சிறுகதை

880 படித்தவர்கள்
1 கருத்துகள்

“பிரான்ஸ் தன்னிடமிருக்கும் கடைசி நாணயத்தையும் தான் கொலனிகளாக வைத்திருந்த நாடுகளுக்கு நட்டஈடாகச் செலுத்த வேண்டியிருக்கிறது, ஒட்டு மொத்தப் பிரஞ்சு தேசமும் அல்ஜீரியாவின் ஏதோவொரு கடற்கரையில் புதைக்கப்பட்டிருக்கும் எனது மரியத்தின் புதைகுழிக்கு முன்னே மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கவேண்டும்! ஜெனரல் சார்ள் து கோல் மன்னிப்புக் கேட்ட வேண்டும்! பாதிரி லூயி டொனார்த் மன்னிப்புக் கேட்க வேண்டும்! சார்த்தருக்கும் விலக்குக் கிடையாது, அவரும் மரியத்திடம் மன்னிப்புக் கேட்கட்டும்! ஒரு பிராயச்சித்தம் நூறு சரிகளுக்குச் சமம்” என்ற திரை எழுத்துகளுடன் முடிவுறும் பிரஞ்சு இயக்குநர் எரிக் ஜக்மெனின் ரம்ழான் திரைப்படம் ஜோன் போல் சார்த்தரின் வீட்டில் ஆரம்பிக்கிறது.

சார்த்தர் தனது பாரிஸ் வீட்டில் தடித்த புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கும் கண்ணாடி அலுமாரிகளுக்கு நடுவேயிருந்து ஒரு பத்திரிகையாளருக்கு நேர்காணலை வழங்கிக்கொண்டிருக்கிறார். இப்பொழுது கமரா புத்தக அலுமாரியொன்றிற்கு மேலே தொங்கும் ஒரு பெரிய சுவர்க் கடிகாரத்தை நோக்கித் திரும்புகிறது. அடுத்த அய்ந்து நிமிடங்களுக்கு நிதானமாக அந்தச் சுவர்க் கடிகாரமும் அது எழுப்பும் துல்லியமான டிக் டிக் ஒலியும் மட்டுமே திரையில் வருகின்றன. திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு சலிப்புத் தட்டத் தொடங்குகிறது.

ஆறாவது நிமிடம் மீண்டும் கமரா பத்திரிகையாளரிடம் திரும்புகிறது. நம்மிடமிருந்த அதே சலிப்பு பத்திரிகையாளரின் முகத்திலும் தெரிகிறது. சார்த்தரோ ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கிறார். நடுவே ஒருமுறை முதிய வேலைக்காரி ஒருவர் சர்த்தாருக்கு முன்னே தேநீரையும் புகையிலைப் பொட்டலத்தையும் வைத்துவிட்டுப் போகிறார். சார்த்தர் அந்தப் பெண்ணிடம், “நன்றி அமதுல்லா” என்கிறார். அமதுல்லா என்ற பெயருக்கு, ‘அல்லாஹ்வின் வேலைக்காரி’ என்று பொருள்.

பத்திரிகையாளர் நடந்துகொண்டிருக்கும் அல்ஜீரிய விடுதலைப் போர் குறித்துக் கேட்ட கேள்விக்கு பதிலளித்துக்கொண்டிருந்த சார்த்தர் மறுபடியும் விட்ட இடத்திலிருந்து பதிலைத் தொடருகிறார். “அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பிரஞ்சு இராணுவத்தில் சேருமாறு அரசு இளைஞர்களுக்கு அழைப்பு விட்டிருந்தபோதிலும் அந்த அழைப்பைப் புறக்கணித்து அல்ஜீரிய மக்களுக்கு எதிராக நாங்கள் ஆயுதம் ஏந்த மாட்டோம் என பிரஞ்சு இளைஞர்கள் மறுப்பதை நான் நியாயமானதெனக் கருதுகிறேன், பிரஞ்சு மக்களின் பெயரால் பிரஞ்சு அரசு இயந்திரத்தாலும் படையினராலும் ஒடுக்கப்பட்டுவரும் அல்ஜீரிய மக்களுக்கு உதவுவதும் பாதுகாப்பளிப்பதும் பிரஞ்சு மக்களின் கடமையென வலியுறுத்துகிறேன், கொலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறப் போராடிவரும் அல்ஜீரிய மக்களுக்கு எனது நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவிக்கிறேன்” என்கிறார் சார்த்தர்.

ஒலிப்பதிவுக் கருவியைச் சலிப்புடன் நிறுத்தும் பத்திரிகையாளர், “அய்யா, 121 பேர்கள் கூட்டாகச் சென்ற மாதம் வெளியிட்ட அறிக்கையை நீங்கள் மறுபடியும் என்னிடம் படித்துக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்” என்கிறார். தனது இருக்கையிலிருந்து எழுந்து நிற்கும் சார்த்தர் தலையை உலுக்கியவாறே, “பிரஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணிக்கு ஆதரவளிக்க வேண்டும், எனது இந்த நிலைப்பாட்டுக்காக அரசாங்கம் என்னைக் கைது செய்வதானாலும் செய்யட்டும்” என்னும்போது பத்திரிகையாளர் புன்னகையுடன், “சார்த்தர் ஒருபோதும் அரசாங்கத்தால் கைது செய்யப்படமாட்டார் என ஏற்கனவே ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்” என்கிறார்.

திரைப்படத்தின் அடுத்த காட்சி பாரிஸின் புறநகரம் ஒன்றிலிருக்கும் ஓர் அரபுச் சேரியில் ஆரம்பிக்கிறது. தனது கந்தல் படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்கும் மரியம் அதிகாலையில் ஒரு கனவு கண்டு விழித்துக்கொள்கிறாள். எதிர்வரும் ரம்ழான் பெருநாளை அவள் தனது தாயகமான அல்ஜீரியக் கிராமத்தில் கொண்டாடிக்கொண்டிருப்பதாக அவள் கனவு கண்டாள். அவளருகில் உறங்கிக்கொண்டிருந்த அவளது தாயாரை எழுப்பி, “நோன்பு நேற்றுத்தான் ஆரம்பித்திருக்கிறது. ரம்ழான் பெருநாளுக்கு நான் எப்படி அல்ஜீரியாவில் இருக்க முடியும்?” என மரியம் கேட்கிறாள். தாயார் மரியத்திடம் “இறைவன் விருப்பம் அதுவானால் அது நிறைவேறும்” என்கிறார்.

