அத்தியாயம் 1

43.42k படித்தவர்கள்
16 கருத்துகள்

விநோதத் திருட்டு

முதலியாரே! நானும் எத்தனையோ ஊர்களைப் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் இந்தச் சென்னைப் பட்டணம் கெட்டதுபோல, இவ்வளவு அதிகமாக, வேறே எந்த ஊரும் கெடவில்லை. ஐயா! திருட்டு, புரட்டு, சூது, வாது, மோசம், நாசம், அநாசாரம், விபசாரம் முதலிய சகலமான அக்கிரமங்களும் இந்த ஊரிலே தான் உற்பத்தியாகின்றன. ஜாதி கிடையாது; சமயம் கிடையாது; நாணயமென்பது மருந்துக்கும் அகப்படாது. பணம், பணம், பணம் என்று பகலிலும் ராத்திரியிலும் தியானம் செய்து, அந்தப் பெரும் பேய்க்கே அடிமையாகி, ஈவிரக்கம், பச்சாதாபம், தயை, தாக்ஷணியம், தானம், தருமம் முதலிய நற்குணங்களுக்கு எல்லாம் கொஞ்சமும் இடங்கொடாமல், கேள்விமுறையில்லாமல், அவனவன் நினைத்தபடி அக்கிரமம் செய்கிறதும், கண்ணுக்கு எதிரிலேயே ஒருவனுடைய பொருளை இன்னொருவன் அபகரித்து விடுகிறதும், எப்படிப்பட்ட புத்திசாலிகளையும் ஒரு நொடியில் ஏமாற்றி விடுவதும், வேறே எந்த இடத்திலேயாவது நடக்கக்கூடிய விஷயங்களா? 

இன்றைய தினம் காலையில் சுமார் எட்டு மணி சமயத்தில் சைனா பஜார் தெருவில் ஓர் அக்கிரமம் நடந்திருக்கிறது! ஆகா! அதை என்னவென்று சொல்லுவேன்! இந்த ஊரில் அந்தத் தெருவிலே தான் ஜனங்கள் எப்போது பார்த்தாலும் தேர்க்கூட்டம், திருவிழாக் கூட்டம்போல நிறைந்து, தேனடையில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருப்பது போல இருப்பார்கள். அந்த இடத்துக்கு ஓர் அடி தூரத்திலே தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது; கடைக்குக் கடை போலீஸ் புலிகள் மீசைகளை முறுக்கிவிட்டுக்கொண்டு கையும் தடியுமாக நின்றுகொண்டிருக்கிறார்கள். எல்லாருடைய கண்ணுக்கும் எதிரில் பட்டப்பகலில் இவ்வளவு பெரிய காரியம் நடந்திருக்கிறதே! இந்த ஆச்சரியத்தை என்னவென்று சொல்லுகிறது!” என்று டிராம் வண்டியில் போய்க்கொண்டிருந்த ஒரு நாயுடு, தமக்கெதிரில் உட்கார்ந்திருந்த ஒரு முதலியாரைப் பார்த்து மிகுந்த வியப்போடு கூறினார்.

அதைக் கேட்ட முதலியார் தமது வாயில் வைத்திருந்த சுருட்டை அப்புறம் இப்புறம் திருப்பி, அதன் முனையிலிருந்த சாம்பலைத் தமது சுண்டுவிரலில் நகத்தால் தட்டிவிட்டு, புப், புப், என்று இரண்டு முறை இழுத்தபின் சுருட்டைக் கையிலெடுத்துக்கொண்டு, நிதானமாகப் புகையை வெளியில் விடுத்தவராய் நாயுடுவை நோக்கி அலட்சியமாகப் பேசத் தொடங்கி, “ஆமைய்யா! நீர் பேசுவீர். ஊரை அடித்து உலையில் போடுவது போல, ஏழை ஜனங்களுடைய வரிப்பணத்தையெல்லாம் பிடுங்கி, இந்த கவர்ன்மெண்டு ஆபீசில் மாதம் பிறந்தால் உமக்கு இருநூறு முன்னூறு சம்பளம் கொடுத்து விடுகிறார்கள். உமக்கு என்ன கஷ்டம் தெரியப்போகிறது! 

உமக்குக் கொடுக்கிறதுபோல, ஒவ்வொருவனுக்கும் யாராவது பணம் கொடுத்துக்கொண்டிருந்தால், ஒருத்தனும் திருடவும் மாட்டான்; உம்மைப் போலவே ஒவ்வொருத்தனும் மற்றவர்களுக்கு நீதி போதித்துக்கொண்டுதான் இருப்பான். போமையா போம். இதெல்லாம் என்ன பேச்சு! ஊரினுடைய நிலையைத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிற பேச்சு உப்புக்காகுமா புளிக்காகுமா! ஜனங்கள் பிழைக்க மாட்டாமல் தத்தளிக்கிறார்கள். பணம் இருக்கிற இடமோ தெரியவில்லை. மனிதன் தனக்கு வேண்டிய சோற்றுக்கும் துணிக்கும் பணம் செலவழிப்பதன்றி, அவன் உள்ளே இழுக்கும் மூச்சுக்காற்றுக்கும், குடிக்கும் தண்ணீருக்கும், நடக்கும் பாதைக்கும்கூட பணம் கொடுக்கவேண்டியிருக்கிறது. ரூபாய் ஒன்றுக்கு இரண்டரைப் படி அரிசி கிடைப்பதுகூட அருமையாக இருக்கிறது. மனிதன் எந்தப் பக்கம் திரும்பினாலும் பணத்தை நீட்டிக்கொண்டே திரும்பவேண்டி இருக்கிறது. இதற்குமுன் ஒரு ரூபாய் கொடுத்த சங்கதிக்கு இப்போது மூன்று ரூபாய் கொடுத்தாலும் ஒன்றுக்குப் பாதிதான் கிடைக்கிறது. குழந்தை குட்டிகளோ வஞ்சனையில்லாமல் பிறந்துகொண்டே இருக்கிறார்கள். ஜனங்கள் சாகவும் மாட்டாமல் பிழைக்கவும் மாட்டாமல் தவிக்கிறார்கள். அவர்கள் நியாயமான வழியில் சம்பாதிக்கிற சம்பாத்தியம் கால் வயிற்றுக்குக்கூட வருகிறதில்லை. அப்படியிருக்க, திருடாமலும், பொய் சொல்லாமலும், மோசம் செய்யாமலும் வேறே எப்படித்தான் காலக்ஷேபம் செய்கிறது!” என்று மிகுந்த ஆத்திரத்தோடு பேசினார்.

