அத்தியாயம் 1

27.05k படித்தவர்கள்
13 கருத்துகள்

திக்குத்தெரியாத காட்டில் – உன்னைத்
தேடித் தேடி இளைத்தேனே!

- அமரகவி சுப்பிரமணிய பாரதியார்.

பீடிகை

வ்வளவு பெரிய புத்தகத்தை நான் எழுதுவதற்குத் தூண்டுதலாய் இருந்தவை இரண்டு விஷயங்கள். இரண்டாவதைத்தான் முதலில் சொல்ல வேண்டும். ’காரண-காரியம்’ என்றுதானே பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்... 

சிறிய விபத்தோ பெரியதோ, தீயை அணைப்பதுதான் முதல் வேலை என்றாலும், நெருப்பு முழுக்க அவிந்த பின்னர் கருகிக் கிடக்கும் குவியலைக் கிளறி விபத்தின் மூல காரணத்தை அறிவது இன்னும் முக்கியமானது.

என்று சம்பந்தமூர்த்தி மாமா சொல்வார். பார்க்கப்போனால், பற்றியெரியும் தீயை அணைப்பதைவிடவும் இது முக்கியமானது என்று அழுத்திச் சொல்வார். என்ன, அடிக்கடி இதைச் சொல்வார் – கேட்பவருக்கு அலுக்கும் அளவுக்கு. ஒருவேளை, திரும்பத் திரும்பச் சொன்னால்தான் மற்றவர்கள் மனத்தில் அழுத்தமாய்ப் பதியும் என்று நினைத்தாரோ என்னவோ. ஏனென்றால், எங்கள் குடும்பத்தின் பிற பெரியவர்கள் அளவுக்கு அசட்டுத்தனங்கள் இல்லாதவர் மாமா – என் அப்பாவைப் போலவே. இந்த விஷயத்தில் மட்டும் ஏன் இப்படி அலுப்பூட்டினார் என்பதற்கும் ஏதாவது காரணங்கள் இருந்திருக்கும்; நாங்கள் கேட்டதில்லை. 

மாமா ஆரம்பிக்கும்போதே எங்களுக்கு அடுத்தடுத்த வார்த்தைகள் நினைவுக்கு வந்துவிடும். அவர் சொல்லி முடிக்கும்போது எங்களுக்குள்ளும் அதே தருணத்தில் முடியும். நானும் சின்னக்காவும் ஒருவரையொருவர் பார்வையால் தீண்டிக்கொள்வோம் – புன்சிரிப்பை அடக்கும்போது அவள் முகத்தில் விசேஷமான ஒளி கூடியிருக்கும்! 

இரண்டாவது சம்பவம், மிகவும் எளிமையானது. நேரடியானது. புத்தாயிரத்தின் ஆரம்ப வருடங்களில், ஹொகேனக்கல்லில் ஒரு இலக்கியப் பட்டறை நடந்தது. அழைப்பாளர்களில் நானும் ஒருவன். என் எழுத்தின் பெறுமதி கருதி அல்ல - நட்பு கருதித்தான் அழைத்திருந்தார்கள். ஆமாம், நான் நிறைய எழுத ஆரம்பிக்கும்வரை நண்பர்களும் நிறையப் பேர் இருந்தார்கள். 

ஒரு லாரி அளவுக்கு எழுதிய பிறகு திரும்பிப் பார்த்தால், வாசகர்களாக அறிமுகமாகிறவர்கள் இருக்கிறார்கள்; தம் இஷ்டப்படி அர்த்தம் கொண்டு திட்டுபவர்கள் இருக்கிறார்கள்; இலக்கியமல்லாத காரணங்களை முன்னிட்டு நிரந்தரமாய் வெறுப்பவர்கள் இருக்கிறார்கள்; என்னுடைய ஒரு வரியைக்கூடப் படித்ததில்லை என்று பெருமையாய்ச் சொல்லிக்கொள்ளும் ஃபேஸ்புக் பதிவர்கள் இருக்கிறார்கள் - நண்பர்கள் வெகுவாகக் குறைந்துவிட்டார்கள். பாவம், அவர்களிலும் அநேகம் பேர் எழுதுகிறவர்கள்தானே. 

நட்பு குறைந்ததன் பலன், பட்டறைகளுக்கான அழைப்புகளும் தாமாகவே குறைந்துவிட்டன. தவிர, அந்த நாட்களில் நிகழ்ந்த எண்ணிக்கையில் இப்போது நடக்கின்றனவா என்பதும் தெரியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாய்ச் சொல்வேன், அவற்றில் இருந்த தீவிரமும் ஜனநாயகமும் மறைமுகமாக அவற்றில் பொதிந்திருந்த உத்வேகமும் கிளர்ச்சியும் இந்நாள் முகாம்களில் கிடைப்பதற்கில்லை. உங்களை ஏற்காத அமைப்புகளைப் பற்றி வேறு என்ன சொல்வீர்கள்!

