சிறுகதை

3.57k படித்தவர்கள்
14 கருத்துகள்

தெற்கு கோபுர வாசலில் நுழைந்து கோவிலின் இடப்பக்க சன்னதி லக்ஷ்மிநரசிம்மர்க்கு ஏறுவதற்குள் மூச்சிரைத்தது தனத்திற்கு. குதிகால் வேறு விண்ணென்றது. கொஞ்ச நாட்களாகவே இரண்டு குதிகால்களும் காலை எழுந்ததுமே வலிக்கின்றன. ஏதேதோ தைலம், களிம்பு தடவிப் பார்த்தும் பலனொன்றுமில்லை.

அதுவும் கோவில் பிரகாரக் கருங்கல்லில் கால் வைக்கையில் உயிரே போவது போல் வலிக்கிறது.
தன்னை மீறிக் கண்ணில் திரண்ட நீரை சுண்டியெறிந்தவள் பாதத்தை உயர்த்தியபடியே கோவிலுக்குள் நுழைந்தாள்.

நேரே கருடஸ்தம்பம்... நமஸ்கரித்து இடப்பக்கம் நின்று கும்பிடு போட்டு நேராய்த் தாயார் சன்னதி.
தினமும் அவள் ரொட்டீன் இதுதான். கோவிலுக்குள் வழக்கம் போல ஈ, காக்கையில்லை. எப்போதும் ஒரு நிசப்தமும் அமைதியும் ஊடாடி உள்ளுக்குள் இனம்புரியாத பயத்தை உண்டு பண்ணும். அதை அனுபவிக்க அவள் மனம் உள்ளூற விரும்பும்.

துளசிமாடத்தைச் சுற்றி படிகளில் ஏறுகையில் வேணு தீக்ஷிதர் உட்கார்ந்திருந்தவர் எழுந்து பஞ்சகச்சத்தை இழுத்துவிட்டுக் கொண்டார்.

“வாங்கோ மில்காரம்மா!”

தட்டில் அவள் கொடுத்த பூக்களை வாங்கிக் கொண்டு தீபாராதனை காட்டத் திரும்பினார்.
கைகள் அனிச்சையாய் வேலை செய்து கொண்டிருக்க, வாய் வழக்கம் போல் வம்பளந்தது.

“என்ன ஆத்துக்காரரை ஆளையே காணோம்? துவஜாரோஹணம் அன்னைக்குப் பார்த்தது. அதுக்கப்புறம் வரவேயில்லை.”

‘ம்க்கும். அன்னைக்கு அவங்க கட்டளை. அதனால வருவாரு. மற்றபடி கோவிலுக்கு வர்றதே அவருக்குப் பிடிக்காதே.’ மனதுக்குள் முணங்கிக் கொண்டவள் புடவைத் தலைப்பில் கைவைத்து தீர்த்தம் வாங்கி சடாரி சேவித்துக் குங்குமத்தோடு வாசற்படியோரம் அமர்ந்து கொண்டாள்.

அம்மன் கிளிப்பச்சை புடவையில் பிங்க் பார்டருடன் தகதகத்தாள். சிவப்பும் பச்சையுமாய்க் கற்கள் பதித்த அன்னப்பட்சி ஹாரம் கழுத்தில் மின்னிக் கொண்டிருந்தது.
இப்படியொன்றைத்தான் சிறுவயதில் அடம்பிடித்து ஆசாரியிடம் செய்து வாங்கியிருந்தாள்.

சங்கிலியும் பதக்கமுமாய் எட்டு பவுன் இருக்கும்.
இறக்கையை விரிப்பது மாதிரி இரண்டு அன்னப்பட்சிகள் ஒன்றையொன்று பார்ப்பது போலிருக்கும். கண்ணுக்கு நீலக்கல்... அலகில் சிவப்பு... உடலெங்கும் வெள்ளைக்கல்... அதைக் கழுத்தில் போட்டதும் ஒரு ராஜ கம்பீரம் வந்த மாதிரி உணர்வாள். அப்போது யார் என்ன கேட்டாலும் சரியென்பாள். அப்படித்தான், திருமணத்துக்கு ஒப்புக் கொண்டதும்.

