அத்தியாயம் 1
வரப்புயர.. ...குடியுயர
1
சொட் சொட்டென்று முற்றத்தில் சாண நீர் விழும் ஓசைதான் சம்முகத்தைத் துயிலெழுப்புகிறது. திக்கென்ற உணர்வுடன் கண் விழித்ததும் தன்னையுமறியாமல் கை குதிகால் புறத்தைத் தடவுகிறது. இரவெல்லாம் விண் விண்ணென்ற குத்துவலி. விடிந்தால் நடக்க முடியுமா என்ற கவலையிலேயே தூக்கம் பிடிக்கவில்லை. இப்போது அவ்வளவாக வலி தெரியவில்லை போலிருக்கிறது.
"எந்திரிச்சிட்டீங்களா? ராவெல்லாம் தூங்கவேயில்ல, இன்னிக்கு எப்படி ஐயா உன்னைக் கூட்டிட்டுப் போவாரு. நீ வாணா அண்ணனைக் கூட்டிட்டுப் போன்னு இப்பதா காந்திகிட்டச் சொன்னேன்..."
"அவன் வீட்டில இருக்கிறானா? ரா எப்ப வந்தான்?"
லட்சுமியின் முகம் சுருங்குகிறது. "எங்கே போயிருப்பான்? சினிமாக்குப் போயிட்டு டைலர் கடயில படுத்திருப்பான். கூட்டனுப்பிச்சா வாரான்."
"அதெல்லாம் யாரையும் கூட்டனுப்ப வாணாம். சுடு தண்ணி வையி. கொஞ்சம் ஒத்தடம் போட்டுக்கிட்டு மெள்ளமா நடந்திடறேன். கடவீதில ஏழு மணிக்குத்தான் பஸ்ஸு வருது?"
லட்சுமி கைச்சின்மியை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் செல்கிறாள்.
பொழுது இன்னும் நன்றாக வெளுக்கவில்லை.
காந்தி அதற்குள் எழுந்து குளித்துவிட்டாள் போலிருக்கிறது.
முகப்பவுடர் வாசனை வருகிறது.
சம்முகம் எழுந்து படுக்கையில் உட்காருகிறார்.
"காந்தி?..."
"என்னப்பா!..."
விரிந்த கூந்தலும் சீப்பும் கையுமாக வெடவெட என்று உயரமாக வரும் அவளைப் பெருமையுடன் அந்த மங்கிய வெளிச்சத்தில் பார்க்கிறார். "சர்ட்டிபிகேட், இண்டர்வ்யூ கடிதாசி எல்லாம் பத்திரமா எடுத்து வச்சிருக்கியாம்மா?"
"ராத்திரியே எடுத்து வச்சிட்டேம்பா..."
"இன்டர்வ்யூ பதினோரு மணிக்குத்தானம்மா?"
"ஆமாம்பா..."
லட்சுமி முட்சுள்ளியை வைத்து அடுப்பில் எரியவிட்டு ஒரு பல்லாயில் ஆவி பறக்கும் சுடு நீரைக் கொண்டு வந்து வைக்கிறாள்.
விளக்கொளியில் காலை நீட்டிப் பார்க்கிறாள். சிவந்து வீங்கி, முகம் முனைப்பு இல்லாமல் இருக்கிறது.
"முள்ளுகிள்ளு குத்திச்சா?..."
"ஒண்ணுந் தெரியல. இன்னிக்கும் நடவுக்கு வாரதுக்கில்ல. இந்தக் காயிதம் ஒரு நாலு நா முன்ன வந்திரிந்திச்சின்னா எல்லாம் ஒழுங்கு பண்ணிக்கலாம்..."
"நாலு நா முன்னவே வந்திருக்கணும். கடித எண் தேதி மூணாந்தேதி. இங்க பதினொண்ணாந்தேதி நமக்குக் கிடச்சிருக்கு. இது இன்னிக்கித் தபால்ல வந்திருந்திச்சின்னாக் கூட ஒண்ணும் புண்ணியமில்ல..."
