அத்தியாயம் 1

9.44k படித்தவர்கள்
4 கருத்துகள்

“அடே!”

கொள்ளிக்கட்டையிலிருந்து ஜ்வாலை குபீரிட்டது. நுனியில் பொறிகள் பறந்து சரிந்தன.

“அடே!!”

அதே வேளையில், இன்னொரு வீட்டில், கிண்டி மூக்கிலிருந்து குழல் ஜலம் பூமியில் தத்தம் சிந்திற்று. அப்போதே தொலைக்கப்பால், ஜலம் விழுந்த அதே கோட்டில் பூமி வெடித்தது.

எங்கோ மைதானத்தில் நட்ட நடுவில் நின்ற அரசில் இலைகள் சல சல…

“அடே! உன்னைப் பெற்ற வயிறு பற்றியெரிஞ்சு சொல்றேன்; உன்னை ஏன் பெற்றேன்னு இருக்குடா!”

எங்கோ, எவனோ, துர்க்கனாவில் குழறல் பயத்தின் சிரிப்பாய் வெடித்து சிள்கள் சில்லென உதிர்ந்தது. அந்தரம் அதிர்ந்தது.

“அடே!!! உனக்கு ஆண் குழந்தை பிறக்காது!”

“ஓஹ்ஹோ, பத்தினி சாபமாக்கும்! பிறந்தாலோ?”

“பிறந்தாலும் தக்காது. பாம்பு தன் முட்டையைத் தானே நக்கி விடற மாதிரி நக்கிவிடுவாய்!”

அப்பவே, அதுவாவே ஆத்திரத்தில் பூமிமேல் கையறைந்து எழுந்த ஆவியின் தும்பில், எரிந்த வயிறின் முத்துக் கொதியில், நாபிவேரினின்று கிளைகளோடு பிடுங்கிக்கொண்ட வேகத்தின் சுழலில், அனல் மூச்சின் கொந்தளிப்பில், ரத்தக் கொதிப்பில், உடல் கக்கிய வேர்வையில்,

சப்தத்தின் சத்தியத்தில்,

நா நறுக்கிய வடிவில்,

ஸர்வத்தின் நிரூபத்தினின்று

வாக்குத் தடுத்த வரம்புள், சொல் விதித்த விதியில், அதுவே என் உயிர்ப்பாய்,

அதன் கதியே என் ப்ரக்ஞையாய்,

நான்

பிதுங்கினேன்.

ஹாங்காரத்தின் ஹூங்காரம், ஹூங்காரத்தின் ரீங்காரம், ரீங்காரத்தின் ஓங்காரம், ஓங்காரத்தின் ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்...

வேகம் படிப்படியாய் ஓய்ந்து, படுதாவாய்ப் படர்ந்த நாத நடுக்கங்களைத் தாண்டி சப்தமண்டலத்தினின்று நான் வெளிப்பட்டதும், என் உருவத்தின் மழுவைத்தான் முதன்முதலாய் உணர்ந்தேன். என்னை ஜ்வரம் தஹித்தது.

என் பிறப்பின் வியப்பின் புது விழிப்பில் என்னைச் சுற்றிலும் நோக்கினேன்.

அலை நுரையாய்ச் சரிந்த வெண் கூந்தலலைகள் தடுத்துக் குறுகிச் சுண்டி, கன்னங்கள் ஒட்டிய முகத்தில் இருபெரும் கண் குழிகளில், கண்ணீரில், விழித்திரிகளில் திகுதிகு வீசிய ஒளியில், ஒளியாடும் நிழலில், என்னைப் படைத்தவளின் முகதரிசனம் கண்டதும் இது ருத்ரம் என்று கண்டுகொண்டேன்.

அஞ்சலின் அஞ்சலியில் என் அருவிலும் அருவின் உரு ஒடுங்கிப் போனேன்.

என் உருவின் ஒடுக்கம் ஒடுங்கலின் உரு.

கொக்கி குறுகி வளைந்து, ப்ரக்ஞை அதில் கழுவேறி நெளிந்தது.

? நான் யார் ?

கேள்வியே பதில்; பதிலே கேள்வி; பதிலினின்று கேள்வி; கேள்வியால் பதில்; பதிலும் கேள்வியும் இதுவா? இல்லை அதுவா? இல்லை.

இதுவுமில்லை; அதுவுமில்லை. அதோ அதுவுமில்லை. இல்லை இல்லை என்பதுமில்லை.

பின் எது? எது??

மாறி மாறி மறுப்பும் கேள்வியும் பதிலும் குழம்பிய கொந்தளிப்பினின்று.