இலக்கியப் பட்டறைகளுக்குப் போவதில் என்னை வசீகரித்த அம்சம் ஒன்று உண்டு. பகல் முழுக்க நடக்கும் விவாதங்களைவிட, முன்னிரவுகளில் தொடங்கும் உரையாடல்கள். பாவனைகளும் பாசாங்குகளும் இல்லாமல் மனம்விட்டு உரையாடத் தொடங்குவோம். சில சமயம் சில்லறைச் சண்டைகள் நடக்கும். அதுவும் இலக்கியத்தை முன்வைத்துதான். பகிர்ந்து அருந்திய மது ஒரு காரணம். என்றாலும், குடித்த பிறகும் இலக்கியம் மட்டுமே பேசுவது என்ற கடப்பாடு உள்ள குழாம் அமைவது சுலபமா என்ன!

தான் எழுதிய மதிப்புரைக்கு மன்னிப்பு கேட்பதில் தொடங்கி, அடுத்தவர் எழுத்தில் தமக்கிருக்கும் மோகம், பொறாமை, கேவலமான அபிப்பிராயம் என்று சகலமுமே தயக்கமின்றி வெளிவரும்… அதிதீவிரவாதிகள் மட்டும் நள்ளிரவு தாண்டியும் விழித்து உரையாடிக்கொண்டிருப்பார்கள். குடியும் தூக்கமின்மையும் இல்லாமல் ஒரு இலக்கியவாதியா என்பான் மோகன்தாஸ்!

இன்னொரு சுவாரசியம், கூட்டத்துக்குச் செல்வதற்கான பயணம் ஆரம்பிக்கும்போதே ஒரு விசித்திரப் பறவை எனக்குள் வந்து அமர்ந்துவிடும். ஓயாமல் க்ளக் க்ளக் என்று குரல் விடுக்கும். சமீபத்தில் படித்தவை, சமீபத்தில் எழுதியவை, சமீபத்தில் பிரசுரமானவை என்று ஒரு பெரும் பட்டியல் மனத்தில் மேலெழும். அவற்றைப் பற்றி இன்னின்னார் என்னென்ன சொல்வார்கள் என்ற ஆவலும், சிலவேளை பதைப்பும் என உணர்வுநிலைகள் ஏறிஏறித் தாழும். ஒரு கட்டத்தில், நானே அந்தப் பறவையாக உருமாறியிருப்பேன். 

ஹொகேனக்கல் செல்லும்போது, காவிரிக்கரையில் வறுபடும் புத்தம்புது மீன் மணம், அருவிக் குளியல், பரிசல் பயணம், முழங்கால் ஆழம் மட்டுமே கொண்ட கிளைக் கால்வாயின் நட்டநடுவில் நீருக்குள் சம்மணமிட்டு அமர்ந்து புகைக்கும் சிகரெட் என்று ஞாபகம் வந்த எதிர்பார்ப்புகளின் வரிசையில் அந்த மாத ஆரம்பத்தில் வெளிவந்த ஒரு சிறுபத்திரிகையின் முதல் இதழில் பிரசுரமாகியிருந்த என் குறுநாவலும் சேர்ந்துகொண் டது... 

வங்கியொன்றில் தணிக்கை உதவியாளனாய்ப் பணிபுரிந்த, குறுகியகாலப் பரிச்சயத்திலேயே கதைசொல்லியின் அந்தரங்க நண்பனாகிவிட்ட, சில பல கடிதங்களை எழுதிய பின் திடீரென்று தொடர்பறுந்துபோன ஒருவனைப் பற்றிய குறுநாவல் அது. சில ஆண்டுகள் கழித்து, வங்கிப் பணியிலிருந்தே காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவன். அவன் காணாமல் போனதற்கான தடயங்களை அவன் எழுதிய கடிதங்களிலேயே தேடுவதாக வளர்வது…

மேற்சொன்ன குறுநாவலை எழுதும்போது எனக்கிருந்த இரட்டை மனநிலையை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆமாம், கதைசொல்லியும் நானே, காணாமல் போனவனும் நானே என உணர்ந்திருந்தேன். அச்சான பின்னர் வாசிக்கும்போது, என்னுடைய கண்ணாடி பிம்பத்தை இரண்டாகப் பிரித்து ஆளுக்குக் கொஞ்சமாக வழங்கியிருந்தது உறுதிப்பட்டது. பிரசுரமானதை நானே வாசித்தபோது, ’சின்முத்திரை பிடிக்கும் தட்சிணாமூர்த்தத்தின் விரல்களில் தொடும் விரல் எது, தொடப்படும் விரல் எது’ என்று முன்னாள் நண்பராகிவிட்ட மூத்த எழுத்தாளர் புன்னகையோடு கேட்ட கேள்வி என்னுள் எழுந்தடங்கியது; மூக்குப்பொடியைச் சிட்டிகை பிடித்த மாதிரி விரல்களைக் குவித்திருந்தார் அப்போது...

