அத்தியாயம் 1
மதி,
சலனமற்று ஓடும் நதி மீது
சடசடத்துப் பொழியும் மழை; உன் பெயர்.
அனாமிகா அப்படிச் சொன்னதும் மிக லேசான அதிர்வு ஏற்பட்டதைக் காட்டிக்கொள்ளாமல் அவளை ஏறிட்டுப் பார்த்தான், செழியன். எழில் செழியன், அந்த நிறுவனத்தின் மிக முக்கிய அதிகாரி என்ற சொல்லைப் பயன்படுத்தினால் வயதான தோற்றம் வந்துவிடக் கூடும். இளைஞன். வயதைவிடவும் அதிக லட்சங்கள் ஆண்டு சம்பளம் என்பதே அவனுடைய ஒரே இலக்காக இருந்ததால், அடைந்துவிட்டான். அதைப் பிறகு பேசலாம். இப்போது அவன் டெல்லி போக வேண்டும். மறுநாள் காலையில் தனக்கு உகந்த விமான நேரத்தைச் சொல்லி, அவன் உதவியாளர் அல்லது உடன் இருந்து இப்படியான வேலைகள் செய்யும் அனாமிகாவிடம் டிக்கெட் புக் செய்ய உத்தரவிட்டிருந்தான்.
”So what” என்ற அவனுடைய கேள்விக்கான அவளுடைய முந்தைய சொற்கள்,
“அருண் குப்தா அதுல அல்ரெடி புக் பண்ணியிருக்காரு. ஹி இஸ் ஃப்ளையிங் பேக் டுமாரோ பாஸ்.”
குப்தா செழியனின் கவுன்ட்டர் பார்ட். தெற்கும் கிழக்கும் செழியன் எனில் வடக்கும் மேற்கும் அவன் எல்லை. இருவரும் நிறுவனத் தூண்கள்.
அனாமிகா தயங்கித் தயங்கி சொற்களை உதிர்த்தாள், ஏனெனில், அவனின் கோபம் அறிந்தவள் அவள்.
கார்ப்பரேட் பேஸிக் ரூல்ஸ்னு செக்ரட்ரீஸ் டிரெயினிங்ல... ஐ மீன், கீ பெர்சன்ஸ் ரெண்டு பேரும்.. ஒரே ஃப்ளைட்ல... ஐ மீன்'' எனத் தயங்க, இவன் ஏறிட, பட்டென உடைத்தாள்.
“ஏதாவது ஆச்சுன்னா, ஐ மீன் க்ராஷ்... ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தங்க... இருக்கணும்னுங்குறது மேனேஜ்மென்ட் வியூ.”
கார்ப்பரேட் என்பதன் ஒரு வரி விளக்கம் என்னவெனில், எவன் செத்தாலும் அதில் தனக்கான குறைந்தபட்ச லாபம் அல்லது இழப்பின் அளவுகளை எவ்வளவு குறைக்க முடியும் என்பதான நிகழ்வுகள் மட்டுமேதான்.
அதன்பிறகு எழில் செழியன் அன்றைய அன்றாடத்தின் மீது அவனுடைய இயல்பான வேகத்தையோ ஈடுபாட்டையோ செலுத்த இயலாமல் தன் அந்த பெரிய அற்புத வேலைப்பாடுகள் நிறைந்த அறையில் சுழல் நாற்காலியின் அதிகபட்ச இழுவைத் தன்மையை உபயோகித்து சாய்ந்து கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டிருந்தான்.
மிக மிக பிராக்டிகலான, நடைமுறைக்கு வேண்டிய ஒன்றுதான். ஆனாலும் சட்டென குழப்பிவிட்டது அல்லது ஏதோ ஒரு தெளிவை நோக்கிய சிந்தனை. கண்ணாடிக்கு வெளியே எல்லோரும் பரபரப்பாக அவரவருக்கான வட்டத்திற்குள் மும்முரமாய் இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
அவரவருக்கான வட்டம் என்பது இவ்வுலகின் ஆகப்பெரிய, அதிமுக்கிய ஒன்று என்பது செழியனுக்குப் புகட்டப்பட்ட பாடம்.
