சிறுகதை
“இன்னும் எவ்ளோ நேரம் இருக்குது?”
“பெரிய படம்பா… ஒண்ணாயிடும்.”
“மணி இப்போ இன்னா ஆவுது?”
“பதினொன்னே முக்கா” என்று சொல்லிவிட்டு தனது ஆட்டோவின் முன் சீட்டிலிருந்து பின் சீட்டிற்கு வந்து சாய்ந்து படுத்துக்கொண்டான் கணபதி.
“இன்னாபா படுத்துட்ட?” என்றான் முஸ்தபா.
“பின்ன, படம் வுட்டாதான் சவாரி வரும். அதுவரிக்கும் இன்னா பண்றது. கொஞ்சம் கட்டய நீட்டுவோம்.”
“ம்… சரிதான்.”
கணபதி படுத்துக்கொண்டே தன் கால்களுக்கு நேராக இருந்த அந்த சினிமா பேனரைப் பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென்று அவனுக்குச் சிரிப்பு வந்தது.
“இன்னாபா?”
“இல்ல, இந்தாளு இன்னா பேச்சி பேசனான். அத்த நெனச்சேன், சிரிப்பு வந்துடுச்சி.”
“ஆமா, அவன் மட்டுமா பேசறான். இதோ பாலாஜி தேட்டருல ஓடுதே ஒரு படம். அதுல ஒருத்தன் வரானே அவன் பேசாத பேச்சா. இப்புடிப் பேசி பேசியே எத்தினி பேரு காணாமப் போயிகிறானுங்க. அவனுங்கள பாத்துகூட இதுங்க திருந்த மாட்டேங்குதுங்க.”
“இன்னாவோ… ம்…”
முஸ்தபா தொடர்ந்து ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தான். ‘ஸ்டாண்டில் ஒரு டிரைவரின் மனைவி ஓடிப்போனதைப் பற்றி, ஆட்டோவில் ஒரு குடும்பம் வைத்துவிட்டுப்போன பணத்தைச் சரியாக திரும்பக் கொடுத்த ஒரு டிரைவரைப் பற்றி, அவன் குடும்பக் கஷ்டங்களைப் பற்றி, வருமானத்தைப் பற்றி’ என அவன் பேசிக்கொண்டே நேரத்தைக் கடத்தினான்.
கணபதி பதிலேதும் பேசவில்லை. அங்கே கணபதியின் ஆட்டோவைத் தவிர இன்னும் இரண்டு ஆட்டோக்கள் இரவுக்காட்சி முடிய ஏதாவது சவாரி கிடைக்குமெனக் காத்திருந்தன. சுத்தமாக காற்றே வரவில்லை. அருகில் இருந்த ரோட்டுக் கடைகளை ஒவ்வொன்றாக மூடிக்கொண்டிருந்தனர். எச்சி இலைகளை மேய்ந்து கிடைத்தவற்றைத் தின்றுவிட்டு அவ்வப்போது கடந்து செல்பவர்களைப் பார்த்து குரைக்கலாமா வேண்டாமா என்று சில நாய்கள் யோசித்துக்கொண்டும், சில நாய்கள் உடனடியாகக் குரைப்பதுமாக இருந்தன. கணபதி சற்று கண்களை மூடினான். சுற்றிக் கேட்டுக்கொண்டிருந்த சிறுசிறு ஒலிகள் மெல்ல அடங்கத் தொடங்கின. தான் மெல்லத் தூக்கத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறோம் என்று அவன் உணரவேயில்லை. எவ்வளவு நேரமானது எனத் தெரியவில்லை. திடீரென்று முஸ்தபா அவனை வேகமாக எழுப்பினான், “வுட்டாங்க பாரு… வுட்டாங்க பாரு…”
கணபதி எழுந்து உட்கார்ந்தான். தியேட்டரிலிருந்து மக்கள் மெல்ல வெளியே வந்தவண்ணம் இருந்தனர். கூட்டம் அதிகமில்லை. வெளியே வரும் எந்த முகத்திலும் திருப்தியில்லை. அவன் ஏற்கெனவே இந்தப் படத்தைப் பார்த்துவிட்டிருந்தான். இதை ஏன் பத்து நாட்களுக்கு மேல் ஓட்டிக்கொண்டிருந்தனர் என்று அவனுக்குப் புரியவில்லை.
