அத்தியாயம் 1

34.14k படித்தவர்கள்
4 கருத்துகள்

ன்றைக்குமே இல்லாத அளவிற்கு அந்த மாலா கோவில் சுத்தமாகவும், அதே நேரத்தில் அதிக மனிதத் தலைகளுடனும் காணப்பட்டது. மற்ற நாட்களில் பேரமைதியுடன் காட்சியளித்து ஒரு பெரும் பயத்தை உண்டாக்கக்கூடிய கோவில் இன்றோ, பல்வேறு விதமான வாசனைகளாலும், விதவிதமான மனிதர்களின் குரல்களாலும் நிறைந்துபோய் ஒரு விசாகத் திருவிழாவாய்க் காட்சியளித்தது. சுற்றிலும் முள் வேலி போடப்பட்டு பாதுகாக்கப்பட்ட அந்தக் கோவிலின் காலியான முன்புறத்தில் பந்தல் போடப்பட்டிருந்தது. கோவிலின் மீதப்பகுதி முழுவதும் நினைவுக் கற்களால் நிரம்பியிருந்தது. கன்னிமார்களுக்கெனத் தனிப்பகுதியும் இருந்தது. தனக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் நினைவு கூருதலைக் கூட, அங்கு கூடியிருந்த மானுடக்கூட்டம் விழாவைப்போல் கொண்டாடிக் கொண்டிருந்தது. கோவிலில் போடப்பட்டிருந்த பந்தலின் வலது ஓரத்தில் அமர்ந்திருந்த கூத்தாடுபவர்களைச் சுற்றிலும் ஒரு பெரிய கூட்டம் நின்று கேலி பேசி சிரித்துக் கொண்டிருந்தது. இன்னும் சிலபேர் பூசைக்குத் தேவையான பொங்கலைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். சின்னச் சின்னதாகக் காதல் சைகைகள், பேசமுடியா, காணமுடியா தூரம் சென்றுவிட்ட உறவைக் குறித்தான ஏக்கம், வாழ்வு குறித்தான பயம் என ஏதேதோ மனித உணர்வுகள் அங்கே ஊற்றெடுத்துக் கொண்டிருந்தன.

அந்த நீண்ட இரவு, பல்வேறு விதமான உணர்ச்சிப் பிணையத்தை தன்னகத்தே கொண்டிருந்தது. வேறு சில ஆண்கள் அங்கிருந்த நினைவுக்கற்களைச் சுத்தப்படுத்தி, அதற்கு சிகப்பு நிறத்துண்டுகளைக் கட்டிக் கொண்டு இருந்தார்கள். நடுகற்கள் ஒவ்வொன்றிலும் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. கருங்குட்டி மகன் ராசன், பச்சியப்பன் மனைவி கன்னியம்மா என்று விதவிதமான பெயர்கள். துண்டுகளைக் கட்டி முடித்துவிட்டு ஒவ்வொரு நினைவுக்கற்களின் முன்னும் ஒவ்வொரு இலையைப் போட்டு அதன் மீது பூசைக்குத் தேவையான தேங்காய், பழம் முதலியவற்றை அந்த ஆண்கள் வைத்துக் கொண்டிருப்பதை, முள் வேலிக்கு வெளியே நின்று சில சிறுவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாருக்குத் தெரியும், அவர்களெல்லாம் இந்தக் கோவிலினுள் எப்போதோ அகப்பட்டுக்கொண்ட தங்கள் ரப்பர் பந்தை மீட்க வந்திருக்கலாம், இல்லையென்றால் பொங்கலுக்காக வந்திருக்கலாம், அப்படியுமில்லையென்றால் வெறுமனே வேடிக்கை பார்க்ககூட வந்திருக்கலாம்.

மாலா கோவிலின் வலது புறம் இருக்கும் பரந்த மைதானத்தில் மேடை அமைத்துக் கொண்டும், தோரணங்கள் கட்டிக் கொண்டும், ஒலிபெருக்கிகளை சரிபார்த்துக் கொண்டும் சில மனிதர்கள் நாளை வரப்போகிற பொங்கல் விழா ஏற்பாடுகளுக்காகப் பரபரத்துக் கொண்டிருந்தார்கள். நாளை இதே இடத்தில் சிறுவன் ஒருவன் சாக்குடன் தடுக்கி விழுவான்.சில சிறுமிகள் பாட்டிலில் நீரை நிரப்பிக் கொண்டிருப்பார்கள். “விழாக்குழு நண்பர்கள் எங்கிருந்தாலும் விழாமேடைக்கு அருகே வரவும்” என்று ஒருவன் ஒலிபெருக்கியில் கத்திக் கொண்டிருப்பான். இந்த சப்தங்கள், செயல்பாடுகள் யாவற்றையும் ஆள் அரவமற்றுக் கிடக்கும் மாலா கோவில் மௌனமாகப் பார்த்துக் கொண்டு இருக்கும். கோவிலில் இந்த இரவு இருப்பதைப் போல் வாசனைகளோ, மனிதத் தலைகளோ அப்போது நிச்சயம் இருக்காது. மாறாக, ஒரு வகையான அமைதியும், காய்ந்து போன இலைகளும் தான் கோவில் முழுக்க வியாபித்திருக்கும்.

