அத்தியாயம் 1
இன்று
குரு இறுதியாக அந்தக் கத்தியைத் தேர்வு செய்தான். அதன் கைப்பிடி இவன் கைக்கு அடக்கமாகவும் இவனது கைப்பிடிக்குள் இறுக்கமாகவும் இருந்தது.
அதன் நீளமும் நாலரை அங்குலமே இருந்தது. பேன்ட் பாக்கெட்டுக்குள் சுலபமாக அடங்கும். கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருந்தால் எங்கேயும் உரசாது. பாக்கெட் துணியைக் கிழித்து உடம்பில் காயம் ஏற்படுத்தாது.
குருவின் முன்னே ஒரு பிளாஸ்டிக் விரிப்பு இருந்தது. அதன் மீது பலவிதமான ஆயுதங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.
இவனுக்கு எதிர்புறத்தில் அந்த ஆயுதங்களை விற்பவன் உட்கார்ந்திருந்தான். அவன் குருவை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். குருவின் பக்கத்தில் இருவர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர எதையும் வாங்கும் நோக்கத்தில் இருப்பவர்களாகத் தெரியவில்லை.
அந்த விற்பனையாளன் குருவை மீண்டும் உற்றுப் பார்த்தான்.
தற்காப்புக்காகக் கத்தி வாங்குபவனாகக் குரு தோன்றவில்லை. அவன் முகத்தில் ஏதோ கோபமும் உறுதியும் நீண்ட கால விரக்தியும் தெரிந்தது. அவனுடைய கண்களும் உடையும் லேசான தாடியும் அவனை ஒரு ரௌடியாகக் காட்டவில்லை.
தன்னுடைய வியாபாரத்தில் எத்தனை விதமான மனிதர்களைப் பார்த்திருக்கிறான்? கொடூரமாக யாரையோ பழிவாங்க வேண்டும் என்ற வெறியில் வருபவர்கள், கூலிப் படையினர், யாராலோ ஏமாற்றப்பட்டு வஞ்சம் தீர்க்க விரும்புபவர்கள், ஏமாற்றிய காதலரை ஒழித்துக்கட்ட விரும்புபவர்கள்.
இப்படி எத்தனையோ விதமான மனிதர்கள் அவனிடம் ஆயுதங்கள் வாங்கி இருக்கின்றனர். ஆனால் இதில் எந்த பிரிவிலும் சேர்ந்தவனாக குரு தெரியவில்லை. கொஞ்சம் கோபம் நீண்ட காலமாகவே அந்த முகத்தில் குடியிருந்திருக்க வேண்டும்.
விரக்தியும் சோகமும் ஒரு கலவையாகத் தெரிந்தன.
நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத ஓர் ஊர் அது.
ஊருக்கு வெளியே ஒரு பெரிய புளியந்தோப்பு இருந்தது. வாரச்சந்தை அங்கேதான் கூடும். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அங்கே சந்தை கூடும். சுற்றிலும் உள்ள பல கிராமங்களில் இருந்தும் மக்கள் அங்கு கூடுவார்கள்.
மளிகை சாமான்கள், காய்கறிகள், பழங்கள், விதைகள், செடிகள் முதலியன அங்கே விற்பனையாகும். ஒரு பகுதியில் ஆடுமாடுகள் கோழி முதலானவைகளும் விற்பனை ஆகும்.
ஜவுளி மூட்டைகள் சைக்கிள்களில் கட்டி கொண்டு வருபவர்களும் உண்டு. சந்தைத் தோப்பின் மேற்கில் ஓர் அம்மன் கோயிலும் உண்டு. வெள்ளிக் கிழமை ஆதலால் அங்கும் சற்று கூட்டம் இருக்கும்.
அதற்குச் சற்றுத் தள்ளிதான் அந்த ஆயுத வியாபாரம் நடந்துகொண்டிருந்தது.