அவ்வளவு பரந்து விரிந்த வானம், மிகப்பெரிய பிரபஞ்சம். ஆனால், அதில் ஒவ்வொருவரின் வாழ்வும் அவரவருக்கான ஒரு உலகில்தானே? அதன் அளவு அவர்களின் மனம் போலத்தானே!
இதோ, கண்ணாடிக்கு வெளியே எல்லோருக்கும் பணிவிடைகள் செய்துகொண்டிருக்கும் சிட்டிபாபுவின் உலகம் இந்தக் கண்ணாடி அலுவலக வளாகத்தின் மூவாயிரம் சதுர அடிகள்தான். அதிகாலை வந்து, பின்னிரவில் செல்லும் வேலை. காஃபி, டீ, சர்க்கரை கம்மி, அதிகம் என ஒவ்வொருவரின் ருசி, பசி அறிந்து பணிவிடைகள். அவருடைய ஒரே லட்சியம், அந்த ப்ளூ கலர் சீருடையில் இருந்து கறுப்பு கலர் சட்டை அணிந்து, அவருக்குக் கீழ் சிலர் இந்த வேலைகள் செய்வதை மேய்க்கும் பொறுப்பில் அமர்வதே. இந்த உலகை விட்டு அவரின் நோக்கமோ எண்ணமோ ஆசையோ வேறெங்கும் வெளியேறியதில்லை. மனம் அறிந்ததெல்லாம் அந்த அடுத்த கட்ட கறுப்பு சட்டைதான்.
செழியனின் குழப்பமான எண்ண அடுக்குகளில் இப்படியான சிந்தனைகள், அவனுடையதும் சின்னஞ் சிறிய உலகமாக, ஒரு கிளையின் முக்கிய பொறுப்பான பிராஞ்ச் மேனேஜர் நிலையை அடைவதாகத்தான் இருந்தது. அவன் உடலில் எரிந்த அது சிறிய நெருப்பல்ல என்பது போகப் போகத்தான் அவனுக்கே புரிந்தது.
ஆனால், அவனுடைய இப்போதைய உலகம் அங்கு, கண்ணாடிக்கு வெளியே நடந்து வந்துகொண்டிருந்தது. அவ்வளவு நிதானமாக, அவ்வளவு ஒய்யாரமாக நடந்து வந்துகொண்டிருந்தாள், மதி.
மதி, செழியன் சற்று அசந்திருந்தால் அவன் இடத்தில் அமர்ந்திருக்கக் கூடிய திறமையும், அவனை விடவும் மேலேறி, COO ஆகிவிட வேண்டும் என்ற லட்சியமும் கொண்ட அதிரடிப் பெண். மார்க்கெட்டிங் பிரிவின் முடிசூடா ராணி. மிக எளிதாக செய்யும் எல்லாமுமே மிக நேர்த்தியாக இருக்கும் என நம்பும், கார்ப்பரேட்டின் அத்தனை சூட்சமங்களையும் கரைத்து, தினமும் காலையில் எனர்ஜி டிரிங்க்காக குடித்து, அதே எனர்ஜியை தன் குழுவினரிடமும் அந்த நேர்மறை அலைக்கற்றையைக் காற்றில் பரப்பும், பரபரப்பானவள்.
இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக அவள் கருதுவது, எழில் செழியனின் காதலி எனும் அந்த உணர்வை. தனக்கானவன் அவன் எனும் நினைப்பை. தக்கனன் அவன் எனும் மிதப்பை.
வரும் வழியெங்கும் சிதறிய `ஹாய்'களை அள்ளி எடுத்து பதிலுக்கு எறிந்துகொண்டே செழியனைப் பார்த்தவள், ஏதோ தவறு என்பதை உணர்ந்து, கதவைத் தள்ளிக்கொண்டு திறந்தாள்.
