அத்தியாயம் 1

22.59k படித்தவர்கள்
11 கருத்துகள்

காணிக்குற்றம் கோடிக்கேடு

ல்யாணியம்மாளும், சிவஞான முதலியாரும் சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை அடைந்து, அந்த ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டரே இல்லையென்றும், அதற்குச் சிறிது நேரத்திற்கு முன் எந்த இன்ஸ்பெக்டரும் குதிரையின் மீதேறி அங்கே வரவில்லை என்றும் சப்இன்ஸ்பெக்டர் சொல்லக் கேட்டுத் திகைத்துக் கல்லாகச் சமைந்து நின்றதாகச் சொல்லப்பட்டது அல்லவா.

அவ்வாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் போல வேஷம் போட்டு வந்து கொள்ளையடிப்பது, அதுவரையில் கண்டும் கேட்டுமிராத அபூர்வ சம்பவமாதலால், அதைக் கேட்ட கல்யாணியம்மாள், சிவஞான முதலியார், வண்டிக்காரன் ஆகிய மூவரும் அதியாச்சரியமடைந்ததன்றி, சப்இன்ஸ்பெக்டரும், இதர ஜெவான்களும் அந்த வரலாற்றைக் கேட்டு அளவற்ற வியப்பும் திகைப்பும் அடைந்து, அப்படியே மூக்கின் மீது விரலை வைத்து ஒன்றையும் சொல்ல மாட்டாமல் வாய்பேசா ஊமைகளாக நின்றனர். அவ்வாறு, ஐந்தாறு நிமிஷ நேரம் கழிய, அந்த ஸ்டேஷன் சப்இன்ஸ்பெக்டர், முதலில் ஒரு ஜெவானைத் தமது வீட்டிற்கு அனுப்பி, ஒரு சேலையையும் சில வஸ்திரங்களையும் எடுத்துவரச் செய்து, அம்மூவருக்கும் கொடுத்து அணிந்துகொள்ளச் செய்த பின்னர்; அவர்கள் யாரென்ற விவரங்களையும், வழிப்பறியின் வரலாறுகளையும், திருடன் அடிபட்டிருந்த பின், போலீஸ் இன்ஸ்பெக்டரைப் போல வந்தவர் சொத்துகளடங்கிய மூட்டையை எடுத்துக்கொண்டு ஓடிப்போன விவரத்தையும், அவ்வாறு மூட்டையை அபகரித்துக்கொண்டு போனவரது உயரம், பருமன், நிறம், உத்தேச வயது முதலிய குறிப்புகளையும், அவர் ஏறி வந்த குதிரையின் அங்க அடையாளங்களையும், மூட்டைக்குள்ளிருந்த பொருட்களின் விபரங்களையும் நன்றாகக் கேட்டு, அவர்களது வாக்குமூலங்களை வாங்கிக்கொண்ட பின், பிணங்களை வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு, அவர்களைப் பெட்டிவண்டியில் ஏறிக்கொள்ளச் செய்தார். அதன் பிறகு சப்இன்ஸ்பெக்டர் தமது கத்தி, துப்பாக்கி முதலியவற்றை எடுத்துக்கொண்டு, ஆயுதபாணிகளான வேறு நான்கு ஜெவான்களையும் அழைத்துக்கொண்டு, வழிப்பறி நடந்த இடத்திற்குப் பெட்டிவண்டியை ஓட்டும்படி செய்து தாமும் ஜெவான்களோடு அந்த இடத்திற்கு வந்தார். சிவஞான முதலியாரும், வண்டிக்காரனும் கீழே இறங்கி, எந்தெந்த இடத்தில் என்னென்ன காரியம் நடந்ததென்பதை நன்றாகக் குறித்துக் காட்டினர். அவ்வளவோடு திருப்தியடைந்த சப்இன்ஸ்பெக்டர், அவர்கள் தங்களது ஊருக்குப் போகலாமென்றும், மாஜிஸ்டிரேட்டு அவர்களுக்கு உத்தரவு அனுப்பும்போது ஆஜராகி, தம்மிடத்தில் வாக்குமூலம் கொடுக்க வேண்டுமென்றும் கூற, சிவஞான முதலியார் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டதன்றி, தாங்கள் தனிமையில் ஊருக்குப்போக அஞ்சுவதால் தங்களோடு சில ஜெவான்களையும் பந்தோபஸ்தாக அனுப்பும்படி கேட்டுக்கொள்ள, சப்இன்ஸ்பெக்டர், அவர்களோடு இரண்டு ஜெவான்களை அனுப்பிவிட்டு, மூட்டையை எடுத்துக்கொண்டு போன வேஷதாரியின் குதிரைக் குளம்படியைப் பின்பற்றியபடியே போய் அவர் யாரென்பதைக் கண்டுபிடிக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, சைதாப்பேட்டை பக்கமாக நடந்தார். பெட்டிவண்டி விடியற்காலம் ஐந்து மணிக்கு மாரமங்கலம் சமஸ்தானத்து பங்களாவின் வாசலில் வந்து நின்றது. சிவஞான முதலியார் கல்யாணியம்மாளை இறங்கச் செய்து, தாம் அன்று பகலில் மறுபடியும் வருவதாகச் சொல்லிவிட்டு, பெட்டிவண்டியோடு தமது ஜாகைக்குப் போய்ச் சேர்ந்தார்.