அதிகாலையிலேயே மரியம் வேலைக்குப் புறப்படுகிறாள். அவள் இரண்டு நாட்களுக்கு முன்புதான் புதியதொரு வேலையில் சேர்ந்திருக்கிறாள். ஒரு பிரஞ்சுக் கப்பற்படை அதிகாரியின் வீட்டில் பணிப்பெண்ணாக அவள் வேலை செய்கிறாள். அவள் வேலைக்குப் புறப்பட்டுச் சென்றதும் தாயார் மரியத்தின் தந்தையிடம், “மரியத்துக்கு வயதாகிக்கொண்டே போகிறது. நாங்கள் சீக்கிரமே அல்ஜீரியாவுக்குத் திரும்பிப்போய் அவளுக்கு நிக்காஹ் செய்து வைக்க வேண்டும்” என்கிறார். மரியத்தின் தகப்பன், “யுத்தம் சீக்கிரமே முடிந்து அல்ஜீரியா விடுவிக்கப்படும் என்று அஹமத் பென் பெல்லா சொல்லியிருக்கிறார், அடுத்த வருடம் ரம்ழானை நாங்கள் அல்ஜீரியாவிலே கொண்டாட முடியும்” என்று தனக்குள் முணுமுணுக்கிறார்.

மரியம் வெகுளிப் பெண்ணாயிருக்கிறாள். அவள் உடல் வருத்தம் பாராமல் கடுமையாக உழைக்கக் கூடியவள், அவளுக்கு எழுத வாசிக்கத் தெரியாது. இந்தச் செய்திகளையெல்லாம் மரியமும் அவளது தோழிகளும் அதிகாலையில் வேலைக்காக அதிகாரிகளின் வில்லாக்களிருக்கும் பகுதிக்கு நடந்து போய்க்கொண்டிருக்கும் காட்சியிலேயே இயக்குநர் எரிக் ஜக்மென் குறிப்புகளால் சொல்லி விடுகிறார். மரியத்தின் மூன்றாவது வேலைநாள் அந்தக் கப்பற்படை அதிகாரி நிக்கொலாவின் வீட்டில் ஆரம்பிக்கிறது.

முழுமையான கப்பற்படைச் சீருடையில் அதிகாரி நிக்கொலா பியானோ இசைத்துக்கொண்டிருக்கிறான். அவனின் முன்னே தேநீர் குவளை மற்றும் கோப்பைகள் இருக்கும் தட்டுடன் மரியம் நின்று கொண்டிருக்கிறாள். ‘அதை அங்கே வைத்துவிட்டுப் போ’ என்ற கட்டளையை எதிர்பார்த்து மரியம் அங்கே நின்றுகொண்டிருக்கலாம். நிக்கொலா எதுவும் சொல்லாமலேயே மரியத்தைப் பார்த்தவாறு அருமையான இசையை இசைத்துக்கொண்டிருக்கிறான். மரியம் தலையைத் தாழ்த்தியவாறு நின்றிருக்கிறாள்.

பியானோவிலிருந்து எழுந்துவரும் நிக்கோலா தேநீர் கோப்பையை வாங்காமல் மரியத்திடம், “மரியம் உனது முலைகள் அழகானவை” என்கிறான். இப்போது மரியத்தின் முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை. அவளின் முகம் ஒரு புராதனக் கற்சிலையின் முகத்தைப் போலிருக்கிறது. அவளின் கண்கள் ஆட அசையவில்லை. அதிகாரி மிக இயல்பாயும் உரிமையுடனும் மரியத்தின் முலைகளில் கை வைக்கிறான். நாங்கள் மரியம் தேநீர்த் தட்டைக் கீழே போட்டுவிடுவாள் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் மரியத்தின் கைகள் தேநீர்த் தட்டை இறுக்கமாகப் பிடிப்பது அண்மைக் காட்சியில் காட்டப்படுகிறது. அவள் சற்றுப் பின்நகர்ந்து சமையலறைக்குத் திரும்புகிறாள். நிக்கொலா, மரியம் போவதையே பார்த்துக்கொண்டிருந்து விட்டு மீண்டும் பியானோவின் முன்னால் உட்கார்ந்திருந்து பியானோவை இசைக்கத் தொடங்குகிறான். அவன் கால்களால் தாளமிட்டவாறே, “புது மாடு உழவு பழக மிரளுவது உழவனுக்கும் புதிதல்ல, வயலுக்கும் புதிதல்லவே” என்று பாடுகிறான்.

சமையலறைக்குச் சென்ற மரியம் தேநீர்த் தட்டை ஒழுங்காக அதனுடைய இடத்தில் வைக்கிறாள். தனது கண்களைத் தாழ்த்தி வெண்ணிற அங்கியால் போர்த்தப்பட்டிருக்கும் தனது மார்பகங்களைப் பார்க்கிறாள். இந்த ‘ஷொட்’டில் மார்பகங்களை மிக அண்மைக் காட்சியில் காட்டுவதுதான் பிரஞ்சு சினிமாவின் மரபு. ஆனால் எரிக் ஜக்மென் மரியத்தின் கவிழ்ந்த கண்களைத் திரை முழுவதும் காண்பிக்கிறார். கவிழ்ந்த கண்கள் மிக அண்மைக் காட்சியில் காட்டப்படுவதைக் ‘குளேசப் ஷொட்’ மன்னன் அகிரா குரோசவாவின் திரைப்படங்களில்கூட நான் பார்த்ததில்லை.

இப்போது மரியம் சமையலறையிலிருக்கும் இறைச்சி வெட்டும் கூரிய கத்தியை எடுத்துக்கொண்டு பியானோ வாசித்துக் கொண்டிக்கும் நிக்கொலாவின் முதுகுப்புறத்தால் நிக்கொலாவை நெருங்குகிறாள். பியானோ இசை நெருங்கிச் செல்லும் காலடிச் சத்தங்களை அமுக்கிவிடும் என்று மரியம் நினைத்திருப்பாள். மரியம் கத்தியை வீசும்போது பியானோவின் இசை அறுகிறது. நிக்கோலா சுழன்று திரும்புகிறான். மரியம் வீசிய கத்தி நிக்கொலாவின் முதுகில் பட்டும் படாமலும் சறுக்குகிறது.

