அத்தியாயம் 1

283.5k படித்தவர்கள்
46 கருத்துகள்

ஜெயிக்கப் போகிறோம் என்கிற உணர்வே மிகவும் சந்தோஷமாக இருந்தது. கீழேயிருந்து குரல்கள் ‘மேலே போ, போ...’ என்று உற்சாகமூட்டின. இன்னும் பத்தே எட்டில் சுபத்ரா உச்சியைத் தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் வழுக்கு மரத்தை இறுக்கக் கட்டிக்கொண்டிருந்தாள்.

வழுக்கு மரம் முழுவதும் எண்ணெயும் பஞ்சாமிர்தமும் நிரவிக் கிடந்தன. தேன் வாசனையும் பழவாசனையும் தூக்கலாக இருந்தன. ஒரு வாழைப்பழம் நசுங்கி, வழுக்கு மரத்தில் வழுக்கி சுபத்ராவுக்கு அருகே இருந்தது.

மறுபடியும் கீழேயிருந்து மேலே போகச் சொல்லி உற்சாகக் குரல்கள் எழுந்தன. சுபத்ரா கீழே பார்த்தாள். வெகு ஆழத்தில் வெறும் தலைகளாய்ப் பல நூறு பேர் இருந்தார்கள். அப்பாவின் “விடாதே போ” என்ற குரல் தெளிவாகக் கேட்டது.

சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, மறுபடியும் கால்களால் வழுக்கு மரத்தை இறுக்கிக்கொண்டு, கைகளால் கட்டிக்கொண்டு மார்பு உராயும்வண்ணம் தழுவிக்கொண்டு வழுக்கு மரத்தில் ஏறினாள். ஏறியது வரை வழுக்கு மரத்தில் அவ்வளவு எண்ணெய் இல்லை. உச்சியில் எண்ணெய்ச் சட்டியை வைத்துக் கவிழ்த்திருப்பார்கள் போலிருக்கிறது. மேலே போகப்போக, எண்ணெய் அதிகம் இருந்தது. வாழைப்பழக் கூழ் நிறைய இருந்தது.

நகர்ந்தாள்... வழுக்கியது. மறுபடியும் பழைய இடத்துக்கே வந்தாள். இந்த முறை இன்னும் இறுக்கிக் கட்டிக்கொண்டு அசைத்து மேலே ஏறினாள். உடம்பு முழுவதும் வழுக்கு மரம் பட்டது. வழுக்கு மரத்தின் எல்லா இடத்திலும் உடம்பு நசுங்கி இறுகிக்கொண்டது. சுபத்ரா உதடு கடித்து, மேலும் வழுக்கு மரத்தில் ஏறினாள். இன்னும் நகர்ந்தாள்.

வாய்க்கும் வழுக்கு மரத்துக்கும் நடுவே எண்ணெய் சலசலவென்று நகர்ந்தது. இரண்டங்குல ஆழத்துக்கு வழுக்கு மரத்தின் பிசின் தோள் வழியாகவும் புஜத்தின் வழியாகவும் வழிந்தது.

திடீரென்று சுபத்ரா குனிந்து தன்னைப் பார்த்துக்கொண்டாள். உடுத்தியிருக்கிறோமோ, இல்லையோ என்று யோசித்தாள். உடையே காணோம். உடையே இல்லாமல் ஏறிக்கொண்டிருப்பதாய்ப்பட்டது.

“ஐயய்யோ ... கீழே இருப்பவர்களுக்கு எல்லாம் தெரியுமே....” என்று கவலைப்பட்டாள். வழுக்கு மரத்திலிருந்து சட்டென்று நாலடி கீழே இறங்கினாள்.

கீழே உள்ளவர்கள் ‘ஓ’வென்று கூச்சலிட்டார்கள். பயத்தில் அலறினார்கள். இறுக்கி, இறுக்கி மிகக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சுபத்ரா வழுக்கலை நிறுத்தினாள்.

உடுத்திக்கொண்டாலென்ன, உடுத்திக்கொள்ளாமல் இருந்தாலென்ன...? மானத்தோடு இருந்தாலென்ன, மானம் கெட்டுப் போனாலென்ன...? உச்சிக்குப் போக வேண்டும் எப்பாடு பட்டாவது... எப்பாடு பட்டாவது உச்சியைத் தொட்டு, அங்கு இருக்கிற மூட்டையைப் பறித்து எடுக்க வேண்டும்.

