அத்தியாயம் 1

2.36m படித்தவர்கள்
694 கருத்துகள்

’ஆயகலைகள் மொத்தம் 64!
அதில் வாஸ்துசாஸ்திரமும், சிற்பசாஸ்திரமும் கணிதபூர்வமானவை… எண்களால் ஆன இந்த கணிதமே உலகில் முதலாம்! எழுத்துகூட இதன் பின்பே… இந்தக் கணிதத்தில் கரை கண்டவர்க்கெல்லாம் நந்திபுரம் ஒரு மிகப்பிரியமான ஷேத்திரம்!’

தூக்கு வாளியில் பழைய சோற்றுடனும், திருத்திய சில மாங்காய்த் துண்டுகளுடனும் மேய்ச்சலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தான் கிருஷ்ணன். மேல்வீட்டுப் பாளையக்காரர் கிருஷ்ணனுக்கு ரெடிமேடில் ஒரு பேண்ட் சட்டை எடுத்துத் தந்திருந்தார். முதலில் அதை அணிந்துகொண்டுதான் புறப்படப்பார்த்தான். ஆனால், அதை அவன் சித்தியான சிந்தாமணி தடுத்துவிட்டாள்.

”பெரிய கலெக்டர்னு நெனப்போ? கொழா சட்டையோட கிளம்பிட்டே… இந்த கெரகத்த எல்லாம் ஊர்த்திருவிழா சமயத்துல போட்டுக்கிடலாம். எப்பவும் போல கைலியும் சட்டையுமாவே கெளம்பு. ஆடும் மாடும் மேய்க்கறத்துக்கு எதுக்கு கொழா பேண்ட்டு?”

என்று அவள் கேட்டிருந்த கேள்வி அந்த புதிய ஆடைகளை அவன் கழற்றும்படி செய்துவிட்டது. எப்போதும் அந்த வீட்டில் அவள் பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது. கிருஷ்ணனின் அப்பனான தேனப்பனே மகுடிக்கு கட்டுப்பட்ட நாகமாய் மடங்கிக்கிடக்கும்போது முதல் தாரத்துக்கு  பிறந்த கிருஷ்ணனெல்லாம் எந்த மூலைக்கு.

கிருஷ்ணனின் அப்பன் தேனப்பனும் மேல்வீட்டுப் பாளையக்காரரிடம்தான் வேலை பார்க்கிறான். ஐம்பது வயதாகிறது – பத்து வயதில் எடுபிடியாக சேர்ந்து இன்று களத்துமேஸ்திரியாக இருக்கிறான். வருஷம் ஆறுமூட்டை சம்பா நெல்லுடன், செக்கு ஆடினால் நான்கு தூக்கு எண்ணெயுடன், கடலைப்புண்ணாக்கு ஒரு கூடையும் ‘மேஸ்திரி பாகம்’ என்று கூலியாக வரும். இது போக மாதம் மூவாயிரம் சம்பளம்! இதில்தான் தேனப்பன் குடும்பம் நடந்தாக வேண்டும் இந்த 2021-க்கு இதெல்லாம் எந்த அளவுக்குப் போதுமானது என்று கேட்கத் தேவையேயில்லை.

அதனால் சிந்தாமணி தன் பங்குக்கு ஆடு கோழி வளர்த்து அதில் கொஞ்சம் காசு பார்க்கிறாள். தட்டு ஓடு வேய்ந்த அந்தக் கால வீட்டின் பின்புறத்தில் ஒரு பத்து சென்ட் இடம் இருக்கிறது. முன்பெல்லாம் அங்கே வேலிக்காத்தான் மண்டிக் கிடக்கும்… அதை வெட்டி வீழ்த்திவிட்டு அங்கே பஞ்சாரக் கூடைகளைக்கொண்டு கோழிகளை வளர்க்கிறாள். பக்கமாய் ஒரு ஒதியமரம் – அதன் கீழே ஒரு ஆறு ஆட்டு குட்டிகளும் வளர்கின்றன!

