அத்தியாயம் 1

32.93k படித்தவர்கள்
2 கருத்துகள்

பேய்களும் பெண்மானும்

சோழ மன்னர்களும் மகாராஷ்டிர அரசர்களும் தமிழ்நாட்டை ஆண்ட காலத்தில், அவர்களது இராஜதானியாயிருந்து பெருமை பெற்ற தஞ்சைபுரிக்குக் கிழக்கில் நான்கு மைல் தூரத்திலுள்ள பவானியம்பாள்புரம் என்னும் சிற்றூர் மிக்க இரமணியமான ஒரு ஸ்தலம். தஞ்சையிலிருந்த அரசப் பெருமாட்டிகள் படகுகளில் அமர்ந்து விளையாடி வேடிக்கையாகப் பொழுதுபோக்கும் பொருட்டு தஞ்சைக்கும் பவானியம்பாள்புரத்திற்கும் மத்தியில் நான்கு மைல் நீளம் அரை மைல் அகலத்தில் வெட்டப்பட்டு சமுத்திரம் என்று அழைக்கப்பெற்ற பெருத்த ஏரியில் எக்காலத்திலும் வற்றாத தெளிந்த தண்ணீர்  நிறைந்திருக்கும்.

அந்தச் சமுத்திரத்தின் கிழக்குக் கரையின் மேலுள்ள பவானியம்பாள்புரத்தின் இயற்கையழகும்; எங்கு நோக்கினும் காணப்படும் தோப்புகளும் சோலைகளும், தாமரைத் தடாகங்களும், ஓடைகளும், உன்னதமாக அமைக்கப்பெற்ற தேவாலயங்களும், திருக்குளமும், தேர்களும், அழகிய நீண்ட வீதிகளும் காண்போர் கண்களையும் மனத்தையும் ஒருங்கே கவர்ந்தன. பவானியம்பாள்புரமும், வேறு 35-கிராமங்களும் பரசுராம பரவா என்னும் மகாராஷ்டிரச் சீமானினது ஜெமீன் சமஸ்தானம். அவருக்கு தஞ்சையில் ஒரு பெருத்த மாளிகையிருந்ததாயினும், பவானியம்பாள்புரத்தின் மேற்குக் கோடியில் சமுத்திரக் கரையின்மீது நான்கு பக்கங்களிலும் பூஞ்சோலையாற் சூழப்பெற்ற விசாலமான ஒரு மாளிகை இருந்தது. அவர் அடிக்கடி அங்கே தங்கி இனிமையாய்ப் பொழுதுபோக்கும் பொருட்டு அந்த மாளிகை அமைக்கப் பெற்றிருந்தது.

இத்தகைய மேம்பாடுகள் நிறைந்த சிற்றுாரின் மேலை வீதியிலிருந்த ஒரு வீட்டின் கூடத்தில் விரிக்கப்பட்டிருந்த பாயில் ஒருநாட் பிற்பகலில் இரண்டு மகாராஷ்டிரப் பெண்கள் உட்கார்ந்து புதிய உடைகள் தைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெதிரில் பற்பல நிறங்களையுடைய சீட்டித் துணிகளும், வெல்வெட்டுத் துணிகளும், கிழிபட்ட துண்டங்களும், தைப்பதற்குரிய கருவிகளும் அலங்கோலமாய்க் கிடந்தன. சகோதரிகளான அவ்விரண்டு பெண்களில் மூத்தவளுக்கு 17-வயதும், சிறியவளுக்கு 14-வயதும் இருக்கலாம். ஆயினும், இருவரும் தசைப்பிடிப்பற்ற மாநிறமான சரீரத்தைக் கொண்டவராயும், அதிக அழகானவர்கள் என்று சொல்வதற்கு அருகமற்றவராயும் இருந்தனர்.

அவர்கள் தமக்குள் அடியில் வருமாறு சம்பாஷித்துக் கொண்டிருந்தனர்.

“ஓர் அடி தூரத்திலிருக்கும் சமுத்திரத்திற்குப் போய் ஜலங் கொண்டுவர இவ்வளவு நேரமா! இவள் என்ன பெண்பிள்ளை! புருஷன் வீட்டில் இவள் எப்படிக் குப்பைகொட்டி வாழப் போகிறாள்? போன அன்றைக்கிருந்து புதனன்றைக்கே திரும்பி வந்துவிடுவாள்” என்று அருவருப்புடன் கமலாபாயி தனது தங்கையை நோக்கிக் கூறினாள். 

“இவள் புருஷன் வீட்டுக்குப் போனாலல்லவா அந்தக் கவலை! போகும்போது பார்த்துக் கொள்ளலாம்” என்றாள் ஸீதாபாயி.