அதைக் கேட்ட நாயுடு, முதலியாரைப் புரளி செய்பவர் போல, வார்த்தைகளை நீட்டி நீட்டிப் பேசத் தொடங்கி, “அப்படியா! முதலியார் சொன்னது நூற்றில் ஒரு பேச்சு! ஜனங்களெல்லாரும் பிழைக்க மாட்டாமல் தவிக்கிறார்களோ!! ஒவ்வொருவனும் செய்கிற அநாவசியச் செலவுகளைப் பார்த்தால், ஜனங்கள் தவிக்கிறதாக யாரும் சொல்லவே மாட்டார்கள். இந்த ஊருக்குள் 15-நாடகக் கொட்டகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும், தினமொன்றுக்கு ஆயிரம் ஆயிரத்தைன்னூறு ரூபாய் வசுலாகிறது! பயாஸ்கோப் நடக்கும் இடங்கள் சுமார் 7, 8 இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிலும் தினம் இரண்டு, அல்லது மூன்று காட்சிகள் காட்டப்படுகின்றன. ஒவ்வோர் இடத்திலும் ஒரு நாளைக்குச் சுமார் ஆயிரம் ரூபாய் வசூலாகிறது. அதுவும் தவிர, இந்த ஊரில் வேசிகளும், தாசிகளும் சுமார் இருபதினாயிரம் பேர் இருப்பார்கள். அத்தனை பேருக்கும் நாளொன்றுக்கு ரூபாய் ஐந்து முதல் இருபது வரையில் வருமானம் கிடைக்கலாம். 

இன்னம் சூதாடும் இடங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அவைகளில் ஒவ்வொரு தினத்திலும் கையாளப்படும் பணத் தொகையோ கணக்கில் அடங்காததாக இருக்கிறது. சிவில் கோர்ட்டுகளிலும், மாஜிஸ்டிரேட்டின் கச்சேரிகளிலும், மிட்டாய்க் கடைகளிலும், கள்ளு சாராயக் கடைகளிலும் வெள்ளைக்காரர்களுடைய கம்பெனிகளிலும், ஒவ்வொரு நாளிலும் செலுத்தப்படும் கப்பப் பணத் தொகைகளை ஓர் ஆற்றின் ஜலத்துக்கு சமமாகச் சொல்லலாம். இப்படியெல்லாம் நூற்றுக்கணக்கான கெட்ட வழிகளில் ஒவ்வொரு நாளும் இந்த ஊரிலுள்ள ஜனங்களால் அநாவசியமாக அழிக்கப்படும் பணத்தொகைகளைக் கணக்கிட்டால், அது எத்தனையோ லக்ஷக்கணக்கில் ஆகும். அப்படி இருக்க, ஜனங்கள் பிழைக்க மாட்டாமல் தவிக்கிறார்கள் என்று சொல்ல வந்துவிட்டார் முதலியார்; நியாயமான வழியில் சம்பாதித்து, அவசியமான செலவுகளை மாத்திரம் செய்துகொண்டு காலந் தள்ளுகிற யோக்கியமான ஜனங்கள் சிலர் இருக்கிறார்கள். 

அவர்கள் இப்படித் திருட்டிலும், புரட்டிலும் இறங்குகிறதே இல்லை. ஆனால் வரவுக்கு மிஞ்சிய செலவு செய்து, கூத்துக்கும் கூத்திக்கும், குடிக்கும் கொடுப்பதற்காக, இப்படிப்பட்ட மோசங்களில் இறங்குகிற சோம்பேறிகள்தான் பெரும்பாலோராகப் பெருகிவிட்டார்கள். இதில் இன்னொரு விசேஷம் இருக்கிறது. ஒரு மிருக காட்சிச் சாலையில் எத்தனையோ வகையான மிருகங்களை எல்லாம் பிடித்து அடைத்து வைத்திருப்பதுபோல, இந்த ஊரில் எத்தனை ஜாதி மனிதர்கள் இருக்கிறார்கள் தெரியுமா! இங்கிலீஷ்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள், ஜப்பானியர்கள், சைனாக்காரர்கள், பர்மாக்காரர்கள், மலாயிதேசத்தார், அராபியர்கள், காபூலிகள், பஞ்சாபியர்கள், வங்காளத்து பாபுகள், பம்பாயிக்காரர்கள், பார்சீ ஜாதியார்கள், குஜராத்திகள், மார்வாரிகள், கொங்கணர், மலையாளத்தார், தெலுங்கர்,  செளராஷ்டிரர், கன்னடர், தமிழர், துருக்கர் முதலிய சகலமான ஜாதி ஜனங்களும், இந்த ஊரில் இருக்கிறார்கள். எல்லாத் தேசத்திலும் உள்ள திருட்டுகளும் புரட்டுகளும் சாமர்த்தியங்களும் இந்த ஊரில் வந்து அற்றுப் போகின்றன. அதனாலேதான் இந்த ஊருக்கு அயோக்கியத்தனத்தில் இவ்வளவு பெருத்த கீர்த்திப் பிரதாபம் ஏற்பட்டிருக்கிறது” என்றார்.

