சிறுகதை

2.88k படித்தவர்கள்
9 கருத்துகள்

“ஒரு சர்வாதிகாரம் ஒழிந்து மற்றொரு சர்வாதிகாரம் வந்தால்தான் மனிதம் காக்கப்படும்டா, கண்ணா... சரியான ஜனநாயகம் என்றால் சர்வாதிகாரம்தான்... பிளேட்டோ கூறியவற்றை அறியாமலேயே நீங்கெல்லாம் எப்படித்தான் டாக்டர் பட்டம் வாங்கினீங்களோ...” என்று சத்தமாகக் கூறிக்கொண்டிருந்தார், ஆங்கிலப் பேராசிரியரான சாமிநாதன். அந்த சிறு பேருந்தில் இருந்தவர்களெல்லாம் அச்சத்தால் நடுங்கிக்கொண்டிருக்கையில் இவர் மட்டும் சத்தமாக பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார். அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் ஸிர்த் பல்கலைக்கழகத்தில் பணி செய்து வந்த இந்தியர்கள். நான்கைந்து பேர் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள். முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த இந்தியர்கள் பேராசிரியர்களானால், கடைசி வரிசையின் இருக்கையில் நெருங்கி அமர்ந்திருந்த வங்காளத்து ஆட்கள் பல்கலைக்கழகத்தின் வளாகத்தைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள். தலைநகர் த்ரிபொலியை நோக்கி அந்த மினி பஸ் விரைந்து கொண்டிருந்தது. லிபியாவில் உள்நாட்டுக் கலவரம் தீவிரம் அடைந்த மறு கணமே இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்ட பேராசிரியர்கள் நாடு திரும்ப கூக்குரலிட்டனர். மூன்று வாரங்கள் கடந்து அவர்களின் கதறலுக்குச் செவி கொடுத்த இந்தியத் தூதரகம் தலைநகருக்கு வந்தால் அவசர விமானச் சேவையில் நாட்டுக்கு அனுப்புவதாக கூறியிருந்தனர். துனீசியாவில் தொடங்கிய அரபு புரட்சி லிபியாவை வந்து அடைந்து பள்ளி, கல்லூரி, வங்கி, அங்காடி என்று அனைத்தையும் முடக்கிப் போட்டிருந்தது. நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டுக் கொண்டிருந்தன. காவல்துறை, இராணுவம் மற்றும் கிளர்ச்சிப் படைகளின் இடையில் போர் வெடித்துநூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் ஸிர்த் எனும் இவர்கள் வாழ்ந்து வந்த சிறு நகர் லிபியாவின் அதிபர் மௌமூர் கத்தாஃபியின் சொந்த ஊர் என்பதால் போர் தீவிரம் அடைந்திருக்கவில்லை. எந்நேரமும் ஸிர்த் நகரத்தை புரட்சியாளர்கள் முற்றுகையிடலாம் என்கிற நிலைமை அங்கிருந்தது. ஐம்பது கி.மீ தொலைவிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கித் தோட்டாக்களின் சத்தம் எல்லோரையும் நடுங்க வைக்கையில், எப்படியாவது இங்கிருந்து கிளம்பி சொந்த நாட்டை சென்றடைந்து விட வேண்டும் என்று இவர்கள் முடிவெடுத்து இந்தியத் தூதரகத்தை அணுகி இப்பொழுது தலைநகர் த்ரிபொலியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அதில் பலர் தீவிர மன அழுத்தத்திலிருந்தால், சிலர் வங்கியில் மாட்டிக்கொண்ட லட்சக் கணக்கான காசை எடுக்க முடியாத இயலாமையை நினைத்து உள்ளுக்குள் சீறிக்கொண்டிருந்தனர். ஆனால், பேராசிரியர் சாமிநாதன் மட்டும் தத்துவம் பேசிக்கொண்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டும் இருந்தார். அச்சிறிய பேருந்தில் இருப்போர்களை காப்பது தன் கடமை என்று நினைத்திருந்த அவர் சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அவருடைய கடைவாய்ப் பற்கள் முதன் முறையாக அவரை உள்ளுக்குள் கலங்க வைத்திருந்தது.

ஐம்பது வயது கடந்திருந்த அக்கடைவாய்ப் பற்கள் பிறந்த நாள் முதல் இன்று வரை உதிராமல் திடமாக அவர் வாயில் ஒட்டிக்கொண்டிருந்தன. மற்ற எல்லாப் பற்களும் விழுந்து புதிய பற்களுக்கு இடம் தந்திருந்ததால் அவை விழவே இல்லை. இவருடைய பெற்றோரோ அல்லது இவரோ அதை பெரிய சங்கதியாகக் கருதவே இல்லை. எவ்விதமான சிக்கலையும் அவை தராத காரணத்தினால் அதைக் குறித்து பேராசிரியர் யோசித்ததும் இல்லை. பாரதியார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று சில வருடங்கள் சென்னையின் கல்லூரியொன்றில் பணி செய்து இந்த வட கிழக்கு ஆப்பிரிக்கா நாடான லிபியாவிற்கு வரும் வரையில் அவற்றை ஒரு பொருட்டாகவே அவர் எண்ணியதில்லை.

