அத்தியாயம் 1

20.06k படித்தவர்கள்
6 கருத்துகள்

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை

திருவிடமருதூருக்குப் போய்த் தமது மனிதரைக் காண எத்தனித்தது தம்மை வெட்டக்கொண்டு போவதுபோல அவரால் சகிக்க இயலாத வேதனையான செய்கையாய் இருந்தது. ஆயினும் தாம் முக்கியமான ஒரு விஷயத்தில் உண்மை இன்னது என்று அறிந்துகொள்வதைக் கருதி நிரபராதிகளான தகப்பனார், ராஜபகதூர் முதலியோரது மனத்தைப் புண்படுத்தி மூன்று மாதகாலமாய் துயரக்கடலில் ஆழ்த்திக்கொண்டிருப்பதால், தாம் தமது மன உணர்ச்சிகளை எவ்விதமாகிலும் அடக்கிக்கொண்டு, உண்மையை உடனே கண்டுபிடிப்பது அத்தியாவசியமான காரியம் என்று தீர்மானித்துக்கொண்ட திவான் சாமியார் அரும்பாடுபட்டுத் தமது மனத்தைச் சாந்திப் படுத்திக்கொண்டு ஒருநாள் காலைவேளையில் திருவிடமருதூரை அடைந்தார். 

அடைந்தவர் அந்த ஊர்க் குளத்திற்குப் போய் நீராடித் தமது நியமம் நிஷ்டைகளை முடித்துக் கோயிலுக்குப் போய் அர்ச்சனை தீபாராதனை முதலியவற்றை நிறைவேற்றி மிகுந்த பக்திப் பெருக்கோடு சுவாமி தரிசனம் செய்துகொண்டபின் ஊருக்குள்ளிருந்த ஒரு போஜன சாலையை அடைந்து தமது ஆகாரத்தை ஒருவாறு முடித்தபிறகு தமது மாளிகை இருந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார். அவ்வாறு போனபோதே அவரது மனம் பொங்கியெழுந்து கட்டிலடங்காமல் பதறித் துடிக்க ஆரம்பித்தது. 

இன்பப் பெருக்கோ துன்பப் பெருக்கோ என்பதை தெரியாதபடி பலவித உணர்ச்சிகள் ஒரே காலத்தில் ஒன்றுகூடி அவரது மனத்தை அமர்க்களப்படுத்த ஆரம்பித்தன. தமது தந்தையைத் தாம் காணப்போகிறோம் என்ற ஆநந்தம் ஒருபுறம் எழுந்தது. ஆனாலும் அவர் எவ்விதமான நிலைமையில் காணப்படுகிறாரோ என்ற அச்சம் ஒரு புறத்தில் தோன்றி அபாரமான கவலையை உண்டாக்கியது. தமது மனையாளான காந்திமதியம்மாளும் அருங்குணப்புதல்வனும் தமது கண்ணில்படுவார்களோ, அல்லது கண்ணில் படாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பார்களோ என்ற சந்தேகமும் கவலையும் தோன்றின. விவரிக்க இயலாத மகா துன்பகரமான அத்தகைய மன நிலைமையில் திவான் சாமியார் வாய் ஓயாமல் இருமிக்கொண்டு தளர் நடை நடந்து சென்று தமது மாளிகையின் வாசலையடைந்தார். அடையவே, அவ்விடம் அவர் எதிர்பார்க்காத விதமாய்த் தோன்றியது. மாளிகையின் வாசலில் ஒரு பெருத்த கலியாணப் பந்தல் காணப்பட்டது. வாழை மரங்கள், தோரணங்கள், தேர்ச்சீலைகள் முதலிய அலங்காரங்கள் மேற்படி பந்தலில் நிறைந்திருந்தன. பந்தலுக்குள் ஏராளமான ஜனங்களுக்கெதிரில் மேளச் கச்சேரி நிரம்பவும் இன்பகமராக நடந்துகொண்டிருந்தது. அந்த மாளிகையில் அப்போது கலியாணம் நடக்கிறதென்பது சந்தேகமறத் தெரிந்தது. 

ஒருக்கால் ராஜாபகதூருக்கு தக்க பிரபு எவரேனும் பெண் கொடுப்பதாக முன் வந்தால், தமது தந்தை அந்தக் கலியாயத்தை நடத்துகிறாரோ என்ற எண்ணம் உண்டானது. ஆனாலும் அவன் பன்னிரண்டு வயதேயடைந்த குழந்தையாதலாலும், அவன் தனது தகப்பனாரைப் பறிகொடுத்து மூன்றே மாதகாலமானதாலும், அவ்வளவு துரிதத்தில் அவர்கள் அந்தக் கலியாணத்தை ஏற்பாடு செய்திருக்கமாட்டார்களென்று திவான் சாமியார் தீர்மானித்துக்கொண்டதன்றி, அந்த மாளிகை நிரம்பவும், வசதியாகவும் விசாலமாகவும் இருப்பதைக் கருதி வேறே எவரேனும் தமது தந்தையிடம் அதை இரவலாகப் பெற்று, அவ்விடத்தில், தமது கலியாணத்தை நடத்தலாம் என்று ஒருவாறு நிச்சயித்துக்கொண்டு அந்த மாளிகைக்கு எதிரிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையையடைந்து உட்கார்ந்து, “சங்கரா! சம்போ! மகாதேவா!” என்று கூறிக்கொண்டு அலுத்துச் சுவரில் சாய்ந்துகொண்டார். அவ்வாறு சாய்ந்தவர் எதிரிலிருந்த மாளிகையைப் பார்த்தபடியே சிறிது நேரம் இருக்க, பந்தலுக்குள் போய் வந்துகொண்டிருந்த மனிதர்களைக் கவனித்து நோக்குவதும் அவ்விடத்தில் நடந்த மேளக் கச்சேரியைக் கேட்பதுமாய் இருந்தார். 

