அத்தியாயம் 1

19.24k படித்தவர்கள்
4 கருத்துகள்

7. அவசரக் கலியாணம் - அபூர்வ மணப்பெண்

மது கந்தசாமி தனக்கு மனையாட்டியாக வரிக்கப்பட்டிருந்த மனோன்மணியம்மாளினது குணாதிசயங்களை நேரில் கண்டு அறியும் பொருட்டு பெண் வேஷந்தரித்து அவளது பங்களாவிற்குச் சென்றது சனிக்கிழமை தினம் என்பது முன்னரே சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு முந்திய நாளாகிய வெள்ளிக்கிழமை காலையிலேதான் இடும்பன் சேர்வைகாரன் போலீஸ் உடை தரித்து நாகப்பாம்புகள் வைத்த பெட்டியையும் பொய்க் கடிதத்தையும் மன்னார்குடியில் திகம்பரசாமியாரது பங்களாவில் கொடுத்துவிட்டு, உடனே கும்பகோணம் சென்று, அந்த வரலாற்றை மாசிலாமணியிடம் தெரிவித்து, அன்றைய தினமே மோட்டார் வண்டியிலும் ரயிலிலுமாகப் பல ஆள்களை சென்னைக்கு அனுப்பிவிட்டுத் தானும் அவர்களோடு வந்து சேர்ந்தான். 

ஆதலால், எல்லோரும் சனிக்கிழமை காலையில் சென்னையை அடைந்ததன்றி, அன்றைய தினம் இரவில் அவர்கள் பட்டாபிராம பிள்ளையினது பங்களாவிற்குள் புகுந்த காலத்தில் அவர்கள் கந்தசாமியை மனோன்மணி என்று ஆள்மாறாட்டமாக எண்ணவும் நேர்ந்தது. 

கந்தசாமி அன்றைய தினம் நடுப்பகல் முதல் மிகுந்த மன வேதனையினால் உலப்பப்பட்டிருந்து முடிவில் உண்டான அவமானத்தினாலும், விசனத்தினாலும் நிரம்பவும் குன்றி அயர்ந்து போய் இராப்போஜனமும் உண்ணாமல் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தவன் ஆதலால், இடும்பன் சேர்வைகாரன் முதலிய முரட்டு மனிதர்கள் வந்த காலத்தில் அவன் ஒருவாறு தனது உணர்வைப் பெற்றவனாய் இருந்தான். 

ஆனாலும், சரியான சுறுசுறுப்பும் ஊக்கமும் தெளிவும் அடைந்து உடனே எழுந்து உட்கார வல்லமையற்றவனாக இருந்தான். அதுவுமன்றி, அந்த முரட்டு மனிதர்கள் அவனிருந்த விடுதிக்குள் நுழைந்து அவனைக் கண்டு, அவன் தான் மனோன்மணியம்மாள் என்றும் கருதிய உடனே சிறிதும் தாமதம் இன்றி அவன் மீது பாய்ந்து இறுகப் பிடித்து மயக்க மருந்தை மூக்கில் பிடித்துவிட்டார்கள். ஆதலால், அவன் உடனே தனது உணர்வை இழந்து செயலற்றவனாய் மாறிவிட்டான். அந்த முரடர்கள் அவனை எடுத்துப் போய் மோட்டார் வண்டியில் வைத்த பின்னரும் மயக்க மருந்தை அவனது மூக்கிற்கருகிலேயே பிடித்துக் கொண்டிருந்தனர் ஆதலால், அன்றைய தினம் விடியற்காலம் அவர்கள் கும்பகோணம் போய்ச்சேரும் வரையில் அவன் உயிரற்றவன் போலவே அலங்கோலமாக வீழ்ந்து கிடந்தான். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

இடும்பன் சேர்வைகாரன் முதலிய முரட்டு மனிதர்கள் பங்களாவில் இருந்து அவனைத் தூக்கிக் கொண்டு போய் மோட்டாரில் வைத்த காலத்தில், யாராவது மனிதர்கள் தோன்றி, தங்களைத் தடுத்து எதிர்த்தால், தாம் கருதி வந்த காரியம் பலிதமடையாமல் போய் விடுமே என்ற கவலையும் பெரும் பீதியுமே குடிகொண்ட மனத்தினராய் இருந்தனர் ஆதலால், தாம் தூக்கிக் கொண்டு போவது ஒரு வேஷதாரி என்பதை அவர்கள் சிறிதும் சந்தேகிக்க அவகாசம் நேரவில்லை. 