இறுக்கி, இறுக்கி இறுக்கி... சுபத்ரா கட்டித் தழுவியபடி பற்றிப் பிணைந்தபடி, வழுக்கு மரத்தை இறுக்கியபடி, முகத்தை உரசியபடி, நெஞ்சு தேய்ந்தபடி, வயிறு ஒட்டியபடி, இடுப்புப் பின்னியபடி வழுக்கு மரத்தின் மீது ஏறினாள். இன்னும் ஒரு அடி பளிச்சென்று உடம்பில் பலம் சேர்த்து எகிறினாள். உச்சியில் இருக்கிற வளையத்தைப் பற்றிக்கொண்டாள். வளையத்தில் ஏதோ மூட்டை இருந்தது. பிடித்து இழுத்து அறுத்துக் கீழே போட்டாள்.

‘வெற்றி... வெற்றி... வெற்றி...’ என்று அப்பா கூச்சலிடுவது தெரிந்தது. சுபத்ரா சந்தோஷமானாள். அந்த வழுக்கு மரத்துக்கு முத்தம் கொடுத்தாள். ‘என்னை இவ்வளவு தூரம் மேலே ஏற அனுமதித்தாயே, உனக்கு நன்றி’ என்று தன் முகவாயை அந்த வழுக்கு மரத்தின் உச்சியில் வைத்துக்கொண்டாள். கட்டித் தழுவியபடி இளைப்பாறினாள். மெல்லத் தளரவிட்டாள். வழுக்கு மரத்திலிருந்து மெல்ல வழுக்கிக்கொண்டு கீழிறங்கினாள்.

அந்த நழுவலில் மனம் நனவுக்குத் திரும்பியது. கனவும் இல்லாமல், நனவும் இல்லாமல் ஒரு இடத்தில் படுத்திருப்பது புரிந்தது. வழுக்கு மரத்தை அணைத்துக்கொண்டிருந்த உணர்வு இன்னும் நெஞ்சில், வயிற்றில், இடையில், தொடையில், முழங்காலில் இருந்தது.

எப்படிப் பின்னிக்கொண்டிருந்தோம்...? இந்த வழுக்கு மரத்தை ஆபாசமாகத் தழுவியபடி ஏறினோம். நாம் உடுத்திக்கொண்டிருந்தோமா, இல்லையா என யோசித்தாள். தடவிப் பார்த்தாள். உடை இருந்தது.

நல்லவேளை... உடுத்திக்கொண்டிருந்தோம் என்று நினைத்தாள். நெஞ்சு முழுவதும் வழுக்கு மரத்தின் அழுத்தம் பரவிக் கிடந்தது. அவள் நெஞ்சையும் தடவிக்கொண்டாள். கன்னத்தை நீவிக்கொண்டாள். சட்டென்று நனவு இன்னும் அதிகமாகியது.

‘ஏய்... எல்லாம்... கனவா...?’ என்று வாய்விட்டுச் சொன்னாள். எழுந்து உட்கார்ந்தாள். அப்போதும் வழுக்கு மரத்தைத் தழுவிக்கொண்டிருக்கும் உணர்வானது தொடைகளில் இருந்தது.

“இது என்ன கனவு...? புத்தியை விட்டுக் கனவு போக மாட்டேன் என்கிறதே... என்ன சொல்கிறது இது...” என்று யோசித்தாள்.

டார்ச் லைட்டை எடுத்து வெங்கடாசலபதி படத்தின் மீது அடித்தாள்.

“கேசவா, நாராயணா, மாதவா, மதுசூதனா...” என்று சுவாமியை விளித்தாள். திரும்பி கடிகாரம் பக்கம் டார்ச்சைத் திருப்பினாள்.

மணி மூன்றே கால். இது சுக்கிரன் உதிக்கும் நேரம். போய் பால்கனியில் நின்று, சென்னை நகரைப் பார்க்கலாமா...?

வேண்டாம். வாய் கொப்பளிக்கும் மருந்தைக் கொண்டு வாய் கொப்பளித்துச் சரிசெய்துகொள்வோம். வாய் கொழகொழப்பாக இருக்கிறது என்று நினைத்தபடி கீழே இறங்கினாள். பாத்ரூமுக்குள் நுழைந்தாள். வாய் கொப்பளித்தாள். முகம் கழுவிக்கொண்டாள். வயிறு லேசாகியது. ஈரக் கால்களோடு மறுபடியும் படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.

