அத்தியாயம் 1
ஹரீஷ் வந்திருக்கிறான். கல்லூரியின் கடைசி நாளன்று, விருந்திற்கும் பிரிவு உபசார விழாவிற்கும் பின்னர் புரொபசர்களிடம் விடைபெற்று, ஹாஸ்டல் அறையைக் காலி செய்து, வார்டனிடம் சொல்லிக் கொண்டு முகம் நிறைய சோகமும், நெஞ்சு நிறைந்த கனமுமாக ஹௌரா மெயில் ஏறியவன் இன்று வந்திருக்கிறான். ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் நண்பர்களைப் பார்க்கிற ஏக்கத்தில் ஓடி வந்திருக்கிறான்.
பிற்பகல் தூக்கம் கலைந்து காப்பிக்காகக் காத்திருந்த சமயத்தில் நேரில் செய்தி தெரிவிக்கப்பட்டதும் முகம் பளீரென்று பிரகாசிக்க, சத்யா கேட்டான்.
“நிஜமாவாடா?”
“நிஜமாத்தான்டா. பொய் சொல்லவா நான் அடையாறிலிருந்து பஸ் பிடிச்சு மயிலாப்பூர் ஓடி வந்திருக்கேன்?”
“எப்போ வந்தானாம்?”
“இப்போதான் இரண்டு மணிக்குப் போன் பண்ணினான். ஸ்வாகத் ஓட்டல்லே தங்கியிருக்கானாம். உடனே எல்லாரையும் பார்க்கணும்னான். எல்லோருக்கும் போன் பண்ணி ஸ்வாகத் வரச் சொல்லிட்டு, உனக்கு டெலிபோன் வசதி இல்லாததால் நான் நேர்ல வந்தேன்.”
“இரு. இதோ ட்ரெஸ் மாற்றிட்டு வரேன்.”
சந்தோஷத்தில் மனசு படபடக்கப் பிரம்பு நாற்காலியை இழுத்துப் போட்டு நண்பனை உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே ஓடினான், சத்யா.
“அம்மா, ஹரீஷ் வந்திருக்கானாம். நான் போறேன். எனக்கு இப்போ காப்பி வேணாம்.”
“காப்பி மட்டுமா? உனக்கு இனி சாப்பாடுகூட இறங்காதே!”
சமையலறையிலிருந்து அம்மா சொன்னது கேட்க, இவன் சிரித்துக் கொண்டான். அவசர அவசரமாய் உடை மாற்றத் தொடங்கினான். ‘ஹரீஷ் வந்திருக்கிறான்!’ இவனது மிக நெருங்கிய நண்பன் வந்திருக்கிறான்.
இவன் படிக்க நினைத்த சிவில் இஞ்ஜினியரிங்கை விட்டுவிட்டு அவனுக்காகவே மெக்கானிகல் சேர்ந்தான். ஹாஸ்டல் அறையில் அவனுடனே இருந்தான். ஹரீஷ் என்றதும், எப்போதும் நினைவிற்கு வருகிற அந்தத் ‘துடைப்பக்கட்டை’ நிகழ்ச்சி அப்போதும் நினைவிற்கு வந்தது.
ஹரீஷ் கல்லூரியில் சேர்ந்து அவனை நெருங்கி வந்த புதிது.
“ஏய் சத்யா, என் அர்ச்சனாவுக்கு லெட்டர் எழுதப் போறேன். டெல் மீ எ பியூட்டிஃபுல் வர்ட் இன் டமில். ‘ஐ லவ் யூ ஸோ மச்’ என்பதை எப்படிடா தமிழில் எழுதுவே?”
இவன் யோசித்துச் சொன்னான். “ஐ லவ் யூ துடைப்பக்கட்டைன்னு எழுதுடா.”
“துடைப்பக்கட்டைன்னா என்னடா அர்த்தம்?”
“மை ஸ்வீட் ஏஞ்சல்னு அர்த்தம்.”
“எப்படி ஸ்பெல் பண்ணணும்? எழுதிக் காட்டு.”
“இவன் எழுதிக் காட்டினான். THUDAPPA KATTAI.”
ஹரீஷ் ஒரு மாணவனின் பவ்யத்துடன் எழுதி, தன் காதலிக்கு, பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட எதிர்கால மனைவிக்கு ஒரு அருமையான தமிழ் வார்த்தையைக் கற்றுத் தருகிற ஆர்வத்தோடு ‘மை டியர் துடைப்பக்கட்டை’யை எழுதி அதன் அர்த்தத்தை விளக்கித் தன்னையும் அதுபோலவே கூப்பிடச் சொன்னான்.