இதனால் தினமும் ஆயிரம் ரூபாய்க்கு குறைவில்லாத ஒரு வியாபாரம் அவளுக்கு அமைந்துவிட்டது. இதெல்லாம்கூட அவள் கை ஓங்கிட ஒரு காரணம். வரும் பணத்தில் தன் இரு பெண்களுக்காக சீட்டு வேறு போடுகிறாள்.

உலகிலேயே அவளுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் யார் என்றால் அவள் பெண்களான கனிமொழியும், மல்லிகாவும்தான்! இதில் கனி பத்தாம் வகுப்பு படிக்கிறாள், மல்லிகா ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.

கிருஷ்ணன்கூட நன்றாகத்தான் படித்தான்... ஆனால், அவன் பள்ளிக்குப் போய் படிப்பதை சிந்தாமணி விரும்பவில்லை. ஆறாம் வகுப்பின்போதே அவனைத் தடுத்து நிறுத்தி மேல் வீட்டுப் பாளையக்காரரின் மாட்டுப்பண்ணைக்கு அனுப்பிவிட்டாள். பாளையக்காரர் மாசம் மூவாயிரம் சம்பளம் தருகிறார்.. அப்பன் தேனப்பனுக்கு வருடம் ஆறுமூட்டை நெல் என்றால் பிள்ளைக்கு இரண்டு மூட்டை.

மொத்தமாய் நாற்பத்தி மூன்று மாடுகள் இருக்கின்றன அந்தப் பண்ணையில். அவற்றை நந்திபுரம் கண்மாய் கரைபக்கம் மேயவிட்டு பத்திரமாய் திரும்ப அழைத்து வந்து கொட்டிலில் அடைக்க வேண்டும். இப்போது அந்த நாற்பத்து மூன்று மாடுகளுடன் பன்னிரண்டு ஆடுகளும் சேர்ந்துவிட்டன. ஒற்றை ஆளாக மேய்ப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. எனவே, பாளையக்காரர் பெரிய மனது பண்ணி கருப்பச்சாமி என்பவனை ராமுவோடு சேர்த்துவிட்டார்.

ந்த கருப்பச்சாமி ஒரு தண்ணிவண்டி! சரியான குடிகாரன். ஒரு குவாட்டருக்கு காசு சேர்ந்தால் போதும்… டாஸ்மாக் கடைப்பக்கம் போய்விடுவான். அதன் பின் வந்தால் போதையில் ஒரே தகராறுதான். இப்போதெல்லாம் அவன் வருவதில்லை! அவனுக்குப் பதில் அவனின் ஒரே மகளான வள்ளிப்பொன்தான் மேய்வுக்கு வருகிறாள்! அதோ தூக்குவாளியோடு அவள்..! கையில் கம்போடு தூக்குவாளி சகிதம் கண்மாய் கரை மேட்டில் தென்பட்ட கிருஷ்ணனைப் பார்த்துக்கொண்டேதான் வந்தாள் வள்ளிபொன்!

அவள் கையில் ஒரு பத்தடி உயர தொரட்டிக் குச்சியுமிருந்தது. வந்தவள் தூக்குவாளியை கண்மாய் கரை ஆலமர விழுது ஒன்றில் வாகாக மாட்டித் தொங்கவிட்டாள். அதே போல்தான் கிருஷ்ணனும் தொங்கவிட்டிருந்தான்.

மாடுகளும் ஆடுகளும் நாலாபுறமும் பொசிந்து வளர்ந்திருந்த புற்களை சரிக்கத் தொடங்கியிருந்தன. கிருஷ்ணன் அங்குள்ள ஒரு மட்டப்பாறை மேல் மல்லாந்திருந்தான். அவன் மேல் தன் நிழல் விழும்படியாக அருகில் போய் நின்றாள் வள்ளிப்பொன். அவனை சற்றுக் குறுகுறுவெனப் பார்த்தாள். பாவாடை தாவணியில் பார்க்க கிண்ணென்றும் இருந்தாள்!

