அத்தியாயம் 1
“ச்சூ... ச்சூ... த்தே... த்தே.” ஆடுகளை வேகமாய் விரட்டிக் கொண்டிருந்தாள் கரிச்சா. கையிலிருந்த கம்பால் தரையை அடித்து சிதறி ஓடிய ஆடுகளை வளைத்து ஓட்டினாள். ஆடுகள் நீண்ட கும்பலாய் ஆற்றுப்படுகையில் போய்க்கொண்டிருந்தன. ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. புதுத்தண்ணீர். மேட்டூரணை திறந்துவிட்டு இரண்டு வாரங்கள்தான் ஆகியிருந்தன. அதற்குள் உழுது ஆற்றங்கரை நெடுகிலுமுள்ள கொல்லைகளில் ஆங்காங்கே நாற்று விட்டிருந்தார்கள். நாற்றங்கால்களில் பயிர்கள் முளைத்து விரலுயரத்திற்கு வளர்ந்து அடர்ந்திருந்தன. நாற்றங்கால்களின் முகப்பில் ஏற்ற மரம் கட்டப்பட்டிருந்தது. ஏற்றக் குழிக்கு தண்ணீர் வருவதற்கென்று ஆற்றிலிருந்து வெட்டிய வாய்க்கால்கள் படுகையைத் துண்டு துண்டாக்கியிருந்தன.
கரிச்சா கரைமேட்டில் ஏறிக்கொண்டாள். “யாரும் மேட்டுல ஏறக்கொடாது. எல்லாரும் படுவயிலயே வாங்க. யாராவுது மேல ஏறி பயிருல வாயவக்க நெனச்சிய... அப்பறம் பாத்துக்கிடுங்க, நா என்ன செய்யிறன்னு. இந்தத் தடிக்கம்பு அடி எப்புடியிருக்குமுன்னு அப்பறந்தாந் தெரியும் ஒங்களுக்கு. முட்டிக்காலு பேந்து பெயிரும். ஆமாஞ் சொல்லிப் புட்டன். ஒளுங்கா வழியப் பாத்து போவணும்.”
ஏற்ற வாய்க்கால்களிடம் கொஞ்சம் தயங்கி நின்று தாண்டிப் போயின ஆடுகள். முன்னால் போய்க்கொண்டிருந்த அள்ளிவெறைக்கிடா, ஆடுகளை முட்டி விரட்டியது. அதனுடைய தலைச் சிலுப்பலுக்குப் பயந்த ஆடுகள் சிதறின. ஒன்றையொன்று முட்டிமோதி இடித்துக் கொண்டதில் நடக்க இடமில்லாமல், சில ஆற்றுக்குள் இறங்க வேண்டி வந்தது. சில ஆடுகள் கரைமேட்டில் ஏறி பின்னாலிருந்து வந்த கரிச்சாவின் கம்புவீச்சுச் சத்தத்திற்கு பயந்து மறுபடியும் படுகையில், இறங்கின. ஓர் ஆடு மட்டும் கரைமேட்டிலேயே நடந்தது. “த்தே.. எறங்கு கீள. ஒனக்கு மட்டும் தனி ரோடு போட்டுருக்கா?" என்றபடி குனிந்து கல் ஏதாவது கிடக்கிறதாவெனத் தேடினாள். மண் நிரம்பிய பழைய நத்தை ஓடுகள்தான் தரையோடு அழுந்திக் கிடந்தன. “சொல்லச் சொல்ல என்ன சட்டமா வரப்புலயே நடக்குற. ஓங் கால ஒடக்கிறம் பாரு.” ஆட்டின்மீது பட்டுவிடாதபடி பக்கத்து நாற்றங்கால் கொல்லைக்குள் நத்தை ஓட்டை வீசினாள். பயிரில் சலசலப்பை ஏற்படுத்தி சேற்றுத் தண்ணீரில் தொப்பென்று விழுந்தது அது. சத்தத்திற்கு பயந்த ஆடு கல்லடி பட்டதுபோல் படுகைக்குள் துள்ளிக்குதித்துக் கூட்டத்தோடு நடந்தது.