ஆனால், பகல் முழுவதும் கிடைத்த இடைவேளைகளில் யாருமே அந்தக் குறுநாவலைப் பற்றி என்னிடம் பேசாதது ஒருவித அவமான உணர்வைக் கிளப்பியது.

***

மோகன்தாஸ் காப்பாற்றினான். கிட்டத்தட்ட நள்ளிரவு நெருங்கும்போது, எச்சில் சிகரெட்டைப் பறித்து உறிஞ்சியவன், திடீரென்று புகையோடு என் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான்[1].

மாப்ளே, நீ எழுத்தாளண்டா. நீதாண்டா எழுத்தாளன். நாங்கல்லாம் சும்மா ஜல்லி அடிச்சிட்டிருக்கோம். என்னா ஃப்ளோ என்னா ஃப்ளோ. நாலஞ்சு தடவ படிச்சுட்டேண்டா. ஒவ்வொரு வாட்டியும், அந்தச் சண்டாளன் காணாமப் போயிட்டானேன்னு இருக்கு. அதுலேயும், ‘செத்துப்போனவர்களை மன்னித்துவிடலாம்; காணாமல் போனவர்கள் பறித்துப்போகும் நம் சுயத்தின் பகுதியும் உயிரோடு எங்கோ உலவிக்கொண்டுதானே இருக்கும்?’ன்னு ஒரு வரி வருதே… அபாரம்டா. அது சரி, அவன் எழுதின லெட்டர்லெ வர்ற பேர்கள்லெ நெஜமான எழுத்தாளர்களும் பாடகர்களும்கூட இருக்காங்களே, மத்தவங்களுமே நெஜமாடா?.. 

என்று ஆத்மார்த்தமான பிரியமும் தழுதழுப்பும் வழியும் குரலில் பேசிக்கொண்டே போனான். ’என்ன இந்தப் பயல் திடீரென்று இப்படிப் பொங்குகிறானே’ என்று நான் வியந்து முடிப்பதற்கு முன்பே பாலகிருஷ்ணன் குறுக்கிட்டான்: 

இந்த நாலு வார்த்தெ சொல்றதுக்கு, இவ்வளவு குடிக்க வேண்டியிருக்கு!

எல்லோரும் சிரித்தோம். 

அவர்களை சாமானியமாக நினைத்துவிட வேண்டாம் – முன்னவன் தீவிர இலக்கியத்தை விட்டு மெல்லமெல்ல நகர்ந்து போனானே தவிர, மிகப் பெரிய திரைக்கதாசிரியனாக இருக்கிறான்[2]. நிறைய சம்பாதிக்கவும் செய்கிறான். மற்றவன், மத்திய அரசில் மிக உயர்மட்ட அதிகாரியாக இருக்கிறான். அதிகம் எழுதுவதில்லை; மொழிபெயர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறான்; தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஹிந்திக்கும். ஆமாம், மும்மொழி வல்லுநன் அவன். முதன்முதலில் இருமொழிகளுக்கும் அவன் கொண்டுசென்றது, அன்றிரவில் அவர்கள் கொண்டாடித் தள்ளிய, மேற்சொன்ன என்னுடைய குறுநாவலைத்தான். 

அந்த மாய இரவில், கொழுந்துவிட்டெரியும் கேம்ப்ஃபயரின் முன்னிலையில், போதையும் நட்பின் ஆழமும் தந்த அக எழுச்சியில் சில நிமிடங்கள் மட்டுமே நண்பர்கள் வழங்கிய பாராட்டு வாசகங்கள் இப்போது இதை எழுதும்வரை என்னைச் சுமந்து வந்திருக்கின்றன என்பதை, ஒருபோதும் நவின்று தீர்த்துவிட முடியாத நன்றியுணர்ச்சியுடன் பதிவு செய்கிறேன்...

சொல்ல வந்த விஷயத்திலிருந்து வெகுவாக அகன்று சென்றுவிட்டேன் என்று உறைக்கிறது. அன்றைய உரையாடலில் பாலகிருஷ்ணன் சொன்ன ஒரு வாக்கியமும், ஒரு தகவலும் - அவற்றைக் குறிப்பிடுவதற்காகத்தான் இந்தப் பத்தியையே ஆரம்பித்தேன். குறுநாவலைத் தொடர்ந்து, காணாமல் போகிறவர்கள் பற்றிப் பேச்சு தொடர்ந்தது. பாலகிருஷ்ணன் சொன்னான்:

துயரத்துலேர்ந்து விடுபடுறதுக்காகத்தான் ஒருத்தன் ஓடிப்போகணும்ங்குறது இல்லப்பா. சந்தோஷம் தாங்காமெக்கூட ஓடிப்போலாம். எங்கூடப் படிச்சவன் ஒர்த்தன் அப்பிடித்தான் காணாமெப் போனான்[3]. வசதியான வியாபாரக் குடும்பம். சொந்தக்காரப் பொண்ணுக ரெண்டு மூணு விடாமெத் தொரத்திக்கிட்டிருந்துச்சுக. நாலாவது ஸெமஸ்டர் லீவுக்கு ஒட்டன்சத்திரம் போயிட்டேன். லீவு முடிஞ்சு திரும்பி வந்தா ரெண்டு தகவலையும் சொல்றானுக; ரெண்டாவது தகவல், அந்த ஸெமஸ்டர்லயும் க்ளாஸ் டாப்பர் அவன்தான்!...

