அத்தியாயம் 1

275.95k படித்தவர்கள்
87 கருத்துகள்

திகாலை மூன்று மணிக்கு மொபைல் போன் அடித்தது. கடற்கரையை ஒட்டியிருந்த அந்த ஆசிரியர் பயிற்சி நிலைய ஹாஸ்டலின் மோனமான நிசப்தத்தில், மொபைல் சத்தம் பெரிதாய் கேட்டது. சட்டென்று கண் விழித்தாள் தனலஷ்மி. அவளிடம் இருந்ததெல்லாம் ஒரு சாதாரண, 1500 ரூபாய் மொபைல் போன்தான். டச் செல்போனுக்கெல்லாம் வசதி இல்லை. இதையே மாதத் தவணையில்தான் வாங்கியிருந்தாள். படிப்புக்கும் ஹாஸ்டல் கட்டணத்துக்கும் அப்பா கணேச வாத்தியார் பணம் அனுப்புகிறார். அதற்கே எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பது அவளுக்குத் தெரியும். தன் படிப்பு செலவும், ஹாஸ்டல் செலவும் போக, ஊரின் வீட்டுச் செலவு வேறு இருக்கிறது.

அவர் அந்தக் குக்கிராமத்தின் பள்ளிக்கூடத்தில் 30 வருடங்களுக்கு மேல் ஆசிரியராகக் காலம் தள்ளிவிட்டார். அரசாங்கப் பள்ளிக்கூடம்கூட இல்லை. தனியார் பள்ளிதான். கிராமத்து சிறுவர்களும் சிறுமிகளும் ‘அ, ஆ, இ, ஈ’ யாவது தெரிந்துகொள்ள வேண்டும்... எழுத்து கூட்டியாவது தமிழ் படிக்க வேண்டும். நித்திய கணக்கு பார்க்கவாவது வாய்ப்பாடும், கூட்டல், கழித்தலும் தெரியவேண்டும் என்பதற்காக, ஊர் பெரிய மனிதர் தவசி அந்தப் பள்ளியை ஆரம்பித்திருந்தார். ஐந்தாம் வகுப்போடு நின்றுவிடாமல் +2 வரை கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காகத் தன் சொந்த பட்டா நிலத்தில் பத்து ஏக்கர் ஒதுக்கி இருந்தார்.

ஆனால், அவர் காலம்வரை அந்தப் பள்ளி ஐந்தாம் வகுப்புக்கு மேல் வளரவே இல்லை. அவர் காலத்துக்குப் பின் எம்.பி.ஏ படித்திருந்த அவரது ஒரே மகன் சரவணன், அப்பாவின் கனவுப் பள்ளிக்கூடமான அதை இழுத்து மூடாமல், நிர்வகிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக, அந்தக் குக்கிராமத்துக்கு வந்து குடியேறினான். அப்பா, அம்மா, சொந்தபந்தம் என்று யாருமில்லாத அவன், தெருவின் ஒரே வீடாக இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை நீண்டிருந்த பண்ணை வீட்டில் தன்னந்தனியானாகவே இருந்தான்.

அப்பா விட்டுப்போயிருந்த நன்செய் நிலத்தை, நெல் சாகுபடி செய்யச் சொல்லி ஊராரிடமே ஒப்படைத்தான். புஞ்செய் நிலத்தில் எள், உளுந்து, துவரை, வேர்க்கடலை என்று பயிரிட்டு, வந்த பணத்தையும் பள்ளிக்கூடத்துக்கே செலவழித்தான். ஆனாலும் பணப் பற்றாக்குறை இருந்தது. மூன்றே ஆசிரியர்களை வைத்து, ஐந்து வகுப்புகளையும் சமாளித்தான். நான்காவது ஆசிரியராக மாறி அவனும் பாடம் எடுத்தான்.

வீட்டிலிருந்து அப்பா அவனுக்கும் சேர்த்து சாப்பாடு கட்டிக்கொண்டு போவது இவளுக்குத் தெரியும். அப்பாவும் மனைவியை இழந்தவர்தான். இவள் பிறந்த உடனே, பிரசவ அறையிலேயே அம்மா இறந்துவிட்டாள். கட்டிவைத்த புத்தம் புது ரோஜா செண்டு மாதிரி இருந்த இவளைத் துணியில் சுற்றிக் கொண்டுவந்து, அக்கா சகுந்தலா கையில்தான் கொடுத்தார்களாம். கன்னங்கரேலென்றிந்த தன் கையில் ரோஜா நிறத்திலிருந்த பெண் குழந்தையைக் கண்டு, அக்கா ஒரு விநாடி அப்படியே திகைத்து, ஸ்தம்பித்துப் போய்விட்டாளாம்.

“இது என்னப்பா… இப்படி ஒரு நிறமும் அழகுமா தேவதை மாதிரி இருக்குது!”

