அத்தியாயம் 1

32.2k படித்தவர்கள்
22 கருத்துகள்

“எதுவோ, இல்லைன்னு வருகிறவர்களுக்கு ஒருவேளை சோறு போடலாம். கையிலே கிடைச்சதைக் கொடுத்து, இன்னம் இரண்டிடம் பாரென்று சொல்லலாம். அதற்கு மேலே நாம் என்ன செய்யமுடியும்? செய்ய நாம் என்ன சூணும்பேடா, நெறும்பூரா, விட்டலாவரமா, நமக்கு ஏது அவ்வளவு சொத்து? பெரிய பெரிய ஜெமீன் வைத்திருக்கிறவங்க, எச்சைக் கையாலே காக்காய் ஓட்ட மாட்டேனென்கிறார்கள். நான் ஏதோ, என் சக்தியானுசாரம் தர்மம், உதவி செய்துகொண்டுதான் வருகிறேன். ஆகையினாலே, என்கிட்ட நீ ஒண்ணும் எதிர்பார்த்துப் பயனில்லை.” - காலை எட்டு மணிக்குக் கலியாணச் செலவுக்கு ஏதாவது பொருள் உதவவேண்டுமென்று கெஞ்சின கணக்கப்பிள்ளை கபால மூர்த்திக்கு, மிராசுதாரர் ஆலாலசுந்தரர், இப்போதனை புரிந்து அனுப்பினார்.

காலை பதினொரு மணிக்கு, மிராசுதாரரின் தூரபந்து ஓர் கிழவர், தள்ளாடி நடந்து பக்கத்துக் கிராமத்திலிருந்து வந்து சேர்ந்தார்.

“பெரிய எழவாப் போயிடுத்து! இது என்ன அன்னசத்திரமா? ஓயாமடமா? இப்படி வருகிறவர்கள் போகிறவர்களுக்கு வடித்துக் கொட்டிக்கொண்டிருந்தா, என் தலை மொட்டையாக வேண்டியதுதான். எங்கே வந்தானாம் கிழவன்? கூழ்கூடச் செய்யவில்லையே இன்று. போகச் சொல்லு, வேறே எங்காவது; இன்னக்கி பஜனை கோயிலிலே என்னமோ விசேஷமாம், சோறு போடுகிறார்களாம், அங்கே போய்த் தின்னச் சொல்லு.”

இது மிராசுதாரரின் உத்தரவு! கிழவர், “சிவனே, எந்த ஜென்மம் எடுத்தாலும் எடுக்கலாம். ஏழை ஜென்மம் மட்டும் கூடாதடா அப்பா! என்னமோ நம்ம பாத்யக்காரனாச்சே, போனா ஒரு வேளை சோறு போடமாட்டானான்னு வந்தேன். பிச்சைக்காரருடன் போய்ச் சாப்பிடச் சொன்னான். சுகமா வாழட்டும், ஒரு வேளைச் சோறு இல்லைன்னா உயிரா போயிடும்! போனாத்தான் என்ன? இப்படிச் சீரழிவு படுவதைவிடச் சாவதே மேல்’’ என்று சோகித்துக் கூறிவிட்டு, கிழவர் கோயிலிலே போய்ப் படுத்துக்கொண்டிருந்துவிட்டு, பட்டினியுடன் போராடினார்.

மாலை ஐந்து மணிக்கு, மகேஸ்வரர் கோயிலிலே மிராசுதாரரின் பேருக்கு அர்ச்சனை நடந்தது. பக்திகொண்டவர்கள் அவருடைய பகவத் சேவையைப் பாராட்டினர். இரவு 9 மணிக்கெல்லாம் மிராசுதாரர், தாசி தமயந்தி வீட்டிலே, வெள்ளித் தாம்பாளத்திலே இருந்த வெற்றிலை பாக்கைப் போட்டுக்கொண்டு, பொழுதுபோக்காக நண்பர்களுடன் சீட்டாடிக்கொண்டிருந்தார். வேடிக்கையாட்டத்திலே நாற்பது ரூபாய்வரை போய்விட்டது. ஜெயித்தது தமயந்தியின் தங்கை ஜெயா! ஆகவே, நஷ்டமல்ல அது! என்றைக்கேனும் ஒரு நாள் உதவும்! அட்வான்சு தொகை!!