முதலியார் தமது வாதத்தை நிறுத்தினாலும் வாயிலிருந்த சுருட்டை மாத்திரம் இலேசில் விடுகிறதில்லை என்று சொல்லுகிறவர்போல, அதைத் தமது பல்வரிசைகளினிடையில் வைத்து இடுக்கிக்கொண்ட வண்ணம் வழவழ கொழகொழ வென்று வார்த்தைகளை உபயோகப்படுத்தி மிகுந்த ஆத்திரம்கொண்டவர் போலத் தமது கைகளை நீட்டி நீட்டிப் பேசத் தொடங்கி, “அடே என்ன ஐயா இவர் இப்படிப் பேசுகிறார்! வீட்டுக்கு வீடு வாசல் இருக்கிறதைய்யா! திருடர்களும் மோசக்காரர்களும் இந்த ஊரில் மாத்திரந்தான் இருக்கிறார்களோ? மற்ற ஊர்களில் இல்லையோ? வெளியூர்களில் ஆயிரம் ஜனங்களுக்கு, ஐம்பது பேர் அயோக்கியர்கள் இருக்கிறார்கள். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

இந்த ஊரில் ஆறு லக்ஷம் ஜனங்களுக்கு முப்பதாயிரம் பேர் அயோக்கியர்கள் இருக்கிறார்கள். கணக்கு சரியாகத்தானே போகிறது; வெளியூர்களில் மனிதர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் ராத்திரி காலங்களில் கன்னக்களவும், வழிப்பறியும், மாடு பிடியும் நடந்தால், இங்கே பகற்காலங்களில் விழித்திருக்கும் போதே ஒருவரையொருவர் ஏமாற்றுகிறார்கள். எது ஆண்மைத்தனமான திருட்டு? ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் உடனுக்குடனே பகிரங்கப்படுத்த வெளியூர்களில் பத்திரிகைகள் இல்லை; இந்த ஊரிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் இடத்தை நிரப்புவதற்காக, இந்த விஷயங்களை எல்லாம் உடனுக்குடனே அச்சடித்து வெளிப்படுத்தி விடுகின்றன. அவ்வளவுதான் வித்தியாசம். அதனாலே தான் இந்த ஊருக்கு இவ்வளவு கீர்த்திப்பிரதாபம் ஏற்பட்”டிருக்கிறது" என்று கூறினார்.

அப்போது, அவர்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த ஒரு செட்டியார் புன்சிரிப்போடு நாயுடுவை நோக்கி, “ஐயோ நாயுடுகாரு! யாரோ அயோக்கியர்கள் என்னவோ காரியம் செய்துவிட்டால், அதைப்பற்றி நீங்கள் ஏன் சண்டைபோட்டுக்கொள்ளுகிறீர்கள்? அதோடு விடுங்கள். சைனாபஜார் தெருவில் ஏதோ திருட்டு நடந்ததாகப் பேசிக்கொண்டீர்களே அதன் விவரம் என்ன? நான் ஒரு வேலையாக சைதாப்பேட்டைக்குப் போய்விட்டு இப்போதுதான் வருகிறேன். எங்கே பார்த்தாலும் ஜனங்கள் கூடிக்கூடி நின்று இதே பேச்சாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விஷயம் இன்னதென்பது எனக்கு விளங்கவில்லை” என்றார்.

உடனே நாயுடு சாந்தமடைந்தவராய் செட்டியாரைப் பார்த்து, “அந்த வேடிக்கையை என்னவென்று சொல்லுகிறது! அடடா! திருடர்கள் எப்படிப்பட்ட அதிசயமான தந்திரம் செய்திருக்கிறார்கள் தெரியுமா! நினைக்க நினைக்க மகா ஆச்சரியமாக இருக்கிறது! சைனா பஜாரிலும் அதற்குப் பக்கத்திலுள்ள செளகார்பேட்டையிலும் கோடீஸ்வரர்களான எத்தனையோ வியாபாரிகளும் முதலாளிகளும் இருக்கிறார்கள். அந்த இடத்துக்குக் காலை எட்டு மணிக்கு ஒரு தபாற்காரன் வருகிறது வழக்கம். அவன்கொண்டுவரும் மணியார்டர் தொகை மாத்திரம் ஒரு சுமார் இருபதினாயிரம் ரூபாய் இருக்கும்; அது தவிர, விலையுள்ள நகைகளும், பெருத்த பெருத்த நோட்டுகளும் வைத்து ரிஜிஸ்டர், இன்ஷியூர் முதலிய செய்யப்பட்ட கடிதங்களும் ஏராளமாக வரும்; அந்த இடம் ஜனங்கள் நிறைந்த நல்ல பந்தோபஸ்தான இடமாகையால், தபால் இலாகாதாரர்கள், ஒரே ஒரு தபாற் சேவகனிடத்திலே தான் அவ்வளவு விலையுயர்ந்த உருப்படிகளையும் கொடுத்து அனுப்புவது வழக்கம். அந்த ஏற்பாடு நெடுங்காலமாக நடந்து வருகிறது. 

அந்தத் தபாற்காரனுக்கு எவ்வித அபாயமும் நேர்ந்ததில்லை. இன்று காலையில் அந்தத் தபாற்காரன் ஏராளமான மணியார்டர் பணத்தையும், இன்ஷியூர், ரிஜிஸ்டர்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டு அவைகளைப் பட்டுவாடா செய்துகொண்டிருந்தவன் திடீரென்று காணப்படவில்லை. அவன் தனது வேலையை முடித்துக்கொண்டு மறுபடி பகல் 111/2 மணிக்குத் தபாற்சாலைக்குப் போக வேண்டியது கட்டாயமான ஏற்பாடு. அங்கேயும் அவன் போய்ச் சேரவில்லை. தபாற்சாலையில் அதிகாரி 12-மணி, 1-மணி வரையில் பார்த்துவிட்டு, மிகுந்த கவலையும் கலக்கமும் அடைந்து, தமது சிப்பந்திகளையெல்லாம் அனுப்பி, அந்தச் சேவகன் போகவேண்டிய இடம் முழுவதிலும் தேடிப்பார்க்கச் செய்தார். காலையில் வந்தவன், ஆரம்பத்திலுள்ள நாலைந்து வீடுகளுக்கு மாத்திரம் மணியார்டர் முதலியவற்றைக் கொடுத்ததாகவும் அதற்குமேல் எவருக்கும் பட்டுவாடா செய்யவும் இல்லை, அப்புறத்தில் வரவும் இல்லை என்று சிலர் சொல்லக் கேள்வியுற்ற சிப்பந்திகள் திரும்பிவந்து அந்த விவரத்தைத் தபாற்சாலை அதிகாரியிடத்தில் தெரிவித்தனர்.

