சிறுகதை

4.0k படித்தவர்கள்
11 கருத்துகள்

ந்தன் பேசிக்கொண்டே இருந்தான். பாதி வார்த்தைகள் அவனுள்ளே புதைந்து போயின. சாலை விபத்தால் பின்தலையில் அடிபட்டு அவன் தேறிவரும் இந்நாட்களில் அவனுடன் வாக்குவாதம் செய்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. அவன் சொல்வதையெல்லாம் கேட்கவும் முடியவில்லை. ‘பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் இப்போதே கிளம்ப வேண்டும்’ என்கிறான்.

“ரஞ்சனி... ரஞ்சனி… சுருக்கக் கெளம்பணும்.”

“சோறு திங்காம கொள்ளாம… கடங்கொடுத்தவனாட்டம் காலங்காத்தால போய் நிக்கணுமா?.”

“உனக்கெல்லாம்… வாய் பெருத்துப் போச்சு பிள்ள… இரு இரு…” என்ற அவன் குரல் செருப்பு இழுபடும் ஓசையுடன் தெருவில் நடந்து தேய்ந்து மறைந்தது.

வாசல் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கும் அத்தை மெதுவாக, “ரெண்டு நாள் போகட்டும்… அவசரமா அங்க ஓடி என்ன பண்ணப்போறான்… மனுசனா இருந்தா சொல்லறது வெளங்கும்… எந்தப் பொழுதுல தரிச்சதோ இந்தக் குடும்பத்தக் கெடுக்க” என்று புலம்பிக் கொண்டிருந்தாள். சோற்றை அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு வேகப்போட்டிருந்த புளிச்சைக் கீரையை வடித்தேன். வீடெல்லாம் மணம் சூழ்ந்து கொண்டது.

அத்தை எப்போதும் இத்தனை மெதுவாகப் பேசுவதும், நடந்து கொள்வதும்தான் இத்தனை சிக்கல்களுக்கும் காரணம். அவன் இரவுநேரங்களில் வீட்டிற்குத் தாமதமாக வரத் தொடங்கிய நாட்களில் அல்லது பழக்கவழக்கங்களில் மாறுபாடு தெரியும் நாட்களில் மெதுவாகத்தான் பேசுவாள். ‘இதெல்லாம் வேணாம் தம்பி’ என்பாள். யானைக்கு சிறு கோல் போதும், ஆனால், மதம் பிடித்துள்ளதற்கு அதை வைத்து என்ன செய்வது?

கேரளாவின் தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்த திருமணத்திற்கு முன்பான வாழ்க்கை எத்தனை குளிர்ச்சியாக சத்தமில்லாததாக இருந்தது. பள்ளிப் படிப்பிற்குப் பின் மூன்று ஆண்டுகள் வேலைக்குச் செல்வதும், படம் பார்ப்பதும், விடுமுறை என்றால் நல்ல சாப்பாடு சாப்பிட்டு உறங்கி எழுந்து, பூக்களைக் கட்டி தலைநிறைய வைத்துக்கொள்வதும் என எத்தனை மகிழ்ச்சியான வாழ்க்கை. அங்கே அப்படியே இருந்திருக்கலாம்.

இந்த சூடுபறக்கும் வெயிலில் வறண்ட காட்டின் பக்கத்தில் மொட்டைப்பாறைகள் நிறைந்த இந்தப் பட்டியில் அடைபட விதியிருக்கையில் என்ன செய்வது? என்ன செய்வது என்பதற்கு அடுத்ததாய் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒன்றரை மணிநேரப் பயணத்தில் இருக்கும் பங்காளியின் வீட்டிற்கு அழைக்கிறான்.

தனியாகச் சென்றால் ஒருபைசா கிடைக்காது என்று என்னையும் இழுத்துச் செல்லப் பார்க்கிறான். ஒரு வாரமாகப் பாளையத்திற்குச் செல்ல வேண்டும் என்று இரவும் பகலும் சொல்லிக் கொண்டிக்கிறான். மறுப்பதைவிட சென்றுவந்துவிட்டால் தொல்லை ஒழியும்.