கல்யாணியம்மாள் அதிக சந்தடி செய்யாமல் பங்களாவிற்குள் நுழைந்து தனது அந்தப்புரத்தை அடைந்தாள். அவள் அந்த இரவு முழுதும், பட்ட பாடுகளினால் களைத்துப்போய் முற்றிலும் தளர்ந்து சோர்வடைந்தவளாய், தனது கட்டிலின் மேல் உட்கார்ந்து அப்பாடா என்று படுத்தாள். இரண்டு நாட்களாகச் சிறிதும் துயிலாமலும், சரியானபடி போஜனம் செய்யாமலும், பலவிடங்களுக்குச் சென்றலைந்த துன்பங்களினாலும், பலவகைப்பட்ட மனவேதனைகளினாலும், திருடர்களது பீதியினாலும் தளர்ந்து தள்ளாடி ஓய்ந்து எப்போது படுக்கப் போகிறோமென்ற அளவற்ற ஆவலோடு வந்தவளாதலால், கட்டிலில் படுத்தது அவளுக்கு பிரம்மாநந்த சுகமாக இருந்தது. கட்டிலில் படுத்துக் கை, கால்களை நீட்டிவிட்டு இப்புறம் அப்புறம் இரண்டு மூன்று முறை புரண்ட பிறகே, அவளது தேகம் கட்டுக்கடங்கியது. அவ்வாறு அவளது சரீரம் சிறிது அமைதியடைந்ததானாலும் அவளது மனத்துன்பங்கள் மாத்திரம் பழைய நிலைமையிலேயே இருந்து அவளை வதைத்துக்கொண்டிருந்தன. இன்னதென்று அறியவொண்ணாத பலவகையான சஞ்சலங்கள் அவளது மனதையும் அடிவயிற்றையும் குழப்பிப் புண்படுத்திக் கொண்டிருந்தன. ஐந்து நிமிஷ நேரம் படுத்திருந்தவள் உடனே எதையோ நினைத்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்து தனது தலைப்பக்கத்திலிருந்த மின்சார விளக்கின் விசையை அழுத்த, அந்தப்புரத்தில் பளிச்சென்ற பிரகாசம் உண்டாயிற்று. அப்போது தற்செயலாக தனது உடம்பையும் சேலையையும் நோக்கிய கல்யாணியம்மாள் மிகவும் வெட்கமடைந்தாள். அவள் எப்போதும் வைர ஆபரணங்களையும், உயர்ந்த பட்டாடைகளையும் இடைவிடாமல் அணிந்திருப்பவளாதலால், எவ்வித ஆபரணமுமின்றி ஒளி மழுங்கி மரம் போல இருந்த தனது தேகத்தையும், தன் மீதிருந்த நான்கு ரூபாய் பெறுமானமுள்ள மதுரைச் சுன்னடிச் சேலையையும் பார்க்க, அவள் தனக்குத் தானே மிகுந்த லஜ்ஜை அடைந்ததன்றி, தான் மாரமங்கலம் ஜெமீந்தாரிணியான கல்யாணியம்மாள் தானோ என்ற ஒருவகையான ஐயமுங்கொண்டாள். தான் எதிர்பாராத வகையில் தனக்கு ஏற்பட்ட இழிவையும் ஆபத்தையும் நினைத்து அவள் இரண்டொரு நிமிஷ நேரம் தனக்குள் துக்கித்தவளாய், தான் அப்படிப்பட்ட கேவலமான நிலைமையிலிருப்பதை எவரேனும் காண்பாரானால், அதனால் தனக்கு மிகுந்த இழுக்கே நேருமென்று நினைத்தவளாய், சரேலென்று கட்டிலை விட்டிறங்கி, தனது ஆடையாபரணங்களிருந்த பெட்டிகளைத் திறந்து, உயர்வான வேறொரு சேலையையும், இன்னெரு ஜதை ஆபரணங்களையும் எடுத்து, அதிக விரைவாக அணிந்துகொண்டு, நிலைக்கண்ணாடியில் தனது அழகைப் பார்த்துத் திருப்தியடைந்தவளாய், சிறிது தூரத்தில் கிடந்த தனது சாய்மான நாற்காலியில் உட்கார்ந்து உல்லாஸ்மாகச் சாய்ந்துகொண்டாள். அவ்வாறு சாய்ந்ததனால், அவளது மனதின் வேதனைகள் திரும்பவும் தலைகாட்ட ஆரம்பித்தன. முதல் நாளைய இரவில் நடந்த வழிப்பறியின் நினைவே மற்றவைகளைவிட அதிக உறுதியாக மனதில் எழுந்து அப்போதே நிகழும் நாடகக் காட்சிபோல சான்னித்தியம் செய்யத் தொடங்கியது. அந்தத் திருடர்களை நினைக்கும்போதே அவளது தேகம் கிடுகிடென்று நடுங்கியது. அடிமுதல் முடிவரையில் உரோமம் சிலிர்க்க, தேகம் முழுதும் சகிக்கவொண்ணாத ஒருவித மரப்பு பரவியது. வண்டிக்காரனது அபார சக்தியினாலும், அபூர்வமான தந்திரத்தினாலும், தாங்கள் தப்பியதை நினைக்க நினைக்க, அவளது