அத்தியாயம் 1
1வது குறிப்பு
கி.பி.2037, டிசம்பர், ஒகினவா.
எல்லாச் சாலைகளையும் ‘பாதுகாக்கப்பட்ட இடம்’ என்ற நெகிழிப்பட்டைகள் மடைகட்டியிருந்தன. கடற்கரையில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒருவரும் இருக்கக் கூடாது என முதல் நாளே எச்சரிக்கை செய்திருந்தது ஒகினவா நகராட்சி.
ஜப்பான் அதிபர் அறைகூவல் விடுத்தார். ‘‘மக்களே பாதுகாப்பான இடங்களுக்கு வந்துவிடுங்கள். இந்த முறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பாதிப்பு இருக்கும் என்றாலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாம் எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.’’
அத்தனைக் குறுகிய அவகாசத்திலும் ஜப்பானியர் காட்டிய ஒழுங்குமுறை ஆச்சர்யமாகத்தான் இருந்தது. 7.5 ரிக்டர் அளவு என்ற அச்சம் அதிகமானதுதான். விளைவு கடுமையாக இருக்கும் என மக்கள் அறிந்திருந்தார்கள். அதிகம் பயமுறுத்தும் அவசியம் இருக்கவில்லை.
அரசின் எச்சரிக்கையும் மக்களின் எச்சரிக்கை உணர்வும் ஒரே நேர்கோட்டில் இருந்தது. ஆனால், அதிகமாகப் பதறாமல் அதே சமயத்தில் வேகமாக வீட்டைவிட்டு வெளியேறி மற்றவருக்கும் தாராளமாக வழிவிட்டு, சீராக நகரின் மையத்துக்குச் சென்றுகொண்டிருந்தனர். கரையோரங்களில் இருக்கும் சிலரை மட்டும் போலீஸார் அவசரப்படுத்திக் கொண்டிருந்தனர்.
டி.வி.யிலும் ஆல்டேப் மூலமாகவும் தொடர்ந்து எச்சரிக்கை செய்துகொண்டிருந்தார்கள். ஜப்பான் பெண்கள் தங்கள் சிறிய கண்களால் படபடத்தபடி குழந்தைகள்மீதும் பெட்டிப் படுக்கைகள் மீதும் கவனம் காட்டினர். உலகம் அழியும் தருணத்திலும் ஜப்பானியப் பெண்களால் மட்டுமே பொறுப்பான அச்சத்தைக் காட்ட முடியும் என தேவ் திடீரென நினைத்தான்.
ஒகினவாவின் மையத்தில் வந்து சேர்ந்துவிட எல்லோருக்கும் கணிசமான நேரமும் பாதுகாப்பும் தந்திருந்தார்கள். சுனாமியிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட அவர்கள் எச்சரிக்கை உணர்வின் அனுபவ தரிசனத்தை தேவ் அப்போது கவனித்தான்.
ஒகினவா என ஒரு தீவு இருப்பது உலக வரைபடத்தில் கீறல் போல சில வேளைகளில் தென்படலாம். ஜப்பானுக்குக் கீழே இறைந்து கிடக்கும் சுமார் 150 தீவுகளில் ஒன்று. கடலில் இருந்து தீவுகளாகத் தெரிபவை எல்லாமே உயர்ந்த மலைகளின் சிகரங்கள்.
கிளேஸியர் காலகட்டத்தில் கடல் 150 மீட்டர் குறைந்திருந்ததாகச் சொல்கிறார்களே, அப்போது இந்த அத்தனைத் தீவுகளும் ஒரு பெரிய நிலமாக, வனமாக இருந்திருக்கலாம். கடல் விழுங்கிய மிச்சம் இப்போது மலைச் சிகரங்களை மட்டும் நிலப்பரப்பாக விட்டுவைத்திருக்கிறது.
கடற்கரையில் இருந்து மையத்துக் குன்றுக்கு வரும் சாலை அது. ஒரு தீவில் இருந்து இன்னொரு தீவுக்கு பாலங்கள். எல்லாவற்றையும் ஒருவழிச் சாலை ஆக்கியிருந்தனர். அதாவது கடற்புரத்தில் இருந்து நகர மையத்துக்கு வரலாம். கடல் நோக்கிப் பயணிக்க முடியாது.