அவளும் அதுபோல், ‘மை டியர் ஹரீஷ் துடைப்பக்கட்டை’ என்று திருப்பி எழுதினதைப் பெருமையோடு நண்பர்களுக்கும் படித்துக் காட்ட
சத்யா, ‘துடைப்பக்கட்டை என்பதற்கு ஸ்வீட் ஏஞ்சல் என்று அர்த்தம்’ என்று தான் சொல்லிக் கொடுத்ததை எல்லோரிடமும் சொல்லி அவர்களையும் அதே அர்த்தம்தான் என்று தலையாட்ட வைத்திருக்கவே,
அன்று ஹரீஷ் கடிதத்தைப் படித்தபோது அத்தனை பேரும் குறும்புச் சிரிப்பாகச் சிரித்துக் கொண்டு பேசாமல் இருந்துவிட்டார்கள்.
இது நடந்த ஒரு மாதத்திற்குப் பின்னால் ஒருநாள் ஹரீஷ் கையில் கடிதத்தோடு கல்லூரி ஓடி வந்தான்.
“ஏய், சத்யா துடைப்பக்கட்டை, முருகேஷ் துடைப்பக்கட்டை, மனோகர் துடைப்பக்கட்டை, மணி துடைப்பக்கட்டை!” என்று கத்தினான்.
“துடைப்பக்கட்டைன்னால ஸ்வீட் ஏஞ்சல்னா அர்த்தம்? இதோ பாருங்க. அர்ச்சனா எத்தனை கோபத்தோட லெட்டர் போட்டிருக்கா! இந்த வார்த்தையை அவள் கிளப்பில் போய்ச் சொல்ல அத்தனை பேரும் சிரித்துவிட்டு துடைப்பக்கட்டைன்னா ஸ்வீட் ஏஞ்சல்னு அர்த்தமில்லை. ப்ரூம் ஸ்டிக் (Broom Stick)ன்னு அர்த்தம்னு சொல்லியிருக்காங்க. அவள் அழுது என் மீது கோபப்பட்டு லெட்டர் எழுதியிருக்கா. இனி நான் கடிதம் எழுத மாட்டேன்னு தீர்மானமாகத் தெரிவிச்சிருக்கா. ஏன்டா சத்யா இப்படிச் செய்தே?” என்று கோபமும் ஆத்திரமுமாகப் பேசினான். ஏற்கெனவே சிவந்திருந்த அவன் முகம் இன்னமும் சிவந்து கிடந்தது. உடம்பும் கைகளும் பதறின.
அதன் பின் சத்யா விளையாட்டிற்கு அப்படிச் சொன்னதாய் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். ‘இட்ஸ் ஆல் ஃபர் ஃபன்’ என்று நண்பர்கள் ஹரீஷை சாந்தப்படுத்த முயன்றனர். அத்தனை பேரும் தாங்கள் விளையாடியதை அர்ச்சனாவிற்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தி மன்னிப்பு கேட்டுக் கொள்ள, மீண்டும் ஹரீஷ் அர்ச்சனா கடிதத் தொடர்பு சுமுகமான பின்னரே ஹரீஷ் அவர்களோடு கலகலப்பாகப் பழகினான்.
எப்போதோ நடந்த நிகழ்ச்சி. ஆனால், என்றும் அவர்களுக்குள் பசுமையாய்ப் பதிந்துபோன நிகழ்ச்சி.
அந்த ஹரீஷ் இப்போது வந்திருக்கிறான். ஒருவேளை அவர்கள் கல்யாணம் நிச்சயமாகிப் பத்திரிகை கொடுக்க வந்திருப்பானோ?
அவனோடு படித்துப் பாஸாகி ஒன்றாக வெளியில் வந்த தங்களுக்கு இன்னும் வேலையே கிடைக்கவில்லை. அதற்குள் ஹரீஷ் மட்டும் கல்யாணப் பத்திரிகையை நீட்டப்போகிறான்!
