அத்தியாயம் 1

45.97k படித்தவர்கள்
5 கருத்துகள்

"என்னைக்கேக்காம நீங்களா எப்டிம்மா நிச்சியம் பண்ணுவீங்க?. நான் வித்யாவ லவ் பண்ற விஷயம் உங்களுக்கு தெரியும் தான, தெருஞ்சிருந்தும் இப்டி பண்ணா என்னமா அர்த்தம்?..." நடுவீட்டில் நின்று கொண்டு சந்திரன் தாயிடம் வினவ சௌந்தரம் இயல்பாக, "என்ன அர்த்தம்?. அந்த வித்யா பொண்ண உனக்கு கட்டி வக்கிறதுல எனக்கு இஷ்டமில்லேன்னு அர்த்தம்..."

"என்னால காதலிச்ச பொண்ண விட்டுட்டு வேற ஒருத்திய கல்யாணம் பண்ண முடியாது..."

"அப்ப நீ என்னையும் இந்த குடும்பத்தையும் மறந்துட வேண்டியது தான்..." அவன் இயலாமையில், "ம்மா..." தாயும் மகனும் பேசிக்கொண்டிருக்க, தனக்கும் இதற்கும் சம்ந்தமே இல்லை என்பது போல், தொலைக்காட்சி பெட்டியில் செய்திகளில் மூழ்கியிருந்தார் சந்திரனின் தந்தை வரதராஜன்.

தன் அறையில் மேஜையின் மேல் விரித்து வைத்திருந்த காகிதத்தில் தன் கவனத்தை பதித்திருந்த மதுரவனின் கைபேசி ஒலிக்க, அதை எடுத்து பேசலானான். "சொல்லுங்க சார்..." எதிர்புறம் சொன்ன பதிலில் முகம் மலர்ந்தவன், "நிஜமாவா சார்..." அடுத்த நொடியே யோசனையுடன், "அந்த பொண்ண நீங்க கஷ்டபடுத்தலேல, அவங்களா தான ஒத்துக்கிட்டாங்க..." ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு உறுதி செய்து கொண்டவன், சில நிமிடங்களில் தன் தோள் பையோடு வெளியேறினான்.

அறைக்கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டு மூவரது கவனமும் அவனிடம் திரும்ப, அதை எதையும் சட்டை செய்யாது வீட்டு வாயிலில் நிறுத்தியிருந்த தன் இருசக்கர வாகனத்தை கிளப்பி கொண்டு சென்றான். அடுத்த அரை மணிநேரத்தில் ஒரு தங்கும் விடுதிக்குள் நுழைந்தவன், தான் வழக்கமாக பதிவு செய்யும் அறைக்கு சென்றான். கதவை திறந்ததும் அனிச்சையாய் அவனது விரல்கள் விளக்கை அணைத்தது. உள்ளே ஏற்கனவே அவள் அமர்ந்திருந்தாள். "பயப்படாதிங்க..." என்றவன் அவள் செய்ய வேண்டியதை சொல்ல, ஐந்து நிமிடங்களில் அவள் குரல் கொடுத்தாள்.

மங்கலான வெளிச்சம் தரும் இரவு விளக்கை அவன் ஒளிர விட, மற்றவர் கண்களை உறுத்தாத வண்ணம் அவளது உடைகளை களைந்திருந்தாள். உடலில் இருந்த காயங்கள் அவள் அடைந்திருக்கும் வலிகளை சொல்ல, ஒரே நிமிடத்தில் அவனது வேலையை முடித்து விட்டு, "டிரஸ் பண்ணிக்கோங்க மா..." என பக்கவாட்டில் இருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்தான், ஊராருக்கு மதுவாகவும், அவனது பாட்டிக்கு முரளியாகவும் இருக்கும் மதுரவன்.