அங்கு காணப்பட்ட மனிதர்களுள் ஒருவராகிலும் தமக்குத் தெரிந்த மனிதராக இல்லாமல் புதுமனிதராக இருந்ததை உணர்ந்ததன்றி, தமது தந்தையாவது, அவரது தவசிப்பிள்ளைகளையாவது, ராஜாபகதூரையாவது காணவில்லை. ஆகவே அவர் தமது சொந்த ஜனங்கள் எவ்வித நிலையிலிருக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கும் அந்தக் கலியாணத்தை நடத்துவோருக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் நிச்சயிக்க மாட்டாதவராய் அப்படியே சிறிதுநேரம் சாய்ந்துகொண்டிருக்க, அவரிருந்த வீட்டிற்குள்ளிருந்த ஒரு ஸ்திரீ வெளியில் வந்தாள். வந்தவள் திண்ணையில் உட்கார்ந்திருந்த நமது சாமியாரைக் கண்டாள். கண்டவள் அவரது பெருந்தன்மையான தோற்றத்தைப் பார்த்து அவர் யாரோ மகான் என்றும், வெயிலுக்காக உட்கார்ந்திருக்கிறார் என்றும் நினைத்து அவருடன் பேச்சுக் கொடுக்காமல் மரியாதையாகவும் வணக்கமாகவும் ஒரு பக்கமாய் விலகி தூர இருந்தபடி, எதிர்த்த மாளிகையின் கலியாணப் பந்தலில் தனது பார்வையைச் செலுத்திவண்ணம் நின்றாள்.

உடனே நமது சாமியார் தமது ஆவலை அடக்க இயலாதவராய் நிரம்பவும் மிருதுவாகவும், வணக்கமாகவும், அன்பாகவும் அந்த ஸ்திரீயை நோக்கி, “அம்மா! நீங்கள் இந்த வீட்டில் இருப்பவர்கள் தானே?” என்றார்.

அதைக் கேட்ட ஸ்திரீ நிரம்பவும் விநயமாகவும் பணிவாகவும் அவரது பக்கம் திரும்பி, “ஆம் சுவாமி! நான் இந்த வீட்டிலிருப்பவள்தான்” என்றாள்.

உடனே திவான் சாமியார், “ஏனம்மா! எதிர்த்த வீட்டில் என்ன விசேஷம்? பந்தல் போட்டு மேளம் வாசிக்கிறார்களே!” என்றார்.

உடனே அந்த ஸ்திரீ, “கலியாணம் நடத்துகிறார்கள்” என்றாள்.

உடனே சாமியார், “அந்த வீட்டில் ஒரு பெரியவர் இருந்தாரே,அவருடைய மகனுக்கா கலியாணம்?” என்று எதையும் அறியாதவர் போலக் கபடமாக வினவினார்.

உடனே அந்த ஸ்திரீயினது முகம் மாறுபட்டுப் போயிற்று, உண்மையான வரலாற்றைச் சொல்வதற்கு வெட்கினவள் போல அவள் நாணிக்கோணித் தயங்கி ஏளனமான புன்னகை செய்து, “கிழவருடைய பிள்ளை எங்கே இருக்கிறார்! அவர் போன இடத்தில் புல் முளைத்துப் போய்விட்டது. கிழவர்தான் இப்போது குமரராயிருக்கிறார்” என்று தணிவான குரலில் புரளியாகக் கூறினாள்.

அதைக் கேட்ட சாமியார் வியப்படைந்தவராய் மிகவும் நயமாகவும் மரியாதையாகவும் அந்த அம்மாளை நோக்கி, “என்ன தாயே! ஒரு மாதிரியாகச் சொல்லுகிறீர்களே? நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே! கிழவர் குமரராகி இருக்கிறாரென்று எதனால் சொல்லுகிறீர்கள்?” என்றார்.

அவரது விநயமான சொற்களால் வசீகரிக்கப்பட்டவளாய் அந்த ஸ்திரீ அவரிடம் ஒருவித அபிமானமும் பணிவும் தோற்றுவித்து, “நான் பொய் சொல்லவில்லை; நிஜத்தையே சொல்லுகிறேன். கிழவருடைய குடும்ப சங்கதி இந்த ஜில்லா முழுதும் பரவி இருக்கிறதே; அது உங்கள் வரையில் எட்டவில்லையா?” என்றாள்.

உடனே திவான் மிகுந்த கலக்கமும் கவலையும்கொண்டு, “அம்மணீ! நான் ஊரூராய் அலையும் பரதேசி. நான் சுமார் ஒரு வருஷ காலத்துக்கு முன்பு இந்த ஊருக்கு வந்து எதிர்த்த வீட்டுத் திண்ணையில் தங்கி இருந்தேன். அந்த வீட்டின் சொந்தக்காரரான பெரியவர் என்னிடம் அன்பாகப் பேசி அன்னமளித்து என்னை அனுப்பி வைத்தார். அவர் மாத்திரம் இந்த ஊரில் தனிமையில் இருப்பதாகவும், அவருடைய பிள்ளை வேறே எந்த ஊரிலோ பெரிய உத்தியோகத்தில் இருப்பதாகவும் நான் கேள்வியுற்றேன். இப்போது கலியாணப் பந்தலைப் பார்த்தவுடன், ஒருவேளை அவருடைய பிள்ளைக்குத்தான் கலியாணமோவென்று நினைத்துக் கேட்டேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இடையில் ஏதேதோ மாறுதல்கள் நேர்ந்திருப்பதாக எண்ணவேண்டியிருக்கிறது. பெரியவரும் அவருடைய பிள்ளை முதலியாரும் க்ஷேமமாய் இருக்கிறார்கள் அல்லவா?” என்றார்.

