அத்தியாயம் 1

82.88k படித்தவர்கள்
23 கருத்துகள்

1999. டிசம்பர் 27, திங்கள்கிழமை. 

குளிர். இப்படி ஒரு குளிரை அனுபவிக்கும் வாய்ப்பை நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த இந்த இருபத்தி மூன்று வருடங்களில் மதுரை எனக்குத் தந்திருக்கவில்லை. 

நான் மட்டும்தான் எவ்வித ஆயத்தமும் இன்றிக் குளிரை எதிர்கொள்கிறேன் என்பதைச் சற்றே நடுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கம்ப்பார்ட்மெண்ட் மொத்தமும் ஸ்வெட்டர், பனிக்குல்லாய் சகிதம் அமர்ந்து என்னையும் ஜன்னலில் வழியும் பனி படர்ந்த காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரயிலின் வேகமும் இரவைவிட இந்த அதிகாலையில் அதிகரித்திருப்பது போல் தோன்றியது.

நேற்று இரவுவரை தமிழ் முகங்களாகத் தெரிந்தவை, இப்போது சட்டெனத் தெலுங்கிற்கு மாறியது போலொரு பிரமை. 

இரயில் ஜன்னல் செவ்வக சட்டகத்தின் ஊடாக, ஹைதராபாத் நகர், குளிரக் குளிர வரவேற்றது. காணுமிடமெல்லாம் கட்டடங்கள், மசூதிகள். 

மிகப்பெரிய விலங்கு ஒன்று வெகு சாதுவாகப் படுத்துக்கொண்டிருப்பது போல் பட்டது மனதிற்கு.

இரயிலின் வேகம் குறையக் குறைய, சலசலவென உடைமைகள் சகிதம் முக்கால் கூட்டம் கிளம்பியது. 

“ஹைதராபாத்தா?”

நான் கேட்டவர் பதில் சொல்லாவிட்டாலும், குரங்குக்குல்லாய் போட்டு என்னைக் கடந்தவர் சட்டென நின்று, 

“இது செகந்தராபாத்” என்றார்.

நான் மீண்டும் ஜன்னல் பார்க்கத் தொடங்கியதும், அவர், “இதுவும் ஹைதராபாத்தான். நீங்க எங்க போகணும்?”

புதிய தேசம். 

அதுவும் சொந்த ஊரைவிட்டு இவ்வளவு தூரம் வருவது இதுவே முதல் முறை. காலுக்கடியில் வைத்த பையில் இருந்து முகவரியை எடுப்பதற்குள் இரயில் முற்றாக நின்றுவிட்டது. கசகசவென ஆட்கள் நெட்டித்தள்ள, அவர் சற்று உள்நுழைந்து, வழியை விட்டு எனக்காகக் காத்திருந்தார். அவரின் காத்திருப்புதான் என்னை மேலும் பதற்றமடையச் செய்தது. அதனாலேயே பேகின் ஜிப்பைக்கூட, சட்டெனத் திறக்க முடியவில்லை.

என்னால் அந்த இடத்தின் பெயரைச் சரியாக வாசிக்க முடியவில்லை என்பதைப் புரிந்து கொண்டவர், வாங்கிப் பார்த்தார்.

”ஓ, சஃபில்குடா. இங்கயே எறங்குங்க, இங்க இருந்துதான் பக்கம்.”

மேலே இருந்த சூட்கேசையும் கீழிருந்த பையையும் எடுப்பதற்குள் பதற்றம் மேலும் அப்பிக்கொண்டது. அவர் மெல்ல முன்னேறி இறங்கிவிட்டிருந்தார்.