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அட, இது எனக்குத் தோன்றாமல் போய்விட்டதே; காணாமல் போனவனின் ஒரு கடிதத்தில் இந்த அம்சத்தைச் சேர்த்திருக்கலாமே. கதையில் இன்னும் கொஞ்சம் மர்மம் சேர்ந்திருக்குமே. என் மனவோட்டத்தை அறியாமல் அடுத்ததையும் சொன்னான் பாலகிருஷ்ணன்:

கொஞ்சமாவது சுரணையுள்ளவனுக்கு, தான் இருக்குற இடத்தைப் பத்தி திருப்தி இருக்குமா சொல்லு... 

படுக்கப் போகலாம் என்று நாங்கள் எழுந்த பிறகு, நின்றவாறே கடைசி சிகரெட்டைப் புகைத்தோம். அப்போது, பாலன் இன்னொன்று சொன்னான்:

...தமிழ்லெ வி வி சடகோபன்னு ஒரு சினிமா ஸ்டார் இருந்தாருடா. அவரும் இப்பிடித்தான் காணாமப் போனாரு – எய்ட்டீஸ்லெ.

கேள்விப்பட்டிருக்கேன். எங்க தாய்மாமா ஒருத்தர் சொல்லியிருக்காரு...

அவ்வளவுதான், என்மேல் மெல்ல மெல்லக் கவிந்துகொண்டிருந்த உறக்கம் சட்டென்று ஆவியாகிவிட்டது. முன்னரே சொன்ன பறவை, சிறகை விதிர்த்துக்கொண்டு ஆகாயமேறியது.

***

முதல் காரணம், இரண்டாவதாய்ச் சொல்கிறேன் என்றேனே அதுதான் - ஆரம்பத்திலும், சற்று முன் பாலனிடமும் குறிப்பிட்ட சம்பந்தமூர்த்தி மாமாவேதான். 

என் அம்மாவின் ஒன்றுவிட்ட தம்பி அவர். அப்பா வழியில் அவளுக்கு எஞ்சியிருந்த ஒரே உறவு. அந்தக் கால ஐப்பியெஸ். முழுக்க முழுக்க வடநாட்டிலேயே பணிக்காலத்தை முடித்தவர். இடையில் ஒரு தடவை தமிழ்நாட்டுக்கு டெப்புட்டேஷன் வாங்கிக்கொண்டு வந்திருந்தார். தீயணைப்புத் துறையில் கேந்திரமான பதவி வகித்துவிட்டு, மறுபடி மத்தியப் பிரதேசம் திரும்பிவிட்டார். அம்மா சொல்வாள்:

பாவம், உள்ளூருக்கு வந்த பிள்ளையை நிம்மதியா இருக்கவிட்டுதோ, பாழாப் போன உத்யோகம்? வந்துருக்கவே வேண்டாம். எங்கியோ கண்காணாத எடத்துலே என்ன கஷ்டம் பட்டுருந்தாலும் நம்பளுக்குத் தெரிஞ்சிருக்கவா போறது?

ஆமாம், மாமா தமிழ்நாட்டில் தற்காலிகமாய்ப் பணிபுரிந்த காலகட்டம் காங்கிரஸ் அரசாங்கத்தின் அந்திமக் காலம். இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்த சமயம். ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைக்கிறார்களோ இல்லையோ, அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்போது, தற்காப்பும் மும்முரமாகத்தானே இருக்க வேண்டும்?...

அம்மாவின் கூடப்பிறந்த சகோதரர்களைவிட நெருக்கமாயிருந்தவர் சம்பந்த மூர்த்தி மாமா. அவருக்கு உடன்பிறந்த இரட்டைச் சகோதரிகள் இருந்தார்களாம். இவரை விட மூன்று வருடம் மூத்தவர்கள். பத்து வயதில் வைசூரி தாக்கி ஒருத்தி மாண்டு போனாள். மற்றவள் அவளை நினைத்து ஏங்கியே போய்ச்சேர்ந்தாள் என்பாள் அம்மா. இரண்டாவது சித்தி எப்படி இறந்தாள் என்று அவளும் சொன்னதில்லை, நானும் கேட்டதில்லை. பார்க்கப்போனால் நான் பிறப்பதற்கு முன்பே அவர்களெல்லாம் வெறும் கதையாகிவிட்டிருந்தார்கள். 

மாமாவே, உடன்பிறப்புகள் தவறினபோது தமக்கு ஏழு வயதுதான் என்றும், மிகவும் மங்கலான ஞாபகங்கள்தான் இருக்கின்றன என்றும் சொல்வார். என் அம்மாவிடம் அவருக்குப் பாசம் அதிகமாய் இருந்ததற்கு இரட்டையர் இறந்ததுவும் காரணமாய் இருக்கலாம்.