பங்காளிகள் அவர்கள் தாத்தா காலத்தில் இந்த வறட்டு கொத்தம்பட்டியிலிருந்து பாளையத்திற்குப் பிழைக்கச் சென்றவர்கள். இங்கிருக்கும் அவர்களின் வீட்டுமனையில் வீடு கட்டிக்கொள்ள சொன்னார்கள். அதையும் இவன் விற்றுத் தீர்த்தது இன்னும் அவர்களுக்குத் தெரியாது.

கையில் சுத்தமாகக் காசில்லை. மருத்துவமனை செலவுபார்த்து கந்தனைக் காப்பாற்றிக் கொடுத்த பின் என் சொந்தபந்தங்கள் கேரளாவிற்கு சென்று மாதமாகிவிட்டது. அவர்கள் வாங்கிப்போட்ட சாமான்கள் தீர்ந்துவிட்டன. நியாயவிலைக்கடை கொடுக்கும் பொருட்களால் அன்றாடத்தின் பாடு தெரியவில்லை. பசியுடன் ஒரு நாள் போராடினால் அனைத்தும் செத்துப்போகும்.

வெங்காயம் வதக்கி கொட்டி மத்தால் கடையும்போதே பிள்ளைகள் தட்டுடன் வந்து உட்கார்ந்து கொண்டன. பயல் மூச்சை ஆழ இழுத்துச் சிரிக்கிறான். பிள்ளைகள் இரண்டும் சுடச்சுட சோற்றையும், கடைந்த கீரையையும் போட்டியிட்டுக் கொண்டு தின்றன.

ஆட்டுக்குட்டிகளைப் பிடித்துக்கொண்டு பிள்ளைகள் ஊருக்கு வெளியே நடந்தன. ஏழு வயதும் ஒன்பது வயதுமான பிள்ளைகளை மனசில்லாமல் அனுப்ப வேண்டியிருக்கிறது. ஊர் எல்லையிலேயே ஓரமாக மேய்த்துவிட்டு திரும்பிவிடுவார்கள். கொரோனா பரவுது பரவுது என்று பள்ளிக்கூடம் சாத்திக்கிடக்கிறதே தவிர ஊரில் அனைத்தும் எப்போதும்போலவே நடக்கின்றன.

வண்டியில் ஏறி அமரும்போது அத்தை முகத்தைப் பார்க்காமல் குனிந்து கொண்டேன். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வறண்ட புலிவலம் காட்டுப்பாதையில் வண்டி சென்றுகொண்டிருந்தது. அனல் என வெயில். இவன் எங்காவது மயக்கம் வந்து விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இடதுபுறம் கிளைத்த குறுக்குச் சாலையில் வண்டி புகுந்தது. தூரத்துப்பார்வைக்கு திருவெள்ளறை மொட்டைக் கோபுரம் தெரிந்தது.

‘பெருமாளே… என்ன செய்யட்டும். எங்கூட இருக்க மாட்டியா? எனக்கு இத்தன கஷ்டம் போதாதுன்னு நெனக்கிறியா? மனசு குன்னிப்போகுதுய்யா. யாருகிட்ட சொல்றது. சொல்றதுக்குன்னு இருக்கறவனே பங்கம் பண்றானே’ என்று மனம் பொங்கி எழுந்தது. சேலை முந்தானையை வாயில் வைத்து அழுத்திக்கொண்டேன். ‘சொந்தபந்தக்காரங்க வீட்டுக்குப் போறதுன்னா நல்லா வாழற காலத்துல போகணும்.’