“அதைக்கேட்ட தபாற்சாலையின் அதிகாரி மிகுந்த திகிலும் திகைப்பும் அடைந்து உடனே போலீஸ் அதிகாரிகளுக்கும், தமது மேலதிகாரிகளுக்கும் அறிக்கை செய்துகொள்ள, உடனே போலீஸ் அதிகாரிகளும், தபால் இலாகா அதிகாரிகளும் வந்து கூடினர். அவ்வாறு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டரும் தபால் இலாகா இன்ஸ்பெக்டர்களும் அந்தத் தபாற் சாலையின் போஸ்டு மாஸ்டர், குமாஸ்தா முதலியோருடைய வாக்குமூலங்களை வாங்கிக்கொண்டதன்றி, இன்றைய தினம் யார் யாருக்கு மணியார்டர், இன்ஷியூர் முதலிய உருப்படிகள் வந்திருந்தன என்பதற்கும் ஒரு ஜாப்தா வாங்கிக்கொண்டனர்; அந்த இடத்தில் பட்டுவாடா செய்து பழகிய வேறொரு தபாற்காரனிடத்தில், அந்த ஜாப்தாவைக் கொடுத்து அவன் எந்த வரிசையாகப் பட்டுவாடா செய்துகொண்டுபோவானோ, அந்த வரிசையாகவே தங்களை அழைத்துக்குகொண்டு போகும்படி சொல்ல, அவன் அந்த ஜாப்தாவில் குறிக்கப்பட்ட மணியார்டர் முதலியவைகளை வரிசையாக எப்படி கொடுத்துக்கொண்டு போவானோ அப்படியே அவர்களை அழைத்துக்கொண்டு போனான். அப்படியே அவர்கள் நாலைந்து வீடுகளுக்குப் போய், அன்றைய தினம் வந்திருந்த உருப்படியை அந்தந்த விலாசதார் வாங்கிக்கொண்டாரா என்பதை விசாரித்துக்கொண்டே போனார்கள். 

ஐந்தாவது விலாசதாரின் வீடுவரையில் யாவரும் தத்தம் உருப்படிகளை வாங்கிக்கொண்டதாக ஒப்புக்கொண்டனர். போலீசாரும் மற்றவரும் இன்னமும் அப்பால் நடந்து ஆறாவது விலாசதாருடைய வீட்டுக்குப் போனார்கள். அந்த வீடு விசாலமான இரண்டு கட்டுகளுள்ள பெருத்த மெத்தை வீடு. அதன் வாசற்கதவு மூடி வெளியில் பூட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டின் கதவில் 1525 என்ற இலக்கம் காணப்பட்டது. அந்த விலாசதாருக்கு அன்றைய தினம் 10 ரூபாய்க்கு மணியார்டர் வந்திருந்தது. அந்த விலாசதாருடைய பெயர் கந்தசாமி முதலியார் என்று அவர்களுடைய ஜாப்தாவில் இருந்தது. ஆகவே, அந்த வீட்டிலிருந்த கந்தசாமி முதலியார் அந்த வீட்டின் கதவை மூடிப் பூட்டிக்கொண்டு எப்போது வெளியிலே போனாரென்பதையும், எப்போது திரும்பி வருவார் என்பதையும் அறிந்துகொள்ளும் பொருட்டு, போலீசார் அண்டை வீட்டுக்கார்களை அழைத்து, கந்தசாமி முதலியாரைப் பற்றிய விவரங்களைக் கேட்க, அவர்கள் தமக்கொன்றும் தெரியாது என்று சொன்னதோடு அந்த வீடு காலியாகி ஒரு மாச காலமாகப் பூட்டப்பட்டிருந்ததாகவும், நேற்றைய தினம் யாரோ ஒருவர் அதைத் தாம் வாடகைக்கு எடுத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லிக்கொண்டு கதவைத் திறந்து கொஞ்சநேரம் உள்ளே இருந்துவிட்டுப் போனதாகவும், மறுபடி இன்றைய தினம் காலையில் கதவு திறந்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பிறகு கதவை எப்போது, யார் பூட்டினார்கள் என்பது தங்களுக்குத் தெரியாதென்றும், தபாற்காரன் அந்த வீட்டில் மணியார்டர் பட்டுவாடா செய்தானா இல்லையா என்பதைத் தாங்கள் கவனிக்கவில்லை என்றும் சொன்னார்கள்.