இப்போதோ...

இயலாமையில் நெஞ்சு விம்மியது. எத்தனையோ இழந்தாயிற்று. ஆனால் அம்மன் கழுத்தில் கிடந்தது அவளை ரொம்பவே தொந்தரவு செய்தது. 

‘தன்னுடையதை இல்லாமல் பண்ணிவிட்டு அம்மன் மட்டும் பளப்பளப்பது என்ன நியாயமோ?
இப்படியெல்லாம் நினைக்கலாமோ? சாமி குத்தம் வருமோ என்னமோ?
ஏற்கனவே என்ன பாவம் செஞ்சேனோ இந்தப் பாடுபட வேண்டியிருக்கு. இதில இந்த நினைப்பு வேற.’ தலையை உலுக்கிக் கொண்டாள்.

பரிகாரம் என்பதால்தான் மாமியும் வீட்டுக்காரரும் அனுப்பி வைக்கிறார்கள். அதுவும் ஆறு மாதங்களாகத்தான் காலையில் எண்ணெய்க் கிண்ணத்தோடு வர ஆரம்பித்திருக்கிறாள். இங்கு வருவது கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது. மாமியாரின் பிடுங்கலிலிருந்து சற்று நேர விடுதலை. அதிலும் பெருமாள் சன்னதிக்குப் போக மாட்டாள். தாயாரிடம் உரிமையாகக் குற்றம் குறை சொல்லி கொஞ்சமாய் ஏசிவிட்டு வீட்டுக்குக் கிளம்புவாள்.

“என்ன மில்காரம்மா வச்ச கண்ணு வாங்காம பார்க்கிறீங்க?”

சட்டென அவளுள் ஓர் எரிச்சல் படர்ந்து வந்தது.

‘மில் ஓனர் கேட்டா வகுந்திடுவார். மில்கார அம்மாவாம். படுபாவிகள் இப்படிச் சொல்லித்தான் ஏமாற்றினார்கள்.
இருந்த மில்லை கடனுக்குக் கொடுத்துவிட்டு அதை மேற்பார்வையிட்டு சம்பளம் வாங்கிக் கொள்ளுபவர் ஓனரா?’

பெரிய வில்வண்டியில் மூக்கு பேசரி மினுமினுக்கக் கண்டாங்கி சேலையோடு வந்திறங்கிய பெரியநாயகியை ஊரே வாய்பிளந்து பார்த்த போது பூரித்துப் போனார் தனத்தின் அப்பா. பெரிய இடத்து சம்பந்தமென்று மறுபேச்சு பேசாமல் ஒப்புக் கொண்டார். ஆனால் பெருங்காயம் இருந்த பாண்டமென்று கல்யாணமாகி வந்த மறுநாளே தனத்திற்குப் புரிந்து போனது. 

மூத்தார் சீட்டாடி குடித்ததும் இல்லாமல் மில்லை அடமானம் வைத்து ஊரைவிட்டு ஓடிப்போக கோவிந்தசாமிதான் குடும்பத்தையே கரை சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம். இரண்டு தங்கைகளுக்கும் தனம் கொண்டு வந்த நகைநட்டைப் போட்டுத்தான் கல்யாணம் கட்டி வைத்தார். மில்லைக் கைமாத்தி கடனடைத்து அதிலேயே வேலைக்கும் சேர்ந்து கொஞ்சம் மூச்சுவிட்ட பிறகுதான் ரேணு பிறந்தாள்.

‘அவளுக்காவது தெய்வம் நல்லவழி காட்டுச்சா? இதோ பங்குனி வந்தா பதினேழு முடியப்போவுது. இன்னும் வயசுக்கு வராமல் பெத்தவளுக்குப் பெருங்கவலையாய் நிற்கிறாள். போதும் இனிமேல் இங்கே உட்கார முடியாது.’

மெல்ல எழுந்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

இவளைக் கண்டதும் மாலா ஓட்டமும் நடையுமாக வந்தாள்.

“அக்கா! இந்தப் பூப்பொட்டலத்தை வாங்கிட்டுப் போங்க.”

“முல்லைப்பூவா?”