கிராமப் பள்ளிக்கூடத்தில் பள்ளியிறுதிவரை படித்து, பட்டப்படிப்புக்குத் திருச்சி போனார். பட்டமேற்படிப்பு மதறாஸில். அப்போது ஏற்பட்ட உந்துதலால், ஸிவில் சர்வீஸ் எழுதித் தேர்வானார். பணிக் காலத்தின் இறுதியில் டெல்லியில் குடியமர்ந்தார். 

சும்மாயில்லடா க்ருஷ்ணையா. பரமபதத்திலெ ஒவ்வொரு சின்ன ஏணியா ஏறியாக்கும் கடைசிக் கட்டம் வரை போனேன்…

என்று இடைவெளி விடுவார். அபரிமிதமான குறும்பு கொப்பளிக்கும் பார்வையை மாமி மீது வீசுவார். நாங்கள் காத்திருந்தோம். அவர் தொடர்ந்தார்:

என்ன செய்ய, கடைசிக்கி முந்தின கட்டத்திலெ வாயெத் தெறந்துண்டிருந்த பாம்புகிட்டெச் சிக்கி, ஒரே சறுக்கு. இந்தோ, கரட்டுப்பட்டியிலெ வந்து ஒக்காந்திருக்கேன்!

தானேதான் அந்தப் பாம்பு என்கிற மாதிரிப் பெருமை பொங்கும் முகத்துடன் புன்சிரிப்பாள் சீத்தா மாமி. 

ஏன், ஒனக்கென்ன ராஜாவுக்கு!

என்று பெருமிதமாய்ச் சொல்வாள் அம்மா. ’என் பிள்ளைகள் படிச்சு அந்த அளவு மேலே வராட்டா என்ன, சம்பந்தனும் எனக்கு ஒரு பிள்ளைதானே.’ என்று அடிக்கடி சொல்வாள். 

மாமாவின் ஒரு சிறப்பம்சம், ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டால் லேசில் விட மாட்டார்! அவர் வருவதற்காகக் காத்திருக்கும் கடிகாரங்கள், காற்றாடிகள், ட்ரான்ஸிஸ்டர்கள், பம்பிங் ஸ்டவ்கள் என்று பகல்பொழுது முழுக்க எதையாவது நோண்டிக்கொண்டிருப்பார். கை தன்பாட்டுக்கு வேலை செய்ய, ஏகப்பட்ட சம்பவங்களை, அனுபவங்களைக் கதைமாதிரிச் சொல்லிக்கொண்டிருப்பார். ஏதேனும் காரணத்தால் தடைபட்டுப் போனாலும், அடுத்துக் கிடைக்கும் சந்தர்ப்பத்தில், விட்ட இடத்திலிருந்து தொடர்வார்!

வருடம் ஒருமுறை கரட்டுப்பட்டி வந்து போவார் மாமா. என்னுடைய ஆரம்ப காலச் சிறுகதைகள் ஓரிரண்டில், பட்டாளத்து மாமாவாக உருமாறி வந்துபோயிருக்கிறார். விதவிதமான இனிப்புகள், பார்த்தறியாத சாக்லேட் வகைகள், தன் அக்காவுக்கு அபூர்வமான வண்ணங்களும் வடிவங்களும் கொண்ட கைத்தறிப் புடவைகள், கொடை ரோடு ரயில் நிலைய வாசலில் வாடகைக்கார் பிடிக்கும் முன் வாங்கிய ப்ளம் பழக்கூடை என்று பெட்டி நிறைய அன்பளிப்புகளுடன் வந்துவிட்டு, ஒருவாரத்துக்குக் குறையாமல் தங்கிவிட்டு, திருநெல்வேலி போவார் - தாய்தகப்பனைப் பார்க்க. சாஷ்டாங்கமாக நமஸ்கரித்த பின்பு புறப்படுகிறவரை, கண் தளும்ப வழியனுப்புவாள் அம்மா. 

***

நாங்கள் மதுரைக்குக் குடிபெயர்ந்த பிறகும், அம்மா காலமான பிறகும்கூட, வருடத்துக்கு ஒரு முறை வந்துகொண்டுதான் இருந்தார். 2010 வரை. சீதா மாமியை நிகம் போத் காட்டில் தகனம் செய்துவிட்டு, பத்தாம் நாள் காரியத்தை மதுரை டிவிஎஸ் தோப்பில், தன் அக்கா காரியம் நிகழ்ந்த அதே இடத்தில் செய்ய வேண்டும் வந்திருந்தார். பழைய மாமாவின் நிழல்போல் தெரிந்தார். அவர் சம்பந்தமான சகலமும் கம்பீரம் குறைந்திருந்தன. அலங்காரமாய்ச் சொல்வதென்றால், அவர் புகைக்கும் பைப்கூடப் பலவீனமாகிவிட்ட மாதிரித் தெரிந்தது. 

