அத்தியாயம் 1

111.13k படித்தவர்கள்
22 கருத்துகள்

சிக்மகளூரிலிருந்து பெங்களூர் திரும்புவதற்குப் பதிலாக ஆகும்பே சென்றுகொண்டிருந்தோம். எப்போதும் மழை பெய்துகொண்டிருக்கும் இந்த சிறுநகரத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட நாளிலிருந்து இங்கு வரவேண்டும் என்கிற ஆர்வம் எங்கள் இருவருக்குமே இருந்துகொண்டிருந்தது. ஆகும்பேவின் முகமாகச் சொல்லப்படும் பாம்புகள் மீதிருந்த பயம்தான் பயணத்தைத் தள்ளிப்போட்டது. எங்களுடன் பணிபுரியும் நிஹாலின் திருமணத்திற்காக நேற்று சிக்மகளூர் வந்திருந்தோம். நண்பகல் நிகழ்வு முடிந்ததும் நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, பெங்களூர் திரும்ப வண்டியை எடுத்தபோதுதான் ரிஷி கேட்டான்.

‘’எப்போதும் மழை பெய்துகொண்டிருக்கும் ஓர் அடர்ந்த காட்டில் நாளைக் காலை விடிந்தால் எப்படி இருக்கும்?’’

அவன் கேள்வி ஆவலைத் தூண்டுவதாக இருந்தது.

‘’பார்த்துவிடுவோமே…’’ என உடனடியாக வண்டியை ஆகும்பே செல்லும் சாலைக்கு விரட்டினேன்.

திருமண நிகழ்வுகள் முடிந்ததும், இன்று மாலையே பெங்களூர் திரும்பிவிடும் திட்டத்தோடு வந்திருந்ததால், மேலும் சில நாட்கள் தங்குவதற்குத் தேவையான உடைகள் முதற்கொண்டு எந்தப் பொருட்களுமே எங்களிடம் இல்லை. வண்டியை மெதுவாக விரட்டியபடி வழியில் தென்பட்ட கடைகளைப் பார்த்துக்கொண்டே வந்ததில், ஒரு பேரங்காடியைக் கண்டுபிடித்தேன். அதற்கு சமீபமாக வண்டியை நிறுத்தி உள்ளே நுழைந்து உடைகள், டார்ச், மழைக்கோட்டு, குடை, மற்றும் அட்டைகள் கடிக்காத பூட்ஸ் என ஒரு மலைப்பிரதேசத்தில் தங்குவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொண்டோம். கடைக்கு வெளியே வந்து அலுவலக நண்பர்களை அலைபேசியில் அழைத்து, அலுவலகத்திற்கு இரண்டு நாட்கள் வரமாட்டோம் எனச் சொன்னோம். எங்கு போகிறோம் என்பதைச் சொல்லவில்லை. அவர்களும் கேட்கவில்லை.

ரிஷி அலைபேசியில் இணையத்தைத் துழாவி, ஆகும்பேவின் சில தங்கும் விடுதிகளின் எண்களை எடுத்து, அவர்களை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தான். நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து ஆகும்பே, கூகுள் மேப்பில் இரண்டரை மணி நேர பயண தூரம் என்பதாகக் காண்பித்தது. பொருட்களை வண்டியில் அடைத்துவிட்டு வண்டியை உயிர்ப்பித்தேன். இருட்டுவதற்குள் போய் சேர்ந்தால் போதும் என்பதால், நிதானமாகவே வண்டியைச் செலுத்தினேன். முதல் பதினைந்து கிலோமீட்டர்கள் கடந்ததும், இருபுறமும் உயரமான மரங்களைப் பார்க்க முடிந்தது. பசுமை மிகப் பெரும் போர்வையைப் போல வழித்தடத்தைப் போர்த்தியிருந்தது. ஒருவழிப்பாதைதான்… வழியெங்கும் ஏராளமான மாடுகள் குறுக்கும் நெடுக்குமாகச் சாலையைக் கடந்தன. எந்த அவசரமும் இல்லாது, நிதானமாக மாடுகளுக்கு வழி கொடுத்தேன். 

ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின்பு இடது பக்கமாக நீரின் சப்தத்தைக் கேட்டோம். ரிஷி வண்டியை ஓரங்கட்டச் சொன்னான். இறங்கியதும் நீரின் சப்தம் காதுகளை நிறைத்தது. குளிர் உடலை ஊடுருவியது. வானம் இருண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை வரும் போலிருந்து. ரிஷி ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான். மெல்ல இருவருமாய் நடந்து ஓடையை நெருங்கினோம். செம்மண் குழம்பலாய் நீர் சரிவை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. ஆழமில்லாத சிறு ஓடைதான். ஓடையின் மறுபக்கம் அடர்ந்து உயரமாய் மரங்கள் வளர்ந்திருந்தன. சற்று தூரத்தில் சில வீடுகள் தென்பட்டன. ஓடைக்கு மேல் ஒரு பாலம் இருந்தது. இருவரும் எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். ரிஷி சிகரெட்டின் கடைசிப் புகையை உறிஞ்சி சன்னமாய் வெளியே விட்டான். பார்க்கவே அழகாக இருந்தது. நெருங்கிப் போய் அவனை முத்தமிட்டேன். சிரித்து விலகியவன்,

‘’மழைக்கு முன்னால போய்டணும். வழி எப்படி இருக்கும்னு வேற தெரியலையே…’’ என்றான்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

மீண்டும் வந்து வண்டியில் அமர்ந்தோம். சற்று வேகத்தைக் கூட்டினேன். வழியில் சிறு சிறு கிராமங்களைக் கடந்தோம். எல்லா கர்நாடக கிராமங்களும் ஒன்று போலவே இருப்பதாகப் பட்டது. ரிஷியும் இதை ஆமோதித்தான். மேலும் என்னவென்று சொல்லிவிட முடியாத ஒரே மாதிரியான வாசமும் இந்த கிராமங்களுக்கு இருக்கிறது. ஆகும்பேவில் பார்க்கவேண்டிய இடங்கள், தங்குமிடங்கள் குறித்தெல்லாம் ரிஷி தகவல்களைச் சேகரித்திருந்தான். 

எங்களுடைய பெரும்பாலான பயணங்களில் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள், பணம் பிடுங்கும் ரிசார்ட்டுகள் போன்றவை இடம்பெறாது. ஹோம் ஸ்டே அல்லது செல்லும் இடங்களில் யாருடைய வீட்டிலாவது தங்குவதுதான் வழக்கம். ஆகும்பேவில் அப்படி கிடைக்கவில்லை, ஆனாலும், அதைப் போன்ற தங்குமிடம் ஒன்றை ரிஷி கண்டுபிடித்திருந்தான். அவர்கள் கொடுத்திருந்த எண்ணிற்கு அழைத்து உடனே வருவதாகச் சொன்னான். மேலும் நேரில் பார்த்துவிட்டுத்தான் உறுதி செய்வோம் என்றும் சொன்னான். அந்த வீட்டின் உரிமையாளர், பிடிக்கவில்லை என்றால் போய்விடலாம் எனச் சொல்லிவிட்டு அவர் முகவரியை கூகுள் மேப்புடன் அனுப்பி இருந்தார். 

ஆகும்பேவில் வண்டி நுழையும்போது மழை வந்துவிட்டது. மழைத்தாரைகள் உயர்ந்த மரங்களில் விழும் ஓசை, அருவியில் நீர் விழும் ஓசைக்கு நிகராய் இருந்தது. ஆகும்பே கிராமம் தொடங்கிய உடனேயே முடிந்துவிட்டது. வழியில் பார்த்திருந்த கிராமங்களின் அதே சாயல்தான். உடுப்பி ஹைவேஸில் ஐந்து கிலோமீட்டர்கள் சென்றதும், மேப் ஒரு மண் சாலைக்காய் திரும்பியது. தடுமாற்றமாய் இரண்டு கிலோமீட்டர்கள் தாண்டியதும் ஒரு காஃபி தோட்டம் தென்பட்டது. நாங்கள் பேசியிருந்த தங்குமிடம் அந்தத் தோட்டத்துக்கு உள்ளே இருப்பதாய் மேப் காண்பித்தது. தனியாருக்கு சொந்தமான ஒரு பெயர்ப் பலகை தெரிந்தது. வாகனங்களை நிறுத்தும் இடம் என்பது போன்ற ஒரு சமதளப் பரப்பில் வண்டியை நிறுத்தினோம். வெளியே மழை கொட்டிக்கொண்டிருந்தது. உரிமையாளரை அலைபேசியில் அழைத்ததும், அவர் வாகனத்திலேயே இருக்கும்படி சொன்னார். பத்து நிமிடத்திற்குப் பின்பு இரண்டு குடைகளோடு இரு இளைஞர்கள் வந்தனர். அவர்கள் கையோடு கொண்டுவந்திருந்த குடைகளை வாங்கிக் கொண்டோம்.