தேவ் ஜன்னல் வழியாக வெகு தூரத்தில் தெரிந்த கடலைப் பார்த்துக்கொண்டிருந்தான். மக்கள் தமக்காக ஒதுக்கப்பட்டிருந்த வாகனங்களை அணுகி ஏறிப்போவது தெரிந்தது. ஹோட்டல் ஏற்பாடு செய்திருந்த வாகனம் இன்னும் வரவில்லை. சில நிமிடங்களில் வந்துவிடும் என்றது அறிவிப்பு. உயிரைவிட முக்கியம் செலிரியோ. அதை எடுத்து பாதுகாப்பாக மடியில் வைத்துக் கொண்டான்.
அது ஒரு கடற்கரை இல்லம். பறவைகள் கூட்டம் கூட்டமாகக் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. வானம் இருண்டிருந்தது. ஆனால், கடல் இந்த நிமிடம் வரை அமைதியாகத்தான் இருந்தது. கொடுத்த அவகாசத்தில் முதல் கட்டமாக செலிரியோ, கொஞ்சம் பணம், கார்டுகள், ஹாங்கரில் தொங்கிக்கொண்டிருந்த உடைகள், ஆல்டேப் இவற்றைத்தான் எடுத்துக்கொள்ள முடிந்தது. அறைக்குள்ளே தண்ணீர் வந்துவிட்ட மன உணர்வு. செலிரியோவை அலமாரியின் உயரத்தில் எடுத்து வைத்தான். எங்கோ எச்சரிக்கை கேட்டது. ‘இன்னும் மூன்று நிமிடங்களில் அனைவரும் வெளியேறிவிட வேண்டும்.’
வேறு எதாவது முக்கியமானதை மறந்துவிட்டோமா என யோசித்தான். கடல் பார்த்த வீடு அவனுடையது. மதுபானங்கள், பிஸ்கட், அழுக்குத் துணி மூட்டை. அவை தேவையில்லாதவை பட்டியலுக்கு வந்தன. மூன்று மாதப் பணியாக அவனுடைய கொரிய அலுவலகத்தில் இருந்து வந்திருந்தான். ரகசியப் பயணம். அதாவது, எதற்கான பயணம் என யாருக்கும் தெரியாது. வந்த இரண்டாவது மாதத்தில்தான் இப்படி.
சுனாமி... அதைவிட அதிகமாகப் புரட்டிப் போட்டுவிட்டது அதுகுறித்த அச்சம். செலிரியோவில் இருக்கும் திட்டப்பணிகள் அந்த அச்சத்தை அதிகப்படுத்தியது. பாதுகாப்புப் பிரதேசத்துக்குச் செல்லும் வாகனத்தில் அந்தப் பகுதியின் கடைசி பிரஜைகளுடன் ஏறி அமர்ந்தான்.
பாதுகாப்பான இடத்துக்கு வந்து சேர்ந்ததும் முதல்வேலையாக அவனுடைய கொரிய அலுவலகச் செயல் இயக்குநருடன் தொடர்பு கொண்டான். ஆல்டேபில் ட்ராஃபிக் அதிகமாக இருந்தது. சுனாமி அறிவிப்புக்குப் பிறகு தொடர்பு கிடைக்கவில்லை. ஜப்பானுக்கு வந்திருக்கும் வெளிநாட்டுவாசிகள் ஒட்டுமொத்த பேரும் ஒரே நேரத்தில் முயற்சி செய்வதைப் புரிந்துகொள்ள முடிந்தது. கடல் அமைதியாகத்தான் இருந்தது.
எப்போதாவது முன்னரே இதுபோல கணித்து, பிறகு சுனாமி வராமல் இருந்ததுண்டா? ‘ஒரே ஒரு முறை அப்படி ஆனது. ரிக்டர் அளவில் ஏதோ தவறு நிகழ்ந்து, எதிர்பார்த்த அளவு கரையில் பாதிப்பு ஏற்படாமல் போனதுண்டு.’ ஹருகி சொன்னான். ஜப்பானில் பெரும்பாலோருக்கு ஒரே மாதிரியான முக அமைப்பு இருப்பதாகச் சொல்லி வந்தான் தேவ்.