ஆடுகள் ஒழுங்காகப் போனாலும், இந்தக் கிடாய்கள் அவற்றைப் பேசாமல் போகவிட்டால்தானே. அள்ளிவெறைக்கிடா சுத்தமோசம். ஒவ்வோர் ஆட்டின் பின்பக்கத்தையும் மோந்து பார்த்து ஆடுகள் விடும் மூத்திரம் மூக்குக்குள் புக 'ஙே' என்று இளித்துக்கொண்டு செருமுகிறது.
சூரியன் போய் மேற்கில் உட்கார்ந்துவிட்டது. பொழுது போனதை அறிந்த தாய் ஆடுகள் கூண்டுக்குள் அடைத்துக் கிடக்கும் குட்டிகளை நினைத்துக் கத்தத் தொடங்கின. கூட்டத்தில் அங்கங்கேயிருந்து பல ஆடுகள் கத்தும் சத்தம் ஒரே நேரத்தில் கேட்டது. அவை கத்தும் சத்தத்தை சகித்துக்கொள்ள முடியாமலோ என்னவோ கூட்டத்துடன் போய்க்கொண்டிருந்த கொம்புக் கிடாய்கள் தன் முன்னால் போகும் ஆடுகளையும் பக்கத்தில் வந்து கொண்டிருக்கும் ஆடுகளையும் முட்டி கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தின. நெரிசலை சமாளித்து நடக்கமுடியாத குட்டியாடுகள் சில ஆற்றுத் தண்ணீருக்குள் விழுந்து எழுந்து வந்தன.
“ஏய்... எல்லாருக்கும் கிறுக்கா புடிச்சிக்கிட்டு? ஒளுங்கா வளியப் பாத்து போறியளா? இல்ல வந்து ஆளுக்கு நாலு குடுக்கட்டா” என்றவள் இன்னும் இரண்டு மூன்று நத்தை ஓடுகளை எடுத்து ஆடு கலைந்தோடும் பகுதிகளுக்கு நேராய் தண்ணீருக்குள் வீசி விரட்டினாள்.
“நீங்க நூத்தம்பது பேரு இருக்குறிய. நான் மட்டும் ஒண்டியாத்தான இருக்குறன். மின்னாடி போறதப் பாக்குறதா, பின்னாடி வாறதப் பாக்குறதா? பொளுதுவேற பெயிட்டு. இருட்டுறதுக்குள்ள ஒங்களயெல்லாம் கொண்டுபோயி பட்டில அடைக்க வேண்டாமா? அதுக்கு மேல வௌக்கு கொளுத்தி, அடுப்புமூட்டி, எப்ப சோறு கொளம்பு ஆக்கித் திங்கிறது” என்று ஆடுகளிடம் நியாயம் கேட்டபடியே வந்தாள்.
நடுவில் போய்க் கொண்டிருந்த ஆடொன்று சட்டென்று கரைமேட்டில் ஏறி நாற்றங்காலைப் பார்த்தது. “ஏய் கராமற, கீள எறங்கு. எதுக்குப் பயிறப் பாக்குற? தொப்பையில இன்னங் கொறயிருக்கா? வயறுதான் ரெண்டு பக்கமும் ‘டும்'முன்னு எடுபட்டு இருக்கே. இன்னம் எதுக்குப் பறக்குற. பாத்துப்பாத்து மேச்சாறங். இன்னமும் பத்தலங்குறியளே. என்னயப் பாத்தியளா? நாங் எங்கயாச்சிம் சோறு தின்னனா? நீங்க பாத்துக்கிட்டுத்தான இருக்குறிய? காலயிலே புடிச்சி சும்மாத்தான நின்னுட்டு வாறங். எனக்குப் பசிக்கா?.”
