சிறுகதை

5.53k படித்தவர்கள்
27 கருத்துகள்

நீண்டு அலையும் நிழல்கள் கண்டு அச்சம் கொண்டிருக்கிறீர்களா? ‘ஆமாம்’ என்றால் இப்படி என் எதிரில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நான் உலகத்தின் மிகச் சிறப்பான தேநீர் கலந்து தருகிறேன். நீங்கள் முதல் மடக்கு குடிக்கும்போதே நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று ஆரம்பிப்பேன். அப்போதுகூட நீங்கள் என்னை நிறுத்தலாம். இல்லை என் அப்பாவித்தனமான முகம் பார்த்து, ‘சொல்லு’ என்பதுபோல் பாவனை காட்டினீர்கள் என்றால் அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தையே தரும். சில்லென்ற பனிக்கட்டிகளின் நடுவே கால் பதிக்கையில் ஒரு சிலிர்ப்பு இருக்குமல்லவா – உறைவதற்கும் சில்லிடுவதில் விரல்கள் பதறுவதற்கும் நடுவே ஓர் உணர்வு. அந்த உணர்வு அத்தனை தெளிவாய் உங்களுக்குள்ளும் நான் விஷயத்தைச் சொன்னதும் தோன்றும். என்ன சிரிக்கிறீர்கள்? அப்படியென்ன சொல்லிவிடப் போகிறேன் என்றுதானே? உங்கள் புன்னகையை மற்றொரு புன்னகையால்கூட நீங்கள் துடைத்துக் கொள்ளலாம். ஏனெனில், நான் ஒரு கொலை செய்திருக்கிறேன்.

உடனே உங்கள் கண்கள் தன்னிச்சையாக என் உள்ளங்கைகளைப் பார்க்கின்றன. என் நகங்களில் ரத்தம் தோய்ந்திருக்கிறதா என்றுதானே பார்க்கிறீர்கள்? மழை இருளை சாகடித்த இன்றைய தினத்து விடியற்காலை நான் நகம் வெட்டிக் கொண்டேன். நிசப்தத்தின் நடுவே நகம் வெட்டும் ஓசை ஒரு சிறு பூச்சியின் சத்தத்தை ஒத்திருந்தது. அதனால் ரத்தக்கறைகளை நீங்கள் தேடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது. அல்லது எழுந்து கிளம்பும் த்வனியில் என்னிடம் பேசியபடி கைகுலுக்கும்போது என் கைகளை நீங்கள் ஒரு விநாடி முகர்ந்து பார்க்கலாம். ஒரே ஒரு கொலை செய்தவளின் கைகள் எப்படி இவ்வளவு மிருதுவாக இருக்கின்றன என்று நீங்கள் அதிகபட்சம் யோசிக்கலாம். அதுவே அதீதம். அதற்கு மேல் யோசிக்கக் கூடாது. நானெல்லாம் யோசித்தே ஒரு மாதம் ஆகியிருக்கும். கண்ணாடி முன் நின்று முகம் பார்த்து பல வருடங்கள் ஆகியிருக்கும், அதனால் என்ன - என் மனக்கண்னில் என் கண்ணுக்குக் கீழே எத்தனை கருவளையங்கள் என எனக்குத் தெரியும்.

என்னுடன் அடுத்த அறைக்கு வாருங்கள். சத்தமே போடக் கூடாது. காரணம் யசோதரைக்குக் காலடிச் சத்தங்கள் பிடிக்காது. அவள் எப்போதுமே ஜன்னல் பக்கம் உட்கார்ந்து கொண்டு கைகள் இரண்டையும் சேர்த்து தேய்த்தபடியே இருப்பாள். அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி மலையாள பூமியிலிருந்து ஒரு மாந்திரீகன் வந்து பூஜை பரிகாரமெல்லாம் செய்தும் அவள் வேறொரு சைகையைக்கூட கையாளவில்லை. என்னுடைய கவலையெல்லாம் அவள் ஓர் அரை அங்குலமாவது குனிந்தோ அல்லது நிமிர்ந்தோ இருக்கலாம். ஆனால், அந்த மாந்திரீகன் எல்லாவற்றையுமே - நிமிடம் விடாமல் குறை சொன்னபடியே இருந்தான். விடாமல் பேசிக் கொண்டே இருக்கும் ஒருவனை நான் அதற்கு முன்னம் என் வாழ்வில் சந்தித்ததே இல்லை. நான்தான் சிறந்த மாந்திரீகன் என்று ஒருவனால் எத்தனை முறை சொல்ல முடியும்? அவன் அதற்குப் பிறகு செய்ததுதான் மிகக் கொடூரமானது. நீங்கள் அதைக் கேட்டு விழுந்து விடாமலிருக்க முன்சுவரை நன்றாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அவன் யசோவின் கையைப் பிரிக்க முற்பட்டான். அவள் மிகுந்த கோபம் கொண்டு அவன் முகத்திலேயே அடித்துவிட்டாள். அவன் கீழுதடு வலப்பக்கமாய் உடனடியாக வீங்கியதில் கோபம் கொண்டு, “தமிழ்க் குடும்பங்களுக்குப் பூஜை செய்ய வரக் கூடாது” என்றபடி தெருவில் ஓட முயன்றான்.