கொரியாவில் சில காலம் பணியாற்றிய அனுபவத்தில் ஒவ்வொரு மங்கோலிய முகத்தையும் அடையாளம் காண அறிந்திருந்தான். குறிப்பாகப் பெண்களின் முகங்களை. செலிரியோவை எடுத்து வெளியே வைக்க பெட்டியைத் திறந்தான். செலிரியோ அதில் இல்லை. ‘கடவுளே’ என்றான் நம்பிக்கை இல்லாமலேயே. அதை அலமாரியில் உயரத்தில் எடுத்து வைத்தது நினைவுக்கு வந்தது. முக்கியமான பொருட்களை எடுத்துக்கொண்ட ஞாபகத்தில் வந்துவிட்டது தெரிந்தது.
ஐயோ! நேனோ செகண்டில் மொத்த ரத்தமும் மூளைக்கு ஏறியது. எவ்வளவு உழைப்பு? எத்தனை மெனக்கெடல்? எவ்வளவு எதிர்பார்ப்பு? எவ்வளவு எதிர்ப்பு? அவன் தங்கியிருந்த கடற்கரை அறையில் அலமாரியின் உயர அடுக்கில் அது செலிரியோ கேஸில் பத்திரமாக இருக்கிறது. சட்டை, பேண்ட் எல்லாம் எடுத்துக்கொண்டு அதை மட்டும் மறந்துவிட்டேன் என்றால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். என்னையே மறந்துவிட்டது போல. ஏற்பார்களா?
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், மறந்துவிட்டு வந்தது, கொரியாவின் சொத்து. இன்னும் இரண்டு மணி நேரத்தில் சுனாமிக்கு இரையாகப் போகிறது. வெளியே ஓடி அங்கும் இங்கும் பார்த்தான். எங்கும் மக்கள் கூட்டம். மீண்டும் விடுதிக்குச் செல்ல வேண்டும் எனத் தான் வந்த வாகன ஓட்டியிடம் சொன்னான். அவன், ‘‘ரெண்டு நாள் கழிச்சுப் பாத்துக்கலாம்’’ என்றான்.
‘‘டேய், விட்டுவிட்டு வந்தது காயப்போட்ட ஜட்டியை இல்லை.’’
யாரிடம் முறையிட்டால் அங்கே போக முடியும். எந்த சப்பை மூக்கன் உதவுவான் எனத் தெரியவில்லை.
ஓட்டல் இருந்த திசை நோக்கி ஓடினான். ஆல்டேபில் கொரிய அலுவலக செயல் இயக்குநர் பேசினார்.
‘‘பாதுகாப்பாக இருக்கிறாயா?’’ என்றார்.
‘‘ஆம்...’’
‘‘பாதுகாப்பாக இருக்கிறதா?’’ என்றார்.
‘‘இல்லை. அவசரத்தில்...’’
‘‘மீட்டாக வேண்டும். டார்கெட் 2040. இன்னும் மூன்று ஆண்டுகள்தான் இருக்கின்றன... பேச நேரம் இல்லை.’’
தேவ் ஏ.வி.யை அணைத்துவிட்டு வேகமாக வெளியே வந்தான்.
ஓடிக்கொண்டே யோசிக்க வேண்டும் என அவன் முடிவு
செய்யவில்லை... அதுவாக நடந்தது.
சுனாமி, நில நடுக்கம், எரிமலை - என்ன காரணம் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். அதை மீட்கப் போய் இறப்பது அல்லது அவர்கள் கையால் இறப்பது என இரண்டு வாய்ப்புகள் எதிரே இருந்தன.
தேவ் முதல் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தான். இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரம். வருவதற்கு பத்து கிலோ மீட்டர். இருபது கிலோ மீட்டர். அரைமணி நேரம். லிஃப்ட் பிடித்து அறைக்குச் செல்ல பத்து நிமிடங்கள். பெட்டியை எடுத்துக்கொண்டு இறங்கிவர பத்து நிமிடங்கள். அதிகபட்சம் ஒரு மணி நேரம் போதும். அதிகமாகவே ஒரு மணி நேரம் இருக்கிறது.