“அதைக்கேட்ட போலீசார் அந்த வீட்டைப் பற்றிய விசாரணையை அவ்வளவோடு நிறுத்தி வைத்துவிட்டு, அதற்கு அப்பால் இருந்த விலாசதார்களிடம் போய், அவர்கள் தத்தம் உருப்படிகளை வாங்கிக்கொண்டார்களா என்பதை விசாரிக்க, அவர்கள் எல்லோரும், தபாற்காரன் தங்களுடைய ஜாகைக்கு வரவில்லை என்றும்; தபாற்காரனையே தாங்கள் இன்றைய தினம் பார்க்கவில்லை என்றும் சொல்லிவிட்டார்கள், ஆகவே, முதலில் விசாரிக்கப்பட்ட ஐந்து விலாசதார்களுக்கு மாத்திரமே உருப்படிகள் பட்டுவாட செய்யப்பட்டிருந்தன என்றும், அதற்குமேல் பட்டுவாடா செய்யப்படவில்லை என்றும் அவர்கள் நிச்சயப்படுத்திக்கொண்டார்கள். ஆகையால், ஐந்தாவது விலாசத்துக்குச் சம்பந்தப்பட்ட வீட்டுக்கும் ஆறாவது விலாசத்துக்குச் சம்பந்தப்பட்ட வீட்டுக்கும் இடையில் தபாற்காரன் ஒருகால் பணத்தொகையோடு ஓடிப்போயிருக்க வேண்டும், அல்லது, அவனுக்கு ஏதாவது விபத்து நேர்ந்திருக்க வேண்டும் என்பது நிச்சயமாயிற்று. அந்த இடத்தில் ஏதாவது சந்து, அல்லது தெரு குறுக்காகப் போகிறதா என்பதைப் போலீசார் கவனித்தனர். எதுவும் போகவில்லை. தபாற்சேவகன் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிப்போக நினைத்திருந்தால், ஐந்து விலாசம் வரையில் வந்து பட்டுவாடாச் செய்த பின் திரும்பிப் போகாமல் ஆரம்பத்திலேயே போயிருப்பது சுலபமானது ஆகையால், அவனே ஓடியிருக்க மாட்டான் என்றும், பிறராலேதான் அவனுக்கு அபாயம் நேர்ந்திருக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு ஒருவகையான சந்தேகம் உண்டாயிற்று; ஆகையால், அவர்கள் ஐந்தாவது விலாசதாரிடம் மறுபடி ஒருமுறை போய் அவனிடத்திற் பற்பல கேள்விகளை நன்றாகக் கேட்டு, அவனிடத்திலிருந்த மணியார்டர் கூபனை வாங்கிப் பார்த்தனர். அவ்விடத்தை விட்டபின் தபாற்காரன் அடுத்த வீட்டுக்குள் போனான் என்பதையும், அந்த விலாசதாரிடத்தில் போலீசார் அறிந்துகொண்டனர். ஆகவே, அடுத்த வீடாகிய ஆறாவது விலாசதாரைக் கண்டு விசாரித்தே தீர வேண்டுமென்று உறுதி செய்துகொண்ட போலீசாரும் மற்றவர்களும் அந்த வீட்டிற்குப் போய் வாசல் திண்ணையில் உட்கார்ந்து, கந்தசாமி முதலியாருடைய வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். 

அவ்வாறு ஒருமணி நேரம் கழிந்தது. அப்போதும் கந்தசாமி முதலியார் திரும்பி வரவில்லை. அதற்குள் போலீசாருக்கு இன்னொரு யோசனை தோன்றியது. அந்த வீட்டின் சொந்தக்காரர் யார் என்பதை விசாரித்து அறிந்துகொண்டு அவரிடத்தில் போய்க் கேட்டு கந்தசாமி முதலியாருக்கு என்ன தொழில், அல்லது உத்தியோகம் என்பதை அறிந்துகொண்டால், அவர் போயிருக்கும் இடத்தை அறிந்துகொள்ள அநுகூலப்படு மென்று நினைத்தவர்களாய் அந்த வீடு யாருடையது என்பதை விசாரிக்க, அது பக்கத்துத் தெருவிலிருந்த நம்பெருமாள் செட்டியார் என்ற ஒரு வர்த்தகருடைய வீடு என்பது தெரிந்தது. உடனே ஒரு சப் இன்ஸ்பெக்டரும் சில ஜெவான்களும் ஒரு தபால் இன்ஸ்பெக்டரும் நம்பெருமாள் செட்டியாருடைய வீட்டுக்குப் போய் அவரை விசாரிக்க, அவர், “ஐயா, அந்த வீடு ஒரு மாச காலமாகக் காலியாக இருந்தது. 

நேற்றைக்கு முந்திய நாள் ஒருவர் வந்து, தாம், கோயம்புத்தூரிலுள்ள ஒரு பெரிய மிராசுதாரென்றும், தம்முடைய பெயர் கோபாலகிருஷ்ணப் பிள்ளை என்றும், தாம் மூன்று நாள்கள் வரையில் தங்கியிருந்து பட்டணத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் போகவேண்டும் என்று சொல்லி, அதற்காகப் பதினைந்து ரூபாய் வாடகை கொடுத்தார். அவர் இன்று சாயங்கால ரயிலில் ஊருக்குப் போவதாகச் சொல்லியிருந்தார். ஆனால், ஏதோ அவசரமான ஒரு தந்தி வந்தது என்று சொல்லி இன்றைய தினம் காலையிலேயே அவர் போய்விட்டாராம். வீட்டின் திறவுகோலை ஓர் ஆள்கொண்டுவந்து என்னிடத்தில் கொடுத்துவிட்டுப் போனான்” என்று சொன்னார். 