இறங்கி சுற்றும்முற்றும் பார்த்தேன். சற்றுத்தள்ளி நடந்து போய்க் கொண்டிருந்தார். ஓட்டமும் நடையுமாய் அவரை அடைந்தேன்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

இடவலமாக தம் பயணப்பைகளைச் சுமந்து மனோகரா சிவாஜி போல் இழுத்துக் கொண்டு போனவர், பக்கவாட்டில் லேசாகத் திரும்பி என்னைப் பார்த்து, புரிந்துகொண்டு, “ஸ்டேஷனுக்குப் பின்னால் வழியாப் போங்க. ஆட்டோ நிறைய இருக்கும். சஃபில்குடா, அனு டெக்ஸ் வழியாப் போகச் சொல்லுங்க.”

பின்னால் எனச் சொல்லும் போது, தன் இடதுகையைத் தூக்கிக் காட்ட முயன்றார். ஆனால், லெதர் பேகின் கனம் தாங்காமல், திசையைத் தலையால் சுட்டினார். 

“தேங்க்ஸ் சார்”

அவர் என் நன்றியை எதிர்பார்க்காமல் வலப்புறமாகத் திரும்பி, போய்விட்டார்.

இரயில் நிலையத்தின் பின்புறம் என்று அவர் சுட்டிக்காட்டிய இடம், முகப்பு போல் பிரம்மாண்டமாய் இருந்தது. குளிர் சற்றுப்பழகி இருந்தது. 

நிறைய பச்சை - மஞ்சள் வண்ண ஆட்டோக்களைப் பார்க்கவே வித்தியாசமாக இருந்தது, வெட்டுக்கிளிகள் குறுக்கும் நெடுக்குமாய் அலைவதுபோல். ஒரு ஆட்டோ என்னருகே வந்து அரைவட்டம் அடித்து நின்றது.

 ”சபில்கடா”

நான் சொன்னது போல் ஓர் இடம் இல்லை என்பதாகத் தலையசைத்தவன், உள்ளே ஏறுமாறு சைகை செய்தான். கையோடு மீட்டரைப் போட்டான்.

அட்ரஸ் எழுதிய பேப்பரைக் கொடுக்கவும், ஆங்கில எழுத்துகளைப் பார்த்தவன் என்னை நிமிர்ந்து பார்த்தான்.

“ஏக் மினிட்டேஹ்ரோ.”

எனக்கு ஹிந்தி தெரியும் என்றாலும் அவன் பேசியது உருது என்பதாகப்பட்டது. அரை நொடியில் வந்தவன்,

“சஃபில்குடா பாய்” என்று இடத்தைத் தெரிந்து கொண்ட உற்சாகத்தில் சரேலெனக் கிளப்பினான். மீண்டும் குளிர் உணரத் தொடங்கியது சிறுகுடல்.

இந்த ஊர்தான் இனி என்ற எண்ணம் அடிமனதில் இருந்து எழும்ப, ஒவ்வொரு நொடியாக, ஒவ்வொரு கட்டடமாக, ஒவ்வோர் இடமாகப் பார்த்துக்கொண்டே கடந்தேன்.

“பர்ஸ்ட் டைம் ஹே க்யா?”

“ஹான்ஜி.”

“படியா ஜஹா சாப். சூத்தியாலோ கோம்பாஹர்ஸேஆக்கேகராப்கர்தியா”

ஒரே நொடியில் அசிங்கமாகத் திட்டிவிட்டான், என்போல வந்தேறிகளை. பேசுவதைத் தவிர்த்து இருள் பிரிந்து வெளிச்சம் விரவத் துவங்கி இருந்த ஹைதராபாத் நகரை முழுதுமாய் சுவாசித்தேன்.

ஆட்டோ ஆடி அடங்கி ஒரு இரயில்வே கிராஸிங்கில் நின்றது. வலப்புறம் பெரிய மஞ்சள் நிறப்பலகையில் Safilguda என எழுதப்பட்டிருந்தது. கீழே ஹிந்தியிலும் தெலுங்கிலும்.

வந்து விட்டோம் என்பதையுணர்ந்து, முகவரிப் பேப்பரை மீண்டும் ஒருமுறை ஏறிட்டேன்.