கராமறை ஆடு கீழே இறங்குவதுபோல பாசாங்கு செய்து மீண்டும் மேலேறியது. ஓடிவந்து அடிப்பதுபோல் பாவனை செய்து கையிலிருந்த கம்பை தரையில் வீசி சத்தமெழுப்பினாள் கரிச்சா. கராமறை கீழேயிறங்கி ஆடுகளோடு கலந்தது. குட்டிக்காகக் கத்தும் ஆடுகளின் சத்தம் முன்பை விடவும் அதிகமானது. வளவனாற்றின் மேற்கே வடிவாய்க்கால் கோட்டகத்தில் கிடை போட்டிருந்தார்கள். கரையங்காட்டு ஆளொருவரின் கொல்லையில் நான்கைந்து நாட்களாய் கிடை கட்டி வந்தார்கள்.
முதல்நாள் கட்டிய இடத்திலிருந்து கிடையை மாற்றிப் போட வேண்டுமென்று வெள்ளைச்சாமி, சூரியன் மேற்கில் சாயத் தொடங்கிய போதே ஆடுகளைக் கரிச்சாவிடம் விட்டுவிட்டு வந்திருந்தான். சுற்றிலும் கம்புகளை ஊன்றி பனங்கருக்குகளால் செய்த தட்டியை வளைத்திருந்தான். வாசல் தட்டியை மட்டும் திறந்து வைத்துக்கொண்டு ஆடுகள் தூரத்தில் வருவதைப் பார்த்துக் கொண்டு நின்றான் வெள்ளைச்சாமி.
பகல் முழுதும் சுதந்திரமாய் சுற்றித்திரிந்த ஆடுகள் அடைபட பிடிக்காமலோ என்னவோ பட்டியைச் சுற்றித் திரும்பித் திரும்பி ஓடின.
“சித்தப்பா அங்குட்டு உட்டுறாதிய. ஒரே பக்கமா மறச்சிக்கிட்டு நின்னுங்க. நா வளச்சாறங்” என்றவள் சிதறி ஓடிய ஆடுகளை வளைத்து வாசல் தட்டியருகில் கொண்டு வந்தாள். தப்பியோட வழியற்ற ஆடுகள் பட்டிக்குள் சென்றன. ஆடுகளின் சத்தம் கேட்டு கூண்டுக்குள் அடைக்கப்பட்டுக் கிடந்த குட்டிகளும் கத்தின. பால் கனத்த மடியுடன் ஆடுகளும் குட்டிகளுக்காகக் கத்தின.
"வெளிச்சம் இருக்கக்குள்ளயே அதது குட்டிவொள ஆட்டுகிட்ட வுட்டுறணும் சின்னாயா” என்றான் வெள்ளைச்சாமி.
“நாம் பட்டிக்குள்ள பெயர்றன் சித்தப்பா. நீங்க குட்டிவொள தொறந்து வுடுங்க” என்றவள் வாசல் தட்டியை இழுத்துக் கட்டிக் கொண்டு பட்டிக்குள் போனாள். குட்டிகள் கவிழ்த்திருந்த கூண்டைத் திறந்தான் வெள்ளைச்சாமி. விடுபட்ட குட்டிகள் ஓடிவந்து பட்டிக்குள் போக வழியில்லாமல் பட்டியைச் சுற்றிச் சுற்றி வந்தன. குட்டிகள் தடுமாறி ஓடுவதைப் பார்த்து தாய் ஆடுகளும் பட்டிக்குள்ளிருந்தபடியே குட்டிக்கு இணையாய்ச் சுற்றி வந்தன. குட்டிகளை இரண்டிரண்டாய்ப் பிடித்து பட்டிக்குள் நின்ற கரிச்சாவிடம் கொடுத்தான் வெள்ளைச்சாமி.
கரிச்சாவின் அணைப்பிலிருப்பது தன்னுடைய குட்டியோ என்று நினைத்த தாய் ஆடுகளெல்லாம் கத்திக்கொண்டு கரிச்சாவை சூழ்ந்தன.