ஊர் திரும்பிய மறுமாதம், ஒரு தடவை விழுந்து எழுந்தாராம். அதற்கப்புறம் வீட்டுக்குள் நடமாடவே கைத்தடி உபயோகிக்க வேண்டியிருக்கிறது என்று தொலைபேசியில் என்னிடம் விசனத்துடன் தெரிவித்தார். அப்போது அவருக்கு வயது தொண்ணூறு.

மாமாவின் பேச்சில் விசித்திரமான தர்க்கம் இருக்கும். ஒரு உதாரணம் சொன்னால் தெளிவாகிவிடும்…

நான் கல்லூரியில் சேர்ந்த வருடம் அது. என்னுடைய முதல் சிறுகதை பிரபல வாராந்தரியில் வெளியாகியிருந்தது. என் கால்கள் தரையில் பாவ மறுத்தன. அந்தச் சமயத்தில் சம்பந்தமூர்த்தி மாமா மதுரைக்கு வந்தார். அவரிடமும் உற்சாகமாய்க் காட்டினேன். அதுவரை சுமார் நூறு பேர்களிடமாவது காட்டியிருப்பேன். யாருமே கேட்டிராத கேள்வியைக் கேட்டார் மாமா:

அது சரிடா கிஷ்ணையா. இந்தக் கதை நீ எழுதினதுதான்ங்கறதுக்கு என்ன ப்ரூஃப்?

சட்டென்று என் கால்கள் தரையில் அழுந்தின. பலவீனமான குரலில் சொன்னேன்:

என் பேர் போட்டிருக்கே மாமா?!

பார்றா. தமிழ்நாட்டுலே நீ ஒர்த்தன்தான் க்ருஷ்ணனாக்கும்? 

தொடர்ந்து அந்தப் பத்திரிகையில் இருந்த இன்னொரு கதையை வாய்விட்டுப் படிக்க ஆரம்பித்தார். என் நெற்றிப்பொட்டுகளில் வியர்த்தது. கையாலாகாத ஆத்திரமும், விலகி நகர முடியாத நிர்ப்பந்தமும் என்னைப் படுத்தியெடுத்தன. முதல் இடியிலிருந்தே நான் மீண்டிருக்காதபோது, அடுத்த அஸ்திரம் பாய்ந்தது. ஆனால், அது என்னைக் காயப்படுத்துவதற்கு பதிலாக, என் கழுத்தில் மாலையாய்க் கிடக்கிறது – இன்றுவரை. மாமா சொன்னார்:

த பார். ’ரங்கேசன்’னு ஒர்த்தன் எழுதியிருக்கான். இந்தப் புனைபேருக்காகவே இவனை ஷூட் பண்ணலாம். இவனோட லாங்வேஜுக்கும் நீ காட்டின கதையோட லாங்வேஜுக்கும் ஏதானும் வித்தியாசம் இருக்கா? பேர்களை மாத்திப்போட்டா ஏதாவது கெட்டுப்போகுமா? 

வாய்விட்டு மனம்விட்டு நீண்டநேரம் சிரித்தார். அப்புறம், அபூர்வமான வாஞ்சையுடன் சொன்னார்:

என்னடா, மனசு விட்டுடுத்தா! இதுவரைக்கும் நீ காட்டினவன் அத்தனை பேரும் ஆஹா ஓஹோன்னிருப்பான். நீயும் அதே ஜோர்லெ இன்னும் நூறு கதை எழுதித் தள்ளிடுவே. அதுவா பெரிசு? ஒனக்குன்னு ஒரு தனித்தன்மை வேணாம்? ஒன்னோடெ லாங்வேஜைக் கண்டுபிடிக்க வேணாம்?... எழுத்தாளனாறது எவ்வளவு பெரிய விஷயம்! எல்லாருக்கும் அந்த பாக்கியம் வாய்ச்சுடுமா என்ன. எங்கக்கா பையன் எழுத்தாளனாக்கும்னு பெருமைப்பட்டுக்க மாட்டேனா நான்? 

சைகையால் அருகில் அழைத்து, வலது கையால் தன் உடம்போடு இறுக்கிக்கொண்டார். 

ஒனக்கே ஒனக்குன்னு பிரத்தியேக லாங்வேஜ் உருவாகற வரைக்கும் எழுதிண்டே இருக்கணும். ஆனா, பப்ளிஷ் பண்ணக் கூடாது. நீ லாசரா, குப ராஜகோபாலன்லாம் படிச்சிருக்கியோ?...

இல்லையென்று தலையாட்டினேன். கல்கி தேவன் சாண்டில்யன் சுஜாதா என்று பெயர்கள் எனக்குள் ஓடின. அவற்றை மாமாவிடம் சொல்ல நா எழவில்லை. 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

...ஒண்ணு இந்தக் கோடின்னா, மத்தது அந்தக் கோடி. ஒவ்வொரு சொல்லையும் இழைச்சு இழைச்சு எழுதுவார் இவர். அவரானா, ஃப்ரெண்டுக்கு எழுதற லெட்டர் மாதிரி நேரடியா எளிமையா எழுதுவார். கனத்த சொல் ஒண்ணுகூட இருக்காது. அவாள மாதிரி அபூர்வமான ரைட்டர்ஸ் கொஞ்சப் பேரு இருக்கா. அவாளையெல்லாம் நெறையாப் படி. என்ன?