நான் யார்? நான் யார்?? நான் யார்??? நான் யார்????

??????.... எண்ணற்ற பொறிமின் கொக்கிகள் துள்ளு மீன்களாய் எழும்பிப்பாய்ந்து வீழும் சதாவில் அவைகளுடன் நானும் ஒரு?

திணறுகிறேன்; அலைகிறேன்.

கேள்வி பதிலை நாடி நச்சரிக்கின்றது.

நான் வாக்கு.

எனக்கு ஆணுண்டோ? பெண்ணுண்டோ?

நான் அவளா? அவனா? அதுவா?

“அடே! உனக்கு ஆண் குழந்தை பிறக்காது! பிறந்தாலும் தக்காது!”

இது இப்படி பலிப்பதே என் விதி; அதுவே என் கதி; நான் சாப வாக்கு.

ஆத்திரம் கடைந்த ஓசைக்கடலின்று வாக்கு என எழுந்தமையால், அவ்வாக்குள் அதன் பொருள் அடக்கம் என்றன்றி வேறு ஸ்தூல உரு எனக்கென்று தனியாயில்லை. என் தன்மையின் உருவற்றமையாலேயே நான் காலம், இடம், உரு, நியமனங்கள் கடந்த மெய், சப்தத்தின் ஸத்யம்.

காலம் வருவரை காத்திருப்பேன்.

இடம் ஒன்றுள் தடுபடேன். எங்கும் இருப்பேன்.

உரு ஒன்றில் ஒடுங்கேன்; எவ்வுருவும் என்னுரு; என் தன்மை.

நான் சொல்;

சொல்லின் பொருள்;

பொருளின் செயல்;

மூன்றும் ஒன்றாய் ஒருங்கே இயங்கும் த்ரிசூலம்.

***

ன்னை பிறப்பித்தாளைப் பின்தொடர்ந்தேன்.

மூச்சிறைப்பு,காற்றில் பறக்கும் இறக்கை உதிரிபோல் அவளை முன் தள்ளிற்று. வெறுத்த வெண்மை முற்றி, மஞ்சள் பூத்த கூந்தற் சுமை கீழ், சிறு முகத்தை விழிக்குஹைகளும் குங்குமமும் பாதிக்கு மேல் அடைந்தன. அவள் செவிசூழ் ரீங்காரம் என்னைச் சுற்றி இரைந்தது.

ரயிலேறி,
ஊர் சேர்ந்து…

ஏரிக்கரை மேட்டின் மேல் ஒற்றையடிப் பாதையில் பனைகள் அணிவகுத்தன. கீழ் நோக்கில். வயல்கள் கட்டானிட்டுக் காக்ஷி விரிகின்றது. மேலே நீலம் கிண்ணம் கவிழ்ந்தது.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

சூரிய சாக்ஷி ஓய்ந்த பின், இரவில் பூமி சகிக்கும் க்ரம அக்ரமங்களைக் கவனிக்க வான் அனந்தம் கண்கள் ஒன்றொன்றாய்த் திறக்கின்றன.

இறைவனின் நியாயஸ்தலத்தின் கட்டியம்போல் கோவில் மாலை மணியோசை, காற்றுவாக்கில் வீசிவருகின்றது.

பகலில் பகலவன்;

இரவில் இருளின் கண்கள், ஒலிகள். உயிர்கள், அனைத்தும் என்றும் எப்பவும், ஒன்றுக்கொன்று காவல்.

பாட்டிக்கு நடை தானே விரைந்தது. காலடியில் மணியாங்கற்கள் நொறுங்கின. வழிகுறுக்கே வீழ்ந்து கிடந்த பழுதை ஒன்று, சடுக்கென உயிர்கண்டு, நெளிந்து நிலத்தின் வெடிப்பில் நுழைந்து ஒளிந்தது.

கிழவி பார்க்கவில்லை. பார்த்தால் பயந்திருப்பாளோ?

அவளைக் கண்டால் அதற்குப் பயம்.

அதைக் கண்டால் அதற்குப் பயம்.

உயிர்க்குயிர் உலகம் பயமயம்.

அவர் என்ன செய்கிறாரோ?

பயம்.

நெஞ்சம் புதைவிலிருந்து கவலைக்கோடுகள் எழுந்து, மாறி மாறிப் பின்னி, சிக்கலில் விழைந்து, அடிநுனியிழந்து சிலம்பமாடுவதைத் தன் ஊன் சிறையில் அவள் காணாள்.

ஆனால், நான் என் உருவற்றமையால், அடைப்பற்று அவள் தோள் மேல் ஊர்ந்து அவள் விழி வழி செவி வழி.