"நேத்துதா நா புதுக்குடில நம்ம தங்கசாமிட்ட சொல்லிட்டிருந்தேன். நம்ம பொண்ணு கூடத்தான் தொழிற்கல்வி வேணும்னு புதுசா அப்ளிகேசன் போட்டிருக்கு. அதும் எஸ்.எஸ்.எல்.ஸி. படிச்சிட்டு மூணு வருசமா வேலை கிடைக்காம இருக்கு. கணக்குல, அறிவியல்ல, எல்லாம் நல்ல மார்க்கு. உடனே மேல படிக்க வைக்கணும்னு, குடும்பத்தில பையனைப் படிக்க வச்சி இவளையும் அப்ப முடியாம நிறுத்தி வச்சிட்டிருந்தேன். அப்ளிகேசன் போட்டு ஒரு மாசமாகுது. ஒரு தகவலும் தெரியலன்னு சொல்லிட்டிருந்தேன். ராத்திரி வந்தப்புறம் தான் தெரியுது, இங்க தபால் வந்த சங்கதி...
லட்சுமி ஒரு துணியைச் சுடுநீரில் நனைத்துக் காலில் ஒத்தடம் கொடுக்கிறாள்.
"அடுப்பில பானைய வச்சி இட்டிலி மாவை எடுத்து ஊத்தி வை. பையில கட்டி எடுத்திட்டுப் போனா, புட்டுப் போட்டுக்கலாம். நேத்து இதுக்காகவே விளக்கு வச்சி மாவாட்டினேன்."
"போம்மா கட்டிட்டெல்லாம் போக வாணாம்! இங்கியே ரெண்டு தின்னிட்டுப் போகலாம்..."
"பெரி... நாஜுக்கு. தூக்குப் பாத்திரத்தில போட்டு வயர் பையில வச்சிட்டுப் போனா என்னவாம்? கிளப்பிலே போனா காசுதா செலவழியும் வீணா."
"நா ஒண்ணும் வயர்பையெல்லாம் கொண்டிட்டுப் போகப் போறதில்ல!"
சம்முகம் உள்ளூரப் பூரிக்கிறார்.
தாழ்த்தப்பட்ட குலம் என்பதை அவர் தலைமுறையில் எழுச்சியுள்ளதாக்க முனைந்தார்கள். இப்போது அவர் மகள் தொழிற்கல்வி பயிலப் போகிறாள். சேற்றில் உழன்று நாற்று நடும் பின்புலத்தில் இவள் ஒரு தாமரையாக மலரப் போகிறாள்.
"இப்பல்லாம் எலக்ட்ரானிக்ஸ் தாம்ப்பா எல்லாம். அதுக்குத்தான் நல்ல ஸ்கோப். நான் அதையே எடுக்கறதுதான் நல்லதுன்னு, என் ஃப்ரண்ட் சுந்தரி அப்பா கூடச் சொன்னாரு" என்று முகம் ஒளிர நின்றாள்.
இவளுக்கு இந்தப் பள்ளர் குடியில் சிநேகிதர்களில்லை. ரங்கநாதபுரத்திலும், அம்மங் கோயிலிலும் உயர் வகுப்பாரிடையே சிநேகிதிகள்.
அம்சு வாசலுக்குச் சாணம் தெளித்துப் பெருக்கிக் கோலமிட்டுக் கொல்லை சுத்தம் செய்யப் போகிறாள்.
அவர் மெல்ல எழுந்து பின்புறம் ஆற்றுக் கரையோரம் சென்று வருகிறார். பொழுது மைகரைந்த தெளிவாகப் புலர்ந்து விட்டது.
அம்சு தண்ணீர் கொண்டு வந்து தொட்டியை நிரப்புகிறாள். இவள் காந்தியை விட குட்டை. ஆறாவதுக்கு மேல் படிக்கவில்லை. சடங்கு சுற்றி நான்காண்டுகளானாலும் குழந்தைத்தனம் மாறாத பேதமை குடிகொண்ட முகம்.
பின் தாழ்வாரத்தில் இருந்த கோழிக் கூண்டைத் தூக்கி வைத்து பெட்டையையும் ஆறு நோஞ்சான் குஞ்சுகளையும் விடுதலை செய்கிறாள். வெளி முற்றத்தில் மூங்கிற் படலைத் தடுப்புக்குள் அவரை, புடல் விதைத்துக் கொடி வீச எழும்பியிருக்கிறது. முளைக்கீரைப் பாத்தி ஒருபுறம் பசுமையாக இருக்கிறது. கோழியைப் படலைக்கு அப்பால் விரட்டி விட்டு அவள் இன்னொரு புறம் நிற்கும் மரத்துப் போன பசுவை அவிழ்த்து வேறு முனையில் கட்டுகிறாள்.