ஜன்னல் திரைகளை சிறிதாக அகற்றி சாலையின் இரு புறங்களையும் சிலர் பார்த்தனர். பேராசிரியர் சாமிநாதன் சத்தமாகச் சிரித்து, “இந்த வழியில் ரெபல்ஸ் வர வாய்ப்பே இல்லை, முன்னால் போய்க்கொண்டிருப்பது கடாஃபியின் ஆர்மி ஜீப்... பயப்படாதீங்க... இன்றோ நாளையோ நாம் சாகத்தான் போறோம். அதற்காக இப்படி பயந்துகொண்டிருப்பதா? சாவுதான் மனிதர்கள் காணும் ஒரே ஒரு கனவு... காசு, பணம், சொத்து, பிள்ளைகள் என்று எந்தக் கனவையும் நாம் நிரந்தரமாக அடையப் போவதில்லை... மரணம்தான் மனிதர்கள் காணும் ஒரே கனவு” என்று தத்துவார்த்தமாக பேசி பின்னால் திரும்பி வங்காள தேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் தன் பார்வையை அனுப்பினார். அவர்களிலொருவன் இடது கையை நெற்றிக்குக் கொண்டு போய் சல்யூட் அடித்து, “குட் மார்னிங், ப்ரொஃபஷர்”என்று பல்லிளித்தான். பதிலுக்கு இவர் தலையசைத்து அவர்கள் அனைவரையும் நோட்டமிட்டு, “கிதர் ஹே, யூரோப்?” கேட்டார். அப்படிக் கேட்கும் பொழுது அவர் மனதிற்குள் சூரியக் கதிரொன்று வெடித்து சிதறியது. அதை முகத்திற்குக் கொண்டு வராமல் அப்படியே அடிவயிற்றுக்கு அழுத்தி அவர்களையே பார்த்தார். 

குட்மார்னிங் கூறிய நபர் இவரையே பார்த்து, “அவன் நேற்று இரவு நைஜிர் கருப்பர்களோடு திருட்டுப்படகில் இத்தாலிக்குப் போயிட்டான், ப்ரொஃபஷர். ஏதாவது காசு வாங்கிருந்தானா உங்களிடம்?” என்று அவன் ஹிந்தியில் கேட்ட பொழுது அவனுடைய தோழர்களனைவரும் அவனையே பார்ப்பது ஏன் என்று புரியாமல் பேராசிரியர் “நஹி... நஹி... அவன் கேட்டான், ஆனால், நான் கொடுக்கவில்லை” என்று அரைகுறை ஹிந்தியில் பதிலளித்தார். தான் கூறியது பொய் என்று அவர்களுக்குத் தெரிந்து விட்டதோ என்கிற அச்சத்தில் சடாரென்று பார்வையை மெதுவாகத் திருப்பி தன் அருகில் அமர்ந்திருந்த கேரளத்தைச் சேர்ந்த ப்ரொஃபசர் அஹமத்தைப் பார்த்து, “எந்த சாரே...பேடியானோ?!” என்று சத்தமாகச் சிரித்தார். 

லிபியாவின் ஸிர்த் நகரத்திலிருந்து கள்ளப் படகில் ஐரோப்பா செல்ல சில வெளிநாட்டினர் முயற்சி செய்துகொண்டே இருந்தனர். அதில் நைஜர், சாட், இத்தோப்பியா, சூடான் நாட்டினவர்கள்தான் அதிகம். ஓரிருவர் வங்காளம், பாகிஸ்தான், இந்தியா நாட்டினவராய் இருந்தார்கள். ஐந்து ஆயிரம் லிபியன் தினார் கொடுத்தால் இத்தாலி நாட்டின் எல்லையில் கொண்டு போய்விடப்படுவார்கள் என்றே பேசிக்கொள்ளப்பட்டது. இந்தியா பண மதிப்பில் மூன்று லட்சம் தந்தால் திருட்டுத்தனமாக ஐரோப்பாவிற்குள் நுழையலாம். அங்கு போன பிறகு அகதி என கூறி அங்கேயே நிலைத்து விடலாம் எனும் அசாத்திய கனவை அடைய முயற்சி செய்து கொண்டிருந்தனர். அப்படி செய்வோர்களில் ஒருவன்தான் நிஜாமுத்தீன் எனும் வங்காளத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி. அவனை “யுரோப்” என்கிற புனைபெயரால் அவனுடைய சகத் தொழிலாளிகள் அழைத்துக் கொண்டிருந்தனர். ஸிர்த் பல்கலைக்கழகத்தின் கார்டனில் பணி செய்து கொண்டிருந்த அவனோடு எப்படியோ பேராசிரியர் சாமிநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டிருந்தது. அவனுடைய ஐரோப்பா கனவைக் கேட்டு சிலிர்த்திருந்த இவர் அவனுடைய சோகக் கதையால் உருகி அவ்வப்போது அவனுக்கு காசு கொடுத்திருந்தார். ஐரோப்பா கடல் பயணத்தை அவன் விளக்குகையில் அவ்வப்போது இவர் மனம் சுழன்று அலறித் துள்ளி தீப்பந்தம் ஏந்தும்.

