அத்தியாயம் 1

331.55k படித்தவர்கள்
45 கருத்துகள்

விமானம் எட்டு கிலோமீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருப்பதாக கேப்டன் அறிவித்த வேளையில் இன்னொருவரின் கூச்சலும் சேர்ந்து கேட்டது. 

விடியல் நேரத்து இரவு. பாதி தூக்கத்தில் இருந்த பலரும் பதறி எழுந்துவிட்டனர். விமானத்தில் இரவு சாப்பிட்ட உணவின் வாசம், பருகப்பட்ட குடியின் நெடி அனைத்தும் கலந்துகிடந்தது. கூச்சல் போட்டவரும் அதிகம் பருகியிருந்தார்.

சென்னையிலிருந்து புறப்பட்ட நேரத்தில் இருந்தே அவரிடமிருந்து சலசலப்பு இருந்தது. மரியாதைக்குரிய தோற்றத்துடன் இருந்தாலும், நிறைய குடித்துவிட்டு கூச்சல் போட்டுக்கொண்டிருந்ததால் மக்கள் அவர்மீது வெறுப்புடன் இருந்தார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் கூச்சல் போடவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே அவர் அதிகமாகக் குடித்துக்கொண்டிருந்தார். போஷாக்கான உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டியவர் எனத் தோற்றமளித்தார். அநியாயத்துக்கு மெலிந்திருந்தார். கோட் அணிந்திருந்தார். அவருடைய உடம்பு (எலும்பு), கோட்டுக்கான ஸ்டாண்டு போல செயல்பட்டது. எழுந்து நின்று குரல் கொடுக்க நினைத்து நிற்க முடியாமல் அமர்ந்தார். விழுந்தார் என்பதுதான் சரியான பதம்.

‘’மொத்த பேரும் காலி. எழுதி வெச்சுக்கங்க’’ எனத் தமிழில் சொல்லிவிட்டு, ஆங்கிலத்தில் தொடர்ந்தார். ‘’ஒருவரும் உயிர் வாழப் போவதில்லை. உயிர்ப் போர் தொடங்கிவிட்டது.’’

‘’டாக்டர் பரந்தாமன் உங்களைப் போன்றவரே இப்படிச் செய்யலாமா?’’ எனப் பணிப்பெண் தன் பதவியின் பொருளுணர்ந்து பணிந்து கேட்டாள். சிக்கனமான ஆங்கில வாக்கியம். சிறிய கண்கள் கொண்ட மங்கோலியப் பெண் அவள். அவளுடைய மஞ்சள் நிறத்துக்கு சிவந்த உதட்டுச் சாயம் அநியாயத்துக்குக் கவர்ச்சியூட்டியது.

அவர் ஒரு டாக்டர் என்பது அப்போதுதான் விமானத்தில் இருந்த பலருக்கும் தெரிந்தது.

‘’இப்போது என்ன பாதியில இறக்கி விட்டுவிடுவீர்களா?’’ என அவர் எகதாளமாகக் கேட்டுவிட்டு சிரித்தார். சிரிப்பின் சுவையற்ற சிரிப்பு அது. அளவுக்கு மீறிய வேதனையில் ஒருவரால் அப்படிச் சிரிக்க இயலும்.

‘’அடுத்த முறை நீங்கள் விமானத்தில் பறப்பதற்கு தடைகள் வரலாம்’’ காட்டமாகத் திருப்பிச் சொன்னாள் பணிப்பெண்.

அந்த டாக்டர் தன் விழிகளை அகலத் திறந்து வியப்புடன் அந்தப் பெண்ணைப் பார்த்தார். ஏதோ சொல்ல நினைத்து வார்த்தைகள் பயனளிக்காமல் தலையை மட்டும் இட வலமாக அசைத்தார்.

தட்டுத்தடுமாறி எழுந்து அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றார். ‘’பறக்க விடாமல் செய்துவிடுவாயா? உனக்கொரு ரகசியம் சொல்லட்டுமா?’’

அந்தப் பெண் அமைதியாக நின்றிருந்தாள்.

‘’இன்னும் சிறிது நாளில் ஒரு ஃப்ளைட்டும் பறக்க போவதில்லை. உலகம் முழுக்க ஒரு ஃப்ளைட்டும் பறக்காது. எழுதி வைத்துக்கொள்.’’

ரகசியம் சொல்கிறேன் என்று மூன்று வரிசைக்குக் கேட்கும் படியாக சத்தமாகவும் சொன்னார். முகக்கவசத்தைக் கழற்றி எறிந்தார். ‘’யாரும் மாஸ்க் போட மாட்டேங்கிறீங்க… நான் மட்டும் ஏன் போடணும்?’’ என்றார். பைத்தியக்காரத்தனமான உளறல் என காதில் கேட்ட அனைவருமே ஆயாச சலிப்புடன் வெறுப்புடன் தலையைத் திருப்பிக்கொண்டனர். பணிப்பெண் அவரை வலிக்காமல் உட்காரவைத்துவிட்டு, கம்பளியால் போர்த்திவிட்டாள்.

