அத்தியாயம் 1
இராஜம்பேட்டை கிராமத்தை நாம் பார்த்து ஏறக்குறைய ஒரு வியாழ வட்டம் ஆகிறது. கணக்காகச் சொல்லப் போனால் பதினோரு வருஷமும் பத்து மாதமும் ஆகின்றன. பழைய தபால் சாவடிக் கட்டிடமும் ஏறக்குறைய முன்னால் பார்த்த மாதிரியே காணப்படுகிறது. ஆனால் அக்கட்டிடத்தின் வெளிச்சுவரிலும் தூண்களிலும் சில சினிமா விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம். விளம்பரம் ஒட்டப்படாத இடங்களில் "ஜே ஹிந்த்" என்றும், "நேதாஜி வாழ்க!" என்றும் எழுதப்பட்டிருந்தன. தபால் சாவடிக்கெதிரே சாலையில் கப்புங் கிளையுமாகப் படர்ந்திருந்த பெரிய ஆலமரத்தைக் காணவில்லை.
இதனால் அந்தச் சாலையின் அழகு குன்றி வெறிச்சென்றிருந்தது. மிட்டாய்க் கடை இருந்த இடத்தில் இப்போது ரேஷன் கடை இருந்தது. கடைக்காரர் மனது வைத்து எப்போது அரிசிப் படி போடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டு நாலைந்து ஸ்திரீகள் கையில் கூடையுடன் நின்றார்கள். தபால் சாவடிக்குள்ளே ஜன நடமாட்டம் காணப்பட்டது. ஆனால் நமக்குத் தெரிந்தவர்கள் யாரும் அங்கில்லை. போஸ்ட் மாஸ்டர், போஸ்ட்மேன், ரன்னர் - எல்லோரும் நமக்குப் புதியவர்கள். வரப்போகும் தபால் ஸ்டிரைக்கைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருந் தார்கள். இந்தத் தெரியாத மனிதர்களை விட்டு விட்டு நமக்குத் தெரிந்த மனிதர்கள் இன்னும் வசிக்கும் இராஜம்பேட்டை அக்கிரகாரத் துக்குப் போவோம்.
அக்கிரகாரத்தின் தோற்றத்தில் சில மாறுதல்கள் காணப்பட்டன. முன்னே நாம் பார்த்ததற்கு இப்போது இன்னும் சில வீடுகள் பாழடைந்து போயிருந்தன. கிட்டாவய்யரின் வீட்டு வாசலில் பந்தல் இல்லை. வீட்டின் முகப்பு களைகுன்றிப் போயிருந்தது. ஆனால் சீமாச்சுவய்யரின் வீடு இப்போது முன்னைவிட ஜோராக இருந்தது. சீமாச்சுவய்யர் சரியான சமயத்தில் தேவபட்டணத்துக்குப் போய் ஜவுளிக் கடை வைத்தார். திருமகளின் கடாட்சம் அவருக்கு அமோகமாகப் பெருகியது. பழைய வீட்டைத் திருத்தி நன்றாகக் கட்டியிருந்தார்.
கிட்டா வய்யருக்குச் சமீப காலத்தில் சில கஷ்டங்கள் ஏற்பட்டிருந்தன. குடிபடைகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் குடியிருக்கும் மனைக் கட்டு விஷயமாக நெடுங்காலமாய்ச் சச்சரவு நடந்து கொண்டிருந்தது. சென்ற வருஷத்தில் கோர்ட்டில் மிராசுதாரர்களுக்குச் சாதகமாகத் தீர்ந்தது. இந்த வழக்கில் முன்னால்நின்று நடத்தும் பொறுப்புக் கிட்டாவய்யரின் தலையில் சுமந்திருந்தது. இதனால் பணவிரயம் அதிகமானதோடு குடிபடைகளின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.