தன் முன் இருக்கையில் அமர்ந்திருந்த உதவிப் பேராசிரியரை நோக்கி மீண்டும் சொற்பொழிவாற்றத் தொடங்கினார் பேராசிரியர் சாமிநாதன். புரட்சியென்பது நாடொன்றை எவ்வாறு முன்னோக்கிப் பயணிக்க உறுதுணையாக இருக்கும் என்று ஃபிரான்ஸ் புரட்சியை மேற்கோள் காண்பித்து பேசிக்கொண்டிருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த அந்த இளம் உதவிப் பேராசிரியர் கேலியாகச் சிரித்து, “நேற்று வரையில் கடாஃபியை புகழ்ந்தும், அமெரிக்காவும் இங்கிலாந்தும்தான்புரட்சியாளர்களுக்கு ஃபண்ட் செய்கின்றன என்று சொல்லிக் கொண்டிருந்தீங்களே, ப்ரொஃபசர்!?” என்று சத்தமில்லாமல் சிரித்தான். சற்று தடுமாறிய இவர் “கடாஃபியும் புரட்சி செய்துதானே ஆட்சியைப் பிடித்தது! அவர் காலம் காலாவதி ஆயிடுச்சு, புதிய புரட்சியொன்று லிபியாவுக்கு தேவை... அது இப்பொழுது நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்று கூறி தாம் தமிழில் பேசியது மினி பஸ்ஸின் ஓட்டுநருக்குப் புரிந்துவிட்டதா எனும் அச்சத்தில் கழுத்தை நீட்டி இடது பக்கம் சாய்த்து ஓட்டுநரைப் பார்த்தார். ஆசுவாசப் பட்டு திரும்பி தன் அருகாமையில் இருக்கும் கேரளத்தைச் சேர்ந்த பேராசிரியர் அஹமத்திடம், “நா சொன்னது சரிதானே, காம்ரேட்”என்றார். பேராசிரியர் அஹமத் எதுவும் பேசாமல் தலையசைத்து எதிரில் இருக்கும் கோயம்பத்தூரைச் சேர்ந்த இளம் உதவி பேராசிரியர் கண்ணபிரானைப் பார்த்துச் சிரித்தார். அப்பொழுது பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் வங்காளிகள் திடீரென்று கூச்சலிட்டனர். எல்லோரும் திடுக்கென பயங்கொண்டு திரும்பிப் பார்த்தனர். 

அந்த மினி பஸ் பிரதான சாலையில் செல்லாமல் குறுக்கு வழியில் தலைநகர் த்ரிபொலியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. முக்கிய சாலைகளில் சென்றால் புரட்சியாளர்கள் முற்றுகையிடலாம் என்று அஞ்சி பாலைவனத்தை ஒட்டியபடி போகும் மற்றொரு வழியில் இவர்களை பாதுகாப்பாகக் கொண்டு போக பல்கலைக்கழகம் ஓட்டுநருக்கு ஆணையிட்டிருந்தது. இவர்களுக்குப் பாதுகாப்பாக இராணுவத்தின் ஒரு சிறிய படையையும் பல்கலைக்கழக வேந்தர் ஏற்பாடு செய்திருந்தார். 

இருநூறு கி.மீ. தாண்டுவதற்குள் புரட்சியாளர்களால் பிடிபட்டுவிட்டோமா என்று எல்லோரும் பதறுகையில் காற்றாய்ப் பறந்து வந்த மூன்று ஜீப்புகள் சிறு பேருந்தின் முன் வந்து நின்றன. இவர்கள் அனைவரும் நடுங்கிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு பெண் ஐந்து மாத கர்ப்பிணி. அவரை பாதுகாப்பது தன் கடமை என்று எண்ணிய பேராசிரியர் சாமிநாதன் எழுந்து அப்பெண்ணின் கணவரை நோக்கி தைரியமாய் இருக்கும்படி செய்கை செய்து ஓட்டுநரிடம் போய் அரபியில், “இஷ் முஷாக்கில்?" (என்ன பிரச்னை?) என்று கேட்டார். ஓட்டுநர், “மாஃபி முஷாக்கில், தாக்தூர்... மாஃபி கோஃப் (ஒன்றுமில்லை, பயப்படாதீங்க, டாக்டர்)” என்றார். 

காற்றாய் பறந்து வந்த ஜீப்பிலிருந்து குதித்த ஆட்கள் இராணுவப் படைவீரர்களோடு ஏதோ பேசிக்கொண்டிருக்கையில் அவர்களில் ஒரு நபர் பேருந்தின் உள்ளே வந்து எல்லோரையும் நோட்டம் விட்டு கீழே இறங்கி மற்றவர்களுக்கு ஏதோ செய்தியொன்றைக் கூறி எல்லோரும் கலைந்தனர். வந்தவர்கள் அரசாங்கத்தின் உளவுத்துறையென்று தெரிய வந்தது. பாதுகாப்பாகப் போக மற்றொரு வழியைக் அவர்கள் கூறியிருந்தார்கள். அதற்கு முக்கியமான காரணமொன்று இருந்தது. மிஸ்ரத் எனும் த்ரிபொலிக்கும் ஸிர்த்துக்கும் இடையிலான வணிக நகரத்தை புரட்சியாளர்கள் கைப்பற்றியிருக்கும் சங்கதியைக் கூறி அந்நகரத்தின் எல்லைகளைத் தொடாமலேயே தலைநகருக்குப் போகும் வழியைக் கூறி அவர்கள் விடைபெற்றிருந்தனர். 

வேறொரு வழியில் விரைந்துகொண்டிருக்கும் இராணுவ ஜீப்பை பின் தொடந்து மினி பஸ் ஒரே மூச்சில் ஓடிக்கொண்டிருந்தது. உளவுத்துறையின் ஜீப்கள் வேறெங்கோ போய்க்கொண்டிருப்பதை பேராசிரியர் சாமிநாதன் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் கத்தாஃபியின் ஆட்கள் என்று முதலிலேயே தெரிந்திருந்தால் எதையெதையோ கூறி பாராட்டுப் பெற்றிருக்கலாமோ என்று ஏங்கினார். இப்படி செய்வது அவருக்கொன்றும் புதியதில்லை. 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