பெரும்பாலும் சொந்த வாகனத்திலேயே வெளியே வந்தனர். சிலர் நடந்தே பயணத்தைத் தொடர்ந்தனர். நாய்களின் குரைப்பொலி சற்று அதிகமானது. முஸ்தபாவிற்கும் இன்னொரு ஆட்டோவிற்கும் சவாரி கிடைக்க அவர்கள் கணபதியிடமிருந்து விடைபெற்றனர். கணபதிக்கு யாரிடமும் எதுவும் கேட்க விருப்பமில்லை. வேண்டுமென்றால் வரட்டுமெனக் காத்திருந்தான். கிட்டத்தட்ட தியேட்டரே காலியான பின் கடைசியாக அந்த நடுத்தர வயதுப் பெண் வந்தாள். கையில் ஒரு சிறிய கட்டைப் பையை வைத்திருந்தாள். வண்ணம் மங்கிப்போன சிகப்புச் சேலையும் அதற்கு சற்றும் பொருத்தமில்லாத வண்ணத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். மாநிறம். அளவான உயரம். காலில் செருப்பில்லை. தலைவாரி பின்னப்பட்டிருந்தாலும் முன்னந்தலை லேசாகக் கலைந்திருந்தது. தயங்கித் தயங்கி தியேட்டரை விட்டு வெளியே வந்தவள் முதலில் எதையோ தேடினாள். பின் மெல்ல கணபதியை நெருங்கி, “ஆட்டோ வருமா?” என்றாள். அவ்வளவு நேரம் கணபதி அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் கூப்பிட்டதும் அப்போதுதான் அவளைப் பார்ப்பதுபோல் ஒரு பாவனை செய்துவிட்டு, “எங்க போவணும்?” என்றான்.
“முருங்கம்பாக்கம்” என்ற ஊர் பெயரைக் கேட்டதும் அவனுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவனும் அந்த ஊர்தான். இறக்கிவிட்டு வீட்டிற்குப் போகலாம் என்று நினைத்துக்கொண்டு, அவளிடம் “ஏறுங்க” என்றான். எவ்வளவு என்று அவளும் கேட்கவில்லை. இவனும் எதுவும் சொல்லவில்லை. அவள் ஏறி உட்கார்ந்ததும் ஆட்டோ ராஜா தியேட்டரிலிருந்து புறப்பட்டது.
எப்போதும் வழக்கமாக நெல்லித்தோப்பு வழியாகத்தான் கணபதி போவது வழக்கம். ஆனால், இன்று எதோ நினைப்பில் புதுச்சேரி பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக கடலூர் சாலையைப் பிடித்துப் போகலாம் என்று தோன்றவே அந்த வழியாக ஆட்டோவைச் செலுத்தினான். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அவள் பின் சீட்டில் பதற்றமாக உட்கார்ந்திருந்தாள். வண்டி நகரத் தொடங்கியதும்தான் அவர்களின் மேல் லேசாக குளிர்ந்த காற்று படுவதுபோல் இருந்தது. கணபதிக்கு மொத்த தூக்கமும் கலைந்திருந்தது. அவன் அவளைப் பார்க்க நினைத்தான். ஆனால், இந்நேரத்தில் அவ்வாறு செய்வது அவள் தன்னைப் பற்றி தவறாக நினைக்க வைக்கக்கூடும் என்று அவனுக்குத் தோன்றவே, வெறிச்சோடிக் கிடந்த சாலையைப் பார்த்தவாறு வண்டியைச் செலுத்தினான்.
அந்தோணியார் கோயிலை ஆட்டோ நெருங்கிய சமயம், “ஒரு நிமிஷம் அங்க வாழப்பழ வண்டிகிட்ட நிறுத்தறீங்களா?” என்றாள். அவனும் எதுவும் சொல்லாமல் வண்டியை நிறுத்தினான். வேகமாகக் கீழே இறங்கியவள் தனது ஜாக்கெட்டிலிருந்து பர்சை லாகவமாக எடுத்து பணத்தைக் கொடுத்து நான்கு பச்சை வாழைப்பழங்களை வாங்கினாள். இரண்டை அங்கேயே சாப்பிட்டுவிட்டு இரண்டை பைக்குள் வைத்துக்கொண்டு மீண்டும் ஆட்டோவில் ஏறினாள். ஆட்டோ ஏ.எஃப்.டி. மைதானத்தைக்கூட தாண்டியிருக்காது. அவளுக்கு விக்கல் எடுத்தது. மூன்றாவது முறை அவள் விக்கும்போது அவனாகவே, “உங்க பின்னாடி தண்ணி இருக்குது எடுத்துக் குடிங்க” என்றான். முதலில் தயங்கியவள் பின் எடுத்து வயிறு முட்டக் குடித்தாள். ஆட்டோ முதலியார் பேட்டையைத் தாண்டியதும் அவன் அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.