கண்ணீரைக் கட்டுப்படுத்த பற்களை இறுகிக்கொண்டேன். நெஞ்சை அடைத்து உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த சிறிய பர்சில் வழித்துணைக்கு ஐம்பது ரூபாய் இருந்தது. பங்காளி வீட்டுப் பெண்ணின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொண்டு வந்த அன்று இவனை வீட்டிற்குள் பூட்டி வைத்திருந்தேன். வந்தவர்களை உள்ளே அழைக்கத் திறந்தவுடன் கடை தேடி ஓடிவிட்டான். திருமணத்திற்கும் செல்லவில்லை.

எங்கள் திருமணத்தில் பாளையத்துக்காரர்தான் இவனுக்குத் தந்தை இடத்திலிருந்து சடங்கு செய்து, விருந்திற்கு வீட்டிற்கு அழைத்து புடவை சட்டை வாங்கிக்கொடுத்து, பணம் வைத்துக் கொடுத்தார். எப்படி அவர் முகத்தில், அந்த அத்தை முகத்தில் விழிப்பது. 

முருகூர் பாதையில் வண்டி ஏறியதும் வேகமெடுத்தது. அவனுக்கு வியர்ப்பதைப் பார்க்க பதற்றமாக இருந்தது. இவன் பிழைத்து வந்தது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. பக்கவாட்டில் திரும்பினாள். பின்மண்டையில் தழும்பு தனியாகத் தெரிந்தது. இவன் அப்பா இல்லாத குடும்பத்தில் பொறுப்பான பையன். கொத்தனார் வேலைசெய்து சம்பாதித்து தானே வீடு கட்டியவன் என்ற ஒரு தகுதியால், தூரத்துச் சொந்தம் என்ற நம்பிக்கையால் இவன் பெண்கேட்டு வந்தவுடன் அப்பா கட்டி வைத்துவிட்டார்.

திருமணத்திற்குப் பிறகு தெருவில், ஊரில் அவனுக்கென்ற இடம் கிடைத்து நான்கு பேர் மதிக்கத் தொடங்கியதுதான் அவனைக் கீழே தள்ளியது. கைகளில் பணம் புழங்கியதும் நண்பர்கள் சேர்ந்து கொண்டார்கள். அந்த நாட்களில் இவனிடம் அத்தை, மாமாவைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

“எல்லாரும்தான் குடிக்கிறாங்க தம்பி… ஆனா, உங்கய்யா சட்டுன்னு அதுக்குள்ளே விழுந்துட்டார். மத்தவங்க மாதிரி தாக்குபிடிக்க முடியாம நெதமும் குடிச்சாரு. அவங்க கூட்டாளிகளே என்னிட்ட வந்து இந்த மாதிரி பெருங்குடியன இப்பதான் பாக்கறம்னாங்க… உனக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்கு… அய்யா இல்லாம நீ இந்தக் குடும்பத்தை இம்புட்டு தூரம் கொண்டாந்துட்ட… நீயே மிதிச்சு அழிச்சிறாத.”

“வூட்டுக்குள்ளையே ஒக்காந்திருந்தா ஒலகம் தெரியுமா? நேத்து பெறந்த பயலெல்லாம் அங்கதான் நிக்கிறான்… நான் சம்பாதிக்கிறேன்… நாலு பேருகிட்ட பழக்கம் வேணும். அதுவுமில்லாம மனுசனுக்கு எத்தனை கஷ்டம். ராத்திரி படுத்தா தூக்கம் கூட வர மாட்டிக்குது.”

குரலை உயர்த்திப் பேச முடியாத என்னையும் அத்தையையும் மிரட்டி மேலும் பேசாமலாக்கினான். அதை மீறி ஏதாவது சொன்னால் இரவு வீதியில் நின்று கத்தவும், சாப்பாட்டுத் தட்டை எடுத்து அடிக்கவும், அலைபேசியில் அழைத்து ஒரு மணி நேரம் சம்பந்தமில்லாத கதைகளை பேசி வம்பிழுத்து இருவரின் நிம்மதியையும் வேருடன் பிடுங்கி வீசினான். பிள்ளைகளுக்கும் அந்தப் பதற்றம் முகத்தில் ஒட்டிக்கொண்டது. இரவு கதவு தட்டும் ஓசை கேட்டதும் இரண்டும் குறுகிப் படுத்துக்கொள்கின்றன. திண்ணையில் கிடக்கும் அத்தை எப்போது தூங்குவாள் என்று தெரியவில்லை.