“இல்லைக்கா. மல்லிதான். ரேணு ரோஜாப்பூ கேட்டுச்சு. மறந்தாப்ல முக்கில இருக்கிற பிள்ளையாருக்கு வச்சிட்டேன். மன்னிச்சுக்க அக்கா.”

“இதில என்னாத்துக்கு மன்னிப்பு? சாமிக்குதானே வச்சே!

“என்ன சாமியோ! பழகிப்போச்சு. அதனால பூப்போடறேன். இல்லாட்டி அது நாம சொல்றதைக் கேட்குதா? பார்க்குதா? கல்லாக் கிடக்கு.” அலுத்துக்கொண்டே நடந்தாள் மாலா.

பாவம், இரண்டு பிள்ளைகளைக் கொடுத்துவிட்டு காரில் அடிபட்டு செத்துப் போய்விட்டான் அவள் புருஷன். அண்ணன் வீட்டுத் திண்ணையில் ஒண்டிக்கொண்டு அண்ணிக்காரியிடம் மொத்துப்பட்டு அல்லல்படுகிறாள். நாலைந்து வீடுகளில்
பத்துப்பாத்திரம் தேய்த்து ஓய்ந்த வேளையில் பூக்கட்டி விற்கிறாள். வாழ்க்கை பந்தாக உதைத்து உருட்டி விளையாடுகிறது. 

‘எல்லோரும் நம்மை மாதிரிதான். எரிச்சல் வந்தா சாமியையும் கரிச்சுக் கொட்றாளுங்க.’ தனத்துக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

வழியில் உலகம்மை ஆச்சி வேறு பிடித்துக் கொண்டாள். “ஆறு மரக்கா பயறு கிடக்கு. உடைச்சி தரச் சொல்றியா தனம்?
இரண்டு படி கூலி கொடுத்திடலாம்.”

‘இரண்டு படி பயத்தம்பருப்பு சும்மாவா? மதியம் உட்கார்ந்தா நிமிஷமா உடைச்சிடலாம்.’ போனவாரம் உளுந்து கல்பார்த்து உடைத்துக் கொடுத்ததை ஞாபகம் வைத்துத தான் ஆச்சி கேட்கிறாள்.

ஏதும் பேசாமல் சாக்குப்பையோடு வாங்கிக் கொண்டவள் திண்ணையில் ஓரமாக வைத்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.

கோவிந்தசாமி சாப்பிட உட்கார்ந்திருக்க, ரேணு சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

“ஏண்டியம்மா, சாமியை விளுந்து கும்பிட்டு என்ன வரம் வாங்கிட்டு வந்தே? எத்தனை நாழி!”  உறுமினாள் மாமியார்.

“ஆமா! அன்னப்பட்சி டாலர் போட்ட சங்கிலி வாங்கியாந்தேன்! கால் வலியோட நடந்துதானே போகமுடியும். மில் ஓனர் காரிலா போனேன்?” எப்போதும் பேசாதவள் எரிச்சலாய் திருப்பினாள்.

“எலேய் கோயிந்து, கேட்டியா! உன் பொண்டாட்டிக்கு அன்னப்பட்சி டாலர் செயின் வேணுமாம். பதினெட்டு வயசாயும் பொண்ணு குதிராம கிடக்கேனு ஒரு வருத்தமில்லை. கழுதை கெட்ட கேட்டுக்கு சங்கிலி கேட்குது. எங்கேயாவது இந்த அக்கிரமம் நடக்குமா? பெத்த புள்ளைக்கு பூ பொட்டு வைக்காம தான் சீவி சிங்காரிக்க தறி கெட்டு அலையுறா!”

சுருக்கென்றிருந்தது தனத்திற்கு. ‘எகிறிப் பேசினாலும் மாமியார் சொல்றது வாஸ்தவந்தான். வளர்ந்த புள்ளைக்கு வழிவகை காணோம். இதில அந்தச் சங்கிலி பேச்சு எதுக்கு? புத்தி பிசகிப் போச்சோ தனக்கு! தூரம் நின்னு போனதிலிருந்தே புத்தி ஏதேதோ யோசிக்குது. ஆனாலும் இதைக் காட்டிக்கக் கூடாது.’