அன்று சாயங்காலம் என்னை சர்வோதய இலக்கியப் பண்ணைக்கு அழைத்துச் சென்றார். அசோகமித்திரனின் ’பதினெட்டாவது அட்சக்கோடு’ம் கி ராஜநாராயணனின் ’வேட்டி’ தொகுப்பும் வாங்கினார்.

வீட்டுக்கு வந்ததும், இரண்டையும் என் கையில் கொடுத்தார். தமக்காக வாங்கியிருக்கிறார் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன், அதுவரை. இரண்டையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். மாமாவின் ஸ்டைலான ஆங்கிலக் கையெழுத்து மட்டும் லேசாக மங்கியிருக்கிறது:

வருங்கால எழுத்தாளரும், என் பிரிய மருமானுமான ஸ்ரீமான் க்ருஷ்ணனுக்கு, ஒரு எளிய வாசகனாக, சம்பந்தமூர்த்தி மாமா/ 29 10 1980.

ஆமாம், ஆங்கிலத்தில் ’ஸ்ரீமான்’ என்றே எழுதியிருந்தார்!

***

வ்வளவு சொன்ன பிறகு, மூன்றாவதாக ஒரு காரணத்தையும் சொல்லிவிடுகிறேன். 2015 ஜனவரியில், டெல்லியில் அவரைக் கடைசியாகப் பார்த்துவிட்டுத் திரும்பினேன். டிசம்பர் இறுதியில் இறந்துபோனார். இன்னும் ஒரு மூன்று மாதம் மாதம் போயிருந்தால் தொண்ணூற்றாறு பிறந்திருக்கும்… 

இந்த ஆண்டு ஏப்ரல் பிறந்த அன்று எனக்கு ஒரு புதிர் போட்டாள் பத்மினி. நானுமே உல்லாசமான மனநிலையில்தான் இருந்தேன். கண்ணுக்குத் தெரியாத வைரஸைப் பார்த்து உலகமே மரணபயத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது சில்லறைச் சண்டைகளுக்கெல்லாம் ஏதாவது பெறுமானம் உண்டா என்று வெளிப்படையாகப் பேசிக்கொள்ளாமலே நாங்கள் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டிருந்தோம். வீட்டின் சூழலில் அபூர்வமான அமைதி நிலவியது. குழந்தைகள் இருவரும் அவரவர் ஊரில், வீட்டை விட்டே வெளியில் வர முடியாத நிலையில் இருந்தனர்.

மணமான புதிதில் இருந்த அதே அளவு காதல் பரஸ்பரம் ஊறுவதாக நினைத்துக்கொண்டோம் – அதை ஓரிருமுறை சொல்லிக்கொள்ளவும் செய்தோம். ’முத்தத்தில் உண்டோடி உன் முத்தம் என் முத்தம்’ என்று ஒரு அமர வரியை என் வாலிபப் பிராயத்தில் வாசித்திருக்கிறேன். இன்னொரு வரியையும் சேர்த்துக்கொள்ளலாம்: ’உண்டோடி இள முத்தம் கிழ முத்தம்…’

இந்த வருஷம் என்ன விசேஷம்னு சொல்லுங்கோ பாப்பம்! நானாச் சொல்ல மாட்டேன். எங்கே, நீங்க நெஜமாவே கெட்டிக்காரர்தானான்னு பாத்துடலாம்…!!

பகல் முழுக்க மண்டையைக் குடைந்துகொண்டேன். ம்ஹும். ஒன்றும் வேலைக்காகவில்லை. ராத்திரி படுக்கப்போனபோது, தாள மாட்டாமல், கேட்டேன்:

நாள்பூரா யோசிச்சும் ஒண்ணும் பிடிபடலயேம்மா. 

இதெ எதிர்பாக்கலையே! உங்ககிட்டே எவ்வளவு பிரியமா இருந்தார் அந்த மனுஷன்?!

குழப்பம் இன்னும் ஜாஸ்தியானது.

சரி விடுங்கோ. நானே சொல்லிடறேன். தூக்கம் கெட்டுறப் போறது…! சம்பந்த மூர்த்தி மாமாவுக்கு நூற்றாண்டுப்பா இது!!

ஆஹா. எனக்கு எப்படி மறந்தது! 

ஆனால், அவள் ஞாபகப்படுத்திய பிறகுதான் தூக்கம் நிஜமாகவே கெட்டது. பக்கத்தில் அவள் நிச்சிந்தையாக உறங்கத் தலைப்பட்டுவிட, நான் என் பால்ய நாட்களுக்குள் புகுந்து புறப்படுகிற மாதிரி ஆகிவிட்டது.

