சிறுகதை

3.37k படித்தவர்கள்
28 கருத்துகள்

ன்னும் கடைப் பையனைக் காணோம். 

தீபாவளி நேரம்; சும்மாவாவது தையல் கடை திறந்திருக்க வேண்டும். 

பூட்டியிருந்தால் ஊர்க்காரன் ஏசிவிடுவான்.

கமலக்கண்ணன் அவ்வளவுதான்! “எத்தன நாளைக்கித்தே அவனும் இந்த மிசின வச்சி ஓட்டுவான்? வேற தொழிலப் பார்ரான்னாக் கேக்கறானா? காலத்துக்குத் தகுந்து மாறணுமப்பா! கடைல ரெண்டு ஜாக்கட் பிட்டுகள வாங்கி அடுக்கு, நாலு சேலை துணிகளைத் தொங்கவிடு. அதும் ஒரு ஏவாரம் நடக்கும்ல. எப்பப் பாத்தாலும் டர்ர்ருப் புர்ர்ருன்னு மிசின மட்டும் சுத்திக்கிருந்தா!” எனக் காதுபடவே பேசுவார்கள். 

அந்த விஷயத்தில் மட்டும் தெளிவாய் இருந்தான். அவனைக் காட்டிலும் சாந்தி படுகெட்டி. “ஊரார் சொல்லுக்கெல்லாம் ஆடக் கூடாதுங்க. நமக்கு என்ன தோணுதோ அதுப்படி நடந்தாப் போதும்.”

உண்மைதான். இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் தேனி நகரம். சாதாரணமாய் காப்பி சாப்பிடவே வண்டியை எடுத்துக்கொண்டு நகரத்துக்குப் பயணிக்கிற ஜனங்கள். இதில் ஆடம்பரப் பொருளாகிப் போன ஜவுளிக்குச் சொல்லவா வேண்டும்?.

வீருசின்னு சுத்தமாய்க் கடை வாசலைத் தெளித்து வைத்திருந்தாள். மாட்டுச் சாணத்தின் வாசனையும் பசுமை நிறமும் நெஞ்சை நிறைத்தன. ஷட்டரைத் தூக்கிவிட்டதும் கேசவன் ஓடிவந்தான்.

“டயமாச்சாண்ணே?” கையில் இருந்த டிஜிட்டல் கடிகாரத்தைப் பார்த்தான்.

கடைக்குள்ளிருந்த அஜந்தா கடிகாரமும் (கடை திறப்பிற்கு ஆனந்தண்ணன் அளித்தது) ஒன்பதாக இன்னும் பத்து நிமிடம் இருப்பதையே காட்டியது. 

“பண்டிகை நேரமெல்லா டயத்தப் பாக்கக் கூடாதுடா தம்பி.” மனதின் குரலாய் கேசவனுக்குச் சொன்னான்.

பூமாரை எடுத்து கடையைப் பெருக்கத் தொடங்க, கமலக்கண்ணன் தினசரியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

“பேப்பர்ல என்ன போட்ருக்கான்?” கிடுகு வேயும் சவுண்டு சுப்பையா தனது நரை பூத்துச் செழித்த, ஒருமாசத் தாடியைச் சொறிந்தபடி கேட்டார். ஊரில் இது ஒரு பழக்கம். தினசரியை விரித்தால் யாருக்காவது வாசித்துச் சொல்ல வேண்டும்

“ம். தடுப்பூசி போடலேன்னா வீட்ட விட்டு வெளில வரக் கூடாதாம். அபராதம் போடுவாங்களாம்.”

“அடப் பாவியள, இவகளுமா? ஒருத்தெ என்னான்னா மாட்டுக்கறியத் திண்ணாத, திண்ணா கொல்லுவேங்கறான். இவெ ஊசியப் போடு, இல்லேன்னா வெளில வராதேங்கறான். காந்தி, சொவந்தரம் இவகளுக்கு மட்டுந்தே வாங்கிக் குடுத்தாராக்கும்? என்னாங்கடா நாடு? கடவுளோட சோதனதே!” புலம்பியபடியே தனது மெலிந்த உடம்பை மேல்துண்டால் இறுகப் பொத்தியவாறு கடை வாசலில் அமர்ந்தார். இனி பீடிப் புகை கமழத் தொடங்கும்.