முதல் முதலாக அவர் லிபியாவிற்குள் வந்த நாள் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் விடுதியிலிருந்த தொலைக்காட்சியில் ஓமர் முக்தார் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததுமே இளம் பேராசிரியர்களுக்கு காலனிய ஆட்சியை எதிர்த்துப் போராடிய பாலைவனச் சிங்கம் ஓமர் முக்தார் என்று தன் சொற்பொழிவை தொடங்கியிருந்தார். அது மட்டுமல்லாமல் பல்கலைக் கழகத்தின் நிகழ்ச்சியொன்றில் ஓமர் முக்தாரைப் பற்றி பேசி வேந்தரின் பாராட்டுகளையும் பெற்று பெருமிதம் கொண்டிருந்தார். ஸிர்த் நகரத்திலிருந்த ஆப்பிரிக்கன் காங்கிரஸ் அரங்கைக் கண்டு வியப்புக்குள்ளாகி அதிபர் கத்தாஃபியை ஆப்பிரிக்காவின் விடி வெள்ளி என்று புகழ்ந்திருந்தார். கத்தாஃபியின் “க்ரீன் புக்” இந்த உலகத்தின் மிகச் சிறந்த அரசியல் நூல் என்று கூறி தன் மாணவர்களை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார். அவர்களில் ஓரிரண்டு மாணவர்கள் இக்காரணத்தினால் தன்னை வெறுப்பதைக் கண்டு அச்சங்கொண்டு கத்தாஃபியைப் பற்றி பேசுவதைக் குறைத்திருந்தார். ஆனாலும், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதிபரைப் புகழ்ந்தபடியே இருந்தார். அதற்கு முக்கியக் காரணம் ஒன்றிருந்தது. பல்கலைக்கழகத்தில் மாணவர் வேடத்தில் அரசாங்க உளவுத்துறை ஆட்கள் இருப்பார்கள் அல்லது சில மாணவர்களே உளவுத்துறையாய் செயல்படுவர் என்கிற செய்தியை அறிந்த நாள் முதல் அதிபரை வீரர் சூரர், அமெரிக்கா எனும் முதலாளித்துவ நாட்டை நடுங்க வைக்கும் அரபுச் சிங்கம் என்று மாணவர்களின் கண்களை நோக்கி அவர் சொற்களை வீசிக் கொண்டிருந்தார். மேலிடத்தில் நன்கு பெயரெடுக்க எந்தவொரு மாணவரையும் அவர் இதுவரையில் திட்டியதில்லை. பல்கலைக்கழகத்தின் அலுவலக ஊழியர்கள் தன்னை மதிப்பது இதனால்தான் இருக்கக்கூடும் என்று உள்ளுக்குள் குதித்தெழுவார். அது போன்ற ஒரு பொன்னான தருணத்தை கைவிட்டுவிட்டேனே என்னும் ஏக்கத்தில்தான் அவர் மினி பஸ்ஸின் ஜன்னல் வழியாக உளவுத்துறை வாகனங்களைப் பார்த்துக்கொண்டிருந்தது.

மினி பஸ் ஒரு இடத்தில் ஏனோ நின்றிருந்தது. எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர், சடாரென எழுந்த சிலர் பதறிப் போனார்கள். பேராசிரியர் சாமிநாதனை ஓட்டுநரிடம் போய் என்னவென்று கேட்கச் சொன்னார்கள். தான் விசாரிப்பதாகக் கூறி சாவகாசமாக எழுந்த பேராசிரியர் ஓட்டுநரிடம் சென்றார். தாம் பின் தொடர்ந்துகொண்டிருந்த இராணுவ ஜீப் எங்கோ காணவில்லையென்றும் அவர்களை தொடர்பு கொள்ளவே முடியவில்லையென்றும் ஓட்டுநர் கூறினார். உடனே பேராசிரியர் ஓட்டுநரைப் பார்த்து, “நீ ஏன் அந்த உளவுத்துறை ஆட்களைத் தொடர்புகொள்ளக் கூடாது?!” என்கிற ஒரு வெளிச்சத்தை ஓட்டுநரின் கண்களில் நட்டு, அது பிரகாசிப்பதைப் பார்த்து பூரித்துப் போனார்.