அந்தரத்தினின்று நூற்கும் உயிர் மூச்சு வழி

உடல் சதைப் பின்னல்களின் கோடி ஜன்னல் வழி உள் எங்கும் ஓடிஓடி கவலைக்கோடு பிரிந்தோடும் ரேகை காண்கிறேன்.

பிறவிப் பயங்கள், ஆசைகள், காரணமும் நியாயமுமற்ற கவலைகள், அவலங்கள் எத்தனை எத்தனை?

உலகம் பயமயம்.

தெருக்கோடியில், மேட்டு நிலத்தில் வீடு, ஓட்டு வீடு, பழம் வீடு, பழமையின் வழி வந்த வீடு. குறடு தாண்டி வாசலின் இரு பக்கங்களிலும் பெருந்திண்ணைகள். திறந்த வாசல் வழி கொல்லைக் கிணற்றின் வாய்மேல் ராட்டினத்தினின்று காலியாய்த் தொங்கும் தாம்பின் கருக்கு இங்கிருந்தே தெரிகிறது.

கிழவிக்குப் பரபரப்பு தாங்கவில்லை; நுழையும்போதே ‘எப்படியிருக்கிறீர்கள்?’ என்றபடியே வருகிறாள். நடை தாண்டியதும் கூடத்தில் படுத்திருக்கிறார். கண்டதும் கிழவியின் கழுத்துச் சரடு வடமெனத் திரள்கின்றது.

அவர் மார்புள் உயிர்ச்சுடர் அவள் பார்வையில் உரம் பெறுகிறது.

காண்கிறேன்.

உருவிலாமையால், புறம் தாண்டி, உள் ஊன்றி, உள்ளது கண்டு கண்டது விண்டு, காண்கிறேன்.

விடுவிடெனச் சென்று பாதங்களைப் பற்றி மார்புடன் அணைத்துக்கொள்கிறாள். ஆங்கெழுத்த உள்ளப்பெருக்கில் நான் சறுகி மூழ்கித் திணறுகிறேன். எனக்கு அழிவென்பது இல்லையென்பது இன்றிடில் அழிவு என்பது இப்படித்தான் இருக்குமோ?

கொதித் துளிகள் என் மேலும் பாதங்கள் மேலும் வீழ்ந்து புகைகின்றன.

“ஏன் அழுகிறாய்?” என்றுகூடக் கேட்கவில்லை. கண்களில் வினாக்கூட எழவில்லை. அப்போதே நானும் அவரைச் சூழும் மோனம் என்னைக் கவ்வுவதை உணர்கிறேன்.

சொல்லாமலே உணர்ந்து, கேளாமலே கண்டு, அறிந்ததையும் கண்டதையும் தன்னுள் அடக்கிய தவமோனம். பாட்டியின் பரிவும் பணிவிடையும் மட்டுமல்ல, இவ்வுயிர் மோனமுமே அவள் தாலிச்சரடைத் திரித்திருக்கிறது.

இருந்தாற் போலிருந்து கிழவி தன் வயிற்றில் அறைந்துகொண்டாள்.

“இந்த வயிறா பெத்தது? இந்த வயிறா?? இந்த வயிறா???”

“ஏன்?” என்று கேட்க மாட்டார். ஆயினும் – உதடுகள் அசைந்தனவோ?

“கேள்வி கேள்வியையே பெருக்கும்.
கேள்வியால் பயனென்ன?
கேள்விகள் எண்ணில; பதில் ஒன்றே.
கேள்வியையும் பதிலையும் விழுங்கிய
ஒரே பதில்;
அதுவும் கேள்வியும் பதிலுடன்
மூழ்கிப்போன மோன இருளில்
உருவெடுக்கும் ஒளியை ஏன் கலைக்கிறாள்?
ஏன் கலைக்கிறாள்?”

“நீங்கள் தடுத்தும் மீறிப்போனதுக்கு எனக்கு நன்னா வேணும். ஒரு பிள்ளையாய்ப் பெற்றதுக்கு மூக்கு நன்னா அறுத்தானய்யா! ஊம்? என்ன சொல்றேள்?”

“எத்தனை அறுத்தால்தான் என்ன,
மூக்கு முளைத்துக்கொண்டேதானிருக்கும்.
எத்தனை எத்தனை வாசனை
அத்தனையும் எங்கு போகும்?”

சீறினாள்; “நான் இப்போ சொல்றேன். நீங்கள் பார்த்துண்டே இருங்களேன். அவன் உருப்பட மாட்டான். சபிச்சுட்டு வந்துட்டேன்.”