மனதில் ஒரு வகையான வியப்பும், ஆனந்தமும், தெய்வபக்தியும் சுரந்தன. போலீஸ் இன்ஸ்பெக்டரைப் போல உருமாரி வந்து, தங்களது மூட்டையை அபகரித்துக்கொண்டு போனவர் யாராயிருக்கக்கூடுமென்று, அவள் எவ்வளவு தூரம் யோசித்தும், எதுவும் விளங்காமல் போயிற்று. ஒருகால் அவர் சென்னையைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டராயிருப்பாரோ என்றும், அவரே சமயம் பார்த்து அவ்வாறு மூட்டையை அபகரித்துக்கொண்டு போயிருப்பாரோவென்றும், சென்னையிலும் பக்கங்களிலும் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்களையெல்லாம் சிவஞான முதலியாரைக் கொண்டு பார்க்கச்செய்தால், அந்தச் சந்தேகம் தீர்ந்துவிடுமென்றும் கல்யாணியம்மாள் எண்ணமிடலானாள். அவளுக்குத் தனது பணம், ஆபரணங்கள், சேலை முதலியவைகள் களவு போனதைப் பற்றி சிறிதும் விசனமே உண்டாகவில்லை, பாலாம்பாள் தனக்கு எழுதிக்கொடுத்த கடிதம் போனதைப் பற்றியே அவள் கரைகடந்த விசனமும் அளவற்ற கவலையுமடைந்தாள். ஆனால், தாங்கள் அந்தக் கடிதத்தை இழந்து விட்டோமென்ற செய்தி பாலாம்பாளுக்குத் தெரியாதாகையால், அந்தக் கடிதம் இன்னமும் தங்களிடத்தில் இருப்பதாகவே எண்ணி பாலாம்பாள் தனது வாக்குறுதியை நிறைவேற்றி வைப்பாள் என்ற ஒரு தைரியம் அவளது மனதில் இருந்து கொண்டிருந்தது. அத்தனை துன்பங்களைக் காட்டிலும் தானும் சிவஞான முதலியாரும் பத்திரத்தில் கையெழுத்திட நேர்ந்ததே மகா விபரீதமான துன்பமாகக் காணப்பட்டு, அவளை இடைவிடாமல் வதைத்துக் கொண்டிருந்தது. அன்றைய தினம் இரவில் கண்மணியம்மாளுக்கும், மைனருக்கும் நிச்சயதாம்பூல முகூர்த்தம் வைக்கப்பட்டிருந்த விஷயத்தில் தான் என்ன செய்கிறதென்று அவன் யோசித்து யோசித்து தனது மூளையைச் சித்திரவதை செய்துகொண்டது முற்றிலும் அவமானமாயிற்று. தாங்கள் முதல் நாள் எழுதிக் கொடுத்த பத்திரத்திற்கு முற்றிலும் மாறாக, அன்றைய தினமே வேறொரு பெண்ணைக் கலியாணம் செய்வதற்கு நிச்சயதார்த்தம் நடத்தினால், தாங்கள் பாலாம்பாளுக்கு உடனே ஒரு கோடி ரூபாய் கொடுக்க நேருமே என்று நினைத்துப் பெரிதும் கவலையும் பீதியும் கொண்டாள். ஆனது பற்றி நிச்சயதாம்பூல முகூர்த்தத்தை நிறுத்திவிட வேண்டும் என்ற யோசனையே நல்லதாகத் தோன்றியது. நிச்சயதாம்பூல முகூர்த்தம் நிறுத்தப்பட்டுப் போனதற்கு, தக்க காரணம் சொல்லாவிட்டால், மீனாக்‌ஷியம்மாள் சந்தேகப்படுவதன்றி, தன்னைப் பற்றிப் பலரிடத்திலும் அவதூறாக ஏதேனும் வம்பு பேசுவாளென்ற அச்சம் ஒரு புறத்தில் எழுந்தது. ஆதலால், முகூர்த்தம் இரண்டு நாட்கள் வரையில் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக எழுதி வைத்தால், அதன் பிறகுதான் சிவஞான முதலியாரோடு நன்றாக ஆற அமர யோசனை செய்து, மீனாக்‌ஷியம்மாளுக்கு முடிவான கடிதம் எழுதலாம் என்ற யோசனை தோன்றியது. உடனே, கல்யாணியம்மாள் எழுந்து முன்னதிகாரத்தில், மீனாக்‌ஷியம்மாள் கண்மணிக்குக் காட்டிய கடிதத்தை எழுதி வைக்க, பொழுதும் விடிந்தது. அவள் உடனே எழுந்து, தனது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தனது வேலைக்காரர்களில் ஐவரை அழைத்து, மீனாக்‌ஷியம்மாளுக்கு எழுதப்பட்ட கடிதத்தை ஒருவனிடம் கொடுத்தனுப்பிவிட்டு, வேறு நால்வரை, பங்களாக்களுக்கெல்லாம் அனுப்பி, முகூர்த்தம் பின்னால் நடக்கப் போகிறதென்று