இதுபோல் பணம் கேட்டால் இல்லை, சோறு கேட்டால் கிடையாது என்ற லோபித்தனமும், ஊர்மெச்சிக்கொள்ள பக்தி வேடமும், லீலைக்குப் பொருள் விரயமும், செய்வதே மிராசுதாரரின் நித்ய கர்மானுஷ்டானமாக இருந்தது. அவருடைய ஈரமற்ற நெஞ்சைப் பற்றி உரக்கப் பேசவும் ஊராரால் முடியாது. பெரிய இடத்துப் பகை நமக்கேன் என்ற பயம்! பணக் கோட்டையிலே அவர் இருந்து வந்தார். அவரைக் கண்டிக்க எவருக்கும் முடிவதில்லை. ஊரிலே எந்த வியாபாரியும் அவருடைய ஆதரவு இருந்தால்தான் வாழமுடியும்! எங்கு எந்த நிலம் விற்பனைக்கு வந்தாலும், அவர் என்ன சொல்கிறார் என்று தெரிந்த பிறகே மற்றவர்கள் பேசுவார்கள். அவ்வளவு செல்வாக்கு! அந்த ஊருக்கு அவர்தான் ராஜா! அவர் உரத்த குரலிலே என்ன சொல்கிறாரோ அதுதான் சட்டம். மந்திராலோசனை மன்றத்திலே அவரோடு சேர்த்து மூன்றே பேர். தாசி தமயந்தி, கோயில் குருக்கள் குமரகுருபரர், அவர்.

தமயந்தியின் தாயாருக்கும் குமரகுருபரருக்கும் பாலியத்திலே சினேகிதம். அதன் பயனாகத்தான் தமயந்திக்கு மிராசுதாரரின் தயவு கிடைத்தது. இந்த மந்திராலோசனை மன்றத்திலே ஆகும் தீர்ப்பை, அந்த ஊரிலே யாராலும் மாற்ற முடியாது. யாராவது முணமுணத்தால், அவர்கள்மீது திடீரென்று சிவிலோ, கிரிமினலோ, கேஸ் கிளம்பும்! அவர்கள்பாடு ஆபத்துதான்! இவ்வளவு சொத்துக்காரராக இருந்த அந்தச் சீமானுக்குப் பிள்ளை குட்டியும் கிடையாது. யாரோ இவர் பாடுபட்டு ஊரை மிரட்டி சேர்க்கும் பொருளை ஆண்டு அனுபவிக்கப் பல்லை விளக்கிக்கொண்டே இருந்தார்கள். தமயந்தியோ, மிராசுதாரரின் காலம் தீருவதற்குள் கறந்தால் உண்டு, அவர் கண்ணை மூடிக்கொண்டால் தனக்கு ஒன்றும் கிடைக்காது என்ற உண்மையை உணர்ந்தவள்.

மிராசுதாரருக்கு இன்ன வியாபாரம் என்று குறிப்பிட்டுக் கூறமுடியாது. எதெது மலிவாகக் கிடைக்குமோ அவற்றை வாங்குவார், கிடங்குகளில் சேர்ப்பார். மார்க்கட்டிலே அந்தப் பொருள் கிடைப்பது கஷ்டமாகி, மக்கள் தவிக்கும் வரையிலே வெளியே விடமாட்டார். கிடைத்தால் போதும், என்ன விலைக்கு வேண்டுமானாலும் வாங்கித்தானே தீரவேண்டும் என்ற நிலைமை வரும்போது, அந்தப் பொருளை விற்க ஆரம்பிப்பார். கொள்ளை லாபம் என்று கூறவேண்டுமா? எத்தனையோ ஏழைகளின் கண்ணீர் படிந்தது அவரிடம் குவிந்த பணம்! அந்தக் கண்ணீரென்ன, வெள்ளி ரூபாயின் மதிப்பைக் குறைக்குமா? தங்கத்தின் மாத்து குறையும்படிச் செய்யுமா? பணம் பேசவா போகிறது அவரிடம்!