தேவ், வேகமாக காரை நோக்கி விரைந்தான். அவனுடைய காரை எடுக்க முடியாதவாறு முன்னூறு கார்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. யாருடைய காரையும் யாரும் எடுக்க முடியாது.
சாலையின் சிறிய சந்துபொந்துகளில் நுழைந்து ஓடினான். இக்கி மிக்கி மிஷுகி என சலசலப்பின் ஒலிகள் கேட்டுக் கொண்டிருந்தன. கார்களின் அடர்த்தி குறைந்திருந்த இடத்தில் காவல்துறை அதிகாரிகள் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் பணியில் இருந்தார்கள். போலீஸ் அதிகாரி ஒருவரை அணுகி, தான் கடற்கரை ரிசார்ட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியத்தைச் சொன்னான். அவர் அவனை இடது
கையால் இழுத்து ஓரமாகத் தள்ளிவிட்டார்.
ஜப்பானிய மொழியில்... ‘‘போய்யா ஓரமா.’’
தேவ், அவனுடைய ஆங்கில, ஜப்பானிய, கொரியப் புலமைகளில், தான் அங்கு செல்ல வேண்டிய காரணத்தைச் சொன்னான். இந்த முறை அதிகாரி அவனைச் சுட்டுவிடுவதுபோல முறைத்தார். தேவ் சளைக்கவில்லை. அவனும் அதே போல முறைத்தான்.
கூட்டம் நெரிசல் குறைந்தது. தேவ் கதறிக்கொண்டிருந்தான். ‘‘எனக்கு உதவுங்கள். அரை மணி நேரத்தில் திரும்பி வந்துவிடுவேன்.’’ எல்லோரையும் விலக்கிக்
கொண்டு தேவ் கடற்கரை வீட்டை நோக்கி ஓட முனைந்தான்.
இறுதி அறிவிப்பு போல அதிகாரி அவனை நோக்கி துப்பாக்கியை உயர்த்தினார். தேவ் சட்டை பட்டனைக் கழற்றி மார்பைக் காட்டினான். ‘‘பரவாயில்லை, சுட்டுவிடுங்கள். ஆனால், நான் இப்போது அங்கே போனால் ஜப்பானுக்கு என்றைக்குமே நல்லது விளையும். அமெரிக்காவைக் கண்ணில் விரலைவிட்டு ஆட்ட முடியும்.’’
‘‘அமெரிக்காவை?’’
‘‘ஆமாம்.’’
‘‘அங்கே என்ன இருக்கிறது?’’
‘‘ஒரு பெட்டி. அமெரிக்காவை அசைத்துப் பார்க்கிற ஒரு புராஜெக்ட். தயவுசெய்து போலீஸ் பைக்கைக் கொடுத்து உதவுங்கள்.’’
‘அமெரிக்காவைக் கண்ணில் விட்டு ஆட்ட முடியும்’ என்ற வாக்கியம் மந்திரம் போல வேலை செய்தது. அருகே பலகை போன்ற தேகத்துடன் பைக்கில் அமர்ந்திருந்த போலீஸ்காரன் ஒருவனை சைகையால் அழைத்தார் தாவோ ஷென்.
துரித வார்த்தைகளில் ஏதோ சொன்னார். அவன் அவ்வளவு சீக்கிரம் புரிந்துகொண்டு வேகமாகத் தலையசைத்தான். அந்த போலீஸ்காரன் பைக்கில் தேவ்வை உட்காரச் சொன்னார், அந்த அதிகாரி. ‘‘ஓர் உயிர் போனாலும் எங்கள் அரசு, அதை போலீஸ் கடமையில் இருந்து தவறியதாக நினைக்கும். சீக்கிரம் வந்துவிடுங்கள்...’’ தேவ் வழி சொல்வதற்கு முன் பைக் பாய்ந்துகொண்டிருந்தது. யாருமற்ற சாலை. பைக் முகப்பு விளக்கு வெளிச்சம் சாலையைத் தடவிக்கொண்டு முன்னேறியது.