தனது பந்துமித்திரர்களுக்கு எல்லாம் சொல்லிவிட்டு வரும்படி அனுப்பிவிட்டு, திரும்பவும் உட்கார்ந்துகொண்டாள். அவளது மனநிலைமைகள் குடித்தவனது மனநிலைமையைப் போலவும், பைத்தியங்கொண்டவனது மனநிலைமையைப் போலவும், எண்ணிய விஷயத்தைப் பற்றியே திரும்பத் திரும்ப எண்ணிக்கொண்டிருந்தது. பாலாம்பாளது நினைவு உண்டானால் அவளுக்கு ஒரு பெருத்த பூதத்தைக் கண்ணிற்கெதிரில் காண்பதைப் போல இருந்தது. அவளும், சிவஞான முதலியாரும் பாலாம்பாளிடத்தில் சம்பவித்திருந்த சமயத்தில், மைனரால் எழுதிக் கொடுக்கப்பட்ட பத்திரத்தைத் தாங்கள் ஒப்புக்கொள்வதைப் போல நடித்து, மைனரைத் தப்பவைக்க வேண்டும் என்றும், அவ்வாறு அவன் தப்பி வந்த பிறகு தங்களது முந்தைய ஏற்பாட்டின்படி அவனுக்கும் கண்மணியம்மாளுக்கும் கலியாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்றும், அதன் பலனாக, கண்மணியம்மாளுக்கும் பாலாம்பாளுக்கும் பலவிதமான சச்சரவுகள் உண்டாகும் என்றும், கண்மணியம்மாள் துன்பப்பட வேண்டும் என்றும் நினைத்திருந்தாள். ஆனால், அந்தப் பத்திரத்தில், தாங்களும் கட்டாயமாகக் கையெழுத்திடும்படி நேர்ந்ததும், அதன் பிறகு கண்மணியைக் கலியாணம் செய்து வைத்தால், தாங்கள் பாலாம்பாளுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கும்படியான நிலைமையில் தாங்கள் இருப்பதும் அவளுக்குச் சகிக்க இயலாத துன்பமாகத் தோன்றியது. தாங்கள் அவளை ஏமாற்ற நினைக்க, அவளே மகா சமர்த்தியமாக ஏமாற்றி, தங்களை அவளுக்குக் கட்டுப்பட்டவர்களாகச் செய்துகொண்டதை நினைத்து நினைத்து நடுநடுங்கினாள். மைனருக்குப் பின், சமஸ்தானத்திற்கு வாரிசாக ஏற்பட, அவன் அக்கினி சாட்சியாகத் தாலி கட்டின மனைவியின் வயிற்றில் ஓர் ஆண் குழந்தை பிறந்தே தீர வேண்டும் என்பதை அவள் அறிவாளாதலால், மைனருக்குத் தாம் எப்படியும் கண்மணியைக் கலியாணம் செய்து வைத்தே தீர வேண்டும் என்றும், அதனால், தங்களுக்கும், பாலாம்பாளுக்கும் எவ்வகையான சச்சரவுகளும், வியாஜ்ஜியங்களும், பொருள் நஷ்டமும் ஏற்பட்டாலும் அவற்றிற்குத் தாம் ஆளாகியே தீர வேண்டும் என்றும் அவள் எண்ணமிடலானாள். அவள் ஒருகால் மைனரைச் சிறைச்சாலையில் இருந்து மீட்பாளோ மீட்க மாட்டாளோ என்ற சந்தேகமும் உண்டாயிற்று. ஆனால், தாங்கள் அவளுக்கு ஏராளமான பொருள் கொடுப்பதாகவும் வேறு பல சுதந்திரங்களை உண்டாக்கிக் கொடுப்பதாகவும், ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்திருக்கையில், அவள் அப்படிப்பட்ட பெருத்த அதிர்ஷ்டத்தையும் சந்தர்ப்பத்தையும் இழந்துவிட நினைக்க மாட்டாளாதலால், அவள் மைனரை எப்படியும் விடுவிப்பாள் என்ற உறுதியான நம்பிக்கையும் உண்டாயிற்று. அவ்வாறு பல வகையான துன்பங்களில் அகப்பட்டுத் தத்தளிக்க நேர்ந்ததைப் பற்றி அவள் பெரிதும் துயருற்றிருந்த நிலைமையில் அப்போதைக்கப்போது, அவளது மனதில் மதனகோபாலனது நினைவும் எழுந்தெழுந்து மறைந்தது. அவனது விஷயத்தில் தான் செய்தது பெருத்த அக்கிரமமான காரியம் என்பதும் அவளது மனதில் அடிக்கடி பட்டது. ஆனால் கண்மணியம்மாள் அவன் மீது பிரியம் வைக்கலாமா என்ற எண்னமும், தான் நிஸ்டிகபடமாக அவன்மீது வாத்சல்யம் வைத்து, அவனை அனைத்துக் கொள்ள எவ்வளவு மன்றாடியும், மிகவும் கேவல நிலைமையில் இருப்பவரான அந்தச் சிறுவன் அதை மறுக்கலாமா