இவன் ஒரு சின்னப் பெருமூச்சோடு உடை மாற்றித் தலைவாரிக் கொண்டு வெளியில் வர, அம்மா நண்பனுக்கும் இவனுக்கும் ஸ்டூலில் காப்பி வைத்துவிட்டுப் பேசிக் கொண்டிருந்தாள். இவன் அவசரமாக இரண்டே வாயாகக் காப்பியைக் குடித்துவிட்டு, “வாடா போகலாம்” என்றான்.
படியிறங்கினபோது அம்மா கேட்டாள். “ராத்திரி சாப்பாட்டுக்கு வருவியா, மாட்டியா?”
“மாட்டோம்மா. எல்லாரும் ஒண்ணா வெளியில் ஹரீஷோட சாப்பிடப் போறோம்.”
இவர்கள் போனபோது ஹரீஷின் அறை நிறைந்திருந்தது. ஜகன், முருகேஷ், மணி, சேகர், மனோகர் எல்லாரும் வந்திருந்தனர். இவன் உள்ளே நுழைந்ததும் ஓடிப் போய் ஹரீஷைச் சேர்த்துக் கட்டிக் கொண்டான்.
”ஃபைன், ஃபைன்!” என்றபோது ஹரீஷும் உருகிப் போயிருந்தான்.
“என்னடா, மேரேஜ் இன்விடேஷன் கொண்டு வந்திருக்கியா?”
“அட, எப்படி ஜோஸ்யம் தெரிஞ்ச மாதிரி சொல்றே?”
“இதுக்கு ஜோஸ்யம் வேற தெரியணுமா? இத்தனை நாள் எப்படி நீ பொறுமையா இருந்தேங்கிறதைத்தான் ஜோஸ்யம் பார்த்துத் தெரிஞ்சிக்கணும்.”
”அட நீ வேற சத்யா. எல்லாம் முடிச்சிருப்பான் அவன்.”
“சீச்சீ!” என்று ஹரீஷ் முகம் சிவக்க, நண்பர்கள் விடவில்லை.
கல்யாணத்திற்கு இன்னும் பத்தே நாட்கள்தான் இருந்தன.
“காலேஜ் நாட்களுக்கு அப்புறம் இன்னிக்குத்தான் நாம் எல்லோரும் ஒன்னா கூடி இருக்கோம். லெட் அஸ் ஆல் பி ஹேப்பி. என்ன செய்யலாம். சொல்லுங்க?”
“நீ வர்றதுக்கு முன்னாலேயே நாங்க அதைத் தீர்மானம் பண்ணியாச்சு. அதனால் மறுப்புச் சொல்லாமல் நீ என்கூட வரணும் சத்யா.”
“என்னை ஏன்டா அனாவசியமா கம்பெல் பண்றீங்க? நான் எப்போ உங்ககூட வந்திருக்கேன்?”
“இதப் பாரு சத்யா, இந்தச் சின்ன விஷயத்துக்குப் பிடிவாதம் பிடிச்சு சந்தோஷமான இந்த நேரத்தை ஏன் இறுக்கமாக்கறே? உன்னை நாங்க என்ன குடம் குடமாகவா குடிக்கச் சொல்றோம்? ஜஸ்ட் ஒரு பெக் விஸ்கி. அதுவும் கம்பெனிக்காக.”
“வரேன்டா, நான் வர மாட்டேன்னு சொல்லலை. ஆனால் எனக்கு டிரிங்க்ஸ் வேணாம். அம்மாவுக்குத் தெரிஞ்சா கொன்னு போட்டுடுவாங்க.”
“என்னடா நீ, ஏதோ ஒண்ணாம் கிளாஸ் பையன் மாதிரி பேசறே? இதெல்லாம் ஏன்டா அம்மா அப்பாவுக்குத் தெரியணும்? எப்படித் தெரிய வரும்?”
“ஒருவேளை வீட்டுக்குப் போனதும் வாசனை தெரிஞ்சிட்டு கண்டுபிடிச்சிட்டாங்கன்னு வச்சுக்க...”
“ஜிஞ்சர் லெமன்மா. சத்தியமா விஸ்கி இல்லேன்னு சாதிக்கணும்.”
“ச்சீ. அது கூடாதுடா.”
“டேய் சத்யா, உன் பேர் சத்தியமூர்த்தியா இருக்கலாம். அதற்காகப் பொய் சொல்லாத சத்தியசீலனாக இருக்கணும்னா முடியாது. இவ்வளவு பேசற நீ ஒரு பொய்கூடச் சொன்னதில்லேன்னு சொல்லு?”