நடுகற்களின் அருகே நின்றிருந்த ஒருவன் “டேய் பயலே, பூச வுட நேரமாச்சு. பொங்க ஆச்சா?”

“எல்லா ஆச்சு மாமோ! பெரியதனத்துகாரவுங்க வந்தா பூச உட்ரலாம்.”

“இன்னையா இது பூச வுடவே இம்புட்டு நேரமாச்சுனா, கூத்து எப்ப உட்றது?” என்று வாய் முழுக்க வெற்றிலையை அதக்கிக் கொண்டிருந்த கிழவன் ஒருவன் எச்சில் தெறிக்கக் கத்தினான்.

“டேய் ஓங்காளி, ஏ தொறக்கற, பெரியதனத்துகாரவுங்க இப்போ வந்துருவாங்க” என்று வெற்றிலைக் கிழவனைப் பார்த்துச் சீறினான் இன்னொரு கிழவன்.

இவ்வாறாக பல சம்பாஷணைகள் காரசாரமாகப் போய்க்கொண்டிருந்த போதே பெரிய காரை அந்த குறுகலான சாலையில் நிறுத்திவிட்டு தன் குடும்பத்துடன் கோவிலை நோக்கி நடந்து வந்தார் பெரியதனத்துகாரரான பச்சியப்பன். அவர் கோவிலை நோக்கி வருவது தெரிந்தவுடனே கோவிலுக்குள் சிதறிக்கிடந்த மக்கள் கூட்டம் ஒன்றாய்ச் சேர்ந்து நினைவுகற்களின் முன்பு போய் நின்றது. கோவிலுக்குள் வந்த பச்சியப்பன் குடும்பம் நேராக கன்னிமார்களுக்கான பகுதியை நோக்கிச் சென்றது. பச்சியப்பன் ஒரு கன்னிமாரின் அருகே சென்று அதன் மேலே கட்டியிருந்த சிகப்பு கன்னி சிற்றாடையை அவிழ்த்து அருகிலிருந்த கன்னிமாருக்குக் கட்டிவிட்டு, தான் கொண்டு வந்திருந்த கன்னி சிற்றாடையை அந்த நினைவுக்கல்லின் மீது கட்டினார். மொத்தக் குடும்பமும் அப்போது அந்த நினைவுக்கல்லை வணங்கிக் கொண்டிருந்தது. அந்த நினைவுக்கல்லினுள் தான் நித்தியக் கன்னியாய் கவிதா உறங்கிக் கொண்டிருந்தாள். 

***

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

போராடற வூடு நீராடி போவும் வள்ளி. சும்மா தொசம் கட்டாம மொத சாப்புடு” என்று வள்ளியின் கணவனான நாச்சிமுத்து சாப்பாட்டுத் தட்டை அவளருகில் தள்ளினான்.

“நான் ஒன்னும் தொசம் கட்டல. இந்த வாட்டினாச்சு கவிதாவ போய் எப்புடியாவது பாத்திடணும்” என்று தட்டை எதிராகத் தள்ளினாள் வள்ளி.

“பித்துக்குளி மாரி பேசாத வள்ளி, சக்கிலி பயலுக கூடற எடத்துல நாம போய் எப்புடி முன்னாடி நிக்க முடியும்? அப்புறம் சாதி சனம் சுத்தமா நம்மள மதிக்காது” என்று கடுமையாகக் கத்தினான் நாச்சி.

“கண்ணு! வவுத்துபுள்ளக்காரி இப்டி சாப்டாம கெடக்க கூடாது. ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுனா நாம என்னா பண்ண முடியும் சொல்லு” என்று தட்டை எடுத்து வள்ளியிடம் வைத்து விட்டு அவள் அருகே அமர்ந்தாள் நாச்சியின் அம்மாவான காளியம்மா.

“அத்த, நான் அங்க போவணும். ஒன்னு என்ன போகவுடுங்க இல்ல நீங்க கூட்டிட்டு போங்க. ஆனா, போவக்கூடாதுன்னு மட்டும் சொல்லாதீங்க” என்றாள் வள்ளி.

“அவங்க சுடுகாட்டுகெல்லாம் நாம போவக்கூடாது கண்ணு, அப்படிப் போனா நம்ம ஆளுங்க கேவலமா பேசுவாங்க.”

“அத்த, அது சுடுகாடு இல்ல. கோவிலு” என்றாள் சற்றுக் கோபமாக. “அவ மொகத்தக் கடைசியா ஒரு தடவ கூட பாக்கல.அவளோட நெனவு கல்லனாச்சு போய் பாக்கணும். இந்த சின்ன விசயத்துக்கு இவ்ளோ நாளாப் போராடறேன்.”