பார்ப்பதற்கே பயத்தை ஊட்டும் அருவாக்களும் பலவிதமான கத்திகளும் மடக்கக் கூடிய பிச்சுவா, சுருள் கத்திகள், தோல் உறையுடன் கூடிய கத்திகள் என்று விதவிதமான கத்திகள் அங்கு அடுக்கப்பட்டிருந்தன.
“என்ன இது? இவ்வளவு பயங்கரமான ஆயுதங்களை இப்படி ஓப்பனா விக்கிறாங்க? போலீஸ் ஒண்ணும் கேக்க மாட்டாங்களா?”
சுடிதார் அணிந்த இரண்டு பெண்கள் குரு காதுபட பேசிக்கொண்டு சென்றார்கள். அவன் அவர்களை மௌனமாக ஒரு முறை பார்த்துவிட்டு திரும்பவும் அந்தக் கத்திகளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
இந்த ஆயுதங்கள் எவ்வளவு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
அவன் வாழ்க்கையையே திசை திருப்பிய புயல் அல்லவா?
சாதாரண திருப்பங்களா?
எரிமலையும் சுனாமியும் சேர்ந்து தாக்கியது போல் என்னென்ன பேரழிவுகள்?
ஒரு கணம் அவன் கண்கள் பனித்துவிடும் போல தோன்றியது.
மிகவும் சிரமப்பட்டு தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
தேர்வு செய்த கத்திக்கான விலையைக் கொடுத்துவிட்டு அதனைத் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டான். அவனுடைய அசைவுகளுக்கு ஒன்றும் சிரமம் கொடுக்கவில்லை. நடக்க ஆரம்பித்தான்.
சந்தைக் கூட்டத்தில் ஒரு சிலர் அவனை விசித்திரமாகப் பார்த்தார்கள்.
இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே? என்று சிலர் யோசித்தார்கள்.
“இவன் முகத்தை நியூஸ் பேப்பரில் பார்த்திருக்கிறேனே” என்று ஒருவர் தன் நினைவுகளைத் தோண்ட ஆரம்பித்தார். அவர்களுக்கு முழு நினைவு வர கொஞ்சம் நேரம் ஆகும்.
ஏனெனில் எல்லாம் நடந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன அல்லவா?
(ஆனால் சமீபத்தில் தொலைக்காட்சிச் செய்தியில் சில நொடிகள் வந்துவிட்டுப் போனது அவனுக்கே தெரியாது.)
அதைப்பற்றி எல்லாம் உணராமல் குரு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
சாலைக்கு வந்து பேருந்து நிறுத்தத்தை அடைந்தான்.
சந்தை நாள் ஆனதால் அங்கு கூட்டம் அதிகமாகவே இருந்தது. சாக்குப் பைகள், கூடைப்பைகள், கூடைகள் என்று சந்தையிலிருந்து திரும்பும் கூட்டம்.
ஆனால் அவர்கள் எல்லோரும் பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். அவரவர்கள் ஊர்களுக்குச் செல்லக்கூடிய நகரப் பேருந்துகளுக்காகக் காத்திருந்தனர். குருவோ நீண்ட தூரம் போக வேண்டும். இலேசாகப் பசித்ததுபோல் தெரிந்தது. அருகில் ஒரு தேநீர் கடை இருந்தது. குரு அங்கே சென்றான்.
அங்கே ஒரு பெஞ்சின் மீது இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள்.
இவனைக் கண்டதும் அவர்கள் ஏனோ எழுந்துகொண்டார்கள். இவன் ஒன்றும் சொல்லாமல் அங்கே போய் அமர்ந்துகொண்டான்.
“ஐயா, என்ன சாப்பிடிறிங்க? மெதுவடை, மசால்வடை சூடாய் இருக்கு. தரட்டுமா?” என்று டீக்கடைக்காரன் கேட்டான்.
குரு இரண்டு மசால்வடை கேட்டான்.
கிழிக்கப்பட்ட ஒரு செய்தித்தாளின் துண்டில் இரண்டு மசால் வடைகளை வைத்து டீக்கடைக்காரன் கொடுத்தான்.