மாலை மங்கும் நேரம். வானமகள் தன் நீலநிற உடை களைந்து, கருமை பூசிக்கொள்ள தயாரானாள். வெண்ணிலவன் வருகைக்கு ஆயத்தம் நடந்து கொண்டிருக்க, வீண்மீன் வீரர்கள் அணிவகுப்பு நடத்தி கொண்டிருந்தனர். நிமிடங்களின் வேகத்தில் கருமேகப் பொதிகைகள் மெல்ல நகரந்து வழிவிட, பிறைநிலவன் ஆகாயமங்கையின் மடியில் தஞ்சமடைந்தான். தன் வீட்டு மாடியில் நின்றபடி, காரிருளில் வலம் வரும் இரவு பூக்களில் தன் விழிகளை பதித்திருந்தான் மதுரவன்.

சில நிமிடங்களில் அவனது கவனம் கையில் இருந்த புகைப்படத்திற்கு மாறியது. அவளது முகம் இல்லை, உடைகளற்ற உடலும் அதிலிருந்த காயங்களும் மட்டுமே அதில் இருந்தன. ஆம், அவளது முகத்தை ஒரு கையால் மறைத்து கொள்ள சொல்லி விட்டான். மற்றொரு கையால் கனமான துணியால் முன்புற பெண்மையின் அங்கங்கள் மறைக்கப்பட்டிருந்தது. பிரிதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் சந்திக்க நேர்ந்தால், அவனால் அப்பெண்ணை நேருக்குநேர் எதிர்கொள்ள இயலாது. அத்தனை பலகீனமானவன் அவன். ஆண்கள் பலகீனமாய் இருக்கக்கூடாதா என்ன?. விதிவிலக்காய் தான் இவன் இருக்கிறானே?..

ஏனோ காணும் பெண்களில் எல்லாம் அவனவளின் முகம் தோன்றியது. அதனாலேயே அவன் பெண்களின் முகம் பார்த்து பேசும் வழக்கம் இல்லாதவன். முகம் பார்த்து என்ன, அதி முக்கிய தேவையை தவிர பெண்களிடமே பேசுவதில்லை.

மஞ்சரி மென்மையான மேனியாள். ஒருகாலத்தில் அவனின் உயிராய் இருந்தவள். உடலில் சிறு அழுக்கு கூட ஒட்டியிருக்க சம்மதியாதவள், இதுபோல் தழும்புகளை ஏற்பாளா?. அதனால் தான் இவனிடம் இருந்த குறை, அவளது நிறையை மற்றவர் கண்களுக்கு குறைத்து மதிப்பிட்டு விடும் என விட்டு சென்று விட்டாள் போலும். மனம் வலித்தது, கீழே இறங்கி வந்து அவனது அறைக்குள் முடங்கி கொண்டான் மது. கூடத்தில் அமர்ந்து மகனின் அசைவுகளை பார்த்திருந்த வரதராஜன் வலியோடு தனது அறை நோக்கி நடந்தார்.

அறைக்குள் வந்த மது, வழக்கமான மாத்திரைகளை கண்களை மூடி விழுங்கி கொண்டான். அலமாரியில் வைத்திருந்த, தன் பெயர் கொண்ட இரவு நேர துணைவனை வெளியே எடுத்து, ஓர் கண்ணாடி கோப்பையில் ஐம்பது மில்லி அளவிற்கு ஊற்றினான். அத்தோடு தேவையான அளவில் நீரையும் கலந்தவன், ஒரு மிடறு மட்டும் விழுங்கி விட்டு தன் வேலைகளை துவக்கினான். சட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த வெள்ளை காகிதம் அவனது வரவிற்காக காத்திருக்க, தூரிகை ஆடவனது கைகளில் குடியேறியது.

புகைப்படத்தை தனக்கெதிரே வைத்தவன், அதை ஓவியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டான். அவளது உடல் தழும்புகளை தூரிகை தீட்டும் போது அன்றைய நிகழ்வு நினைவில் ஆடியது.

இரண்டு நாட்களுக்கு முன்...