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

எட்டிக்கொட்டை முதல் எலுமிச்சம்பழம் வரையிலே, இலுப்பைப் பிண்ணாக்கு முதல் இஞ்சி வரையிலே, எது கிடத்தாலும் மலிவு என்றால் வாங்குவார், விலை ஏறினதும் விற்பார். மிராசுதாரரின் செல்வம் பெருகியதிலும், அவர் வாழ்ந்த இடத்தைச் சுற்றியுள்ள பிரதேசம் பாழாகிக்கொண்டு ஏழைகள் அதிகரித்ததிலும் ஆச்சரியமென்ன இருக்கமுடியும். உடலிலே காச நோயிருப்பின், ஆள் இளைக்காமல் இருக்க முடியுமா?

மிராசுதாரரின் சொத்துக்குப் பல் விளக்கிக்கொண்டிருந்த பார்த்திபன், வெளியூரிலேயே விவேகிகள் கழகம் என்று ஓர் ஸ்தாபனம் வைத்துக்கொண்டு, தலைவனாக முயற்சித்துக்கொண்டிருந்தான். தலைமை ஸ்தானம் தனவந்தனாகப் போகும் தனக்குக் கிடைக்காமல், வேறு யாருக்கு என்று அவன் நினைத்ததிலே தவறென்ன இருக்க முடியும்! அவன் புகழ்பெறுவது கேட்டு, முதலிலே மிராசுதாரர் பயந்தார். இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டால் நம்மை இவன் மதிப்பானா என்று. மிராசுதாரரிடம் மிக மரியாதையாக முதலிலே நடந்துகொண்ட பார்த்திபன், நாளாகவாகச் சொத்து நிச்சயம் தனக்குத்தான் என்பதை பிரபல வக்கீல்கள் கூறிடக் கேட்டு, மிராசுதாரரைப் பற்றித் தன் நண்பர்களிடம் அலட்சியமாகவே பேசி வரலானான். மிராசுதாரருக்கு அவன் மனநிலையும், நண்பர்களிடம் அவரைப் பற்றி அவன் பேசுவதும் என்ன தெரியும்!

“சுத்த பட்டிக்காடு! மகா பேராசை! ஊரிலே ரொம்ப கெட்ட பெயர்! என் முகத்துக்காக அவரைப் பற்றிப் பத்திரிகைகள் கண்டிக்காமலுள்ளன. ஈவு இரக்கமே கிடையாது’’ இவை, மிராசுதாரருக்கு பார்த்திபன் தந்துவந்த அர்ச்சனைகள்- நண்பர்களிடம்.

இரண்டு பேருக்கும் உள்ளூர் மூண்டுவரும் பகையை, குருக்கள் மோப்பம் பிடித்தார். அவருடைய மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. இந்தப் பகையை வளர்த்துவிட வேண்டும், இருவரும் சந்தேகப்பட முடியாதபடி! இந்தப் பிளானில் அவர் வேலை செய்தார். ஜெயாவுக்கு வேறு பிளான்! மிராசுக்கு வாரிசாக வரப்போகிற வாலிபன் கிடைத்துவிட்டால்... இந்தத் தேன் நினைப்பு ஜெயத்துக்கு. இந்த இடுக்கிக்குள் சிக்கியிருப்பது சீமானுக்குத் தெரியாது.