“ ஏ புள்ள அப்படி பாக்கறே?” - அவன் ஆரம்பித்தான்.

” என்னா நெத்தில் துண்ணூறு – வரைல நம்ப சிவன் கோயிலுக்குப் போனியா?”

“ ஆமா… அதுக்கென்ன இப்போ?”

“உனக்கு இந்த சாமி மேலல்லாம் இன்னும் நம்பிக்கை இருக்குதா?”

”இல்லாமதான் கும்புட்றேனா?”

”சரி,  தினம் கும்புட்றியே... அந்த சாமி உனக்கு நீ கேட்ட எதையாச்சும் கொடுத்திருக்குதா?”

அவள் அன்று அப்படிக் கேட்பாள் என்றோ, தான் அதற்கு பதில் கூறவேண்டியிருக்கும் என்றோ ராமு எதிர்பார்க்கவேயில்லை. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவளையே பார்த்தான்.

“கேக்கறேன்ல..?”

“எனக்கு இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல புள்ள. ஆமா, இன்னிக்கும் உன் அப்பன் மேய்ச்சலுக்கு வரலையா?

நீதான் வந்திருக்கியா?”

“அது காலைலயே தண்ணிய போட்டுட்டு ஒரே சளம்பல்! ஊட்ல வெச்சு பூட்டிட்டு வழக்கம் போல நானே வந்துட்டேன்…”

“அய்ய…. பாளையத்தாருக்கு தெரிஞ்சா வெய்வாரு.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“என்னைத்தானே?”

“என்னையும்தான்…”

”உன்ன எதுக்கு வெய்வாரு?”

“பொட்டப்புள்ளையோட என்னடா மேச்சல்.? கருப்பச்சாமி வரலேன்னு ஏண்டா சொல்லலைன்னு ஆரம்பிச்சிடுவாரு அங்கயே அவர் கூடவே இருக்கற கார்வார் காளப்பன் வேற கூட சேர்ந்துக்குவான்.”

“அப்ப நான் திரும்பிப் போயிடட்டுமா.. உனக்கு சந்தோசமா?”

“சேச்சே நான் சந்தோசத்துக்காகவெல்லாம் சொல்லல… உள்ளதைச் சொன்னேன்.”

“எனக்கு ஒரு குடிகார அப்பன்னா, உனக்கு ஒரு கொடுமைக்கார சித்தி.. வாஸ்தவம்தானே?”

”அதுக்கென்ன இப்போ?”

”அதுக்கென்னவா..? சர்தான்… ஆமா, சாமியதினம் கும்புட்றியே. அது ஏதாவது கொடுத்திருக்குதான்னு கேட்டேனே. பதிலச் சொல்லாம பேச்சை மாத்திபுட்டியே?”

“அடப்போபுள்ள… சாமிகிட்ட போய் என்னத்த கேக்க? அங்க எங்க அய்யிரு நம்மள நிக்க உட்றாரு? போய்நின்ன மாத்ரத்துல நெத்தில துண்ணூற பூசி கிளம்புடான்னு சொல்லிட்றாரு. நின்னால்ல கேட்க..?” - ராமு அடப்பமாய் சலித்துக்கொண்டான்.

”அதுசரி… இப்பல்லாம் கூட்டமும் கூடிப்போச்சு! நம்ப சிவன் கோயில் வாசல்ல தேங்காபழகடையே ஏழெட்டு வந்துடிச்சி…. பாத்தியா?”
வள்ளிப்பொன் கேட்டுக் கொண்டே அவன் அருகில் காலைத் தொங்கப்போட்டு அமர்ந்தாள். அந்த வேகத்தில் மேலாக்கு தாவணி விலகியதில் அவள் கன்னிமை கிருஷ்ணன் கண்ணில் பட்டு அவனைச் சற்றுக் கிளறிவிட்டது. அவள் அதைக் கவனித்தபடியே மெல்லச் சரிசெய்துகொண்டாள். ஒரு ஆண்பிள்ளை பார்க்கக் கூடாததைப் பார்த்திடும் பதற்றம் துளியும் அவளிடமில்லை!