‘வினோத்குமார்,

17- பி- சாய்காலனி, சஃபில்குடா

செகந்திராபாத்.‘

நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தக்காலனிக்குள் ஆட்டோ புகுந்தது. 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

பதினேழு - பி முன்னர் நிறுத்தியவன் வளைந்து மீட்டரைப் பார்த்து, பேரம் ஏதுமின்றி முப்பது ரூபாயை வாங்கிக்கொண்டான்.

எதிர்புறம் பெரிய மேடை போல சிமெண்ட்டால் கட்டப்பட்டிருந்தது. அதன் பக்கவாட்டில் பிள்ளையார் கோயில். மிகச் சிறியதாக சாய்பாபா கோயில். 

ஹவுஸிங் போர்டு வீடுகளின் மஞ்சள் கலர்களும் ஒருபோல தன்மையும், எல்லோர் வீட்டிலும் ஏதேனும் செடி, கொடி, மலர்கள் என இரம்மியம். 

என் மனம் முழுக்க ஏதோ சொந்த ஊருக்குள், சொந்தத் தெருவுக்குள் நுழைந்த உணர்வு. ஆச்சரியமாகவும் அவ்வளவு மகிழ்ச்சியாகவும் இருந்தது. மதுரையில் சொந்த வீட்டில் இருந்து, ஓரிரு நாட்கள் கோவில்பட்டி அக்கா வீட்டிற்கோ, ஏன், மதுரைக்குள்ளாகவே, பழங்காநத்தம் பெரியப்பா வீட்டிற்கோ போவதென்றால் கூட வேம்பைக் கடித்தது போலிருக்கும். அந்தத் தெருமுகப்புகளே அவ்வளவு அந்நியமாகவும் வேறு ஏதோ உலகிற்குள் நம்மைத் தள்ளியது போல வெறுப்பையும் ஏற்படுத்தும். ஆனால், இங்கே, இன்று கொஞ்சமும் அந்நியமாகப்படவில்லை. மாறாக, ஏதோ பூர்வ ஜென்மத்தில் வசித்த உணர்வை உண்மையாக உணர்ந்தேன். பார்த்த இடமெல்லாம் ஏற்கனவே வாழ்ந்த, வசித்த, பழக்கப்பட்ட இடங்களாகப் பட்டன. 

இவ்வளவு பெரும்பான்மைப் பெண்களை, நைட்டியில் முதல் முறையாகப் பார்க்கிறேன். காலனி முழுவதுமே நைட்டிப் பெண்கள். 

தலைமுடியெல்லாம் வெண்பஞ்சு போல் நரைத்து, முகம் பண்டரிபாய் போலிருந்த அம்மா, வினோத்தின் அம்மா முகம் மலர, மூக்குத்தி டாலடிக்க வரவேற்றார்.

அவர் பேசிய தெலுங்கில் அவ்வளவு வாஞ்சையை உணர முடிந்தது. வினோத்தின் அப்பா, ஹாலில் இருந்த கட்டிலில், படுத்தும் அல்லாமல் அமர்ந்தும் அல்லாமல் இருந்த நிலையில், என்னை வரவேற்கும் விதமாய்த் தலையை ஆட்டினார். 

வினோத் படுத்திருக்கும் அறைக்குள் என்னை அழைத்துச் சென்றார் அம்மா.

ஏதோ என் வீட்டின் அறைகளுள் ஒன்றிற்குள் நுழைவது போல் நுழைந்து, வினோத் படுத்திருந்த கட்டிலின் விளிம்பில் அமர்ந்தேன்.

“காஃபி?”

வேண்டும் என்பது போல் தலையசைத்தேன். 

“வினோத், நோடு,”

அம்மாவின் தெலுங்கைவிட கன்னடம் சங்கீதம் போலிருந்தது.

வினோத் மெல்ல அசைந்து கொடுத்து நிமிர்ந்தான். என்னைப் பார்த்ததும், 

“இங்க எதுக்குடா வந்த?” 

புரண்டு படுத்தான்.

- தொடரும்