அதைக் கேட்ட அந்த ஸ்திரீ, “சுவாமியார் ஐயா! இந்தக் குடும்பத்தின் சீர்குலைவை நான் என்ன வென்று சொல்லப்போகிறேன்! பெரியவர் இதுவரையில் இந்த ஊரில் தனியாகத் தான் இருந்தார். இவருடைய குமாரர் திருவனந்தபுரத்தில் மாசம் ஐயாயிரம் ரூபாய் சம்பளத்தில் திவான் வேலையாக இருந்தார். அவருக்குக் கலியாணம் ஆகி அநேக வருஷகாலம் ஆகிறது. அவருக்கு 10, 12-வயசில் ஓர் ஆண் குழந்தைகூட இருந்தது” என்றாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

உடனே திவான் மிகுந்த கலக்கமும் அடைந்து, “குழந்தைகூட இருந்தான் என்கிறீர்களே! அந்தக் குழந்தை இப்போது இல்லையா?” என்றார்.

அந்த அம்மாள், “அந்தக் குழந்தை உயிரோடுதான் இருக்கிறான்; ஆனாலும், அவன் இப்போது இன்ன இடத்தில் இருக்கிறான் என்பது மாத்திரம் தெரியவில்லை” என்றாள்.

சாமியார், “அந்தப் பையனுடைய தகப்பனார் திருவனந்தபுரத்தில் திவான் வேலையில் இருப்பதாகச் சொன்னீர்களே! அவருடைய பையன் அங்கே இருந்து எங்கேயாவது போய்விட்டானா? அவர்களுடைய வரலாற்றை நன்றாகச் சொல்லுங்கள்” என்றார்.

அந்த ஸ்திரீ, “சுமார் மூன்று மாச காலத்துக்குமுன் இந்த ஊர்க் கோவிலில் திருவிழா நடந்தது. அதற்காக வந்து விட்டுப் போகும்படி பெரியவர் தம்முடைய பிள்ளைக்குக் கடிதம் எழுதி, அவருடைய பிள்ளை வேலையைவிட்டு வரமுடியவில்லையாம். அவர் தம்முடைய சம்சாரத்தையும், பிள்ளையையும் வேலைக்காரர்களோடு முன்னால் அனுப்பிவிட்டு, தாம் பின்னால் தேரன்றைக்கு முதல்நாள் இங்கே வருவதாகச் சொல்லி அனுப்பினாராம். வேலைக்காரர்களோடு திவானுடைய பெண்ஜாதியும் பிள்ளையும் இங்கே வந்து சேர்ந்தார்கள்; அவர்கள் காலையில் வந்தார்கள். அன்று பகல் முழுவதும் பெரியவரோடு இருந்தார்கள். 

இரவில் எல்லோரும் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்டு தூங்கினார்கள். மறுநாள் பொழுது விடிந்தவுடன் கிழவர் பார்க்கிறார். மருமகள், பேரன் ஆகிய இருவரும் போன இடம் தெரியவில்லை; இருவரும் மாயமாய் மறைந்து போய்விட்டார்கள். கிழவர் நிரம்பவும் பயந்து திகிலடைந்து ஊர் முழுவதும் தேடிப் பார்த்தார்; ஆள்களை விட்டு கிணறு குளம் முதலிய சகலமான இடங்களையும் ஒன்றுகூட பாக்கிவிடாமல் சோதனை போட்டுப் பார்த்துவிட்டார். அவர்கள் இருவரும் காணாமலேயே போய்விட்டார்கள்” என்றார்.

அதைக் கேட்ட திவான் தமது செவிகளையே நம்பாமல் பேரிடியினால் திடீரென்று தாக்கப்பட்டவர் போல பொறிக் கலக்கமடைந்து திக்பிரமைகொண்டு தத்தளித்து அந்த ஸ்திரீயை நோக்கி, “நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறதே! இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்களான இருவரும் எப்படித் தான் மறைந்து போயிருப்பார்கள்! இவர்களுக்கு விரோதிகள் யாராவது உண்டா? அவர்கள் இரண்டு பேரையும் தூக்கிக்கொண்டு போய் விரோதிகள் எங்கேயாவது மறைத்திருப்பார்களா?” என்றார்.

அந்த ஸ்திரீ, “இவர்களுக்கு விரோதி யாரும் இல்லவே இல்லை. அப்படிச் செய்தது விரோதியாக இருந்தால், அவர்கள் கிழவரை மாத்திரம் உயிரோடு விட்டுப் போவார்களா? அந்தப் பெண்ணே தன்னுடைய பிள்ளையை அழைத்துக்கொண்டு எவருடனாவது அக்கரைச் சீமைக்குப் போயிருப்பாளோ என்றே ஊரில் எல்லோரும் சந்தேகங்கொள்கிறார்கள்” என்றாள்.

திவான், “அதைப்பற்றி பெரியவர் தம்முடைய பிள்ளைக்கு எழுதவில்லையா?” என்றார்.

அந்த ஸ்திரீ, “தாம் உடனே அப்படி எழுதினால், பிள்ளைக்கு அது நிரம்பவும் கஷ்டமாக இருக்குமென்று நினைத்து மேலும் இரண்டொரு நாள்கள் வரையில் நன்றாகத் தேடிப் பார்த்து, ஒரு வேளை அந்தப் பெண் புருஷனிடமே திரும்பிப்போயிருப்பாளோ என்பதைத் தெரிந்துகொண்டு வர ஓர் ஆளையே திருவனந்தபுரத்துக்கு அனுப்பலாமென்றிருந்தார். மூன்றாவதுநாள் திருவனந்தபுரத்திலிருந்து கிழவருக்கே ஒரு தந்தி வந்தது. அதைக் கண்டவுடன் தம்முடைய மருமகளும் பேரனும் அந்த ஊருக்குத் திரும்பி வந்துவிட்டார்கள் என்றுதான் அந்தத் தந்தியில் செய்தி எழுதப்பட்டிருக்குமென்று கிழவரும் மற்றவர்களும் நினைத்து நிரம்பவும் சந்தோஷமடைந்தனர்; ஆனால் தந்தியைப் பிரித்துப் பார்த்தவுடன் அவர்கள் எல்லோருடைய சந்தோஷமும் அழுகையாய் மாறிவிட்டது. அதிலிருந்த சங்கதி இந்த ஊரில் நடந்ததைவிடப் பதினாயிரம் பங்கு அதிக துக்கத்தை உண்டுபண்ணிவிட்டது. 

