சிறுகதை

2.31k படித்தவர்கள்
20 கருத்துகள்

பாஸ் புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல விரும்பினார்.

ஆட்டோ பிடித்து பாஸும் மாம்ஸும் YMCA வந்திறங்கினர்.

புத்தகக் கண்காட்சிக்கு வந்தவுடன் பாஸூக்கு முதலில் கண்ணில் பட்டது, பஞ்சுமிட்டாய் ஸ்டால்.

“ஆஹா... மாம்ஸ் பஞ்சு மிட்டாய் சாப்பிடலாமா?”

“எனக்கு வேண்டாம். அது குழந்தைங்க சாப்பிடுறது.”

“அப்ப நான் சாப்பிடலாம்ல.”

“நா சொன்னது சின்னக் கொழந்த, நீ போய் வாங்கினா அவனே உன்ன அசிங்கமா நினைப்பான்.” 

“அப்படியா? அப்போ அசிங்கப்படாம எப்படி வாங்குறது?” முகவாயில் விரல் வைத்து LED லைட்டை பார்த்து யோசித்த பாஸூக்கு மூளையில் லைட் எரிந்தது.

“தம்பி, இங்க வா...” அந்தப் பக்கமாகப் போன ஒரு சிறு பையனை அழைத்தார். “என்ன வாங்கப் போற?” 

“அம்மாவுக்கு காப்பி.”

“எங்க உங்க அம்மா?”

“அதோ...”

சிறுவன் கை நீட்டிய திசையில் பார்த்தார். தடிமனான இரண்டு பெண்கள் இவரைப் பார்த்து கொண்டிருந்தது தெரிந்தது.

“உனக்கு பஞ்சுமிட்டாய் பிடிக்குமா?”

அரைகுறையாகத் தலையாட்டினான். 

“இங்க வா, நாம சாப்பிடலாம், எனக்கும் கம்பெனி கொடு.” 

அவனை இழுத்துக்கொண்டு பஞ்சுமிட்டாய் ஸ்டாலை அடைந்தார்.

“ரெண்டு பஞ்சுமிட்டாய்.”

“அங்கிள், எனக்கு வேண்டாம். அம்மா என்னத் திட்டுவாங்க.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“மாமா வாங்கித்தந்தேன்னு சொல்லு, உங்க அம்மா உன்னைத் திட்ட மாட்டாங்க.”

“இல்ல, அங்கிள் வேணாம்.”

எங்காவது பாஸ் வாங்காமல் போனால் வியாபாரம் போய்விடும் என்று பயந்த பஞ்சுமிட்டாய்க்காரன், “உங்க மாமாதானே வாங்கித் தராரு தம்பி, கூச்சப்படாம சாப்பிடு” என்றான். 

“இவர் என் மாமா இல்ல” என்றான், சிறுவன் பயத்தில் விழித்தவாறு. 

இருவரையும் மாறி மாறிப் பார்த்த பஞ்சுமிட்டாய்க்காரன், “பெரியவங்க சண்டை பெரியவங்களோட போகும். அதுக்காக மாமா இல்லைன்னு சொல்லக் கூடாது தம்பி.”

திருதிருவென்று விழித்தான் சிறுவன். “இல்ல அங்கிள். இவரு என் மாமா இல்ல.” 
 
“குடும்பச் சண்டை எல்லாம் இப்படி காத்துல பறக்கற பஞ்சா இருக்கணும், அத புக் ஸ்டால் வரைக்கும் கொண்டு வரக்கூடாது” என்று காற்றில் பறந்த மிட்டாய் பஞ்சைக் குச்சியாலே கேட்ச் பிடித்து இரண்டு பஞ்சு மிட்டாய்கள் செய்து பாஸின் கையில் தந்தான். 

இரண்டையும் கையில் வாங்கி திரும்பிய பாஸ், “ஐய்யோ... கொழந்தையைக் காணும்” என்று அதிர்ச்சியானார்.

“இங்கதானே சார் நின்னுட்டு இருந்தான்?” 

“நா இந்தக் கூட்டத்துல அவன எங்கேன்னு போய்த் தேடுவேன்? என் காசு போச்சே” என்றார்.