மறுநாள் காலை, பாரதியின் வரிகளை வைத்துப் பிள்ளையார் சுழிபோட்டேன்…

***

ன்னைப் பற்றியும் மாமாவைப் பற்றியும் நிறையச் சொல்லிவிட்டேன் என்று தோன்றுகிறது. ஆனால், நாங்கள் இருவருமே இந்த நூலைப் பொறுத்தவரை ஆறாவது விரல்கள்தான். கட்டைவிரலைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் இதையெல்லாம் சொல்லித் தீர்த்துவிடலாம் என்று நினைத்தேன்… 

-தொடரும் 

 
[1] என்னைப் பற்றிய புகழ்மொழிகளை இங்கே எழுதத் தயக்கமாயும் கூச்சமாயும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், பேசுபொருளின் மையவோட்டத்துக்குத் தொடர்புள்ளது என்று கருதியே பதிவு செய்திருக்கிறேன்.

[2] மைல்கல்லான படைப்பு ஒன்று வெளியாகிவிட்டால் அதன் தாக்கம் லேசில் குறையாது. உதாரணமாக, தமிழில் மட்டுமல்ல, இந்திய மொழிகள் எதிலும் எழுதப்பட்டுத் தமிழுக்கு வருகிற,  இசையைக் களமாகக் கொண்ட நாவல் எதுவானாலும், தமிழ் வாசக மனம் ’மோகமுள்’ளுடன் ஒப்பிட்டுப் பார்க்கத்தானே செய்யும்? ’ஜே ஜே: சில குறிப்புகள்’ இன்னொரு உதாரணம். அதன் வருகைக்குப் பிறகு, எந்த நாவலில் எழுத்தாளர்கள் பற்றி வந்தாலும், நிஜத்தில் உள்ளவர்களுடன் இணைத்துப் பார்த்து இன்னார் என்று கண்டுபிடிக்க முனையத்தானே செய்கிறோம். புனைகதைகளுக்கு மட்டுமில்லை; வாழ்க்கை வரலாறுகளுக்கும் இதே நடைமுறைதான். சுயசரிதம் என்ற மாத்திரத்தில் மகத்தான அளவீடாக ‘என் சரித்திரம்’ வந்து நின்றுவிடாது?

ஆனால், ஒன்று உறுதியாகச் சொல்வேன்: ஏற்கெனவே புனைபெயர்களில் எழுதும் இந்த இருவருக்கும் நானும் தலைக்கொன்றாகப் புனைபெயர் சூட்டியிருக்கிறேன். ஆகவே, நீங்கள் ஊகிக்கும் எழுத்தாளர்கள் அல்ல இவர்கள். அதற்காக,  கற்பனைப் பாத்திரங்கள் என்றும் நினைத்துவிட வேண்டாம்!

[3] இந்த நபர் பற்றி, பின்னொரு சமயமும் என்னிடம்  சொல்லியிருக்கிறான்: ரிஷிகேசத்தில், கையில் திருவோடுகூட இல்லாமல் சாவகாசமாக வெறித்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சாமியார், மேற்படி வகுப்புத் தோழனேதானாம். அடையாளம் கண்டு இவன் அணுகி விசாரித்திருக்கிறான்.  முதலில் ஏதோ கவனத்தில் ஆமோதித்தவன் சடாரென்று சுதாரித்து வேறு ஒரு பாஷையில் மறுப்பான குரலில் பேசி விலகிப் போய்விட்டானாம். உத்தரப் பிரதேசத்தின் உட்பகுதியில் பழங்குடிகள் பேசும் ஏதோ மொழியின் சாயலில் ஒலித்தது அது என்றான் பாலன். அதன் பெயரைக்கூடச் சொன்னான்; எனக்குத்தான் மறந்துவிட்டது. ஆனால், அவன் சொன்ன இன்னொன்று பசுமையாக நினைவிருக்கிறது:

ஆனா, அந்தக் கண்ணுலெ முதல்லெ இருந்த ஆச்சரியம் பத்தி எனக்கு சந்தேகமேயில்லடா.  அவன் அப்பிடி நடந்துக்கிட்டதுலெயும் ஆச்சிரியம் ஏதுமில்லே. அவந்தான் வேணாம்னு விட்டுட்டு வந்துருக்கானே. அதே ஒலகத்திலிருந்து ஒரு ஜீவராசி எதுக்குத் திரும்பத் தன்கிட்டெ வரணும்னு நினைச்சிருக்கலாம். கையிலெ கொஞ்சம் பணம் குடுக்கலாமான்னு ஒரு நிமிஷம் தோணுச்சு. அப்பறம், ரெண்டாவது தப்பையும் செய்ய வேணாம்னு விட்டுட்டேன்.

நான் பாலகிருஷ்ணனாக மாறி, எனக்கு நேர்ந்த சம்பவமாக அதை உருவகித்து, ஒரு குறுங்கதை எழுதியிருக்கிறேன்!