அந்த வரலாற்றைக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர் அந்த வீட்டின் திறவுகோலுடன் செட்டியாரை அழைத்துக்கொண்டு சைனாபஜார் தெருவில் இன்ஸ்பெக்டர் முதலியோர் இருந்த வீட்டண்டை வந்து சேர்ந்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் நம் பெருமாள் செட்டியார் சொன்ன வரலாறுகளைக் கேட்கவே, அவரது மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டவருடைய பெயர் கோபால கிருஷ்ணப் பிள்ளை என்று செட்டியார் சொல்ல, மணியார்டரில் கந்தசாமி முதலியார் என்று குறிக்கப்பட்டிருந்த அந்த வேறுபாடு மிகவும் சந்தேகாஸ்பதமாக இருந்தது. உடனே இன்ஸ்பெக்டர் செட்டியாரை நோக்கி அந்தக் கோபால கிருஷ்ணப் பிள்ளையின் அங்க அடையாளங்களை எல்லாம் கேட்டறிந்துகொண்ட பின், முதல் நாள் வந்து ஒரு மனிதர் அந்த வீட்டைத் திறந்ததாகச் சொன்ன அண்டை வீட்டாரை அழைத்து அந்த மனிதருடைய அங்க அடையாளங்களைக் கேட்க, அவர்கள் சொன்னதும் செட்டியார் சொன்னதும் ஒரே மனிதனுடைய அடையாளங்களாகவே இருந்தன. அவ்வாறு அவர்கள் விசாரணை செய்துகொண்டிருக்கையில் நம்பெருமாள் செட்டியார் கதவின் பூட்டை விலக்கிக் கதவைத் திறந்தார். உடனே ஒரு ஜெவான் உள்ளே நுழைந்து பார்க்கப் போனான்; அதற்குள் இன்ஸ்பெக்டர் தந்தியாபீசுக்கு ஒரு ஜெவானை அனுப்பி அந்த மூன்று தினங்களுக்குள் கோபாலகிருஷணப்பிள்ளை என்பவருக்காகிலும், கந்தசாமி முதலியார் என்பவருக்காகிலும் ஏதாவது தந்தி வந்ந்திருக்கிறட்தா வென்று பார்த்துவிட்டு வரும்படிச் சொல்ல, அவ்வாறே அவன் போய்விட்டுத் திரும்பிவந்து, அப்படிப்பட்ட தந்தியே வரவில்லையென்று சொன்னான். அதைக் கேட்ட போலீசாரும் தபால் இலாகாதார்களும் மிகுந்த கலக்கமும் குழப்பமும் அடைந்து தபால்காரன் எப்படித்தான் போயிருப்பான் என்று சிந்தித்தவர்களாக இருந்தனர். 

அந்தச் சமயத்தில், வீட்டின் இரண்டாவது கட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த ஜெவான் பெருத்த கூச்சலிட்டு, “ஐயா ஐயா! வாருங்கள் வாருங்கள்; தபாற்காரன் இதோ கிடக்கிறான்” என்று கூவியழைக்க, அதைக்கேட்ட யாவரும் விவரிக்கவொண்ணாத திகிலும், நடுக்கமும், கலக்கமும் அடைந்து உள்ளே ஓடினார்கள். முதல் கட்டு முழுதும் காலியாக இருந்தது. இரண்டாவது கட்டில் அவர்கள் நுழைந்தவுடனே நிரம்பவும் பயங்கரமான ஒரு காட்சி எதிரில் தென்பட்டது; காணாமற் போன தபாற்காரன் அலங்கோலமாகக் கீழே விழுந்து கிடந்தான். அவனுடைய கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன. வாயில் ஒரு துணிப்பந்து செருகப்பட்டிருந்தது. 

அவனுடைய கண்களிரண்டும் மூடப்பட்டிருந்தன. அவன் பேச்சு மூச்சு அசைவு முதலிய உயிர்ச்சின்னங்களின்றிப் பிணம் போலக் கிடந்தான். அவனுடைய தோல் பையும், ஏராளமான கடிதங்களும் மணியார்டர் நமூனாக்களும் (பாரங்கள்) அந்த இடம் முழுதும் தூறுமாறாகக் கிடந்தன. அதைக்கண்ட யாவரும் அளவற்ற திகைப்பும், வியப்பும், பிரமிப்புமடைந்து அவனை உற்று நோக்கினார்கள். அவனுடைய மார்பு மாத்திரம் சொற்பமாக அசைந்துகொண்டிருந்ததைக் கண்டு அவன் உயிரோடிருக்கிறான் என்பதை உணர்ந்துகொண்ட சிலர் விரைவாகப் பாய்ந்து, அவனுடைய வாயிலிருந்த துணிப்பந்தையும் உடம்பிலிருந்த கட்டுகளையும் விலக்கினார்கள். வேறொருவன் பக்கத்திலிருந்த தண்ணீர் குழாயண்டை ஓடித் தனது வஸ்திரத்தைத் தண்ணீரில் நனைத்துக்கொண்டு வந்து தபால்காரனுடைய முகத்தில் ஒற்றினான். தபால் இலாகா இன்ஸ்பெக்டர்களும், சிப்பந்திகளும் அங்கே சிதறிக்கிடந்த மணியார்டர் நமூனாக்களையும் கடிதங்களையும் எடுத்து அடுக்கினார்கள். அவ்வாறு கால் நாழிகை நேரம் கழிய அந்தத் தபாற்காரன் கண்களைத் திறந்து பார்த்தான். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அவனுடைய மயக்கம் தெளிவடைந்ததாகத் தோன்றியது. இருந்தாலும் அவன் அசையமாட்டாமல் அப்படியே கிடந்து தனக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டுமென்று கையின் கட்டைவிரலால் சைகை செய்தான். உடனே ஒருவன் வெளியிலே போய் சோடாப்புட்டியொன்றைக் கொணர்ந்து உடைத்து அவனுடைய வாயில் வார்த்தான். அதன் பிறகு கால் நாழிகையில் அந்தத் தபால்காரன் களை தெளிந்து எழுந்து உட்கார்ந்து அப்புறம் இப்புறம் திரும்பித் தன்னிடத்திலிருந்த கடிதங்களையும், மணியார்டர் நமூனாக்களையும் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த போலீசாரையும் பார்த்து, “ஆள்கள் அகப்பட்டார்களா? பணமெல்லாம் இருக்கிறதா?” என்றான். அதைக் கேட்ட தபால் இலாகா இன்ஸ்பெக்டர், “அடே சொக்கலிங்கம்! என்னடா நடந்தது? யார் உன்னை இப்படிக் கட்டிப் போட்டது?” என்றார்.