குரு அவைகளை எடுத்துக்கொண்ட பொழுது டீக்கடைக்காரன் அவனை உற்று நோக்கினான். குருவை அவன் உடனே அடையாளம் கண்டுகொண்டான்.
நான்கைந்து நாட்களுக்கு முன்னால் தொலைக்காட்சியில் இவன் முகத்தைச் சில வினாடிகள் அவன் பார்த்திருக்கிறான்.
ஓர் அரசியல் தலைவரின் நூற்றாண்டு விழா காரணமாகச் சிறையில் இருந்து விடுதலையான கைதிகளில் ஒருவனாக குரு இருந்தான்.
இப்பொழுது அணிந்திருக்கும் அதே உடைகள் நீண்ட நாட்களாக அணியப்படாமல் மடித்து வைக்கப்பட்டிருந்த பேண்ட், சற்றே நிறம் மாறிய சட்டை, சமீபத்தில் எங்கோ வாங்கப்பட்டடிருந்த விலைமலிவான செருப்புக்கள்…
இவனை அந்த டீக்கடைக்காரன் அடையாளம் கண்டுகொண்டான்.
ஆனால் இவன் பெயரோ, என்ன குற்றம் செய்துவிட்டுச் சிறைக்குப் போனான் என்பது போன்ற விவரங்களோ அவனுக்குத் தெரியவில்லை.
இருந்தபோதிலும் குருவைப் பார்க்கும்பொழுது ஒரு பயம் கலந்த மரியாதை வந்தது.
“ஐயா, டீ போடட்டுங்களா?”
“உம்” குரு தலை அசைத்தான்.
“எப்படி? ஸ்டராங்கா, லைட்டா, சக்கரை போடலாமா?”
“ஸ்ட்ராங், சக்கரை போடலாம்”
குரு சாதாரண தொனியில்தான் பதில் சொன்னான்.
டீ க்ளாஸை நீட்டும் பொழுது அந்தக் கடைக்காரனிடம் ஒரு பணிவு இருந்தது.
இவன் யாரோ, எப்படிப்பட்டவனோ? அவனிடம் நல்ல விதமாகவே இருந்துவிடுவோம்.
“எவ்வளவு?” என்று குரு கேட்டான்.
“இருபது ரூபாய்”
குருவுக்கு இது ஒன்றும் அதிசயமாக இல்லை. மூன்று நாட்களாகப் பழகிப்போய்விட்டது.
அவன் உள்ளே சென்றபொழுது இது போன்ற பகுதிகளில் டீ இரண்டு ரூபாய் வடை ஐம்பது காசுகள்.
ஏழாண்டுகளுக்குள் பண மதிப்பு குறைந்துவிட்டது?
காசைக் கொடுத்துவிட்டு குரு வெளியே வந்தான்.
“ஐயா, பஸ்ஸுக்கா?” கேட்டான் டீ மாஸ்டர்.
“ஆமாம்.”
“மெட்ராஸ் பஸ் வர நேரம்தான்”.
குரு ஏதும் பதில் சொல்லாமல் நடந்தான்.
எங்கே போவது?
அவளை எங்கே தேடுவது?
என்ன நிலையில் அவளைப் பார்ப்பேனோ? அவளை நினைக்கும் பொழுதெல்லாம் கோபமும் கூடவே வரும்.
அவள் ஏன் இப்படி நடந்துகொண்டாள்?
அவன் மீது அவள் வைத்திருந்த அன்பு, காதல் எங்கே போயிற்று?
எப்படி இவனை மறந்தாள்?
அவளால்தானே எல்லாம் நிகழ்ந்தது?
குரு பாக்கெட்டினுள் கையை விட்டான்.
கத்தியை ஒரு முறை தொட்டுப் பார்த்துக்கொண்டான்.
சிறையிலிருந்து இவ்வளவு சீக்கிரம் விடுதலை ஆவோம் என்று குரு நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
அவனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை பத்து ஆண்டுகள். ஏறக்குறைய ஒரு மாதமாகவே அவனுடைய சக கைதிகள் குசுகுசுவென்று இரகசியமாகப் பேசிக்கொண்டார்கள். தலைவரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி நிறைய கைதிகள் தண்டனை காலம் முடியும் முன்னே விடுதலை செய்யப்படுவார்கள் என்பதே அது.
