”

"இதுமாதிரி பாறுக்கு பாறு எடைவெளி இருக்கும். அதுக்குள்ள பெரிய மீன்க இருக்கும். உள்ள நொழஞ்சாதான் மீன பிடிக்கலாம். வீடுமாதிரியே  சந்தும் பொந்துமா இருக்குற பாறுக்குள்ள மீனு மாதிரி நொழஞ்சிடலாம். முன்னுக்கு போகலாம். ஆனா, திரும்பி பின்னுக்கு வர முடியாது. பொந்து இருக்கத பாத்து ஒரு வழியால நொழஞ்சி மறுவழியால வெளிய வந்தாதான் உண்டு. நானெல்லாம் துணிஞ்சிடுவேன். போறபோக்குலயே தங்கூசியால மீன கொளுக்கிகிட்டே போயி மறு வழியால வெளில வந்துருவன்.''

"பாறு பொந்துகுள்ள மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவிய?"

"மீனுக நம்மள சாப்பிட வேண்டியதுதான். புலி அஞ்சால மாதிரியான மீனுக

கடிச்சிடும் தெரியுமா?"

" என்னப்பா?"

"ஆமாந்தாயி.  தம்மூச்சிலதான் ஓடுறம்.  மூச்ச அடக்கி இருவது பாவம் தாவு ஓடணும். அதுக்கப்பறம் பாறைக்கு  எடையில நொழஞ்சி மீன பாத்து கொளுக்கி விடணும். பெரிய மீனுக சாதுவாருக்குமா? கொளுக்குன வேகத்துக்கு துள்ளவும் துடிக்கவும் செய்யும். வாலால முள்ளால அடிக்கவும் செய்யும். எல்லாத்தயும் தாங்கிட்டு மீனயும் விட்டுறாம மூச்சயும் விட்டுறாம மேல வந்து சேரணும்."

"...... "

"நானெல்லாம் பலதடவை பாறைக்குள்ள ஒருபக்கமா  நொழைஞ்சி மறுபக்கம வெளிய வந்துருக்கன்."

"உன்ன மாதிரி வேறாளு யாரும் துணிஞ்சி போயிருகாங்களாக்கும்?"

"காலவாசல் கடக்கரையில மொத்தமே ஒரு ஏழெட்டு பேருக்குத்தான் இந்த வேலைய செய்யத் தெரியும்."

"இப்ப வலய எலக்க வேண்டாமாப்பா?"

"நாந்தான் சொன்னேல்ல... எதுவும் புண்ணியமா இருக்காதெண்டு."

"அப்ப என்ன செய்ய?"

"தோணிய திருப்பு. கரைகூடி பாப்பம்."

"யப்பா நீ என்ன வெளயாட்றியா? இவ்வள தூரம் ஓடிவந்துட்டு கரயபோயி வைப்போங்க."

"அப்பன்ன நங்காரத்த தள்ளு. நான் ஓடி நெலத்த பாக்கன்."

" இன்னமும் ஓம்மனசுல  ஒன்னய வாலிபப்பயன்னே நெனப்பியாக்கும்?"

" நானும் தன்மூச்சுல ஓடி வெகுகாலம் ஆச்சில்ல. இப்ப ஒருமூச்சுல ஓடித்தான் பாக்கனே."

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் போ. நீ சொன்னமாதிரி அப்புடி கரகூடி பாப்பம்."

"அப்பசரி,  நேரத்த சொணக்காம தோணிய திருப்பு தாயி. தொழில பாக்கணுல்ல."

"இங்கிட்டு தாவு எத்துன பாவம்ப்பா இருக்கும்?”

" இருவது பாவத்துக்கு மேல இருக்கும் தாயி."

" நான் அன்னைக்கி தரய பாக்கல்ல."

"யப்பா முனியா, இந்த பொண்ணு என்ன சொல்லவாறா."

"வலயில பாடு ஒண்ணுமில்ல. அதான் வந்ததுக்கு தரயதடவி மச்சமோ ராலோ கைல வர்றத

பிடிக்கலாமெண்டு தண்ணியில பாஞ்சிட்டன்."

"......."