சிறிது நேரம் முன்பு வந்திருந்த உளவுத்துறை ஆட்கள் மீண்டும் வரவிருக்கும் சங்கதியைக் கேட்டு சந்தோஷத்தில் மிதந்து அச்செய்தியை மினி பஸ்ஸிலிருக்கும் அனைவருக்கும் தெரியப்படுத்தி தன் ஆலோசனைப்படியே இது நிகழ்ந்தது என்று எதிரில் அமர்ந்திருந்த ஆந்திராவைச் சேர்ந்த ஐம்பதுவயது பெண் பேராசிரியரைப் பார்த்து பேராசிரியர் புன்னகைத்தார். அவரும் பதிலுக்கு உதடுகளை விரித்ததால் இவருடைய கடைவாய் பற்கள் புத்துயிர் பெற்று அவர் முகத்திற்கு புதுப்பொலிவைக் கொடுத்தன. வந்த நாள் முதல் பேராசிரியருக்கு அவர் மேல் ஓர் ஈர்ப்பு. கணவனை இழந்து அவர் தனியாகப் பத்து ஆண்டுகள் கழித்த விவரம் கிடைத்தபோது இவரை நான் ஏன் மறுமணம் செய்துகொள்ளக் கூடாதென்று யோசித்திருந்தார். பேராசிரியரின் மனைவியும் இறந்து வருடங்கள் கடந்திருந்தன. தன் இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்யத்தான் அவர் லிபியாவிற்கு வந்தது. ஒருவன் பெங்களூரின் சாஃப்ட்வேர் கம்பெனியில் பணி செய்துகொண்டிருந்தான்; இளையவன் கல்லூரியின் இறுதி ஆண்டிலிருந்தான். அவர்களின் கல்விச் செலவு மட்டுமல்லாது திருமணச் செலவுக்கென்று மாதம் மூன்று லட்சம் கிடைக்கும் லிபியா ஜாப் ஆஃபரை அவர் தேடிப் பிடித்திருந்தார். மகன்களின் திருமணத்திற்குப் பிறகு தான் தனித்துவிடுவேனோ என்கிற அச்சத்தில் வறண்டு போயிருந்தார். பிள்ளைகளுடன் கைப்பேசியில் சில சமயம் இடும் சண்டையின் போது வாழ்க்கையை வெறுத்து இந்தியாவிற்குப் போகாமல் லிபியாவிலேயே இருந்துவிடுவோமா என்றும் எண்ணியுள்ளார். தன் மனைவியைப் போலவே தான் பெற்ற பிள்ளைகளும் தன்னைக் காயப்படுத்தவே விரும்புகிறார்கள் என்று அழுவார். அப்பொழுதெல்லாம் அவர் மனதை மயிலிறகால் தடவுவது ஆந்திரப்பெண் பேராசிரியரின் அப்புன்னகைதான்! இந்த மூன்று வருடங்களில் புன்னகைப்பதைத் தவிர இருவரும் ஒரு வார்த்தையும் பேசியதில்லை. ஒரு பெண்ணோடு நெருக்கமாகப் பழகினால் எங்கு பல்கலைக்கழகத்தின் மேலிடத்திற்குத் தெரிந்து பிரச்சினை ஆகிவிடுமோ என்கிற அச்சத்தினால் உதடை விரிப்பதோடு பேராசிரியர் நின்றிருந்தார். புன்னகைப்பதும் தன்னை சிக்கலில் மாட்டிவிடுமோ என்று அதிர்ந்து பெண் பேராசிரியரின் கண்களுக்குப் படாமலேயே ஓடிக்கொண்டிருந்தார். அப்பொழுது சூழும் சோகத்தைத் தணிக்க பல்கலைக்கழகத்தின் பூங்காவிற்குச் செல்வார். அப்படிச் சென்ற பொழுதுதான் வங்காளத்தைச் சேர்ந்த இளம் பணியாளர் “யுரோப்” அறிமுகமானது. அவன் கூறும் ஐரோப்பா பயணத்தைக் கேட்டு ஆரம்பத்தில் சிரித்திருந்தார். வகுப்புகள் இல்லாத நேரங்களில் “யுரோப்”பிற்கு வாழ்வது எவ்வாறென்று உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்.

ஒரு மணி நேரமாக காத்திருந்தும் யாரும் வரவில்லை. கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கும் பாலைவனத்தைப் பார்த்துப் பார்த்து அனைவருக்கும் சலிப்புத் தட்டியிருந்தது. ஆனால், சலிக்காமல் அந்தப் பேருந்தின் குளிரூட்டி தன் வேலையை கனகச்சிதமாக செய்துகொண்டிருந்தது. உலகத்தின் மிக நீண்ட பாலைவனம் இதுதான் என்று பேராசிரியர் கூறியவாறே சஹாராவில் வெப்பம் என்றால் என்ன என்பதையும் விவரித்துக் கொண்டிருந்தார். 

ஓட்டுநர் இறங்கி பெரிய கேன்களிலிருந்து பெட்ரோல் டேங்கை நிரப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்து சிலர் பயந்தனர். பேராசிரியர் சாமிநாதன் உடனே அவர்களிடம் திரும்பி, “இது இரண்டு பெட்ரோல் டேங்க் உள்ள பஸ்... பயப்படாதீங்க. ஏறும்பொழுது நான் அதைக் கவனித்தேன். ஒரு டேங்கில் குறைந்தது ஐம்பது லிட்டர் பெட்ரோல் பிடிக்கும்... அது இல்லாமல் ஆறு கேன் பெட்ரோலைக் கொண்டு வந்திருக்காங்க, டோண்ட் வொரி” என்று சிரித்தார். கீழே இறங்கி ஓட்டுநரிடம் சென்றார். இவரைப் பார்த்த ஓட்டுநரின் உதவியாளர் உள்ளே போகுமாறு அரபியில் கூச்சலிட்டார். எதற்கு பயப்பட வேண்டும், அரசு உளவுத்துறையினர் வரும்பொழுது... என்று எண்ணியவாறே திரும்பினார்.

அவர் வந்து பத்து நிமிடத்திற்குள் மூன்று லேண்ட் க்ரூஸர் ஜீப்புகள் அனலாய் பறந்து வந்தன. ஓட்டுநரின் உதவியாளர் பேருந்துக்குள் விரைந்து ஜன்னல் திரைகளை அடைத்து சத்தமில்லாமல் இருக்குமாறு மெதுவாகக் கூறி கதவடைத்துச் சென்றான். வந்திருப்பது யார்? உளவுத் துறையா? இராணுவமா? அல்லது புரட்சியாளர்களா? பேராசிரியருக்கு அதில் துளியளவும் ஐயமில்லை, அது கண்டிப்பாக உளவுத்துறைதான்! அவரெதிரில் அமர்ந்திருந்திருக்கும் இளம் உதவிப்பேராசிரியர் கண்ணபிரான் நடுங்கிக்கொண்டிருந்தார். நெஞ்சின் ஆழத்திலிருந்து மூச்சை இழுத்து வெளியே தள்ளி இம்முறை எக்காரணம் கொண்டும் அதைத் தவற விடக்கூடாதென்று உள்ளுக்குள்ளே பேராசிரியர் சொல்லிக் கொண்டார். 