கதவை திறந்ததும் அனிச்சையாய் அவனது விரல்கள் விளக்கை அணைத்தது. உள்ளே ஏற்கனவே அவள் அமர்ந்திருந்தாள். "பயப்படாதிங்க..." என்றவன் அவள் செய்ய வேண்டியதை சொல்ல, ஐந்து நிமிடங்களில் அவள் குரல் கொடுத்தாள்.

மங்கலான வெளிச்சம் தரும் இரவு விளக்கை அவன் ஒளிர விட, தன் முன்புற தேகத்தையும் முகத்தையும் மறைத்து, அவளது உடைகளை களைந்திருந்தாள். அவளது இடைவரை பின்புறம் மட்டும் தெரியும் படி பக்கவாட்டில் திரும்பி அமர்ந்திருந்தாள். உடலில் இருந்த காயங்கள் அவள் அடைந்திருக்கும் வலிகளை சொல்ல, ஒரே நிமிடத்தில் அவனது வேலையை முடித்து விட்டு, "டிரஸ் பண்ணிக்கோங்க மா..." என பக்கவாட்டில் இருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்து கொண்டான் மது.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ஐந்து நிமிடத்தில் தன் உடையை சரிசெய்து கொண்டவள், அவனிருந்த அறைக்குள் சென்றாள். ஆளில்லா அறையே காத்திருந்தது. விலைமகளாக வந்தவள் என்ன செய்வது என தெரியாது நின்றாள். அவன் எங்கே சென்றான் என்ற எண்ணம் எழுந்தாலும், நல்லவேளை இல்லை சில நிமிடங்கள் நிம்மதியாய் இருக்கலாம் என மனம் மகிழ்ச்சி கொண்டது. அறையை சுற்றிலும் அவளது பார்வை படர, படுக்கையில் அவளுக்கான பணமும், ஒரு காகிதமும் இருந்தது.

எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி அதை எடுத்து வாசித்தவளின் கண்கள் கண்ணீர் குளங்களாய் மாறிப்போயின. வாய் விட்டு கதறி அழுது தன் வலிகளையும் பாவங்களையும் கரைத்து கொண்டிருந்தாள் அவள். ஓஓ.. வென்ற பெருங்குரலெடுத்த அழுகை, பத்து நிமிடங்களுக்கு மேலும் தொடர்ந்தது. ஓய்வறையை மூடிக்கொண்டு அதன் கதவில் சாய்ந்து நின்ற படி, அவளது கதறலை கேட்டுக்கொண்டிருந்தான் மது. அவனுக்கும் அழுக தோன்றியது, ஆனால் முடியவில்லை. ஆண் என்ற எண்ணம் தடுத்துவிட, கண்கள் மூடி மனதிற்குள் கதறி கொண்டிருந்தான்.

வெளியே இருந்தவள் புடவை தலைப்பால் தன் முகத்தை துடைத்து கொண்டு, பணத்தையும் அந்த காகிதத்தையும் தன் உடையில் மறைத்துக்கொண்டு, அறையில் இருந்த இன்னொரு வழியாக அவசர அவசரமாய் வெளியேறினாள். அவள் சென்று பத்து நிமிடம் கழித்தே, ஒய்வறையில் இருந்து வெளியே வந்தான் மது. எப்போதும் தன்னுடனே வைத்திருக்கும் மாத்திரைகளை விழுங்கியவன், இருபது நிமிடத்திற்கான நினைவூட்டியை தன் கைபேசியில் பதிவு செய்து விட்டு, படுக்கையில் விழுந்தான்.

சில நொடிகளிலேயே இமைகள் உறக்கத்தை தழுவ, சரியாக இருபது நிமிடத்தில் அறிவொப்பொலி சப்தம் அவனது செவிகளை தீண்டியது. எழுந்து முகம் கழுவி தயாரானவன், மெல்லும் கோந்து(சுவிங்கம்) ஒன்றை வாயில் போட்டுக்கொண்டான். அலைபேசியில் விடுதியின் வரவேற்பாளரிடம் சொல்லிவிட்டு, மாற்றுவழி வழியே அங்கிருந்து வெளியேறினான்.

