அத்தியாயம் 1

9.4k படித்தவர்கள்
6 கருத்துகள்

1. நாட்டியக்காரி

ன்றுதான் ‘கலா பவன’த்தின் வெள்ளி விழா, அவளுக்கும் அழைப்பு வந்திருந்தது. வெறும் அழைப்பு மட்டும் என்றால் போகாமல் இருந்துவிடலாம். விசேஷம் எல்லாம் முடிந்த பிறகு இவளை வந்து ‘ஏன் வரவில்லை?’ என்று அக்கறையாக யார் கேட்கப்போகிறார்கள்! அப்படி எவராவது விசாரித்தாலும் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லிவிடலாம். ஆனால், பவனத்தின் காரியதரிசி தாமோதரன் நேரில் வந்து பலமுறை வற்புறுத்தி இருக்கும்பொழுது…..

ஹேமலதாவின்-இது இவள் நாட்டியத்தை ஒரு தொழிலாகக் கொண்டதும் வைத்த பெயர். அவளது உண்மைப் பெயர் என்னவாவது துரைக்கண்ணு, சுப்புத்தாயி என்று இருந்திருக்கும். கலைக்கும் அதற்கும் கட்டி வருமா?- உள்ளம் என்னவோ நெகிழ்வற்று வறண்டு கிடந்து ‘போனால் போகிறது’ என்று முடிவுக்கு வந்த சமயம் வீட்டினுள் யாரோ நுழைவது தெரிந்தது.

அவர்தான் – தாமோதரர்!

ஹேமலதா முகத்தில் புன்சிரிப்பைத் தவழவிட்டு “வாருங்கள்; வீணாக ஏன் அலைகிறீர்கள்… நான் என்ன வராமல் இருந்துவிடுவேனா?” என்று வினவினாள்.

“இல்லை. போகிறபோக்கில் நினைவு மூட்டிச் செல்லலாம் என்றுதான் வந்தேன், அவசியம் வர வேணும்” என அழுத்தினார் அவர்.

ஒரு சங்கத்தின் காரியதரிசிக்கு இருக்கவேண்டிய சிறந்த குணங்கள் எல்லாம் அவரிடம் இருந்தன. அதனால்தான் கலாபவனம், வெள்ளி விழாவை எட்டிப்பார்க்க முடிந்தது. இல்லாவிடில் முக்கால்வாசி சங்கங்கள், கழகங்கள், மன்றங்களைப்போலவே இந்தப் பவனமும் போன இடம் தெரியாமல் புல் முளைத்துப்போய் இருக்கும்.

அவன் போனதும் ஹேமலதா “இவருக்காகத்தான் போகவேண்டியிருக்கிறது. நல்ல மனிதர். இல்லையென்றால், நான் ஆரம்பித்த கலாபவனம் எப்படிப் போயிருக்குமோ?” என முணுமுணுத்தாள்.

ஆதியில் கலாபவனத்தை ஆரம்பித்த பெருமை ஹேமலதாவைத்தான் சாரும். வரவர அவளுக்கு அலுப்புத்தட்ட ஆரம்பித்தது. அவள் ஓர் அலாதிப் பிறவி. திடீரென்று தன் பொறுப்புகள் அனைத்தையும் தாமோதரரிடம் ஒப்புவித்துவிட்டு எங்கோ போய்விட்டாள். அவள் தன் கலைத்திறனை வெளி உலகம் அறிவதற்காகச் சுற்றுப்பிரயாணம் செய்கிறாள் என்று சொல்லிக்கொண்டார்கள்.

அது நடந்து இருபது வருஷங்கள் பறந்துவிட்டன. இருபது வருஷங்கள்……... அம்மா! அவள் வாழ்வில் எவ்வளவோ மாறுதல்! முதலில் அவளது உருவம்….