“காசு போனாப் போகட்டும். குழந்தையைக் காணும்னு பதறாதீங்க, தேடிப் பார்க்கலாம். இல்லைன்னா அனெளன்ஸ்மெண்ட் தரலாம்.”

“என்ன சார், என்ன ஆச்சு?” என்றனர், அங்கு வந்த சிலர்.

“இவர் அக்கா புள்ளயக் காணும். இப்பத்தான் இங்க நின்னுட்டு இருந்தான்.”

“அப்படியா? கூட்டத்துல பத்திரமா பாத்துக்க வேண்டாமா? இப்படியா சார் அஜாக்ரதையா இருப்பீங்க? என்ன கலர் சட்டை போட்டு இருந்தான்? என்ன வயசு?” என்றனர், கூட்டத்தில் இருந்தவர்கள்.

“யாருக்குத் தெரியும்? அவனுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல.”

“இதேதான் சார், அந்தக் கொழந்தையும் சொன்னது. நான்தான் அந்தக் கொழந்தைக்கு அட்வைஸ் பண்ணினேன். இப்போ இவருக்குப் பண்ணனும்.”

“வேண்டாம் சார். அப்புறம் நானும் காணாமப் போயிடுவேன்.”

“ஓ... இவர் அட்வைஸ் பண்ணினா ஒவ்வொருத்தரா காணாம போயிடுறாங்களா? இதென்ன கூத்தால இருக்கு” என்றார், கூட்டத்தில் இருந்த ஒருவர்.

“சார், உங்க பஞ்சாயத்த அப்புறமா வச்சுக்கோங்க. மொதல்ல காணாம போன குழந்தையத் தேடணும். அவனப் பத்தின டீடெயில்ஸ் சொல்லுங்க.”

“சார்... எனக்கும் அவனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல...”

“இல்ல சார். இவரு பொய் சொல்லுறாரு. கையில பாருங்க, ரெண்டு பஞ்சு மிட்டாய் வச்சுருக்காரு."

பாஸ் தன் கைகளில் சங்கு சக்கரம் மாதிரி இரண்டு பஞ்சு மிட்டாய்களைப் பிடித்திருந்தார்.

“ஆமா... ரெண்டு இருக்கே? இத யாருக்குன்னு வாங்கினீங்க?”

“எனக்கும் அந்தப் பையனுக்கும்தான் வாங்கினேன். ஆனா அந்தப் பையன் யாருன்னு எனக்குத் தெரியாது.”

“மாப்ள போட்டிருக்குற சட்டை என்னது இல்லன்ற செந்தில் கதையால இருக்கு” என்றான், கூட்டதில் இருந்த ஒருவன்.

“யோவ், அந்தப் பையன் அங்கிள்னு கூப்பிட்டா நா மாமாவாக முடியுமா?”

“மருமானை போய் அந்தப் பையன்னு சொல்றீயே? நீயெல்லாம் மனுஷனாயா? குழந்தை, கோவத்துல நீ மாமா இல்லைன்னு சொல்லலாம். அதுக்காக நீயும் அத்தப் போயி மருமகன் இல்லேன்னு சொல்ற பாரு... உன்னையெல்லாம் பஞ்சுமிட்டாய் கணக்கா இந்த மெஷினுக்குள்ள போட்டுச் சுத்தவிடணும்.”

“கண்டால் ஒரு பேச்சு; காணாவிட்டால் ஒரு பேச்சு” என்றான், கூட்டத்தில் இருந்த பழமொழிக்காரன்.
“யோவ்... அறிவிருக்கா? நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன். செவிடன் காதுல ஊதின சங்கு மாதிரி சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசிக்கினு இருக்கீங்க. உன்னத்தாயா மெஷின்குள்ள போட்டுச் சுத்தணும்.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“கேக்குறவன் கேனயன்னா கேப்பையில நெய் வடியிற கதை மாதிரில இருக்கு” என்றான் பழமொழிக்காரன்.