வெளியில் சத்தமாகப் பேசுவது கேட்டது.

“ஜாமியா, தாக்தூர்... ஹிந்த் (பல்கலைக்கழகம், பேராசிரியர்கள், இந்தியா)” என்றெல்லாம் ஓட்டுநர் விளக்கிக்கொண்டிருப்பது உள்ளிருக்கும் எல்லோருக்கும் கேட்டது. ஆனால், வந்திருப்பவர்கள் யாரென்றுதான் தெரியவில்லை. ஐந்தே நிமிடத்தில் அந்த சிறு பேருந்தின் கதவுகள் நீக்கப்பட்டு உயரமான, இராணுவ உடையிலிருந்த ஓர் ஆள் உள்ளே வந்தார். பதறியிருந்த சிலர் பெருமூச்சிட்டு நின்றிருக்கும் ஆளையே பார்த்தனர். எல்லோரையும் பார்வையிட்டு அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு அவன் அரபியில் கூறினான். முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் தம் அடையாள அட்டையை நீட்டினார். எல்லோர் அட்டைகளையும் ஒருவர் சேகரித்துக் கொடுக்குமாறு கூறினான். உடனே பேராசிரியர் எழுந்து எல்லோர் அட்டைகளையும் சேகரித்து அவனிடம் கொடுத்து, “குல்லு தாக்த்தூர் ஹிந்தி... பாகி ஹுவா, இஜ்லிஸ் வரா, ஹுவா பங்காளி (எல்லோரும் இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர்கள், அதோ அங்கு பின் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் வங்காள நாட்டினவர்)” என்று நெஞ்சைத் தாழ்த்தி சொற்களை மென்மையாக அவன் செவிகளுக்கு அனுப்பினார். ஒருமுறை இவரைக் கூர்ந்து கவனித்த அவன் அடையாள அட்டைகளைக் கொண்டு கீழே இறங்கினான். அவனைப் பின்தொடர முயன்ற பேராசிரியரை உள்ளேயே இருக்குமாறு கூறி பத்து நிமிடங்கள் கழித்து மூன்று ஆட்களோடு மீண்டும் அவன் வந்தான். அவர்களைத் தொடர்ந்து ஓட்டுநரும் வந்தார்.

“ஆத்னி குல்லு ஜவ்வால், லேப்டாப்... யால்லா...” என்று கத்தினான். எல்லோரும் அஞ்சி அவர்கள் கேட்ட கைபேசி, மடிக்கணினிகளைக் கொடுக்கத் தயங்கினர். உடனே ஓட்டுநர் சத்தமாக, “கொடுத்துவிடுங்கள், நாம் உடனே கிளம்பிவிடுவோம். இவர்களே த்ரிபொலி வரை நம்மோடு வருவார்கள்...” என்றான். ஒவ்வொருவராகக் கொடுக்க ஆரம்பித்தனர். பேராசிரியர் கடைசியாகக் கொடுத்து, “வாழ்க கடாஃபி... பாலைவனத்தின் மன்னன் கடாஃபி வெல்க” கோஷமிட்டு அவர்களைப் பார்த்து புன்னகைத்தார். உயரமாக இருந்த அவன் திரும்பி அப்பேருந்தின் ஓட்டுநரைத் தேடினான். அவர் அங்கிருக்கவில்லை. பேராசிரியர் மீண்டுமொருமுறை கோஷமிட உதடுகளை திறக்கும் பொழுது அவன் இவரையே பார்த்தான். திறந்த உதடுகளை விரித்து இவர் மீண்டும் புன்னகைத்தார். அவன் “தால்...(வாங்க)”என்று கூறி திரும்பினான். தன்னை ஏன் இவன் அழைக்கிறானென்று தெரியாமல் குழம்பி நின்ற பேராசிரியர் அவனை நோக்கி “லீஷ், யா மொஹமத்? (எதற்கு?)” என்று தயங்கித் தயங்கிக் கேட்டார். திரும்பி நின்று இவரைப் பார்த்து, மென்மையான குரலில் “வாங்க தாக்தூர்... சில ஆட்கள் எங்கள் வண்டியிலிருக்கிறார்கள், அவர்கள் இந்தியர்கள், அரபி பேசத் தெரியாதவர்கள், நீங்கள் அவர்களோடு பேசி கொஞ்சம் எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்றான். உடனே இவர், “மாஃபி முஷாக்கில், ஹன மௌஜூத் (பிரச்சினையே கிடையாது, நானிருக்கேன்)” என்று கூறிக்கொண்டு ஆந்திரப் பெண் பேராசிரியரை நோக்கிப் புன்னகைத்து எல்லோரிடமும் தன் முகத்தைக் காண்பித்து நெஞ்சை நிமிர்த்தி அவனைப் பின் தொடர்ந்தார். 

ஓட்டுநர் அவர்களிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார். அவர்கள் ஓட்டுநரை விரட்டி அடித்த பொழுதுதான் பேராசிரியருக்கு அனைத்தும் புரிய வந்தது. இவர்கள் அரசு இராணுவமோ உளவுத்துறையோ இல்லை, புரட்சியாளர்களாகத்தான் இருக்கக்கூடும் என்றே பதறினார். ஓட்டுநர் எவ்வளவு கேட்டும் இவரை விடுவதாக இல்லை. மொத்தப் பேருந்தையும் எடுத்துக்கொள்ளவா அல்லது இவரை மட்டும் எடுத்துக்கவா என்றான் ஒருவன். ஓட்டுநரின் நெற்றியில் மெஷின்கன் வைக்கப்பட்டது. ஓட்டுநர் திரும்பிப் பார்க்காமல் ஓடி பேருந்துக்குள் குதித்தார்; உள்ளிருந்தவர்கள் கூச்சலிட்டவாறு போய்க்கொண்டிருந்தது பேராசிரியரின் கண்களில் ஆழமாகப் பதிவானது. தனித்து நின்றார். லேண்ட் க்ரூஸருக்குள் அவர் தள்ளப்பட்டார்.