யசோ அவனை மறித்து, “என்ன சொன்ன? தமிழ்க் குடும்பத்துக்குப் பூஜ பண்ண மாட்டியா? ஏன்?” என்று கேட்டாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“அவர்களுக்கு அறிவு கெடையாது. குறிப்பா அவர்கள் வீட்டுப் பெண்கள் மிக மோசமானவர்கள். எனக்கு தமிழ்ப் பெண்களைப் பிடிக்காது. அதுவும் உன்னைப் போல் ஒரு மனப்பிறழ்வு கொண்ட தமிழ்ப் பெண் என் கன்னத்தில் அடித்துவிட்டதை நான் எப்படி ஏற்றுக் கொள்வேன்? உன்னை என்ன செய்கிறேன் பார்” என்றபடி யசோவை நோக்கி அடிக்கப் பாயப் போக, அவள் அப்படியே நின்றாள். அவள் அப்படி நின்றது அவனுக்குப் பெருத்த தயக்கத்தைக் கொடுக்க, “அடிச்சேன்னா… அடிச்சேன்னா” என்றபடி கை மட்டும் ஓங்கி ஓங்கி கீழே போட, யசோ வீடே இரண்டாய் மூன்றாய் நான்காய் மடங்கும்படிக்கு சிரித்தாள்.

“அடிக்க துப்பில்ல.. பின்ன என்னாத்துக்கு இவ்ளோ சத்தம், இவ்ளோ பேச்சு… யாருக்குத்தான் நீ செஞ்ச மாந்தரீகம் பலிச்சிது… ஆஹ்… உங்க ஊர் பொண்ணுகளுக்கு மாதவிடாய் வருமா?” என்று கேட்டாள் அவனிடம். அவன் கண் பிதுங்க, “எதுக்குக் கேக்கற?” என்றான்.

“ஆஹ், சும்மா… தெரிஞ்சிக்க” என்றபடி யசோ மறுபடி உள்ளங்கைகளைத் தேய்த்துக் கொண்டே இருக்க ரேகை பிய்ந்து கைகளுக்கு வெளியே நீள்வதைப் போலிருந்தது. அவற்றிலிருந்து ரத்தம் லேசாக வடிய நம்பூதிரி மெல்ல பின்பக்கமாய் நடந்தான். ஒரு மனிதனால் நாலடி பின்னால் நடக்க முடியும். வீட்டு வாசல் தாண்டி சாலை முழுக்க ஒருவன் பின்பக்கமாகவே நடந்து மறைவானானால் அவன் எவ்வளவு பயந்திருப்பான்? பயத்தின் மலையுச்சியே தைரியத்தின் பிதற்றல்கள் எனத் தோன்றிற்று.

பிறகு யசோவை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது அவள் அவரிடம் தெளிவாக, “சிறுவயதில் எனக்கு மாதவிடாய்த் துணிகளையே என் அம்மா எனக்குக் கொடுத்தாள். எனக்கு அவை பிடிக்கவில்லை. அதைத் துவைக்க வேறு சொல்வாள். குருதியைத் துவைப்பதென்பது எவ்வளவு சிக்கலானது என்பதை அவள் அறியவே மாட்டாள். நான் அதைச் செய்ய முடியாது என்று சொன்னால் சிறுவயதில் அவள் வீட்டுக்குப் பக்கத்து வீடு, எதிர் வீட்டுப் பெண்கள் எல்லோருமே துணிதான் வைத்திருப்பதாகவும் அதையே நானும் செய்தே ஆக வேண்டுமென்றும் சொன்னதால் எனக்குக் கோபம் வந்து மாதவிடாய் அல்லாத காலங்களிலும் நான் எப்போதுமே புத்தியில் ரத்தக்கறை படிந்த துணியை என் கைகளால் அலசிக் கொண்டே இருந்தேன் டாக்டர். முதலில் பிசுபிசுப்பான ரத்தம் படிந்த முனைகளை வெறும் தண்ணீரில் அலச வேண்டும். அதற்குப் பிறகு நடுவில் தோய்ந்திருக்கும் ரத்தத்தை நகநுனிகளால் நிமிண்டி நிமிண்டி கழுவ வேண்டும். பின்னால் லேசாக சோப் போட்டு அலசின பிறகு காயக்கூடப் போட்டுவிடலாம். ஆனால், அலசின கையோடு பசித்தால் சாப்பிட முடியவில்லை என்னால். அந்த ரத்த வாடை சோற்றில் குழம்பில் எல்லாவற்றிலுமே அடித்தது.”