அவள் கண்கள், எதிரே இருந்த கண்ணாடியில் பாய்ந்தன. அங்கு தெரிந்த பிம்பம் அவளை இன்புறுத்துவதாயில்லை. காலதேவன் வெகுவாகத்தான் தன் திறமையை அவளிடம் காட்டிவிட்டான். அவள் முகத்தில் பதிந்து கிடந்த...... அனுபவம் தன் கோர நகங்களால் கீறிவிட்ட ரேகைகளும் தலையில் தோன்றிய ஒன்றிரண்டு வெள்ளிய ரோமங்களும் அவளுக்கு கிழடு தட்டிவிட்டது என்று ரகசியம் பேசின.

ஒரு பெருமூச்சு எறிந்தாள். அவள் இருபது வருஷங்களுக்கு முன்பு....

அவள் அந்தக் காலத்தில் ஒரு கட்டழகி. அவளது நடனம் என்றால் கூட்டம் அதிகம். அதனால் அவளுக்கும் அவள் நாட்டியத்திற்கும் நல்ல மதிப்பு. ஆனால் இப்பொழுதோ?

ஹேமலதா எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, வாழ்வின் மேடு பள்ளங்களில் வீழ்ந்து எழுந்து, சென்ற வருஷந்தான் இந்த ஊருக்கு வந்து சேர்ந்தாள். அவள் வாழ்வே மாறிவிட்டது என்று ஊரார் பேசினர். அவளை வெளியே காண்பதே ‘கார்த்திகைப் பிறை’ கண்டால் போலத்தான் இருந்தது.

கலாபவனத்தில் அவள் எவ்வளவோ முறைகள் தன் கலாநயத்தை ரசிகர்கள் முன் கொட்டியிருக்கிறாள். அதை இன்று நினைத்துதான் என்ன செய்ய? சென்ற இருபது வருடங்களில் இங்கு கலை எவ்வளவு தூரம் அபிவிருத்தி அடைந்துள்ளதோ! இன்று எப்படியும் ஒரு நாட்டிய விருந்து இருக்குமல்லவா?

ஹேமலதா ‘கலாபவன’த்தை அடையவும் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. வாசலையே ஆவலுடன் கவனித்து நின்ற தாமோதரரின் முகத்தில் அவள் வரவு மகிழ்வு வெடிக்கச் செய்தது. அவர் அவசரம் அவசரமாக வந்து “வாருங்கள்; வாருங்கள்” என வரவேற்றதுமன்றி அவளுக்கு ஒரு பிரதான இடமும் அளித்தார்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ஹேமலதாவிற்கு சம்பிரதாய நிகழ்ச்சிகள் ஒன்றும் மகிழ்வு தரவில்லை. நடுவில் ஒரு சிறுமியின் நாட்டியம் நடந்தது. “பரவாயில்லை, மலரும் அரும்புதானே! இன்னும் கொஞ்சநாளில் – சிரத்தையும் எடுத்தால் – மின்னும் நக்ஷத்திரமாகலாம்” என்று முனங்கிக்கொண்டாள். அடுத்தாற்போல் சபையோர் ஆவலுடன் எதிர்பார்த்தது நாட்டியக் கலா பிம்பம் காஞ்சனையின் நடனந்தான்.

தாமோதர் ஹேமலதாவிடம் வந்து நின்றார். “நீங்கள்….” என்று தயங்கினார்.

அவள் ஆச்சரியமாக “என்ன?” என்று வினவினாள்.

“நீங்கள் வெள்ளி விழாவின் அழியா ஞாபகார்த்தமாக ஒரு ‘நடனம்…’ ”  என இழுத்தார் காரியதரிசி.

காஞ்சனையின் நாட்டியம் ஆரம்பமாகிவிட்டது. ஹேமாவின் கவனம் அரங்கில் ஓடியது. காரியதரிசி அப்பொழுதுதான் வந்த வேறு யாரையோ வரவேற்கச் சென்றுவிட்டார்.