யாரும் எதிர்பாராத விபத்து ஒன்று கிட்டாவய்யருக்குச் சென்ற வருஷம் நேரிட்டது. சுற்றுப் புறங்களில் திருட்டுகளும், கொள்ளைகளும் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருந்தன; திருட்டுக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட ஒரு கூட்டத்தினர் பட்டாமணியம் கிட்டாவய்யரைச் சமபடுத்தி வாக்குமூலம் எழுதி வைத்தார்கள். உடனே கிட்டாவய்யர் பட்டாமணியம் உத்யோகத்திலிருந்து சஸ்பெண்டு செய்து வைக்கப்பட்டார். குற்றச்சாட்டுகளைப் பற்றிய போலீஸ் விசாரணையும் உத்தியோக விசாரணையும் நடந்தன. கடைசியாக விரோதத்தின் பேரில் பொய்யாக எழுதி வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்று ஏற்பட்டது. ஆயினும் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது கிட்டாவய்யருடைய மனதில் ஏற்பட்ட வேதனைக்கு அளவே கிடையாது. வீட்டை விட்டு வெளியே புறப்படுவதற்கே அவருக்கு வெட்கமாயிருந்தது! ஆயினும் வெளியில் கிளம்புவது அவசியமாகவும் இருந்தது! பணம் நிறையச் செலவாயிற்று. முடிவாக ஒன்றுமில்லை என்று ஏற்பட்ட போதிலும், "பணத்தைச் செலவழித்து அமுக்கி விட்டார்!" என்ற பேச்சும் பராபரியாகக் காதில் விழாமற் போகவில்லை.
பத்துநாளைக்கு முன்பு கிட்டாவய்யர் தேவபட்டணம் சென்று, அதற்குச் சில நாளைக்கு முன்னால்தான் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்திருந்த தம் மாப்பிள்ளை பட்டாபிராமனைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தார். இராஜம்பேட்டையிலிருந்து நாலு மைல் தூரத்தில் இராத்திரி பத்து மணிக்குக் கட்டை வண்டியில் வந்து கொண்டிருந்தபோது முகமூடி அணிந்திருந்த திருடர்கள் ஏழெட்டுப்பேர் வந்து சூழ்ந்து கொண்டு வண்டிக்காரனையும் கிட்டாவய்யரையும் நன்றாக அடித்து விட்டு அவரிடமிருந்த மணிபர்ஸை அபகரித்துக் கொண்டு போய் விட்டார்கள். கிட்டாவய்யர் உடம்பெல்லாம் காயங்களுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அன்றிரவே அவருக்குக் கடுமையான சுரமும் வந்துவிட்டது.
இந்தச் செய்தியை அறிந்ததும் தேவபட்டிணத்திலிருந்து பட்டாபிராமனும் லலிதாவும் குழந்தைகளுடன் புறப்பட்டு வந்தார்கள். இரண்டு நாள் இருந்துவிட்டுப் பட்டாபிராமன் போய் விட்டான். கிட்டாவய்யரும் சரஸ்வதி அம்மாளும் கேட்டுக் கொண்டதின் பேரில் லலிதாவையும் குழந்தைகளையும் இன்னும் சில நாள் இருந்துவிட்டு வரும்படி சொல்லிப் போனான். ரேழிப் பக்கத்துக் காமரா அறையில் போட்டிருந்த கட்டிலில் கிட்டாவய்யர் படுத்திருந்தார் - அவருக்கு உடம்பு இப்போது சௌகரியமாகி விட்டது.
ஆனாலும் முன்போல் எழுந்து நடமாடும் படியான தெம்பு இன்னும் ஏற்படவில்லை, இப்போது அவர் அரைத் தூக்கமாயிருந்தார். வீட்டுக்குள்ளே கூடத்தில் பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் முதன் முதலில் பார்த்த காட்சியை இன்றைக்கும் பார்க்கிறோம். லலிதாவுக்கு அவளுடைய தாயார் சரஸ்வதி அம்மாள் தலைவாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். ஆனால் லலிதா முன்னைப் போல் இப்போது சின்ன வயதுக் கன்னிப் பெண் அல்ல. அவள் - இரண்டு குழந்தைகளின் தாயார். அந்தக் குழந்தைகள் இருவரும் - பட்டுவும் பாலுவும் - சற்றுத் தூரத்தில் உட்கார்ந்து பொம்மைகள் நிறையப் போட்டிருந்த ஒரு தமிழ் சஞ்சிகையைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
லலிதாவின் முகமண்டலத்தில் அவ்வளவாகச் சந்தோஷம் குடிகொண்டிருக்கவில்லை. அவளுடைய கண்கள் கலங்கியிருந்தன. மழை பொழியத் தொடங்குவதற்குத் தயாராக இருக்கும் மாரிக்காலத்து இருண்ட மேகங்களை அவளுடைய கண்கள் அச்சமயம் ஒத்திருந்தன. ஏதாவது ஒரு சின்னக் காரணம் ஏற்பட வேண்டியதுதான்; அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் மழை சொரியத் தொடங்கிவிடும். அத்தகைய காரணத்தை ஏற்படுத்திக் கொடுக்க லலிதாவின் தாயார் சரஸ்வதி அம்மாள் இருக்கவே இருந்தாள். லலிதாவின் தலையை வாரிக்கொண்டே தன்னுடைய மனக்குறைகளையும் அந்த அம்மாள் வெளியிட்டுக் கொண்டிருந்தாள்.