திவான் எங்கேயோ கிராமத்தில் முகாம் போட்டிருந்தபோது, வெளியில் எங்கேயோ போன சமயத்தில், அவரைப் புலி தூக்கிக்கொண்டுபோய்த் தின்றுவிட்டதென்றும், உடனே கிழவர் புறப்பட்டுவந்து அவருடைய சொத்துக்களை ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் அந்தத் தந்தியில் செய்தி எழுதப்பட்டிருந்தது. அதைக்கேட்டவுடனே கிழவர் அப்படியே மூர்ச்சித்து வேரற்ற மரம்போலக் கீழே சாய்ந்துவிட்டார். பக்கத்திலிருந்தவர்களும் அதுபோலவே விசனக் கடலில் ஆழ்ந்துபோனார்கள். ஆனாலும், கிழவரைக் கவனித்து அவருக்கு ஆகவேண்டிய உபசரணைகளைச் செய்து அவருடைய மூர்ச்சயைத் தெளியச் செய்தனர்; உடனே கிழவர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறி விழுந்து புரண்டெழுது புலம்பி அளவிட முடியாத விசனக் கடலில் ஆழ்ந்து போனார். காணாமல் போன மருமகளையும் பேரனையும் பற்றிக் கவலைப்பட்டு வருந்துவதா, அகால மரணமாய் இறந்துபோன தமது குமாரரைப்பற்றி அழுவதா, கிழவர் என்ன செய்வார் பாவம்! அவர் பைத்தியங்கொண்டவர்போல மாறி அப்படியே இடிந்து உட்கார்ந்து போய்விட்டார். 

பக்கத்தில் இருந்தவர்கள் அவருக்குப் பலவிதமான ஆறுதல்கள் கூறி யாரோ விரோதிகள் மருமகளையும் பேரனையும்கொண்டு போனதன்றி, அந்த மாதிரி பொய்த் தந்தி கொடுத்திருப்பார்களென்று சொல்லிப் பெரியவரைப் பலவாறு தேற்றி, மறுநாள் அவரையும் தவசிப்பிள்ளையையும் திருவனந்தபுரத்துக்கு அனுப்பினார்கள். அவர்கள் இருவரும் அந்த ஊருக்குப் போய்ப் பார்த்ததில், காந்தியம்மாளும் அவளுடைய பிள்ளையும் அந்த ஊரிலும் காணப்படவில்லை. ஆனால் திவானைப் புலி அடித்துத் தின்றுவிட்டதென்ற செய்தி மாத்திரம் உண்மையானதென்பது தெரியவந்தது. அந்த ஊரிலிருந்த மகாராஜன் முதலிய எல்லோரும் கிழவருக்கு நிரம்பவும் மரியாதை செய்து, ஆறுதல் சொல்லித் தேற்றி, திவானுடைய குழந்தையைப் பத்திரமாகக் காப்பாற்றி முன்னுக்குக்கொண்டுவரும்படி சொல்லி அனுப்பினார்களாம். 

அங்கே இருந்து கிழவர் சுமார் இரண்டு லக்ஷம் ரூபாய் பெறுமானமுடைய சொத்துக்களை எடுத்துக்கொண்டு நாலைந்து தினங்களில் இங்கே வந்து சேர்ந்தார். ஏற்கனவே, இந்த ஊரில் அவருடைய வசத்தில் ஒரு லக்ஷம் ரூபாய் பெருமானமுடைய சொத்து இருந்தது. ஆகமொத்தம் மூன்று லக்ஷம் ரூபாய் பெறுமானமுடைய சொத்து அவரிடம் இருந்தது. ஆனாலும், திடீரென்று தம்முடைய குமாரரையும் மருமகளையும், பேரனையும் ஒரே காலத்தில் இழந்த துக்கம் சகிக்க முடியாததாகிவிட்டது. அவர் உடனே நோயில் விழுந்துவிட்டார். அவருடன் வெகுகாலமாக இருந்துவரும் இராமலிங்கம் என்ற தவசிப்பிள்ளை அவருடைய சுய ஜாதியைச் சேர்ந்த மனிதர். 

அவருக்குச் சம்சாரமும், பிறகு பதினாறு அல்லது பதினேழு வயசில் ஒரு பிள்ளையும், பதின்மூன்று வயசில் ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். கிழவர் நோயாய்ப் படுத்தவுடனே, அவரை ஓயாமல் கவனிக்கவும் அவருக்கு வேண்டிய சிகிச்சைகளைச் செய்யவும் மனிதர்கள் வேண்டுமென்று, தவசிப்பிள்ளை தம்முடைய சம்சாரம், பிள்ளை பெண் ஆகிய எல்லோரையும் இந்த இடத்துக்கே அழைத்துக்கொண்டார். எல்லோரும் இரவு பகல் பாடுபட்டுக் கிழவருக்கு மருந்துகள் கொடுத்துப் பத்தியச் சாப்பாடு போட்டு அவருக்கு ஆறுதல் பல சொல்லி அவருடைய மனசையும் உடம்பையும் தேற்றினார்கள். ஒரு மாசகாலத்தில் கிழவருடைய விசனம் ஒருவிதமான சமனமடைந்தது. அவருடைய உடம்பும் கொஞ்சம் தேறியது. அதுவுமன்றி, இன்னொரு மாறுதலும் காணப்பட்டது. 