பேராசிரியர் கண் திறந்த போது கடலோர ஊரொன்றில் அந்த லேண்ட் க்ரூஸர் நின்றிருந்தது. அங்கு நூற்றுக்கணக்கான புரட்சியாளர்கள் இருந்தனர். ஓர் அறைக்குள் அவரை போகச் சொன்னார்கள். பேராசிரியரைப் பார்த்த ஒரு புரட்சியாளன் ஓடி வந்து, “தாக்தூர்...இந்தா? லீஷ்? (பேராசிரியரே, நீங்கள்? எப்படி?)” என்று கேள்வியெழுப்பி தம் குழுவின் நாயகனிடம் ஓடினான். பேராசிரியருக்கு அவன் யாரென்பது புரியாமல் சற்று தடுமாறி சில நொடிகளுக்குப் பிறகே புரிந்தது. வகுப்பில் அதிபர் கத்தாஃபியை தான் புகழ்ந்து பேசும்பொழுது சினங்கொண்டு தன்னை உற்று நோக்கிக்கொண்டிருந்த மாணவன்தான் அவன்! என்ன பெயர் அவனது!? சயீத்தோ, ஸமீரோ...! ஆ! சயீத்துதான்...

இவரை விடுவிக்குமாறு அவன் தன் நாயகனை கேட்டுக்கொண்டிருந்தது இவருக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. தன்னை இவர்கள் கொல்வார்களோ என்கிற அச்சம் வளர்ந்து தொண்டையைக் கவ்வுவதற்குள் ஓர் அறைக்குள் அவர் தள்ளப்பட்டார். அங்கு முப்பதுக்கும் மேற்பட்ட ஆட்கள் தலை குனிந்து அமர்ந்திருந்தார்கள். அதில் கருப்பர்கள்தான் அதிகம், மூன்று நான்கு லிபியன் அரபிகள், ஐந்தாறு பெங்காலிகள், பாகிஸ்தானி, இந்தியர்கள். இவர்களெல்லாம் யார், இவர்கள் ஏனிங்கு அடைக்கப்பட்டிருகின்றனர் என்பது சுத்தமாக விளங்கவில்லையெனிலும் இவருக்கு ஒரு சங்கதி உறுதியானது. கண்டிப்பாக இவர்கள் கத்தாஃபியை புகழ்ந்து பேசியிருக்கக்கூடும் என்று எண்ணினார். ஆப்பிரிக்காவின் கருப்பர்கள் லிபியாவிற்குள் வர விசா தேவையில்லை என்கிற சட்டத்தை போட்டிருந்த கத்தாஃபி சில கருப்பர்களுக்குத் தெய்வமாய் இருந்தார். லிபியாவில் ஒரு நாள் சம்பாதிக்கும் பணத்தில் அவர்கள் நாட்டில் ஒரு மாதத்திற்கு உணவு உண்ணலாம் எனும் ஆசையில் நூற்றுக்கணக்கான நைஜர், சாட், இத்தியோப்பிய, சூடான் நாட்டைச் சேர்ந்த ஆட்கள் லிபியாவிற்குள் வந்திருந்தனர். இதனால்தான் புரட்சியாளர்களுக்கு கருப்பர்களைக் கண்டால் வெறுப்பு என்பதை இவருக்கு யாரோ சொல்லியிருந்தனர். 

இந்தியர்கள், பாகிஸ்தானி, வங்காளிகள் இருந்த இடத்திற்குப் போய் அமர்ந்த பேராசிரியர் அவர்களோடு உரையாடத் தொடங்கியபோதுதான் அவனைப் பார்த்தார்! “யுரோப்” வாயைத் திறந்து உறங்கிக்கொண்டிருந்தான். திருட்டுப் படகில் இவன் ஐரோப்பாவிற்குப் போய்விட்டான் என்றல்லவா அந்தப் பேருந்தில் இருந்த இவனுடைய சக தொழிலாளர்கள் கூறியது!

மூன்று இரவுகளுக்கு முன் திருட்டுப் படகை நோக்கி கடலுக்குப் போய்க் கொண்டிருக்கையில் நாங்கள் பிடிபட்டோம் என்று நடந்ததை ஒன்று விடாமல் “யுரோப்” கூறினான். சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டே பேராசிரியர் அவன் சொல்வதை ரசித்துக் கொண்டிருந்தார். தமக்கு உதவி செய்த மற்றும் திருட்டுப் படகை ஏற்பாடு செய்த லிபியன்களை இவர்கள் சுட்டுக் கொன்றதாக அவன் கூறிய போது இவருக்கு வயிறு கலங்கி அப்படியே சுவரில் சாய்ந்தார். புரட்சியாளர்களின் செயல்களை பெருமையாக பேசிக்கொண்டிருந்த நான் ஏன் கத்தாஃபியை அநாவசியமாக இழுத்தேனோ என்று தீவிரமாக வருந்தினார். 