"இறுக்கம் தாங்கவில்லை; ஆனால் பாழும் மழை மட்டும் பெய்ய மாட்டேன் என்கிறது! வயல்களில் பயிரெல்லாம் காய்கிறதாம்! தெய்வம் எப்போது கண் திறந்து பார்க்குமோ தெரியவில்லை. இந்தக் கலியுகத்தில் தெய்வத்துக்கே சக்தி இல்லாமல் போய் விட்டது போல் தோன்றுகிறது. இல்லாவிட்டால் இந்த மாதிரி அக்கிரமங்கள் எல்லாம் உலகத்தில் நடக்குமா? உங்கள் அப்பா பெயரைச் சொன்னால் நாடு நகரமெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்த உலகம் உண்டு. இப்போது அவருடைய வண்டியைத் திருடர்கள் வழி மறித்து அடித்துப் பணப் பையைப் பிடுங்கிக்கொள்ளும் காலம் ஏற்பட்டுவிட்டது. ஒரு அதிகாரம், ஒரு அத்து - இப்போதெல்லாம் கிடையாது. பயம் என்பதே இல்லாமல் போய்விட்டது.
" லலிதா குறுக்கிட்டு, "அம்மா, ஊரெல்லாம் அப்பா பெயரைக் கேட்டுப் பயந்து கொண்டிருந்த காலத்திலும் நீ மட்டும் பயப்பட வில்லையே? எதிர்த்துப் பேசிக்கொண்டுதானே இருந்தாய்!" என்றாள். "நன்றாயிருக்கிறதடி நீ சொல்வது! என் மாதிரி புருஷனுக்குப் பயந்து எல்லாரும் நடந்தால் போதாதா? ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசுவதற்குக் கூடப் பயந்து பயந்து இருந்த படியால் தான் இந்தக் குடும்பம் இந்தக் கதிக்கு வந்தது! நான் மட்டும் எதிர்த்துப் பேசியிருந்தேனானால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? உன்னுடைய கலியாணத்தையே எடுத்துக்கொள்! என் இஷ்டப்படி விட்டிருந்தால் இந்த இடத்தில் உன்னைக் கொடுத்திருப்பேனா? கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கிறது என்று சொல்வார்கள். அந்த மாதிரி உன்னுடைய கதி ஆகிவிட்டது!...."
"ஏதாவது உளறாதே, அம்மா குழந்தைகளின் காதில் விழப்போகிறது." "விழுந்தால் என்ன? நன்றாய் விழட்டும். உன் பெண்ணும் பிள்ளையும் வேண்டுமானால் மாப்பிள்ளையிடம் போய்ச் சொல்லட்டும். எனக்கு ஒருவரிடத்திலும் பயம் கிடையாது. காங்கிரஸாம்! காந்தியாம்! இரண்டு வருஷம் ஜெயிலிலே இருந்து விட்டு வந்தாராம்! எதற்காக ஜெயிலுக்குப் போக வேணும்! திருடினாரா? கொள்ளையடித்தாரா? மாப்பிள்ளைக்குப் போட்டியாக இந்தப் பிராமணரும் ஜெயிலுக்குப் போய்விடுவாரோ என்று எனக்குப் பயமாயிருந்தது. ஏதோ நான் செய்த பூஜா பலத்தினால் அந்த ஒரு அவமானம் இல்லாமற் போயிற்று.
உன் அகத்துக்காரர் இரண்டு வருஷம் ஜெயிலில் இருந்து விட்டுத்தான் வந்தாரே? என்ன பலனைக் கண்டார்? சில பேர் காங்கிரஸிலே சேர்ந்து ஜெயிலுக்குப் போய் வந்து விட்டு மெம்பர், கிம்பர் என்று ஆகிச் சம்பாதித்து வருகிறார்களே? அப்படியாவது ஏதாவது உண்டா? அதுவும் கிடையாது...""அம்மா! இவர் மற்றவர்களைப்போல் சட்டசபை மெம்பர் ஆவதற்காகவோ, வேறு உத்தியோகப் பதவிக்காகவோ ஜெயிலுக்குப் போகவில்லை; சுயராஜ்யத்துக்காகப் போனார்!...." "சரி அப்படியாவது சுயராஜ்யம் வந்ததா? சொல்லேன், பார்ப்போம்! யுத்தத்திலே ஹிட்லர் ஜெயித்துவிடப் போகிறான் - இங்கிலீஷ்காரன் வாயிலே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டு போய்விடப் போகிறான் என்று எல்லோருமாகச் சேர்ந்து சொன்னீர்கள். உன் அண்ணா சூரியா இருக்கிறானே, அந்தச் சமர்த்துப் பிள்ளை, உன் அப்பாவைப் பட்டாமணியம் வேலையை விட்டுவிட வேண்டும் என்று சொன்னான் கடைசியில், என்ன ஆயிற்று?
