அத்தியாயம் 1

12.24k படித்தவர்கள்
48 கருத்துகள்

1. சிறப்புப் பரிசு : அனந்த தேவ சர்மா
(அஸ்ஸாமியக் கதை)

என்ன மோசமான பையன்! அவனை உதைக்க வேண்டியது தான், மற்றப் பையன்களோடு அவன் சண்டை போடுவது பற்றியும் அதிகம் கேள்விப் படுகிறேன். அவனைக் கூப்பிடு உடனே. "மோகன்! ஏய் மோகன்!" தலைமை ஆசிரியர் தன் பியூனை கூப்பிட்டார். அவர் குரலின் வெடிப்பைக் கேட்டே, தலைமை ஆசிரியர் வெகு கோபமாக இருக்கிறார் என மோகன் புரிந்து கொண்டான். உள்ளே விரைந்து, "என்ன ஐயா?" என்று பணிவுடன் கேட்டான்.

"சீக்கிரம் போய் ஐந்தாம் வகுப்பு தபனைக் கூட்டி வா" என்று அவர் கட்டளையிட்டார்.

தபன் பதுமணி கிராமத்தின் குமாஸ்தாவான ரத்தனின் இரண்டாவது மகன். தோற்றத்தில் மெலிந்திருப்பினும் பலசாலி. சற்று கறுப்பு நிறம். ஒளி நிறைந்த கண்கள் கொண்டவன். படிப்பில் கெட்டி. ஆனால், வீட்டிலும் வெளியிலும் சதா ஏதாவது விஷமத்தனங்கள் செய்து வம்பில் சிக்கிக் கொள்வான். அவனாக வலியச் சண்டைக்குப் போகமாட்டான். ஆனால் யாராவது அவனை வம்புக்கு இழுத்தால் பதிலடி கொடுக்க அவன் தயங்குவதில்லை. தன் வயதுப் பையன்களிடையே அவனே தலைவன். அவர்களுக்காகப் பரிந்து அடிதடியில் இறங்க அவன் எப்பவும் தயாராக இருந்தான். அவன் பிரபலமானவன். அவன் சகாக்கள் அவனை மதித்தார்கள்.

கிராமத்தின் ஆரம்பப்பள்ளியில் கற்று முடிந்ததும், தயன் பதினைந்து மைல்களுக்கு அப்பால் உள்ள உயர்நிலைப்பள்ளிக்குப் போனான். தன் மாமாவுடன் ஒரு வருடம் தங்கியிருந்தான். மீண்டும் ஊருக்கு வந்து அவன் ஞானபீடம் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறான். ஊரிலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது அது.

அவன் ஞானபீடத்தில் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது. அதற்குள் அவன் மீது ஒரு குற்றச்சாட்டு வந்துவிட்டது. பதுமணி கிராமத்தின் கடைக்காரன் ஹரன் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டான். தபனும் பல சிறுவர்களும் சேர்ந்து முன்தினம் மாலையில் அவன் கடைமீது கற்களை வீசினார்கள்; அவன் தவறு எதுவும் செய்யவில்லை; தபன் தான் அக் கும்பலுக்குத் தலைவன் என்று கூறினான்.

தபன் பியூனுடன் வந்து சேர்ந்தான். தலைமை ஆசிரியரைப் பயத்துடன் பார்த்துத் தலைகுனிந்து நின்றான். அவர் பிரம்பை ஆட்டிய வாறு "நீ தானே தபன்?" என்று அதட்டினார்.

"ஆமாம் ஸார்" என்று தபன் பணிவுடன் சொன்னான்.

கடைக்காரனைக் காட்டி, "இவரை உனக்குத் தெரியுமா?" என்று தலைமை ஆசிரியர் கேட்டார்.

"தெரியும் ஸார். எங்கள் ஊர்க் கடைக்காரன்."

" சரி. நேற்று மாலை நீயும் உன் நண்பர்களும் கூடி இவன் கடை மீது கல்லெறிந்தது உண்மைதானா?"

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

"ஆமாம் ஸார். நானும் ரத்தனும் மற்றும் சிலரும் இவன் கடைமீது கல்விசியது உண்மை தான்."

"ஏன்? ஏன் அப்படிச் செய்தாய், சொல்லு" என்று தலைமை ஆசிரியர் முழங்கினார்.