அப்பா ஏதாவது ஒருநாளில் கடைப்பக்கம் வரும்போது கண்டிப்பார். “ஏஞ் சவுண்டு, வந்து ஒக்கார்ர சரி, பீடிச் சனியன குடிச்சுப் போட்டு வந்து ஒக்காரலாம்ல. இங்கன ஒக்காந்துதே குடிக்கணுமா. கடைக்குள்ள பொக வருதுல்ல.”

“அப்டியா, காமுவுக்குப் பொக சேராதா. ச்சேரிங்யா” சொன்ன நேரத்துக்கு எழுந்து போவார் அல்லது பின்புறம் திரும்பி உட்காருவார். மேலெழும்பும் புகையைக் கைகளால் கடைக்குள் போகாதவாறு விரட்டுவார். அவ்வளவுதான். பாவம், வயசாளி! அதற்கு மேல் கமலக்கண்ணனும் அவரை விரட்டுவது கிடையாது. மூக்கைப் பொத்திக்கொள்வான் அல்லது ஃபேனை வேகமாய்ச் சுழலவிடுவான்.

“என்னா, பீடிய எடுக்கப் போறியா சவுண்டு?” கையில் இருந்த நாளிதழுடன் கண்களை உருட்டினான்.

“அய்யோ காமு, ஒன்னிய மறந்துட்டேன்” என்றபடி வழக்கம்போல திரும்பி உட்கார்ந்தார். “ஏய்யா, இப்பிடி கஞ்சத்தனம் பண்ற. நிய்யும் பீடி சீரட் குடிச்சிப் பழகலாம்ல. என்னயவே வெரட்டிக்கிருப்பீக.” இடுப்புச் சொருகலிலிருந்து தீப்பெட்டியை எடுத்துப் பற்ற வைத்தார்.

செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது. கேசவன் பதறினான். “ணே, அக்கா போனக்கொண்டு வந்துட்டேண்ணே, ஒர் நிம்சம் குடுத்ததும் வந்திர்ரேன்.” பதிலுக்குக் காத்திராமல் விளக்குமாறைப் போட்டுவிட்டு ஓடினான்.

நாங்கள் வேலைக்குச் சேர்ந்த பொழுதிலெல்லாம் டெய்லர் அண்ணனுக்கு அப்படி பயந்தோம். ஒரு வார்த்தை மறுத்துப் பேச முடியாது. அடித்துவிடுவார். வீட்டில் சொன்னால் அவர்கள் அதைக் காது கொடுத்தும் கேட்க மாட்டார்கள். 

“வேல பழகணும்னா நாலு செருப்படி வாங்கித்தே ஆகணும்.”

காஜா போடுவதற்கு முன்னால், கடை வாசலைக் கூட்டுவதில் ஆரம்பித்து, மெசினைத் துடைப்பது, (துடைத்து வைத்த மெசினில், டெய்லர்தான் எண்ணெய் போடுவார்) காஜாவுக்கு நூல் கோக்கும் சமயம் திடீரென நூல்கண்டு, பொத்தான்கள் தீர்ந்துபோகும். வாங்கிவர கடைவீதிக்கு ஓட வேண்டும். தைத்த ஜாக்கட்டை வாங்கிப்போன அக்காவிடம் கடன் பாக்கியைக் கேட்டு வசூலுக்கு அலைவது மட்டுமல்லாமல், சுவரில் ஒட்டடை அடிப்பது, டீ குடித்த தம்ளரைக் கழுவித் தருவது என வேலைகள் வரிசை கட்டி நிற்கும். 