இதனால் அவள் கேள்வி கலைந்துபோய் கிருஷ்ணன் மேயும் மாடுகள் பக்கம் பார்வையைத் திருப்பிவிட்டான். அப்போது ஒரு மாடு ஆவாரம் புதரை ஒட்டி வளர்ந்திருக்கும் பாம்புப் புற்று அருகில் மேய முனைந்திருந்தது. அதைப் பார்த்த நொடி விசுக்கென்று எழுந்தவனாக அருகில் இருந்த கம்பைத் தூக்கிக்கொண்டு `ஹேய்… ஹேய்..!' என்கிற குரலோடு ஓடினான். அப்படி அவன் ஓடும்போது அவன் கைலி அவிழ்ந்து அவன் உள்ளே கோவணம் கட்டியிருப்பது நன்கு தெரியவும் வள்ளிப்பொன் அதைப்பார்த்து தன்னை மறந்து சிரித்துவிட்டாள்.

கிருஷ்ணனுக்கும் வெட்கமாகிப் போனது.

வசர அவசரமாக அந்த கோடுபோட்ட அழுக்கு கைலியை இடுப்பில் சுருட்டி அடக்கிக்கொண்டே போய் மாட்டையும் புற்றைவிட்டுப் போகும்படி செய்துவிட்டு திரும்பி வந்தான். அப்படி அவன் வரும்போது தரைப்பரப்பில் உதிர்ந்து கிடக்கும் இலைச் சருகுகளின் மேல் ஒரு வளைகோடு போல் அந்தப் புற்றுக்குள் வசிக்கும் பாம்பும் கண்ணில் பட்டது. அது ஒரு தவளையை விழுங்கியிருந்தது. அந்தத் தவளை அதன் கழுத்து பாகத்தில் புடைப்பாக தெரிந்தது. இதனால் தன் தலையை சீற்றமாய் தூக்க முடியாத ஒரு பாவனையோடு அந்தப் பாம்பும் அவனைக் கடந்து போனது.

அதன் தோற்றமும், கருமணிப்பார்வையும் கிருஷ்ணன் வயிற்றில் ஒரு நொடியில் அமிலத்தைப் பீறிடச் செய்துவிட்டன
அதே பயத்தோடு திரும்ப வந்து பாறைமேல் அமர்ந்தவனிடம் ஒரு சன்னப் பெருமூச்சு.  வள்ளிப்பொன் முகத்திலோ அந்தக் கேலிப்புன்னகை இன்னமும் அழிந்திருக்கவில்லை.

“ஆமா... ஜட்டியெல்லாம் போடமாட்டியா நீ?'' என்று திரும்ப ஆரம்பித்தாள் வள்ளிப்பொன். தன் கோவணத்தை அவள் பார்த்ததால் வந்த கேள்வி என்பது அவனுக்கும் புரிந்தது.

“இத்த எல்லாம் நீ எதுக்கு கேக்கறே…? நான் ஜட்டி போட்றேன், இல்ல கோவணம் கட்றேன். அது என் இஷ்டம்!” என்று சற்று கோபமாய் பதில் கூறியவனை ஒரு மாதிரி பார்க்கத் தொடங்கினாள் அவள்.

“என்னா பாக்கறே?”

“ஒரு கேள்விக்காச்சும் நீ ஒழுங்கா பதில் சொல்றியா?”