இன்று...

அவளின் அழுகுரல் அவனது செவிகளுக்குள் ஒலித்தது. இதேபோல், தான் தன்னவளிடம் அழுத தருணம் வேண்டாத விருந்தாளியாய் மனதை குடைந்தது. ‘அவள் உன்னவளா?. இன்று அவள் வேற்று ஆடவனுடையவள். இன்னொருவனின் மனைவியை மனதில் எண்ணும் அளவிற்கு, நீ தரம் தாழ்ந்து விட்டாயா?..’ என மூளை சீறலுடன் வினா எழுப்ப, மனம் அவமானத்தில் குறுகி போனது. ‘செய்யும் வேளையில் கவனத்தை செலுத்து..’ என அடுத்ததாய் கட்டளையிட, மதுவின் விரல்களில் இருந்த தூரிகை தன் பணியினை தொடர்ந்தது.

பகலவன் இருளை கிழித்து தன் வரவை நிலமகளுக்கு அறிவிப்பு விடுக்க, அன்றைய காலைப்பொழுது பலவித விசித்திரங்களை தன்னுள் வைத்துக்கொண்டு புலர்ந்தது. மதுரவனின் ஓவியம் முழுமை பெரும் நிலையில் இருக்க, இடக்கையில் இருந்த மதுக்கோப்பை அவன் முன்இரவில் பருகிய ஒரு மிடறுடன் நின்று போயிருந்தது. அவளது இடைவளைவில் வெண்சுருட்டினால்(சிகரெட்) சுடப்பட்டிருந்த காயத்தின் அருகே வழிந்து நின்ற ஒற்றை துளி கண்ணீரிலே நிறைவடைய, கனத்த மனதுடன் தன் ஓவியத்தை முடித்தான் மது.

இரவு முழுக்க விழித்திருந்து வேலையை முடித்தவன், அப்படியே படுக்கையில் விழுந்தான். கதவு தட்டும் ஒலியில் இமைகளை பிரித்தவன், தூக்கம் முழுவதும் தெளியாமலேயே கதவை திறந்தான். அறை வாயிலில் அவனது தந்தை வரதன் நின்றிருந்தார். கேள்வியாய் பார்த்தவனுக்கு விடையாய், "இன்னிக்கு உன் தம்பி சந்தரனோட நிச்சயதார்த்தம், நீயும் வந்தா நல்லாருக்கும். வர்ரியா மது?.." தந்தையின் வேண்டுதலை மறுக்க இயலாது, அரைமணி நேரத்தில் தயாராகி வெளியே வந்தான்.

தாய் சௌந்தரமும், சந்திரனும் ஏற்கனவே மகிழுந்துவில்(கார்) அமர்ந்திருக்க, வரதன் மட்டும் மூத்த மகனுக்காய் காத்திருந்தார்.

வரதன், "போலாமா மது?.."

அவன், "நீங்க கார்ல போங்க, நான் என்னோட பைக்லயே வர்றேன்.." என்று, பெண்வீட்டின் முகவரியை வாங்கி கொண்டு கிளம்பினான். அவன் அவர்களது வீட்டிற்குள் நுழைந்தபோது, மதுவின் குடும்பத்தார் அவனுக்கு முன்பே வந்திருந்தனர். மூன்றாம் மனிதனாய் ஓர் ஓரம் அமர்ந்து கொண்டான் மது.

சஹானா.. தன்மகன் சந்திரனுக்கு சௌந்தரம் தேர்ந்தெடுத்த பெண். அப்பாவித்தனத்துடன் அளவில்லா அழகுடன் இயல்பான புன்னகையில் மிளிர்ந்தாள் சஹா. தாய் அற்றவள், தந்தை சிவநாதன் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பெண்ணுக்கு கட்டுப்பாடுகளுடன், ஒழுக்கத்தையும் பண்பையும் அதட்டி மிரட்டியே சொல்லித்தந்தவர். குரல் உயர்த்தி பேசினால் கூட கண்கலங்கும் ரகம் சஹா. எவரிடமும் சினம் கொள்ள தெரியாதவள். சினத்தின் பொருள் கூட அறியாதவள்.