"ஐயா, இவன் ஏய்க்கிறான். அதிக விலை வாங்கிக் கொண்டு, சாமான்களைக் குறைவாய்த் தருகிறான். மேலும், இவன் புதுரகத் தாள் பை ஒன்றை உபயோகிக்கிறான். அதன் அடியில் கனத்த தாள்கள் ஒட்டி யிருக்கின்றன. நேற்று முன்தினம் நாங்கள் இவனிடம் ஒரு கிலோ பருப்பு வாங்கினோம். வீட்டில் அதை நிறுத்தபோது எண்ணுாறு கிராம் தானிருந்தது. பையிலிருந்த தாள் ஐம்பது கிராம் கனமிருந்தது. நூற்றைம்பது கிராமுக்கு நிறுவையில் கள்ளத்தனம் செய்திருக்கிறான். இது ஊர் முழுதும் தெரிந்த விஷயம். நேற்று இதை நான் இவனிடம் கேட்டேன். இவன் ஏசி என்னை வெளியே துரத்தினான். அதனால் தான் நானும் மற்றவர்களும் இவன் கடை மீது கல்விசினோம்."

தலைமை ஆசிரியர் கடைக்காரனை நோக்கினார். அவன் முகம் சிவந்திருந்தது.

தலைமை ஆசிரியர் சிறிது நேரம் யோசித்தார். பிறகு தபன் பக்கம் திரும்பி, "அப்படி இருந்தாலும், நீ செய்தது சரியல்ல. பிறர் பொருளைச் சேதப்படுத்துவது தவறு. கடைக்காரன் ஏமாற்றினால், அதைக் கவனிக்க வேண்டியது அரசு அல்லது ஊர்பஞ்சாயத்தின் பொறுப்பு ஆகும். அது உன் வேலை இல்லை. கையை நீட்டு!" என்றார். தபனுக்குப் பிரம்பினால் ஐந்து அடிகள் கிடைத்தன, அவன் வகுப்புக்குத் திரும்பியதும், சக மாணவர்கள் அவனை ஒரக்கண்ணால் பார்த்துக் கேலியாகச் சிரித்தார்கள்.

சில தினங்களுக்குப் பிறகு இன்னொரு சம்பவம் நடந்தது. அவ்வட்டாரத்தில் தொல்லை கொடுத்து வந்த ஒரு முரட்டுக் காளை சம்பந்தப் பட்டது அது. அது பலபேரை முட்டித் தள்ளியிருந்தது. யாராவது கம்புடன் அதை நெருங்கினால் அது அவர்களைத் தாக்கும். அதைக் கண்டு அனைவரும் பயந்தனர்.

அந்தக் காளையின் மூர்க்கத்தனம் தபனின் வீரத்தைத் துாண்டியது. "இரு இரு தடிமாடே! நான் உன்னை அடக்குகிறேன்" என்று அவன் முனகினான். பள்ளி இடைவேளையின் போது அவன் ஒரு கம்பும் துண்டுக் கயிறும் எடுத்துக் கொண்டு மெதுவாகக் காளையை அனுகினான். காத்து நின்று, சரியான சமயம் பார்த்து, அதன் முதுகு மேல் தாவி ஏறினான். குதிரைக்குக் கடிவாளம் மாட்டுவது போல், கயிற்றைக் காளையின் வாயில் திணித்தான். காளை திடுக்கிட்டுத் திகைத்தது. தன் முதுகு மேல் இருந்த கனத்தை உணர்ந்ததும் அது கால்களை உதைக்கவும் துள்ளிக் குதிக்கவும் தொடங்கியது. தொல்லை தருபவனை உதறித் தள்ளலாம் என எண்ணி வேகமாய் பாய்ந்து ஒடியது. இதற்குள் பள்ளி இடைவேளை முடிந்தது. வகுப்பு ஆரம்பித்து விட்டது. ஆனால் தபன் காளையை அடக்குவதிலேயே கருத்தாக இருந்தான். துள்ளிக்குதிக்கும் முரட்டுக் காளையின் முதுகிலிருந்து கீழே விழாதபடி அவன் கயிற்றை இறுகப் பற்றிக் கொண்டு சமாளித்தான். காளையின் முதுகில் தட்டினான். இது காளைக்கு மேலும் வெறியூட்டியது. அது பள்ளி வளைவினுள் பாய்ந்தது. ஏழாம் வகுப்பு அறைக்குள் புகுந்தது. ஆசிரியரும் மாணவர்களும் பதறியடித்துச் சிதறினர். முட்டி மோதிக் கொண்டு அறைக்கு வெளியே ஒடினார்கள். பலர் தவறி விழுந்தனர். ஆசிரியர் ரஜனி சகாரியா வெளியில் ஒடித் தப்பினார். வெறித்தனமாய் தாவிக் குதித்த காளையின் கொம்புகள் பட்டு சன்னல் கண்ணாடிகள் உடைந்து போயின. இறுதியில், மிரண்டுவிட்ட காளை அரண்டு கதறி பள்ளி மைதானத்திற்கு ஒடித் தள்ளாடி விழுந்தது. சில கணங்களில் துள்ளி எழுந்தது. திரும்பிப் பார்க்காமலே தப்பினோம் - பிழைத்தோம் என்று பாய்ந்து ஒடியது.