யார் யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் யூகம் செய்யத் தொடங்கினார்கள்.
ஆனால் குருவுக்கு அப்படிப்பட்ட நம்பிக்கையோ கனவுகளோ இல்லை.
ஏனென்றால் இவன் கொலைக்காக தண்டனை பெற்றவன். மேலும் அவனுக்காக சிபாரிசு செய்யக் கூடிய பெரிய மனிதர்கள் யாரும் இல்லையே.
ஆகவே மூன்று நாட்களுக்கு முன் விடுதலை ஆகப்போகிறவர்கள் பட்டியலில் அவன் பெயரும் இருந்தது. குருவுக்குப் பெரிய ஆச்சரியம்.
எதிர்பாராத இந்த விடுதலைச் செய்தி அவனுக்குள் பலவிதமான எண்ணப் போராட்டங்களைத் தோற்றுவித்தது.
விடுதலை ஆகி எங்கே போவது?
இவன் மீது வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்பே அவன் தாய் காலமாகிவிட்டிருந்தாள்.
அதற்கு முன்னதாகவே அந்தக் கொலை நிகழ்ந்த அடுத்த நாளே இவன் தந்தை அறிவித்துவிட்டார் “இவன் என் மகனே இல்லை.”
அவனுக்கு வக்கீல் வைக்கவோ, ஜாமின் எடுக்கவோ ஏன் ஒரு முறை கூட பார்க்க வரவில்லை.
குரு ஒரே மகன். சகோதர சகோதரிகள் யாரும் இல்லை.
உறவினர்கள் கூட இவன் தந்தையின் கோபத்திற்கு அஞ்சி ஒதுங்கிக்கொண்டார்கள். மேலும் அவன் செய்த காரியத்தில் வெறுப்பாகவும் இருந்தனர்.
ஆனால் சுமதி?
அவள் என்ன ஆனாள்?
ஏழாண்டுகளாக அவனைப் பார்க்கவே அவள் வந்ததில்லை. இவன் கைதான உடனேயே முதல் நாளும் அடுத்த நாளும் பார்க்க வந்தாள். பிறகு வரவே இல்லை.
கடிதங்கள் கூட எழுதியது இல்லை.
அவளைக் காதலித்து எல்லோரையும் விரோதித்துக்கொண்டு பதிவுத் திருமணம் செய்ததால்தானே வாழ்க்கையில் இவ்வளவு திருப்பங்கள்?
அவளுக்கு என்ன ஆயிற்று?
குருவுடன் மேலும் பலரும் விடுதலை ஆகி இருந்தனர். பலரும் வீடுகளுக்குத் தகவல் சொல்லியிருந்தனர். அவர்களை வரவேற்க அவர்களது குடும்பத்தினர் வந்திருந்தனர்.
இவன் ஒருவருக்கும் தகவல் சொல்லவில்லை. யாருக்குச் சொல்வது?
பல ஆண்டுகளாக ஒருவர் கூட அவனைப் பார்க்க வந்ததில்லை. பார்வையாளர்கள் நாட்களில் எல்லாம் வெறுமையாய் யாரும் வராமல் போயிற்று.
முதலில் சில மாதங்கள் இவனுக்கு ஏமாற்றமாகவும் வேதனையாகவும் இருந்தது. பிறகு பழகிப் போயிற்று.
இப்பொழுது யாரிடம் செல்வது?
காதல் மனைவி சுமதி, நண்பர்கள் தவிர இவன் சார்ந்திருந்த அரசியல் கட்சியும் இவனை மறந்திருந்தது.
பேசாமல் சிறையிலேயே தங்கிவிடலாமா என்று பைத்தியக்காரத்தனமாக யோசித்தான்.
அது நடைமுறைக்கு ஒத்து வராது என்பது உடனே புரிந்தது.