உணர்ச்சி துடைத்த முகத்துடன் அமர்ந்திருந்தான் சந்திரன். அவனது காதல் கன்னிகை வித்யாவை விட்டு விட்டு, இன்று வேறு ஒருவளுடன் மோதிரம் மாற்றிக்கொள்ள போகிறான். பிறந்ததில் இருந்தே தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வளர்ந்தவன், இன்றும் அப்படிதான் நடக்கவிருக்கிறான். தன்மேல் அளவில்லா அன்பை பொழியும் தாய், தன் காதலை நிச்சயம் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையில் இருந்தவன், தாய் சௌந்தரத்தின் பிடிவாதத்தினால் இன்று அந்த காதலை தொலைத்து விட்டு நிற்கிறான்.

கூட்டத்தில் ஒருவனாய் அமர்ந்திருந்த மது, சந்திரனையும் அவனது உணர்வுகளையும் முகத்தை பார்த்தே புரிந்து கொண்டான். புரிந்து என்ன செய்ய?. அவன் தான் தமையன் என்று மதிப்பானா அன்றி தாயை மீறி காதலியை கரம் பிடிப்பானா?. இரண்டையுமே செய்ய மாட்டான். மனம் விரும்பினாலும், தாயின் விருப்பத்தை முன்னிறுத்தி தன் மகிழ்ச்சியை இழக்க தயாரானவன்.

ஒருகாலத்தில் மதுவும் இப்படித்தான் இருந்தான். தாயை எதிர்த்து பேசாதவன், அவர் முன்கூட நிற்க தைரியமில்லாதவன். ஆனால் இன்று சௌந்தரத்தின் குருதி அவனது உடலில் ஓடுகிறது என்பதை தவிர, தாய்க்கும் மகனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என்றைக்குமே அவனை மகனாய் ஏற்காத அவரை, மதுவும் தாயாய் நினைக்க மறந்து விட்டான். வீட்டில் அவன் பேசும் ஒரே ஆள் தந்தை வரதராஜன் மட்டுமே. அதுவும் பேசினால் பதிலுக்கு பேசுவதோடு சரி.

தனக்கும் அங்கு நடக்கும் விழாவிற்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் மது பார்வையாளனாய் அமர்ந்திருக்க, விழா ஆரம்பமானது. இரு வீட்டு பெரியவர்களும் பேசிமுடிக்க, திருமண பந்தத்தில் இணையப் போகிறவர்களை அருகருகே நிற்க வைத்தனர். எந்த உணர்வையும் பிரதிபலிக்காது இயந்திரத்தனமாய் சந்திரன் சஹாவிற்கு மோதிரம் அணிவிக்க, கண்களில் ஆசையும் முகத்தில் வெட்கமுமாய் அவனுக்கு அணிவித்தாள் சஹா. மருந்திற்கு கூட புன்னகைக்க மறந்து அவனிருக்க, படபடக்கும் மனதுடன் தன்னை புதிதாய் உணர்ந்து கொண்டிருந்தாள் சஹா. எப்போதும் ஒருவித விரைப்புடனே இருக்கும் ராணுவவீரர் சிவநாதனுக்கு, தன்னை போல் அழுத்தமாகவே இருக்கும் சந்திரனை, மிகவும் தான் பிடித்துப்போனது. தனது விருப்பத்தை மட்டுமே நினைத்தவர், ஏனோ மகளின் வாழ்க்கையை பற்றி சிந்திக்கத்தான் மறந்துவிட்டார் போலும்.