அதன்பிறகு, அவனை அவர்கள் மோட்டாரில் கோஷா ஸ்திரிகளுக்கான அறை போலவே அமைக்கப்படும் மறைவிற்குள் படுக்கவைத்திருந்தனர் ஆதலால், அதற்குள் இருளே மயமாக நிறைந்திருந்தது பற்றி, அப்போதும், அவனை அவர்கள் உற்றுநோக்க சந்தர்ப்பம் ஏற்படவில்லை. 

அது நிற்க, மனோன்மணியை மாசிலாமணி மணம் புரிந்து கொள்ளப் போகிறான் என்ற எண்ணம் அவர்களது மனதில் இருந்தது ஆதலால், தங்களது எஜமானனுக்காக உத்தேசிக்கப் பட்டிருந்த பெண்ணின் தேக அமைப்பைத் தாங்கள் விஷமப் பார்வையாகப் பார்ப்பது ஒழுங்கல்ல என்ற நினைவையும் அவர்கள் கொண்டிருந்தார்கள் ஆதலால், அவனுக்கு எதிரில் இருந்து மயக்க மருந்தைப் பிடித்துக் கொண்டிருந்த இடும்பன் சேர்வைகாரனைத் தவிர மற்றவர்கள் தூரத்தில் இருந்தனர். அவ்வாறே, அவர்கள் விடியற்காலம் கும்பகோணத்திலிருந்த மாசிலாமணியின் மாளிகை வாசலை அடைந்த காலத்தில், யாராவது போலீசார் தங்களைக் கண்டுகொள்ளப் போகிறார்களோ என்ற திகிலையும், பொழுது விடிந்து போய்விடுமோ என்ற கவலையையும் கொண்டு முற்றிலும் பதறிய வண்ணம் அவனைத் தூக்கி எடுத்து அவனுக்காக மூன்றாவது மாடத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒரு மஞ்சத்தில் படுக்க வைத்துவிட்டு வந்த காலத்திலும் அவர்களது கவனம் அவன்மீது செல்லவில்லை. 

ஆகவே, இடும்பன் சேர்வை காரனும் மற்ற ஆட்களும் தாங்கள் மனோன்மணியையே அதிக பிரயாசை இன்றி எளிதில் கொண்டு வந்துவிட்டோம் என்ற எண்ணத்தோடு சென்றதன்றி, தூங்கிக் கொண்டிருந்த மாசிலாமணியையும் இடும்பன் சேர்வைக்காரன் எழுப்பி அந்த சந்தோஷச் செய்தியை அவனிடம் தெரிவித்து, மனோன்மணியின் அழகையும் அபாரமாக வர்ணிக்கவே மாசிலாமணியினது மனதில் அளவற்ற மன எழுச்சியும், களிப்பும், குதுகலமும், பதைப்பும் தோன்றி வதைக்க ஆரம்பித்தன. தான் உடனே சென்று அவளது அற்புதமான அழகைக் கண்டு ஆனந்தம் அடைய வேண்டும் என்றும், அவளோடு சம்பாஷிக்க வேண்டும் என்றும் விலக்க முடியாத ஓர் அவா அவனது மனதில் எழுந்து தூண்டியது. 

ஆயினும் இடும்பன் சேர்வைகாரன், "எஜமானே! நீங்கள் ஆத்திரப்பட்டு இப்போது அந்த அம்மாளிடம் போவது உசிதமாகத் தோன்றவில்லை. நான் அந்த அம்மாளை மெத்தையில் படுக்க வைத்து, ஈரத்துணியால் முகத்தைத் துடைத்து, கட்டிலின் மேல் இருக்கும் மின்சார விசிறியை மெதுவாகச் சுழற்றிவிட்டு வந்திருக்கிறேன். 

அதுவுமன்றி இந்த இடம் பின்புறத் தோட்டத்தை அடுத்தாற்போல இருப்பதால், பின் பக்கத்து ஜன்னலின் கதவுகளையும் திறந்து வைத்துவிட்டு வந்திருக்கிறேன். தோட்டத்தில் இருந்தும், மின்சார விசிறி சுழலுவதில் இருந்தும் ஜிலுஜிலுப்பான காற்று உண்டாகி முகத்தில் தாக்கும் ஆகையால், அந்த அம்மாளுடைய மயக்கம் இந்நேரம் தெளிய ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கின்றேன். நேற்று இரவில் அந்த அம்மாள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நாங்கள் திடீரென்று போய் மயக்க மருந்தை மூக்கில் பிடித்து, உணர்வை விலக்கி எடுத்துக் கொண்டு வந்திருக்கிறோம் ஆகையால், இப்போது விழித்துக் கொள்ளும் போது, மனோன்மணியம்மாள் தான் பட்டணத்தில் தன்னுடைய சொந்த ஜாகையில் இருப்பதாகவே எண்ணிக் கொள்வாள். 