என்ற எண்ணமும் தோன்றவே, தான் செய்த காரியங்கள் யாவும் அவனுக்கு நியாயமான தண்டனைகளே என்று அவள் தனக்குத்தானே ஒருவாறு ஆறுதல் செய்துகொண்டாள். எந்த பங்களாவிலும் அவனைச் சேர்க்காமல் எல்லோரும் அவனை விலக்கியிருப்பது நிச்சயமாதலால், இனி அவனால் தனக்கு எவ்விதமான இடரும் ஏற்படாதென்று நினைத்தவளாய், அவள் ஒறுவாறு திருப்தியடைந்து உட்கார்ந்திருந்தபோது, அவளுக்குத் தனது புதல்வியரது நினைவு உண்டாயிற்று. தாங்கள் திருடர்களிடத்தில் அகப்பட்டுக்கொண்ட விஷயத்தையும், நிச்சயதாம்பூல முகூர்த்தம் ஒத்தி வைக்கப்பட்ட விஷயத்தையும், தான் அவர்களுக்கு ஒருவாறாக அறிவித்து வைக்க வேண்டியது அவசியமாகத் தோன்றியது. ஆகவே, அவள் உடனே ஒரு வேலைக்காரியைக் கூப்பிட்டு, தனது புத்திரிகளை அழைத்து வரும்படி உத்தரவு செய்ய, அவள் அவ்வாறே அழைத்துவரப் போய்விட்டாள். போனபின், கல்யாணியம்மாள் அந்த விஷயங்களைத் தனது குமாரிகளிடத்தில் எவ்வாறு மாற்றிக் கூறுவதென்பதைக் குறித்து சிந்தனையில் ஆழ்ந்தாள். ஆனால் அந்தச் சீமாட்டி மற்ற எல்லோரைக் காட்டிலும், தனது மூத்த புத்திரியான துரைஸானியம்மாளிடத்திலேயே அதிக அச்சம் கொண்டிருந்தாளாதலால், தான் அவளிடம் பொய் பேசுவதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற கவலையும் தோன்றியது. மதனகோபாலனது விஷயத்தில் துரைஸானியம்மாள் தனது உண்மையை அறிந்துகொண்டாள் என்ற பெருத்த பயம் அவளது மனதில் தோன்றி வதைத்துக்கொண்டே இருந்தது.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அவ்வாறு ஐந்து நிமிஷநேரம் கழிந்தது. அப்போது ஒரு வேலைக்காரன் வாசற்படிக்கு அப்பால் நின்ற வண்ணம், ‘அம்மணி அம்மணி!’ என்று பயபக்தியோடு கூப்பிட, கல்யாணியம்மாள் திடுக்கிட்டு நிமிர்ந்து, “யாராடா அது? வா இப்படி” என்று அதிகாரமாக அழைக்க, அந்த பங்களாவின் வாசற் காவற்காரன் உள்ளே நுழைந்து அடங்கி ஒடுங்கி, அவளுக்கெதிரிற் சிறிது தூரத்தில் வந்து நின்று, ஒரு கும்பிடு போட்டு நிற்க, அவனைக் கண்டு ஒருவாறு சஞ்சலமடைந்த கல்யாணியம்மாள், “என்னடா சங்கதி? எங்கே வந்தாய்” என்று அதிகாரமாகக் கேட்க, அந்த வேலைக்காரன் “ஒண்ணுமில்லிங்க: வாசல்லெ ஒரு ஐயா வந்திருக்கிறாரு இவரு இருக்கிறது. மைசூராம். நம்ப கிட்டுனாபுரம் செமீந்தாரையா மைசூரு சந்தனக்கட்டை யாபாரம் பண்ணறாவளல்ல அவுங்களோடெ கூட்டாளியாம் இவுரு. எசமானெப் பார்க்கணுமாம்; கேட்டுக்கினு வரச்சொன்னாரு. ரொம்ப பெரிய மனிசருகணக்கா இருக்கறாரு” என்றான்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் ஒருவகையான வியப்பும் திகைப்பும் அடைந்து தனது நெற்றியை அழுத்திக்கொண்டு இரண்டொரு நிமிஷநேரம் சிந்தனை செய்தாள். கிருஷ்ணாபுரம் என்பது மாரமங்கலத்துப் பக்கத்தில் உள்ள இன்னொரு பெருத்த சமஸ்தானம்; அதன் ஜெமீன்தார் சுமார் ஐம்பது வயதடைந்தவர். அவரது மனைவி மக்கள் முதலியார் இறந்துவிடவே, அவர் அந்த விரக்தியாலும் வேறு பல ரகசியமான காரணங்களாலும் அவர் அந்த ஊரைவிட்டுப் பதினைந்து வருஷ காலமாக மைசூரிலிருந்து பெருத்த முதல் வைத்து சந்தனக்கட்டை வர்த்தகம் செய்துவந்தார். அவர் தமது சமஸ்தானத்தில் குடிகளிடத்தில் இருந்து தமக்குச் சேரவேண்டிய வரிகளை வசூலித்துத் தமது காரியங்களை எல்லாம் நிருவகிப்பதற்கு கிருஷ்ணாபுரத்தில் ஓர் ஏஜண்டை