" நான் நெனச்சமாதிரி இல்ல. போவப்போவ தரதெம்படவேயில்ல. எனக்கே குழியோடுறமாதிரி தோனிச்சி. நீ சொல்றத வச்சிப் பாத்தா பாதிதாவு போயிருக்கன் போல. அவ்வளதான் கீழ ஓடவும் முடியல... மேல வரவும் மனசில்ல.

ஏதோ ஒண்ணு இழுத்து நடுக்கடல்ல அமுக்கி பிடிக்க, நெனப்பா நெசமாண்டே புரியல. அம்மா தாயி முத்தாரம்மா என்ன பாத்துக்க. யப்பா முனியா என்ன கரசேத்திடுன்னு வேண்டிக்கன். தத்தளிக்கன். வாயால மூக்கால உப்புநீரு உள்ளபோகுது. இன்னக்கி அவ்வளவுதான் நம்மபாடு முடிஞ்சிதிண்டே நெனச்சனா இல்லயாண்டே தெரியலை. அதுக்கு பிறகு என்ன நடக்க ஏது நடக்க எதுவும் தெரியல.

மறுபடியும் நெனவு வந்து கண்ண தொறந்து பாத்தா நான் கட்டுமரத்துல கெடக்கன். அங்கிட்டு மெதப்புல எறங்கி வலபோட்டு நின்னவுகதான், நான் தண்ணில பாஞ்சதயும் நேரமா மேல வராததயும் எடமா இருந்தே பாத்துட்டு வந்து காப்பாத்திருக்காக. என்னோட கட்டுமரத்துல தூக்கிப்போட்டு உள்ளங்காலு உள்ளங்கைய தட்டித் தட்டி தேச்சி உசுரு கொடுக்காக." அதிர்ச்சியில் வாயடைத்துப் போனவராக மகளையே பார்த்துக்கொண்டிருந்தார் சடையன்.

"அவுக வந்த  வத்தைல ஏறாம கரவரைக்கும் எனக்கு தொணயா அவுக மெதப்புலயேதான் வந்தாக. வந்து விட்டுட்டுத்தான் போனாக. "

"பெரியாளாக்கும்?"

" வாலிபப் பயதான்."

"வத்த எங்கிட்ருந்து வந்திச்சி பாத்தியா... சோளபுறத்துலேருந்தா இல்ல வாடபுறத்துலேருந்தா?"

"அதான் சொன்னனே சோளபுறத்துலேருந்துன்னு.”

“அப்ப காலவாசல் வத்தையா இருக்குமோ?”

 “ஆமா, காலவாசல் வத்ததாம்பா."

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

" இது நடந்து வாரம் பத்து நாள் ஆகுதுல்ல. எனக்கு யாந்தாயி சொல்லல?"

" நீ பயந்துருவப்பா. தெரிஞ்சா கடலுக்கு என்னய கூட்டிபோக மாட்டியே?"

" அந்த பய யாரு மவன்னு தெரியுமா தாயி?"

" பேரெங்க தெரிய. நான் யாரு எவரெண்டு விசாரிக்கவாச் செஞ்சன். மறுபடியும் பாத்தாக்க மூஞ்ச வச்சி கண்டுக்கிறலாம்."

"வத்தைல வந்த மத்த ஆளுங்களுக்கு இது தெரியுமா?"

" தெரியாதுன்னுதான் நினைக்கன்."

"அந்த பய வேற எதுவும் சொல்லலயாக்கும்?"

" பேசுனாத்தானே சொல்ல."

"....."

"மயக்கம் தெளிஞ்சதும் நான் கட்டுமரத்த கரைக்கு திருப்பிட்டன். ரொம்ப தூரம் வந்த பிறகு திரும்பிப் பாத்தா பின்னாலயே வந்திட்ருந்தாரே தவர, பக்கமா வந்து யாரு, என்ன ஏதுன்னு ஒண்ணும் பேசலப்பா." வெங்கண்ணி சொல்லியவற்றைக் கேட்டு சடையன் உள்ளூர நடுங்கிப்போனார்.

"திருச்செந்தூர் முருகா, உன்ன பாக்க வந்தது குத்தமாய்யா?