“யோவ்... அந்த ஆளுதான் சம்பந்தமில்லாம பேசுறாருன்னா நீயும் ஏன்யா சம்பந்தம் இல்லாம பழமொழி சொல்லிட்டு இருக்க?”

“இத்த பாருய்யா இவன... ஓட்டக் கப்பலுக்கு ஒன்பது மாலுமியாட்டம் பேசுறத” - பழமொழிக்காரன்

“யோவ், நானே கடுப்புல நிக்குறேன், பழமொழி பேசிப்பேசி வெறுப்பேத்தாத.”

“மாட்டுக் கூட்டத்திலிருந்த ஆடு ஒண்ணு, மே... மே...ன்னு கத்திச்சாம். அந்தக் கத மாதிரில இருக்கு இவரு பேசுறது. கூட்டம் கூடிக் கொழந்தய காணோம்னு தேடிட்டு இருக்கு. இவரு என்னடான்னா வெளக்கம் சொல்லிட்டுத் திரியறாரு” என்றான் பழமொழிக்காரன்.

சத்தம் கேட்டு ஓடி வந்த மாம்ஸ், “என்ன ஆச்சு பாஸ்?” என்றார்.

“என்னாது பாஸா? ஓ... இந்த லெட்சணத்துல இவரு ஒரு கம்பெனிக்கு வேற பாஸா?” என்றான் பஞ்சுமிட்டாய்க்காரன்.

“ஆமாய்யா, சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசுறன். நீயே ஒரு பஞ்சுமிட்டாய் கம்பெனிக்கு பாஸா இருக்கும்போது, நா ஒரு கம்பெனிக்கு பாஸா இருக்கக்கூடாதா?”

“நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாக்கால்ல இருக்கு” என்றான், கூட்டத்திலிருந்த பழமொழிக்காரன்.

கையிலிருந்த அஸ்திரத்தை மாம்ஸிடம் தந்துவிட்டு, “கொல்லைக்கு பல்லி, குடிக்கு இந்தச் சகுனி, மொதல்ல இவன் வாய ஒருகை பாக்குறேன்” என்று கடுப்பில் முஷ்டியை மடித்து கொண்டு பழமொழிக்காரன் வாயில குத்துவிடத் தயாரானார் பாஸ்.
 
அப்பொழுது கூட்டத்தைப் பிளந்து கொண்டு அந்தச் சிறுவன் அங்கு வந்தான்.

“அம்மா, இந்த அங்கிள்தான் எனக்கு பஞ்சு மிட்டாய் வாங்கி தரேன்னு சொன்னார், வாங்கிக்கட்டாம்மா?”

“வாடா மருமவனே... நல்ல நேரத்துக்கு வந்த. இல்லேன்னா இங்க ஒரு கொலையே விழுந்திருக்கும்.”

“யோவ், யாருக்கு யாரு மருமவன்? ஊருக்கு மருமவனாரத்துக்கா நா பிள்ளய பெத்து வச்சுருக்கேன்?”

“யாருமா நீ? இது யாரு உன் அண்ணனா? குடும்பப் பிரச்சனையா?” ஆளாளுக்கு அந்த தடித்த பெண்ணைப் பார்த்து கேள்வி கேட்க ஆரம்பித்திருந்தனர்.

“இது யாருனே தெரியாது. என் பையன எனக்கு காபி வாங்கியாரச் சொன்னேன். வந்த பையனை பஞ்சுமிட்டாய் வாங்கித் தரேன்னு இந்தாளு கூப்பிட்டாராம். பிள்ளை பயந்து போய் என்னக் கூப்பிட்டான்.”

“அப்போ அந்த ஆளுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா?”

“இதத்தான்யா நா ஆரம்பத்திலிருந்து சொல்லிட்டு இருந்தேன். ஒரு பஞ்சு மிட்டாய்க்காக ஒரு அக்காவ உருவாக்கி சொத்தப் பிரிக்கப் பாத்தீங்களேடா?”

“சரி சரி, கெளம்புங்க... பஞ்சாயத்து முடிஞ்சது. அடுத்தது, அப்பளக் கடைக்குப் போலாம்” என்று கூட்டத்தினர் அப்பளக்கடையை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

- முற்றும்