பஞ்சடைந்த கண்களில் “?” பிறந்தன. தானே வெறும் வரம்புக் கோடுகளாய்த் தேய்ந்து, தன்னின்று தன்னைக் கழற்றிக் கொண்டிருக்கும் அவ்வுடலினின்று தீனக்குரல் குகையினின்று அசரீரிபோல் கிளம்பிற்று.

“மூக்குக்கு நான் நாக்கையறு;
ருசிகண்ட நாக்கு, எச்சிற்பட்ட நாக்கு,
சதி செய்யும் நாக்கு.”

கிழவி ஒரு கணம் குழம்பிப் போனாள். அப்போதுதான் அவளுக்கே தன்னைச் சூழ்ந்த இருள் தன்னை அழுத்துவது தெரிந்தது. எழுந்து போய் சுவாமி பிறையில் துழாவினாள்.

இருளின் அந்தரத்தில் ‘சுர்ர்’ரெனச் சீறி தீச்சுடர் துளைத்தெழுந்தது. அதை அவியாது காக்கும் அணைப்பில், குவிகரங்களிடை சுடர் சிவந்து பெரிதாகி, அவ்வேந்தலில் விளக்கண்டை நகர்ந்து நெருங்கியதும் தாவித் திரிமேல் ஏறிக்கொண்டது. ஒளியில் கூடம் மிதந்தது.

என்னைப் பிறப்பித்தாள் உன்னைப் பிறப்பித்தாள்.

ஆயின்,

நீ எனக்கு முன்னா பின்னா??

மீண்டும் அவரிடம் அவள் வந்தபோது அவர் எழுந்து உட்கார்ந்திருந்தார்.

“ஏதாவது ஆகாரம் பண்ணேளா? நான் இங்கிருந்து போனதே முதல் ஜலபானம் பண்ணல்லே.”

உதடுகள் அசைந்து கொண்டன. அவர் அவளைக் கண்ணெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. பார்வை தன்னுள் இறங்கிவிட்டது.

“வெறும் வயிறு பொல்லாது; அறிவிலாதது; விளக்கிலும் குச்சியிலும் அடக்கிய தீ உருப்படுத்தும்; உருப்படும். தொப்புள் தீ எரி நாக்கு. ஊர் கொளுத்தும். முன்னால் உன்னை அவி.”

கிழவி ஏதோ வாயெடுத்தவள் தன்னை அடக்கிக்கொண்டாள். கொல்லைப்புறம் சென்று தவலையைத் தாம்பில் பூட்டி கிணற்றுள் விட்டாள்.

ஜலம் மேல் பட்டதும் உடல் ஆவி கக்கிற்று, நெருப்பில் வதங்கிய இலைபோல் சுருண்டது. மேலும் மேலும் மொண்டு விட்டுக்கொண்டாள். முழுங்குகள் அள்ளியும் குடித்தாள்.

“அம்மாடி!”

முழங்கால்கள் கிடுகிடுத்தன. கிணற்றடியில் பிடிச்சுவர் மேல் முதுகு சாய்ந்து சரிந்து கிணற்றடியில் உட்கார்ந்துவிட்டாள், மேவிருந்து சிறுசிறு அருவிகள் வழிந்து ஓடின. உடல் வெப்பம் அடங்கி பாண்டை குளிர்ந்ததும், காற்றின் இழைவில் நானும் என் ஜுரம் தணிந்து குளிர்ந்து தெளிந்தேன்.

நான் விருப்பு வெறுப்பற்ற வாக்கு,
என் ஜனிப்பே என் பொருள்.

சொல் செயலாவதன்றி ஏன்? எதற்கு??
என்று??

எனும் கலகங்கள் எனக்கில்லை.

***

ரவின் இருளில் நீத்தும் எல்லையற்ற ஜீவதாதுக்களுடன் நானும் மிதக்கிறேன்.

ஒரே சமயத்தில்:

மரங்களின் மூச்சிலும்,

ராட்டினத்திலிருந்து கிணறுமேல் தொங்கும் தாம்பின் அசைவிலும்,

கூடத்தில் குத்துவிளக்கின் சுடரின் நூங்கலிலும்,

ஜன்னலுக்கு வெளியே தழைத்த புங்கமரக் கிளைமேல் ஒண்டிய கருவண்டின் கூவலிலும்.

ஓரக் கொல்லையில் வாழையடிச் சலசலப்பிலும்.

வீட்டுக்கெதிரே ஃ என்ற மூன்று பனை நடுவே கட்டிய பொலிக்காளை பூமிமேல் முகம் பதித்துச்சீறும் எக்காளத்திலும்,

இருளின் விசுவகர்ப்பத்தில், என் அருவத்தில்,
அருவத்தின் ஸர்வத்தில்,
எங்கும் தங்கி – இருக்கிறேன்.