அப்போது ஆற்றின் கரை மேட்டோடு கையில் உணவுத் தூக்குகளுடன் பெண்கள் நடவுக்குப் போகிறார்கள்.
"அம்சு!..." என்று ஒருத்தி கூவுகிறாள்.
"ஒங்க பங்குல நடவா இன்னிக்கி?"
"தெரில... சாம்பாரு வந்திருப்பாரில்ல?"
"இல்லியே? ஐயனார் கொளத்துல நேத்தே துட்டிக்குப் போயிருக்காவன்னு செவத்தையஞ் சொன்னா?"
பல் துலக்கிக் கொண்டிருந்த சம்முகம் திரும்பிப் பார்க்கிறார்.
"ஆரு...? சாலாச்சியா? என்னம்மா? ஐயனார் கொளத்துல ஆரு போயிட்டா?"
"அதா, குப்பன் - சாம்பாரு சம்பந்தி, நேத்துக் காலமே போயிட்டாராம். சங்கத் தலவரப் பாக்கணும்னு நேத்து மத்தியானமே வந்திருந்தாவ..."
சம்முகத்துக்கு துணுக்கென்று உணர்வு முட்டுகிறது. குப்பன் தான் இவருக்குப் படைத் தலைமைபோல் நம்பகமான தோழன். இவருக்குச் சொந்தமான எட்டு மா நிலம், ஐயர் பண்ணையின் ஆறு ஏகரா பந்தகமாக வந்திருக்கும் துண்டு பூமி, எல்லாவற்றுக்கும் காவலிருந்து, மடைகோலி, மடை அடைத்து, கங்காணம் செய்பவன். உழைப்பாளியான குப்பனுக்கு உழைப்பாளியான மகனும் தலையெடுத்து விட்டான். பெண்கள் மூவரையும் கட்டிக் கொடுத்தாயிற்று. கடைசிக்காரி பஞ்சமியைத்தான் ஐயனார் குளத்தில் கட்டியிருந்தான். அங்கே ஏதோ தகராறு. கையில் ஒரு குழந்தையுடன் அவள் தாய் வீடு வந்து ஐந்தாறு மாதமிருக்கும். புருசன் விலக்கிவிட்டான் என்று தான் சொன்னார்கள். அந்தப் பெண்ணின் மாமியார்க்காரிதான் இறந்து போனாளா? பெண்ணை விலக்கிய பிறகு சாவு வாழ்வு பாத்தியதை இல்லை என்ற மட்டில் விவகாரம் கிளம்பி அவரை மத்தியஸ்தத்துக்கு வந்து தேடியிருப்பார்களோ?
"ஆரு வந்தது?"
"தெரியாது. எங்காம்பிள தேடிகிட்டு வந்து கேட்டாங்கன்னு சொன்னாவ."
சம்முகம் பல் துலக்கிக் கொப்பளித்து முகம் கழுவிக் கொள்கிறார்.
மெள்ளச் சுவரைப் பற்றிக் கொண்டு எழுந்து உள்ளே வருகிறார். நடுவில் இருக்கும் பகுதிதான் புழங்கும் இடம். ஓரத்தில் மண்குதிர் சாணி மெழுகிப் பளிச்சென்று மஞ்சளும் குங்குமமும் அழியாமல் இருப்பது விவரமாகப் புலனாகாது போனாலும் அந்த மூலை இவருக்கு லட்சுமி மூலை. அதற்கு அருகில் ஓரமாகக் கொடியில் மடித்துப் போட்டிருக்கும் புடவை வேட்டி, துணிகள் கூடை, முறம், சுவரில் மாட்டியிருக்கும் கள்ளிப்பெட்டி அலமாரியில் புத்தகங்கள் எல்லாம் இரண்டு தலைமுறைகளையும் இணைக்கும் சின்னங்கள். அந்த ஓலைக்கூரை வீட்டின் பொக்கிஷமான அறை உள்ளே சென்ற பின்னரே புலப்படுகிறது. பகல் வெளிச்சத்தில் கூட அந்த அறையில் இருட்டு ஆட்சி புரியும். உள்ளே புளி மற்றும் உளுந்து பயறு சேமித்து வைக்கக் கூடிய பானைகள், விதைக் கோட்டைகள், துருப்பிடித்த இரண்டொரு தகர டின்கள் ஆகிய சாமான்களுடன் பழையதாகிப் போன நாகப்பட்டினம் டிரங்குப் பெட்டி ஒன்றும் இருக்கிறது.