“இன்னிக்கு ஜேம்ஸ்பாண்டுக்குப் பிறந்தநாள்... மணி மூணு இருபது. விடியும் வரை நண்பர்களோடு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பேன்” என்று ஜேம்ஸ் பாண்ட் சொன்னார்.

இப்போதே இன்டர்நெட்டில் ஜேம்ஸ்பாண்டை அழைத்துப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னால் என்ன...? - உட்கார்ந்து கம்ப்யூட்டருக்கு உயிரூட்டினாள்.

கம்ப்யூட்டரின் சின்னத்திரை விரிந்தது. இன்டர்நெட்டுக்குள் நுழைந்தாள். “சிஸ் இண்டியா டாட் காம்” என்று டைப் செய்தாள். அந்த ஜன்னல் திறந்தது. அந்த ஜன்னலில் அரட்டை என்று போடப்பட்டிருந்த பகுதிக்குள் நகர்ந்தாள். சில விநாடிகளில் யார், யார் அரட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது.

முதல் பெயரே ஜேம்ஸ்பாண்ட் என்று இருந்தது. நிலா, பரீவத்ஸன், மூர்த்தி, வீரப்பன், சூர்யா, பிரியங்கா, அனிதா என்று பல பேர் வரிசையாக இருந்தார்கள்.

“ஹாய் எவ்ரிபடி...” என்று எல்லோருக்கும் வணக்கம் சொன்னாள். ஜேம்ஸ்பாண்டைத் தனியே அழைத்தாள். ஜேம்ஸ்பாண்ட் இஸ்ரேலில் வேலை செய்பவர்.

“மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். இனிமையான, சந்துஷ்டியான, மகிழ்ச்சியான வருடமாக இது தொடர என் பிரார்த்தனைகள்” என்று அவருக்கு வாழ்த்துகள் சொன்னாள்.

தனியே அழைத்து அவள் வாழ்த்துகள் சொன்னது ஜேம்ஸ்பாண்டுக்கு நெகிழ்ந்துவிட்டது போலும்.

“இந்த அர்த்தராத்திரியில் எனக்காக எழுந்திருந்து வாழ்த்துகள் சொல்கிறாயே... இந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்...? எவ்வளவு வருடமாக உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன். உன்னைப் பார்த்ததில்லை. இங்கே பேசுகிற யாரையும் நேரே சந்திக்க வேண்டுமென்று நான் விருப்பப்பட்டதில்லை. ஆனால், இந்தியாவுக்கு வந்தால் உன்னைப் பார்க்க வேண்டும். உன்னுடன் பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நீ நலமாக இருக்கவும், விரைவில் உனக்குத் திருமணமாகவும் எல்லாம் வல்ல இறைவனை நானும் பிரார்த்திக்கிறேன்” என்று நெகிழ்வாகப் பதில் சொல்ல, அவள் நன்றி தெரிவித்தாள்.

பேச்சு சட்டென்று திசை திரும்பியது.

“சுபத்ரா, நீ கே.கே. நகரில்தானே இருக்கிறாய்...?”

“ஆமாம் சார்...”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

டைப் அடிப்பது ஆங்கிலத்தில் இருந்தாலும், வாக்கியங்களெல்லாம் தமிழில் இருந்தன.

“கே.கே. நகரில் உள்ள ஒரு பையனுக்கு பிட்ஸ்பார்க் ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்திருக்கிறது. ஷங்கர் மகாதேவன் என்று பெயர் போட்டிருக்கிறது. ஷங்கர் மகாதேவன் என்ற பெயரை நீ எனக்கு ஏதோ சொல்லியதாக ஞாபகம்...?”

அவர் டைப் செய்ய, எதிரே திரையில் தெரிந்தது. 

ஜேம்ஸ்பாண்ட் சொந்தப் பெயர் அல்ல. புனைப்பெயர். எதனாலேயோ இன்டர்நெட்டில் பேசுகிறவர்களெல்லாம் புனைப்பெயரிலேயே மறைவாகப் பேசுகிறார்கள். ஆனால், சுபத்ரா தன் பெயரை மறைத்துக்கொள்ளாமல்தான் பேசினாள். ஜேம்ஸ்பாண்டுக்குத் தன்னுடைய வீட்டு விலாசம்கூடக் கொடுத்திருந்தாள். டெலிபோன் நம்பர் தெரிவித்திருந்தாள்.