கமலா : குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு சமுத்திரக் கரைக்குப் போய்விட்டால், இவளுக்கு இது பூலோகமோ கைலாசமோ என்னும் சந்தேகம் வந்துவிடுகிறது. யானை தீவாந்தரத்தை நினைத்துக்கொள்வதைப் போலத் தன்னுடைய உடம்பையே மறந்துவிடுகிறாள். வீட்டுக்கு வரவேண்டும் என்பதையும், இடுப்பிலிருக்கும் குடத்தையும், தான் வந்த காரியத்தையும் கூட மறந்துவிடுகிறாள்.

ஸீதா : இன்னம் கொஞ்சகாலம் போனால் தன்னுடைய இடுப்பிலிருக்கும் பாவாடையைக்கூட மறந்துவிடுவாள்.

கமலா : நம்முடைய அப்பா வருவதற்குள் இந்தத் துணிகளையெல்லாம் எடுத்து மடித்து வைத்துவிட்டு, வீட்டைப் பெருக்கிச் சுத்தி செய்ய வேண்டுமென்றும், பொழுது போய்விட்ட படியால் சீக்கிரம் வரவேண்டுமென்றும் நான் எத்தனையோ தரம் படித்துப் படித்துச் சொன்னேன்; இவள் தன் வழக்கப்படியே செய்து விட்டாள்; இதெல்லாம் இவளுக்கு நம்முடைய அப்பா கொடுக்கிற இடமல்லவா! யாரோடு பேசினாலும் இவள் குழந்தையைப் போலக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்போது எனக்கு எவ்வளவு எரிச்சலுண்டாகிறது தெரியுமா? அப்படியே இவளுடைய கன்னத்தில் ஓங்கிப் பளீரென்று அடிக்க வேண்டுமென்னும் எண்ணம் உதிக்கிறது.

ஸீதா : நம்முடைய அப்பாவுக்கு இவள்மேல் அவ்வளவு பிரியம் உண்டாவதற்குக் காரணமென்ன? அவர் ஏன் இதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்கிறார்?

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

கமலா : அப்பா இவளிடத்தில் பிரியமாயிருப்பதாக வெளிக்கு மாத்திரம் காட்டுகிறாரேயொழிய உண்மையில் அவருக்கு இவளிடத்தில் பிரியமில்லை; வெறுப்புதான்.

ஸீதா : அப்படியானால், மனசுக்குப் பிடிக்காத கழுதையை ஏன் நம்முடைய வீட்டில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?

கமலா: ரகஸியம் உனக்குத் தெரியாது. அதனால் நீ இப்படிப் பேசுகிறாய். நம்முடைய அப்பாவும் இவளுடைய தகப்பனும் பூனாதேசத்து அரண்மனையில் ஒரே இடத்தில் வேலையிலிருந்த சிநேகிதர்கள். இவளுடைய தகப்பன் இறந்தபோது, இவள் குழந்தையாயிருந்தாள். இவளுக்குத் தாய் முதலிய பாதுகாப்பவர் எவருமில்லாமையால் இவளுடைய தகப்பன் இவளை நம்முடைய அப்பாவிடத்தில் ஒப்புவித்தான்; அவனுக்கிருந்த சொத்துக்களை, பங்காளிக்குப் பயந்து நம்முடைய அப்பாவின் பேரில் எழுதி வைத்தான். அதிலிருந்து வரும் வட்டிப் பணத்தை வாங்கி இவளுடைய செலவுக்கு வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவன் இறந்து போனான். இவளுக்கு அதனால் மாசம் ஒன்றுக்கு 35-ரூபா வருமானங் கிடைக்கிறது. நம்முடைய அப்பாவுக்கு வயதாய்விட்டதென்று உபகாரச் சம்பளத்துக்குப் பதிலாக இந்த ஊரில் விடப்பட்டிருக்கும் மானிய நிலம் நமக்குப் போதாததாயிருப்பதால், இவளுடைய பணமில்லாவிட்டால் நம்முடைய காலஷேபம் நடப்பது கடினம். 

தவிர, இவள் நம்முடைய வீட்டில் வேலைக்காரி வைக்க வேண்டிய அவசியமில்லாமல் எல்லாக் காரியங்களையும் செய்வதற்கு உபயோகப்படுகிறாள். இவைகளை உத்தேசித்தே நம்முடைய அப்பா இவளிடத்தில் கொஞ்சம் அன்பைக் காட்டுகிறார். அதனால் இவளுக்குக் கொழுப்பு ஏறிவிட்டது. தன்னைக் கண்டிப்பதற்கு ஒருவருமில்லையென்று நினைத்துக் கொண்டாள் போலிருக்கிறது. புஷ்பவதியான பெண் இப்படிக் கண்ட இடத்தில் தன்னிச்சைப்படி நிற்கலாமா? இன்றைக்கு அப்பா வந்தவுடன் அவரிடத்தில் எல்லாவற்றையும் நாம் சொல்லிவிட வேண்டும்.