யப்பா முனியா, இலங்க முனீஸ்வரா.... நல்லா வளத்துடுவேண்டு நம்பித்தான, நீ இந்தப் பிள்ளைய எங்கிட்ட கொடுத்த. இப்படி அநியாயமா தொலச்சிடப்பாத்தனே!"  புலம்பினார்.

"யப்பா எப்ப பாத்தாலும் எலங்க முனியசாமி கொடுத்தாருன்னு சொல்ற. இல்லன்னா முத்து சிலாவத்துல கெடச்சேன்னு சொல்ற. எத நான் நம்ப. எதுதாம்ப்பா உண்ம?"

"....."

"நான் யாரு? என்னய எங்கேருந்து தூக்கிவந்த?"

"நீ யாம்மக தாயி."

"நான் ஒண்ணோட மகதான். இப்ப இல்லேன்னு மறுத்தனாக்கும்? ஆனா உண்ம ஒண்ணு இருக்குல்ல? அதச்சொல்லு. "

"உண்ம அதுதான் தாயி. முத்து சிலாவத்துல கெடைச்ச பருவ முத்து நீ."

"அட போப்பா. உண்மையாவே என்ன பெத்துப்போட்டது யாரு?"

"தாய் தகப்பன்  இல்லாம உருவான தெய்வப் பொறப்பு தாயி நீ."

"என்னோட மொகத்த பாத்து சொல்லேன் பாப்பம். நீ சொல்றது உண்மையா பொய்யாண்டு தெரிஞ்சிடபோகுது."

"இந்த கெங்காமேல சத்தியமாச் சொல்றன். நீ தாயி தகப்பன் இல்லாத எனக்குகெடைச்ச முத்துதான்."

"தாயி தகப்பன் யாருன்னு  தெரியாம வேணா  இருக்கலாம்.  ஆனா நான் ஓங்கிட்ட

எப்படி வந்து சேந்தேன்னு தெரியுமில்ல?"

"அதான் சொல்றனே தாயி."

"யப்பா.. பொறுமய சோதிச்சி பாக்க?"

"....."

"இது கருவல்பாறு தாயி.  நீவாடு இருக்கபோல தெரியல. இங்கவேணா வலய எலக்கி பாப்பமா?"

"இதயெல்லாம் நானே செய்திட மாட்டன்?. நீ எதுக்கு இப்ப பேச்ச மாத்தப்பாக்க?"

நங்கூரத்தை பதியவிட்டு தோணியை நிலைநிறுத்தினாள். வலையின் தலைப்பில் சற்றுபெரிய மிதவையைக் கட்டினாள்.

சிக்கில்லாமல் தென்னி ஒவ்வொரு  அள்ளாக அடுக்கி கோத்து வைத்திருந்த வலையை சீராக எடுத்து விட்டுக்கொண்டேயிருந்தாள். மொத்தம் பத்து வலைகளிருந்தன. ஒரு வலையின் முடிவில் அடுத்த வலையின் ஆரம்பக் கயிற்றைக் கட்டி விட்டுக்கொண்டேயிருந்தாள். 

சடையன் சொன்னது சரியாகத்தான் இருந்தது. வலை விடவிட சீராக போய்க்கொண்டிருந்தது. நரம்புக் கயிற்றால் கட்டப்பட்ட மேவலையில்  ஒரு அள்ளுக்கு ஒரு மிதப்புக்கட்டை கட்டப்பட்டிருந்தது. அவை வரிசையாக மிதந்து கடலில் வலை போகும் போக்கை காட்டிக்கொண்டிருந்தன.

காவலை நூல் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. அது கடல் நீரில் அலசாமல் இறங்கி நிற்க வேண்டி அதில் ஆங்காங்கே சம இடைவெளியில் சிறிய இரும்புக் குண்டுகள் கோக்கப்பட்டிருந்தன.