“பொய் சொன்னதில்லேன்னு நான் சொல்லலை. நமக்கு ரொம்ப வேண்டியவங்க, நெருங்கின மனுஷங்ககிட்டே சொல்லக் கூடாது. அவுங்களிடமிருந்து எதையும் மறைக்கக் கூடாதுன்னுதான் சொல்ல வரேன்.”
“இதப் பாரு சத்யா, நீ உனக்கு வேண்டியவங்க, நெருங்கினவங்க கிட்டே நிஜம் சொல்றியா? எதையும் மறைக்காமல் வெளிப்படையாப் பேசறியான்றதெல்லாம் உன்னுடைய தனிப்பட்ட பிரச்சினை. இப்போ நாங்க சொல்றதெல்லாம் நீ எங்ககூட வரணும், கம்பெனி தரணும் என்பதுதான். என்ன ஹரீஷ், பேசாமல் இருக்கே? கூப்பிடேன் அவனை.”
சிரிப்பும் பேச்சும் அரட்டையுமாக எல்லோரும் தங்கள் கண்ணாடிக் கோப்பையின் மஞ்சள் திரவத்தை உறிஞ்ச, சத்யா கையில் கோப்பையை வைத்துக் கொண்டு தயங்கினான்.
“டேய், சத்யா, கல்ப் அட்ரா.”
“ஓ, கமான். என்னடா நீ, இவ்வளவு ஃபஸ்ஸியா இருக்கே?”
அந்த விமர்சனங்களுக்குப் பின்னர் மெல்ல உறிஞ்சத் தொடங்கி, தொண்டையில் தணலாய் இறங்கிய கசப்பைச் சகித்துக் கொண்டு, நண்பர்களின் விடாத வற்புறுத்தல் காரணமாக இன்னொரு பெக் விஸ்கியும் குடித்து முடித்தான். இரண்டே பெக்கில் கண்கள் லேசாய்ச் செருகி, வார்த்தைகள் கோவையற்று வெளிவர, உடம்பு காற்றில் மிதக்கிற உணர்வில் வயிற்றைப் புரட்டத் தொடங்கிற்று.
சாப்பாடு பிடிக்காத காரணத்தால் அளைந்து, சாப்பிட்டதாகப் பெயர் பண்ணிவிட்டு நண்பனின் தோளில் கை சாய்த்து ஊன்றி, தள்ளாடின நடையுடன் டாக்ஸியில் ஏறி வீட்டிற்கு வந்து சமாளித்துப் படியேறிக் கதவைத் தட்டினபோது மணி பத்தரையாகியிருந்தது.
தங்கை யாமினி படித்துக் கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டு சன்னமாய் வாசல் கதவை விரல் முட்டியால் தட்டினான்.
“யார்?” யாமினி உள்ளே இருந்தவாறே குரல் கொடுக்க, இவன் அம்மா எழுந்துவிடப் போகிறாளே என்ற பயத்தில், “நான்தான், கதவைத் திற” என்று குழறினான்.
யாமினி, தான் எழுதிக் கொண்டிருந்த கல்லூரி நோட்டுப் புத்தகத்தை மூடி வைத்து விட்டுக் கதவைத் திறந்தபோது, தூக்கம் கலைந்து எழுந்து அம்மா பின்னாலேயே வர, உள்ளே நுழைந்த சத்யா அதற்கு மேல் வயிற்றுப் புரட்டலைத் தாங்குகிற சக்தியற்றவனாகக் கதவடியில் வாந்தி எடுத்தான்.
குபீரென்று எழுந்த விஸ்கி நெடி மூக்கைத் தாக்கியதும் அதிர்ந்து போன அம்மா, “அடப் பாவி! குடிச்சிட்டா வந்திருக்கே?” என்று முகம் ஜ்வலிக்கக் கேட்டதும், “ஐயம் ஸாரிம்மா, நானா குயிக்கலே, பிரண்ட்ஸ் எல்லாருமா சேர்ந்து வற்புறுத்தி குயிக்க வச்சிட்டாங்க. இனிமே இன்னொரு தரம் குயிக்க மாட்டேன்” என்று எதையும் மறைக்க விரும்பாத சத்யா — சட்டென்று உண்மையைச் சொல்லி மன்னிப்புக் கேட்ட பின்னரும், அம்மா அவனை மன்னிக்க மறுத்து இரண்டு நாட்களுக்கு அப்புறமும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள்.
- தொடரும்