பள்ளிக்கூடத்தில் வாத்தியாரின் காது நிமிண்டலுக்கும் வீட்டுப் பாடம் ஒப்பிக்காத வகையில் லீடர்களின் குட்டுக்கும் பயந்து ஆஞ்சநேயர் கோயில் பூவரசம் மரத்தின் மேல் ஏறி ஒளிந்துகொண்டதன் பலனாய், மோட்டார் மெக்கானிக் நூர் அண்ணனிடம் முதலில் வேலைக்குச் சேர்த்துவிட்டார் அப்பா. “போற வாற வண்டிக்குக் காத்தடிச்சு, பஞ்சர் பாத்துப் பழகுனாலே ரெண்டு குடும்பத்தத் தாங்கலாம்” என்றார்.

நூர் அண்ணன், வரும் வண்டிகளைப் பூராவும் கழுவச் சொன்னாரே ஒழிய ஸ்பானரைக் கையில் தொட விடவில்லை. தினமும் வீட்டில் வெள்ளையும் சொள்ளையுமாய்ப் போட்டுக்கொண்டு போகிற டவுசர் சட்டை எல்லாம் கருப்பு மசியாகி வந்ததில், சோப்பு வாங்கி கட்டுபடியாகவில்லை எனும் அம்மாவின் புகாரில், ஆனந்தன் டெய்லரிடம் கொண்டுபோய் காஜா பழகவிட்டார், “உருப்படியா ரெண்டு கிழிசலத் தச்சுப் பழகுனா, ஒரு மிசுன வாங்கிக் குடுத்துரலாம். எதோ அவெம் பொழப்பு தழப்ப ஓட்டிக்குவான்ல.” பெரிய நினைப்பு அப்பாவுக்கும் அம்மாவுக்கும்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ஆனந்தனும் முதலில் கடையில் குவியும் வெட்டுத் துணிகளைக் கூட்டி அள்ள, கடைக்குப் போக, காப்பி வாங்க, இப்படித்தான் வேலை கொடுத்தார். இரண்டு மாசத்துக்குப் பிறகே கையில் ஊசியைக் கொடுத்து எம்மிங் போடச் சொன்னார். அதுவொரு இரண்டு மாசம். காஜாவுக்கு ஏறி வர, வீரப்பய்யனார் கோயில் திருவிழா வர வேண்டி இருந்தது.

அதுவொரு காலம்! இப்போது கடைக்குப் பையன்கள் வேலைக்குக் கிடைப்பது அரிதிலும் அரிது. அதுவும் டெய்லர் கடைக்குக் காலில் விழுந்து அழைத்து வர வேண்டும். கேசவனுக்கு வந்த நாளிலேயே சட்டையும் பேண்ட்டும் தைக்க ஆவலாதி. நூல்கண்டு வாங்கி வரச் சொன்னால், “மொத்தமா வாங்கி ஸ்டாக் வச்சுக்கிட வேண்டிதானண்ணே. ஒரு நூல்கண்டுக்காக அவ்வளோ தூரம் நடக்கணுமா” எனச் சலித்துக்கொள்கிறான்.

“கமல் அண்ணே வணக்கம்! என்னா காலை நேரம் வெய்யில் குளிக்கிறீகளா?” கையில் ஒரு ஜவுளிக்கடைப் பையுடன் சிரித்த முகமாய் அந்த நபர் கடைவாசலின் முன் நின்றார். பீடிப்புகை கடவாய் வழியே வழிய அந்நபரை ஏறிட்டு நோக்கினார் சவுண்டு.

கையில் இருந்த நாளிதழை மடிக்காமலே நிமிர்ந்து பார்த்த கமலக்கண்ணன், தீபாவளி வாடிக்கையை வரவேற்கும் முகத்துடன் எழுந்தார்.

“வாங்க தம்பி. உள்ள வாங்க.”

கடையின் உள்புறம் அழைத்துச் சென்றார். கேசவன், கூட்டி முடித்துவிட்டு மிசினைத் துடைத்துக்கொண்டிருந்தான். அவனே எண்ணெயும் போட்டுவிடுவான்.