வைத்திருந்தார். அவரது தம்பியின் குழந்தைகளே கண்மணியம்மாள் துரைராஜா என்ற இருவர்களும்; மீனாக்‌ஷியம்மாள் அந்தக் கிருஷ்ணாபுரத்து ஜெமீந்தாரது தங்கையானாலும் அவர்களிருவருக்கும் பலவகையான காரணங்களால் உள்ளுக்குள் மனஸ்தாபம் இருந்து வந்தமையால், அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து பதினைந்து வருஷ காலத்திற்கு மேல் ஆயிற்று. ஆனால் அவர் துரைராஜா, கண்மணியம்மாள் முதலியவர்களது போஷணைக்காக மாதாமாதம் பெருத்த பணத்தொகைகளை அனுப்பும்படி தமது ஏஜண்டுக்கு உத்தரவு செய்திருந்ததன்றி, அப்போதைக்கப்போது, அவர்களுக்குக் கடிதமும் எழுதிவந்தனர். அவரது அபாரமான சமஸ்தானத்திற்கும் சொத்துக்களுக்கும் துரைராஜாவே வாரிசுதார் ஆவான் என்று யாவரும் நினைத்து வந்தனர். அவருக்கும் மீனாக்‌ஷியம்மாளுக்கும் மனதிற்குள்ளாக மனஸ்தாபம் இருந்து வந்ததானாலும் அவர்கள் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் கடிதப் போக்குவரத்து மாத்திரம் வைத்துக் கொண்டிருந்தனர். இந்த வரலாற்றை எல்லாம் கல்யாணியம்மாள் நன்றாக அறிந்தவளானாலும், அவளுக்கும் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாருக்கும் எவ்விதப் பழக்கமும் உண்டானதில்லை. கல்யாணியம்மாள் மாரமங்கலம் ஜெமீந்தாரிணியானதற்கு முன்னால் தனது இளம்பிராயத்தில், அவரை ஒருமுறை மாரமங்கலத்தில் பார்த்திருந்ததன்றி, அதன் பிறகு அவர் எப்படி இருப்பார் என்பதையே அவள் கண்டறிந்தவள் அன்று.

ஆதலால், இப்போது அவரது கூட்டாளியான ஒருவர் தன்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்பதைக் கேட்கவே, அவர் தன்னிடத்தில் எதற்காக வந்திருக்கிறார் என்பது விளங்காமையால் அவள் சிறிது நேரம் தடுமாறிய பின், அந்த வேலைக்காரனை நோக்கி, ‘கிருஷ்ணாபுரம் ஜெமீன்தார் இவரை என்னிடம் அனுப்பினார் என்று இவரே சொன்னாரா?” என்றாள். வேலைக்காரன், “ஆமாங்க. என்னமோ ரொம்ப அவசரமான சங்கதியாம். தலெ போற காரியமாம். எசமாங்கிட்ட ஒடனே பேசணுமாம்” என்றான்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் திரும்பவும் சிந்தனையில் ஆழ்ந்தவளாய் யோசனை செய்து செய்து பார்த்தாள். கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் தமது கூட்டாளியை, எவ்விதமான அவசர காரியத்தின் பொருட்டு அனுப்பி இருக்கப் போகிறார் என்று நினைத்து நினைத்துப் பார்த்தாள். கண்மணியம்மாளது நிச்சயதாம்பூலம் அன்றைய தினம் நடக்கப் போவதைப் பற்றி கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாருக்கு மீனாக்‌ஷியம்மாள் முதல் நாள் இரவில் தந்தி அனுப்புவதாகச் சொன்னது நினைவிற்கு வந்தது. அந்தத் தந்தி அவருக்குக் கிடைத்திருக்கலாம் என்றும், அவருடைய கூட்டாளியான இந்த மனிதர் சில நாட்களுக்கு முன்னாகவே, ஏதோ வர்த்தக சம்பந்தமாக, பட்டணத்திற்கு வந்திருக்கலாம் என்றும், இவருக்கு கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் நிச்சயதாம்பூல முகூர்த்த சம்பந்தமாக ஏதேனும் பதில் தந்தி கொடுத்து, தன்னை அவசரமாகப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டிருக்கலாம் என்றும் கல்யாணியம்மாள் ஒரு வகையான யூகம் செய்துகொண்டாள். இந்த மனிதரை உடனே பார்த்து, விஷயம் இன்னதென்பதை அப்போதே அறிந்து கொள்ளாவிடில், தனக்கு