அந்தத் தவசிப்பிள்ளையும் அவருடைய குடும்பத்தாரும் கிழவரை தங்கள் சொந்த மனிதரைவிடப் பன்மடங்கு அதிக பிரியமாகவும் பட்சமாகவும் நடத்தினார்கள். அதுபோலவே, கிழவருக்கும் அவர்களிடம் ஒருவிதப் பற்றும் வாஞ்சையும் உண்டாகிவிட்டன. தம்முடைய நெருங்கிய பந்துக்கள் எல்லோரும் போய்விட்டதனால், தாம் நிராதரவாக இருந்த சமயத்தில் அவர்கள் தம்முடைய பந்துக்களைவிட நூறு மடங்கு அதிகப் பற்றுதலாகவும், பிரியமாகவும், பணிவாகவும் இருந்ததைக் காணக் காண, அவர்களுடைய பாந்தவ்வியம் தமக்கு அத்தியாசவசியமானது என்றும், அவர்கள் இல்லாவிட்டால் தாம் ஒரு நிமிஷங்கூட உயிரோடிருக்க முடியாதென்றும் கிழவர் எண்ணத் தொடங்கினார். தமக்குப் பிறகு, தம்முடைய மூன்று லக்ஷம் பெருமானமுடைய சொத்துக்கள் எவருக்குமில்லாமல் சர்க்காரைச் சேர்ந்துவிடுமே என்ற அச்சமும் கிழவருக்கும் மற்றவருக்கும் உண்டாகத் தொடங்கியது. தவசிப்பிள்ளை தங்களுக்குக் கிடைக்காது என்பதைக் கண்டு அதற்கு ஒரு யுக்தி தேட ஆரம்பித்தார். அவருடைய மகள் கமலவல்லி என்பவள் நல்ல ரூபவதி. அவள் பதின்மூன்றாவது வயசிலேயே பெரிய மனுஷியாகி இருந்தாள். 

அவளைத் தாம் மெதுவாகக் கிழவருக்குக் கட்டிவிட்டால், தெய்வாநுகூலத்தில் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து விடுமானால், எல்லாச் சொத்தும் அதைச் சேர்ந்துவிடுமென்றும், குழந்தை பிறக்காவிட்டாலும், தம்முடைய பெண்ணும் தாமும் எல்லாச் சொத்தையும் தம்முடைய பிரியப்படி செலவிடலாமென்றும் நினைத்த தவசிப்பிள்ளையும் அவருடைய சம்சாரமும் தம்முடைய பெண்ணுக்கு இரவு பகல் போதனை செய்து, அதன் புத்தியைத் திருப்பி, கிழவரைக் கட்டிக்கொள்வதற்கு அவள் சம்மதிக்கும்படிச் செய்துவிட்டதன்றி, அந்தப் பெண் எப்போதும் அவருடன் கூடவே இருந்து, அவருக்கு ஆகவேண்டிய பணிவிடைகளையெல்லாம் செய்யும்படியும் அமர்த்திவிட்டனர். 

அந்தப் பெண்ணின் பிரியத்தையும் பணிவையும் உழைப்பையும் கண்ட கிழவருக்கு அவளிடத்தில் ஒருவித வாஞ்சையும் பாசமும் ஏற்பட்டுப் போயின. திவான் இறந்து இரண்டு மாசகாலம் ஆவதற்கு முன் தவசிப்பிள்ளையும் அவருடைய குடும்பத்தாரும் காட்டிய பிரியத்தினாலும் செய்த உபசரணைகளினாலும் கிழவருக்குத் தாம் இழந்த மனிதர்களைப் பற்றிய நினைவே அவ்வளவாக மனசில் உறைக்காமல் போயிற்று. இரவு பகல் தமக்கெதிரிலேயே இருந்து இன்பமயமாக விளங்கிய அந்த அழகிய பெண்ணின் மேலேயே அவருடைய கவனம் செல்ல ஆரம்பித்தது. 

அவருக்கு எந்தக் காரியமும் ஆகவேண்டுமானாலும், அது கமலவல்லி இல்லாவிட்டால் முடியாது. ஒரு நிமிஷம் கமலவல்லி எங்கேயாவது போய்விட்டால், அவருக்கு இருக்கைகொள்ளாது. அடிக்கடி அவர் கமலவல்லி கமலவல்லியென்று எதற்காகவாவது கூப்பிட்டுக்கொண்டே இருப்பார். அந்தப் பெண் அவரை அதற்குமுன் தாத்தா, தாத்தாவென்று கூப்பிட்டுக்கொண்டே இருக்கும். ஒரு நாள் அந்தப் பெண் அவரைப் பார்த்து, “தாத்தா! ஒரு நிமிஷங்கூட உங்களுக்குக் கமலவல்லி இல்லாமல் காரியம் ஆகமாட்டேனென்கிறதே. மாயூரத்திலிருந்து யாரோ சிலர் பெண் கேட்க வந்து, என் தாயார் தகப்பனாருடன் அடிக்கடி பேசிவிட்டுப் போகிறார்கள். என்னை இவர்கள் மாயூரத்தில் கட்டிக்கொடுத்துவிட்டால், அதற்குப்பிறகு நீங்கள் எந்தக் கமலவல்லியைக் கூப்பிடுவீர்கள்?” என்று நிரம்பவும் பிரியமாகவும் வாஞ்சையாகவும் உருக்கமாகவும் சொன்னாளாம். 

அதைக்கேட்ட கிழவருடைய முகம் உடனே வாடிப்போய்விட்டதாம். அவருடைய மனசில் ஒருவித ஏக்கம் உண்டாய்விட்டதாம். அவர் அதிக விசனமடைந்து கொஞ்சநேரம் மெளனமாக இருந்தாராம். உடனே பெண் “தாத்தா! என்னை நீங்களே கட்டிக்கொண்டுவிடுங்கள். எனக்கும் உங்களை விட்டுப் பிரிந்துபோக மனமே இல்லை. நான் வேறே இடத்துக்குப் போனாலும் எப்போதும் உங்கள் நினைவாகவேதான் இருப்பேன்” என்றாளாம்.

அதைக்கேட்ட கிழவர் அதற்கு எவ்வித மறுமொழியும் சொல்லாமல் அப்போது பேசாமல் இருந்துவிட்டாராம். ஆனாலும், அந்த விஷயம் அவருடைய மனசில் அது முதல் பதிந்து போகவே, அவர் பல தினங்கள் வரையில் அதைப்பற்றி தீர்க்காலோசனை செய்தாராம். கடைசியில் எப்படியோ, கிழவருக்கும் கமலவல்லிக்கும் நிச்சயமாகிவிட்டது. 