நிக்கொலாவிற்கு மரியத்தின் கையிலிருக்கும் கத்தியைப் பிடுங்குவதற்கு ஒரு விநாடியே போதுமாயிருந்தது. அவன் தனது முழு இராணுவப் பயிற்சியையும் மரியத்திடம் பிரயோகித்தான். தனது வலிய கரங்களால் மரியத்தின் தலைமுடியைப் பற்றிப் பிடித்து அவளின் முகத்தைப் பியானோவில் நிக்கொலா அறைந்த போது பியானோ வீறிட்டது. “அரபுப் பெட்டை நாயே” என்று சொல்லிச் சொல்லி மரியம் மயங்கும்வரை நிக்கொலா அவளின் தலையைப் பியானோவில் மோதினான். பியானோவின் சுரக் கட்டைகள் மீது மரியத்தின் இரத்தம் படர்கிறது. அவள் மயங்கித் தரையில் விழுந்ததும் நிக்கொலா தொலைபேசியில் பொலிஸாரை அழைத்தான்.

கப்பற்படை அதிகாரி நிக்கொலாவைக் கொல்வதற்காக அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணியால் அனுப்பப்பட்ட உளவாளி என்று மரியத்தின் மீது பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்டது. ‘சாம்ஸ் எலிஸே’யில் இருந்த உளவுத்துறைப் பொலிஸ் தலைமையத்தில் மரியம் விசாரணைக்கெனத் தடுத்து வைக்கப்படுகிறாள்.

அக்காலத்தில் குறிப்பாக 1958 காலப்பகுதியில் அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி பிரான்சுக்குள் ஊடுருவி பிரான்ஸ் முழுவதும் பரவலாகத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தது. ஏராளமான இராணுவத் தளபதிகளும் பொலிஸ் அதிகாரிகளும் குறிவைத்துக் கொல்லப்பட்டார்கள். அல்ஜீரிய விடுதலைப் போராளிகள் பாரிஸிலிருந்த காவல் நிலையங்கள் மீதும் படையினரின் ரோந்து வாகனங்கள் மீதும் துப்பாக்கிச் சூடுகளை நடத்தினார்கள். பல வெடிமருந்துக் கிடங்குகளும் எண்ணெய்க் குதங்களும் போராளிகளால் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டன. ஒரு நாளைக்கு ஆகக் குறைந்தது இரண்டு சம்பவங்களாவது இவ்வாறு நிகழ்ந்தன.

உளவுப் பொலிஸாரின் விசாரணைக்கூடத்தில் நடக்கும் கொடுமைகள் அடுத்தடுத்த காட்சிகளில் துயரமாகச் சித்திரிக்கப்படுகின்றன. மரியத்திற்கு ஒரு நீண்ட சாம்பல்நிற அங்கி மட்டுமே அணிந்துகொள்ளக் கொடுக்கப்படுகிறது. மரியத்தின் உள்ளாடைகளை அவர்கள் பறித்து வீசிவீடுகிறார்கள். உள்ளாடைகள் அணிவதற்கு விசாரணைக் கைதிகள் அனுமதிக்கப்படுவதில்லை. உள்ளாடைகளால் கைதிகள் கழுத்தை இறுக்கித் தற்கொலை செய்துகொள்கிறார்களாம்.

உளவுத்துறைப் பொலிஸார் மரியத்தை அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணியின் உளவாளி என்று ஒத்துக்கொள்ள வைப்பதற்குப் பெரும் பிரயத்தனங்களைச் செய்தார்கள். பன்னிரெண்டு மாடிகளைக் கொண்ட அந்தக் கட்டடத்தின் ஒவ்வாரு தளத்தின் மாடிப்படிகளின் அருகிலும் ஒரு பொலிஸ்காரன் நாற்காலியில் துப்பாக்கியோடு காவலிருப்பான். ஒரு நாள் விசாரணை அதிகாரியொருவன் மரியத்திடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காக ஒரு நூதனமான வழியைக் கையாண்டான்.

மரியம் கீழ்த்தளத்திலிருந்து பன்னிரெண்டாம் மாடிவரை நிற்காமல் படிகளில் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். மறுபடியும் மேலிருந்து கீழ்த்தளம் வரைக்கும் படிகளில் இறங்கி ஓடிவர வேண்டும். அப்படி ஓடும்போது ஒவ்வொரு தளத்திலும் காவலுக்கு அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பொலிஸ்காரனின் கைகளையும் அவள் தனது கையால் தொட்டுவிட்டுத் தொடர்ந்து ஓட வேண்டும்.

மரியம் நான்கு தடவைகள் ஏறி இறங்குவதற்குள்ளேயே முற்றாகத் தளர்ந்துவிட்டாள். அவள் தளர்ந்து வேகத்தைக் குறைத்த போதெல்லாம் அவளின் பிடரியில் அறைகள் விழுந்தன. அவள் தனது வெற்றுக்காலைப் படியொன்றில் மோதி தனது விரலொன்றில் காயப்பட்டாள். அந்த இரத்தக் காயத்துக்குப் பிறகும் கூட ஓடிக்கொண்டேயிருக்குமாறு அவள் கட்டாயப் படுத்தப்பட்டாள். மரியம் தனது காலை நொண்டி நொண்டி ஓடிக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் அச்சமும் பதற்றமும் வலியும் தொற்றிக் கிடந்தன. பன்னிரெண்டாம் மடியிலிருந்த பொலிஸ்காரனை மரியம் இருபத்தோராவது தடவையாகத் தொடச் சென்றபோது இடுங்கிய கண்களைக் கொண்ட அந்த பொலிஸ்காரன், “நீ ஓடிவரும்போது உனது முலைகள் வசீகரமாகக் குலுங்குகின்றன” எனச் சொல்லிவிட்டு மரியம்  தொடுவதற்காகத் தனது கையை நீட்டினான்.