ஜேம்ஸ்பாண்ட் பெரிய படிப்பாளி போலிருக்கிறது. யூதர்களைப் பற்றியும், யூதர்களுக்கும் அராபியர்களுக்கும் உண்டான சண்டை பற்றியும் மிக விரிவாக அவளுக்கு இன்டர்நெட் மூலம் கற்றுக்கொடுத்தார். அந்த விஷயத்தை, அவர் சொல்கிற விதம் வைத்தே அவர் படிப்பும் ஞானமும் அவளுக்குத் தெரிந்தது.

ஜேம்ஸ்பாண்ட் மட்டுமில்லை... நிலா, ஸ்ரீவத்ஸன் எல்லோருமே நல்ல நண்பர்கள்.

அபுதாபி ஸ்ரீவத்ஸன் சென்னைக்கு வந்து, சுபத்ராவை அவர் தங்கை கல்யாணத்துக்கு அழைத்துவிட்டுப் போனார். தங்கை கல்யாணத்துக்கு சுபத்ரா போக, சுபத்ராவை வீட்டில் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். எப்போது கல்யாணம் என்று அவர் வீட்டில் எல்லோரும் சுபத்ராவை விசாரித்தார்கள். ஸ்ரீவத்ஸனுக்குக் கல்யாணம் பேசிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

உலகத்தின் எந்தப் பகுதியிலோ இருக்கிறவர்களெல்லாம் சொடுக்கு நேரத்தில் தொடர்புகொள்ளும் அற்புதமான விஷயமாக இன்டர்நெட் இருக்கிறது.

“ஷங்கர் மகாதேவன் எனக்குத் தெரிந்த பையன்தான். என்ன வேண்டும் ஜே.பி.?” என்று சுபத்ரா கேட்டாள்.

“அந்த ஷங்கர் மகாதேவனுக்கு பிட்ஸ்பார்க்கில் உள்ள மருத்துவமனையில் வேலை கிடைத்திருக்கிறது. கம்ப்யூட்டர் புரோகிராமராகப் பதினோரு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் ஆறாவது இடம் ஷங்கர் மகாதேவனுக்கு. தென்னிந்தியாவில் இருந்து ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.”

“இந்த விஷயம் எப்படித் தெரியும் ஜே.பி...” - சுபத்ரா வினவினாள்.

“இப்போதுதான் இந்த வேலைக்கு விண்ணப்பம் போட்டிருந்த பையன், என்னை அந்த ஜன்னல் திறந்து பார்க்கச் சொன்னான். நான் பார்த்தபோது இந்தத் தகவல் கிடைத்தது. அந்தப் பையனுக்கு வேலை கிடைக்கவில்லை. ஷங்கர் மகாதேவன், கே.கே. நகர் என்று போட்டிருந்ததால் உன் ஞாபகம் வந்தது...”

“அந்த ஜன்னலின் விலாசம் சொல்லுங்கள் ஜே.பி...'' சுபத்ரா பரபரத்தாள்.

“விலாசம் குறித்துக்கொள்கிறேன் ஜே.பி...! நான் நாளை மறுபடியும் சந்திக்கிறேன். மறுபடியும் பிறந்தநாள் வாழ்த்துகள்...” என்று சொல்லிவிட்டு, அடுத்த ஜன்னலுக்குத் தாவினாள். திறந்தாள்.

பிட்ஸ்பார்க் மருத்துவமனை சின்னத்திரையில் விரிந்தது. அதில் ‘செய்தி’ என்ற இடத்தைத் தொட, அதில் ஒரு அறிக்கை வெளியாகியிருந்தது.

ஆறாவது இடத்தில் “ஷங்கர் மகாதேவன், இருநூற்று நாற்பத்து மூன்று, பன்னிரண்டாவது செக்டார், கே.கே. நகர்” என்று போடப்பட்டிருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இமெயிலில் தனித்தனியாக உத்தியோகத்துக்கான ஆர்டரும் விசாவும் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார்கள்.

கதவு திறந்து ஹாலுக்கு சுபத்ரா ஓடினாள். டெலிபோன் எடுத்து ஷங்கர் மகாதேவனைத் தொடர்புகொள்ள முயற்சித்தாள்.