ஸீதா : இவள் அப்பாவை மாத்திரமா மயக்குகிறாள்? இவளைப் பார்ப்பவர் எல்லோரும், ‘இந்தப் பெண் யார்? இவளுக்குக் கலியாணம் ஆகிவிட்டதா?’ என்று இவளைப் பற்றிக் கேட்கிறார்களேயொழிய நம்மைக் கண்ணெடுத்தும் பார்க்கிறதில்லையே! நம்மிடத்தில் இல்லாத விசேஷம் இவளிடத்திலென்ன இருக்கிறது?

கமலா : துடைப்பக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம் கட்டியதைப் போல மல்லிகாபாயி என்று டம்பமாகப் பெயர் வைத்துக் கொண்டிக்ருகிறாளல்லவா? அதுதான் விசேஷம். வெறும் பெயரைத் தவிர வேறு என்ன யோக்கியதை இருக்கிறது? ஒன்றுமில்லை.

ஸீதா : இரண்டு கண்ணுமவிந்த குருடனைக் கமலக்கண்ணனென்று கூப்பிடுவதைப் போலிருக்கிறது.

கமலா : நாயை ‘ரோஜா’வென்று அழைப்பதனால் அதன் துர்நாற்றம் மாறி, அதன்மேல் ரோஜாவின் மணமுண்டாகுமா? ஒரு நாளுமில்லை. வரப்போகும் தீபாவளிப் பண்டிகையில் இவளுடைய வாயில் மண்ணைப் போட்டுவிடுகிறேன். அதுதான் இவளுடைய அகம்பாவத்துக்குத் தகுந்த தண்டனை.

ஸீதா : காலடிச் சத்தம் கேட்கிறது; வந்துவிட்டாள்.

உடனே அவ்விரு மங்கையரும் தமது சம்பாஷணையைத் திடீரென்று நிறுத்திவிட்டு ஒன்றையும் அறியாதவரைப் போலக் குனிந்தவண்ணம் தைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, இடையில் வைத்த தண்ணீர்க் குடத்தோடும், தளர்ந்த நடையோடும், புன்னகை பூத்த முகத்தோடும், மங்கைப் பருவமடைந்த அழகிய ஒரு சிறுமி உள்ளே நுழைந்தாள். அவ்வாறு வந்தவளது தோற்றத்திற்கும் மற்ற இருவரின் தோற்றத்திற்கும் யாதொரு சம்பந்தமுமில்லாமலிருந்தது. 

மல்லிகா ஓர் இராஜஸ்திரீயைப் போலவும், மற்றவர் அவளுக்குப் பணிவிடை செய்யும் சேடியரைப் போலவும் காணப்பட்டனர். மல்லிகாவின் காந்தியும், கட்டழகும், யெளவனமும், முக வசீகரமும், கம்பீரமும் காண்போது மனதைக் கவர்ந்தன.

அவ்வாறு நுழைந்த மடமங்கை உட்புகுந்து குடத்தை அறைக்குள் வைத்தபின் கூடத்திற்கு வந்து, அன்பும் புன்ன கையும் அரும்பிய முகத்தோடு கமலாவை நோக்கி, “அக்கா! இவ்வளவு நேரம் வைத்தால் கண்ணும் கழுத்தும் நோகுமே. இன்றைக்கு இவ்வளவோடு நிறுத்துங்களேன். கொஞ்சம் கொஞ்சமாக ஆகட்டுமே; என்ன அவசரம்? பொழுதும் போய்விட்டதே?” என்றாள்.

கமலா : மல்லிகா! இப்போதுதான் ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவள் போலப் பேசுகிறாயே! தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வந்துவிட்டதென்பதை மறந்துவிட்டாயா? அதற்குள் பாவாடைகளும் ரவிக்கைகளும் தைத்தாக வேண்டாமா? உனக்கு நல்ல உடைகள் ஏராளமாக இருப்பதால் உனக்கு இதில் கவலையே இல்லை.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ஸீதா : (ஆத்திரமாக) அப்பா வருவதற்குள் இவைகளையெல்லாம் எடுத்துவிட்டு வீட்டைச் சுத்தி செய்ய வேண்டுமென்று சொன்னதற்குத்தான் நீ இவ்வளவு சீக்கிரமாக வந்தாயோ?