மரியம் சிறையிலும் நோன்பைக் கடைப்பிடிக்கிறாள். சிறையில் வழங்கப்படும் உணவை வேண்டாம் என்று கைதிகளால் மறுக்க முடியாது. அதுவும் சட்ட விரோதமாம். மரியம் காலையிலும் மதியத்திலும் வழங்கப்படும் சிறையுணவை கக்கூஸ் குழியில் கொட்டி விடுவாள். இரவுணவை மட்டுமே அவள் சாப்பிட்டாள். பெற்றோர்களையும் தனது சிறிய தங்கைகளையும் நினைத்து அவள் இரவு முழுவதும் அழுதுகொண்டிருந்தாலும் இன்னும் சில நாட்களில் ரம்ழான் பெருநாளைத் தான் அல்ஜீரியாவில் கொண்டாடப் போவதாக அவள் மனப்பூர்வமாக நம்பினாள். தனது நம்பிக்கையை சக கைதிகளிடம் அவள் பகிர்ந்துகொண்டபோது அவர்கள் மரியத்தை, “பைத்தியக்காரி” எனத் திட்டினார்கள்.

பாரிஸில் பிரஞ்சு ஆட்சியாளர்களுக்கு எதிரான அல்ஜீரியர்களின் தாக்குதல்களும் ஆர்ப்பாட்டங்களும் கட்டுக்கடங்காமல் பெருகிப் போகவே பிரஞ்சு அரசாங்கம் பிரான்சுக்கு வேண்டப்படாத அல்ஜீரியர்களை அல்ஜீரியாவுக்குக் கட்டாயமாகத் திருப்பி அனுப்பிவைக்க முடிவெடுக்கிறது. பாரிஸ் நகரத்தில் உளவுத் துறையினரின் சந்தேகத்துக்குரிய அல்ஜீரியர்கள் குடும்பம் குடும்பமாகக் காவற்துறையினரால் பிடிக்கப்பட்டு ‘வெலோத்ராம் து ஹிவர்’ என்ற மிகப் பெரிய விளையாட்டு அரங்கத்தில் அடைக்கப்படுகிறார்கள்.

இந்த அரங்கு செயின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது. 1942இல் இந்த அரங்கத்தில்தான் நாஸிப் படையினரால் பன்னிரெண்டாயிரம் யூதர்கள் அடைக்கபட்டிருந்து, பின்பு சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். பதினாறு வருடங்களுக்கு முன்பு யூதர்களின் கண்ணீரால் கழுவப்பட்ட அந்த அரங்கு இப்போது அரபுப் பெண்களின் கண்ணீராலும் குழந்தைகளின் கண்ணீராலும் கழுவப்பட்டது. அந்தத் தடுப்பு முகாமுக்கு மரியமும் உளவுத்துறைப் பொலிஸாரால் அனுப்பப்படுகிறாள். மரியத்தின் கனவு நனவாக இன்னும் ஒரு வாரம் மட்டுமேயிருக்கிறது. அடுத்த வாரம், ரம்ழான் பெருநாள்.

அந்த அரங்கத்தில் அடைக்கப்பட்டிருந்தவர்கள், ரம்ழான் பெருநாளுக்கு அய்ந்து நாட்களுக்கு முன்னதாகச் சிறப்பு ரயில் ஒன்றில் துறைமுக நகரமான மார்ஸெயிலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அன்றைய தினம் பிரஞ்சுத் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்த பிரஞ்சு அதிபர் ஜெனரல் சார்ள் து கோல், “அல்ஜீரியக் கிளர்ச்சிக்காரர்கள் விரைவில் பிரஞ்சு பராசூட் சிறப்புப் படையினரால் அழிக்கப்படுவார்கள், அல்ஜீரியா பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதி, அல்ஜீரியாவிலிருந்து பிரஞ்சுப் படைகள் வெளியேறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனது அரசாங்கம் அல்ஜீரியர்களைப் பிரஞ்சுக் குடியரசின் பிரஜைகளாகக் கௌரவமாகவே நடத்திவருகிறது. அல்ஜீரியாவிற்குத் தமது சுயவிருப்பத்தின் பேரில் திரும்ப விரும்பிய அல்ஜீரியர்கள் இன்றுகூட மார்ஸெயிலிலிருந்து புறப்படும் கப்பலில் தங்களது சொந்தக் கிராமங்களுக்கு அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப்படுகிறார்கள். அவர்கள் ரம்ழான் பெருநாளை அமைதியாகத் தங்களது கிராமங்களில் கொண்டாடுவார்கள். அவர்களுக்கு எனது ரம்ழான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அந்தக் கப்பலில் சிறப்பு ரயிலில் அழைத்து வரப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் புறநகரங்களில் கைது செய்யப்பட்டு இராணுவ வாகனங்களில் அடைக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட அல்ஜீரியர்களும் ஏற்றப்படுகிறார்கள். மரியம் கப்பலில் ஏறியதும் கப்பலில் தனது பெற்றோர்களும் தங்கைகளுமிருக்கலாம் என்று அவர்களைத் தேடுகிறாள். ஆனால் அவர்கள் கப்பலில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தக் கப்பலில் அவள் தனக்கு முன்னமே தெரிந்த ஒருவனைச் சந்திக்கிறாள். அவன் கப்பற்படை அதிகாரி நிக்கொலா. அவன்தான் அந்தக் கப்பலின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி. அவன் மரியத்தை நெருங்கி வந்து அவளது மார்பகங்களைக் கண்களால் சுட்டிக்காட்டி, “நீ சிறையில் இருந்தபோதும்கூட உனது கொழுத்த முயல் குட்டிகள் இளைத்துவிடவில்லை” என்று சொல்லிவிட்டு இளித்தான். மரியம் வேகமாக அந்த இடத்திலிருந்து நடந்து செல்கிறாள்.

அவள் பின்பு கப்பலுக்குள் அமதுல்லாவைச் காண்கிறாள். இந்த அமதுல்லாதான் திரைப்படத்தின் முதற் காட்சியில் சார்த்தருக்குத் தேநீர் பரிமாறிய முதிய வேலைக்காரி. அமதுல்லா தனது தலையில் ஒரு துணிமூட்டையை வைத்திருக்கிறார். அவர் அந்தத் துணிமூட்டையை யாராவது திருடிவிடக் கூடும் என்ற பதற்றத்திலிருக்கிறார். அவர், “நீ எனது துணிமூட்டையைத் திருட நினைக்காதே” என்று மரியத்தைத் திட்டுகிறார். ஓரிடத்தில் அமர்ந்தாலோ நின்றாலா தனது துணிமூட்டையை யாராவது திருடிவிடுவார்கள் என்ற அச்சத்தில் அவர் ஓடும் கப்பலுக்குள் ஓயாமல் நடந்துகொண்டேயிருக்கிறார்.