வந்தவருக்கு கமலக்கண்ணனின் வரவேற்பில் முகம் பிரகாசம் கண்டது. இவரிடம் காரியம் ஆகும் எனும் நம்பிக்கை வந்தது. ஏழெட்டு கடை அலைந்து பார்த்தாயிற்று. பெண்கள்கூட பிசியாய் இருப்பதாக சலித்தார்கள். புதுத் துணியைப் பழசு எனத் தொட மறுக்கிறார்கள்.

“ஃபேனப் போடு கேசவா.”

நான்குக்கு மூன்று அளவுள்ள கட்டிங் டேபிளில் கொண்டு வந்த பாலிதீன் பையைக் கிடத்தினார்.

மிசினுக்குப் பின்புறமிருந்த தனது இருக்கையில் அமர்ந்த கமலக்கண்ணன், வந்தவரை ஸ்டூலில் அமரச் சொன்னான்.

“நீட்டி நெளிக்காம சட்டுனு தொடச்சிட்டு, பத்தியப் பொருத்து கேசவா.”

சொன்ன அடுத்த நிமிஷத்தில் ஊதுபத்தியின் மணம் கமழத் தொடங்கியது. டெய்லர் இப்படிச் சொல்கிறார் என்றால் வருமானம் வர இருக்கிறது என அர்த்தம். சாமி கும்பிடாமல் கையில் எதுவும் வாங்கக் கூடாது அல்லவா?.

“தீபாவளி பர்ச்சஸ் ஆரம்பிச்சாச்சா தம்பி.” கமலக்கண்ணனும் நம்பிக்கையில் பேச்சைத் தொடங்கினான்.

“என்னாண்ணே தீவாளி? இருக்கறவகளுக்கு என்னைக்கிம் தீவாளிதே. இல்லாத ஆள்களுக்குத்தே பொங்கலு தீவாளி எல்லாம். என்னாண்ணே.”

“நூத்துல ஒரு வார்த்தங்கய்யா. சவுளிக் கடையப் பாருங்க. முந்தியெல்லா திருவுழா தீவாளிக்குத்தேங் கூட்டம் இருக்கும். இப்ப? அனுதினமும் அள்ளிக் குமிக்கிறாக.” சம்பந்தம் இல்லாமல் வெளியிலிருந்து சவுண்டு குரல் கொடுத்தார். 

வாடிக்கையாளரிடம் நீட்டி நெளிச்சுப் பேசவிட மாட்டார். கமலக்கண்ணனுக்குக் கடுப்பு வந்தது. காலையில் கோபம் கூடாது.

“இல்ல தம்பி, எல்லாரும் தீவாளிக்கு அணுசுல எடுத்து தக்கெக் குடுத்துக்கலாம்னு அசால்ட்டா இருப்பாங்க. நமக்கும் காலாகாலத்துல உருப்படிக வந்துச்சுன்னாத்தான அவசரமில்லாமத் தச்சுக் குடுக்க ஏதுவா இருக்கும். அதச் சொல்றேன்.”

“ஆமா ஆமா, ஒங்க பாய்ண்ட் ஆஃப் வியூ கரெக்ட்தான்” என்றவன், “அதான், ஒரு சின்ன வேல, அண்ணனுக்கு தீபாவளி டிஸ்டபன்ஸ் இருக்கக் கூடாதுன்னு இன்னிக்கே வந்தேன்” என்றபடி பாலிதீன் பையை எடுத்தான்.

ஜமிக்கியும் பாசியும் வைத்துத் தைத்த புதிய ஜாக்கெட், கூடவே ஒரு புல்வாயல் ஊதா நிறத்து ஜாக்கெட்டும் இருந்தது. 