அப்போதும் அதே சாய்ந்த நிலையில் இருந்த செழியன் அவளைப் பார்த்து புருவம் உயர்த்தி பக்கவாட்டில் இருந்த பஞ்சுப்பொதிகளுக்குள் அமரச் சொல்லி சைகை செய்தான்.
“என்ன... இவ்ளோதான் நீட்டமுடியுமா கால? ஹோப் ஆல் ஓகே, ஹவ் இஸ் யூ?”
வழக்கமாக இந்தக் கேள்விக்கு செழியனின் பதில், கேட்போருக்கு அவ்வளவு உற்சாகத்தைத் தந்துவிடும்
“Can’t be Better, fantablous” என்பான்.
இன்று, `ம்ம்ம்' என்றதும், கண்ணாடி வழியே அனாமிகாவைப் பார்த்தாள், மதி. அவள் மொபைலைக் காட்ட, வாட்ஸப்பைப் பார்த்தாள்.
‘Foul mode, - Reg; flight’
ஏற்கெனவே மதியும் அனாமிகாவும் பேசியவைதான்.
மதி சிரித்தாள், எப்போதும் போல் அந்தச் சிரிப்பின் சத்தம், மழை பொழிவு போன்ற நிகழ்வு அவனை நேராக அமர வைத்தது.
``டேய், இதுக்கே இப்பிடி உர்ர்னு ஆகிட்டயே... நீ செத்துட்டா நான் நம்ம மும்பை பிராஞ்ச் பிராண்டிங் டிபார்ட்மென்ட் ஹெட் மொஹ்மட் நசீம ஆப்ஷனா வச்சுருக்குறதெல்லாம் தெரிஞ்சா என்னடா பண்ணுவ?”
“ஓஹோ... அதான் மேடம் மும்பை விசிட் போகணும்னு ஒரே துடிப்பா இருக்கீங்களா?”
“த்தூ...”
அவளின் இந்த `த்தூ' அவனுக்குப் பிடித்த ஒன்று. விதவிதமாய்த் துப்புவாள். ஒருபோல சிரிப்பான்.
“ஏர்லி மார்னிங் ஃப்ளைட்ல மனுஷன் போவானா? நைட்டெல்லாம் தூக்கம் போகும், தலவலி வரும் அது இதுன்னு... இப்ப சார் எங்கூடத்தான் வந்தாகணும்.. ஆறு மணி, நாலு மணிக்கு ரூம்ல இருந்து கிளம்பணும்... பாவம்” சிறுமி போல் கைகளைக் காற்றில் பாவி, அவனை வம்பிழுத்தாள்.
`முடியாது' என்பது போல் தலையாட்டினான்.
“நான் வரல.”
“வாட்? யூ மஸ்ட் பி கிடிங் டியர். நாளைக்கு உன்னோட நாள், எல்லா பெரிய தலைகளும் உன்னோட பிரசன்டேஷனை பார்க்க வர்றாங்க... அதனால மூடிட்டு கிளம்பு” என எழுந்தாள். அவளோடு அவளுடைய நீளக்கால்களும் எழுந்து `என்னைப் பார்' என நின்றன.
சட்டென நினைவு வந்தவனாய், “எமர்ஜென்ஸி சீட்” என சொன்னவனைப் பார்த்து, `பொத்துடா எங்களுக்குத் தெரியும், நாங்களும் உயரம்தான்' என்பதுபோல் சைகையால் சொல்லி சிரித்து, வெளியேறி அனாமிகாவிடம் போய் நின்றாள், மதி.
மதியை முதன்முதலில் பார்த்த நிகழ்வு எல்லாம் நினைவில் இருக்கிறது அவனுக்கு. ஆனால், எப்படி, எந்தப் புள்ளியில் இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. ஒவ்வொரு நிகழ்வாக நினைவில் கொண்டுவந்து அவளிடம் கேட்க, அவள் துப்புவாள்.