அந்த மருத்துவர் எதுவுமே சொல்லாமல் ஒரு நல்ல சோப்பை மட்டுமே யசோவுக்குப் பரிந்துரைத்திருந்தார். நாங்கள் இருந்ததெல்லாமே திருநெல்வேலி பகுதிகளில்தான். அங்கு சானிட்டரி பேடைக்கூட கருப்பு கலர் பாலிதீன் கவரில் வைத்துத்தான் தருவார்கள். மாதத்தீட்டு என்பது மிக ரகசியமான மர்மமான ஒரு பிரதேசம். பெண்களுக்கே அவர்கள் குழந்தைப்பருவம் முடியும் வரை ஓர் எழவும் தெரியாது. அப்படித்தான் அம்மாவும் எங்களை வளர்த்திருந்தாள். மருத்துவர் பரிந்துரைத்த சோப்பை வாங்கி யசோவுக்கு உபயோகப்படுத்தக் கொடுத்துவிட்டு ஒரே வாரத்தில் ஒரே சாதியைச் சேர்ந்த மீசை வைத்த ஒருவனுடன் கல்யாணமும் செய்து வைத்தாள். யசோ கைகளைத் தேய்ப்பதைக் குறைப்பாளில்லை. அவனுக்கு இட்லி அவித்து தட்டில் வைத்துக் கொடுப்பதற்குள் இட்லியைத் தேய்த்து பிய்த்துவிடுகிறாள் என்ற புகாரில் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டாள்.

ஒரு வாரம் கழிந்து பிய்ந்த இட்லி என்றால்கூட பரவாயில்லை. தோசை ஊற்றினால்கூட தனக்கு கல்லில் ஒட்டிக் கொள்கிறது என்று அவனே வந்து யசோவை அழைத்தான். அவள் போக மாட்டேன் என்று அழுதது, கிட்டத்தட்ட ஒரு குழந்தை பள்ளிக் கூடத்திற்கு போக மாட்டேன் என்று அழுததை ஒத்திருந்தது. அவளை வலுக்கட்டாயமாய் ஒரு அம்பாசிடர் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு போய் அவன் வீட்டில் விட்டு வந்தார்கள். அதே நாள் நள்ளிரவு அவள் எழுந்து கதவைத் திறந்து வெளியே வந்து ஊரின் நடுவே உள்ள ரவுண்டானா வேப்ப மூட்டில் உட்கார்ந்து கொண்டாள். காலையில் டீக்கடைகள் திறக்கும்போது தெரிந்தவர்கள் பார்த்துச் சொன்னார்கள். எல்லோருமே அவளை நோக்கி ஓட அவள் சம்மணமிட்டு தலையைக் குளிருக்கு இதமாய்ப் புடவைத் தலைப்பால் போர்த்திக் கொண்டு இருந்தாள். அம்மா வாயிலும் வயிற்றிலும் அடித்தபடி அழுது வீட்டுக்கே கூட்டி வந்தாள்.