டெலிபோன் சரியாக வைக்கவில்லை போலிருக்கிறது. “தற்சமயம் உபயோகத்தில் இல்லை” என்று குரல் வந்தது. துண்டித்துவிட்டு, ஹாலில் படுத்திருந்த அப்பாவை மெல்ல உலுக்கி எழுப்பினாள்.

“என்னம்மா... என்ன ஆச்சு...?” அப்பா திடுக்கிட்டு எழுந்தார்.

“ஷங்கருக்கு வேலை கிடைச்சிருக்குப்பா பிட்ஸ்பார்க்ல...”

“எப்படித் தெரியும்....”

“இன்டர்நெட்ல பார்த்தேம்ப்பா...”

“இத்தனை நேரம் இன்டர்நெட்லயா உட்கார்ந்திருந்தே...?

“இல்லைப்பா, என்னுடைய ஃப்ரெண்ட் ஜேம்ஸ்பாண்டுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லலாம்னு ஓப்பன் பண்ணினேன். ஜேம்ஸ்பாண்ட்தான் சொன்னார். ‘கே.கே. நகர், ஷங்கர் மகாதேவனுக்கு வேலை கிடைச்சிருக்கு’ன்னு. அவர்கிட்ட விலாசம் கேட்டு, அந்த விண்டோ ஓப்பன் பண்ணினேன். ஷங்கருக்கு வேலை கிடைச்சது தெரிந்தது. இமெயில்ல ஆர்டர் அனுப்பிச்சிருக்கா அவா. ஷங்கர் வீட்டுக்கு ட்ரை பண்ணேன். போன் சரியா வைக்கலை போலிருக்கு.” 

“இப்போ என்ன செய்யணுங்கறே...”

“வாப்பா... கொஞ்சம் போய் ஷங்கர்கிட்ட சொல்லிட்டு வந்துடலாம்...”

“கார்த்தால பார்த்துக்கலாமேம்மா...”

“நல்ல விஷயம்ப்பா... உடனே சொன்னா நன்னா இருக்குமில்லையா...? எடுத்தவுடனே நாப்பத்தஞ்சாயிரம் ரூபா சம்பளம்ப்பா. வீட்டுல அவா அப்பாவும் அம்மாவும் ரொம்ப சந்தோஷப்படுவா...”

“உடனே போகணும்கறயா...?”

“ஒரு அஞ்சு நிமிஷத்துல ரெடி ஆயிட மாட்டியா...?” - அவள் கெஞ்சினாள்.

அப்பா எழுந்திருந்தார். தள்ளாடினார். வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டார்.

சுபத்ரா சுடிதாருக்கு மாறித் தலையை ஒற்றைப் பின்னலாய்ப் பின்னி, முகத்தைத் துடைத்துக்கொண்டு நெற்றிக்கு இட்டுக்கொண்டு, மேலே லேசாய் பாடி ஸ்ப்ரேயைப் பரப்பிக்கொண்டு வாசலுக்கு ஓடினாள். ஸ்கூட்டரைத் தயாராக வைத்தாள். துப்பட்டாவை உதறி மேலே நன்கு போர்த்திக்கொண்டாள்.

அப்பா வெளியே வந்தார். இருவரும் நான்கு தெரு தள்ளியிருக்கிற ஷங்கர் வீட்டுக்குப் போனார்கள். வண்டியை ஸ்டாண்ட் போட்டு, “ஷங்கர்” என்று குரல் கொடுத்தாள். ஹார்ன் அடித்தாள்.

தெருவில் குரல் பெரிதாய் எதிரொலித்தது. இன்னும் இரண்டு முறை கூவினாள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விழித்துக்கொள்வார்கள் என்று பட்டது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு எப்போது தெரிய வேண்டுமோ அப்போது தெரியலாம். இப்போது தெரிய வேண்டாம். எனவே, ஷங்கரை மட்டும்... ஷங்கர் வீட்டில் உள்ளவர்களை மட்டும் அழைப்பது நல்லது என்று பட்டது.

வீட்டில் தோட்டக் கதவு பூட்டியிருந்தது. யோசித்தாள். 

எகிறி உள்ளே குதித்தாள். 

தெருவோடு போகிற கூர்க்கா ஒருவன் நின்று பார்த்தான். “என்ன...?” என்று அப்பாவைக் கேட்டான்.

“ஒரு செய்தி சொல்லணும். அதுக்காக வந்திருக்கோம்...”