"இந்தா ஓங்குட்டிதான் இது... ஓடு, ஓம் அம்மாகிட்ட போயி ஊட்டு" என்று சொல்லியபடி எல்லாக் குட்டிகளையும் சரியாய் அதனுடைய தாயிடம் சேர்ப்பித்தாள். நன்றாக இருட்டிவிட்டது. பட்டியை விட்டு வெளியே வர மனமற்றவளாக குட்டிகள் பால் குடிப்பதைக் கவனித்தபடி சுற்றிச்சுற்றி வந்தாள்.
"சின்னாயா, இருட்டிப்பெயிட்டுப் பாரு. வந்து அரிக்கன கொளுத்து” என்றான் வெள்ளைச்சாமி.
“பொருங்க சித்தப்பா குட்டிவொ ஊட்டட்டும்” என்றாள் கரிச்சா. “தாங் குட்டிக்குக் குடுக்க தாயாட்டுக்குத் தெரியாதா. எல்லாங் குடிக்கும். நீ வந்து வேலயப் பாரு” என்றான் வெள்ளைச்சாமி.
கரிச்சாவுக்கு தன் வயிறு காய்ந்தாலும்கூட ஆடுகள், குட்டிகளின் வயிறு எப்போதும் நிறைந்திருக்க வேண்டும். அவை பசியோடு கிடப்பதைக் கரிச்சாவால் தாங்கிக்கொள்ள முடியாது. குட்டிகள் வயிறு முட்டக் குடித்து தாயுடன் துள்ளிக்குதித்து விளையாட ஆரம்பித்த பிறகே அவள் பட்டியை விட்டு வெளியே வருவாள். இன்று இருட்டிவிட்டதாலும் வெள்ளைச்சாமி கண்டித்துக் கூப்பிடுவதாலும் அரைமனதுடன் வெளியே வந்தாள். ஆடுகள் வெளியேறிவிடாதவாறு தட்டியின் கயிற்றை இழுத்துக் கட்டினாள்.
கூண்டுக்குள் ஒரே இருட்டாயிருந்தது. அரிக்கன்களும் தீப்பெட்டியும் இருந்த இடத்தில் அடையாளமாய் கைவைத்துத் தடவி எடுத்தாள். ஒரு அரிக்கனைக் கொளுத்தி வெளிச்சத்திற்காக வைத்துவிட்டு இன்னொரு அரிக்கனை எடுத்து துடைத்துக் கொளுத்தினாள். கூண்டிற்கு வெளியே அடுப்புப் போட்டிருந்தாள். பற்ற வைத்து சோறாக்கினாள். டின்னுக்குள்ளிருந்த உப்புக்கண்டத்தில் கொஞ்சம் அள்ளிப் போட்டு வறுத்தாள். அத்துடன் புளியைக் கரைத்து ஊற்றிக் குழம்பு வைத்தாள். நல்ல காய்ந்த விறகாய் இருந்ததால் அடுப்பு வேலை சீக்கிரத்தில் முடிந்தது. எப்போதுமே விறகுப் பிரச்சனை ஏற்படுவது போல் வைத்துக் கொள்ள மாட்டாள். ஒரு வாரத்திற்குத் தேவையான விறகு அவளிடம் கைவசமிருக்கும். காலையில் எழுந்தால் ஒரு நிமிடம்கூட கரிச்சா ஓய்ந்து உட்கார்ந்திருக்க மாட்டாள். எழுந்ததும் முதல் வேலையாய் குட்டிகளை ஊட்ட விடுவாள். எங்கு தண்ணீர் கிடைக்குமென்று தேட்டம் தேடிக் கொண்டுபோய் இடுப்பிலொரு குடம், தலையிலொரு குடமென்று தூக்கிக் கொண்டு வருவாள். அதற்குள் வெள்ளைச்சாமியும் எங்காவது போய் குட்டிகளுக்கு தழை வெட்டிக் கொண்டு வந்துவிடுவான். அவனுக்கு சோத்தைக் கொடுத்து குட்டிகளைப் பிடித்துக் கவிழ்ப்பாள்.