‘‘ஆமா! ஆன வயசில போட்டு அனுபவிக்கல. அடகுக்கடைக்காரன் வீட்டில கிடக்கு. ஏதோ தாயார் கழுத்தில பார்த்ததும் இருந்தா பொண்ணுக்கு கொடுக்கலாமேனு நினைச்சேன். இது ஒரு குத்தமா?”

பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் கண்ணீர் வழிய நின்றவளை முறைத்தவள்

“அடியே! சாமி மேலேயே கண்ணு போட்டியா? அந்தச் சங்கிலி அறுந்து விழாம இருக்கணும். உங்க பரம்பரைக்கே பொல்லா கண்ணாச்சே!” மறுபடி ஆரம்பிக்க...

“போதும் மா! வேலையைப் பாருங்க. காலங்கார்த்தால ஆரம்பிக்காதீங்க!”  கோவிந்தசாமி போட்ட சத்தத்தில் இருவரும் வாய்மூட...

ரேணுவோ எதுவும் நடக்காத மாதிரி முருங்கைக்கீரை எடுத்து உருவ ஆரம்பித்தாள்.

தனத்துக்குத்தான் நெஞ்சு பதறியது. ‘ஊரு உலகத்தில இவ வயசுப் பொண்ணெல்லாம் காலாகாலத்தில திரண்டு கட்டியும் கொடுத்தாச்சு. இது இன்னும் புட்டு போடாமக் கிடக்கே. எத்தனை சாமியை வேண்டுறோம். ஒண்ணும் நடக்கல. ஒருவேளை அந்த அன்னப்பட்சி சங்கிலியை மீட்டு வந்தா நடந்திடுமோ? சே... ஏன் இப்படித் தோணுது?’

மனசுக்குள் மறுகியபடியே புழுங்கினாள். ‘இனிமே கோவிலுக்கு போகவேணாம். தாயாரைப் பார்த்ததும்தான் புத்தி இப்படி பொசக்கெட்டுப் போவுது.’

முனங்கியபடியே பயறு உடைக்க திருவையைத் தூக்க...

பக்கத்துவீட்டு பாலு அரக்கப் பரக்க ஓடிவந்தான்.

“யக்கா! விஷயம் தெரியுமா? கோவில்ல திருட்டுப் போயிடுச்சாம். வேணு ஐயரை கழுத்தில வெட்டிப் போட்டுட்டு தாயார் நகையெல்லாம் கொண்டு போயிட்டான்.”

பகீரென்றது தனத்துக்கு.

“என்னடா சொல்ற? நம்ம கோவிலிலா? யாரு திருடினா?”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“தெரியலைக்கா. பத்து மணி இருக்குமாம். வேணு ஐயர் மட்டுந்தான் இருந்தாராம். அவரை வெட்டிப் போட்டுட்டான். அம்புட்டு நகையும் கொள்ளையடிச்சிட்டான்.

“அடியே! நான் அப்பவே சொன்னேன் பாரு. உன் பொல்லாக் கண்ணு சாமியையும் உடலயே.”

தனத்துக்கு உடல் நடுங்கியது. ‘இருக்குமோ? தன்னோட வயிற்றெரிச்சல் சாமியைக் கேட்டிடுச்சோ. ஐயோ... பரிகாரம் பண்ணப்போய் பாவத்தைக் கொண்டு வந்திட்டோமோ!’

உடலும் உள்ளமும் சோர்ந்து போனது. போலீஸூம் ஆட்களுமாய் கோவில் திமிலோகப்பட்டது. தனத்தைக்கூட போலீஸ் விசாரித்தது. நான்கு பக்க கோபுர வாசல்களிலும் உள்ள கதவுகளை மூடிவிட்டார்கள். குடிக்கத் தண்ணீரெடுக்க போகிறவர்களையும் அனுமதிக்கவில்லை. வேணு ஐயர் குடும்பத்துக்கு அரசாங்கம் ஏதோ நிவாரணம் கொடுத்ததாகப் பேசிக் கொண்டார்கள்.

சாமி நகையெல்லாம் கிடைத்தால்தான் இந்த வருடம் திருவிழாவே நடக்குமாம். ‘இந்த வருஷம் சாமிக்கே தீங்கு வந்திடுச்சே. யார் செஞ்ச கேடோ?’ ஊர் சனம் மொத்தமும் புலம்பித் தவிக்க...