“நல்ல செய்தியா, கெட்ட செய்தியா....” இந்தியில் கேட்டான். 

“நல்ல செய்தி....” என்று அப்பா சொன்னார். 

“அப்படியானால் நானும் இருக்கட்டுமா...?” என்று கூர்க்கா வாசலில் நின்றான்.

அப்பா கவலையோடு உள்ளே குதிக்கிற மகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

சுபத்ரா உள்ளே போனாள். மணிக்குமிழியை அழுத்தினாள். 

உள்ளே மணி ஒலிப்பது கேட்டது. 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“யாரது....” - ஒரு கிழவியின் குரல் எதிரொலித்தது.

மறுபடியும் மணிக்குமிழியை அழுத்த, இந்த முறை “யாரது...” என்ற குரல் ஆண்குரலாக இருந்தது. உள்ளே அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

ஷங்கர் மாடியில்தான் தூங்கிக்கொண்டிருப்பான். ஆனால், மாடி அமைதியாக இருந்தது.

ஷங்கரின் அப்பா கதவு திறந்து வந்தார். “யாரு...?” இன்னும் தூக்கக் கலக்கத்தோடு கேட்டார்.

“நான்தான் சுபத்ரா...”

“சுபத்ராவா.... என்ன இந்த வேளையில்...”

“அப்பாவும் வந்திருக்கார்.” - சுபத்ரா எச்சரிக்கையாகப் பேசினாள். 

“என்ன சமாச்சாரம்...?” - அவர் பரபரத்தார் 

“ஒண்ணுமில்லே... பயப்படாதீங்கோ. ஷங்கருக்கு பிட்ஸ்பார்க் ஆஸ்பத்திரியில வேலை கிடைச்சிருக்கு. இப்போதான் அந்த விண்டோ திறந்து பார்த்தேன். பார்த்தவுடனே உங்களுக்கு போன் பண்ண ட்ரை பண்ணேன். போன் சரியா வைக்கலை போலிருக்கு. அதனால நேரா வந்து சொல்றேன்...”

“கடவுளே... இதுக்காக இந்த நேரத்துல ஓடி வரணுமா...? உன் அப்பாவையும் தொந்தரவு பண்ணணுமா...?”

அவர் கதவு திறந்தார். வேகமாக ஓடிப்போய்த் தோட்டக்கதவு திறந்து, சங்கிலியை உருவினார். கதவு திறந்து அப்பாவை வரவேற்றார்.

அப்பாவும் பெண்ணும் உள்ளுக்குள் போனார்கள். 

“யாரது...” - ஒரு கிழவி எழுந்து நிற்க... ஷங்கரின் அப்பா, அவளுக்கு அருகே வந்தார்.

“ஷங்கருக்கு அமெரிக்காவுல வேலை கிடைச்சிருக்காம். இதை இந்தப் பொண்ணு சொல்ல வந்திருக்கு...”

“எந்தப் பொண்ணு...?”

“நம்மாத்துக்கு வருவாளே சுபத்ரா... அவ அப்பாவோட வந்திருக்கா...”

“என்னத்துக்கு ராத்திரியில வரணும்...?”

“ராத்திரிதானே செய்தி வந்திருக்கு. செய்தி வந்தவுடனே நேரா ஷங்கருக்குச் சொல்லணும்னு வந்திருக்கா...” - என்று உரக்கச் சொல்ல, அவள் கைகுவித்து நெற்றிக்கு மேல் வைத்து சுபத்ராவை உற்றுப் பார்த்தாள்.

சுபத்ரா நாணத்தோடு கிழவி எதிரே நின்றாள். உனக்கு என்னடி அவ்வளவு அக்கறை என்பது போல் கிழவியின் பார்வை இருந்தது. ஆனால், சுபத்ரா அந்தப் பார்வையை விட்டு விலகாமல் பதிலுக்கு ஆமாம்... எனக்கு அக்கறை இருக்கு. அதனாலதான் என்பது போல் உறுதியாக நின்றாள்.

மாடியிலிருந்து ஷங்கரின் தம்பி இறங்கி வந்தான். விஷயம் கேட்டு மறுபடியும் மாடிக்கு ஓடினான். ஷங்கரின் அம்மா பின்பக்கம் போய்விட்டு, ஈரக்கால்களோடு உள்ளே வந்தாள்.