காரியம் இவ்விதம் முடிவாகி இருக்கின்றதென்ற சங்கதி ஊராருக்குத் தெரிந்தால், ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான அபிப்பிராயத்தை வெளியிடுவார்கள். ஆகையால், அதனால் கிழவருடைய எண்ணம் மாறினாலும் மாறலாமென்று நினைத்து, இதைக் கடைசிவரையில் வெளியிடாமல் வைத்திருந்து, நாள் வைத்து பந்தல் போட்டு, சகலமான முஸ்தீபுகளையும் செய்துகொண்டு நேற்றுதான் இவர்கள் இந்த விஷயத்தைப் பகிரங்கப்படுத்தினார்கள். இன்று காலையில் முகூர்த்தம் நிறைவேறியது. பிறகு பந்திபோஜனம் நடந்தது. இப்போது மேளக் கச்சேரி நடக்கிறது” என்றாள்.

அந்த வரலாற்றை நிரம்பவும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டே இருந்த திவான் சாமியார், “ஓகோ! அப்படியா! சரிதான். நல்ல காரியம். தள்ளாத கிழவருக்கு இவர்களுடைய உதவியாவது ஏற்படும்படி கடவுள் செய்தாரே! அதுவும் முன் ஜென்ம பூஜாபலன்தான். கலியாணப் பெண்ணின் தாயாரும் தகப்பனாரும் நல்ல குணமுடைய மனிதர்கள் தானே!” என்றார்.

அதைக் கேட்ட அந்த ஸ்திரீ, “இதுவரையில் அவர்கள் ஏழ்மை நிலையிலிருந்தார்கள்; நல்லவர்களாக இராமல் வேறு மாதிரியாயிருக்க அவர்களுக்குச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இப்போது திடீரென்று புதுப்பணம் படைத்தவர்கள் ஆய்விட்டார்களே. இனி எப்படி மாறுவார்களோ! பணம் மனிதரை எப்படி வேண்டுமானாலும் செய்துவிடும். என்னவோ பார்க்கலாம். எல்லாம் காலக்கிரமத்தில்தான் தெரியும்” என்றாள்.

திவான் சாமியார், “கலியாணப் பெண்ணின் மாதிரி எப்படி?” என்று நயமாக வினவினார்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அந்த ஸ்திரீ, “அதையெல்லாம் இப்போது நாம் எப்படிக் கண்டுபிடித்துச் சொல்லமுடியும்? மனிதர் தமக்கு அதிகாரம் கிடைக்கிறவரையில் அடக்கமாகவும் நயமாகவும்தான் நடந்துகொள்வார்கள். தம்முடைய ஸ்தானம் நிலைத்துப்போய்விட்டது, இனி மற்றவர் தம்மை அசைக்கமுடியாது என்று கண்டுகொண்டால், பிறகு அவர்கள் புதுமாதிரியாகத்தான் நடந்துகொள்வார்கள். இது எல்லா இடத்திலும் பிரத்தியக்ஷமாக நடக்கும் சங்கதிதானே” என்றாள்.

திவான் சாமியார், “ஆம்; அம்மா! நீங்கள் சொல்வது சரியான வார்த்தை. ஆனாலும் நான் பயந்து உங்களிடம் இன்னம் ஒரே ஒரு சங்கதி கேட்கிறேன். கோபித்துக்கொள்ளாமல் அதை மாத்திரம் சொல்லிவிடுங்கள். இந்தப் பெரியவர் திருவனந்தபுரத்திலிருந்து வந்த பிறகு நோயாய்ப் படுத்திருந்து தேறினாரல்லவா? அதன்பிறகு இவர்களுக்குள் ரகஸியமாக நடந்த விஷயங்களையெல்லாம் நீங்கள் சொன்னீர்களே, அவற்றையெல்லாம் நீங்கள் எப்படித் தெரிந்துகொண்டீர்கள்? யூகத்தின் மேல்தானே?” என்று விநயமாக வினவினார்.

அதைக்கேட்ட அந்த ஸ்திரீ, “எனக்கு அந்தத் தவசிப்பிள்ளையின் சம்சாரம் பழக்கமானவள். அடிக்கடி அந்த அம்மாள் என்னிடம் வந்து தங்கள் குடும்ப ரகஸியங்களை எல்லாம் சொல்லிவிட்டுப் போவாள். இந்த விஷயங்களை எல்லாம் அந்த அம்மாள் சொல்லத்தான் நான் தெரிந்துகொண்டேன். இல்லாவிட்டால், வேறு எப்படித் தெரியப்போகிறது” என்றாள்.

திவான் சாமியார், “சரி; கிழவர் தம்முடைய வித்தாப்பிய தசையில் துயரத்துக்கு ஆளாய் முற்றிலும் அநாதரவான நிலைமையில் இருக்கிறார். இவர் அவரையும் போஷித்துக் காப்பாற்றித் தாங்களும் க்ஷேமப்பட்டு நல்ல நிலைமையில் இருக்கவேண்டும். சரி; கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் எதற்காக? உலகைத் துறந்த பரதேசியான எனக்கு இந்த விசாரணையெல்லாம் எதற்கு? சாப்பிட்டவுடன் கொஞ்சம் அலுப்பாக இருந்தது. அதைப்பற்றி நான் கொஞ்சநேரம் திண்ணையில் உட்கார்ந்துகொண்டேன். 

நான் போய்விட்டு வருகிறேனம்மா!” என்று கூறியவண்ணம் தமது மூட்டையையும் செம்பையும் தண்டத்தையும் எடுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டுத் தெருவிற்குப் போய்க் கலியாண வீட்டின் பக்கம் தமது முகத்தையும் திருப்பாமல் விரைவாக நடந்து அந்தத் தெருவைவிட்டு அப்பால் சென்று மாயூரத்திற்குப் போகும் ரஸ்தாவோடு பிரயாணப்பட்டுவிட்டார்.