“முருங்கம்பாக்கத்துல எங்க?”
“நீங்க போங்க. நான் வழி சொல்றன்.”
“இல்ல, நாங்கூட முருங்கம்பாக்கம்தான்” என்றான்.
அவள் பதிலேதும் சொல்லவில்லை. தேங்காய்திட்டு அருகில் நின்றுகொண்டிருந்த போலீஸ்காரர்கள் வண்டிகளை மடக்கி சோதனை செய்துகொண்டிருந்தார்கள். இவனுடைய ஆட்டோவை மடக்கியவர்கள் “எங்க போற?” என்றனர்.
அவன் “வூட்டுக்கு” என்றான்.
வண்டியை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு “போ” என்றனர்.
வண்டி நகரத் தொடங்கிய சிறிது நேரத்தில் அவள், “அந்தாளு இன்னா அப்புடி மொறைக்கறான்?”
“இந்நேரத்துல ஆட்டோல சுத்தினு இருந்தா, இறக்கி இன்னா ஏதுன்னு நோண்டலயேன்னு சந்தோஷப்படணும்.”
அவள் எதுவும் சொல்லவில்லை. ஆட்டோ முருங்கம்பாக்கம் மெயின் ரோட்டில் இருந்த கோயிலின் அருகில் நின்றது.
“இப்பவாது சொல்லுமா, எப்படி போவணும்?”
“இப்புடி உள்ள போங்க. காமாட்சி நகர், நாலாவது கிராஸ்.”
ஆட்டோ அவள் சொன்ன விலாசத்தை நோக்கி நகர்ந்தது. உள்ளே செல்லச் செல்ல மரங்களின் அடர்த்தியும், குறைவான தெருவிளக்குகளும் அவளுக்கு ஒருவித பீதியை ஏற்படுத்தின. நகருக்குள் நுழைந்ததுமே ஒரு தெருநாய் குறுக்கே வந்து குரைக்க ஆரம்பித்தது.
“மெதுவா போங்க, நாய்ங்க ஜாஸ்தி” என்றாள் அவள். அவள் சொன்னதுபோலவே அவன் ஆட்டோவை மெதுவாக ஓட்டினான். இருந்தாலும் அதன் சத்தத்திற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெருநாய்கள் குரைத்தவாறே இருந்தன. அவன் மெல்ல அவள் சொன்ன தெருவின் அருகில் வந்ததும் அவள், “நிறுத்துங்க… நிறுத்துங்க…” என்றாள்.
அவன் பதற்றமாக வண்டியை நிறுத்திவிட்டு, “இன்னாங்க, இங்கயே எறங்கிக்கறீங்களா?” என்றான். அவள் மெல்லத் தயங்கித் தயங்கி ஆட்டோவிலிருந்து இறங்கினாள்.
“ஏங்க, எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?”
“உதவியா? இன்னா உதவி?”
“ஒன்னும் இல்ல, அதோ தெரிதுல மஞ்ச கலர் பெயிண்ட் அடிச்ச வூடு, அந்த வூட்டுல லைட் எரிதா, யாருனா மூச்சின்னு இருக்காங்களான்னு பாத்துட்டு வந்து சொல்றீங்களா?”
கணபதி அவளை சந்தேகத்துடன் பார்த்தான். “இன்னாமா, எதுனா திருட கிருட வந்துகிறியா?” என்றான் கோவமாக. உடனே அவள் அழ ஆரம்பித்தாள். சத்தம் வரவில்லையே தவிர நன்றாக அழுதாள்.
“யம்மா… யம்மா… இன்னாமா உன்னாண்ட ஒரே ரோதனயா போச்சி.”