ஆகவே, தபன் பேரில் மற்றொரு குற்றச்சாட்டு வந்தது. இம்முறை ஆசிரியர் ரஜனி சகாரியா முறையிட்டார். தலைமை ஆசிரியர் கோபத்தால் வெகுண்டார். அந்தப் பையன் ஒயாத தொல்லையாக, தொந்தரவு தருபவனாக இருக்கிறானே. மாணவர்கள் மட்டுமின்றி, பள்ளிக் கட்டிடமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர் தபனை மீண்டும் வரவழைத்தார்.

பணியாள் மோகனோடு தபன் வந்தான். அவனைக் கண்டதும் தலைமை ஆசிரியரின் கோபம் பொங்கியது.

"நீ ஒரு துஷ்டன் ஏன் அந்தக் காளையை நீ வகுப்பறைக்குள் ஒட்டினாய்?" என்று பிரம்பை ஆட்டிக்கொண்டே அவர் கேட்டார்.

தலைகுனிந்து நின்ற தபன் சொன்னான்: "ஐயா, நான் அந்தக் காளையை வகுப்புக்குள் ஒட்டவில்லை. அதை அடக்குவதற்காக நான்

அதன் முதுகில் சவாரி செய்தேன். அது சடாரென்று அறைக்குள் பாய்ந்து விட்டது."

“பள்ளி நேரத்தில் காளைச் சவாரி பண்ணும்படி உனக்கு யார் சொன்னது? கையை நீட்டு."

தபன் தலைமை ஆசிரியரின் பிரம்பால் பதினைந்து அடிகள் பெற்றான். அவன் சகமானவர்கள் மீண்டும் சிரித்துக் கேலி செய்தார்கள். பள்ளிக்கூடத்தின் கெட்ட பையன் என்ற பட்டம் அவனுக்குக் கிடைத்தது. வெகு சீக்கிரமே பள்ளியில் ஒரு சுற்றறிக்கை விடப்பட்டது. அது கூறியது: ஐந்தாம் வகுப்பு தபன் ஏழாம் வகுப்பினுள் ஒரு காளையை ஒட்டி, ஆசிரியரையும் மாணவர்களையும் நிலைகுலையச் செய்ததற்காகவும், சன்னல் கண்ணாடிகளை உடைத்ததற்காகவும், பதினைந்து பிரம்படிகள் பட்டான். மேலும் நஷ்டத்துக்கு ஈடுகட்ட ரூ. 25 அபராதம் விதிக்கப் பட்டிருக்கிறான். இனியும் இதுபோல் குற்றம் ஏதேனும் செய்தால் தபன் பள்ளியிலிருந்து நீக்கப்படுவான் என்று அது முடிந்திருந்தது. சில பையன்கள் எச்சில் துப்பும் சாக்கில் வகுப்புகளை விட்டு வெளியே வந்து தபனை நோக்கிப் பழிப்புக் காட்டினர்.

