சிறுகதை

4.84k படித்தவர்கள்
68 கருத்துகள்

“அம்ம்... ம்... அம்ம்... ம்.” - காலை உதைத்துக் கொண்டு அழுதது, பத்து வயசு ஜிபு.

அதைச் சுற்றி சிறுநீர் சிறுகுளமாகத் தேங்கி நின்றது.

“ஏய்... ஷ்... அழுகையை நிறுத்து, கொன்னுடுவேன்” - அண்ணா மிரட்ட அதன் அழுகை இன்னும் அதிகரித்தது. ஆத்திரத்துடன் சிறுநீர்க் குளத்தைத் தட்ட, நீர்த் திவலைகள் அருகில் வந்த அண்ணாவின் மேல் தெறித்தன.

“அடச்சே, புத்தி கெட்ட நாயே...” அண்ணா பளீரென்று முதுகில் அறைய ஓவென்று அலறினான் ஜிபு.

“இந்த நாயைக் கொண்டு போய் இல்லத்துல விட்டுட்டு அப்புறம், சத்யாவை அனுப்பலாம்ல.” - அண்ணி கத்தினாள்.     

“சத்யா கிளம்பினதும் இதைக் கொண்டு போய் அங்க விடறதுதான் முதல் வேலை.”

அண்ணாவின் வார்த்தைகள் புரியவில்லை என்றாலும் தன்னை ஏதோ சொல்கிறார்கள் என்று ஜிபுவுக்குப் புரிந்தது.

“போத்தா, நீ போத்தா” என்று கத்தினான்.

“போடான்னா சொல்றே ராஸ்கல்” - அண்ணா மீண்டும் பளீரென்று அறைய, எழுந்து நின்று அந்தக் கூடமே அதிரும்படி அலறினான் ஜிபு. நிற்க முடியாமல் துவள, அந்தச் சிறுநீர்க் குளத்தில் தொப்பென்று உட்கார்ந்தான்.

ஆனந்தி ஓடி வந்தாள். அவளைக் கண்டதும் “அம்ம்... ம்...” என்று இருகை நீட்டி அழுதான் ஜிபு.

“எதுக்குண்ணா அவனை அடிக்கறே? அவனுக்கு என்ன தெரியும்?”

கேட்கும்போது ஆனந்திக்கும் அழுகை வந்தது. பத்து வயசுப் பையனை அப்படியே தூக்கிக் கொண்டு போய் பின்னாடி குளிக்க வைத்து சுத்தம் செய்தாள். ஹாலில் தேங்கியிருந்த சிறுநீரை அகற்றி, சுத்தம் செய்ததும், “ம்... ம்மா” என்று கை நீட்டிச் சிரித்தது ஜிபு.

அவனைக் கட்டிக் கொண்டு முத்தமிடும்போது அழுகை வந்தது.

“ஆனந்தி, அவனை விடு. சந்தானம் வரதுக்குள்ள. நீ ரெடியாகு. நீ போனாட்டு ஜிபு ரொம்ப ஏங்கிப் போயிடுவான். இப்படி கொஞ்சிட்டிருக்காதே.”

அண்ணி அதட்டினாள்.

“எப்படி அண்ணி? பெத்து, பத்து வருஷம் வளர்த்துட்டேனே” - பேசப் பேச அழுகை வந்தது.

“விலகித்தான் ஆகணும் ஆனந்தி. உன் பழைய வாழ்க்கை முடிஞ்சுது. இது புதுசு. நீ ஜிபு இல்லாம வாழப் பழகணும். எப்படி இருந்தாலும் அவனுடைய வாழ்க்கை இன்னும் ரெண்டு வருஷமோ, மூணு வருஷமோதான். அப்புறம் என்ன செய்வே?” - அண்ணா.

திக்கென்றது. புது வாழ்க்கை. மறுவாழ்வு. இதில் ஜிபு இல்லை. பழைய நினைவுகள் இல்லை. வேரோடு பிடுங்கி, மண்ணைக் கழுவி வேறு இடத்தில் நாடுகிறார்கள். செடி வளருமா? கருகிப் போகுமா?

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அண்ணாவுக்குத் தங்கையின் பொறுப்பை உதறினால் போதும். அவள் மனசு பற்றியோ, வாழ்க்கை பற்றியோ கவலை இல்லை. ஏன் இந்த ஜிபு பற்றிக்கூடக் கவலை இல்லை. தன்னை அனுப்பிவிட்டு, குழந்தையை ஏதோ இல்லத்தில் சேர்க்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறான்.

அவளுக்கு ஆயாசமாக இருந்தது. மனசில் ஒரு சலிப்பும், வெறுப்பும் இருந்தது.

‘வாழ்க்கை ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது.  ஆசையும், நிராசையுமாக போட்டுக் கொல்கிறது. எதிர்பார்ப்பு இல்லாமல் இரு’ என்கிறார்கள். 