‘’சரி சார். நீங்கள் சொல்வது போலவே செய்யலாம். ஒரு விமானமும் பறக்க வேண்டாம். இந்த வானத்தில் பறவைகள் மட்டும் பறந்தால் போதும். சரிதானே?’’ என்றாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

‘’நீ என்னை வஞ்சப் புகழ்ச்சி செய்கிறாய். நான் உண்மையைச் சொல்கிறேன்.’’

‘’எவ்வளவு பெரிய டாக்டர் நீங்கள்? நீங்களே இப்படி மற்றவர்கள் வெறுக்கும்படி நடந்துகொள்ளலாமா?’’ பணிப்பெண் பெருமைப்படுத்தும்விதமாக அவருடைய குற்ற உணர்ச்சியைத் தீண்டினாள்.

‘’விமானங்களே இல்லாதபோது என்னைப் பயணிக்கவிடாமல் செய்வது எப்படி?’’ என முனகினார்.

‘’நீங்கள் ஓய்வெடுங்கள். உறங்கினால்தான் நல்லது.’’

‘’நான் உறங்க வேண்டுமானால் ரெமி மார்ட்டீன் வேண்டும்.’’

‘’கொடுக்கச் சொல்கிறேன்.’’ மங்கோலி, அவர் சௌகரியமாக உட்கார்ந்திருக்கிறாரா என நிதானமாகப் பார்த்தாள்.

அவர், ‘’தாங்க்ஸ்’’ என்றபடி கண்களை மூடினார். தலை ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் உடனே உறங்க ஆரம்பித்தார். அவருக்கு ரெமி மார்ட்டீன் ஆர்டர் செய்யலாமா என யோசித்து தேவையில்லை எனத் தலையை அசைத்து மறுத்துக்கொண்டாள்.

டாக்டருக்கு அடுத்த வரிசையில் ஐந்து பெண்கள் இருந்தனர். தமிழகத்திலிருந்து கம்போடியா செல்கிறவர்கள். அங்கு கலை இலக்கிய தமிழ்ச் சங்கத்தில் அவர்களுக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. அதற்காகப் பயணிக்கிறவர்கள்.

நடுவே மூன்று இருக்கையும் இரண்டு ஜன்னல் ஓரங்களில் இரண்டிரண்டு இருக்கைகளும் கொண்ட அமைப்பு. நடுவில் இருந்த மூன்று இருக்கையின் நடுவே இருந்த கலைச்செல்வியின் காதுகளில் டாக்டரின் ரகசியம் தெளிவாக விழுந்தது. வெளிநாட்டுப் பயண உற்சாகம், கேளிக்கை காரணமாக அவளும் சிறிது மது அருந்தியிருந்தாள். அதனால் அந்த ரகசியத்தைக் கேட்டும் கவனம் கொடுக்க முடியாதவளாக இருந்தாள். ‘விமானங்கள் பறக்காது என்றால் என்ன அர்த்தம்? விமானங்களுக்கு விடுமுறையா?’ என ஏதோ நினைக்க ஆரம்பித்தபோது, ‘’போன வருஷம் யாருக்கெல்லாம் அவார்டு கொடுத்தாங்க?’’ என ஷைனி கேட்டாள். 

ஐந்து பெண்களைத் தரவரிசைப்படுத்தினால் ஷைனி, ஒன்று. ரோஸ் மில்க்கில் செய்தது போல இருந்தது முகம். எலுமிச்சைப் பழத்தோலின் நிறத்தையும் நினைவுபடுத்தினாள். இப்படியொரு நிறக் குழப்பத்தைக் கலைச்செல்வி ஒரு போதும் அனுபவித்ததில்லை. சென்னை விமான நிலையத்தில் ஐந்து பேரும் ஒருங்கிணைக்கப்பட்டு, வானம் ஏறியபோதும் மற்ற நான்கு பெண்கள் மட்டுமே ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டனர். ஷைனி ஒரு வார்த்தைதான் அனைவரையும் பார்த்துப் பேசினாள். அது அவளுடைய பெயர். அறிமுகம் செய்துகொண்டாள். அழகுக்கு ஏற்ப கொஞ்சம் கர்வப் பேர்வழியாக இருப்பாளோ என நால்வரும் அதற்கு மேல் அவளிடம் அளவளாவவில்லை. அவள் இப்போது இப்படி திடீரென்று பேசியதில் கலைச்செல்விக்குத் தன்னிச்சையாகப் பெருமிதம் ஏற்பட்டுவிட்டது. அவளிடம் பேசுகிற வாய்ப்பில் மகிழ்ந்து விமான விடுமுறையை மறந்தே போனாள்.