நேரத்திலேயே ஆடுகளை ஓட்டிக்கொண்டு போய்விட வேண்டும் அவளுக்கு. அப்போதுதான் ஆடுகள் மாலைவரை நிறைய மேயும் என்று நினைப்பாள். ஆனால், கிடை கட்டுபவர்கள் இதற்கு ஒப்புக் கொள்வதில்லை. “காலயிலயே அவுத்துவுட்டு ஓட்டுனீங்கன்னாக்க போற எடத்துலதான ஆடுவ புளுக்க போடும், நாங்க காச குடுத்தும் புண்ணியமில்லாம பெயிடுமே. இன்னஞ் செத்த கெடக்குள்ளயே கெடக்கட்டும்" என்பார்கள். ஆடுகள் போன பின்பு பத்துப் பாத்திரங்களை விளக்கிக் கழுவி வேலைகளை முடிப்பாள். பின்பு அடுப்புக்குத் தேவையான விறகை வெட்டிவர கத்தியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவாள். வாகான காய்ந்த முள்ளாய்ப் பார்த்து வெட்டிக் கொண்டு வந்து சேர்ப்பாள். சில சமயங்களில் பச்சை முள்ளை வெட்டிவந்து காயப்போட்டு அடுக்கி வைப்பாள். அடுப்புக்குத் தேடிய பிறகு குளித்து துணிமணி துவைத்துப் போட்டுவிட்டு ஆடு நிற்கும் இடத்திற்கு ஓடுவாள். அதுவரை தனியாய் மேய்த்துக் கொண்டிருக்கும் வெள்ளைச்சாமி கரிச்சா வந்த பின்பும் சிறிதுநேரம் ஆட்டில் நிற்பான். சூரியன் உச்சிக்கு மேற்கே கொஞ்சம் சாய்ந்துவிட்டால் போதும் கரிச்சாவிடம் ஆடுகளை விட்டுவிட்டு இடம்மாற்றி பட்டியடிக்க கிடை கிடக்கும் இடத்திற்கு வந்துவிடுவான். இதுதான் கரிச்சா வெள்ளைச்சாமியின் தினசரி வாழ்க்கையாயிருந்தது. இரவில் ஒருமுறை மட்டும்தான் சோறு ஆக்குவாள். இருவருக்கும் தினமும் இரண்டுவேளை சோறுதான். இரவு சுடுசோறு. காலையில் பழைய சோறு. எவ்வளவு மழையாயிருந்தாலும் பனியாயிருந்தாலும் இந்த முறை மாறாது.
வெள்ளைச்சாமிக்கு சோத்தைப் போட்டு குழம்பை ஊற்றிக் கொடுத்தாள். தானும் சாப்பிட்டாள். மீதமிருந்த சோத்தை ஆறவைத்து வடித்த கஞ்சியும் தண்ணீரும் ஊற்றி பானையை மூடிக் கவிழ்த்தாள். கூண்டிற்குள் கட்டியிருந்த உறியில் குழம்புச் சட்டியையும் சோத்துப் பானையையும் தூக்கி வைத்தாள். கரிச்சாவுக்கும் வெள்ளைச்சாமிக்குமென்று படுத்துக் கொள்ள இரண்டு கூண்டுகளைக் கட்டியிருந்தான். கட்டில் போல நீட்டிப் படுப்பதற்கு வாகாய் நான்கு கால்கள் வைத்து கோக்காலியடித்து அதன்மீது பலகையடுக்கி கட்டிலாக்கி, அதன்மேல் கூண்டு வண்டிபோல ஒருபக்க வாசல் வைத்து வளைவு பிடித்து மேலே மட்டை போட்டிருந்தான். ஒரு கூண்டுக்குள் இரண்டு பேர் படுத்துக் கொள்ளலாம். ஆரம்பத்திலெல்லாம் ஒரே கூண்டிற்குள்தான் கரிச்சாவைப் போட்டுக்கொண்டு வெள்ளைச்சாமி படுத்திருப்பான். ஆனால், கொஞ்சம் வளர்ந்து கைகால் பிரிந்து கரிச்சா வேலைசெய்ய ஆரம்பித்த உடனேயே அவளுக்கென்றும் தனியாக ஒரு கூண்டு கட்டிவிட்டான்.