முன்னமேயே ஏற்பட்டுள்ள எண்ணிறந்த வாதைகளுக்குத் துணையாக, இந்த உறுத்தலும் சேர்ந்து தன்னை வருத்திக் கொண்டிருக்கும் என்று நினைத்தவளாய், அவரை உடனே தன்னிடத்திற்கு அழைத்து வரும்படி வேலைக்காரனிடம் உத்தரவு செய்தாள். அவன், திரும்பி வாசலை நோக்கி இரண்டோரடி நடக்க, அதற்குள் கல்யாணியம்மாள் “அடே! நம்முடைய குழந்தைகளை இங்கே அழைத்து வரும்படி இப்போது தான் காமாட்சியை அனுப்பினேன். நீ முதலில் குழந்தைகளுடைய அந்தப்புரத்துக்குப் போய், நான் ஒரு பெரிய மனிதரிடத்தில் பேசிக்கொண்டிருப்பதால் மறுபடியும் நான் சொல்லி அனுப்பிய பிறகு வரலாம் என்று, நான் சொன்னதாகச் சொல்லிவிட்டு நீ, பிற்பாடு வாசலுக்குப் போய் அந்த ஐயாவை அழைத்துக் கொண்டுவா” என்றாள். அதைக் கேட்ட வேலைக்காரன் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு வெளியில் போய்விட்டான்.

துரைஸானியம்மாள் தனது தாயின் நடத்தையைப் பற்றி முதல் நாள் இரவில் இருந்தே பலவகையான சந்தேகங்களைக் கொண்டவளாய் தனது தங்கையின் புத்தியையும் கலைத்துக் கொண்டிருந்தவள் ஆதலால் இப்போது, உடனே வரும்படியாக முதலில் ஒரு வேலைக்காரி சொன்னதையும், இரண்டொரு நிமிஷ நேரத்திற்குப் பிறகு, இன்னொரு வேலைக்காரன், அம்மாள் யாருடனோ சம்பாஷித்துக் கொண்டிருப்பது பற்றி, மறுபடி சொல்லி அனுப்பிய பிறகு வரலாம் என்று கூறியதையும் கேட்க, அவளது சந்தேகம் இன்னமும் பலமாக அதிகரித்துக் கொண்டே போனது. தனது அம்மாளிடத்தில், தமக்குத் தெரியாமல், ரகசியமாகப் பேசக்கூடிய பெரிய மனிதர் யார் என்பதையும், அவர்கள் எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் ஒருவகையான ஆசையும் ஆவலும் விலக்க இயலாவகையில் அவளது மனத்தில் எழுந்து அவளைத் துண்டியது. முதல் நாளிரவில், ஒளிந்திருந்து கேட்டதைப் போல, அப்போதும் தாங்கள் போய்க் கேட்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டவளாய் துரைஸானியம்மாள், தனது தங்கையையும் அழைக்க, அவள் தனது இயற்கைப்படி அதைத் தடுக்க, அக்காள் தங்கையை வற்புறுத்தி அவளது கையைப் பிடித்து பலவந்தமாக இழுத்துக் கொண்டு குறுக்கு வழியாகச் சென்று, முதல் நாள் ஒளிந்திருந்த ஜன்னலை அடைந்தாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அதன் பிறகு ஐந்து நிமிஷ நேரம் கழிந்தது. சற்று முன் வந்து போன வேலைக்காரன், கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரது கூட்டாளியை அழைத்துக் கொண்டு உள்ளே வந்து சேர்ந்தான். அவர் சுமார் ஐம்பது வயதடைந்தவராகக் காணப்பட்டார். அவர் சிரத்திலும் முகத்திலும் உரோமம் அடர்ந்து மூடிக் கொண்டிருந்தது. அவரது கண்களும், கன்னங்களிலும் காதுகளிலும் சில பாகங்களுமே வெளியில் தெரிந்தன. ஆனால், அவர் விலையுயர்ந்த ஜரிகைத் தலைப்பாகை, நாகரிகமான சட்டை, வெள்ளைவெளேரென்று சலவை செய்யப்பட்ட வஸ்திரங்கள், வைரக்கடுக்கன்கள், மோதிரங்கள், தங்கச்சங்கிலி கடிகாரம், தங்க மூக்குக் கண்ணாடி முதலியவற்றை அணிந்து, கையில் தங்கப்பூண் கட்டப்பட்ட கருங்காலித்தடி பிடித்து நொண்டியைப் போல உந்தி உந்தி நடந்து, கல்யாணியம்மாள் இருந்த இடத்திற்கருகில் வந்து சேர்ந்தார். அவரது அபாரமான தாடி மீசைகளையும் நொண்டிய நடையையும் காணவே, கல்யாணியம்மாள் நகைக்கும்படியான நிலைமையை அடைந்தாள்.