சம்முகம் கை ஊன்றி அமர்ந்து கொண்டு, அந்தப் பெட்டியை சாவி கொண்டு திறக்கிறார். அதற்குள்ளிருந்து வெளுத்த சர்ட்டு, ஒரு வெளுத்த வேட்டி ஆகியவற்றை எடுத்து வைக்கிறார். உள்ளே ஓரமாக வைத்த ஞாபகத்துடன் தேடி சிறு பிளாஸ்டிக் பையை எடுத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொண்டிருக்கையில் பையனின் குரல் கேட்கிறது.
"ஐயாவுக்கு உடம்பு நல்லால்ல, நீ கூட்டிட்டுப் போனா என்னடா?"
"அதெல்லாம் முடியாதம்மா! அவரே போகட்டும்."
"ஏ, காந்தி... காந்தி?"
"என்னப்பா?"
அவள் உள்ளே எட்டிப் பார்க்கிறாள்.
பத்து ரூபாய் நோட்டுக்களாகப் பத்தை அவளிடம் எண்ணிக் கொடுக்கிறார்.
"உன் கைப்பையில் வச்சுக்க, பத்திரம். உங்கம்மாளக் கூப்பிடு?"
லட்சுமி இட்லியைத் தட்டுகையில் கொல்லைப் புறத்துத் தாழ்வாரத்தில் தடுத்த அறைக்கதவை உள்ளிருந்து நாகு உடைக்கிறான்.
"அம்சு! கதவைத் திறந்து நாகுவ வெளியே கூட்டிட்டுப் போயிட்டு வா!" என்று சொல்லிக் கொண்டு வந்து எட்டிப் பார்க்கிறாள்.
"இதபாரு, நான் நூறு ரூபா எடுத்திட்டுப் போறேன். இன்னிக்கோட மூங்கித் தோப்புக்குப் பக்கத்திலிருக்கிற பங்குல நடவ முடிச்சிடணும்னு சொன்னான் குப்பன். இதோ எம்பளது ரூபா வச்சிருக்கிறேன். கூலிக்கு எடுத்துக்க. நான் இவ இண்டர்வியூ முடிஞ்சதும் நேரா புதுக்குடி வந்து காலை டாக்டர்கிட்டக் காட்டிட்டு வரலாமின்னிருக்கிறேன். வெளயாட்டுப் போல இன்னிக்கு மூணு நாளாவுது. நேத்தே ரதவீதிக்குப் போய் ஐயரப் பாக்கணும்னு நினைச்சேன். எங்க போக முடியுது?... பறிச்ச நாத்துக்கட்ட எல்லாம் நேத்து வச்சாச்சா, இன்னுமிருக்கா?"
"கெடக்கு. காவாயிலே மாலகட்டில்ல இளுத்திட்டுப் போவணும்?"
"இன்னிக்கி என்னவோ சொல்லிக்கிறாவ, வடிவு வாரானோ இல்லையோ? சாம்பாரு நேத்தே துட்டிக்குப் போயிட்டான். நேத்தே முடிச்சிருக்கணும். மூணு மணிக்கே அல்லாம் கரையேறிப் போயிட்டாளுவ..."
"இந்தத் தொர இன்னிக்கு ஊருக்குப் போறாராமா?"
"அதொண்ணும் நா கேக்கல. காந்தியக் கூட்டிட்டுப் போறியான்னேன். அவுரே போகட்டுமின்னா..."
"அணிப்புள்ள, தென்னம்புள்ளதா..."
முணுமுணுத்துக் கொண்டு பெட்டியைச் சாத்துகிறார்.
பின்புறம் நாகு எதற்கோ ரகளை செய்கிறான். மனதில் இருப்பதை ஆழமாக வெளியிடத் தெரியாததால் கொட்டும் குழம்பைப் போல் குரல் ஒலி சிந்தி ஓடும் நாராசம். காலை நேரத்தில் இந்த ஒலியைக் கேட்டாலே இவருக்கு இப்போதெல்லாம் பொறுமை குலைந்து போகிறது.
"ஏண்டி அந்தப் பயலக் காலங்காத்தால கெளப்பிவிடுறிங்க!"
"இல்லப்பா, கால் கழுவாம உள்ளாற ஓடியாறான், கசம்... தண்ணிய ஊத்தினேன்..."