அன்றே ஊர்ப் பெரியவர்களெல்லாம் சேர்ந்து பஞ்சாயத்து கூட்டம்போல் வைத்தார்கள். மாப்பிள்ளை தயங்கித் தயங்கி அன்றிரவு நடந்ததைச் சொல்ல கூட்டத்தில் மூத்தவர், “புதுசா கண்ணாலம் ஆன ஆம்பள வேற எப்டி இருப்பான்? அவன் சொல்றதுல என்ன தப்பு?” என்று சொல்லி விட்டு யசோவை அவள் தரப்பைச் சொல்லக் கூப்பிட்டார். அவள் வந்து நின்று கைகளைத் தேய்த்தபடி இருக்க – அவர் மீண்டும் மீண்டும், “ஏன் நடுராத்ரி ஒரு பொட்டச்சி வெளிய வந்த?” என்று விடாமல் கேட்க அவள் தன் உடைகளைப் பட்டென அவிழ்த்து அப்படியே நிர்வாணமாய் நின்றாள். சுவரில் இரண்டு புகைப்படங்களும் அறையில் நாற்காலிகளும் வந்தவர்களுக்குப் பரிமாறிய காப்பி தம்ளர்களும் இருந்தன. அவர்கள் எல்லோருமே அவசரமாக வெளியேறினார்கள். அதில் சிலர் தலையைக் கவிழ்ந்து யசோவின் உள்ளுறுப்புகளை, ஊர் கடக்கும்போது பாலத்தை வெறிக்கும் கண்களின் தன்மையோடு வெறித்துக் கடந்தார்கள். அம்மா அன்று முழுவதும் சாப்பிடவில்லை.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அன்றிலிருந்து யசோவுக்கு இந்த அறைதான். பின்பு அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினாள். இந்த முறை நான், ‘வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தால் மட்டும் போதும். முடியற்றவனாக, பல் நீண்டவனாக இருந்தாலும் பிரச்சினை இல்லை’ என்றேன். அம்மா இதற்கு ஏன் ஒத்துக் கொண்டாள் எனத் தெரியவில்லை. ஆனால், அவள் ஒத்துக் கொண்டது எவ்வளவு ஆச்சர்யமோ அப்படியே ஒருவன் இதற்கு ஒத்துக் கொண்டு என்னைக் கல்யாணம் செய்தது. 

பெரிதாகச் சொல்லிக் கொள்வதுபோல வாழ்க்கை இல்லை. கழுத்தில் ஒரு கயிறு ஏறியிருந்தது. வீட்டில் ஓர் ஆண் துணை என்று அம்மா வருவோர் போவோரிடம் எல்லாம் சொல்லிக் கொள்வார். கொடியில் ஷர்ட்டுகள் தொங்கின. அம்மா கூடுதலாக எட்டு இட்லியும் ஓர் ஆழாக்கு அரிசியும் அதிகமாக சமைத்தாள். அவன் எப்போதும் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை செய்து பட்டை போட்டு பிறகே சாப்பிட்டான். அப்படியொரு காலை நேரம் அம்மாவும் நானும் கடைக்குப் போய்விட்டுத் திரும்பினோம். அவன் வீடெங்கும் இல்லை. 

அம்மாதான் அவனைத் தேடினாள். யசோ அறையைக் கடந்தவள், “அட பாதகா” என்று அலறினாள். நான் ஓடியபோது அவன் சட்டென அவன் வேஷ்டியைக் கட்டினபடி என்னைத் தள்ளி விட்டு வெளியே ஓடினான். அவனைத் துரத்திப் போய் கொலை செய்துவிட்டேன் என்று இப்போது நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால், அப்படியெல்லாம் எந்தக் கருமாந்திரமும் இல்லை. நீங்கள் பதற்றப்பட வேண்டாம். அந்தத் தேநீரின் கடைசி மடக்கைக் குடித்துக் கொள்ளுங்கள். உண்மையில் அதன் பிறகு அவன் வரவுமில்லை. யசோ அப்படி ஒரு சம்பவம் நடந்ததுபோலவே நடந்து கொள்ளவுமில்லை. இரவு நேர உறக்கம் இழந்து அவள் சம்மணமிட்டு முக்காடிட்டு உட்கார்ந்திருக்க மட்டும் ஆரம்பித்தாள். அவளைத் தூங்க வைக்க முன்னால் போய் உட்கார்ந்தால், “நீ போய் தூங்கு… என்னைக் கொலை செய்த ரத்தத்துளிகளை நான் அலச வேண்டும். விரல் நுனியெல்லாம் மாதவிலக்கு துணிபோல் பிசுபிசுப்பாக இருக்கிறது” என்றாள். அந்த அரையிருட்டில் அவள் வார்த்தைகள் உதிர்ந்து மின்மினிப்பூச்சிகளைப் போல அலைந்தன. நான் அவற்றை என் ஒற்றை விரலால் நகர்த்தி அவளை அணைக்க முயன்றேன்.

என் உள்ளங்கைகளும் பிசுபிசுத்தன. அவ்வளவுதான். நீங்கள் விரும்பினால் கிளம்பும் முன் உங்கள் தேநீர் கோப்பையைக் கழுவி வைத்துவிட்டுப் போகலாம்.