‘’நமக்கு வந்த லெட்டர்லயே லாஸ்ட் இயர் வின்னர் லிஸ்ட் இருந்துச்சே?’’ எனத் தமிழும் ஆங்கிலமும் கலந்து சொன்னாள் கலைச்செல்வி.

‘’ஐ ஸி. ஐ மிஸ் டு நோட்டீஸ்டு இட்…’’

‘’நீங்க ஃபேஷன் டிசைனர் அவார்டு வாங்கறீங்க இல்ல?’’ எனப் பேச்சுக்கொடுத்துப் பார்த்தாள். தலையசைப்போடு நிறுத்திக்கொண்டாள் ஷைனி.

இவள் என்ன விருது வாங்கப் போகிறாள் என மேற்கொண்டு எதுவும் பேசுவாள் என்று எதிர்பார்த்து கலைச்செல்வி சும்மா புன்னகைத்துப் பார்த்தாள். ராகவி, ‘’நீ எவ்வளோ சிரிச்சாலும் அவ பேச மாட்டா’’ காதருகே கிசுகிசுத்தாள். ராகவி, இளம் தொழிலதிபர் விருது பெறப் போகிறவள். கலைச்செல்விக்கு இளம் கவிஞர் விருது. பவித்ராவுக்கு மருத்துவர் விருது. ராஜலட்சுமிக்கு நடனக்கலைஞர் விருது. அதன்பிறகு யாரும் பேசிக்கொள்ளவில்லை. கண் லேசாக அசந்தது போல இருந்தது. மைக்கில் அறிவிப்பு வந்தபோது, விமானம் ரன் வேயில் ஓடிக்கொண்டிருந்தது.

விமானம் பாங்காக் விமான நிலையத்தின் தரையைத் தீண்டியபோது விடிகாலைப் பொழுதாக இருந்தது. உலகில் உள்ள அத்தனை விமானங்களும் ஒரே இடத்தில் இறைந்து கிடந்தன. விமான படிக்கட்டு இருந்த இடத்தில் ஒரு வழியை இணைத்து, எல்லோரையும் அதன் வழியே ஏர்போர்ட்டுக்குள் கவ்விக்கொண்டனர். கலைச்செல்விக்கு எல்லாமே புது அனுபவம். எல்லா இடங்களிலும் நடைமேடை. மனிதர்கள் கால்களை சும்மா வைத்திருந்தால் போதும். மேடை நடந்தது அவளுக்குப் பிரமிப்பாக இருந்தது. சென்னையில் நகரும் மேடைகளைப் பார்த்திருந்தாலும் இங்கே இருந்த பிரம்மாண்டம்தான் ஆச்சர்யத்துக்குக் காரணம். எந்தெந்த விமானங்களைப் பிடிக்க எந்த மேடையில் செல்ல வேண்டும் என்று அறிவிப்புகள்… அம்புக்குறிகள். ஏறத்தாழ எல்லா நாட்டு மக்களும் சாம்பிளுக்கு இருந்தார்கள். பிரமித்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தாள். ராஜலட்சுமியும் ஷைனியும் வெளிநாட்டு விமான அனுபவங்கள் பெற்றவர்கள். பவித்ராவுக்கு வெளிநாடு என்றால் எப்படித்தான் இதற்கெல்லாம் பிரமிக்கக் கூடாது என்ற எண்ணம்.

கண்ணாடி திரைகளுக்கு வெளியே இந்தியாவைப் போலவே வானம். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு விமானம் புறப்பட்டபடி இருந்தது. கொசு மாதிரி எங்கு பார்த்தாலும் விமானங்கள்.

விமான நிலையத்தின் உள்ளே நடு அரங்கில் இந்தியப் புராணக் கதையைச் சொல்லும் மிகப் பிரமாண்டமான சிற்பம். மிக நீளத்துக்கு அசுரர்களும் தேவர்களும் மேருமலையைக் கடைந்து கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

பவித்ரா ஷெல்பி மூலம் முழு நாகத்தையும் படமெடுக்க முயற்சி செய்தாள். வாலின் நுனியைத்தான் எடுக்க முடிந்தது.

ஷைனி, ‘’நீங்க போய் பாம்பு முன்னாடி நில்லுங்க. நான் எடுக்கிறேன்’ என்றாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

வாலைப் பிடித்துக்கொண்டிருந்த தேவர்களும் தலையைப் பிடித்துக்கொண்டிருந்த அசுரர்களும் ஏர்போர்ட்டை சுமார் கால் கிலோமீட்டருக்கு வியாபித்திருந்தார்கள். முழு பாம்பையும் ஒரு போட்டோவில் எடுப்பது சிரமமாக இருந்தது.