சுயராஜ்யத்தையும் காணோம், கியராஜ்யத்தையும் காணோம். அதுதான் போனாற் போகிறது என்றால், இப்போதாவது மாப்பிள்ளை கோர்ட்டுக்குப் போய் நாலு பணம் சம்பாதிக்கலாம் அல்லவா? வக்கீல் வேலைக்கு படித்துவிட்டு வீட்டிலே கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன பிரயோஜனம்? இல்லையென்றால், ஏதாவது உத்தியோகமாவது தேடிக்கொள்ள வேணும். சும்மாயிருந்தால் எப்படி ஜீவனம் நடக்கும். நீயோ சம்சாரியாகி விட்டாய்! இங்கேயாவது முன்னைப் போல் கொட்டிக்கிடக்கிறதா? பணத்தினால் காசினால் அதிகம் செய்ய முடிகிறதா? அப்படிச் செய்தால்தான் என்ன? உனக்கு வைத்துக் கொண்டு வாழத் தெரியவில்லை. அவர்தான் சொன்னார் என்று ஒரு தங்க ஒட்டியாணத்தை விற்றுவிட்டேன் என்று சொல்கிறாயே? உன்னுடைய சமர்த்தை என்னவென்று சொல்லுவது? கட்டிய பெண்டாட்டிக்கு ஒரு புருஷன் புதிதாக நகை பண்ணி போடாவிட்டாலும், ஏற்கெனவே பண்ணிய நகையை விற்பானோ! இது என்னடி வெட்கக்கேடு...?"
"அம்மா! இப்படியெல்லாம் நீ அவரைப் பற்றிக் குறை சொல்வதாயிருந்தால், இரண்டு நாளைக்குப் பிறகு போகிறவன் இன்றைக்கே புறப்பட்டு விடுகிறேன்..." என்றாள் லலிதா. "போ!போ! இந்த நிமிஷமே புறப்பட்டுவிடு! என் தலையெழுத்து அப்படி. நான் யாருக்கு என்னமாய் உழைத்தாலும் என் பேரில் யாருக்கும் ஈவிரக்கம் கிடையாது. தான்பெற்ற பிள்ளையும் பெண்ணும் தனக்கே சத்துரு என்றால், அது லையெழுத்துத் தானே? பத்து மாதம் நான் உன்னை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கவில்லையா? பெற்ற தாயாருக்கு ஒரு வார்த்தை சொல்லுவதற்குப் பாத்தியதை கிடையாதா?" "என்னை நீ எவ்வளவு வேணுமானாலும் சொல், அம்மா! பொறுத்துக் கொள்கிறேன்.
ஆனால் அவரைப் பற்றி ஒன்றும் சொல்லாதே! நீ தானே அவரைத் தேடி என்னை அவருக்குக் கலியாணம் செய்து கொடுத்தாய்? இப்போது குறை சொல்லுவதில் என்ன பிரயோஜனம்?" என்று கேட்டாள் லலிதா. "நான் ஒன்றும் இந்த மாப்பிள்ளையைத் தேடிப் பார்த்துப் பிடித்துக் கொண்டு வரவில்லை. உன் அண்ணா சூரியா சொன்னான் என்று உன் அப்பா ஏற்பாடு செய்துவிட்டார். ஆயிரம் ரூபாய் சம்பளக்காரனை நான் உனக்காக வரன் பார்த்திருந்தேன். கொடுத்து வைக்கவில்லை, பம்பாயிலிருந்து அந்த மகராஜி - உன் அத்தை, - சரியான சமயம் பார்த்து அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள். பெண்ணைப் பார்க்க மாப்பிள்ளை வருகிற சமயத்தில் வீட்டில் வேறு பெண் இருக்ககூடாது என்று முட்டிக் கொண்டேன்.