“அப்படியே உங்கம்மாவை உரிச்சுப் பொறந்திருக்கு. என்னைக் கல்யாணம் கட்டிக்கிட்டு வந்தபோது உங்கம்மா இப்படித்தான் இருந்தா. எள்ளும் பச்சரிசியும் ஒண்ணா சேர்ந்திடுச்சின்னு கிராமமே அதிசயப்பட்டுது. நீயும் உன் தம்பி நடேசனும் என்னைக் கொண்டு பொறந்திருக்கீங்க.”

“கறுப்பானாலும் நாங்க உங்களை மாதிரி களையாகத்தான் இருக்கோம். எனக்கோ தம்பிக்கோ என்ன குறை?” 

“ஆண்டவன் நமக்கு ஒரு குறையும் வைக்கலம்மா. தம்பிய நல்லா படிக்கவச்சு ஒரு பெரிய ஆளா ஆக்கிட்டேன்னு வச்சுக்க… உன் கல்யாணம், பொறந்திருக்குற தங்கச்சிப் பாப்பா கல்யாணம் எல்லாத்தையும் ஜாம் ஜாம்னு நடத்திடலாம்!”

“ஐயோ அப்பா, பாப்பா இப்பத்தான் பொறந்திருக்குது. அதுக்குள்ள கல்யாணம் வரை போய்ட்டீங்க. வாப்பா, உள்ள போய் அம்மாவ பார்க்கலாம்.”

இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே, உள்ளேயிருந்து வெள்ளைப் புடவை தாதி பரபரவென்று வெளியில் ஓடிவந்தாள். ஒரு நிமிடத்துக்கெல்லாம் டாக்டரை உள்ளே அழைத்துப் போனாள். ஒன்றும் புரியாதவர்களாக, அறைக்குள் செல்ல இருந்த இவர்களை மற்றொரு தாதி தடுத்து நிறுத்தினார்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“டாக்டரம்மா வந்து சொல்ற வரைக்கும் உள்ள போவக் கூடாது!”

“ஏன்… என்ன ஆச்சு? கொழந்தய கொடுத்துட்டுப்போன நர்ஸ் உள்ள போய் அம்மாவ பார்க்கச் சொன்னாங்களே.’’

“இப்ப உள்ள யாரோ சீரியஸா இருக்காங்க. அதான் அந்த நர்ஸு டாக்டரம்மாவ கூட்டிக்கிட்டுப் போயிருக்குது. மொதல்ல டாக்டரம்மா வெளிய வரட்டும். அப்புறம் நீங்க போயி பார்க்கலாம்!”

அவர்கள் ஐந்து நிமிடங்கள்கூடக் காத்திருக்கவில்லை. அதற்குள் டாக்டரம்மா வெளியில் வந்தார்.

“கல்யாணியம்மா புருஷன் யாருங்க?”

“நான்தாங்க” என்று முன்னால் போய் நின்றாராம் அப்பா.

“நீங்க ரொம்ப எங்கள மன்னிக்கணும்! நாங்க உங்க சம்சாரத்தைப் பொழைக்கவைக்க எவ்வளவோ பாடுபட்டோம். ஆனா முடியல. அவங்க பிட்ஸ் வந்து இறந்துபோயிட்டாங்க.”

இடி வந்து இறங்கியது அப்பாவின் தலையில். அதிர்ந்து நின்றார் அவர். உடம்பு உதறிற்று. ‘கல்யாணி கல்யாணி’ என்று மனசு மருகிற்று. ‘ஐயோ ஐயோ’ என்று உள்ளம் கதறிற்று. ஒரு வார்த்தை வரவில்லை. நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது. கரகரவென்று கண்களிலிருந்து நீர் பெருகி கன்னங்களில் வழிந்தது.

“மூணு குழந்தைங்களை என் தலையில் கட்டிட்டுப் போயிட்டியே கல்யாணி. இனிமே நா என்ன பண்ணப்போறேன்? இந்தப் பிஞ்சு முகத்தகூடப் பார்க்காமப் போயிட்டியே… இத நான் எப்படி வளார்க்கப் போறேன்?”

வாயை மேல் துண்டால் பொத்திக்கொண்டு உள்ளுக்குள்ளேயே அரற்றினார் அவர். உள்ளே போய் பார்த்தபோது, பிறந்த குழந்தை மாதிரி கல்யாணியும் அழகாய், அமைதியாய் விழி மூடிக்கிடந்தாள்.

அதன்பின் எல்லாம் வேகவேகமாய் நடந்தன. கல்யாணியின் உடல் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. யார் யாரோ வந்தார்கள். மார்பில் அடித்துக்கொண்டு அழுதார்கள். ‘சாகிற வயசா?’ என்று மாய்ந்தார்கள். இழுத்துப் போட்டுக்கொண்டு வேலை செய்தார்கள்.