‘’நம்ம ஊர் கடவுள் இவ்வளவு தூரம் பரவியிருக்கு… கிரேட்’’ பெருமையாக இருந்தது ராஜலட்சுமிக்கு.

யாரும் அவளைப் பின்பற்றி எதுவும் சொல்லாததால் அவளே தொடர்ந்தாள். ‘’பாற்கடலைக் கடைந்தா அமுதமும் வரும்… விஷமும் வரும். வாட்ட பிலாஸபி. எல்லா விஷயத்திலும் நல்லதும் இருக்கு… கெட்டதும் இருக்கு’’ என்றாள்.

‘’சிவன், விஷ்ணு, தேவர்கள், அசுரர்கள் எல்லோரும் இந்தக் கதையில வர்றாங்க’’ என்றாள் கலைச்செல்வி.

அவர்கள் மேற்கொண்டு இந்தியப் புராணங்களில் புகுவதற்குள் ‘சீயெம் ரீப் செல்லும் விமானம் காத்திருக்கிறது’ என்ற அறிவிப்பு ஒலிக்கத் தொடங்கியது. கேட் நம்பர் 22. அவர்கள் இருந்தது கேட் நம்பர் ஆறு. இன்னும் நிறைய கேட்டுகளைக் கடந்து, 22-ஐ தேடி அடைந்து விமானத்தைப் பிடிக்க வேண்டும். 

‘’சீக்கிரம்… சீக்கிரம் போங்க’’ என ஐந்து பேரும் மாறி மாறி சொல்லிக்கொண்டனர்.

ஏழு, எட்டு, ஒன்பது என அவர்களை அறியாமலேயே முணுமுணுத்தனர். கேட் நம்பர் 22-ஐ அடைந்தபோது இவர்கள் செல்லவேண்டிய விமானம் காத்திருந்தது.

பாங்காக் வருகிறவர்களின் கேளிக்கை பெரும்பாலும் மது, மாது. சிறும்பாலும் படகு சவாரி, கோயில், கடற்கரை. விமான நிலையத்திலிருந்து பாங்காக் நகரத்துக்குள் நுழைகிறவர்களிடம் உல்லாச உலகத்தில் நுழைகிற ஒருவித தகிப்பு தெரிந்தது.

கலைச்செல்வி சற்றே பதற்றமாக எந்த தைரியத்தில் இவ்வளவு தூரம் வந்தோம் என்று யோசிக்க ஆரம்பித்த நேரத்தில்...

இரவில் விமானத்தைக் கலவரபடுத்திக் கொண்டிருந்த டாக்டரைப் பார்த்தாள். அவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து உருட்டி சென்றுகொண்டிருந்தனர். டாக்டர் சுயநினைவில் இருப்பது போல் தெரியவில்லை. இறந்துவிட்டார் போல இருந்தது. கொன்றுவிட்டார்கள் போலவும் இருந்தது. ஸ்டெச்சரைத் தள்ளிக்கொண்டு போனவர்கள் ஜிம்பாய் போல இருந்தார்கள். பவுன்ஸர்கள். டாக்டரை அழைத்துச் செல்லவில்லை… கடத்திச் செல்கிறார்கள் என்பது பார்த்ததும் தெரிந்தது. ராத்திரி ஏதோ சொல்ல வந்தார். அனைவருமே அவரை அலட்சியப்படுத்திவிட்டனர். சொல்ல வந்தது பெரிய ரகசியம். சரியான முறையில் சொல்லவில்லை. சரியான முறையில் யாரும் கேட்கவும் இல்லை.

‘’மொத்த பேரும் காலி. எழுதி வெச்சுக்கங்க’’ என அவர் சொன்னது கனவில் கேட்டது போல இருந்தது. ‘ஒரு விமானமும் பறக்காது’ என்றாரே… கலைச்செல்வி குழப்பமாக அந்த ஸ்ட்ரெச்சரைப் பார்த்தாள்.

பவித்ரா ஓடிவந்து, ‘’நம்ம பேரைச் சொல்லித்தான் கூப்பிட்டுக்கிட்டிருக்காங்க. சீக்கிரம் வாங்க’’ என கலைச்செல்வியை இழுத்துக்கொண்டு சென்றாள்.

அவளுடன் ஓடிக்கொண்டே டாக்டரைப் பார்க்க முயன்றாள். அங்கே ஸ்ட்ரெச்சர் மட்டும் அனாதையாகக் கிடந்தது. டாக்டரைக் காணோம்.

(துரத்து…)