காஞ்சனை சொக்கழகாக இருந்தாள்; எழில் பொங்கி வழியும் மங்கைப் பருவம். அவள் அபிநயம் பிடித்து அப்படியும் இப்படியும் அசைந்தாடும் பொழுது ‘மின்போலும் இடை ஒடியும் ஒடியும் என மொழிதல்போல், மென் சிலம்பொலிகள்’ ஆர்த்து ரசிகர்கள் மனதைக் கலகலக்கச் செய்தன. எலக்ட்ரிக் வெளிச்சம் பகட்டு உடைகளில் வெள்ளிய ரேகைகளை விட்டெறிய அவை பட்டுத் தெறிக்கும்படி அவளது அங்கங்கள் அசையும் வேளையில், அவளே பளிச்… பளிச் என ஒளி ஜாலம் காட்டும் மின்னல்போல் திகழ்ந்தாள்.

சபை முழுவதுமே அந்நடன சிங்காரியின் காந்தியில் மயங்கிக் கிடந்தது. பின்னால் உள்ளவர்கள் அவள் எழிலை முழுவதும் பருக, கழுத்தை நீட்டி நீட்டி பார்த்தனர். முன்னால் உள்ளவர்களின் விழிவண்டுகள் அரங்கத்தில் நின்றாடிய மலர் மீதே சாடின.  அவளோ அற்புதமாக ஆடிக்கொண்டிருந்தாள்.

ஹேமலதாவின் உள்ளத் திருப்தியை முகமலர்ச்சி காட்டியது. “இவளது மேதையை ஒப்புக்கொள்ளவேண்டியதுதான். ‘நடனக் கலைவாணி இவள்’ ”  என முனங்கினாள். நாட்டியத்தை அள்ளிப் பருகிய அவள், அருகில் தாமோதரர் வந்து நின்றதை உணரவேயில்லை. “அற்புத நடனம்! இல்லையா?” என்று அவர் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பினாள். பிறகு இளமுறுவலுடன் “ஆமாம். நல்ல பயிற்சி, திறமையும் இருக்கிறது” என்றாள்.

காரியதரிசி இதற்காகவா இங்கு வந்தார்? தன் காரியத்தில் சிரத்தையாக “என்ன, இவற்றிற்கெல்லாம் மணிமுடி வைத்தது என நீங்கள் ஒரு நடனம்….” என்று வார்த்தைகளை மென்று விழுங்கினார்.

ஹேமாவின் மனம் வேகமாகச் சுழன்றது. தானாவது இந்த வயதில் நாட்டியம் ஆடவாவது! அதிலும் இந்த ஒய்யாரிக்குப் பிறகு தான் அரங்கில் ஏறினால் அது வெறும் கேலிக்கூத்தாகத்தான் இருக்கும். எடுக்காது!

இதை அவரிடம் சொன்னாள். தாமோதரர் “நன்றாகச் சொன்னீர்கள்! தங்களைப்போல் இந்தப் பிராந்தியத்தில் யார் நடனம் ஆட முடியும்? நீங்கள்தானே நடன சரஸ்வதி!” என்று புகழ்ச்சியில் இறங்கினார்.

“என்ன இருந்தாலும் ரசிகர்களின் மனோபாவத்தையும் ஆராய வேணுமல்லவா?”

“கலா நயம் மிக்க நாட்டியத்தை ரசிக்கக்கூடவா ஆளில்லை? அப்படி ரசிகர்களுக்கு காமாலை வந்துவிட்டது என்று நான் நினைக்கவில்லை.”

“சரி. நீங்கள் சொல்லும்பொழுது….” என்று தயக்கமாக மொழிந்தாள் அவள். தமது வெற்றியை எண்ணி உவகையுடன் நடந்தார் தாமோதரர்.

அரங்கில் காஞ்சனை அற்புதமாக நாட்டியமாடினாள். ‘உனைக் கண்டு மயங்காத பேர்கள் உண்டோ..!’ என்ற பதத்திற்கு பாவம் பிடிக்கத் தொடங்கியதும் சபை முழுவதும் அவளைக் கண்டே மயங்கிவிட்டது. எவ்வளவு அபாரம்!

“சார், நாட்டியம்னா வெறும் கலைத்திறன் இருந்தால் மட்டும் போதுமா? ஆடுகிறவர்களுக்கு அழகும் இருக்கணுமில்லே!” என்றார் ஒரு ரசிகர்.

அவர் அருகில் இருந்த பரம ரசிகர் “குட்டி ஜோரா இருந்தால்தானே கூத்தும் குஷியா இருக்கும்!” என ஆமோதித்தார்.