“ரொம்ப தாங்க்ஸ்...” என்று சுபத்ராவின் கைகளைப் பற்றிக்கொண்டாள். சுபத்ராவின் அப்பாவுக்கு வணக்கம் சொன்னாள்.

“நான்கூட கார்த்தால சொல்லிக்கலாம்னேன். நல்ல நியூஸ்... என்னத்துக்குப்பா டிலே பண்ணணும். போய்ச் சொல்லிடலாம்னு இவதான் சொன்னா. வந்து தோட்டக் கதவை அசைச்சுப் பார்த்தோம். யாரும் எழுந்திருக்கிற வழியா தெரியலை. அக்கம்பக்கத்துல இருக்கிறவா எழுந்துடுவாளோன்னு தோணித்து. அதனாலதான் தோட்டக் கதவைத் தாண்டி உள்ளே குதிச்சு உங்களைக் கூப்பிடும்படியா ஆயிடுத்து...” -சுபத்ராவின் அப்பா மன்னிப்புக் கேட்கும் குரலில் சொன்னார்.

“தப்பேயில்லை. ஷங்கர் இந்த வேலையை ரொம்ப எதிர்பார்த்துண்டிருந்தான். எங்களுக்கும் ரொம்ப ஆசையா இருந்தது. இந்த வேலை கிடைச்சு, அவன் கொஞ்சம் தலைதூக்கினான்னா, நாங்க இன்னும் செழிப்பாயிடுவோம்...” என்றாள் ஷங்கரின் அம்மா.

“ஆமா... எடுத்தவுடனே ஆயிரம் டாலர் ஸ்டைஃபண்டு சொன்னாளே... ஆறு மாசத்துல இன்னும் சம்பளம் ஜாஸ்தி ஆகுமாமே...?” என்றாள்.

“ஆமாம்... ஆயிரம் டாலர்னா நாப்பத்தஞ்சாயிரம் ரூபா. ஆரம்பத்துல கொஞ்சம் செலவு இருக்கும். போகப் போக அவ்வளவு செலவு இருக்காது. சம்பளமும் ஜாஸ்தி ஆகும்...” என்றாள் சுபத்ரா. 

“தங்கறது போக்குவரத்து கஷ்டமோ...?”

“அதுவுமில்லை . பெரிய ஹால்ல கட்டில், டேபிள், பீரோ கொடுத்துடுவா. இவா தங்கிண்டு, எப்ப வேணாலும் வேலை பார்க்கலாம். தினமும் அந்த ஆஸ்பத்திரி ரிப்போர்ட்டை இவா தயார் பண்ணணும். அது தவிர, ஷங்கருக்கு இது ரொம்ப தெரிஞ்ச வேலை. மெட்ராஸ்ல அவன் பண்ணிக்கிட்டிருந்த வேலை. டெக்னிக்கலா இந்த டேர்ம்ஸ் பத்தி அவனுக்கு ரொம்ப நன்னா தெரியும். பி.எஸ்ஸி பயோ கெமிஸ்ட்ரி படிச்சுட்டு, எம்.சி.ஏ. பண்ணதுக்குக் கைமேல் பலன் கிடைச்சுது...” ஷங்கரின் அப்பா மிகுந்த சந்தோஷத்தோடு பேசினார்.

சுபத்ராவைப் பற்றி இழுத்து, அருகே உட்கார வைத்துக்கொண்டார்.

ஷங்கர் தூக்கக் கலக்கத்தோடு வந்தான். “ஹாய்....” என்று சுபத்ராவைப் பார்த்துக் கையசைத்தான்.

சைக்கிளில் அரைபெடல் அடித்து அலைந்த பையன்... கிரிக்கெட் பந்து பட்டு நெற்றி பொத்துப்போய் அலறிய பையன்... அக்காவின் கல்யாணத்தில் வேட்டி கட்டி முன்னும் பின்னும் அலைந்த பையன், சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்ட நாற்பத்தாறு பேரைக் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போய் வந்த பையன்... இப்போது நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வெளிநாட்டுக்கு வேலைக்குப் போகிறான். இன்னும் நான்கு வருடங்களில் இதுபோல் மூன்று மடங்கு சம்பாதிக்கப் போகிறான்.

சுபத்ராவின் அப்பா, அந்த ஷங்கர் மகாதேவனை வியப்போடு பார்த்தார்.

- தொடரும்