அத்தையின் விதியை இந்த முள்காட்டின் முள்ளைக் கொண்டே சிதைத்துவிட்டான் அந்தச் சித்திரகுப்தன். ‘எனக்கு என்ன எழுதி இருக்கோ? ஆண்டுக்கு ஆண்டு சித்திரா பௌர்ணமி விரதம் இருக்கும் அத்தைக்கு இறங்கிவர மனதில்லாத சித்திரகுப்தனோட கணக்குவழக்கு என்ன மாதிரியோ? இந்த சித்திரைக்கு அதையெல்லாம் செய்யக் கூடாது.‘ அத்தை, ‘பரம்பரை பரம்பரையாக செய்வது‘ என்பாள். ‘என்னவாயிருந்தா என்ன? நம்ம செய்யறத செஞ்சுடணும்’ என்று புலம்புவாள். 

மனுசர்கிட்டவும் சாமிங்கக்கிட்டவும் வைக்கிற பாசமும், செய்யற சேவகமும் தண்ணீருல எழுதுன எழுத்துன்னு அவ்வா சொல்லும். நெசந்தான்… இவன் பேச்சையும் சிரிப்பையும் பார்வையையும், பார்த்தும் கேட்டும் வேலைக்காரிகணக்கா எத்தனை எத்தனை. கஷ்டமாமே… தூக்கம் வரல்லன்னு குடிக்கறானாமே… இத்தனையும் போச்சே நான் என்ன செய்யறது.?

இவன்தான் இப்படின்னா… அஞ்சு தலை நாகத்து மடியில தலைசாய, வூட்டுக்காரி மடியில காலசற படுத்திருக்கற வீரசூரனுக்கும் புரியல. எல்லாவனும் ஒரே வார்ப்புல செஞ்ச மட்டிங்க. இந்த சாமிகளெல்லாம் இல்லாவிட்டால்கூட நிம்மதியாக இருந்துவிடலாம். யாருமில்லை, நம்மளை நாமே பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் என்ற தைரியமாவது வரும். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

பொத்தி பொத்தி வளர்த்து இந்த மாதிரி புருசன் கையில் கொடுத்துவிட்டு தைரியமா இரு இரு என்றால் திடீரென்று குதித்து வருமா? இவனைப் போல குடித்துவிட்டு வந்தால் ஒருவேளை பேசலாம். இவனுக்கு என்று என்னை ஏன் எழுத வேண்டும். எவளாவது ரெக்கைமாறி வந்து இவனைப் புடைத்துப் போட்டிருந்தால் இத்தனை ஆட மாட்டான். குளிர்க்காற்று முகத்தில் பட்டு நினைவைக் கலைத்தது.

கீழப்பட்டி சாலையில் வண்டி சரசரவென்று ஓடியது. இருபுறம் புளியமரங்கள் கிளைவிரிந்து எதிர்எதிர் கிளைகள் தொட்டுக்கொண்டு நிழல் விரிக்கும் பாதை. அவள் மூச்சை இழுத்துவிட்டாள். கூனிட்டு அமர்ந்திருந்தவள் உடல் நிலைகொண்டதும் நிமிர்ந்தாள். முதுகு விண்ணென்று சொடுக்கி பின் மெதுவாக வலி குறையத் தொடங்கியது. சங்கப்பட்டிவரை ஓர் ஆள்கூட எதிர்ப்படவில்லை. 