தவசி வந்தார். கூடமே எழுந்து நின்றது. கணேச வாத்தியாரின் தோளில் கைபோட்டு தோட்டத்துப் பக்கம் அழைத்துப்போனார்.

“என்ன பண்றது கணேசா… நாம கொடுத்துவச்சது அவ்வளதுதான். இனிமேதான் ரொம்ப ஜாக்கிரதையா நடந்துக்கணும். ஊர் ஜனம் சும்மா இருக்காது. ரெண்டாம் கல்யாணத்துக்கு அடி போடும். பேசிப் பேசி கரைக்கப் பார்க்கும். எனக்கு இருந்தது ஒரே மகன்தான். அதுக்கே நான் மசியல. வளஞ்சு கொடுக்கல. பெத்த புள்ளதான் பெரிசுன்னு பிடிவாதமா நின்னேன். ஜெயிச்சும் காட்டிட்டேன்.’’

கணேச வாத்தியாருக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்தது. ஆனாலும் மௌனமாகக் கேட்டுக்கொண்டார். தவசி மேலே பேசிக்கொண்டு போனார்.

''உமக்கு ரெண்டு பொண்ணுங்க வாத்தியாரே. ரெண்டையும் ரெண்டு கண்ணுங்களா பாவிக்கணும். உடம்பு பேச்சையும், ஊரார் பேச்சையும் கேட்டு, மூணாவது கண்ணை வீட்டுக்குள்ள கொண்டு வந்தீங்கன்னு வச்சுக்கோங்க, அந்த மூணாவது கண்ணு நெற்றிக்கண்ணா மாறிடும். எல்லாத்தையும் எரிச்சிடும். வீட்டையே அழிச்சுடும். சாந்த சொரூபியான, நல்ல பொம்பளைங்களும் இருக்காங்கதான்! ஒட்டுமொத்தமா இல்லேன்னு சொல்லிப்புட முடியாது. ஆனா, நமக்குக் கிடைக்க மாட்டாங்க. நாம அவ்வளவு அதிர்ஷ்டம் பண்ணல. அத்தனை அதிர்ஷ்டசாலிங்களா இருந்திருந்தா, வீட்டைத் தேடிவந்த மகாலஷ்மிங்க, நம்மை இந்த மாதிரி தவிக்கவிட்டுப் பாதியில ஏன் போகப்போறாங்க? என்ன நாஞ் சொல்றது?”

அவர் முகத்தை ஏறிட்டு, ‘ஆமாம்’ என்று தலையாட்டினார் கணேச வாத்தியார்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“இப்ப தலையாட்டிட்டு அப்புறம் குப்புற விழுந்துடாதீங்க. கவிழ்த்துப் போட்டுடுவாங்க. ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுச்சாம்னு ஆகிப்போகும் கதை. அதுக்கு இடம் கொடுத்துடாதீங்க. பாசி தரையில நடக்குற மாதிரி ஜாக்கிரதையா, பக்குவமா நடந்துக்குங்க. மூணு கொழந்தைங்களையும் வளர்த்துப் படிக்கவச்சு கரையேத்துற வழியைப் பாருங்க.”

ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு ஆணிகளாக மனதில் பதிந்தன. அந்த நிலமையிலும் தவசியை நினைத்து சிலிர்த்துக்கொண்டார்.

‘எப்பேர்ப்பட்ட மனிதர்!’

ராமாயண ராமர் நினைவுக்கு வந்தார். இளம் மனைவியை அரண்மனையில் விட்டு அண்ணனோடு காட்டுக்கு வந்த லஷ்மணன் நினைவுக்கு வந்தார். மகாபாரத பீஷ்மர் நினைவுக்கு வந்தார். எத்தனை எத்தனை யுக புருஷர்கள்! இன்றுவரை நினைவில் நிற்பவர்கள்! கொண்டாடப்படுபவர்கள்! திட சித்தர்கள்! வைராக்கியர்கள்! மனதாலும் பிறழாதவர்கள்!

அந்த வரிசையில் வருபவர்தான் இந்த தவசியும். அவர்களோடு சேர்த்து நிற்க வைக்கப்படவேண்டியவர்தான்!

தானும் அதுபோல் வாழ்ந்து காட்ட வேண்டும். அந்த வரிசையில் சேரவேண்டும்! கை பிடித்து வழி காட்டிவிட்டார் தவசி. அந்த வழியில் பயணிக்க வேண்டியதுதான் தன் கடமை!

“அப்படியே செய்வேன் ஐயா. உங்க அடியைப் பின்பற்றி நடப்பேன்.’’

 ஒரு வினாடி அவரை மென்மையாகப் பார்த்தார் தவசி. பின் மெல்ல தோளைத் தட்டிக்கொடுத்தார்.

“நல்ல நிலம் பார்த்து விதைக்கிறதுதான் என் பழக்கம். வாங்க உள்ளே போகலாம்.”

இருவரும் உள்ளே வந்தனர்.

(தொடரும்...)