ஆனால் பந்த பாசங்களால் கட்டுண்டதுதானே மனித வாழ்க்கை. அதிலும் தாய்மை என்பது இறைவனையே அசைத்துப் பார்க்கும் உணர்வல்லவா?

இதோ ஜிபுக்குட்டி வயிற்றில் இருந்தபோது எத்தனை கனவுகள். பிஞ்சுக் கால்கள் வயிற்றில் உதிக்கும்போது, புரளும்போது உண்டான சிலிர்ப்பை வார்த்தைகளில் விவரிக்க முடியுமா? வளர்ந்து, ‘ம்... ம்... மா...’ என்று கூறியபோது உண்டான ஆனந்தத்திற்கு இணை எது?

அந்த உணர்வின் நெகிழ்வில்தான் அடுத்து வந்த இறுக்கமான வாழ்க்கைச் சூழல்களை அவளால் சமாளிக்க முடிந்தது. அவள் கணவன் ராமு சொந்தமாக டிராவல்ஸ் வைத்திருந்தான். அதில் நஷ்டம் என்று தற்கொலை செய்து கொண்டான்.

அப்போது அப்பா இருந்தார். அம்மா, “நான் இருக்கேன் வா” என்றாள். வீட்டுக்கு ஒரு வேலைக்காரி என்று அண்ணி சம்மதித்தாள். அடுத்த இடி தாக்கியது.

பிடித்து வைத்த இடத்தில் அமர்ந்திருந்தான் ஜிபுக்குட்டி. ஒரு பேச்சோ, நகரவோ இல்லை. நிலை குத்திய விழிகள். இருந்த இடத்திலேயே செய்ததையே, திரும்பத் திரும்பச் செய்தான். பருத்துக் கொண்டே போன உடலுக்குப் பொருத்தமில்லாத சிறிய தலை. புரியாத சப்தங்களை எழுப்பினான்.

அவனிடம் தென்பட்ட மாறுபாடுகளைக் கண்டு டாக்டரிடம் போனபோது அவர், ஜிபுக்குட்டி ஆட்டிசம் பாதித்த குழந்தை என்று கண்டறிந்தார்.

பல சிகிச்சைகள், மருந்துகள் என்று கொடுத்தாலும், அவனின் உடல் படிப்படியாக, நலிவடைந்து வந்தது. கோபம், பிடிவாதம், குரல் எழுப்பிக் கத்துவது என்று அவனின் பல செயல்கள் விநோதமாக இருந்தன. இதில் இதய வால்வு வேறு பாதிப்பு.

“பொறுமை, நிதானம், அவனிடம் நீங்கள் காட்டும் அன்பு... இதுதான் அவனுக்குத் தேவையான மருந்து” என்றார் டாக்டர்.

ஆனந்தியிடமே ஒடுங்கி இருந்தான் ஜிபு. தாயின் அன்பு மட்டுமே அவனுக்குப் புரிந்தது. முதலில் அம்மா இறந்தாள். அதன்பின் அப்பா. அவர்கள் இருவரும் போன பிறகு ஆனந்தி இந்த வீட்டுக்கு வேண்டாதவள் ஆனாள். அவர்கள் இருப்பு வெறுப்பானது.

இந்த சமயத்தில்தான் சந்தானம் வந்தான். அவர்களின் தூரத்துச் சொந்தம். வெகு வருஷங்கள் துபாயில் இருந்தவன் இங்கு நிரந்தரமாக வந்துவிட்டான். தாய் தந்தையோ, கூடப் பிறந்தவர்களோ யாரும் இல்லை. ஒரு சித்தப்பா மட்டும்.

ஒரு கல்யாணத்தில் ஆனந்தியைப் பார்த்தவன் அவளைப் பற்றிக் கேள்விப்பட்டு அண்ணாவிடம் வந்து கேட்டான். வீட்டில் பெரிய வாக்குவாதம். “எனக்குக் குழந்தைகள் இருக்கு. எத்தனை வருஷம் உன்னை வைத்து நான் பார்க்க முடியும்?” - அண்ணி சட்டென்று சொல்ல, ஆனந்திக்கு தன் நிலை என்ன என்று புரிந்தது; சம்மதித்தாள்.

ஆனால் ஜிபுக்குட்டி?

“அதெல்லாம் நீ கவலைப் படாதே. இந்த மாதிரி குழந்தைகளுக்காக ஒரு இல்லம் இருக்கு. அங்க கொண்டுபோய் விட்டுடலாம்.”

“இல்லமா?”

“இதோ பார் ஆனந்தி. உனக்கு அவன் வாழ்வு கொடுக்கறதே பெரிசு. இதில் ஜிபுவையும் கூட்டிண்டு போறது முட்டாள்தனம். அவனுக்கு இன்னும் ரெண்டு வருஷமோ? மூணு வருஷமோ? நீ இதை மறுத்துட்டு இங்கேயே இருக்கலாம்னு முடிவு செய்யாதே.” - அண்ணி.