“தங்கச்சி மகளுக்கு நாளன்னைக்கி கல்யாணம். மாப்ள வீட்ல ரெடிமேட்ல ஜாக்கெட் எடுத்துவந்து குடுத்துட்டாக. இடுப்பு, கை எல்லாம் லூசாவும், கம்புக்கூட்ல பிடிக்கிதுன்னும் பொண்ணுப் பிள்ள சங்கட்டப்படுது. இத மாப்ள வீட்ல சொல்ல முடியாது. அளவு ஜாக்கட் இருக்கு. அண்ணே கோவிச்சுக்காம ஒங்க தங்கச்சி வீட்டு வேல மாதிரி செஞ்சு குடுக்கணும்.” ரெம்பவும் பாந்தமாய் பவ்யமாய் பேசியபடி இரண்டு ஜாக்கட்களையும் மிசினில் வைத்தான். 

சவுண்டின் மேல் இருந்த கோபம் அப்படியே திசை மாறியது. “மெசின் மேல பழய துணிய வெக்காத தம்பி. எடுய்யா அத.”

கமலக்கண்ணனின் குரலின் கடுமையில் பயந்துபோன அந்நபர், “யண்ணே, ரெண்டு துணியுமே புதுசுதாண்ணே. அளவுக்காகக் கொணாந்தேன்.” சொல்லிக்கொண்டே இரண்டையும் எடுத்து கையில் வைத்துக்கொண்டான்.

“தீவாளி நேரம் இந்த வேலையெல்லாம் பாக்க முடியாது, காலங்காத்தால வந்து…” முகத்தில் ஏமாற்றம் வழிந்தது.

“இன்னம் ஒரு மாசம் இருக்கேண்ணே. அரமணி நேரம்...” வார்த்தைகளை விழுங்கி விழுங்கிப் பேசினான்.

“ரெண்டு மாசங்கூட இருக்கட்டும். இத ஒக்காந்து பிரிச்சு அடிச்சிக்கிட்டு இருந்தேன்னா, அவ்வளவுதேன். ஜாக்கட்டா வந்து குமிஞ்சிரும். அப்பறம் வேற எதும் தைக்க நேரம் இருக்காது. ஊருக்குள்ள யாராச்சும் பொம்பளப் பிள்ளைக தச்சுக்கிருப்பாங்க. அங்க போய்க்குடுங்க.”

“கலியாணச் சட்டைண்ணே, நல்லா இருக்கணும். அதான் அண்ணேட்ட வந்தே.” கண்ணில் நீர் மல்காத குறையாய்க் கெஞ்சினார்.

சுப்பையாவும் கமலக்கண்ணன் இத்தனை கடுமையாய் பேசிக் கேட்டதில்லை. “எதோ. கலியாணத்து சட்டெங்கிறாக காமு. கொஞ்சம் மனசு வையி” என்றார்.

“தீபாவளிக்கும் தைக்க வரணுன்ணே” என மருகினான். 

நெஞ்சுக்குள் ஏதோ ஒரு பேய்வந்து புகுந்ததுபோல சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தான் கமலக்கண்ணன். 

“ஒரு ஆணியும் புடுங்க வேணாம்.” அடிபட்ட புலியாய் சீற்றத்துடன் வார்த்தைகள் வெளிப்பட்டன. தன்னையே மறந்திருந்தான்.

ரொம்பவே கனத்த மனசுடன் கடையையும் கமலக்கண்ணனையும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்துபோனான். ஒருவேளை மனசு மாறி அழைப்பான் என எண்ணி இருக்கலாம்.