“ஆமா, பெரிய கேள்வி… சாமி கும்புடுவியா? ஜட்டி போடுவியான்னு… கடுப்ப கிளப்பாத புள்ள…” – அவன் அலுத்துக்கொண்டே மாடுகளை திரும்ப ஒரு பார்வை பார்த்தான். அவற்றின் மேய்ச்சலில் பழுதில்லை. நிலத்திலும் ஒரு சாணுக்கு புற்கள்… கண்மாயிலும் தண்ணீர் ஏகத்துக்கும் கிடந்து அதில் வாளை மீன்களின் துள்ளல் தெரிந்தது! நன்கு காற்றும் வீசியதில் ஆலமரத்தின் விழுதுகள் ஆடத்தொடங்கியிருந்தன!

அப்பால் ஊர்ப் பெண்களில் சிலர் அருகாமை வேடன் காட்டில் விறகு ஒடித்து அதை தலை சுமையாக கொண்டு சென்ற வண்ணமிருந்தனர். முன்பெல்லாம் பெரும் கூட்டமாய் செல்வார்கள்… அந்த விறகு இருந்தால்தான் வீட்டில் சோறு பொங்க முடியும். இப்போது அப்படி இல்லை. முக்காலே மூணு வீசம்  வீடுகளுக்கு கேஸ் வந்துவிட்டது.

இந்த விறகுச் சுமைகூட வீட்டுத் தேவைக்கு இல்லை. செங்கச்சூளையின் தேவைக்கு இந்த நவீன யுகத்திலும் விறகுகள்தான் தேவைப்படுகின்றன, கடந்து செல்லும் அந்த பெண்களில் சிலர் கிருஷ்ணனையும், வள்ளிப்பொன்னையும் பார்த்தபடியேதான் சென்றனர்.

அதில் ஒருத்தி பண்ணையில் வேலை பார்ப்பவள், வேலாயி அவள் பெயர்!

“போச்சுபோ… வேலாயி உன்னயை பாத்துட்டா. உங்கப்பன் இன்னிக்கும் மேச்சலுக்கு வரலன்னு கார்வார் கிட்ட பத்தவைக்கப்போறா.. அந்த ஆளு வந்து குதிக்கப்போறான் பாரு…” என்று பதற ஆரம்பித்தான் கிருஷ்ணன். பதிலுக்கு வள்ளிப்பொன்னிடம் எந்த பதற்றமுமில்லை. அவனையே குறுகுறுவெனப் பார்த்தாள்.

“ஆமா.. உனக்கு பயமா இல்லை?”  

அவள் பதிலுக்கு வெகு அழகாய் உதட்டைப் பிதுக்கி இல்லை என்றாள்.

“கோட்டி… கோட்டி… அவன் கெட்ட பய புள்ள?” என்று அவனும் பதிலுக்கு ஆவேசித்தான்.

“அவன் யார வேணா இருந்துட்டு போவட்டும் எனக்கென்ன வந்துச்சு?” - வள்ளிப்பொன் தாவணியை சரிசெய்துகொண்டே சொன்னாள்.

அப்போது நந்திபுரத்து ஆதி சொக்கநாதர் சந்நிதி மணி ஒசை ஒரு முறை ஒலித்து அடங்கியது. அடுத்த நொடி வள்ளிப்பொன் கண்களை மூடி கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.

“பார்றா… என்னிய சாமி கும்புடுவியான்னு கேட்டுட்டு நீ கன்னத்துல போட்டுகறத…”

“நா சாமி கும்புடமாட்டேன்னு யார்  சொன்னது?”

”சரி.. நீ இப்ப என்ன பண்ணப்போறே?”

”என்ன பண்ணப்போறேன்னா?”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

”காளப்பன் கேப்பானே..?”