தனத்தின் வீட்டிலோ மாமியார் பேச்சு தாங்க முடியாமலிருந்தது.

“பரிகாரம் பாதியில நிக்குது. இந்தப் பொண்ணுக்கு விடிவுகாலம் வராதா? போனா நம்ம காரியத்தில கண்ணா இருக்கணும். போனது வந்ததை யோசிச்சா இப்படித்தான் சந்தியில போவும்.”

மாமியார் வேறு குத்திக் குதறியதில் நொந்து போனாள் தனம். ‘தான் நினைத்ததுதான் காரணமா? கோவிலுக்குப் போய் தாயாரிடம் கேட்கமுடியாதே!’

“போடி! போக்கத்தவளே! நம்ம கொல்லை வேப்பமர முனியை வேண்டிக்காம பணக்கார சாமிக்கு பாலும் நெய்யும் நீட்டறியா! பரிகாரஞ் சொன்னதை முனிக்கு செய். முன்னாடி வந்து வரத்தை நீட்டும்.”

மாமியாரைப் பார்க்க வந்த அவர் பெரியக்கா குஞ்சம்மாதான் குலசாமி, இப்போது தனத்திற்கு.

வேப்ப முனிதான் இப்போதெல்லாம் அவளுக்குப் புலம்புவதற்குத் தோதான இடம்.

‘இப்ப பொண்ணு காரியத்தைவிட நகையெல்லாம் திரும்பக் கிடைக்கணும்.’ அல்லும் பகலும் அவள் பிரார்த்தனை அதுதான்.

“கோயிந்து, உன் பொண்டாட்டிக்கு நல்ல புத்தி வந்திடுச்சு. முனிகிட்ட பயபக்தியா பொண்ணுக்காக வேண்டிக்கிறா.”
மாமியார்கூட நொடித்தாள்.

நாட்கள்தாம் எத்தனை வேகமாக ஓடுகின்றன?

திடீரென்று திருடியவன் நகைகளைக் கொண்டுவந்து ஒப்படைத்து விட்டான். நடுத்தர வயதுள்ள பெண்மணி தன்னை துரத்திவந்து மிரட்டியதாக வாக்குமூலம் வேறு கொடுத்து விட்டானாம். ஊரெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம். பங்குனித் திருவிழா இந்த வருடமும் கோலாகலமாக நடக்கப் போகுதாம். நாளைக்கு துவஜாரோஹணம். கொடியேறப்போகிறதாம்.

தனத்துக்கு நிம்மதிப் பெருமூச்சு. ஏதோ தான் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்துவிட்ட மாதிரி தோன்றியது. வேப்பமர முனியிடம் ஓடினாள். “சாமி! காப்பாத்திட்ட. ‘என் பரம்பரையே கொள்ளிக்கண்ணு’னு பேராயிருக்கும். உனக்கிருக்கிற சக்தி எதுக்குமில்ல. நான் கேட்டதை செஞ்ச நீதான் கடவுள்.”

கும்பிட்டுத் திரும்பியவள் திடுக்கிட்டாள். கிணற்றோரம் சொட்டு சொட்டாய் உதிரத் துளிகள்.
‘ஆறு மாசமா நின்னு போனது திருப்பிக்கிட்டோ...
முனியப்பா என்னைக் காப்பாத்து. நாற்பத்தஞ்சு வயசுவரைக்கும் நிக்கலை’னு மாமியார் வறுத்தெடுத்தாள்.

“நல்லவங்களுக்கு நாப்பது வயசுனு சொல்வாங்க. இன்னும் உட்கார்ந்து எந்திரிக்கிற” என்று பாடாய்ப்படுத்தினாள். இப்போது இது தெரிந்தால்...

பயந்தபடி அடியெடுத்து வைத்தவளை மறைவிலிருந்து கூப்பிட்டாள் ரேணு.

“அம்மா! நான் வயசுக்கு வந்திட்டேன்.”

கோவிலிலிருந்து மணிச்சத்தம் கணீரெனக் கேட்டது.