பெண்களுக்குத் தன் மனம் போல் தான் பெற்ற குழந்தை மேல் அன்பு காட்டவோ? அதை வளர்க்கவோ உரிமை இல்லையா? வாழ்க்கை கொடுத்ததால் மட்டும்தான் அவனின் அடிமையாகிவிட வேண்டுமோ?

ஆனந்திக்கு மனசு கசந்து வழிந்தது.

அண்ணா அவளை யோசிக்கவே விடவில்லை. சந்தானத்துடன் பேசவும் விடவில்லை. அவளை இங்கிருந்து அனுப்பி விடவே குறியாக இருந்தான்.

“ஜிபுவைப் பற்றி அவர்கிட்ட சொல்லிடறேன் அண்ணா.”

“நான் சொல்லிட்டேன்.”

“இல்லத்தில்விடச் சம்மதமா?”

 “அவர் சம்மதம் எதுக்கு?”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“......”

“ஆனந்தி, நீ புருஷன் இழந்தவ. உன்னை ஒருத்தன் கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொல்றதே பெரிசு. சந்தானம் கை நிறையக் காசோட வந்திருக்கான். ‘நான், நீ’ன்னு பொண்ணு தர அலை மோதுது. வந்த வாழ்க்கையைப் பிடிச்சுக்கோ.”

பெண் உரிமை, பெண் விடுதலை என்று நினைக்கத் தெரியவில்லை ஆனந்திக்கு. ஆனால் பெண்களின் திருமண வாழ்க்கை மட்டும் சூதாட்டமா? அவனுக்காக வாழ்ந்து, மூச்சுவிட்டு, பிள்ளை பெற்று, அவனின் நிழலாக வாழ வேண்டுமா?

சந்தானம் தன்னிடம் எப்படி நடப்பான்? கடந்த கால வாழ்க்கையை நினைவுபடுத்துவானா? ராமு, ஜிபுவின் சுவடுகளே கூடாது என்பானா? தன் உணர்வுகள் மதிக்கப்படுமா? மிதிக்கப்படுமா? இரண்டாவது திருமணம் செய்யும் பெண்களுக்கு மட்டும் எப்போதும், நித்தம், நித்தம் தீக்குளியல்தானா?

“ஜிபுவை விட்டு நான் எப்படிண்ணா?”

“எப்படிண்ணா? இங்கேயே இருந்துடலாம்னு நினைப்பா?”

அதன் பிறகு ஆனந்தி பேசவில்லை. இயந்திரமாய் அடி பணிந்தாள்.

இன்று அதிகாலையில் முருகன் கோவிலில் திருமணம். சந்தானம் காருக்கு பெட்ரோல் போட்டு வருகிறேன் என்று போயிருந்தான். ஆனந்தி ஜிபுவுக்கு உணவு ஊட்டினாள். அது அவள் மடியிலேயே படுத்து உறங்கிவிட்டது. அவளின் கட்டை விரலை வாயில் வைத்தபடி அசந்து உறங்கிய மகனை நெஞ்சு கனக்க பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“அவன் தூங்கும்போதே கிளம்பிடு. இல்லைன்னா கத்தி, கூச்சல் போட்றுவான். நான் ஈவினிங் போல, கொண்டு போய் இல்லத்தில் விட்றுவேன்.”

மறுமணம் செய்து கொள்ளும் பெண்கள் தன் மனம் போல் வாழ உரிமை இல்லையா? மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இந்த உலகத்தில் வாழக் கூடாதா?

அவளுக்குள் அலைமோதின கேள்விகள்.

“போலாமா?” - சந்தானம் வந்துவிட்டான். பெட்டிகளைக் கொண்டு போய் காரில் வைத்தான்.

“கிளம்பு ஆனந்தி.” - அண்ணா ஜிபுவை மெதுவாக நகர்த்தினான்.

“இரு, இரு.” - சந்தானம் அருகில் வந்து ஜிபுவை அலாக்காகத் தூக்கி காரின் பின்சீட்டில் படுக்க வைத்தான். திகைத்து நின்றவர்களைப் பார்த்துச் சிரித்தான்.

“எப்போ ஆனந்திய ஏத்துகிட்டேனோ, அப்பவே அவளைச் சார்ந்த அத்தனையும் ஏத்துக்கணும். சொல்றதைவிட, செய்யும்போது சொல்லலாம்னு இருந்தேன். நான் ஜிபுவைக் கூட்டிட்டு போய், வால்வு ஆபரேஷன் செய்யறேன். ஆட்டிசம் குறைபாட்டுக்கும் வைத்தியம் செய்யறேன்.”

பேச முடியாமல் நின்றது வீடு.

“ஆனந்தியை விரும்பினேன். அவளை சந்தோஷமா வச்சுக்கனும்னு நினைச்சேன். அதில் ஒன்று ஜிபு. வரட்டா. வா ஆனந்தி.”

கார் ஓட்டுபவனின் தோளில் சாய்ந்து வெகு நேரம் ஆனந்தமாக அழுது கொண்டிருந்தாள் ஆனந்தி.