கப்பல் இரவு நேரம் நடுச் சமுத்திரத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆண்கள் கப்பலின் கீழ்த்தளங்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கப்பலின் மேற்தளத்தில் பெண்களும் குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். காவற் கடமையிலிருக்கும் படைவீரர்கள் எல்லோருமே கப்பலின் உணவுச்சாலையில் குடித்துக்கொண்டும் புகைத்துக்கொண்டுமிருக்கிறார்கள். கப்பலின் மேற்தளத்தில் விளக்குகள் ஏதுமில்லை. நட்சத்திரங்களின் கீழே தூங்கிக்கொண்டிருந்தபோது மரியம் ஒரு கனவு கண்டாள்.

கருமையிலிருந்து ஒளி தோன்றுகிறது. அந்த ஒளி மரியத்திடம் “அருள் நிறைந்த மரியமே வாழ்க! பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீயே! உன் திருவயிற்றின் கனியும் ஆசிர்வதிக்கப்பட்டதே! இந்த இரவில் நீ கர்ப்பம் தரிப்பாய், உன் உதிரத்தில் சுமந்து நீ கடவுளின் குமாரனை பெற்றெடுப்பாய்!” என்றது. பின்பு ஒளி தணிந்துவிடுகிறது. மரியம் வியர்த்துப் போய்த் திடுக்குற்று விழிக்கிறாள். அவள் குந்தியிருந்து ஒரு நிமிடம் மட்டுமே தனது முழங்கால்களில் தனது தலையைக் கவிழ்த்து வைத்துக்கொண்டு யோசனை செய்தாள். அடுத்த நிமிடம் அவள் கப்பலிலிருந்து சமுத்திரத்திற்குள் குதித்தாள்.

அந்த வினாடியில் கப்பலின் மேற்தளத்துக்கு ஒரு வெளிச்சப் புள்ளி ஏறி வருகிறது. போதையில் தள்ளாடியபடியே படிகளில் ஏறிவரும் கப்பற்படை அதிகாரி நிக்கொலாவின் கையிலிருக்கும் விளக்கிலிருந்து ஒளி கசிகிறது. அவன் அந்த விளக்கின் வெளிச்சத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களிடையே பெருத்த முலைகளைக் கொண்ட பெண்ணான மரியத்தைத் தேடிக்கொண்டிருக்கிறான்.

தொலைக்காட்சி நேர்காணலில் ஜனாதிபதி ஜெனரல் சார்ள்து கோல் சொன்னது அப்பட்டமான பொய். மார்ஸெய்ல் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் அல்ஜீரியாவின் கிராமங்களை நோக்கிப் போகவில்லை. கப்பல் அல்ஜீரியாவின் பாலைவனத்தின் தெற்குப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சிறைமுகாம்களை நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது.

ரம்ழான் பெருநாளுக்கு முந்தியநாள் மாலையில் அல்ஜீரியக் கடற்கரையொன்றில் கிராமவாசிகள் பிறையைக் காண்பதற்காகக் கூடி நின்றபோது கடலில் மிதந்துவந்த ஒரு உடலை அவர்கள் கண்டெடுத்தார்கள். அந்த நிர்வாண உடலை சுறாக்கள் குதறியிருந்தன. அந்த உடலில் முலைகள் இருந்ததற்கான தடயத்தைக்கூட மீன்கள் விட்டுவைத்திருக்கவில்லை.

“தேசத்துரோகி சார்த்தரைக் கைது செய்ய வேண்டும்” என்ற கூச்சலோடு பிரஞ்சுக் கொடிகளை உயர்த்திப் பிடித்தபடி பாரிஸ் நகரத்தின் தெருக்களில் ஊர்வலமாக ஒரு கூட்டம் போய்க்கொண்டிருக்க, அல்ஜீரியக் கடற்கரைக் கிராமமொன்றில் கிராமவாசிகள் மரியத்தின் வெள்ளைத்துணி போர்த்திய உடலை ஊர்வலமாகப் புதைகுழிக்கு எடுத்துப் போவதுடன் திரையில் எழுத்துகள் மின்ன ரம்ழான் திரைப்படம் முடிகிறது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்களின் முலைக்கும் வரி விதிக்கப்பட்டிருந்தபோது வரியைக் கட்ட மறுத்த பெண் ஒருத்தி தனது முலைகளை அறுத்து வாழையிலையில் பொதிந்து வரி வசூலிக்க வந்த அதிகாரிகளின் கையில் கொடுத்தாளாம். திரைப்பட அரங்கிலிருந்து வெளியே வரும்போது நான் எனது அந்த மூதாதையை நினைத்துக்கொண்டேன். திரைப்பட அரங்கிலிருந்து வெளியே வந்த இன்னொருவர், ‘சார்த்தர் அலுப்பூட்டக் கூடிய விதத்தில் பேசக் கூடியவரா?’ என்றுகூட யோசித்திருக்கலாம்.

மரியமாகப் பாத்திரமேற்று நடித்திருந்த ஜஸ்மின் சிறந்த நடிகைக்கான விருதை வெனிஸ் திரைப்பட விழாவில் மயிரிழையில் இழந்தார். சிறந்த நடிகைக்கான விருதை ‘1970 மூனிச்’ திரைப்படத்துக்காக வனஸா ரெட்போர்ட் பெற்றுக்கொண்டார். ரம்ழான் திரைப்படத்தில் மரியமாக நடித்திருந்த ஜஸ்மினுக்கு அந்தப் படம்தான் முதலாவது கதைப் படம். ஜஸ்மின் நீலப் படங்கள் என்று சொல்லப்படும் போர்னோ படங்களில் நடிப்பவர். அவர் ரம்ழான் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது பிரான்ஸின் பிரபல நாளிதளான ‘20 மினுற்’ பத்திரிகை “ஒரு நீலப்பட நடிகையின் வாழ்க்கையை அறிந்து கொள்வதற்கு நீங்கள் நிச்சயமாக விரும்புவீர்கள்!” என்ற அறிவிப்போடு நடிகை ஜஸ்மினுக்கும் தனது வாசகர்களுக்குமான ஓர் இணைய உரையாடலைத் தனது இணையதளத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இனிவருவது அந்த உரையாடல்:

Anelka: ஜஸ்மின் நீங்கள் நீலப் படங்களில் நடிப்பதற்காக உங்கள் உறுப்புகளில் எதையாவது திருத்தி அமைத்துக்கொண்டீர்களா?