லட்சுமி சென்று அவனை இழுத்துக் கொண்டு வந்து அடுப்பின் பக்கம் உட்கார்த்திக் கொள்கிறாள். குரல் ஓய்கிறது.
ஒழுங்காக இருந்திருந்தால், ஏரோட்டுவதற்கு ஆளைத் தேட வேண்டாமே? படிப்பு இல்லாத போனாலும், ஒரு ஆள் என்ற வலிமையேனும் இருக்குமே?
எதற்கும் பயனில்லை, ஒரு சுமை. இந்தச் சுமையை அன்று வயிற்றில் மட்டும் சுமக்கவில்லை. கால் நூற்றாண்டாய் இன்னும் சுமக்கிறாள்.
நடுவீட்டில் பாயைப் போட்டுக் கொண்டு படுத்துக் கிடக்கும் தலைமகனைப் பார்த்து முகத்தைச் சுளித்துக் கொண்டு மாடத்திலிருக்கும் சிறு கண்ணாடி பார்த்துத் தலை வாரிக் கொள்கிறார். சாமி கும்பிடுவது வழக்கம் விட்டுப் போனாலும், மரவையிலிருந்து துளி திருநீற்றைப் புருவங்களுக்கிடையில் வைத்துக் கொள்வது விட்டுப் போகவில்லை.
லட்சுமி மிளகாயையும் உப்பையும் அம்மியில் வைத்து நசுக்கித் துவையல் அரைத்துக் கொண்டிருக்கிறாள். நாகு அடுப்படியில் ஒரு நீண்ட குச்சியை வைத்துக் கொளுத்தி வெளியே எரிய விடுகிறான்.
பளாரென்று அவன் முதுகில் ஓர் அறை விழுகிறது.
அவனுடைய அழுகைப் பின்னணியில் அவர் கத்துகிறார்.
"இந்தப் பய ஒரு நா குச்சி கொளுத்திக் கூரையில போட்டுடப் போறான். அவன அடுப்படிலே குந்த வச்சிட்டு ஏன் போறீங்க?"
"காந்தி எங்க? அவளப் பாத்துக்கச் சொல்லிட்டுப் போனேன்?"
இரண்டு இட்டிலியும், சுக்கும் வெல்லமும் போட்ட தேநீரும் அருந்திவிட்டு வெளிக்கிளம்பும் போது, பாட்டி வாயிலில் குந்தியிருக்கிறாள். வலப்புறத்துத் திண்ணைதான் பாட்டி பாட்டன் இருவருக்கும் இருப்பிடம். தேய்த்துப் போட்ட தேங்காய் நாராகக் கூந்தல் பசையிழந்து போயிருக்கிறது. எண்ணற்ற சுருக்கங்களுடைய முகத்தில் கண்கள் இன்னமும் கூர்மையாக இருக்கிறது. இந்தக் குடியினரிடையே அபூர்வமாகத் தோன்றக் கூடிய சிவப்பு. நெற்றிப் பச்சைக்கோடு, இந்த வயசிலும் தீர்க்கமாகத் தெரிகிறது.
அவள் திரும்பி சுருண்டு கிடக்கும் கிழவனை எழுப்புகிறாள்.
"த, எந்திரி, புள்ள காலேசிக்குப் போகுது... எந்திரி...!"
காந்திக்குப் பாட்டனின் அருகில் செல்வதற்கு விருப்பமில்லை. பாட்டியைப் போல் நறுவிசாகச் சிக்கென்று இருக்கமாட்டார்.
"தாத்தா, நான் போயிட்டு வாரேன்..."
வாய் பேசத் தொடங்கும் முன் கிழவனுக்கு இருமல் பிடித்துக் கொள்கிறது.
"யே குட்டி அம்சு! நீராரம் இத்தினி கொண்டாடி...!"
"ஆமா, நீராரம்! கறட்டுக் கறட்டுன்னு இருமிட்டு!..."
"உனக்கென்னடீ தே... மவளே? நா இந்தூட்டு எசமான். கொண்டாடீ!" இருவருக்கும் இடையே பொழுது விடிந்ததிலிருந்து இவ்வாறு சிறு பூசல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்.
கிழவனுக்கு உடம்பு ஒடுங்கினாலும் இன்னும் குரலும் பிடிவாதமும் ஒடுங்கிவிடவில்லை. கண் முக்காலும் தெரியவில்லை. முடி உதிர்ந்து, தலை பனங்குடுக்கை மாதிரி ஒரு தோற்றம் தருகிறது. நீராகாரம் கேட்ட உடன் வராததால் வசை புழுக்கிறது.