“அந்த ப்ளூ ஷர்ட் போட்டு வந்தேன்ல ஒருநாள்... அன்னிக்குத்தான நீ `அட'ன்னு பார்த்த, கரெக்ட்டா?”
“த்தூ, அதுல நீ கேவலமா இருந்த. அய்யோ அத ஏண்டா ரிமைண்ட் பண்ண, ஹைவ் டு அன் சீ தட்... ச்சைய்க்!”
இந்த `ச்சைய்க்' அவளின் பிராண்டட் சொல்.
இப்படி, நாயகத்தன்மை என்று அவன் நம்பும் ஒவ்வொரு நிகழ்வையும் ஒரு த்தூவிலோ ஒரு ச்சைய்க்கிலோ இடக்கையால் ஒதுக்கிவிடுவாள். எல்லோரிடத்திலும் சிங்கமாய் கர்ஜிக்கும் செழியன், மதி என்றால் சிரிக்கும் சிங்கமாகிவிடுவான்.
“கண்டிப்பா ஒரு நாள் நான் சொல்வேன் பாரு, அந்த எக்ஸாட் மொமன்ட்ட...”
“ஆல் த பெஸ்ட். ஆனா, ஒன்னால சொல்ல முடியாத்...”
இப்படித்தான் அந்த ஆட்டம் ஒவ்வொரு முறையும் முடியும்.
சட்டென ஏதோ நினைவு வந்தவனாய், இன்டர்காமை அழுத்தி எடுத்த அனாமிகாவிடம், போனை மதியிடம் கொடுக்கச் சொல்ல, அவள் சட்டென திரும்பி, போனை வாங்காமல் `என்ன' என்பது போல் கேட்க, `போனை வாங்கு' என ரிசீவரை நீட்டி சைகை செய்தான். வாங்கியதும்,
“இந்த எடத்துல நீ ஒரு நாள் நின்னு என்னப் பார்த்துட்டே அனாமிகாகிட்ட பேசிட்டு இருந்த, நான் பார்த்ததும் திரும்ப டைம் இல்லாம வழிஞ்ச... அந்த மொமன்ட்தான?”
ஹஸ்கி வாய்ஸில், “இவ முன்னாடியே மானத்த வாங்கவா இல்ல தனியாவா?”
“இல்லேம்பியா?”
“டேய், நான்தான் உன் லக்கி ஏஞ்சல், இந்த கேபின், பொஸிஷன்லாம் நாம லவ் பண்ணதுக்கு அப்புறம்தான் வந்ததுன்னு சொன்ன... அப்பிடீன்னா நீ இந்தப் பக்கம் ஒக்காந்து இருக்கும்போதே லவ் பண்ண ஆரம்பிச்சோம்னுதான அர்த்தம், இடியட்!”
“சரி, சர்ரி... போன வை.”
அனாமிகா அவர்கள் இருவரையும் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்க, செழியன் தன் வழக்கமான உர்ர் என்ற பார்வைக்கு மாற எத்தனிக்கத் துவங்கினான்.
மதி, கதவைப் பாதியாகத் திறந்து, ``காலைல லேட் பண்ணாத, நான் டைரக்ட்டா ஏர்போர்ட் வந்துருவேன். வெப் செக் இன் ஆச்சுன்னு லேட் பண்ணி, மிஸ் பண்ணிறாத, உங்கூட பறக்கணும்.”
ஆம், அதிகாலை விமானப் பயணங்களை வெறுப்பவன், அவ்வப்போது, ஏர்போர்ட்டில் இருந்தே அனாமிகா, மதி என அனைவரையும் ஏவி அடுத்த வண்டியைப் பிடித்துப் போவான்.
அதிகாலை சென்னையின் ரம்மியத்தை ரசித்துக்கொண்டே விமான நிலையம் அடைந்தாள், மதி..