உள்ளுக்குள்ளே பேசிப் பேசி மனசு மாய்வதை இவனிடம்தான் சொல்ல முடியும். இவன் எங்கோ சென்றுவிட்டான். பக்கத்தில் இருப்பவன் என்னுள் இருப்பவன் அல்ல. ஒரே உலையில் கொதித்த சோற்றைத் தின்றுகொண்டு ஒரே வீட்டில் இருப்பவன். கல்யாணமாகி அனைவரும் விட்டுச் சென்றபோது என்னுடன் சேர்ந்தழுத அவனா இவன். அவன் எங்கு போய் தொலைந்தானோ. அந்தத் தூரத்துக் கரட்டிலோ, புலிவலக்காட்டைப் போல மனசுக்குத் தெரியாத இடத்திலோ, எங்கோ சென்றுவிட்டான். எங்கோ ஒருவகையாய் தளும்பித் தவித்த மனதை முறுக்கித் திருப்பிக் கண் முன்னால் நகரும் காட்டுமேட்டில் விட்டேன். 

புளியமரங்களைத் தவிர பொட்டல்வெளி விரிந்து கானல் காட்டியது. ஆடுகள் கரட்டுச்செடிகளின் துளித் துளியான இலைகளைச் சிறு வாயால் அவசர அவசரமாகப் பறிக்கின்றன. “ஆட்டின் வாய் அசைவில் சாமி இருக்கு” என்று பக்கத்து வீட்டு வெள்ளையம்மா கிளவி சொல்லும். இந்த வயதிலும் இரண்டு ஆடுகளை வளர்க்கிறது. “அதுங்க மேயறப்ப பாக்கணும். மனசு தவிச்சுப் போகும். அதைப் பாத்துதான் எழவு கறி திங்கறத தள்ளிவச்சேன்” என்று சொல்லும். 

எனக்குத்தான் எதைப் பார்த்தாலும் யாரோ ஒருத்தர் மனசுக்குள் வருகிறார்கள். எதையாவது பேசுகிறார்கள். இந்தப் பயலுக்கு யாரும் மனசுக்குள் வர மாட்டார்களா? என்னத்தையாவது சொல்லி பிள்ளைங்க பசியையும், என் மனசையும் காப்பாத்தி கரையேத்தி விட்ற மாட்டாங்களா?

மரநிழல் கடந்து வெயில் சுட்டதும் நினைவு கலைந்து பாதையைப் பார்த்தேன்.

முருகூர் மேட்டுச் சாலையில் வண்டி ஏறி வேகமெடுத்தது. ‘பெருமாளே…’ மனது இறுக்கிப்பிடித்தது. கழுத்திற்குக் கீழே நீவி விட்டுக் கொண்டாள். சுடுகாற்றில் நுழைந்து சென்று கொண்டிருந்தார்கள்.

பாளையம் நெருங்கிக்கொண்டிருந்தது. வயிற்றுக்குள் எரிந்தது. வியர்த்த கைகளைத் துடைத்துக்கொண்டாள். பாலகிருஷ்ணம்பட்டி என்ற துருப்பிடித்த பெயர்ப்பலகையைக் கடப்பதற்குள் நெல்வயல்கள் பசேலென்று தலையாட்டி விரிந்தன.

“நீ எதுவும் பேச வேணாம்…”

“நான் என்னைக்குப் பேசியிருக்கேன்… இன்னிக்கு உங்க சின்னய்யா வூட்டுல வந்தா பேசப்போறேன்.”

“வாய நீட்டாத… கொன்னு போட்டுருவேன்…”

வந்த இடத்தில் எதற்கு வம்பு என்று அமைதியானாள். வாசல் கோலத்தின் மீது வண்டியை நிறுத்தினான். இரும்புக்கதவு சாத்தியிருந்தது. அவன் திறந்து உள்ளே சென்றான். தலையைக் குனிந்தபடி பின்னால் சென்றாள்.