“எதுவும் கேக்க மாட்டான்… நீ இப்படி கண்ட கழுதைக்கெல்லாம் பயப்பட்றத முதல்ல விட்டுத் தள்ளு…. நான் எல்லாத்தையும் நந்திசாமி கிட்ட சொல்லிட்டுதான் வந்திருக்கேன்…''

“நந்திசாமி கிட்டையா?” – கிருஷ்ணன் கண்களை அகட்டிக்கொண்டு கேட்டபடியே எழுந்து நடக்கலானான். அருகில் அய்யனார் கரட்டுக்குன்று! ஒரு ஐந்நூறு அடி உயரம்தானிருக்கும்.  அதன் உச்சி நோக்கித்தான் அவன் கால்கள் நடந்தன. அவளும் அவனைத் தொடர்ந்தபடியே பேசலானாள்.

“நம்ப ஊர் நந்திசாமி பத்தி உனக்கு எதுவும் தெரியாதாக்கும்?”

“அது காதுல கும்புட வர்றவங்கல்லாம்கூட ஏதோ ரகசியமா சொல்வாங்களே… நீ அத்த சொல்றியா?

“ஆமா… அது கிட்ட நாம ஒரு விசயத்த சொன்னா போதும். மிச்சத்ததான் அது பாத்துக்குமே?”

“அது கல்லு புள்ள…. அதுக்கு எப்படி காது கேக்கும்?”

“உள்ளார சாமிகூடதான் கல்லு… அப்ப அதுக்கு மட்டும் எப்படி கேக்குது?”

“ஆமால்ல… நான் இதை யோசிக்கவேயில்லை…”

“நீ எத்த யோசிச்சே.. இன்னும் கோவணமாவேல்ல இருக்கே?”

அவள் உரிமையோடு சலித்துக்கொண்டபோது அய்யனார் குன்றின் தட்டைப் பாறை வந்து அதன் மேல் ஏறி நின்றாள் அவள்! அவனும் நின்றான். காற்றிடம் பலமான வீச்சல்… அவளின் தாவணி கொடி போல் பறக்கத் தொடங்கியது பார்க்க அழகாய் இருந்தது.

ருநூறு அடிக்கு கீழாய் நந்திபுரமும் பளிச்சென தெரிந்தது. ஊருக்கே அழகு அந்த சிவன் கோயில்தான்! பெரும் மதில்களுடன் நான்கு புறங்களிலும் கோபுரங்கள் காட்சி தந்திட, உள்ளே சுற்றுப் பிராகாரங்களுடன், கல்மண்டபமும், அடர்ந்து வளர்ந்திருக்கும் ஸ்தல விருட்சமான விளாம்பழ மரங்களும் தெரிந்தன. அந்த மரங்கள் மேல் தாவித்திரியும் குரங்குகள்கூட தெரிந்தன.

கோயில் கோபுரங்களுக்கு வெள்ளையடித்து எவ்வளவோ வருடங்கள் ஆகிவிட்டிருந்ததை அதன் பழுப்பு நிறமும் முளைத்து நிற்கும் அரசஞ்செடிகளும் சொல்லிக்கொண்டிருந்தன.

தட்டப்பாறை மேல் நின்றபடி ஊரைப் பார்ப்பதே ஒரு அழகுதான். அதிலும் நந்திபுரம் பொதிகை மலைச் சாரலில் சித்த புருஷர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு கிராமம்... அகத்தியர் நடமாடிய ஊர்… பல அதிசயங்களுக்கும் ஆச்சர்யங்களுக்கும் காரணமான ஊரும்கூட….
குறிப்பாக அந்த நந்தி!