அவரது மனத்தின் அப்போதைய நிலைமை இன்னவிதம் இருந்தது என்பதை வாசகர்கள் யூகித்துக்கொள்வதே எளிதன்றி, விவரித்து உரைப்பது சாத்தியமற்ற காரியமென்றே கூற வேண்டும். அந்த நிமிஷம் வரையில் தாம் பிரத்தியக்ஷ தெய்வமாக மதித்திருக்கும் தமது தந்தை ஒரு பெண்ணை மணந்து வைபவமாய்க் கலியாணம் நடத்துகையில் தாம் கூட இருந்து அந்த சந்தோஷத்தைத் தாமும் அடையக் கொடுத்து வைக்கவில்லையே என்ற பெருத்த விசனமும் மனக்கொதிப்பும் அவரது மனத்தில் முக்கியமாகப் பொங்கி எழத் தொடங்கின. 

அவர் கலியாணம் செய்துகொள்வதைப்பற்றி உண்மையில் அருவருப்பைக்கொண்டுள்ள ஊர் ஜனங்களின் வெளிப்பார்வைக்கு அதை மறந்து, அதைப்பற்றித் தாம் சந்தோஷப்படுவதாய்க் காட்டி, அந்தச் சடங்கை நடத்திவைத்து விருந்துண்டு மேளக் கச்சேரியைக் குதூகலமாய்க் கேட்டுக்கொண்டிருக்க, அதைப்பற்றி உண்மையிலேயே அபாரமான களிப்பும் ஆநந்தமும் அடையும் தாம் அந்த மாளிகையைப் பார்க்கவும் கொடுத்து வைக்காமல் உடனே புறப்பட்டு அந்த ஊரை விட்டே ஓட நேர்ந்ததே, ஈசுவரா! என்ன கொடுமை. இது! திவான் சகிக்க இயலாத பெருத்த ஏக்கமும் வேதனையும் துயரமும் அடைந்தார். தமது மனைவியும், ராஜா பகதூரும் எங்கேதான் போயிருப்பார்களென்று அவர் தம்மாலான வரையில் யூகித்து யூகித்துப் பார்த்து தமது மூளையை வதைத்துக்கொண்டதெல்லாம் வீணாகவே முடிந்தது. 

அந்த விஷயத்தில் அவர் ருஜுவான அபிப்பிராயம் எதையும்கொள்ள இயலவில்லை. ஆனாலும், தனக்குப் பாஷாணமிட முயன்ற முத்துசாமி கூறிய வரலாறு ஒருவேளை நிஜமாய்த்தான் இருக்குமோ என்ற சந்தேகம் நிவர்த்தியாக வழியில்லாமல் இருந்ததன்றி, தாம் திருவிடமருதூரில் கேள்வியுற்ற விபரீதச் செய்தி அந்தச் சந்தேகத்தை அநேகமாய் ஊர்ஜிதப்படுத்தியது. திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு மாமனார் வீட்டிற்கு வந்த காந்திமதியம்மாள் அதே இரவில் எங்கே போயிருப்பாள்! அவள் திரும்பித் திருவனந்தபுரத்திற்கும் போகவில்லை. 

வேறு எவ்விடத்திலும் காணப்படவில்லை; அவள்தான் போனாள் என்றால், அவளுடைய சொற்படி ராஜாபகதூர் நடந்துகொள்ள எப்படி இணங்கினான்? ஒருக்கால் அவர்கள் இருவருக்கும் எதிர்பாராத அபாயம் ஏதேனும் நேர்ந்திருக்குமா! அவர்கள் இருவரும் ஆற்றில், கிணற்றில் தவறி விழுந்து தற்செலயாய் இறந்து போயிருப்பார்களா? அப்படியிருந்தால் அவர்களுடைய சவம்கூட வெளிப்படாமல் போக ஏதுவில்லையே! பிறகு எப்படித்தான் அவர்கள் மாயமாய் மறைந்து போயிருப்பார்கள்? காந்திமதியம்மாள் தானாக இணங்கியே ரகஸியமாய்ப் புறப்பட்டு இரவோடிரவாய் எங்கேயாவது போயிருந்தாலன்றி இப்படி யாதொரு கேடுமின்றி திடீரென்று மறைந்துபோக சாத்தியப்பட்டிருக்காது. அவள் போவதற்கு முன்னாகவே, ராஜாபகதூரையும் அவள் சரிப்படுத்தி, அவன் தனது விருப்பத்திற்கு இணங்கும்படி செய்திருந்தாலன்றி, அவனும் இவ்வாறு திடீரென்று மறைந்து போயிருப்பதும் சாத்தியமற்ற விஷயம். ஆகவே, காந்திமதியம்மாளைப்பற்றி முத்துசாமி கூறிய தகவல் உண்மையாகவே இருக்கவேண்டும். அவள் தனது குமாரனையும் அதற்கு இணங்கச் செய்து தன்னுடன் அழைத்துக்கொண்டு போயிருக்கவேண்டும் என்ற நினைவுகள் நமது திவான் சாமியாரது மனத்தில் தோன்றி, பெருத்த போர் விளைக்கத் தொடங்கின. 

தம்மிடம் அத்தனை வருஷ காலம் மகா உத்தமியாக நடந்துகொண்டவளான தமது காந்திமதியம்மாளா அப்படித் தன்னிடம் துரோக சிந்தையாக நடந்துகொண்டிருப்பாளென்றும், தாம் கண்டதும், கேட்டதும் கனவோ நினைவோவென்றும் திவான் எண்ண எண்ண, அவரது அறிவு சிதறிப்போக ஆரம்பித்தது. அவர் முற்றிலும் பிரமித்துப்போய்விட்டார். வேறே எவனாகிலும் ஏதேனும் அநுகூலத்தைக் கருதித் தம்மைக் கொல்ல உத்தேசித்தானோவென்று தாம் எதிர்பார்த்ததை ஊர்ஜிதப்படுத்த எவ்வித ஏதுவுமில்லையென்ற நிச்சயம் ஏற்பட்டது. ஆகவே, தாம் சந்நியாசம் வாங்கிக்கொண்டது தமக்குச் சரியான நிலைமை என்ற முடிவையும் அவர் அடைந்தார். 