முன்நடையில் நின்றிருந்த மாமா சிரித்தபடி வரவேற்றார். பின்னால் அத்தையும் பெரியத்தையும் பிள்ளைகளுமாக வீடு கும்பலாகக் கூடினார்கள். ‘பெருமாளே… என்ன செய்வேன்‘ என்பது மட்டும் உள்ளுக்குள் இருந்தது.

நாற்காலியில் குறுகி அமர்ந்தேன். அவன் சொந்த வீட்டில் அமர்வதைப் போல சாவகாசமாக அமர்ந்தான்.

பெரியத்தை முறுக்கும் அதிரசமும் வைத்தாள். பயலுக்குப் பிடிக்கும். பெரிய பிள்ளை எலுமிச்சை பிழிந்து சர்க்கரையிட்டுக் கொடுத்தாள். அதைக் குடித்ததும் வயிறு ஆசுவாசமானது.

“ய்யா… ஐயாயிரம் காசு வேணும். அடிபட்ட செலவு ரொம்ப ஆயிருச்சு…” என்று கனத்த குரலில் கந்தன் நிமிர்ந்து கேட்டான். இவள் யாரையும் பார்க்காமல் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கந்தன் மீண்டும் தானே பேசத் தொடங்கினான்.

“நீங்க குடுத்த வீட்டுமனைய வச்சு காசு வாங்கியிருக்கு… அடிபட்டதுக்கு செலவு அதிகங்கய்யா. கையெழுத்து போட நீங்களும் பயல்களும் வரணும்.”

முட்டிக்காலில் வலதுகையை வைத்து அழுத்திக்கொண்டேன். இரண்டு மாதங்களாகத்தான் இந்தப் பிரச்சினை. திடீரென்று உடல் நடுங்குவது, மெதுவாக சரியாகி விடுவதுமாக. மாமா சற்றுநேரம் எதுவும் பேசவில்லை. 

பின் குரலை செறுமிக் கொண்டு நிதானமாக, “நீ நடந்துக்கறது சரியில்ல கந்தா… பழக்கவழக்கம் மாறி கண்ட நேரத்துல ரோட்டுல விழுந்து எல்லாரோட நிம்மதியவும் கெடுக்கற. நீயாச்சும் பூர்வீக எடத்துல பிள்ளைக்குட்டியோட இருப்பன்னு நெனச்சுக் குடுத்தோம். எத்தனை தலைமுறையா நம்மகிட்ட இருந்த எடம்… வடக்கு நாட்டுலருந்து பொழப்பு தேடி வந்து காட்டை அழிச்சு உண்டாக்குன எடமுன்னு தாத்தா சொல்லுவாங்க” என்றார்.

எழுந்து சென்று விட்டால் பரவாயில்லை என்று என்னை என் மனம் உந்தித்தள்ளியது. தரையில் கண்களை ஓட்டினேன். சுற்றி எத்தனை பாதங்கள். யாரும் பேசவில்லை.

“இப்படியொரு பிள்ளையக் கட்டி… ரெண்டு மக்களப் பெத்து நல்லா வாழணுன்னு எண்ணமில்லையே…” என்ற அத்தையை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

கைகளில் இருந்த பர்சை இறுகப் பிடித்துக்கொண்டேன். ‘பெருமாளே, இவன் புது குணம் தெரியாம பேசுறாங்களே’ என்று என் மனம் பதறியது.

அவ்வா, “சரிப்பா, சாப்பிடுங்க…” என்றார்.

“இல்ல… வேணாவ்வா…” என்ற கந்தன் வேட்டி முனையால் கழுத்து வியர்வையைத் துடைத்தான்.

அவனுடைய ஒவ்வொரு சொல்லும் வெளிவருவதற்கு முன்னால் என் வயிறு அதிர்ந்து துடித்தது.

“போகணுங்கய்யா… நேரமாகுது. மாத்திரை போடலன்னா தலை வலிக்கும். இன்னும் ஆறு மாசமாச்சும் மாத்திரை போடணுமாம்” என்று அவசரப்பட்டான்.