வருஷமெல்லாம் தோல்வியைக் காண்பதே தன்னுடைய வாழ்க்கையாகிப் போனது. பள்ளிப் படிப்பிலிருந்து செய்யும் வேலை வரை பெரிதாய் எதையும் நிறுத்த முடியவில்லை. சாதிக்க வேண்டாம். சாய்ந்து விடாமல் நின்றால் போதும். தையல் தொழில் கற்றுக்கொண்டது மட்டுமே பிசகில்லாத ஒன்று. அதை முன்னிறுத்தவும் தனக்குத் தெரியவில்லை. ஆனந்தனது கடையைப் போலவே வீட்டின் திண்ணையில் தட்டி மறைத்து கடை போட்டான். விழாக் காலங்களில் வாடிக்கையாளரைத் தக்க வைக்க புதுசாய் ஏதும் செய்யாதது அவனது பெருங்குறை. அந்தக் குறையும் சாந்தி வந்த பிறகுதான் உறைத்தது. அதற்குள் காலம் எங்கோ பயணித்துவிட்டது. சாந்தியின் தூண்டுதலால் அவளது நகையை வைத்து கடையை பஜார் தெருவுக்கு மாற்றிய காலத்தில் அடுத்த அலையும் வந்துவிட்டது.

தேனியில் ஆயத்த ஆடைக் கடைகள் மழைக் காளான்களாய் அங்கங்கே முளைக்கத் தொடங்கிவிட்டன. தையல் கூலியை விடவும் மலிவு விலையில் வெறும் நாற்பது ரூபாய்க்கு குமார்ஸ் சட்டைகள், நூற்றி ஐம்பது ரூபாய்க்கு ஜீன்ஸ் பேண்ட்கள்.

டெய்லர்கள் தூக்கில் தொங்கிய தீபாவளி அந்த வருஷம்தான் அரங்கேறியது. பெரிய செலவுகள் ஏதும் இல்லாத, சீசனுக்கு சீசன் கடையை விரிவுபடுத்தும் ஆவலாதி கொள்ளாத நபர்களால் மட்டுமே மூச்சுவிட முடிந்தது. 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

கூடுதலாய் ஒரே ஒரு மிசினை மட்டும் வாங்கி விழாக் காலங்களில் சம்பள ஆள் கிடைத்தால் ஓட்டுவதும், இல்லையெனில் வாடகைக்குத் தந்துவிடுவதுமாய் நெருப்பில் நீந்திக் கொண்டிருந்தான் கமலக்கண்ணன். 

நல்ல வேளையாய் ஆட்டோ வாங்குவதற்கான கடன் திட்டம் ஒன்று நபார்டு வங்கியில் அமைந்தது. ஒழிந்த நேரம் ஆட்டோ ஓட்டியும், சவாரி இல்லாத நேரம் தையல் வேலை பார்த்தும் நாளும் பொழுதும் கழிந்தன. என்னதான் ஆட்டோ ஓட்டினாலும் டெய்லர் எனும் அடையாளம் மாறாதிருந்தது. காலமாற்றத்தில் ஒரு பேண்ட் சட்டை தைத்தால் செலவு போக கணிசமான தொகை கிடைத்தது. ஆனால், மெனக்கெடலும் கவனமும் முக்கியம். 

அந்த வகையில் இந்த வருடத் தீபாவளியைச் சந்திக்க முதல் வேலையாய் கேசவனை வேலைக்கு அமர்த்தினான். மூவாயிரம் சம்பளம் கேட்டான். “ஜவுளிக்கடைக்குக் கூப்பிடுறாங்கண்ணே. அஞ்சாயிரம் தராங்கலாம். பெரியவங்களுக்கு டெய்லி முன்னூறு தராங்கண்ணே” என பேரம் பேசினான். 

ஆனந்தனிடம் இருபத்தைந்து ரூபாய் சம்பளத்துக்குப் போன கதையைச் சொல்ல மனசில்லை. ஒப்புக்கொண்டான். தினத்துக்கு நாலு அல்லது ஐந்து செட் பேண்ட் சட்டை தைத்தால் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடலாம். தீபாவளி வரை சில்லரை உருப்படிகள் வாங்காமல் தொடாமல் இருந்தால் பழைய பெயரை அழித்து மீண்டுவிடலாம் என சாந்தியும் சொல்லியிருந்தாள். 

ஆனால் தினமும் யாராவது ஓராள் வந்து தன்னை ஏமாற்றுகிறான். நினைக்கையில் மனம் குறுகிப்போனது.