`குட் மார்னிங் பாஸ்', `குட் மார்னிங் டா', `குட் மார்னிங் எருமை' என எதற்கும் பதில் இல்லை, செழியனிடம் இருந்து. `லாஸ்ட் சீன் அதிகாலை 4 மணி' என்பதைப் பார்த்து, எழுந்துவிட்டான் என நிம்மதி அடைந்திருந்தாள். அழைப்பையும் அவன் எடுத்திருக்கவில்லை. குளித்துக்கொண்டிருப்பான் என நினைத்தாள், அல்லது சர்ப்ரைஸ் செய்வதாக முன்னமே வந்திருப்பான் என எதிர்பார்த்திருந்தாள். செய்யக்கூடியவன்தான். எப்போது என்ன செய்வான் என எதிர்பார்க்கவே முடியாத தருணங்களில் செய்துவிடுவான். கிஃப்ட்டோ கிஸ்ஸோ... ஆம், அவனின் அரைநொடி அரவமற்ற திடீர் முத்தங்களை பயந்து, ரசித்து எதிர்கொள்பவள்.
சுற்றிலும் பார்த்தாள். ஆள் இல்லை. மீண்டும் அழைத்தாள், இம்முறை கட் செய்யப்பட, `சரி வந்துகொண்டிருக்கிறான்' என நிம்மதியாகி, தன் அடையாளம் காட்டி உள்ளே நுழைந்தாள்.
வேறு ஓர் உலகம், எல்லோர் மீதும் ஏதோ ஒரு பரபரப்பு வாசனை, தூக்கம் மிச்சமிருக்கும் கண்கள், அந்தக் காலையிலும் அவ்வளவு நேர்த்தியாய் உடையணிந்து பெல்ட் இறுக்கிய அங்கிள்கள், சரசரக்கும் சேலைகள், சால்வை போர்த்திய பேரிளம் பெண்கள், பெரிதும் சிறிதுமாய் இழுப்புப் பெட்டிகள், இவர்களுக்கு நேர் எதிராய், அசட்டையான, சோம்பல் இளைஞர்கள், யுவதிகளின் அரைக்கால் சட்டைகள், ஹவாய் செருப்புகள், கையில் ஒரே ஒரு புத்தகம் என விதவிதமான மனிதர்கள், முகங்கள், அவர்களின் முக்கியத்துவங்கள்.
செக்யூரிட்டி செக் இன் முடித்து, எந்த கேட் நம்பர் எனப் பார்த்து, அதற்கு சற்று எதிராக அமர்ந்தவள், மொபைலை மீண்டும் எடுத்தாள். ஒரு செய்தியும் இல்லை. எல்லாமே சிங்கிள் டிக்.
செழியனின் இந்த இளவயது வெற்றி, அவனின் நெருப்பு போன்ற வேலை, அதே வேகத்தில் செயல்படும் மூளை, அவன் வேக நடை என அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் அதைப் போலவே, இதுபோன்ற எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் நடந்துகொள்ளும் தன்மையும். அதுவும் இப்படியான முக்கியமான நாளில்.
மீண்டும் அழைக்க நினைத்துக்கொண்டிருக்கும்போதே, அவனிடம் இருந்து அழைப்பு வந்தது.
“குட் மார்னிங், கேட் நம்ப...”
“பேட் மார்னிங் மதி, I can’t... நான் வரல, யூ கேரி ஆன்.”
“வாட், டேய் எழி, டோண்ட் ப்ளே, ஐ’ம் வெயிட்டிங் இங்க...”
“ஹே, அதிபன் அண்ணனுக்கு ஆக்ஸிடன்ட் ஆகிருச்சு. நீ போ, வில் டாக் டு யூ லேட்டர்.” துண்டித்தான்.
`ஃபைனல் கால் ஃபார் போர்டிங்' என மைக்கில் அலறிக்கொண்டிருந்தார் ஓர் அதிகாரி.
- தொடரும்