விவேகிகள் சங்கத் தலைவர், சண்டமாருதப் பிரச்சாரம் செய்யலானார். நீதியின் அவசியத்தைப் பற்றி. சமூக நீதி, அரசியல் நீதி என்று ஆரம்பமாகி, பொருளாதார நீதியிலே புகுந்தது பிரச்சாரம். எல்லா பேதங்களையும் அதிகமாக வளர்ப்பது பொருளாதார பேதம்தான். எத்தகைய விடுதலை கிடைத்தாலும் கானல் நீராகவே முடியும், பொருளாதாரப் பேதம் ஒழியாவிட்டால் என்று பார்த்திபன் பேசுவான். திரள் திரளான மக்கள் வாழ்த்துவர், வணங்குவர், பார்த்திபனுக்கே ஜே போடுவர். அவர் ஒரு பேச்சு சொன்னால் போதும் ஊரைக் கலக்கிவிடுவோம் என்று கூறவும் ஓர் கூட்டம் தயாராகிவிட்டது. பத்திரிகைகள் பார்த்திபன் புகழைப் பாராட்டுவது கண்டு பூரித்த சீமான், பிறகு அவனது செல்வாக்கு என்னும் சண்டமாருதம், தன் போன்றோரைத் தாக்கும் அவ்விதமான பிரச்சாரத்தினால் என்பதைக் கண்டு கலங்கினார். இரண்டோர் முறை இதமாகச் சொன்னார். “இந்தக் காலத்திலே இவ்விதம் பேசினால்தான் இனிக்கும்’’ என்று இளித்துக்கொண்டே பார்த்திபன் சமாதானம் கூறுவான். மிராசுதாரர், “என்னமோ தம்பி! நீ கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பேசணும். நீ ஒரு உயர்ந்த அந்தஸ்துக்கு வரவேண்டியவன் பாரு’’ என்று எச்சரிக்கை செய்துவந்தார்.

பார்த்திபனுக்கொன்றும் சமதர்ம வேட்கை கிடையாது! சுலபமாகத் தலைவனாக அந்தச் ‘சுருதி’யை உபயோகித்தான். அது பிறகு, சுருக்குக் கயிறாகுமோ என்ற சிந்தனை கிடையாது.

*****

பார்த்திபனின் பிரசங்கத்தால் புரட்சி வீரனானான் குமார் என்ற ஏழைக் குடியானவன். எங்கெங்கு பார்த்திபன் பிரசங்கம் நடந்தாலும், எப்படியாவது போய்விடுவான், அதைக் கேட்க. பார்த்திபன், “ஆகவே நண்பர்களே! இந்தப் பொருளாதார பேதம் ஒழியா முன்னம் நம் நாடு சீர்ப்படாது. நாம் வாழமுடியாது. முதலாளித்தனம் ஒழிய வேண்டும்’’ என்று தீப்பொறி பறக்கப் பேசும்போது குமாரைப் பார்க்க வேண்டும். குதிப்பான், கூவுவான், கை தட்டுவான். `பா-ட்-டாளிகளுக்குப் பாடு-படும் பார்த்திபனுக்கு ஜே!’ என்ற கோஷம் அரை பர்லாங்கு கேட்கும், அடிவயிற்றிலிருந்து வரும் குமாருக்கு!

ஒரு நாள் பார்த்திபனின் பிரசங்கத்தைக் கேட்ட பூரிப்போடு வீடு நுழைந்த குமார், தன் வயோதிக தகப்பனார் வாட்டத்தோடு இருக்கக் கண்டான். குமாரின் தகப்பனார், தன் குடும்ப கஷ்டத்தை மகனிடம் சொல்லுவதில்லை. அவன் மனதை ஏன் புண்ணாக்கவேண்டுமென்று. அன்று சொல்லவேண்டி இருந்தது.

“அப்பா குமார்! நாளைக் காலையிலே எங்கேயும் வெளியே போய்விடாதே. வேலை இருக்கிறது.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“என்ன வேலையப்பா?”