“கையில காசில்லை கந்தா… ஏடிஎம்ல எடுக்கணும்…” என்று மாமா மெதுவாகச் சொன்னார்.

இவனை அவர்கள் நம்பவில்லை. எழுந்து கொள்ளலாம் என்று உடலை அசைத்தேன்.

“சரிங்கய்யா… பாப்பாகிட்ட கைச்செலவுக்குக் கொஞ்சம் குடுங்க… நான் கெளம்பறேன்” என்று விடுவிடுவென்று வெளியேறினான்.

‘பெருமாளே… என்ன செய்யறது?’ என்று நினைத்தபடி நான் எழுந்து கொண்டேன்.

“நில்லும்மா…” என்ற மாமா உள்ளே சென்று இரண்டு ஐநூறு ரூபாய்த் தாள்களை எடுத்து வந்து என் கைகளில் வைத்தார். என் கை சில்லென்று ஆகியிருந்தது. 

“நாணயம் இருந்தா… எவ்வளவும் செய்யலாம். மனையையும் வித்துட்டானே” என்றார்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

நான் வெளியே வரும்போது குடும்பமே வாசலுக்கு வந்தது. இவர்களை யார் இப்படி வரச்சொன்னது என்று எரிச்சலாக இருந்தது. அவன் இரண்டு வீடுதள்ளி வண்டியில் அமர்ந்திருந்தான். 

எங்களுக்குத் திருமணமான ஐந்தாம் நாள் இங்கு விருந்து முடிந்ததும் ஊருக்குக் கிளம்பும்போது இதேபோல் அனைவரும் நின்று சிரித்து வழியனுப்பினார்கள். இதே வண்டியின் பின்னால் அமர்ந்து இவன் தோள்மேல் கை போட்டு கொஞ்சம் தயக்கத்துடன் திரும்பித் தலையாட்டினேன். சிரித்து வைக்கக் கூடாது என்று சிரிப்பை அடக்கி கண்களில் நீர் நிறைந்துவிட்டது.

“பயப்படாத கண்ணு… எம்பேரன் நல்லா பாத்துக்கிடுவான். சூதானமான பய” என்று அவ்வா கரிசனத்துடன் என் தலையைத் தடவியது.

“என்னம்மாச்சுன்னா வீட்டு நம்பருக்கு போன் போடும்மா” என்று மாமா சொன்னார்.

“சின்ன பிள்ள…” என்று சின்னத்தை என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சட்டென்று பெரியத்தை, “நம்ம மட்டும் என்ன முப்பது வயசுலயா கல்யாணம் முடிச்சோம். உங்களுக்காச்சும் இருவத்தி நாலு. எனக்கெல்லாம் பதினேழு முடியல…” என்றபடி, “முந்தனையைப் பறக்கவிடாம நல்லா பிடிச்சுக்கணும்” என்று எடுத்துக்கொடுத்தாள்.

“சீத்தா ப்ராணா தாரக ராமான்னு பெரியவங்க சொல்லுவாங்க. அந்த மாதிரி எப்பவும் இருக்கணும்” என்ற மாமா, படிகளில் நின்று கையாட்டினார்.

“அய்யோ… இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா பாவா? என்ன அது… சீதா ப்ராணா…” என்ற அத்தை, மாமாவிடம் திரும்பினாள்.

“நீ சும்மா இரு…” என்று மாமா சிரித்தார். 

இத்தனை குரல்களுக்கு மத்தியில் பெரியவள் கண்களைப் பார்த்து புன்னகைத்துத் தலையாட்டினாள். 