“உன் நன்னடத்தைதான் உன் விடுதலைக்குக் காரணம்” என்று சிறை அதிகாரி அவனிடம் சொன்னார். உடைமைகள் என்று அவனுக்கு அங்கே ஏதும் இல்லை.
சிறைக்கு வரும்பொழுது அவன் அணிந்திருந்த சட்டை பேண்ட் உள்ளாடைகள் தவிர வேறு ஏதுமில்லை. அவற்றை ஒரு காக்கி காகித உறையில் இருந்து எடுத்துக் கொடுத்தார்கள். சிறை உடைகளைக் கழற்றிவிட்டுத் தன் சொந்த உடைகளை அணிந்துகொண்டான். சிறை உணவு அவனுக்குப் பிடித்திருக்கவில்லை. மிகவும் அளவாகத் தேவைக்கு மாத்திரம் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். எனவே அவன் உடல் எடை கூடவே இல்லை. அவனுடைய பழைய உடைகளை அணிவதில் எந்தச் சிரமும் இல்லை. சரியாகப் பொருந்திற்று.
குருவுக்கு அவன் உழைப்பிற்குச் சம்பளமும் கொடுத்தார்கள். இந்தப் பணம் கைதிகளுக்குச் சரியாகக் கொடுக்கப்படாது என்று அவன் கேள்விப்பட்டிருந்தான். ஆனால் அவனுக்கு முழுமையாக வழங்கப்பட்டது.
கொலைக் குற்றவாளிகள் என்றாலே எல்லோருக்கும் கொஞ்சம் அச்சம்தான் போலும்.
மனதில் கொஞ்சம் கூட உற்சாகம் இல்லாமல் அவன் வெளியே வந்தான்.
பேருந்து நிலையத்திற்கு வந்து சொந்த ஊருக்குப் பஸ் ஏறினான்.
ஊரில் வந்து இறங்கிய பொழுது எல்லாமே புதிதாகத் தெரிந்தது. பேருந்து நிலையம் வெகுவாக மாறியிருந்தது.
புதிய கட்டிடங்கள், கடைகள், ஏன் மனிதர்களுமே புதிதாகத் தெரிந்தார்கள்.
எங்கே செல்வது?
வீட்டிற்குப் போக முடியாது.
அம்மா அப்பொழுதே மாரடைப்பால் இறந்துபோய் இருந்தார்கள்.
அப்பா நிச்சயம் அவனை ஏற்றுக்கொள்ள மாட்டார்.
வேறு எங்கே போகலாம்?
சுமதி எங்கே இருக்கின்றாளோ?
மீண்டும் மீண்டும் அவன் மனதில் இந்தக் கேள்வி எழாமல் இல்லை. அவளைப் பற்றிய கவலைதான் அவனுக்கு மிகவும் வேதனை அளித்தது. அவளால்தானே இவன் வாழ்க்கையே திசை மாறியது.
அவன் கைது செய்யப்பட்ட உடனேயும், பிறகு அடுத்த நாளும் அவனை அக்கறையுடன் வந்து பார்த்தவள்தான்.
பிறகு என்ன ஆயிற்று?
அவள் எப்படி வாழ்கிறாள்?
வருமானத்திற்கு என்ன செய்கிறாள்?
உதவி செய்யக் கூடிய உறவினர்கள், தோழிகள் இருந்திருக்கலாம்.
ஆனால் எவ்வளவு நாட்களுக்குச் செய்திருப்பார்கள்? அவனுக்குச் சிந்தனைகள் மீண்டும் குழம்பின.
அருகிலிருந்த ஒரு சிறிய ஓட்டலுக்குச் சென்றான்.
விலைப்பட்டியலைப் பார்த்தபொழுது அவனுக்கு ஒரே மலைப்பாக இருந்தது.
விலைவாசி இவ்வளவு ஏறிவிட்டதா?
ஓட்டலை விட்டு வெளியே வரும்பொழுது ஏறக்குறைய ஒரு திட்டம் அவன் மனதில் உருவாகி இருந்தது.
முதலில் நண்பர்களைப் போய்ப் பார்க்கலாம் என்று முடிவு செய்தான்.