அவர்களின் பேச்சில் நட்பு இருந்தது. குடைகள் தலை நனைவதிலிருந்து மட்டும்தான் காக்க உதவின. மழையில் இறங்கி நடப்பதைப் போலத்தான் இருந்தது. உடல் சிலிர்க்க அவர்களின் பின்னால் நடந்தோம். மழை சீராகப் பெய்துகொண்டிருந்தது. காலணிகளோடு பாதங்கள் முழுவதுமாய் நீரில் மூழ்க மெதுவாய் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து நடந்தோம்.

ரிஷி கிசுகிசுப்பாய், ‘’இங்க பாம்பு இருக்குமா?” என்றான். எனக்கும் உள்ளே சிலீர் என்ற பயம் எழுந்தாலும் வெளியே சிரித்து, ‘’இருக்காது… பார் அவங்க நடக்கிறாங்களே’’ என்றேன்.

இருந்தாலும் காலடியில் என்ன இருக்குமோ என்கிற பயமும் இருக்கத்தான் செய்தது. ஒரு சிறிய மண்மேட்டை ஏறி இறங்கியதும், ஓடு வேய்ந்த ஐந்து வீடுகள் தென்பட்டன. சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காஃபி செடிகள். விரைவாய் நடந்து முதல் வீட்டை அடைந்தோம். வரவேற்பறை போன்ற ஒன்றில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் எழுந்து வரவேற்றார்.

‘’நல்லா நனைஞ்சிட்டீங்க…’’ எனச் சிரித்தபடியே ஒரு அம்மா இரண்டு துண்டுகளோடு உள்ளறையிலிருந்து வெளியே வந்தார். குளிரில் எங்கள் இருவரின் உடலும் மெலியதாய் நடுங்கியது. துண்டுகளை வாங்கித் துடைத்துக்கொண்டோம். எங்களை அழைத்து வந்த இளைஞர்களில் ஒருவர், வரவேற்பு மேசையின் பக்கமாய் ஆணியில் மாட்டியிருந்த சாவியை எடுத்துக்கொண்டு, ‘’வாங்க’’ என்றார்.

உடனே அந்த அம்மா தடுத்து, ‘’இரு, காஃபி குடிச்சிட்டு போகட்டும்’’ என்றார்.

நாங்கள் பதில் பேசாமல் நின்றோம். ஐந்து நிமிடத்தில் இரண்டு பெரிய கோப்பைகளில் கருப்பு காஃபி வந்தது. நின்றபடியே அதைக் குடித்தோம். காஃபியின் நறுமணமும் மழையும் அந்தச் சூழலும் எங்களை இறுக்கத்திலிருந்து விடுவித்தது. நான் கன்னடத்திலேயே அந்த அம்மாவிடம் பேச ஆரம்பித்தேன். காஃபி தோட்டத்தின் அசல் உரிமையாளர் மடிகேரியில் இருந்தார். இவர்கள் நான்கு பேரும் ஒரே குடும்பம். கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இந்தத் தோட்டம் மற்றும் தங்கும் விடுதிகளைப் பராமரித்து வருகிறார்கள். காஃபியைக் குடித்து முடித்ததும், மழை தூறலாக வலுவிழந்தது. முதல் வீட்டிற்கும் இரண்டாவது வீட்டிற்கும் இரண்டு நிமிட நடைதூரம் இருந்தது. அந்த இளைஞன் குடையோடு முன்னால் நடக்க, நாங்கள் பின்னால் நடந்து போனோம்.