"லட்சுமி, அவரு கேட்டதக் குடுக்கிறதுக்கென்ன? ஏம்போட்டு இளுத்திட்டிருக்கிய? அவுரு வயசுக்கு அவரு கஷ்டம் ஆரும் பட்டிருக்கமாட்டா. நீராரம் தான கேக்கிறாரு?"
"நேத்து சோறொண்ணும் மிஞ்சல. இப்பதா இட்லி ஊத்தி வச்சிருக்கு. டீத்தூள் போட்டு சூடாக் கொண்டு வாரனே? வாங்குவாரா?"
லட்சுமியின் குரல் கேட்க வேண்டியதுதான் தாமதம். மேலும் வசைகள் பொலபொலக்கின்றன.
அம்சு குவளையை எடுத்துக் கொண்டு ருக்குமணியின் வீட்டுக்குச் சென்றாள். காந்திக்குக் கோபமாக வருகிறது.
"போலாம்பா, பஸ் வந்திடும்...!"
"சரி, வாரேன், லட்சுமி... எல்லாம் பத்திரமாப் பாத்துக்க. நா சாங்கால பஸ்ஸுக்காகக் கூடக் காத்திருக்க மாட்டே முடிஞ்சா அக்கரக்கி வந்து முன்னதா வந்திடுவேன்..."
வீட்டை விட்டிறங்கி, ஆற்றுக்கரை மேட்டோடு, ஒரு பத்து நிமிடம் நடக்க வேண்டும்.
இவர்கள் தெருவைத் தாண்டவில்லை வடிவு, அவன் தம்பி சுருளிப்பயல், செவத்தையன், அம்மாசி, பழனி எல்லோரும் கும்பலாக வருகின்றனர். சில பெண்பிள்ளைகள், முடிபரக்க சில பொடிசுகள்.
"மொதலாளி!"
சம்முகத்துக்குக் கால் தடுக்குவது போலிருக்கிறது. அவருக்குச் சகுனத்தில் எல்லாம் நம்பிக்கை என்பதில்லை. மூடநம்பிக்கைகளைப் பிடித்துத் தள்ளவேண்டும் என்ற முற்போக்குக் கோட்டில் நிற்பவர் தாம்.
"நேத்தே வந்தமுங்க. முதலாளி வந்து சொல்லுங்க, காரியக்காரன் படலய வச்சுத் தோப்ப வளச்சிருக்கிறா, நடவு நட்டாச்சு. வயல்ல எறங்கக் கூடாதுங்கறா..."
இந்த முறையீட்டைக் கேட்ட பின்னரே சம்முகத்துக்கு பளிச்சென்று நிலைமை புலனாகிறது.
ஐயனார் குளத்துக் குடியிருப்பில் இருந்து இறந்து போனவரின் சடலத்தை ஆற்றுக்கரைக் காட்டுக்குக் கொண்டு வர வழியில்லை! இந்தப் பிரச்னைகளை எடுத்துக் கொண்டு பல தடவைகள் கோரிக்கை மனு கொடுத்து விட்டார்கள். ஐயனார் குளம் மட்டும் இத்தகைய பிரச்னைக்குரிய இடம் அல்ல. பல குடியிருப்புகளின் நிலையும் இதுவே.
"நேத்து வந்தம் முதலாளி. நீங்க இல்ல. நாங்கல்லாமும் தோப்புக் குத்தவைக்காரங்ககிட்ட பொணங் கொண்டு போக வழி வுடணும்னு கேட்டோம். பண்ணக்காரரில்ல, அவுரு சொல்லாம நான் துறந்து வுடறதுக்கில்லன்னு மணிகாரன் பிச்சமுத்து ஒரு புடியா படலயப் போட்டுக் கெட்டி வச்சிட்ட்டான்."
"ஏண்டா, இதுக்குப் போயி அழுவுறீங்க? படலயப் பிச்செறிய முடியாது உங்களால? பிச்செறிஞ்சிட்டுப் பொணத்தத் தூக்கிட்டுப் போங்கடா? நா இப்ப அவசரமாப் போறே. வந்ததும் மத்ததப் பேசிக்கலாம்!"
நெற்றியில் வியர்வை பூக்கிறது. காலில் ஊமை வலி முனகுகிறது. அவர்கள் கரையோடு நடக்கின்றனர்.
------------