பதினைந்து நிமிடங்களில் சென்றுவிட்டனர். உண்மையில் இப்படி ஒரு தவறைச் செய்வோம் என தேவ் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அறையைத் திறப்பதற்கான அனுமதி கார்டைக் கொண்டுவரவில்லை. கார்டு சொருகினால்தான் கதவு திறக்கும். ஓர் அவசரம், இன்னொரு தொல்லைக்குக் கம்பளம் விரித்தது.
‘‘அத்தனை எளிதாகத் திறக்க முடியாதே?’’ என்றான் போலீஸ்காரன்.
‘‘உடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?’’
‘‘யோசிக்க நேரம் இல்லை. தோதான கருவி ஏதேனும் கிடைக்கிறதா எனப் பார்க்கிறேன்.’’
எங்கிருந்தோ ஒரு மண்வெட்டியும் கடப்பாறையும் கொண்டு வந்தான். கீழே தோட்டத்தில் கிடந்திருக்க வேண்டும். இருவரும் ஆனவரைக்கும் கதவை இடித்தனர். கதவின்கீழ் பக்கத்தில் ஒரு ஆள் நுழைகிற அளவுக்கு ஓட்டை. தேவ் உள்ளே நுழைந்த நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அந்தக் கால ஹாலிவுட் சினிமா க்ளைமாக்ஸில் விறுவிறுப்புக்காக இப்படி எல்லாம் செய்தார்கள். நிஜம் வேறு... சினிமா வேறு இல்லைதான் போலும்.
‘‘சீக்கிரம்.’’
இருட்டில் தட்டுத் தடுமாறி, ஒருவழியாக செலிரியோவைக் கண்டெடுத்தான் தேவ். வெளியில் இருந்து, ‘‘அவசரம். சீக்கிரம் வா’’ என்ற குரல் கேட்டது.
‘‘இதோ...’’
‘‘எங்கோ கட்டடங்கள் சரிந்துவிழுகிற சத்தம் கேட்கிறது...’’
கதவின் வழி செலிரியோவைக் கொடுத்துவிட்டு, ஓட்டைவழியே தேவ் தவழ ஆரம்பித்த நேரத்தில் கட்டடம் அதிர்ந்தது. மொத்தக் கதையும் முடிந்ததென்று நினைக்கையில் போலீஸ்காரன் ஒரு காரியம் செய்தான்.
‘‘மொத்தமே இதுதானா?’’
‘‘மூவாயிரம் பேர் உழைப்புடா.’’
‘‘சுனாமி... நான் விரைகிறேன். முடிந்தால் வந்து சேர்.’’ சுருக்கமாகச் சொன்னான். அமெரிக்காவை ஆட்டிப் படைக்கப் போகும் பொக்கிஷத்தை முதலில் காப்பாற்றியாக வேண்டும் என்கிற தவிப்பு அவனுடைய உயிராசையைவிடப் பெரிதாக இருந்தது. சரியாக மூன்று நொடி இடைவெளியில் தேவ் அவனைத் துரத்திச் சென்றான்.
பைக்குக்கும் அவனுக்கும் இரண்டு நொடி தருணத்தில் சுனாமியின் பேரலை ஒன்று அசுரக் கரம் போல தேவைத் தீண்டியது. கண்களுக்கு மிக அருகில் அந்த போலீஸ்காரன் தப்பிச் செல்வது தெரிந்தது. நீரின் அதிகபட்ச வெறி, நீரின் அதிகபட்ச பலம். நீர் கொலை வெறியோடு துரத்திப் பிடித்தது. தூக்கி எறிந்தது எனச் சொல்ல வேண்டும். நெடிய சுவர் ஒன்றின் மீது பட்டுச் சாய்ந்தது மட்டும்தான் அவனுக்குக் கடைசியாக நினைவிருந்தது.
*****
அதிகாரி அதே இடத்தில் காத்திருந்தார். ‘‘இதுதானா?’’ எனப் பெட்டியைக் காட்டிக் கேட்டார். பொதுவாக அந்த முகத்தில் எந்தவிதமாக ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார் என்பதைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தது.