ஆம்; எனது மார்பகங்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் திருத்திக்கொண்டேன்.

Noway: உங்களுக்குக் கணவரோ அல்லது காதலரோ இருக்கிறாரா? இருந்தால் நீங்கள் அவருடன் கழிக்கும் பொழுதுகளில் நீலப் படங்களில் நடிப்பதனால் உங்களுக்கு ஏதாவது மன உளைச்சல்கள், தடுமாற்றங்கள் ஏற்படுவதுண்டா?

இல்லை, இத்தகைய உளைச்சல்களோ குழப்பங்களோ எனக்கு இதுவரை ஏற்பட்டதில்லை. நான் எனது காதலனுடன் சேர்ந்து வாழ்கிறேன். நாங்கள் வாழ்க்கைத் துணைவர்கள்தான். ஆனாலும் நாங்கள் இருவருமே அவரவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் கருத்தானவர்கள். நாங்கள் இருவருமே பாலுறவுக் கட்டுப்பாடுகளிலிருந்து எங்களை விடுவித்துக்கொண்டவர்கள். இருவருமே சுயமான பாலியல் தேர்வுகளைக் கொண்டவர்கள். வாழ்க்கை ஒரு படப்பிடிப்பு போன்றதல்ல. அங்கே நடித்தால் நாம் நம்மையே ஏமாற்றுபவர்களாவோம்.

Reivax: இந்த ஆணாதிக்க சமூகத்தில் அரசியல், வேலை, கலை போன்ற பல துறைகளில் பெண்களுக்கான சம வாய்ப்புகளும் உரிமைகளும் ஆண்களால் மறுக்கப்படுகின்றன. பெண்களுக்கான சமூக அங்கீகாரம் மீண்டும் மீண்டும் மறுக்கப்படுகிறது. இந்த நிலையில் நீங்கள் வெறும் பாலியல் பண்டமாக மட்டுமே கவனப்படுத்தப்படுவது உங்களை எவ்வளவு பாதிக்கிறது? நீங்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதாக நினைக்கிறீர்களா?

நான் அப்படி நினைக்கவில்லை. நான் ஒரு தொழிலைச் செய்கிறேன். அதுவும் எனக்குப் பிடித்தமான நடிப்புத் தொழிலைச் செய்கிறேன். உடல்களின் மேன்மையையும் காமத்தையும் அழகியலாக்கப் போராடும் எனது இயக்குநர்களை நான் பிரதிபலிக்கிறேன் என்று நினைக்கும்போது நான் கர்வமுறுகிறேன்.

Pierre: உங்களுடனான இந்த உரையாடலை ‘20 Minutes’ பத்திரிகை ஏற்பாடு செய்ததன் நோக்கம் என்னவென்று நினைக்கிறீர்கள்? உங்கள் அந்தரங்க வாழ்வை அவர்கள் அரட்டைப் பொருளாக்குகிறார்களா? அல்லது உங்கள்மீது கொண்ட கரிசனத்தால் இந்த உரையாடலை ஏற்பாடு செய்தார்களா?

இந்தக் கேள்வியை நான் அவர்களிடமே விட்டுவிடுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் நான் வாசகர்களுடனும் எனது ரசிகர்களுடனும் உரையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

Luimeme: நீலப்படங்களில் நடிப்பதற்கு உடல்ரீதியாகக் கடினமான உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கும். பல மணிநேரங்களாக, நாட்கணக்கில் நீடிக்கும் படப்பிடிப்புகளால் ஒரு பெண்ணென்ற முறையில் என்னவிதமான சிரமங்களை எதிர்கொள்கிறீர்கள்?

அனைத்தும் ஒரு நாளைக்கு எத்தனை காட்சிகளில் நடிக்கிறேன் என்பதைப் பொறுத்தே உள்ளது. படிப்பிடிப்பு முடிந்ததும் எரிவு பொதுவாகவே இருக்கும். சில வேளைகளில் இலேசான வலியும் ஏற்படுவதுண்டு. ஆனால் இப்போது இவற்றுக்கென பிரத்தியேகமான ‘ஜெல்’களும் ‘க்ரீம்’களும் கிடைக்கின்றன என்பது நிம்மதியான விஷயம்.

Anto: 2007 கான்ஸ் திரைப்பட விழாவில் நீங்கள் நடித்த ‘SEXTANT 2’ படத்தைப் பார்த்தேன். வாழ்த்துகள். ஜஸ்மின் நீங்கள் நீலப்படத்தில் அல்லாமல் மரபான கதைப் படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் உள்ளன. அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?

உங்களுடைய வாழ்த்துகளுக்கு நன்றி. உண்மைதான் நான் எரிக் ஜக்மெனின் ‘ரம்ழான்’ என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 2008ல் வெளியாகும். இந்தப் படத்தில் டானியல் ஒற்றேயும் நடிக்கிறார்.

Liouba: இரவு பகலாகத் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கும்போதோ, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் புணருவதாகக் காட்சிகள் அமைக்கப்படும் சந்தர்ப்பங்களிலோ நீங்கள் எப்போதாவது நடிக்க இயலாது என்று மறுத்ததுண்டா?

பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு காட்சியில் மட்டுமே நடிக்கிறேன். ஒன்று அல்லது இரண்டு ஆண்களுடன் அல்லது பெண்களுடன் இணைந்து நடிக்கிறேன். எனது தயாரிப்பு நிறுவனமான ‘மார்க் டோர்ஸெ’ நிறுவனத்தில் நான் இதுவரை எதற்கும் மறுப்புச் சொன்னதில்லை. ஏனெனில் அவர்கள் தயாரிக்கும் படங்கள் செக்ஸியையும் கிளாமரையும் பிரதிபலிக்கும் படங்கள். வக்கிரமான படங்களை அவர்கள் தயாரிப்பதில்லை.

Julien: ஆண்களின் கண்களுக்கு நீங்கள் இத்தனை கவர்ச்சியாயிருப்பதின் இரகசியம் என்ன?