“நாளைக்கு ஒரு பத்திரம் எழுதணும், நீயும் கையெழுத்துப் போடணும்.”

“பத்திரம் எதற்கு?”

“அடயேண்டா! வயிற்றெரிச்சலைக் கிளப்பறே. நம்ம நிலம், வீடு எல்லாத்தையும் மிராசுதாரனுக்கு விக்ரயம் செய்றேன். அந்தப் பத்திரம்தான். உனக்கென்ன தெரிஞ்சுது. அவன்கிட்ட பட்ட கடன், வட்டியும் அசலும் சேர்ந்து நம்ம சொத்தைச் சாப்பிட்டுவிட்டது. அவனாக ஜப்திக்கு வந்து நம்ம மானத்தை வாங்குவதற்குள், நாமாகவே கடனைக் கொடுத்தவனுக்குச் சொத்தை எழுதிக் கொடுத்துவிட்டு கையைக் காலைப் பிடித்துக்கொண்டு, இந்த வீட்டிலேயே நாங்கள் குடக்கூலிக்கு இருக்கிறேமென்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டால் மனசு இரங்கும். பார்க்கணும், பகவான் எந்த வழிவிடுகிறாரோ?”

குமாரின் உடல் பதறிற்று, கண்களிலே நீர் ததும்பிற்று. தனது குடும்ப நிலைமையை உணராமல் குன்றுபோல் வளர்ந்துவிட்டதை எண்ணித் துக்கித்தான், வெட்கமடைந்தான். அன்றிரவு அவன்பட்ட வேதனை சொல்லுந்தரத்ததன்று. “ஆஹா! பார்த்திபன் கூறும் திட்டம் இருந்தால், நமக்கு இத்தகைய கதியா ஏற்படும்?” என்று எண்ணி பதைத்தான்.

பத்திரத்திலே கையொப்பமான பிறகு, குமாரின் தகப்பனார் அடியற்ற நெடுமரம்போல், மிராசுதாரரின் காலில் விழுந்து, “தர்மப் பிரபு! இந்த ஒரு தயவு செய்யவேண்டும். மூன்று தலைமுறையாக அந்த வீடு எங்களுக்குச் சொந்தம். மாதா மாதம் பூமேலே வைத்து குடக்கூலி கொடுத்துவிடுகிறேன். அதிலே குடித்தனம் செய்ய உத்திரவு தரணும்’’ என்று கெஞ்சினார்.

கிழவர், மிராசுதாரர் காலில் விழுந்தபோது குமாருக்கு நெஞ்சிலே நெருப்பு விழுவதுபோல இருந்தது. விழுந்த ஆளை அலட்சியமாக எண்ணி, வெள்ளித் தாம்பாளத்திலிருந்து வெள்ளை வெற்றிலையை எடுத்து, கிளாஸ்கோ மல் துணியிலே துடைத்து, கலர் சுண்ணாம்பு தடவி வாயிலே போட்டு மென்றபடி மிராசுதாரர், “அதுக்கென்னையா இப்போ அவசரம் முழுகிடுத்தா? எழுந்திரு, எழுந்திரு. கடன் கொடுத்தா இவ்வளவுதான். காலில் விழுவது, கள்ளக் கும்பிடு போடுவது, கெஞ்சுவது, போதும். வீடு விக்கிரயம் ஆனதற்கு கொஞ்ச நாளாவது அதை நீ காலி செய்யணும். அப்போதான் அது விக்கிரயமானவங்களுக்கு ஸ்வாதீனமாகும். பிறகு பார்ப்போம் போ’’ என்று மிராசுதாரர் கூறினபோது, குமார் தன் மனத்திலே எண்ணினதை மட்டும் வாய்விட்டுச் சொல்லியிருந்தால், சட்டம் அவனைச் சுக்கு நூறாக்கியிருக்கும்.

(தொடரும்)