இப்போதும் பார்க்கிறாள். அவளிடமாவது எதையாச்சும் பேசலாம். இந்தக் கும்பலில் ஒன்றும் செய்ய முடியாது. விருந்துக்கென்று வந்த அன்று ‘அண்ணி, அண்ணி’ என்று பின்னாலேயே திரிந்தாள். அண்ணனிடம் பேசும்போது பாகாகும் வெல்லமாய் அத்தனை இளக்கம். கொத்தம்பட்டிக்குத் திருவிழாவிற்கு வந்தபோதும் கூடவே வேலை செய்து கொண்டிருந்தாள். இன்று எந்தப் பேச்சும் இல்லை. பெருமூச்சு சத்தங்கள் மட்டும் பின்னால் கேட்கின்றன.

வண்டியை நோக்கி நடந்தேன். பெரியவள் என் கூடவே நடந்து வருகிறாள்.

“என்னாச்சு அண்ணி. ரொம்ப கஸ்ட்டமா…”

குரலைச் செறுமி கடுமையாக்கிக்கொண்டேன். இயல்பாகவே முகம் சுளித்துக்கொண்டது.

“கஸ்ட்டம் எல்லாருக்கும் உள்ளதுதானே.”

“பயப்படாதீங்கண்ணி… எல்லாம் சரியாப்போயிரும்.”

“அதெல்லாம் பாத்துக்கலாம்.”

“இனிமே அண்ணன் மாறிடுவாரு… பேசறதப் பாத்தா பழைய அண்ணன் திரும்ப வந்துட்டார்ன்னு தோணுச்சு.”

“தாழ்ந்து போயாச்சு… நல்ல காலம் வராமையா போயிரும்.”

“ஆமா அண்ணி.”

என்னைப் போலவே நெற்றியை சுருக்கி உதட்டைக் கடித்துக் கொள்கிறாள். நான் ஏன் இவளிடம் இப்படி விடைத்துக் கொள்கிறேன்?

“சரி… போயிட்டு வரேன். நீ ஒடம்பப் பாத்துக்க” என்று சொல்லும்போது குரல் இயல்பாகவே உயர்ந்து தெளிவாகியது. மனசும் சிலும்பி உதறிக்கொண்டது. இதுவரை கனத்திருந்த என் உடம்பு லேசாகியது. அவள் கையில் இருந்த சிறிய பையை, ‘‘பிள்ளைகளுக்காக’’ என்று கொடுத்தாள். நிமிர்ந்து பார்த்து வாங்கிக்கொண்டேன்.

அவளிடமிருந்து விலகி வண்டியில் அமர்ந்தேன். “அண்ணே…” என்ற அவள் குரலைப் பொருட்படுத்தாமல் வண்டி சீறிக் கிளம்பியது. பிடிமானத்திற்காக எழுந்த கைகளால் அவன் தோளைப் பற்றாமல் திரும்பி கீழே இறங்கிய கை, பிடிமானத்தைத் துழாவியது. அன்று மாமா சொல்லியது நினைவிற்கு வந்தது. 

“சீத்தா ப்ராணா தாரக ராமாங்கறது பயல்களுக்குச் சொல்றது. அசோகவன வைராக்கிய மாதாங்கறது பிள்ளைங்களுக்கும்மா… சின்ன நம்பிக்கையை ஊதி ஊதி இலங்கையை எரிச்சா சீதான்னு பெரியவங்க சொல்லுவாங்க. அனுமன் சும்மா கருவிதான். சிக்கல் யாரு ரூபத்துல வரும்ன்னு யாருக்கும் தெரியாது. குடும்பம் பள்ளத்துல சிக்கறப்ப நாஞ்சொல்றது புரியும்.”

பக்கவாட்டுக் கம்பி தட்டுப்பட்டதும் இறுகப் பிடித்துக்கொண்டேன். வந்த வழியே வண்டி திரும்பியது. இந்த ஊர்தான் எத்தனை குளுமை. நெல்லங்காட்டின் சில்லென்ற காற்றும் சேம்பிலைகள் அசையும் ஓடையின் சலசலவென்ற பேச்சும் பின்னகர்ந்து கொண்டிருந்தன.