ஏதும் பேசாமல் எழுந்த காளியம்மா “டேய் பயா, சும்மா அவ மேல வப்பு வப்புனு வுழுந்துட்டு கெடக்காம பொறுமையா சாப்ட வைச்சுட்டு வா” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

“நம்ம கொழந்தைக்காவுது சாப்புடு” வள்ளி என்று பாந்தமாகச் சொன்னான் நாச்சி.

தன் கால்களுக்கு அருகே இருந்த சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினாள் வள்ளி. நாச்சி தண்ணீரை எடுத்து அவளருகே வைத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.

“டேய் பயா, இந்த வாட்டியும் அங்க போறேனு உன்ன தெரு தெருவா அலைய உட்ற போறாடா. ஏற்கனவே அவ அங்க போவ போயிதான் அத்தனயோடி பிரச்சன. அதுமில்லாம இப்ப நெற மாசமா இருக்கறப்போ இப்படி போனானா அப்புறம் கஷ்டமா போயிடும்டா. கருவாடு மாறி இருக்கா, ஒடம்பு தாங்கதுடா.”

“இல்லம்மா, அவ இந்த மொற போவ மாட்டாம. அவுளுக்கும் அறுவு இருக்குமல்ல. ரொம்ப தொசம் கட்டாம சாப்புட்டாம்மா.”

“எதுக்கும் அவ பாட்டியாக்கிட்ட சொல்லி இன்னைக்கு ஒரு நா வந்து அவகூட இருக்க சொல்லுடா பயா. எதா ஒன்னுனா நம்ம தலமேல விடிஞ்சுரும். அப்புறம் காலத்துக்கும் பேராயிடும்.”

“அம்மா, அப்படிலா ஒன்னு ஆவாது. அவ அம்மாதான் போன வாரமே வந்து பேசிட்டு போனாங்க. போவும் போது கூட எங்கிட்ட சொல்லீட்டுதான் போனாங்க. இந்த வாட்டி ஒன்னும் பிரச்சன இருக்காதுனு.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“அவ அம்மாக்காரி பொச்சுல புளிய கரைச்சு ஊத்து. நல்லக்குடி நாச்சியாட்டந்தான் அவ பழம பேசுவா.”

“இல்லம்மா, நாந்தான் சொல்றேன்ல என்ன மீறிப் போமாட்டா. நா தூங்காம பாத்துக்குறே.”

“விடிய விடிய காவ காக்கவா பொண்டாட்டி கட்டிட்டு வந்த. நல்லபதம் இருக்க நாரப்பதத்த தேடி வச்சுட்டேனே எம்புள்ளைக்கு.”

“ம்மா, ஏ இப்ப நீ கத்துற. அவ காதுல விழறதுக்கா. ஏற்கனவே அவ டங்கு டங்குனு ஆடிட்டு இருக்கா. இதுல நீ வேற.”

“பொண்டாட்டிக்கு பொச்சு கழுவுறத நிறுத்து நாச்சி. அவ சக்கிலி தெருவுக்குள்ள போவக்கூடாதுன்னா போவக்கூடாது.”

“ம்மா, செத்த கம்முனு இரு. எனக்கு மட்டும் அவ அங்க போறது என்ன பெருமையா? இன்னைக்கு அவ போவமாட்டாம்மா. உட்டுட்டு செவனேனு படு போ, நான் பாத்துக்குறேன்.”

அமைதியாக அங்கிருந்து நகர்ந்த காளியம்மா திண்ணை மீது போய் அமர்ந்து புலம்பத் தொடங்கினாள். நாச்சி வெளியறையில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலின் மேல் போய் சாய்ந்தான். வள்ளி அமர்ந்திருந்த படுக்கையறையின் கதவு பாதி சாத்தப்பட்டிருந்தது. அந்த அறையிலிருந்து வெளிவந்த வெளிச்சம் நாச்சி படுத்திருந்த அறையின் இருட்டுடன் கலந்திருந்தது. 

“கவிதா, இன்னைக்கு உன்ன எப்புடியாவது வந்து பாத்துருவேண்டி” என்று தன் வயிற்றின் மேல் கைவைத்துக் கொண்டு முணுமுணுத்தாள். கையில் போட்டிருந்த டஜன் வளையல்கள் ஏற்படுத்திய சப்தங்கள் அந்த அறை முழுதும் எதிரொலிக்கவே “ஏய் கவி ,சத்தம் போடாத” என்று வளையல்களை மெல்லமாகத் தட்டினாள். அந்த வெக்கையான இரவில் அவளுக்கு மோனம் தேவையாக இருந்தது. அவளது ஆன்மாவில் புதைந்து கிடந்த கவிதாவும், பேரன்பும், அவளுமான உலகின் சௌந்தர்யங்களில் பயணம் மேற்கொள்ள அவளுக்கு மோனம் ஒன்றே கடவுச் சீட்டாய் தோன்றியது.

- தொடரும்