வலை இறக்குவதில் அவளுக்கு உதவும் விதமாக எடுத்துக்கொடுத்துக்கொண்டிருந்தார் சடையன். மொத்த வலையும் இறங்கி முடித்த பின் கடைக்கயிற்றை தோயுடணின் இணைத்துக்கட்டினாள் வெங்கண்ணி. முதுமையின் சுருக்கம் விழுந்த தனது நெற்றியை அழுத்தித் துடைத்தவாறே கடலுக்குள் கிடக்கும் வலையைப் பார்த்தார் சடையன். வரிசையாக வட்டவடிவிலான மேரி ரொட்டி போன்ற மிதப்புக் கட்டைகள் மிதப்பதைப் பார்க்க அழகாயிருந்தது.

நேர்க்கோட்டை தத்தித்தத்தி வரும் சிற்றலைகள் ஆங்காங்கே வளைத்தும் நெளித்தும் போட்டது போலிருந்தது.

"கடல்ல வேகமில்ல தாயி. இப்படி  சீரா இருந்தா பாடு நல்லாருக்கும்" என்றார் சடையன்.

"யப்பா நான் கேக்கனே, காதில விழுதா இல்லயா ஒனக்கு?"

"என்னத்த கேக்க? நீ கேக்காட்டியுமே நான் சொல்லாம விட்ருவனாக்கும்."

"இப்படி புள்ளயிலேருந்து அம்மய கேட்டுட்டே இருந்தன். நான் யாரு. சொல்லு... சொல்லுண்டு.  அதுவும்  ஒன்ன மாதிரிதான் சொல்றன் சொல்றண்டு சொல்லாமயே கண்ணமூடிட்டு. பாத்துக்கப்பா நீயாவது சொல்வண்டுதான கெஞ்சுறன். யாங்கிட்ட எதுக்கு மறைக்க. கடைசி வரைக்கும் பொறந்த சங்கதிய தெரிஞ்சிக்காமயேதான் நான் வேகணும் போல."

"யாந்தாயி இப்படியெல்லாம் பேசுற? நான் சொல்றன் தாயி. ஒண்ணுவிடாம எல்லாத்தையும் சொல்றன்."

வெங்கண்ணி வலைக்கயிற்றை மெதுவாக தூக்கிப்பார்த்தாள். பாடு இருந்தால் கைக்குத்தெரியும். அவள் கைக்கு கனம் கொடுத்தது வலை. ஆனாலும் அனிச்சையாக அதை செய்தாளே தவிர கவனம் முழுவதும் சடையனின் வாயசைவிற்காகவே காத்திருந்தது.

சடையன், மகளிடம் எல்லாவற்றையும் எப்படிச் சொல்வது? எங்கிருந்து ஆரம்பிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தார். புதிதாக நாம்  சொல்வதைக் கேட்டு தன் தாய் தகப்பன் மீது அக்கறை வந்து யாராயிருக்குமென்று தேடிப்போக நினைப்பாளோ? நம்மீது பாசமில்லாமல் போய்விடுமோ என்று பலவாறாக எண்ணி வருந்தினார்.

வெங்கண்ணியை அவர் கையிலேந்தும்போது பிறந்து ஒருநாள்கூட ஆகாத குழந்தையாய் இருந்தாள். அப்போதிருந்து அவர் அவளை சிறகுக்குள் தன் குஞ்சுகளை வைத்து பாதுகாக்கும் தாய்க்கோழி போலவே இன்றளவும் பாதுகாத்து வருகிறார்.

என்ன ஒன்று... செல்லமாய் வளர்க்க நினைத்து கொஞ்சம் பிடிவாதக்காரியாகவும் வைராக்கியக்காரியாகவும் வளர்த்துவிட்டார்.  இப்போது தன்னைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும் என்று கேட்டு பிடிவாதம் பிடிக்கிறாள். முடியாது என்றால்  போகட்டும் என்று விட்டுவிடுவாளா? சொல்லித்தான் ஆகவேண்டும். அவளுக்கும் தன்னைப்பற்றி தெரிந்துகொள்ள உரிமையிருக்கில்லயா.

“ம்ம்ம்....” நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டுக்கொண்டார். அது அவரை ஆசுவாசப்படுத்தி பழைய நினைவுகளை மீட்டுக் கொண்டுவர அவருக்கு உதவியிருக்க வேண்டும்.

(தொடரும்...)