விழாவின் முக்கிய கட்டம் முடிவடைந்து விட்டது, தனக்கு இனி வேலை இல்லை என கிளம்ப தயாரானான் மது. அரங்கை விட்டு வெளியேற போனவனை தடுத்து உள்ளே அழைத்து சென்றார் வரதராஜன். பெண் வீட்டாருக்கு தன் மகனை அறிமுகம் செய்து வைத்தார். சிவநாதன் சிறு தலையசைப்புடன் அதை ஏற்க, சஹா முகம் மலர்ந்து புன்னகைத்தாள். ஏனோஅவளது புன்னகை அவனையும் தொற்றிக்கொண்டது. எப்போதும் பெண்களிடம் எட்டியே நிற்பவன், தன் குடும்பத்திற்கு வரப்போகும் பெண் என்பதால் இயல்பாக பேச முனைந்தான். "வணக்கம் ம்மா..." பதிலுக்கு அழகாய் புன்னகைத்தவள், "வணக்கம் ங்க..."

வரதன், "சந்திரனோட அண்ணன் மா, உரிமையா மாமான்னு கூப்டு..." அவள், "அப்புறம் உங்களை எப்டி மாமா கூட்டுறது?. ரெண்டு பேரையுமே மாமான்னு கூப்டா வீட்ல குழப்பம் வராதா?..." சஹா இயல்பாய் கேட்க மது, "என்னை பேர் சொல்லியே கூப்டு மா, நோ ப்ராப்ளம். என்னோட பேர் தெரியும்ல?..."

சின்னதாய் தலையசைத்தவள், சற்று தள்ளி நின்றிருந்த தன் தந்தையை பார்த்துவிட்டு, "இல்ல வேணாம், அப்பா திட்டுவாங்க. நான் உங்களை மது மாமான்னு கூப்டுறேன்.." அவன், "சரி..." என இயல்பாய் புன்னகைக்க, வரதன் உறவினர்களை கவனிக்க சென்றார். சஹா, "நீங்க என்ன பண்ணீட்டு இருக்கீங்க மது மாமா?..." அவன் சிரித்து, "இப்போதைக்கு என் மனசுக்கு தோணுறத பண்ணீட்டிருக்கேன், அவ்ளோதான்..."

"பரவாயில்லயே, இங்க பல பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்குறதில்ல..." அவளது குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனை தாக்க மௌனமாய் நின்றிருந்தான். மது எப்போதும் அப்படித்தான், எதிரில் இருப்பவரின் குரலில் இருந்தே அவர்களது மனதை உணருபவன், அவர்களது வலியையும் தனதாய் உணர்வான். உண்மையை சொல்ல வேண்டுமானால் இதுதான் அவனது பலமும் பலவீனமும்..

சஹா, "என்னாச்சு, அமைதி ஆய்ட்டீங்க?..."

"உனக்கு உங்க வீட்ல, ஃபிரீடம் கிடைக்காதா சஹா?..." சட்டென்று அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், "பொண்ணா பிறந்தாலே, அது கிடைக்காது மாமா..." என புன்னகைத்தாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ஏனோ விருப்பம் இல்லாமல் சந்திரன் அவளை மணப்பதை நினைத்து மதுவிற்கு வலித்தது. சிவநாதனுக்கு தெரிந்தால் என்னாகும் என்ற வேதனையும், தன் தாய் இதை உணரவில்லையே என ஆதங்கமும் உருவானது.

சஹாவிடம் சந்திரனை பற்றி சொல்லத் தோன்றவில்லை அவனுக்கு. சொன்னாலும் அவள் இந்த திருமணத்தை நிறுத்தும் அளவிற்கு மனதைரியம் இல்லாதவள், தந்தையிடமும் கூட இதை சொல்வாளா என்பது சந்தேகமே. அப்படியே என்றாலும் தன் தாய்க்கு இந்த விவரம் தெரியவந்தால் எந்நேரம் எப்டி மாறுவார் என்று சொல்வதற்கில்லை. சில நிமிடங்களே பேசியிருந்தும், சஹாவின் இயல்பை புரிந்து கொண்டான் மது. திருமணம் வரையேனும் அவள் மகிழ்ச்சியாய் இருக்கட்டுமே என உண்மையை சொல்லாமலேயே அங்கிருந்து கிளம்பி விட்டான்.