அதே தினம் மாலை, தலைமை ஆசிரியர் வீடு திரும்பி, தேநீர் பருகிவிட்டு, உலா கிளம்பினார். இது அவரது தினசரிப் பழக்கம். அவர் திரும்பிக்கொண்டிருந்த போது இருள் கவிந்தது. அவ்வேளையில் பள்ளியின் கெட்ட பையனை அவர் பார்த்தார். ஒரு கிழப் பிச்சைக்காரியின் கையை அவன் பற்றியிருந்தான். அவளது பிச்சைக் கூடையை தன் தலையில் சுமந்து வந்தான். அவனது வகுப்பைச் சேர்ந்த இரண்டு பையன்கள்-படிப்பில் முதன்மையான நரேனும் மகேஷசம்-அவனைக் கேலி செய்தபடி அருகில் நடந்தார்கள். கிழவிக்குக் கடுமையான ஜூரம். அவளால் நடக்கவே முடியவில்லை. அந்நிலையில் கூடையைச் சுமப்பது எப்படி? கிழவியின் சிரமத்தைக் கண்ட தபன், அவள் கூடையைத் தன் தலைமீது வைத்துக் கொண்டு, அவள் கையைப் பிடித்தபடி, "பாட்டி, என்னைப் பிடித்துக் கொள். நான் உன்னை உன் இடத்துக்குக் கூட்டிப் போவேன்" என்றான்.

நரேனும் மகேஷம் தலைமை ஆசிரியரைக் கண்டதும் வணக்கம் தெரிவித்தார்கள். தபனைக் கேலியாகப் பார்த்து முறுவலித்தார்கள். தபனின் கெட்ட செயல் ஒன்றை அவரே நேரடியாகப் பார்த்துவிட்டார் என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு ஆசிரியர் கிழவியை விசாரித்தார். தபன் தனக்கு உதவி புரிய முன்வந்ததை அவள் விவரித்தாள்.குரல் நடுங்க, அவள் தபனைக் காட்டி, இந்த அருமைப் பிள்ளை வந்திராவிட்டால், நான் இன்னும் தெருவிலேயே விழுந்து கிடப்பேன். கடவுள் அவனைக் காப்பாற்றட்டும். நான் சிரமப்படுவதை இந்த இரண்டு பையன்களும் பார்த்தார்கள். ஆனால் உதவவில்லை. உதவிக்கு வந்த அருமைப் பிள்ளையைக் கேலி செய்து கொண்டிருக்கிறார்கள். கிழவி மூச்சுவிடத் திணறினாள். தலைமை ஆசிரியர் நரேனையும் மகேஷையும் ஏசி கிழவியை அவள் இடத்தில் கொண்டுவிடும்படி அவர் தபனை கேட்டுக் கொண்டார்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

இரண்டு வாரங்களுக்குப்பிறகு ஒரு நாள், தலைமை ஆசிரியர் உலாப் போய்விட்டு வீடு திரும்பும் வேளை வழியில், முரட்டுக் காளை ஒரு கால் முறிந்து கீழே கிடப்பதையும், அதன் அருகில் தபன் மண்டியிட்டு இருப்பதையும் கண்டார். அவன் காளையின் அடிபட்ட காலுக்கு ஏதோ மருந்து தடவி, கட்டு கட்டிக் கொண்டிருந்தான். அவன் கண்களில் நீர் வழிந்தது. தலைமை ஆசிரியர் நெருங்கி வந்து நிற்கவும் அவன் திடுக் கிட்டான். கரம் கூப்பி அவரை வணங்கினான். "நீ இங்கே என்ன பண்ணுகிறாய், தபன்? " என்று அவர் கேட்டார்.

"ஐயா, யாரோ சில துஷ்டப் பையன்கள் காளையின் காலை முறித்திருக்கிறார்கள். அது ரொம்ப வேதனைப்படுகிறது. ஐயா, ஊமைப் பிராணிகளை வதைப்பது தவறு இல்லையா?" என்றான் தயன் வருத்தமாய்.

"அன்றொரு நாள் இதே காளைமீது தானே நீ சவாரி செய்தாய்; இது துஷ்ட மிருகம், இதை அடக்க வேண்டும் என்று சொன்னாயே? இன்று இது உன் பார்வையில் நல்ல பிராணியானது எப்படி?"

"ஐயா, இது கொடிய மிருகமாகத் தான் இருந்தது. ஆனால்.நான் சவாரி செய்த நாள் முதல் இது திருந்திவிட்டது. மனிதர்களை முட்டுவதை விட்டுவிட்டது. அத்தோடு, அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிப் போகிறது. இதை அவர்கள் அடித்திருக்கக் கூடாது. இது மிகவும் வேதனைப்படுகிறது. நான் சில மூலிகைகளை மென்று அந்தக் கூழை வைத்து, அடிபட்ட காலுக்குக் கட்டு போட்டிருக்கிறேன். அது காயத்தைக் குணப்படுத்தும் என்று என் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்" என தயன் சொன்னான். அந்தக் காளைக்காக அவனுள் அனுதாபம் நிறைந்து, அவன் கண்களில் நீர்.