நான் எனது உடற் பராமரிப்பில் மிகவும் கவனம் எடுத்துக்கொள்கிறேன். எனது பதின்ம வயதுகளிலிருந்து எனது அதிகமான நேரங்களை அழகு நிலையங்களிலும் உடற்பயிற்சி மையங்களிலுமே செலவிடுகிறேன்.

Gillou: விரைவில் உங்களின் இருபத்தொன்பதாவது பிறந்த தினம் வரவிருக்கிறது என அறிந்தேன். உண்மைதானா?

ஆம், உண்மைதான். ஜனவரி 18ஆம் தேதி என்னுடைய பிறந்தநாள் வருகிறது. எனக்குப் பிறந்தநாள் பரிசு அனுப்பி வையுங்கள்.

Noway: இந்த வாழ்க்கை எப்படியிருக்கிறது? நிம்மதியாக உணருகிறீர்களா? உங்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் உங்களுடைய இந்தத் தொழிலை எந்தளவுக்கு ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்?

படப் பிடிப்புகள், நடன விடுதிகளில் காட்சிகள் நிகழ்த்துவது, எனது காதலனுடன் வீட்டில் இருப்பதற்கான நேரத்தை ஒதுக்குவது என எப்போதுமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தாலும் நான் வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ்வதால் எனது வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் சீராகவும் போய்க்கொண்டிருக்கிறது. எனது குடும்பத்தினருடனோ உறவினர்களுடனோ எனக்கு இப்போது எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்களால் எனது இந்தத் தொழிலை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

Emre: நான் லியோன் நகரத்தில் வசிக்கும் இளைஞன். நீங்கள் நடித்த படங்களை மிகவும் விரும்பிப் பார்ப்பேன். நீலப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை எப்படிப் பெறலாம் எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அது குறித்து எனக்குச் சில வழிகாட்டல்களைத் தருவீர்களா?

நீலப் படங்களில் நடிக்க வாய்ப்புப் பெறுவதற்கு உங்களுடைய தளராத முயற்சியும் பயிற்சியும் முக்கியமானவை. உண்மையில் நீலப் படங்களில் நடிப்பதற்கு தேர்வாவதும் நடிப்பதும் மிகவும் கடினமானவை. கமராவின் முன்னாலும் படப்பிடிப்புக் குழுவினரின் முன்னாலும் நீங்கள் நிற்கும்போது உங்களது ஆணுறுப்பு விறைப்பை இழந்துவிடக் கூடாது. இது பயிற்சியினாலும் மனதை ஒருநிலைப் படுத்துவதாலுமே சாத்தியமாகும். நீங்கள் முதலில் சிறிய ‘அமெச்சூர்’ குழுக்கள் தயாரிக்கும் படங்களில் நடித்து அனுபவத்தையும் பெயரையும் பெற முயற்சிப்பதே சிறந்தது என்பது எனது ஆலோசனை. இணையதளங்களிலும் போர்னோ பத்திரிகைகளிலும் நடிகர்கள் தேவை என்று விளம்பரங்கள் அவ்வப்போது வெளியாவதுண்டு. அவர்களை அணுகிப் பாருங்கள்.

Ham: கமராவுக்கு வெளியே ஒரு நீலப்பட நடிகையின் வாழ்வு எப்படியிருக்கிறது? நீங்கள் நீலப்பட நடிகையென்று அறியவரும் போது உங்களை இழிவு செய்கிறார்களா?

கமராவுக்கு வெளியே நான் அமைதியான ஒரு மனுஷி. நான் நீலப்பட நடிகையென்று தெரியவரும்போது எதிரிலிருப்பவர்கள் ஆச்சரியமடைகிறார்களே தவிர என்னை அவர்கள் இழிவு செய்வதில்லை என்றே நினைக்கிறேன்.

Dimal: நீங்கள் அல்ஜீரியாவில் பிறந்தவர். அப்படியான இறுக்கமான கலாச்சாரப் பின்னணியில் வந்த நீங்கள் ஒரு நீலப்பட நடிகையாக இருப்பதை உங்கள் பெற்றோர்கள் எப்படி உணருகிறார்கள்?

நான் அல்ஜீரியாவில் பிறந்திருந்தாலும் எனது ஒன்பதாவது வயதிலேயே நாங்கள் குடும்பத்தோடு பிரான்சுக்குப் புலம் பெயர்ந்துவிட்டோம். நான் ஏற்கனவே சொல்லியது போல எனது பெற்றோர்களுடன் எனக்கு இப்போது எந்தத் தொடர்பும் கிடையாது.

Thomas: பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிடுமா? பணத்திற்காக ஒரு பெண் தனது கவுரவத்தை விட்டுக்கொடுப்பதை எப்படிப் புரிந்து கொள்வது. காசு கொடுத்தால் நீங்கள் விலங்குகளைப் புணரும் காட்சிகளிலும் நடிப்பீர்களா? அல்லது மிக வறிய நிலையிலிருக்கும் பெண்கள்தான் அப்படியான காட்சிகளில் மிருகங்களுடன் நடிக்கிறார்களா? நிர்வாணத்திலும் அவமானத்திலும்கூட ஏழைகள் பணக்காரர்கள் போன்ற வித்தியாசங்களுண்டா?

சத்தியமாக நான் பணத்திற்காக நீலப்படங்களில் நடிக்கத் தொடங்கவில்லை. நான் என்னுடைய மகிழ்ச்சிக்காகவும் கொண்டாட்டத்துக்காகவும் மட்டுமே நீலப்படங்களில் நடிக்க வந்தேன். என்னுடைய விருப்பங்கள் எனக்கு முக்கியமானவை. அவற்றை வெறும் ஆழ்மன விருப்புகளாக மட்டுமே குறுக்கிக் கொண்டு என் உணர்வுகளுக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது. மிருகங்களுடன் நடிப்பது என் தொழில் இல்லை. தோமஸ்! அந்தக் கேள்வி எனக்கானது அல்ல. நானும் உங்களைப் போன்ற ஒரு சாதரண மானிடப் பிறவிதான்.

Jules: நீங்கள் உண்மையாகவே இந்தத் தொழிலை விரும்புகிறீர்களா?

ஆம், மனபூர்வமாக விரும்புகிறேன்.