நடு இரவில் ஐந்து ஐந்து பேராக இவர்களை வெளியில் கொண்டு சென்றனர். இவர்கள் தங்களை என்னதான் செய்யப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெளிவில்லை; துப்பாக்கிச் சத்தமும் கேட்கவில்லை... பேராசிரியர் துடித்துக்கொண்டிருந்தார். தன் மாணவனிடம் மன்னிப்பு கேட்டு இங்கிருந்து தப்பித்துவிட வேண்டுமென்று வழிகளைத்தேடிக்கொண்டிருந்தார். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

சில நிமிடங்களில் இவரோடு சேர்த்து ஒன்பது பேரை வெளியில் கொண்டுபோனார்கள். அவரில் இரு வங்காளிகள், ஒரு பாகிஸ்தானி, மற்றவர்கள் கருப்பர்கள். எல்லோரையும் மண்டியிட்டு அமரக் கட்டளையிட்டனர். எல்லோருக்குள்ளும் வெடிக்கும் அளவுக்கு இதயம் சத்தமிட்டுக்கொண்டிருந்தது. 

பேராசிரியரின் கண் மாணவனைத் தேடிக்கொண்டிருந்தது. அரபியில் ஏதேதோ சொல்லிக்கொண்டு கைபேசியில் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருந்தான் ஒருவன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது இவர்கள் யாருக்கும் புரியவில்லை அல்லது புரிந்து கொள்ள யாருக்கும் விருப்பமில்லை. மெஷின் கன்களைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்த ஆட்கள் மரணத்தின் விளிம்பில் இவர்களை நிறுத்தியிருந்தனர்.

பேராசிரியரின் இதயம் சத்தமாக அடித்துக்கொண்டது. அவருடைய மாணவன் வந்து ஏதோ கூறினான். மறு நொடியே அவர்களின் நாயகன் வந்தான். மாணவன் மீண்டும் அவனை ஏதோ கேட்டுக்கொண்டதை எல்லோரும் பார்த்தார்கள். பேராசிரியர் தப்பிவிடுவாரோ என்கிற கோபம் “யுரோப்பை” கொதிக்க வைத்தது. மாணவனும் நாயகனும் காரசாரமாக ஏதோ விவாதித்து கடைசியில் மாணவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினான். பேராசிரியர் இதயம் தொண்டைக்கு வந்தது. 

புரட்சியாளர்களின் நாயகன் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினான். “நீங்க அனைவரும் ஐரோப்பா போகத்தானே விரும்பினீங்க. நீங்கள் போகலாம். நாங்களே ஏற்பாடு செய்கிறோம்...” என்றான். பேராசிரியர், “நோ நோ... நான் யுரோப் போக முயற்சிக்கவில்லை...” என்று கூச்சலிடும் பொழுது தொண்டையிலிருந்த அவர் இதயம் கீழ் நோக்கி சென்று அடி வயிற்றிலிருந்த கதிரவனை அகற்ற முயன்றது; புரட்சியாளர்களைப் புகழ்ந்து பேச பேராசிரியரை அது ஊக்கப் படுத்துவதற்குள் “யுரோப்” கத்தினான்: “நோ சர்... ஹி கிவ் மனி டு மீ... ஹி லைக் கோ யுரோப்” என்றான் அரைகுறை ஆங்கிலத்தில். ஓடிப் போய் அவனை ரெண்டு சாத்து சாத்துவோம் என்று கொதித்த பேராசிரியர் புரட்சியாளர்களை நோக்கி, “நோ நோ... ப்ளீஸ், அவன் பொய் சொல்றான்... வேண்டுமெனில் உங்களுடன் இருக்கும் என் மாணவனைக் கேட்டுப் பாருங்கள்...” என்று கெஞ்சினார்.

நீரோடை அவர் கண்களைத் தாண்டி பீச்சியடித்தது.

நிலவில்லாத வானத்தைப் பார்த்தவாறு பேராசிரியர் கடலலைகளின் மேல் மிதக்கும் படகை தன்னுள் இழுத்துக்கொண்டார். அவருடைய கடைவாய்ப் பற்கள் விழுந்திருந்த சங்கதியை இன்னமும் அவர் உணர்ந்திருக்கவில்லை.

படகு மேலும் கீழும் விழுந்து எழுந்து நகர்ந்துகொண்டிருந்தது. இரண்டு படகில் மொத்தம் பத்து பேர்; ‘யுரோப்’ மற்றொரு படகிலிருந்தான். புரட்சியாளர்களின் ஸ்பீட் போட் உறுமிக்கொண்டு கண்ணுக்கெட்டும் தூரத்தில் வந்துகொண்டிருந்தது. படகு திரும்பினால் பாயும் நொடிக்காக அது காத்துக்கொண்டிருக்கிறது.

மால்டா தேசத்து நகரமொன்றின் வெளிச்சம் விண்மீனைப் போல் வெகு தூரத்தில் மின்னிக்கொண்டிருந்தது. தன் கண்களை அந்த ஒளியிலேயே பதித்திருந்த பேராசிரியரின் மனதிற்குள் பின்னும் முன்னுமாக காலம் அசைந்து கொண்டிருந்தது. 

வானம்-கடல் அனைத்தும் உறைந்துபோய் பல திசைகளிலிருந்து உலகம் திரும்புகையில்தான் கடைவாய்ப்பற்களின் சங்கதி அவருக்குத் தெரியவந்தது; எவ்வாறு, எங்கு அவை விழுந்திருக்கக் கூடும் என்பதை நொடி யோசித்தாலும் மறு நிமிடமே மால்டா தேசத்தின் ஒளியையே மீண்டும் பார்க்கத் தொடங்கினார். மனம், தேகம் இலகுவாய் படகில் மிதந்துகொண்டிருந்தது.

தன் கனவின் சுவடைப் பிடிக்க அவர் துள்ளிக் குதித்தார்.