“அது என் வூடுதான். நான் காலையில் எங்கூட்டுகாருகிட்ட கோச்சிகினு வந்துட்டேன். அதான் நான் காணோம்னு இருக்காங்களா, இல்ல நல்லா தூங்கறாங்களானு உங்களப் பாக்கச் சொன்னேன்.”
கணபதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குழப்பமாக அவளையே பார்த்தான். அவள் நடிப்பதுபோல தெரியவில்லை.
“செரி, இங்கயே இருங்க” என்று சொல்லிவிட்டு ஆட்டோவை எடுத்துக்கொண்டு அந்தத் தெருவிற்குள் நுழைந்தான். மிக மெதுவாக அவள் சொன்ன வீட்டைப் பார்த்த மாதிரியே சென்றான். விளக்குகள் முழுக்க அணைக்கப்பட்டிருந்தன. யாரும் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவன் மெல்ல அந்தத் தெருமுனை வரை சென்று வண்டியைத் திருப்பிக்கொண்டு மீண்டும் அதே இடத்திற்கு வந்தான். அவள் அங்கு இல்லை. வண்டியை விட்டு இறங்கி சுற்றி சுற்றித் தேடினான். அவள் எங்குமே அகப்படவில்லை. மீண்டும் வந்த வழியிலேயே சென்று முருங்கம்பாக்கம் கோயில் வரை வந்து பார்த்தான். அவள் எங்கே சென்றாள் என்றே அவனுக்குப் புரியவில்லை. அவனுக்குச் சலிப்பாக இருந்தது. மனதிற்குள்ளாகவே ‘ச்சை’ என்று சொல்லிவிட்டு அவன் வீட்டிற்குச் சென்று படுத்துவிட்டான். உடனே உறங்கியும் போனான்.
“அப்பா… அப்பா… ஏந்திரிப்பா… மணியாவுது ஏந்திரிப்பா…”
காலை வெய்யில் கணபதியின் பாதி உடலை ஜன்னல் வழியாக ஆக்கிரமித்திருந்தது. அவன் மெல்ல கண் விழித்தான். கண்களைத் திறக்க முடியவில்லை. தூரத்தில் அவன் மகள் நின்றிருந்தாள்.
“இன்னாமா?”
“கிளம்புப்பா மணியாவுதுல்ல.”
அவன் கடிகாரத்தைப் பார்த்தான். அதன் முட்கள் நகர்வதற்கான அறிகுறியே இல்லை. பிறகு மெல்ல தலையை ஆட்டிவிட்டு அருகில் இருந்த தன் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தான். எட்டாகி ஐந்து நிமிடமாகியிருந்தது. மெல்ல எழுந்து கழிப்பறைக்குள் சென்று தன் கடன்களை முடித்துவிட்டு வெளியே வந்தான்.
“அப்பா… சூடா இட்லி இருக்குது. ஆயா வெச்சிட்டு போச்சி. சீக்கிரம் சாப்ட்டுக் கெளம்பு.”
அவன் சிரித்துக்கொண்டு மூடி வைக்கப்பட்டிருந்த தட்டைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டு உட்கார்ந்தான். அவன் முதல் துண்டைப் பிய்த்து சாம்பாரில் நனைத்து தன் வாயில் வைத்து மெல்ல சாப்பிடத் தொடங்கிய நொடியில், “அப்பா…” என்றாள் அவன் மகள்.
“இன்னாமா?”
“ராத்திரி எப்போ வந்த?”
“செக்கண்ட் ஷோ முடிஞ்சதும் வந்துட்டனே.”
“சவாரி எதுனா ஏத்தினு வந்தியா?”
அவன் யோசிக்காமல் “இல்லியே” என்றான்.
“அப்பா நேரா வூட்டுக்கு வராம தெருமொனையில இன்னா பண்ணின்னு இருந்த? எதுக்குத் தெருமுக்கு வரைக்கும் போயிட்டு திரும்பி மறுபடியும் எங்கயோ போயிட்டு வந்த?”
அவன் சாப்பிட்டுக்கொண்டே பதிலளித்தான். அவன் முகத்தில் எந்தவித அச்சமோ பதற்றமோ இல்லை.
“சும்மா, தூக்கம் வரல.”
“அம்மா வந்தாங்களா?”
சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் மெல்ல தன் தலையை உயர்த்தி மகளைப் பார்த்தான். அவள் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மஞ்சள் வண்ணப் பாவாடையும் இவனுடைய பழைய நீல வண்ண சட்டையையும் அணிந்திருந்தாள். இரட்டை ஜடையை முன்னால் தோள் மீது தூக்கிப் போட்டிருந்தாள். அவளுடைய நேர் பின்னால் காய்ந்த மாலைக்கு நடுவே அவன் மனைவியின் படம் தொங்கிக்கொண்டிருந்தது. சிகப்பு வண்ணச் சேலையும் அதற்குப் பொருத்தமில்லாத ரவிக்கையும் அணிந்து கலைந்த தலையுடன் இருந்தாள். இவனுடன் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு போன அன்று பேருந்தில் சிக்கி இறந்தவள்.
அவன் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்கள் கலங்கிக்கொண்டிருந்தன.
“அப்பா?”
அவன் சட்டெனக் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து சென்று கைகளைக் கழுவினான். திரும்ப வந்து தன் மனைவியின் படத்தை ஒரு முறை பார்த்தான். பின் தன் மகளிடம் “இரு, இதோ கெளம்பி வரேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று ஆடைகளை அணிந்துகொண்டு கண்ணாடியில் தன் முகத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டான். பாதி தலை நரைத்திருந்தது. அதைக் கைகளாலேயே கோதிவிட்டுகொண்டு வெளியே வந்தான். அவன் மகள் ஆட்டோவின் பின்சீட்டில் அமர்ந்திருந்தாள். வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தவன் ஏதோ நினைத்தவாறு மீண்டும் வீட்டிற்குள் சென்று அனைத்து விளக்குகளையும் எரிய விட்டுவிட்டு மீண்டும் வீட்டைப் பூட்டிக்கொண்டு வந்து ஆட்டோவில் உட்கார்ந்தான்.
“ஏம்பா எல்லா லைட்டவும் போட்டு வந்த?”
“நைட் வரும்போது இருளோன்னு இருக்குது அதான்.”
“ம்…”
“போலாமா?”
“போலாம்பா.”
அவன் ஆட்டோவை இயக்கி மெல்ல தெருமுனையை அடைந்தான். ஆட்டோவின் வேகத்தைக் குறைத்து ஒருமுறை சுற்றி தேடினான். பின் வழக்கமாகத் தான் போகும் வழியில் சென்றான். தூரத்தில் அவனுக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இவன் வருவதைப் பார்த்ததும் கைகளைக் காட்டி ஆட்டோவை நிறுத்தினார்.
“சார்…”
“கணபதி, வண்டி ரிப்பேரு. என்னைக் கொஞ்சம் கிளீனிக்ல விட்டுடறியா?"
“ஏறுங்க சார்.”
“வேற எதுனா அவசர வேலையா போறியா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல சார், ஏறுங்க.”
அவர் ஏறி உட்கார்ந்ததும் ஆட்டோவை இயக்கினான் கணபதி. சிறிது நேரம் அமைதியாக இருந்த மருத்துவர், “என்ன கணபதி, உடம்புலாம் பரவாயில்லையா?”
“எனக்கின்னா சார், நல்லாத்தான் இருக்கேன்.”
அவர் லேசாகச் சிரித்துக்கொண்டே, “என்ன இப்பவும் உன் பொண்டாட்டி உருவம் தெரிதா?”
“அவளுக்கு இன்னா சார், தெணிக்கு என்ன பாக்காம அவளால இருக்க முடியாது சார்.”
“ட்ரீட்மெண்ட் எடுத்துக்கன்னா கேக்க மாட்டேங்கற.”
“அத எடுத்து நான் இன்னா சார் பண்ணப் போறன் இனிமே? ஏதோ அவங்கக்கூட இருக்கேன். அதுவே போதும்.”
டாக்டர் சிறிது நேர அமைதிக்குப் பிறகு, “உன் பொண்ணு உருவமும் தெரிதா?”
“என் ராஜாத்தி சார். என்ன வுட்டு எங்கப் போவப் போறா சொல்லுங்க. இன்னா, போனவ தனியா போயி இருக்கலாம். இவளயும் கூட்டிகின்னு போயி சேந்தா.” அதைச் சொல்லும்போதே கணபதியின் கண்கள் கலங்கின. அவன் ஆட்டோ ஹேண்ட்பார் அருகே இருந்த சிறிய புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்த தன் மகளை ஒருமுறை பார்த்துக்கொண்டான்.