நாட்டியம் முடிந்தது.

“இந்தக் கும்பலில் நான் ஆடினால் நன்றாக இராதே!” எனப் புழுங்கினாள் ஹேமா. ரசிகர் பரம ரசிகர் பேச்சு அவள் காதில் பாய்ந்து மனதிலே வேலை செய்தது. “சே! இங்கே ஏண்டா வந்தோம். இப்படி இவர் முரண்டுபிடிப்பார் என்று தெரிந்தால், வீட்டைவிட்டுக் கிளம்பி இருக்கவே மாட்டேன்” என்று குமுறினாள். இப்பொழுதும் நடன உடை சரியாக இல்லை என்று தட்டிக் கழித்துவிடலாம் என்று எண்ணும்பொழுதே வந்தார் தாமோதரர் “என்ன, அரங்கத்திற்கு வரலாமே!” என்று உபசரித்துக்கொண்டே.

“இன்று வேண்டாம். நாட்டிய உடை இல்லை சோபிக்காது” என முனங்கினாள் அவள்.

ஆனால் காரியதரிசி முதலிலேயே ஏற்பாடு செய்தபடி தலைவர் எழுந்து “இப்பொழுது ஒரு கட்டழகியின் நடனத்தைக் கண்டுகளித்தீர்கள். இதோ நமக்கு ஒரு நாட்டியக் கலாநிதி, நடன சரஸ்வதி கலாபூர்வமான விருந்தொன்று அளிக்கப்போகிறாள். முன்பு நமக்கெல்லாம் அற்புதக் கலை அழகு காட்டிய ஹேமலதா தேவியை, நான் உங்களுக்கு அறிமுகம் செய்யவேண்டியதில்லை” என அளந்துகொண்டிருந்தார்.

இது ஹேமாவின் தீர்மானத்தைச் சிதறடித்தது. இனி என்ன செய்ய முடியும்? அரங்கம் ஏறினாள் அவள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

சபையில் முணுமுணுப்பு எழுந்தது. “இது யாரடா இந்தப் பாட்டி? இவளுக்கா அவ்வளவு பூர்வ பீடிகை!” என்றார் ஒரு ரசிகசிகாமணி.

“இவளை ஆடச் சொல்வதைவிட அப்பொழுது நடனமாடிய குட்டியை வந்து சும்மா நிற்கச்சொல்லி இருந்தாலும் போதுமே!” என்பது ஒருவர் அபிப்பிராயம்.

“ஏலே! `உள்ளே போ’ன்னு கத்தட்டுமா? நீ சீட்டியடிக்கிறாயா?” என்றான் ஒரு ‘சல்லி’.

“ஏய்! இதென்ன நாடகக் கொட்டகையா? நீ என்ன துட்டுக் கொடுத்தியா? ஓசிக்கு என்னவோ ரெண்டு ஆட்டம். பார்த்துவாயேன்!” - இது அவருடைய நண்பரின் புத்திமதி.

 “இருந்தாலும் ஒரு சிங்காரி வந்து குலுக்கி மினுக்குகிறதைப்போலவா இருக்கும் இந்தக் கிழவி ஆடுவது?”

அங்கும் இங்கும் அலைந்த காரியதரிசியின் காதுகளில் இந்த விமர்சனங்கள் பட்டன. அவருக்குச் சுரீர் என்றது `ஹேமா நினைத்தது சரிதான்’ என அவர் உள்ளம் பேசியது. இனி என்ன செய்ய முடியும்?

ஹேமலதா தன் முன்னால் பரந்துகிடந்த முகக் காட்டை நோக்கினாள். அங்கு மலர்ச்சி இல்லை. வெறுப்புதான் அரும்பிக் கிடந்தது. அவளிருந்த நிலையிலே குஷிமிக்க நாட்டியம் ஆடவாவது! சோக பாவம் ரொம்ப அருமையாகப் பிடிபடும் என்றெண்ணி அபிநயிக்க ஆரம்பித்தாள்.