கமலா : ஸீதா! நீ சுத்த முட்டாள்! இவளுடைய அழகென்ன அற்பமானதா! தன்னுடைய அலங்காரத்தைக் குனிந்து நிமிர்ந்து பார்த்துக் கொண்டு, குலுக்கி மினுக்கி நடப்பதற்கு நேரமாகாதோ?

ஸீதா : இவள் கோணிக் குலுக்கி நடந்ததில் கழுத்திலும் இடுப்பிலும் சுளுக்குண்டானதேயொழிய எந்தப் புருஷனும் இவளைக் கண்டு மயங்கவில்லையே! ஏன் இப்படி வீண் பாடுபட வேண்டும்?

என்று அவ்விரு ஸ்திரீகளும் பொறாமையையும் ஆத்திரத்தையும் காட்டிய மொழிகளைக் கூறி மல்லிகாவை ஏளனம் செய்தார்கள்.

அந்தப் பெண்மணி, அவர்களது கடுமொழிகளை மனதில் வாங்காமல், புன்சிரிப்பும், பொறுமையும் ஜ்வலித்த முகத்தோடு, “ஸீதா! நான் சீக்கிரமாக வரவேண்டுமென்னும் எண்ணத்தோடு குடத்தை எடுத்துக் கொண்டு வேகமாய் நடந்து வந்தேன். அவசரத்தில் காலில் ஒரு கல் அடிபட்டது; உடனே இரத்தம் பெருகியது; நொண்டிக்கொண்டு வந்து சேர்ந்தேன். இதோ பார் காயத்தை” என்று தனது காலிலிருந்த ஒரு காயத்தைக் காண்பித்துவிட்டு, அங்கே கிடந்த துணித் துண்டுகளையும் மற்ற பொருட்களையும் எடுத்து ஒழுங்காய் வைக்கத் தொடங்கினாள். 

அப்போது தனது கையில் அகப்பட்ட ஒரு வெல்வெட்டு ரவிக்கையின் ஒரு பாகத்தை அவள் எடுத்து அதில் தனது வலது கரத்தைப் புகுத்தி அதை அவர்களுக்குக் காட்டி, “அக்கா! இது எனக்கு எப்படி இருக்கிறது பாருங்கள்” என்று குதூகலத்தோடு கேட்டாள்.

பளபளவென மின்னும் சுவர்ணத்தைப் போலிருந்த அந்த மின்னாளின் நிறத்திற்கு அந்த இரவிக்கை மிகவும் பொருந்தியிருந்தமையால், அவளது அழகு முன்னிலும் ஆயிரமடங்கு சிறந்து தோன்றியது. அதைக் கண்டவுடன் கமலாவுக்கு உண்டான பொறாமைக்கு அளவேயில்லை; உடனே அவளைப் பார்த்து, “வெறும் உடம்பின் அழகில் மயங்கி வந்ததனால் காலில் கல் அடித்தது. இன்னும் வெல்வெட்டு ரவிக்கை போட்டுக் கொண்டால் பிறகு குடத்துக்கும் ஆபத்து வந்துவிடும். அப்புறம் புதுக்குடம் வாங்க அப்பாவிடம் இப்போது கையில் பணங்கூட இல்லை” என்றாள் கமலா.

“மல்லிகா எவ்வளவோ பாடுபட்டுப் பார்க்கிறாள். ஒரு பாவியாவதும் அவளைக் கலியாணம் செய்துகொள்ள வர மாட்டேனென்கிறான்! வந்திருந்தால் அவளுக்கு இப்போது தீபாவளிக்கு வெல்வெட்டு ரவிக்கை வாங்கிக் கொடுத்திருப்பான்” என்று குத்தலாக மொழிந்தாள் ஸீதா.

இவ்விதமாக அவ்விரு மகளிரும் இடித்திடித்துப் பேசிய மொழிகள் மல்லிகாவின் மனதில் சுருக்கென்று தைத்தனவாயினும், அவள் தனது வருத்தத்தை அடக்கி முகத்தில் எவ்வித மாறுபாடும் காட்டாமல் உடனே அந்த இரவிக்கையைக் கழற்றிவிட்டு யாவற்றையும் ஒன்றாய்ச் சேர்த்தாள்.

அப்போது துக்கோஜிராவ் உள்ளே நுழைந்தான். அவன் சுமார் 45-வயதடைந்தவனாயும், நல்ல திட சரீரம் உடையவனாயும் காணப்பட்டான். அவனது கடுகடுத்த முகம் அவன் நிரம்பவும் முன்கோபம் உடையவனென்பதை நன்றாகத் தெரிவித்தது.

- தொடரும்