இருள் முழுமையாய் கவிழ்ந்திருந்தது. பெரியவர் எங்களுக்கு ஒரு டார்ச் கொடுத்திருந்தார். அந்த வெளிச்சத்தில் மெல்ல நடந்து போனோம். ஓடு வேய்ந்த வீட்டின் வாசலில் விஸ்தாரமாக இரண்டு திண்ணைகள் இருந்தன. அவை இரண்டும் ஒய்யாரமாக எங்களை வரவேற்பது போலத் தோன்றியது.

வீட்டுக்குள் நுழைந்தோம். ஒரு கூடம் ஒரு படுக்கையறை கொண்ட மிகச் சிறிய வீடு. தரையைச் சிவப்பு சிமெண்ட் போட்டு மெழுகியிருந்தனர். சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது. ஒரு டியூப்லைட் கூடத்திலும் இன்னொரு டியூப்லைட் படுக்கை அறையிலும் இருந்தது. விளக்குகளை உயிர்ப்பித்ததும் அந்த இடம் இன்னும் ஒளிர்ந்தது. இடம் பார்த்ததும் பிடித்துப் போனது. ரிஷி காரிலிருக்கும் பொருட்களை எடுத்து வரவேண்டும் என்றான். அதற்கு அந்த இளைஞன், மழைவிட்டதும் தானே காரிலிருந்து உடைமைகளை எடுத்து வருவதாகச் சொன்னான். இரவு எட்டு மணிக்கு உணவு தயாராகிவிடும் என்றும், வேறேதாவது தேவைப்பட்டால் அலைபேசியில் அழைக்கச் சொல்லி, இன்னொரு எண்ணையும் தந்தான். இளைஞன் வெளியேறியதும் ஈர உடைகளைக் களைந்தோம். ரிஷி என்னை இழுத்து அணைத்து முத்தமிட்டான். மூர்க்கமாகப் படுக்கையில் தள்ளி மேலே விழுந்தான். நான் அவனை மெல்ல உள்ளே வாங்கிக்கொள்ள ஆரம்பித்த நொடியில், மழை மீண்டும் வலுவடைந்தது. ஓடு வேய்ந்த கூரையின் மீது மழை இன்னும் சப்தமாகப் பெய்ய ஆரம்பித்தது.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

பழகிய உடல்தாம் என்றாலும் ஒவ்வொரு முறையும் புத்தம் புதியதாகத்தான் தோன்றுகிறது. மழையின் ஈரமும், புது இடத்தின் பச்சை மணமும், உடலின் சகல இணுக்குகளையும் திறந்துவிட்டிருந்தது. நான் அவனையும் அவன் என்னையும் பரஸ்பரம் விழுங்கிக்கொள்ள முயன்று தோற்று, மீண்டும் முயன்று தோற்றுக்கொண்டிருந்தோம். ரிஷி களைத்து எழுந்து என்னை விலக்கி, படுத்த வாக்கிலேயே கீழே கிடந்த அவன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து சிகரெட் பெட்டியை எடுத்து, அதற்குள்ளிருந்து ஒன்றை உருவி, பெட்டிக்குள்ளேயே வைத்திருந்த சிறிய லைட்டரை வெளியே எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான். முதல் இழுப்பை மிக ஆழமாக இழுத்து வெளிவிட்டான். நான் எழுந்து படுக்கை ஓரமாய் இருந்த ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, அறையோடு ஒட்டியிருந்த குளியலறைக்குள் நுழைந்தேன். மனமும் உடலும் திளைத்தது. சிறுநீர் கழிக்கையில் உடல் சிலிர்த்து அடங்கியது. துண்டை இடுப்பில் கட்டாமல் தோளில் போட்டுக்கொண்டு மீண்டும் படுக்கைக்கு வந்தேன். 

ரிஷி சிரித்தான்.