பர்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் மனிதர் வாழலாம்; அவள் ஏறுமாறாக நடப்பாளானால் கூறாமல் சந்நியாசம்கொள் என்று முன்னோர் கூறிய விலை மதிப்பற்ற அருள்மொழி தமது விஷயத்தில் தானாகவே பலித்துவிட்டது என்று திவான் சாமியார் நினைத்துக்கொண்டார். எவ்வளவுதான் தமது மனைவியும், குமாரனும் தமக்கு உதவாமல் போய்விட்டாலும், தாம் உலகையும் பெருத்த பதவியையும் துறந்து காஷாயம் வாங்கிக்கொண்டு யாத்திரை சென்றாலும், தமக்கு எவ்விதக் குற்றமும் புரியாத தமது தந்தையைத் தாம் விசனக்கடலில் ஆழ்த்தியதும், அவரைப் பார்க்காமல் போவதும் பெருத்த குற்றமென்று திவான் உணர்ந்தார். 

ஆயினும், தமது தந்தை தாம் இறந்துபோய்விட்டதாக நினைத்து, விசனக் கடலில் ஆழ்ந்து செயலற்று அநாதரவாய் இருந்து, பிறருடைய உதவியையே எதிர்பார்த்து, கடைசியில் தமது மிகுதிக் காலத்தையும் அமைதியாகக் கடத்துவதற்கு அநுகுணமாக ஒரு பெண்ணை மணந்துகொண்டிருக்க, அந்தச் சமயத்தில், தாம் இன்னார் என்று அவரிடம் வெளியிட்டால், கிழவர் அந்த அபாரமான அதிர்ச்சியைத் தாங்கமாட்டாமல் இறந்து போனாலும் போய்விடுவார். இறந்துபோன புத்திரனை மறுபடி காண்பதான அமிதமான பேராநந்தம் ஒருபுறமிருக்க, இவ்வளவு விருத்தாப்பிய தசையில் தாம் கலியாணம் செய்துகொண்ட விஷயத்தைப் பற்றியும் காந்திமதியம்மாள் ராஜாபகதூர் ஆகிய இருவரையும் வரவழைத்த சமயத்தில் அவர்கள் காணாமல் போய்விட்டதைப் பற்றியும் தமது தந்தை சகிக்கவொண்ணாத கிலேசமும் சங்கடமும் அடைந்து தமது முகத்தில் விழிக்கவே விரும்பாமல் ஒருவேளை தமது உயிருக்கே ஹானி தேடிக்கொள்வாரோ என்று திவான் நினைத்தார். அவ்வாறு தமது தந்தையின் உயிருக்குத் தாம் ஹானி தேடுவதாவது, அவர் அந்தப் பெண்ணினிடம் எதிர்பார்த்த இல்லற வாழ்க்கையைத் தாம் கெடுப்பதாவது பரமபாதகமான செய்கைகள் என்று திவான் நினைத்தார். 

அதுவுமன்றி, அவரது பரிதாபகரமான நிலைமையைக் கருதியோ, அவரது அபாரமான செல்வத்தைக் கருதியோ, தமது யெளவனப் பெண்ணை அவருக்கு மணம் புரிவித்தவர்களுக்கும், அந்தப் பெண்ணுக்கும் தாம் விசனம் உண்டாக்குவதும் பாவகரமான செய்கையென்று திவான் எண்ணினார். ஆகவே, தாம் இறந்து போனதாகவே தமது தந்தை நினைத்து அந்தப் பெண்ணோடு சந்தோஷமாக இருந்து, மிஞ்சியுள்ள தமது ஆயுட்காலத்தைக் கடத்தும்படி தாம் விட்டுவிடுவதே தாம் செய்யத்தக்க காரியமன்றி, ஒருவாறு அமைதி அடைந்துள்ள தமது தந்தையின் மனம் மறுபடி சஞ்சலமடைந்து புண்படும்படிச் செய்வது முற்றிலும் தகாத செய்கையென்று தீர்மானித்துக்கொண்டார். 

ஆயினும், தாம் தமது தந்தையின் திருவுருவத்தைத் தூரத்தில் இருந்தாகிலும் ஒரு தடவை மனங்குளிரப் பார்க்கவேண்டுமென்ற ஆசை அவரைத் தூண்டியது. ஆனாலும், அவராகிலும், தம்மோடு அதற்குமுன் பழகிய வேறு மனிதர் எவராகிலும் தம்மைப் பார்த்துத் தமது அடையாளத்தைக் கண்டுகொண்டால், அந்தக் கலியாணச் சந்தோஷம் உடனே சீர்குலைந்து போகுமென்று நினைத்தே திவான் அந்த இடத்தையும் ஊரையும் விட்டு உடனே அவசரமாய் வேறு ஊருக்குப் பிரயாணமாகிவிட்டார். தாம் காசி முதலிய க்ஷேத்திரங்களுக்குப் போய்விட்டு மறுபடி திரும்பிவந்து தமது தந்தையைப் பார்த்து ஆநந்திக்கலாம் என்று திவான் முடிவாகத் தீர்மானித்துக்கொண்டார். 

இப்போது தாம் தமது தந்தையைப் பார்த்தால், அது தமக்கு மாத்திரம் சந்தோஷமாக இருக்குமன்றி, அவருக்கு அது பெருத்த பொல்லாங்காக முடியுமாதலால், தமது ஆசையைத் தாம் இப்போது அடக்கிக்கொண்டுபோய், சிறிது காலங்கழித்து மறுபடி வருவதே உசிதமான செய்கையென்று நினைத்த திவான், தமது மனைவியின் நினைவையே தாம் சீக்கிரத்தில் மறந்துவிடவேண்டுமென்ற உறுதியான தீர்மானத்தோடும், கால்நடையாகவே தாம் நடந்து நேராகக் காசி யாத்திரை போவதென்று முடிவு செய்துகொண்டு வடக்குத் திக்கில் செல்லலானார்.

- தொடரும்…