Mr K: ஜஸ்மின் உங்கள் வீட்டிலோ அல்லது நண்பர்கள் வீட்டிலோ இரவு விருந்துகள் நடைபெறும் போது உங்கள் படங்களில் காண்பிக்கப்படுவதைப் போல நீங்கள் நடந்துகொள்வதுண்டா?

இல்லை, இந்த விருந்துகள் காதலாலும் நட்புகளாலும் மகிமைப்படுத்தப்படுபவை.

Reds: நீலப்படங்களில் நடிகர்கள் எப்படி நீண்ட நேரமாக விந்து வெளியேறாமல் உடலுறவை நீட்டிக்கிறார்கள். இது எடிட்டிங் வித்தை என்றுதான் நான் நினைக்கிறேன். நடிகர்கள் படப்பிடிப்பின் போது ஊக்க மருந்துகளை உட்கொள்கிறார்களா?

இதனால்தான் நீலப்பட நடிகர்களாக இருப்பது மிகவும் கடினமானது என்று சொன்னேன். அவர்கள் தங்களது ஆணுறுப்புகளை விறைப்பாகவே வைத்திருக்கும் அதே நேரத்தில் இயக்குநர் சொல்லும்வரைக்கும் விந்தையும் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஊக்க மருந்துகளையோ அல்லது நீண்ட நேரப் புணர்ச்சிக்கான சிறப்பு மருந்துகளையோ உபயோகிக்கும் நடிகர்களை நான் பார்த்ததில்லை. அவர்கள் விறைப்பை இழந்துவிட்டால் மனதை ஒருநிலைப் படுத்துவதன் மூலமே மீண்டும் குறி எழுச்சியைப் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால்தான் சில வேளைகளில் படிப்பிடிப்பு நீண்டு போகிறது. ஆனால் பொதுவாகத் தொழில்முறை நடிகர்களுக்கு இந்தச் சிக்கல்கள் ஏற்படுவதில்லை.

Spamyo: நீங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் நீங்கள் படங்களில் நடிப்பது போல பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறீர்களா?

எனக்கு உயிருக்குயிரான சில தோழிகள் இருக்கிறார்கள். ஆனால் நான் லெஸ்பியன் கிடையாது. என்னால் ஒரு பெண்ணைக் காதலிக்க முடியாது. நான் ஆண்களையே காதலிக்க விரும்புகிறேன்.

Kery- Dina: ஜஸ்மின் நாங்கள் உங்களது தொழிலை மிகவும் விரும்புகிறோம், மதிக்கிறோம். அத்துடன் சில விசயங்களைத் தெரிந்துகொள்ளவும் விரும்புகிறோம். இந்தத் தொழிலில் குறிப்பாக என்னென்ன சிரமங்களும் வலிகளும் உள்ளன என்று சொல்வீர்களா?

நிச்சயமாக, படப்பிடிப்பின் போது நீண்ட பொறுமையையும் சகிப்பையும் காட்ட வேண்டியிருக்கிறது. இந்தத் தொழிலுக்கு நேரகாலம் கிடையாது. பொதுவாகவே அதிகாலையிலேயே எழுந்து இரவில் மிகத் தாமதமாகத் தூங்க வேண்டியிருக்கிறது. நீண்ட தூரங்கள் பயணங்கள் செய்து வசதி குறைவான விடுதிகளில் தங்கி நடிக்க வேண்டியிக்கிறது. முக்கியமாக நடிகைகளுக்குள்ளே போட்டியும் பொறாமையும் நிலவுவதையும் சொல்ல வேண்டும். படப்பிடிப்பின் போது சக்தி வாய்ந்த விளக்குகளின் வெப்பத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். வெளிப்புறப் படப்பிடிப்புகளின் போது கடுங் குளிரிலோ அல்லது கடும் வெயிலிலோ ஆடைகளில்லாமல் நடிக்க வேண்டியிருக்கிறது. நீலப்படத் துறை மரபான சினிமாத்துறை போன்றதல்ல. இங்கே தொட்டதற்கெல்லாம் உதவியாளர்களும் பணியாளர்களும் இருக்கமாட்டார்கள். மரபான சினிமாத் துறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாதளவிற்கு மிகக் குறைவான சம்பளமே எங்களுக்கு வழங்கப்படுகிறது.

Silvy: ஜஸ்மின் எந்த நடிகையை நீலப்படத் துறையில் உங்கள் முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறீர்கள்?

உண்மையிலேயே நான் யாரையுமே முன்மாதிரியாகக் கொள்ளவில்லை. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

T Man: நீங்கள் ரம்ழான் நோன்பிருக்கிறீர்களா? நோன்பு காலப் பகுதியில் படப்பிடிப்புக்குப் போவீர்களா? போவீர்களானால் எந்த நேரத்தில் நடிக்கிறீர்கள்?

இல்லை, நான் நோன்பிருப்பதுமில்லை, பெருநாளைக் கொண்டாடுவதுமில்லை. நான் ஒரு முஸ்லிமாகப் பிறந்திருந்தாலும் இப்போது நான் மார்க்கத்தைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனாலும் நான் இப்போதும் இறை நம்பிக்கையுடையவள்தான். நான் விரும்புவதை நான் செய்கிறேன். நான் விரும்பியவாறு நான் வாழ்கிறேன். நான் என்னையும் பிறரையும் எப்போதுமே மரியாதை செய்கின்றேன். நான் வித்தியாசமான ஒரு தொழிலைச் செய்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் அந்தத் தொழிலைச் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் தைரியமாக, வெளிப்படையாக இருக்கும் அதே தருணத்தில் அதன் விளைவுகளையும் நானறிவேன். என்னால் போலித்தனமாக இருக்க முடியாது. நான் எனது கன்னிமையை எனது இருபதாவது வயதில்தான் என் காதலனிடம் கொடுத்தேன். நான் அந்தக் காதலனுடன்தான் இப்போதும் சேர்ந்து வாழ்கிறேன். என்னிடம் நீதி விசாரணை நடத்தவும் எனக்குத் தீர்ப்பளிக்கவும் இறைவன் ஒருவனைத் தவிர வேறெவருக்கும் உரிமையில்லை. நீங்கள் நோன்பிருக்கிறீர்களா? இருந்தால் உங்களுக்கு எனது ரம்ழான் வாழ்த்துகள்.

(‘புதுவிசை’ (ஏப்ரல்- யூன்) இதழில் வெளியாகியது)