அதைக் கேட்ட தபாற் சேவகன் உடனே எழுந்து மரியாதையாக நின்றுகொண்டு, “இந்த வீட்டுக் கந்தசாமி முதலியாருக்குப் பத்து ரூபாய்க்கு மணியார்டர் வந்தது. நான் வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டு கந்தசாமி முதலியார் என்பது யார் என்று விசாரித்தேன். வாசல் திண்ணையில் ஓர் ஆள் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவன் ஒரு வேலைக்காரன் போல இருந்தான்; அவன் என்னைப் பார்த்துத் தன்னுடைய எஜமானரான கந்தசாமி முதலியார் இரண்டாவது கட்டில் இருக்கிறார் என்றும், அங்கேயே நேரில் போய் மணியார்டரைக் கொடுக்கலாம் என்றும், தான் வேறொரு மனிதர் வருகிறாரா என்று பார்த்துக்கொண்டிருப்பதால், தான் இரண்டாவது கட்டுக்குப் போய்க் கந்தசாமி முதலியாரை அழைத்து வர முடியாது என்றும் சொன்னான். இவ்வளவு பெரிய வீட்டில் வேலையாளோடு இருக்கிறவர் பெரிய மனிதராக இருப்பார் என்றும், ஆகையால் அவரை வெளியில் கூப்பிடக்கூடாது என்றும் நினைத்து நானே உள்ளே வந்தேன். முதலாவதாக கட்டில் யாரும் காணப்படவில்லை. அதைத் தாண்டி இரண்டாவது கட்டுக்குள் நான் நுழைந்து தாழ்வாரத்தில் திரும்பினேன். திடீரென்று எனக்குப் பின்பக்கமாக வந்து நாலைந்து முரட்டாள்களில் ஒருவன் என்னுடைய குரவளையை இறுகப் பிடித்து நான் வாயைத் திறந்து கூச்சலிடாமல் அழுத்திக்கொண்டான். இன்னொருவன் என்னுடைய வாய்க்குள் ஒரு துணிப்பந்தைக் கெட்டியாகச் சொருகிவிட்டான்; மற்ற இரண்டுபேர்களும் என்னைப் பிடித்துக் கயிற்றால் கட்டி விட்டார்கள். அப்புறம் இப்புறம் அசையவும் பேசவும் என்னால் கூடாமல் போய்விட்டது. உடனே அவர்கள் என்னிடத்திலிருந்த பணத்தையும் கடிதங்களையும் பிடுங்கி, வெறுங் கடிதங்களையும் மணியார்டர் நமூனாக்களையும் கீழே போட்டுவிட்டு மற்றவைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு, கதவைமூடி உட்புறத்தில் தாளிட்டுக்கொண்டு போய்விட்டார்கள். 

நான் எழுந்திருக்க முயன்று பார்த்தேன். என் கால்கள் இரண்டையும் பிரிக்க முடியாமல் சேர்த்துக் கட்டியிருந்தார்கள் ஆகையால், எழுந்திருக்க முடியவில்லை. என்னுடைய தொண்டை கிழிந்து விடும்போல ஆகிவிட்டது. மூச்சுத் திணறிப் போய்விட்டது. அதற்குப் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை; இப்போதுதான் புத்தி சரிப்பட்டது” என்றான். அதைக் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த நாங்கு ஆட்களின் அடையாளங்களையும், இன்னும் தேவையான மற்ற விவரங்களையும் கேட்டறிந்துகொண்டார். தபாற் சேவகனால் கொடுக்கப்பட்ட ஐந்து மணியார்டர்களின் தொகை போக மிகுதியிருந்த இருபத்து மூவாயிரத்தைந்நூற்று நாற்பத்திரண்டு ரூபாயும், பதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள் இன்ஷியூர் சாமான்களும், 24 ரிஜிஸ்டர் காகிதங்களும் காணாமற் போனதாகக் கணக்கு எடுக்கப்பட்டது. 

கந்தசாமி முதலியார் என்பவருக்கு 10 ரூபாய்க்கு வந்த மணியார்டர் நமூனாவைத் தேடியெடுத்து அதை யார் அனுப்பியது என்பதைப் பார்க்க, அது மைலாப்பூர் நடுத்தெருவில் 250-ம் இலக்கமுள்ள வீட்டில் இருக்கும் வீராசாமி முதலியார் என்பவரால் அனுப்பப்பட்டதாகத் தெரிந்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த வீட்டிலிருந்த டெலிபோனுக்குப் போய் அதன் மூலமாக மைலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்குச் செய்தி அனுப்பி, நடுத்தெருவில் 250-ம் இலக்கமுள்ள வீட்டிலிருக்கும் வீராசாமி முதலியாரை உடனே பிடித்துக் கைதி செய்யும்படி சொல்லிவிட்டு வந்து நம்பெருமாள் செட்டியாரையும், தபாற்காரனையும், அவனிடத்திலிருந்த கடிதங்கள் முதலிய தஸ்தாவேஜுகளோடு அழைத்துக்கொண்டு, மற்றவர்க்ள் தொடர்ந்துவர, அதற்கருகில் இருந்த ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தார். சேர்ந்தவர், உடனே டெலிபோனுக்குப் போய், அந்தத் திருட்டைப் பற்றிய விவரங்களையும் திருடர்களின் அங்க அடையாளங்களையும் மற்ற எல்லாப் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தெரிவித்து, சென்னையிலுள்ள எல்லா ஜெவான்களும் இந்த விஷயத்தில் விழிப்பாகவும் எச்சரிப்பாகவும் இருந்து இந்தத் திருட்டைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லியபோது, மைலாப்பூரிலிருந்து மறுமொழி கிடைத்தது. நடுத்தெருவில் சுமார் 30 வீடுகளே இருப்பதால், 250-வது இலக்கமுள்ள வீடே அந்தத் தெருவில் இல்லையென்றும், வீராசாமி முதலியார் என்ற பெயருடைய மனிதன் அந்தத் தெருவில் எந்த வீட்டிலும் இல்லையென்றும் மைலாப்பூர் சப் இன்ஸ்பெக்டர் சொல்லக் கேட்ட, இன்ஸ்பெக்டர் மிகுந்த திகைப்பும் வியப்பும் அடைந்து என்ன செய்வதென்பதை அறியமாட்டாமல் தவித்துக்கொண்டிருக்கிறார். மகா தந்திரமாகவும் திறமையாகவும் நடத்தப்பட்டுள்ள விநோதமான இந்தத் திருட்டை அவர் எப்படித்தான் கண்டுபிடிப்பாரோ; இதை யார்தான் செய்திருப்பார்களோ தெரியவில்லை” என்றார்.