கரிச்சா தன்னுடைய கூண்டிற்குள் நீளவாக்கில் ஒரு பக்கமாய் துணிமணிகள் போட கொடி கட்டியிருந்தாள். இன்னொரு பக்கம் உறியும் முக்கியமான பைகள் போன்றவற்றையும் தொங்கவிட்டிருந்தாள். இவையல்லாமல் இருவருடைய கூண்டுகளுக்குள்ளும் நிறைய பொருட்கள் செருகி வைக்கப் பட்டிருந்தன.
பனஞ்சிராய் பலகை உறுத்தும் என்பதாலும் சிலாம்பு ஏறிவிடும் என்பதாலும் கூண்டிற்குள் பாயை விரித்துப் போட்டு இருவரும் படுத்துக் கொண்டார்கள்.
படுத்த உடனேயே குறட்டைவிட்டு தூங்க ஆரம்பித்து விடுவான் வெள்ளைச்சாமி. அவன் தூங்குவதற்குள் கேட்டுவிட வேண்டுமென்று நினைத்தாள்.
“சித்தப்பா... சித்தப்பா.... தூங்கிட்டியளா?"
“இன்னம் இல்ல. யாங்?”
“அக்காவ பாத்து பத்து நாளைக்கி மேலாயிட்டு சித்தப்பா. நாளைக்கிப் போயி பாத்துட்டு வரட்டா?"
“பெயிட்டு வாயங்."
“ஆட்டுல வாறதுக்கு கொஞ்சம் நேரம் ஆவும்.”
"ஆவட்டுமே. நீ பெயிட்டு வா. நாம் பாத்துக்குறன்" என்றவன், “சின்னாயா, நரி கிரி ஊளையிடுற சத்தங்கேட்டா எளுப்பிவுடு. நாந் தூங்கிடப் போறங்” என்றான்.
"செரி சித்தப்பா” என்றவள் கையில் லாந்தரை எடுத்துக் கொண்டு ஆட்டுப்பட்டியை ஒரு சுற்று சுற்றி வந்தாள். காதைக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்டாள். எங்கிருந்தும் நரியின் ஊளைச் சத்தம் கேட்கவில்லை. வாய்க்கால்களின் மீனும் தவளையும் துள்ளியெழும் சலசலப்பும் தண்ணீரில் மறுபடியும் தொபீரென்று விழும் சத்தமும் சன்னமாய்க் கேட்டது. ஆடுகளெல்லாம் அசைபோட்டபடி படுத்திருந்தன.
அரிக்கனை அடக்கி மாட்டிவிட்டு படுத்துக்கொண்டாள். 'அக்கா இந்நேரம் தூங்கிருக்குமா இல்ல நம்மள மேரியே எதாவுது நெனச்சிக்கிட்டு கெடக்குமா?’ என்று நினைத்துப் பார்த்தாள். 'அந்த வூட்டுல அக்காவுக்கு எவ்வள வேல? அசதில அடிச்சிப் போட்டமேரி இந்நேரம் தூங்கிருக்கும்' என்ற எண்ணம் வந்தது. 'பாவம் அக்கா... அது நல்லாருக்கணும். நல்லமுனிக்காரே, எங்கக்காவ நல்லா வையி.' வேண்டிக்கொண்டாள். கண்களை மூடிக் கொண்டாள். தூக்கம் வரவில்லை.
- தொடரும்