போலீஸ்காரன் பெட்டியை அவரிடம் காட்டி, கட்டை விரலை உயர்த்திக்காட்டினான். பைக்கின் பின்சீட்டைக் காட்டி, அவன் எங்கே என்றார் சைகையால். அவனைக் காப்பாற்ற முடியவில்லை என்பதை அவனும் ஓர் உதட்டுப் பிதுக்கல் மூலம் சொன்னான்.
பதிலாக ஒரு நொடியில் ஆழ்ந்து வருந்திவிட்டு, ‘‘அமெரிக்காவை அசைத்துப் பார்த்துவிட முடியுமா?’’ என்றார் அதிகாரி.
‘‘இது ஒரு புராஜெக்ட்... செவ்வாயில் வாழ்விடங்கள் உருவாக்குவதில் விஞ்ஞானிகள் செய்திருக்கும் அற்புதம். ‘மார்ஸ் மிஷன்’ என்றான். ஒரே ஆண்டில் செவ்வாயில் நகரத்தை உருவாக்கி செயல்பட வைத்துவிட முடியும். 86 ஆயிரம் ரோபோக்கள் அதற்காக வடிவமைக்கப்படுகின்றன. அதற்கான முதல் வடிவமைப்பு அறிக்கை இது. இன்றுதான் அப்டேட் செய்யப்பட்டதால் தலைமையகத்துக்குக்கூட அனுப்பவில்லை என்ற தகவலை அந்தப் பையன் சொல்லிக்கொண்டு வந்தான்.’’
போலீஸ் அதிகாரி முகம் இறுகியது. ‘‘இந்தியனா?’’
‘‘தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்’’ என்றான்.
‘‘நான் நினைத்தது சரிதான். பைக்கை விட்டுவிட்டு, ஜீப்பில் ஏறு.’’
அவன் ஓரமாக நிறுத்திவிட்டு வந்தான். அதிகாரி நிதானமான நிலைக்கு வந்திருந்தார். அவருடைய முகம், அந்த கணத்தில் ஒரு பக்குவம் வந்து ஒட்டிக்கொண்டதுபோல மாறிவிட்டது.
‘‘பரவாயில்லை, முன் பக்கம் வந்து அமர்ந்துகொள்... ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளியில் சுட்ட செங்கற்களால் நகரத்தை நிர்மாணித்தவர்கள், செவ்வாயில் நிர்மாணிக்கப் போகிறார்கள்.’’
‘‘சார், நீங்கள் அவன்மீது மிகவும் மரியாதை வைத்திருக்கிறீர்கள்.’’
‘‘அவன் அல்ல... அவர்கள். அவனை எப்படியாவது காப்பாற்றியிருக்க வேண்டும். நம்முடைய பழம்மொழியான அய்னுவுக்கும் தமிழுக்கும் பெரிய சம்பந்தம் உண்டு. சொல்லப் போனால் தமிழில் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரிந்து வந்த மொழி நம் அய்னு.’’
பரபரப்பு குறைந்த நீண்ட சாலை ஒன்றில் ஜீப் விரைந்து கொண்டிருந்தபோது, ஒரு நற்செய்தியோடு வருவதாகக் காவல்துறை தலைமையகத்துக்குத் தகவல் சொன்னார் தாவோ ஷென். 35-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஜப்பானில் அத்தனை வாகனங்களும் மின்மயமாக வேண்டும் எனக் கட்டுப்பாடு கொண்டுவந்தவர்.
வளைகுடா நாடுகள், பெட்ரோலியம் வற்ற வற்ற தொடர்ச்சியான போர்களில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் வேகமாக அழிக்கத் தொடங்கியிருந்த நேரத்தில் ஜப்பான் முதல்கட்டமாகப் பெட்ரோலியத்துக்கான மாற்றை நடைமுறைப்படுத்தியபோது, போக்குவரத்து அதிகாரியாக அவர் செய்த அதிரடி முக்கியமானது. மடிமீது இருந்த செலிரியோவைப் பார்த்தார். அதைவிட அதிரடி இது!
- தொடரும்