அதைக்கேட்ட செட்டியார் மிகுந்த கவலையும் கலக்கமும் வியப்பும் அடைந்து, “அப்படியா சங்கதி! இது மகா வேடிக்கையான திருட்டாக இருக்கிறதே! இந்தக் கலிகாலத்தில் மனிதனுடைய புத்தி என்னென்ன அபூர்வமான வழிகளில் வேலை செய்கிறது பார்த்தீர்களா! இவ்வளவு ஜனக்கூட்டமுள்ள இடத்தில் தபாற்காரனுக்கு எப்படிப்பட்ட அபாயம் நேர்ந்துவிட்டது பார்த்தீர்களா! தபால் இலாகாதார்கள் ஜனங்களுடைய நன்மைக்காக எவ்வளவோ செளகரியங்களைச் செய்திருக்கிறார்கள். சில திருட்டு நாய்கள் இப்படிச் செய்வதனால், இனிமேல், பொது ஜனங்களுக்குத்தான் அசெளகரியம் உண்டாகிவிடப் போகிறது. எல்லோரும் இனிமேல் தபாற்சாலைக்குப் போய் மணியார்டர் முதலியவைகளை வாங்கிக்கொள்ளவேண்டும் என்று செய்துவிடப் போகிறார்கள். அப்புறம் நாமெல்லோரும் அங்கே போய்த் தொண்ணாந்து நிற்க வேண்டியதுதான்” என்றார்.

அந்தச் சமயத்தில் முதலியாரது சுருட்டு அடிவரையில் எரிந்து சொற்பமே மிகுதி இருந்தது. ஆகையால், அது அவரது உதட்டைச் சுட்டுவிட்டது. அந்த ஆத்திரத்தினாலும், நாயுடுவின் மீது அவர்கொண்ட கோபம் அப்போதும் அடங்காது இருந்தமையாலும், முதலியார் தமது முகத்தைச் சுளித்துக்கொண்டு ஆத்திரமாகப் பேசத் தொடங்கி, “ஜனங்கள் எல்லோரும் தபாற்சாலைக்குப் போக முடியுமோ! அந்தத் தபாற்காரன் முட்டாள்காரியம் செய்து விட்டால், அதற்காக ஜனங்களுக்குத் தண்டனையோ! தபாற்சேவகன் ஏனைய்யா இரண்டாவது கட்டுக்குள் போனான்? அவ்வளவு அதிகமான பணத்தொகையை வைத்திருப்பவன் ஜாக்கிரதையாக வெளியிலேயல்லவா இருக்க வேண்டும். அதைவிட்டு அவன் ஏன் உள்ளே ஓடினான்? பெரிய மனிதனுக்கு உள்ளேகொண்டுபோய்க் கொடுத்தால், இரண்டணா, ஓரணா பிச்சைக்காசு கிடைக்குமென்று தபாற்காரன் உள்ளே போனான். திருடன் நன்றாக ஏமாற்றினான்” என்றார்.

உடனே நாயுடு செட்டியாரைப் பார்த்து, “எவன் ஏமாறினால் என்ன? மணியார்டர், இன்ஷியூர் தொகைகளையெல்லாம் சர்க்காரில் கொடுத்து விடுவார்கள். ஆனால் ரிஜிஸ்டர் கடிதங்கள் ஒவ்வொன்றிலும் ஆயிரம், ஐந்நூறு பெருமானமுள்ள நோட்டுகள் இருந்திருக்கும், அவைகளை அனுப்பியவர்கள் எல்லோரும் வாயில் விரலை வைத்துக்கொண்டு போக வேண்டியதுதான். அவர்கள் ஏமாறியதாவது தங்களுடைய புத்திக் குறைவினால் ஏற்பட்டது. ஆனால் அந்த வீட்டின் சொந்தக்காரரான நம்பெருமாள் செட்டியார்தான் அநியாயமாக மாட்டிக்கொண்டு விழிக்கிறார். அவர் தக்க பெரியமனிதர்; இப்படிப்பட்ட காரியம் நடக்கப் போகிறதென்பது அவருக்குத் தெரிந்தே இருக்காது. யாரோ பெரிய மனிதன் வந்து கேட்கிறானே என்று நம்பி அவர் வீட்டைவிட்டுவிட்டார். அது இப்போது பெருத்த துன்பமாக வந்து விளைந்திருக்கிறது. அவர் போலீசாருடைய கையில் அகப்பட்டுத் தவித்துக்கொண்டிருக்கிறார். கோபாலகிருஷ்ணப்பிள்ளைக்கு வீட்டைவிட்டதும், அவன் இன்றைய காலையில் திறவுகோலை அனுப்பிவிட்டுப் போனதும் நிஜமென்று அவர் ருஜுப்படுத்தா விட்டால், பழி அவர் மேலேதான் வரும் போலிருக்கிறது” என்றார்.

அதைக் கேட்ட செட்டியார், “ஐயோ பாவமே! தெய்வமேயென்று கிடந்த அந்த மனிதருடைய தலைக்கா கல் வந்தது! அடடா! என்ன கஷ்டம்! என்ன கஷ்டம்! அவர் என்னுடைய பந்துவாயிற்றே. நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ப் பார்க்கிறேன். இதோ ஸ்டேஷன் வருகிறது. நாயுடுகாரு நமஸ்காரம். நான் போய்ப் பார்க்கிறேன்” என்று விசனத்தோடும் கவலையோடும் கூறிக்கொண்டு, டிராம் வண்டியைவிட்டுக் கீழே இறங்கிப் போலீஸ் ஸ்டேஷனை நோக்கிச் சென்றார்.

- தொடரும்…