நேற்றைக்கும் இதே கதைதான். காலை வேலைகளை ஒழுங்குபடுத்திவிட்டு ஒரு பேண்ட்டை எடுத்து கட்டிங் டேபிளில் நின்று வெட்டத் தொடங்கினான்.

“வணக்கம் தலைவா. நல்லாருக்கீகளா?”

டிப்டாப்பாக முகத்தில் பவுடர் வாசனையுடன் வந்தார். தபால் அலுவலக ஊழியர் கணேசன். உடன் வந்தவர், அவரைவிட வயதானவராகவும் ஒப்பனை மிக அதிகமாகப் பூசியவராகவும் இருந்தார். 

“நம்ம போஸ்ட் மாஸ்டர்.” வந்தவரை அறிமுகம் செய்வித்தார்.

பரஸ்பர வணக்கங்கள் ஆகின.

ஏற்கெனவே ஒருமுறை பேண்ட் சட்டை தைக்க வந்திருக்கிறார். ஒரு செட் துணிக்குத் தேனியில் எழுநூறு ரூபாய் வாங்க, ஐநூற்று ஐம்பது மட்டும் கொடுங்கள் என்று கூலி பேசி, துணி வாங்கும்போது ஐநூறுதான் கொடுத்தார். “அடுத்து நெறையா கஸ்டமரக் கொண்டுவரேன் சார்” எனச் சொன்னார். 

வந்தவர், “தேனி எல்டெக்ஸில்தான் தைக்கக் கொடுப்பாராம். இந்த வட்டம் சார்ட்ட குடுங்க. டிச்சிங் ப்ரம்மாதமா இருக்கும். கூலியும் ச்சீப்போ சீப். இதே கடைய, சார் சிட்டில போட்டிருந்தார்னா சூப்பராப் போகும்.” உள்ளம் குளிரப் பேசினார். 

“இந்தத் தீவாளி முழுசா ஒங்ககிட்டதான்ணே” எனப் பல்லிளித்தார். 

“சந்தோசம்ணே” என்ற கமலக்கண்ணன். “டீ சாப்டுறீங்களா” எனக் கேட்டான். 

“அய்யோ டீயெல்லா வேணாம்ணே” என இழுத்தவர், “சின்ன ஆல்ட்ரேசன். ஒரு பத்து நிமிச வேலை” எனப் பைக்குள் கைவிட்டான். 

“ஸாரி சார். தீபாளி முடியட்டும் பாத்துக் குடுக்கறேன். உள்ள வைங்க. தப்பா எடுத்துக்காதீங்க.” வெளியே எடுக்கவிடாமல் பேசினான். 

“இல்லங்க, அஞ்சு நிம்ச வேலதான். லேசா ஒரே ஒரு தையல்தான். நீங்களே பாருங்களேன். பைசா வாங்கிக்கங்க” என்றார் போஸ்ட் மாஸ்டர்.

“பைசாவுக்காக அண்ணே பேச மாட்டார்” என்று தனக்காகப் பேசுவதாக நடித்த கணேசன், துணியைக் காண்பிப்பதுபோல டர்ர்ரெனக் பிரி(கிழி)த்து விட்டார்.

“அய்யோ, ஸாரி சார். மன்னிக்கணும்.”

என்ன செய்ய? ஒரு மணிநேரம் வேலை வாங்கிவிட்டது. 

போகும்போது, “இன்னம் நெறையா கஸ்டமரக் கொண்டுவரேன் சார்” எனச் சொன்னார்.

“என்னா காமு, இன்னிக்கி இம்புட்டு கோவம்?” சவுண்டு ஆச்சர்யமாய்க் கேட்டார்.

“பாவம்ணே அந்தக் கலியாணப் பொண்ணு! ஜாக்கட்டத் தச்சுக் குடுத்துருக்கலாம்.” 

கேசவன் சொன்னதும் கமலக்கண்ணனுக்கு மனசெல்லாம் நொறுங்கிப் போனது.