இருந்தாலும், அவரது விலையுயர்ந்த ஆடையாபரணங்களைக் கொண்டும் அவர் கிருஷ்ணாபுரத்து ஜெமீந்தாரால் அனுப்பப்பட்டவர் என்ற நினைப்பினாலும் அவள் தனது நகைப்பை அடக்கிக் கொண்டு சாய்வான நாற்காலியில் இருந்த வண்ணம் மிகவும் அமர்த்தலாக நிமிர்ந்து அவரை நோக்கி, தனது கையை நீட்டி ஒரு நாற்காலியைச் சுட்டிக்காட்டி, அதில் உட்கார்ந்து கொள்ளும்படி ஊமை ஜாடையாக உபசரித்ததன்றி, அந்த மனிதரை உற்று நோக்கி, அவர் தன்னிடம் மரியாதையாக அடங்கி ஒடுங்கி நடந்து கொள்ளுகிறாரா அல்லது தன்னை அலட்சியமாக மதிக்கிறாரா என்பதை ஆராய்ந்தாள். அந்த மனிதரும் அவளைச் சிறிதும் இலட்சியம் செய்யாதவர் போல, அவளைக் காட்டிலும் அதிக அமர்த்தலாகத் தமது சிரத்தை வைத்த வண்ணம், ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கம்பீரமாக நிமிர்ந்து கல்யாணியம்மாளைப் பார்த்து, “உங்களை இதுவரையில் பார்த்தறியாத நான் திடீரென்று வந்தது உங்களுக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருக்கலாம்” என்றார். அப்போது கல்யாணியம்மாள், அவரோடு வந்த வேலைக்காரனை வெளியில் போய் இருக்கும்படி சொல்லி அனுப்பிய பிறகு அவரைப் பார்த்து மிகவும் கம்பீரமாக நிமிர்ந்து, “ஆம்; உண்மைதான். தக்க மனிதர்களிடத்திலிருந்து கடிதம் கொண்டு வருபவரை அன்றி மற்றவர்கள் உள்ளே வர நான் அனுமதி கொடுக்கிறதில்லை. ஏனென்றால், கண்ட பிச்சைக்காரர்கள் எல்லாம் வண்ணானிடத்தில் துணியை இரவல் வாங்கிக் கட்டிக் கொண்டு, யாராவது ஒரு பெரிய மனிதருடைய பெயரைச் சொல்லிக்கொண்டு மகா பெரிய பிரபுவைப் போல உள்ளே நுழைந்து விடுகிறதும், உள்ளே வந்தவுடனே, தங்களுக்கு ஏதாவது பொருளுதவியையோ வேறு வகையான காரியங்களையோ செய்ய வேண்டும் என்று கெஞ்சிக் காலில் விழுந்து, விடாமல் உடத்திரவிக்கிறதும் வழக்கம். அதைப் போல நீரும், கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாருடைய பெயரை உள்ளே நுழைவதற்கு ஒரு மந்திரமாக வைத்துக் கொண்டு வந்தீரோ என்னவோ என்று என் மனம் சந்தேகப்பட்டது. ஏனென்றால், அவருக்கும் எனக்கும் இதுவரையில் எவ்விதமான பழக்கமும் இல்லை ஆகையால், அவர் இப்படி அநாகரிகமான அனுப்பி இருக்க மாட்டார் என்று என் மனம் சந்தேகப்படுவதற்கு நியாயம் இருக்கிறதல்லவா” என்று மிகவும் அலட்சியமாக மொழிந்தாள்.

அதைக் கேட்ட அந்த மனிதர் புன்னகை செய்து, “அடாடா! நன்றாக நினைத்தீர்கள்! என் உடம்பிலிருக்கும் துணிகள் சட்டைகள் எல்லாம் என்னுடையவைகளே! நீங்கள் சந்தேகப்படவே வேண்டாம். நான் உங்களிடத்தில் எவ்விதமான யாசகத்துக்கும் வரவில்லை என்பதை நீங்கள் உறுதியாக நம்பி, உங்களுடைய கவலையை நீக்கி விடலாம். நான் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாருடைய கூட்டாளி. சந்தனக்கட்டை வியாபாரம் செய்யும் பசவண்ண செட்டியார் என்றால், மைசூரில் குழந்தைகளுக்குக் கூட நன்றாகத் தெரியும்; நான் வேறு எதற்காகவும் வரவில்லை; எங்களுடைய ஊர் மனிதரான ஒருவரைக் குறித்து ஒரு முக்கியமான நிகழ்ச்சியின் சம்பந்தமாக உங்களோடு பேசிவிட்டுப் போக வேண்டும் என்று வந்தேன். அந்த மனிதருடைய பெயர் மதனகோபாலன் என்பார்கள்” என்றார்.

- தொடரும்