பகல் தெளிய இருளே சரி.

உலகின் அவலம் எல்லாம் அசைவால்தான்

கோளம் கோணிச் சாய்ந்து, தன்னைச் சுற்றி

கூட ஒளியையும் சுற்றி,

அதனால் –

ஒளியும் அதன் நிழலும்

பகலும் இரவும் நாளும்

நிமிடம், நிமிடத்தினின்று யுகம் வரை நீளும் நேரம்,

இடையில் வாழ்வு, சாவு, கேள்வி, பதில், கனவு,

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

பொய், மெய், சோதனை, பயம், அவசரம், ஆயுள்,

தாபம், கோபம், சாபம், ஆசி,

நான்,

நீ.

உலகம் சலன மயம்.

பெரியவர் காலடியில் தலைப்பை விரித்துப் படுத்த கிழவிக்குத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி புரண்டாள். இடையிடை எழுந்து விளக்கொளியில் அவர் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள்.

கண்கள் மூடியிருந்தன. ஆயினும், உதடுகள் அசைந்தன. வாயினின்று வார்த்தைகள் வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. அவர் மார்மேல் செவிசாய்த்து ஒட்டுக்கேட்டாள்.

பகலெல்லாம் குஹையில் உறங்கிய பின் இரவில் இரை தேடப் புறப்பட்ட விலங்குபோல் பிரக்ஞை தன்னைத் தறியினின்று அவிழ்த்துக்கொண்டு எதையோ தேடிக்கொண்டிருந்தது.

மூடிய இழையோரங்களில் கண்ணீர் துளித்து விளக்கொளியில் பளபளத்தது. கிழவருக்கு மூச்சு திணறியது.

“அசடு, வேரை வெட்டிவிட்டாள். முட்டாள்!

விட்ட வித்தைத் துளிர்க்கவிடாது மேய்ந்துவிட்டாளே…

வாய்க்கோடரி வேரில் பாய்ந்துவிட்டதே!”

புருவங்கள் சுளித்தன.

“நாசினி, நீ அவனை அழிக்கவில்லை; என்னை அழித்தாய்.

என்னை மட்டுமல்ல, எனக்கு முன்னோனை அழித்தாய். வர்க்கத்தையே அழித்துவிட்டாய்.”

“பிள்ளைகளைவிடப் பேரன்களே அவசியம்,

ஒரே இழையின் ஓட்டம்,

தலையினின்று கடைவரை

தலைமுறையின் முதலவனே

மீண்டும் மீண்டும் தோன்றிட

வர்க்கம் வளர்க்கிறான்.

நான் என் பாட்டன்;

என் பேரன் நான்.”

“உயிர் அழிவற்றது. தன் உச்சரிப்புக்குத் தானே 

திரும்பத் திரும்ப

உருவைத் தேடுகிறது.

திரும்பத் திரும்ப

உச்சரணையே உயிரின் ஆதாரம்

திரும்பத் திரும்ப

உருவே தொடர்பின் ஆதாரம்.

திரும்பத் திரும்ப

தொடர்பே முயற்சியின் ஆதாரம்.

திரும்பத் திரும்ப

முயற்சியே விமோசனத்தின் ஆதாரம்.

திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப…

…”

“தொடர்பை வெட்டி, விமோசனத்தை அழித்துவிட்டாயே! உயிரின் கொள்கைக்கே துரோகமிழைத்தாயே!

மகனின் தவறினும் கொடிய பாவம் செய்தாயே!”

தலைமேல் கைவைத்தபடி கிழவி வாசற்படியில் உட்கார்ந்துவிட்டாள்.

வேளை ஏறிக்கொண்டே போயிற்று.

தலைமேல் வைத்த கை எடுக்கவில்லை.

இருந்த இடம் விட்டு நகரவில்லை.

படுக்கையிலும் எந்த அசைவுமில்லை.

திறந்த வாய் திறந்தபடி.

இரவில் தன்னைத் தேடிச் சென்ற பிரக்ஞை குஹைக்குத் திரும்பவில்லை.

மறந்ததோ?

…மறுத்துவிட்டதோ?

பனைகள் நடுவே கட்டிய பொலிக்காளை தரைமேல் தலைதாழ்த்தி வெதும்பிச் சினந்தது. வாயோரம் நுரை ஒதுங்கிக் காற்றில் அலைந்து உதிர்ந்தது.

- தொடரும்…