அந்த கடைவீதியில் நின்று கொண்டிருந்த பவித்ராவிற்கு மனம் படபடவென பயத்தில் அடித்துக்கொண்டது. அங்கிருப்பவர்கள் அனைவரும் தன்னையே பார்த்து கொண்டிருப்பது போல் ஒரு பிரம்மை அவளுக்கு. அதைவிட அவள் உடுத்தியிருக்கும் உடை, அதை மிகவும் வெறுத்தாள். ஒரு காலத்தில் அவளுக்கு மிகவும் பிடித்ததுமான, பாரம்பரியமான புடவை தான். இருந்தும் சில மாதங்களாய் இந்த புடவைகள் அவளது உடலை புண்படுத்தி கொண்டிருத்தன. புடவை தலைப்பால் தன்உடலை முழுவதுமாய் போர்த்தியபடி இருந்தும், எதிலிருந்தோ தன்னை காத்து கொள்வது போல் உடலை குறுக்கியபடி நின்றிருந்தாள். இதற்கு மேலும் இந்த வலியை தாங்கி கொள்ள இயலாது என்று எண்ணியவள், பார்வையை சுழலவிட்டாள்.

ஓர் ஆடையகத்திற்குள் நுழைந்தவள், தனக்கென நான்கு உடைகளை தேர்ந்தெடுத்து, அதில் ஒன்றை கடையில் இருந்த அறையிலேயே மாற்றிக்கொண்டு வெளியேறினாள். கழுத்து கைகளை எல்லாம் முழுமையாய் மறைத்தவாறு, சுடிதார் அணிந்திருந்தாள். துப்பட்டாவை நன்றாக மடித்து, அது விலகிவிடாதவாறு உடையுடன் பொருத்தியிருந்தாள். இனி அடிக்கடி புடவை மாராப்பை சரிசெய்து கொள்ளும் வேலையில்லை, இடை வளைவில் புடவை எந்நேரம் விலகுமோ, எவனது பார்வை அங்கு செல்லுமோ என்று பயம் இல்லை என நிம்மதி மூச்சு விட்டாள். உள்ளே சென்ற போது அவள் அணிந்திருந்த புடவை, வெளியே வரும் போது குப்பைக்கூடையில் கேட்பாரற்று கிடந்தது.

அருகில் இருந்த பேருந்து நிலையத்திற்கு சென்றவள், கடையில் இரண்டு மாச்சில் பையையும்(பிஸ்கட் பாக்கெட்) தண்ணீர் பொத்தலையும்(வாட்டர் பாட்டில்) வாங்கி கொண்டாள். சில நிமிடங்கள் அங்கே சுற்றி வந்தவளின் கண்களில் அந்த பேருந்து பட, முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. நொடியும் தாமதிக்காது அதில் ஏறியவள், ஜன்னலோர இருக்கையை தேடி அமர்ந்து கொண்டாள்.

கண்களை மூடி சாய்ந்திருந்தவளின் வயிறு தன் இருப்பை தெரிவிக்க, வாங்கி வந்ததை அதற்கு அளித்து நிலைப்படுத்தினாள். சில நிமிடங்களில் பேருந்து புறப்பட ஜன்னலின் வழியாக, வெளிப்புறம் தலையை மெல்ல நீட்டி, முடிந்தவரை மூச்சை உள்ளுழுத்தாள். அவளது செய்கையை பார்த்த நடத்துனர் சத்தமிட, சிறுமியை போல் முகம் வாடி போனாள் பவித்தா. பயணசீட்டை வாங்கி கொண்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். தன்னையே கட்டுப்படுத்தி கொள்ள இயலாது, மீண்டும் ஜன்னலில் கம்பியில் தன் தாடையை வைத்து வேடிக்கை பார்க்க துவங்கி விட்டாள்.