தலைமை ஆசிரியர் சிந்தனையில் ஆழ்ந்து நின்றார். பிறகு தயன் முகத்தைப் பார்த்தார். அவனைப் பிரியத்துடன் தட்டிக் கொடுத்தார். எதுவும் பேசாது நடக்கலானார். அவர் கண்கள் பனித்திருந்தன.

ஞானபீடம் உயர்நிலைப் பள்ளியின் பரிசளிப்பு விழா நாள். கெளஹாத்தி கல்லூரி ஒன்றின் முதல்வர் விழாவுக்குத் தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தார். இம்முறை, பள்ளியில் மிகச் சிறந்த நடத்தை உடைய மாணவனுக்கு ஒரு விசேஷப் பரிசு வழங்குவது என்று தலைமை ஆசிரியர் ரபீன் பருவா தீர்மானித்திருந்தார். மூன்று நூல்கள்-மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரது வாழ்க்கை வரலாறுகள்-பரிசாக வழங்கப்பட இருந்தன.

வகுப்புகளில் மாணவர்கள் விசேஷப் பரிசு பற்றி விவாதித்தனர். ஐந்தாம் வகுப்பு நரேன் கேலியாய் தன் அருகில் இருந்த பாபேஷிடம் உரக்கச் சொன்னான். "உனக்குத் தெரியுமா பாபேஷ்? நன்னடத்தைக்கு உரிய பரிசு தபனுக்குத் தான்" என்று. எல்லோரும் சிரித்தார்கள். தபனின் முகம் வெட்கத்தாலும் அவமானத்தாலும் சிவந்தது. பூமி பிளந்து தன்னை விழுங்காதா என அவன் எண்ணினான்.

விழா தொடங்கியது. தலைவருக்கு வரவேற்பு நிகழ்ந்தபின், செயல் அறிக்கை படித்தார். பிறகு, இசை, நடனம், கவிப்பொழிவுகளை மாண வர்கள் நிகழ்த்தினர். தலைவர் உரை தொடர்ந்தது. மற்றும் சிலர் பேசினர். அடுத்து, பரிசுகள் தரப்பட்டன. பரிசு பெற்றவர்கள் முகங்களில் மகிழ்ச் சியும் பெருமையும் பொங்கின. விசேஷப் பரிசு அறிவிக்கப்பட அனை வரும் ஆவலோடு காத்திருந்தனர். தலைமை ஆசிரியர் தெரிவித்தார்: "மாண்பு மிக்க தலைவர் அவர்களே, சீமாட்டிகளே, சீமான்களே! சிறந்த பண்புள்ள மாணவனுக்கு உரிய விசேஷப்பரிசு 5-ம் வகுப்பைச் சேர்ந்த திரு. தபன் ஹஸாரிகாவுக்கு அளிக்கப்படும்" என்றார்.

ஆசிரியர்களும் மாணவர்களும் திகைப்படைந்தார்கள். நரேன், பாபேஷ் இருவர் முகங்களும் விசித்திரமாய் மாறின. தபனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. எழுந்து சென்று பரிசைப் பெறுவதற்கு அவனுக்குத் துணிவு வரவில்லை. தலைமை ஆசிரியர் திரும்பவும் அறிவித்தார். தபன் குமார் ஹஸாரிகா, 5-ம் வகுப்பு அவன் தலை சுழன்றது. இது உண்மை தானா? பள்ளியின் கெட்ட பையன் எனக் கருதப்பட்ட அவனுக்கா சிறந்த பண்புக்குரிய பரிசு தபன் எழுந்தான். தலைவரிடம் போய், வணக்கம் கூறி, பரிசை வாங்கினான்.

வயதான பிச்சைக்காரிக்கு தயன் உதவியதையும், அடிபட்ட காளைக்குச் சிகிச்சை செய்ததையும் தலைமை ஆசிரியர் விவரித்தார். அவர் தன் சொந்தப் பணத்திலிருந்து ஐந்து ரூபாயும் தயனுக்கு அளித்தார். கைதட்டல் ஒசையால் மண்டபம் அதிர்ந்தது.

தபனின் கண்களில் ஆனந்தக் கண்ணிர் ஒளிரிட்டது.

-----------