அந்த நிலைமையில், இன்னார் என்பது தெரியாத அன்னியரான நீங்கள் போய் எதிரில் நின்றால், அந்த அம்மாள் பயந்து நடுங்கிக் கூச்சலிட்டாலும் இடலாம். இந்த அசந்தர்ப்ப வேளையில், உங்களோடு அந்த அம்மாள் சந்தோஷமாகவாவது சிநேகபாவ மாகவாவது பேசுவாள் என்று நீங்கள் எதிர்பார்ப்பது சரியல்ல. இப்போது நீங்கள் போய் அந்த அம்மாளுக்குத் தொந்திரவு கொடுத்து, உங்களுடைய மனதையும் புண்படுத்திக் கொள்வதை விட நீங்கள் உங்களுடைய மனசைக் கொஞ்சம் கட்டுப்படுத்தி அடக்கிக் கொண்டு இப்போது போகாமல் இருங்கள். அந்த அம்மாள் மயக்கந் தெளிந்து எழுந்து இன்றைய தினம் பகல் எல்லாம் இருந்து, நாம் அனுப்பப் போகும் நம்முடைய வேலைக்காரியின் மூலமாய் உண்மையைச் சிறுகச் சிறுகத் தெரிந்து கொள்ளட்டும். தன்னை நாம் இங்கே என்ன கருத்தோடு கொண்டு வந்திருக்கிறோம் என்பதை அந்த அம்மாள் வேலைக்காரியிடம் அவசியம் கேட்பாள். 

அப்போது வேலைக்காரி, இந்த ஊர் இன்னதென்பதையும், நீங்கள் இன்னார் என்பதையும் சொல்லாமல், பூடகமாக நீங்கள் ஒரு கோடீசுவரர் என்றும், அழகும், யெளவனப் பருவமும் வாய்ந்தவர் என்றும், நீங்கள் அந்த அம்மாளைப் பட்டணத்தில் கண்டு மோகித்துக் கலியானம் செய்துகொள்ள வேண்டும் என்ற உத்தேசத்தோடு கொண்டு வந்திருப்பதாகவும், நாளைய தினம் காலையில் கலியாணம் நடக்கப் போகிறது என்றும், அந்த அம்மாள் எப்படியும் அதற்கு இணங்கியே தீரவேண்டும் என்றும், இணங்காவிட்டால் நாம் விடப்போகிறதில்லை என்றும் சொல்லி, அந்த அம்மாளுடைய மனப்போக்கு எப்படி இருக்கிற தென்பதைத் தெரிந்து கொண்டு வந்து நம்மிடம் சொல்லட்டும். அதற்கு மேல் ஏற்படும் நிலைமைக்குத் தகுந்தபடி நாம் யோசனை செய்து தந்திரமாக நடந்து கொள்வோம். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ஸ்திரீகளின் விஷயத்தில் நாம் நிரம்பவும் ஜாக்கிரதையாகவும் ஸுனாயாசமாகவும் நடந்து கொள்ள வேண்டும் அன்றிக் கசக்கி மோரக் கூடாது. கொஞ்சம் பொறுத்து நயமான வழியில் நாம் நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றுவதில், நமக்கு நஷ்டமாவது ஏற்படப்போகிறதில்லை. கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகப் போகிறதில்லை. நம்முடைய வசத்தில் மாட்டிக்கொண்ட பிறகு நாம் இந்த அம்மாளை விடப் போகிறதில்லை. 

இப்படிப்பட்ட விஷயங்களில் எல்லாம் தடிகொண்டு அடித்துப் பழுக்க வைப்பதைவிடத் தானே பழுக்கும்படி செய்வதே, நம்முடைய மனசுக்கு உகந்த காரியம் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. ஆகையால் தயை செய்து நீங்கள் பேசாமல் படுத்துக் கொள்ளுங்கள்; பொழுது விடிந்த பிறகு நாம் வேலைக்காரியை அனுப்புவோம்" என்றான்.