பவித்ராவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் இயல்பாய் மூச்சு விடுவதாய் தோன்றியது. முழுதாய் ஒரு வருடத்திற்கு பின் சுதந்திர காற்றை சுவாசிக்கிறாள். மனம் சிறு குழந்தை போல கண்ணில் படும் ஒவ்வொன்றையும் பார்த்து பரவசத்தில் துள்ளி குதித்தது. அவள் மறந்து போன புன்னகை இதழ்களில் தானாய் வந்தமர, இருபது நிமிடங்களில் தன்னை மறந்து நெடுநாட்களுக்கு பிறகு தூக்கத்தை தழுவினாள்.

வித்யாவின் முன் தலைகவிழ்ந்து நின்றிருந்தான் சந்திரன், அவளோ சினத்தின் உட்சத்தில். "சொல்லுடா, நானா உன் பின்னாடி சுத்துனேன். நானா உன்னை லவ் பண்றேன்னு சொன்னேன்?. நான் சொல்ல சொல்ல கேட்காம ஆறு மாசமா என் பின்னாடியே சுத்தி, என்னோட மனச மாத்தி ரெண்டு வருஷமா லவ் பண்ணி, பார்க் பீச்ன்னு சுத்தீட்டு, இப்போ வேற எவ கூடவோ நிச்சயம் பண்ணீட்டு வந்து நிக்குற?..."

அவன் இயலாமையில், "வித்யா ப்ளீஸ் டி..."

"யாருடா நீ, எந்த உரிமைல என்னை டி போட்டு கூப்டுற?..."

"வித்யா கொஞ்சம் நான் சொல்றத கேளேன்..."

"என்ன கேக்கணும் இல்ல என்ன கேக்கணும்ன்றேன்?. நான் படிச்சு படிச்சு சொன்னனேடா, நம்ம ரெண்டு பேர் குடும்பத்துக்கும் ஒத்து வராது வேண்டாம்ன்னு கேட்டியாடா?. எல்லாம் நான் பாத்துக்குறேன். எங்கம்மா என்னோட விருப்பத்துக்கு மறுப்பு சொல்ல மாட்டாங்க. அது இதுன்னு பேசுனியேடா?..." சினம் தொலைந்து, கண்கள் கலங்க பெண்மை சோர்ந்தது.

வித்யாவின் கண்ணீர் ஆடவனின் மனதை அசைக்க அவன், "நாம கல்யாணம் பண்ணிக்கிலாம் வித்யா, யாருக்கும் தெரியாம வேற ஊருக்கு போய்டலாம்?..." அவனை கனல் பார்வை பார்த்தவள், "ஓடிப்போலாம்ன்னு சொல்றியா?..." சந்திரன் அமைதி காக்க அவனது சட்டையை பிடித்தவள், "நான் கொலை பண்ணேனா, கொள்ளையடிச்சேனா, இல்ல வேற எதாவது தப்பு பண்ணனா? எதுக்கு என்னை ஊரை விட்டு ஓடச்சொல்லுற, சொல்லுடா?..."

"உன்னை எங்கம்மா தனியா போக சொன்னேன், நானும் தான?..." அவனது பேச்சை இடை வெட்டியவள், "அப்போ நாம தப்பு பண்ணீருக்கோமா சந்திரா, காதல் தப்பா?. அப்போ என்னை நீ தப்பு செய்ய தூண்டிருக்க அப்டித்தான?.." அவன் அமைதியாய் நிற்க, "சொல்லுடா, லவ் பண்றேன்னு சொல்லி என்னை கொஞ்சி கொஞ்சி வாய் மூடாம பேசுவியே?. ஒரே ஒரு முத்தத்துக்காக, ஒரு வாரமா பேசி பேசி என் மனச கரைச்சியே? இப்ப பேசுடா. உனக்கு தேவைன்னா எவ்ளோ வேணும்ன்னாலும் பேசுவ, இல்லாட்டினா வாயவே திறக்க மாட்ட அப்டித்தான?..."

அவனை சொற்களால் சுட்டெரித்தவளின் தகிப்பை தாங்க இயலாது மௌனம் காத்தான் சந்திரன்.