என் பேச்சை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. நான் என்ன இங்கிலீஷ் படித்தவளா? நாகரிகம் தெரிந்தவளா? பட்டிக்காட்டு ஜடம் தானே; என் பேச்சை யார் கேட்பார்கள்? ஆனாலும் இந்தப் பட்டிக்காட்டு ஜடம் சந்தேகப்பட்டுச் சொன்னது போலவே நடந்துவிட்டது. உன்னைப் பார்ப்பதற்காக வந்தவனை உன் அத்தங்கா சீதா மயக்கிவிட்டாள். அவளிடம் என்ன மோகனாஸ்திரம் வைத்திருந்தாளோ, என்ன சொக்குப்பொடி வைத்திருந் தாளோ தெரியாது. வந்தவனும் பல்லை இளித்து விட்டான்! உன்னுடைய அதிர்ஷ்டம் கட்டையாகப் போய் விட்டது...." "இல்லவே இல்லை, என் அதிர்ஷ்டம் நன்றாயிருந்தது. அந்த ஆயிரம் ரூபாய் சம்பளக்காரனைச் சீதா கலியாணம் செய்து கொண் டாளே அவளுடைய கதி என்ன ஆயிற்று? அவள் பட்ட கஷ்டமெல்லாம் உனக்குத் தெரியாதா, அம்மா? போன மாதத்திலே கூடச் சித்ரா கடிதம் எழுதியிருந்தாள்.
சீதாவின் புருஷன் ரொம்பப் பொல்லாதவன், அயோக்கியன் என்று. அதையெல்லாம் சொல்லக்கூட எனக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு என்னைக் கலியாணம் பண்ணிக் கொடுத்திருந்தால் நானும் சீதாவைப் போலத்தானே கஷ்டப்பட வேண்டும்?" என்றாள் லலிதா. "அப்படி ஒன்றும் கிடையாது, அந்தப் பெண் சீதாவுக்குத் துக்கிரி ஜாதகம். அதனாலே அவள் போன இடம் அப்படியாயிற்று. உன்னை அந்த வரனுக்குக் கொடுத்திருந்தால் இப்போது ராஜாத்தி மாதிரி இருப்பாய்!"
"என்னுடைய ஜாதகம் அதிர்ஷ்ட ஜாதகமாயிருந்தால், நான் வாழ்க்கைப்பட்ட இடத்தில் சுபிட்சமாயிருக்க வேண்டுமே? அவ்விதம் ஏன் இல்லை?" என்று கேட்டாள் லலிதா. "உன் அரட்டைக் கல்லிக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. நீ போன இடத்தில் இப்போது என்ன குறைந்து போய்விட்டது? வீடு, வாசல், பணம், சொத்து, எல்லாந்தான் இருக்கிறது. நாமாகக் கஷ்டத்தை வரவழைத்துக் கொள்வதற்கு அதிர்ஷ்டம் என்ன செய்யும்? ஜாதகம் என்ன செய்யும்? உன் தங்க ஒட்டியாணத்தை விற்றுத்தான் சாப்பிடவேண்டும் என்று ஆகிவிடவில்லை. மாப்பிள்ளைக்கு ஏதோ கிறுக்குப் பிடித்திருக்கிறது. நீயும் சேர்ந்து கூத்தடிக்கிறாய்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். "சரி, அம்மா, சரி! தலை பின்னியாகி விட்டதோ இல்லையோ? போதும், விடு!" என்றாள் லலிதா. இவ்வளவு நேரமும் சரஸ்வதி அம்மாள் தன்பெண்ணின் கூந்தலைவாரி ஜடை போட்டுக் கொண்டி ருந்தாள்.
கூந்தலை விட்டுவிட்டால் அப்புறம் லலிதாவை உட்கார வைத்துத் தன் மனக் குறைகளைக் கேட்கச் செய்ய முடியாது என்று சரஸ்வதி அம்மாளுக்குத் தெரிந்திருந்தது. ஆகையினாலேயே சிறிதும் அவசரப்படாமல் சாவகாசமாகக் கூந்தலை வாரிப் பின்னி விட்டாள். அவள் தலை முடிந்த சமயத்தில் வாசலில் "தபால்!" என்ற சத்தம் கேட்டது. லலிதா உடனே அம்மாவின் பிடியிலிருந்து தலைப் பின்னலைப் பலவந்த மாகத் திமிறி விடுவித்துக்கொண்டு எழுந்தாள். "இவ்வளவு வயதாகியும் உன் சுபாவம் மட்டும் மாறவில்லை. அந்த நாளில் திமிறிக் கொண்டு ஓடியது போலவே இப்போதும் ஓடுகிறாய். நல்லவேளையாகத் தபால் ஆபீஸுக்கே ஓடிப் போகாமல் வீட்டு வாசலோடு நிற்கிறாயே, அதுவரையில் விசேஷந் தான்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். அவளுடைய வார்த்தைகளை அரைகுறையாகக் காதில் வாங்கிக் கொண்டு லலிதா வாசற்பக்கம் சென்றாள்.