அதைக் கேட்ட மாசிலாமணி சிறிது நேரம் சிந்தனை செய்த பிறகு, "ஆம், சேர்வைக்காரரே! நீர் சொல்வது நல்ல யோசனையாகத்தான் படுகிறது. ஆனாலும், நீர் அந்தப் பெண்ணின் அழகைப் பற்றிச் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட முதல் என் மனசில் என்னவோ ஒருவிதமான விகாரம் ஏற்பட்டு நிரம்பவும் சஞ்சலப்படுத்துகிறதன்றி, அவளை உடனே பார்த்து அவளோடு ஒரு வார்த்தையாவது பேச வேண்டும் என்ற ஆவல் என்னை வதைக்கிறது. இருந்தாலும், பாதகமில்லை. நீர் சொல்லுகிறபடி நான் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுகிறேன். நீர் வேலைக்காரியின் மூலமாகவே அவளைச் சரிபடுத்தும். ஆனால் நீர் சொன்ன யுக்தியில் ஒருவிதமான கேள்விக்கு இடம் இருக்கிறது. அவளை நான் பட்டணத்தில் கண்டு அவள் மேல் ஆசை கொண்டு, அவளைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கருத்தோடு இங்கே கொண்டு வந்திருப்பதாக நம்முடைய வேலைக்காரி சொல்வதை அவள் கேட்டு, ‘அப்படியானால், நேரில் என் தகப்பனாரிடம் வந்து ஏன் கலியாணப் பிரஸ்தாபம் செய்யக்கூடாது, இப்படி பலவந்தமாக என்னைத் தூக்கி வரவேண்டிய காரணம் என்ன, இவர் தன்னுடைய பெயர் முதலிய விவரங்களை எல்லாம் மறைக்க வேண்டிய காரணம் என்ன என்று கேள்வி கேட்பாளானால், அதற்கு வேலைக்காரி என்ன சொல்லுகிறது? அதை எல்லாம் நீர் நன்றாக யோசனை செய்து அவளுடைய மனம் திருப்தியடையத் தக்கபடி சமாதானம் சொல்லும்படி வேலைக்காரிக்கு யுக்தி சொல்லிக் கொடுக்க வேண்டும்" என்றான்.

இடும்பன் சேர்வைகாரன், "அதுதானா ஒரு பெரிய காரியம்; அதற்குத் தக்க சமாதானம் சொல்லும்படி நான் செய்கிறேன். அதைப்பற்றி நீங்கள் கொஞ்சமும் கவலைப்படவே தேவை இல்லை. ஆகாயத்தில் பறக்கிற பட்சியைப் பிடிக்கிறதுதான் கடினமான காரியம்; பிடித்த பிறகு, அதை எப்படிப் பக்குவப் படுத்தி என்னவிதமாக உபயோகப்படுத்துகிறதென்பது ஓர் அரிய காரியமா. அது நம்முடைய இஷ்டத்தைப் பொறுத்ததான அற்ப விஷயம். 

அதைப்பற்றி இனி நீங்கள் கொஞ்சமும் யோசனை செய்ய வேண்டாம். இந்த அம்மாளை இவ்வளவு எளிதில் கொண்டு வர முடியும் என்று நான் நினைக்கவே இல்லை. இவர்களுடைய பங்களாவில் அசாத்தியமான காவலும் பாராவும் இருக்குமோ என்றும், நாம் நம்முடைய சொற்ப ஆள்களை வைத்துக் கொண்டே அத்தனை பேரையும் வென்று எப்படி உள்ளே நுழையப் போகிறோம் என்றும், இந்த அம்மாள் ஒரு வேளை விழித்துக் கொண்டு கத்தப் போகிறாளே என்றும், மோட்டாரில் வைத்துக் கொண்டு வரும் போது வழியில் யாராவது தடுத்து நிற்க வைத்து விடுவார்களோ என்றும், இந்த அம்மாளை நாங்கள் இங்கே கொண்டு வந்து சேர்க்கும் முன் ஒருவேளை மயக்கம் தெளிந்து போய்விடுமோ என்றும் நாங்கள் கவலைப்பட்டது இவ்வளவென்று சொல்லி முடியாது; நல்ல வேளையாக, எவ்வித இடைஞ்சலும் நேராமல் நம்முடைய உத்தேசம் வெகு சுலபத்தில் கைகூடிவிட்டது. 

- தொடரும்