‘’என்னடி, தோளை மறைச்சிருக்கியா?” என்க, நான் மீண்டும் அவன் மீது பாய்ந்தேன். இம்முறை நிதானமாக அவனை செலுத்திக்கொண்டு இயங்கினேன். ரிஷி கிறங்கியபடி சிகரெட் புகையை ஊதினான். சற்றுத் திணறி இருமி அவன் விரல்களிலிருந்த சிகரெட் துண்டை பிடுங்கிப் போட்டுவிட்டு, இன்னும் ஆழமாக இயங்கி, உச்சம் தொட்டு தளர்ந்து விழுந்தேன். படுக்கையின் எதிர் எதிர் நிலைகளில் அப்படியே உறங்கிப் போய் கனவில் விழுந்தேன்.

கனவின் ஆழத்தில் அடர்ந்த குளிர் இருந்தது. எங்கும் நிசப்தம். நீர்ப்பரப்பு உறைந்த பனித்தரையின் மீது ரிஷி நடந்து கொண்டிருந்தான். பார்வைக்கு எட்டிய தொலைவு எங்கும் பனி உறைந்திருந்தது. அத்தனைத் தூய வெண்மையை நான் ஒருபோதும் கண்டதில்லை. காலின் கீழோ நீலம் பளிங்காய் உறைந்து கிடந்தது. ரிஷியின் உடலில் ஆடைகள் எதுவுமில்லை. ஏதோ நினைவு வந்தவளாய் என்னைப் பார்த்தேன். என்னுடலிலும் ஆடைகள் இல்லையென்பதை உணர்ந்ததும் மனம் மிக உற்சாகமடைந்தது. அவன் பின்னால் போய்க்கொண்டிருந்தேன். ரிஷி திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டிருந்தான். நான் அவனோடு சேர்ந்து நடக்க விரும்பி என் நடையை வேகமாக்கினேன். ஆனால், எனக்கும் அவனுக்குமான தொலைவு அப்படியே இருந்தது. நடக்க நடக்க மூச்சிரைத்ததே தவிர இடைவெளி குறையவில்லை. ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல் நின்றுவிட்டேன். அவனை நிற்கச் சொல்ல வேண்டி, ரிஷி! எனக் கத்தக் குரலெடுக்கையில், திடீரென வானிலிருந்து ஒரு கரம் நீண்டு வந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அது ரிஷியை கவ்விப் பிடித்து மேலே இழுக்க ஆரம்பித்தது. ரிஷியின் கால்கள் அந்தரத்தில் மிதந்துகொண்டே வானின் மீது மெல்ல ஏறியது. அவன் மெல்ல மறைவதை சற்றுத் தாமதமாய் உணர்ந்துகொண்டு ‘ரிஷி! ரிஷி!’ என கத்திக்கொண்டே ஓட ஆரம்பித்தேன். ஒரு நிமிடம்தான் பாம்பு இரையை விழுங்குவது போல வானம் அவனை உள்ளே இழுத்துக் கொண்டுவிட்டது. 

திகைப்பும் ஆச்சரியமும் பயமும் எனக்குள் திரண்டு வந்தது. 

“ஐயோ, ரிஷி!” 

என வாய் விட்டுக் கதற யத்தனிக்கையில் என் தரை உடைந்தது. நான் நின்றுகொண்டிருந்த பனித்தரை பிளந்து என்னை உள்வாங்கிக்கொண்டது. குளிர்… குளிர்… அப்படி ஒரு குளிர். உடல் உடனடியாக விறைத்தது. காதும் மூக்கும் உறைந்து மூச்சும் உறைவதைப் பார்க்க முடிந்தது. இன்னும் ஒரு நொடியில் நான் இல்லை எனும் நினைவு வலுப்பெறும்போது, எங்கோ இன்னும் ஆழத்திலிருந்து தட் தட் என யாரோ எதையோ தட்டும் சப்தம் கேட்டது. நினைவு மெல்ல விழித்து அந்த ஓசையைப் பிடித்துக் கொண்டு மேலெழும்பியது. அந்த ஓசை மெல்ல என் உடலை நீரின் மேற்பரப்பில் கொண்டுவந்து கிடத்தியது. நான் ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டபோது என்னுடலின் ஒவ்வொரு துளையும் உயிர்ப்பின் ஆனந்தத்தில் திளைத்தது.

(தொடரும்…)