அவள் நடனம் கலைச்சொட்டி மிளிர்ந்தது. ஆத்மாவின் அடித்தலத்தில் இருந்துவந்த உணர்ச்சியை பாவ சுத்தமாகச் சித்தரித்தாள் அவள். கலாரசிகர்கள் வியப்புற்றனர்.

என்றாலும் சபையில் பெரும் பகுதியில் முனகல்தான் எழுந்தது. அவள் நடனத்தில் கலாநயம் செழித்து ஓடலாம். ஆனால், அவள் கண்களை இன்புறுத்தும் காரிகையல்ல. காலப்புயலில் சிக்கி வதங்கிய மலர். அதன் இளமையும், எழிலும் அனுபவ வெயிலில் வாடி வதங்கிவிட்டது. அவளது அழகை-மயக்கடிக்கும் வனப்பை-நாடும் வண்டுகளைத் திருப்திப்படுத்த முடியுமா? வாடும் மலரிலும் ஒரு சோபை இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் மோகலாகிரியில் ஓடும் வண்டின் வைடூர்யக்கண்களைக் கவரும் காந்தம் அதற்குக் கிடையாது.

அவள் ஆடினாள் - ஆடி முடித்தாள். “அடே அப்பா! பாட்டியின் கூத்து முடிந்தது” என்று யாரோ முனங்கியது அவள் காதில் விழுந்தது. அவள் இதை எதிர்பார்த்ததுதான், எனினும் இந்த `மதிப்புரை’ அவளது இதயத்தில் சவுக்கடி என விழுந்தது.

“ஆமாம், நான் ஆடி இருக்கக் கூடாது” என்றாள். அவள் மனம் சாம்பிக் குவிந்தது. தலைவர் முடிவுரையில் ஹேமாவின் நடனத் திறமையைப் பற்றி வர்ணித்துக்கொண்டிருந்தார். அதுகூட அவளுக்குக் கேலியாகப்பட்டது. அவள் ஒன்றிலும் பற்றில்லாமல் சுற்றிலும் வெறித்து நோக்கியபடி நின்றாள்.

சபையோரின் விமர்சனத்தால் உளம் நைந்த தாமோதரர் வருத்தமாக அவள் அருகில் வந்து முணுமுணுத்தார் “தேவி, தங்கள் நாட்டியம் அற்புதமாக இருந்தது. இருபது வருஷங்களுக்குப் பிறகு இன்றுதான் இத்தகைய நடனம்…”

ஓர் உண்மை ரசிகனின் இதயத்தில் ஊறிப் பொங்கிய நேரடியான புகழ்ச்சி அவளுக்கு சிறிது மகிழ்வு தந்தது. என்றாலும் பொதுவான அபிப்பிராயம் அவள் மனதை உறுத்திக்கொண்டிருந்தது. அதை அவள் முகத்தில் கண்டறிந்த காரியதரிசி “இன்று என்னால் உங்களுக்கு வீண் மனக்கஷ்டம். என்னை மன்னிக்கவேண்டும்” என்று வேண்டினார், குழையும் குரலிலே.

ஹேமா “உங்கள்மேல் வருத்தமில்லை. இதனால் எனது சிந்தனை உலையில் மற்றுமோர் அனுபவப் பொறி உருவாகச் சந்தர்ப்பம் கிட்டியது” என்றாள். அவளது இதயப் புத்தகத்திலே கத்தியால் கீறியதுபோல சில வார்த்தைகள் ஆழமாகப் பதிந்தன. மக்களை திருப்திப்படுத்த நாட்டியக்காரிக்கு கலை அறிவு மட்டும் இருந்தால் போதாது. அழகு-காண்போரைக் கலங்க அடிக்கும் காந்தசக்தி-தான் பிரதானம், மனிதமனம் சொக்கழகையே நாடுகிறது.

சிந்தனையில் லயித்துவிட்ட ஹேமாவின் மார்பு விம்மி வீழ்ந்தது, ஆழ்ந்த நெடுமூச்சு ஒன்றைக் கக்கியவண்ணம்.

(அடுத்த அத்தியாயத்தை படிக்க...)