அது 32 சாமுத்ரிகாலட்சணப்படி மயனால் செதுக்கப்பட்டதாம்! ஜீவமந்திரம் என்று ஒன்று உள்ளது – அதை சரியான முறையில் உச்சரித்து அந்த நந்தியின் மூக்குத்துவாரத்தில் ஊதினால் அந்த கல் நந்திக்கு உயிர் வந்து அது கருக்கோளத்தில் உருவாகும். எலும்பும் சதையுமான நந்தியாகி எழுந்து நின்று ஓடவே செய்யுமாம். பல சித்தர்கள் அப்படி அதை ஓடச்செய்து பார்த்திருக்கிறார்களாம். இதெல்லாம் அந்த நந்தி குறித்த செய்திகள்! அப்படிப்பட்ட அந்த நந்தியின் காதில் நாம் சொல்லும் பிரார்த்தனைக்குரிய விஷயங்கள் நம் பக்தியையும் கர்மத்தையும் பொறுத்து பலித்து வருவதற்கும் நிறையவே சாட்சிகள் உண்டு.

அதனால்தான் இன்று நந்திபுரத்துக்கு எங்கிருந்தெல்லாமோ வரத் தொடங்கியுள்ளனர். அய்யனார் கரட்டின் தட்டைப்பாறைமேல் நின்றபடி பார்த்தபோது ஊருக்குள் நுழையும் தார்ச்சாலைமேல் நிறையவே கார்களும், டூரிஸ்ட் பஸ்களும் வருவது தெரிந்தது.
அதைப் பார்த்தபடியே வள்ளிப்பொன், கிருஷ்ணனை சீண்டத்தொடங்கினாள்.

”ஆமா... இப்படி ஆட்டையும் மாட்டையும் மேய்ச்சு அல்லாட்றதுக்கு, நந்தி சாமி காதுல சொல்லிட்டு கோயில் வாசல்ல நாமளும்  ஒரு கடை போட்டா என்ன?” என்று கேட்டுக்கொண்டே தொரட்டியை தோள்மேல் போட்டு கையிரண்டையும் அதன் மேல் தூக்கிப் போட்டுக்கொண்டாள்

“கடை... கோயில் வாசல்ல... அதுவும் நாம..? அதாவது நீயும் நானும்..? வெளங்கிடும்போ..!” என்று அவன் ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி சடைத்தபோது, குங்குமம் தோய்ந்த எலுமிச்சம் பழத்துண்டு ஒன்று அங்கே அவன் கண்ணில்பட்டது. அதன் அருகே சென்று குனிந்து அதை எடுத்தவன் முகத்துக்கு நேரே வைத்து உற்றுப் பார்க்கவும், வள்ளிபொன் பதைக்கத் தொடங்கினாள்.

“வேணாம் கிஸ்னா. அத்த தூக்கி போடு…” என்று அதை வெறிக்கவும் செய்தாள்.

அவனும் அதை தூக்கிப்போட்டுவிட்டு இங்கே அது எப்படி வந்தது என்று யோசித்தபோது ஒரு நரி விசுக்கென்று வாயில் எதையோ ஒன்றை கவ்விக்கொண்டு ஓடிப் போனது!

“அய்ய நரி…” என்று வள்ளிப்பொன் பயத்தில் கிருஷ்ணனை கட்டிக்கொள்ள, கிருஷ்ணனும் வளைந்து மேலேறிய ஒற்றையடிப் பாதையில் நரி சென்ற பக்கமாய் நடந்து சென்று பார்த்தபோது பகீரென்றது.

அந்தக் கரட்டின் ஒரு சிறிய சமதளம் மேல் ஒரு எருமை வெட்டப்பட்டு கிடக்க, அதன் வயிற்றுப்பாகத்தை நாய்கள் சில குதறிக்கொண்டிருந்தன. ரத்தம் வழிந்து ஓடிய இடங்களில் எல்லாம் மஞ்சள் குங்குமத்துடன் அரளிப்பூக்கள் சிதறிக்கிடந்தன!

எதற்கோ யாரோ பலி பூசை செய்திருக்க வேண்டும் என்று பார்த்த மாத்திரத்தில் தெரிந்துவிட்டது.

கிருஷ்ணனும், வள்ளிப்பொன்னும் திரும்பி கீழ் இறங்கி ஓடத் தொடங்கினர்!

- தொடரும்