அத்தியாயம் 1

124.98k படித்தவர்கள்
73 கருத்துகள்

"ஒன்றா ரெண்டா ஆசைகள்

எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா?"

பிரம்மாண்டமான ஹோம் தியேட்டர் திரையில் சூர்யாவும் ஜோதிகாவும் காதல் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். கையிலிருந்த டிபன் பிளேட்டில் இருக்கும் இட்டிலி, காணாமல்போவதுகூடத் தெரியாமல், வைத்த கண் வாங்காமல் திரையை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் கமலினி நந்தகுமார். அவளுக்குத் தானே ஜோதிகாவாக மாறி, சூர்யாவுடன் டூயட் பாடுகிறார் போல் முகத்தில் ஒரு களிப்பு.

வெளியே வானம் இருட்டிக்கொண்டு மழையைப் பொழிந்த வண்ணமிருக்க, அது காலையா, மாலையா என்பதுகூட அறிய முடியாமல் சூரியன் இருள் போர்வையில் மறைந்திருந்தான்.

காலை மணி ஒன்பது யாரேனும் அந்தக் காலைப் பொழுதின் பரபரப்பில் இந்த மாதிரி சினிமா பாடல்களைப் பார்ப்பார்களா? என்கிற சந்தேகம் எழுந்தால், துடைத்து விடவும். அநேகம் பேர் அதைத்தான் செய்கிறார்கள்.

ஓடியாடி இந்த நேரத்துக்குள் முடித்தாக வேண்டும் என்கிற காலவரையறைக்கு உட்பட்ட வேலை எதுவும் அவளுக்குக் கிடையாது. ஒரே மகள் தாராவும் தன்னிச்சையாக இருப்பவள். மேலும், அன்றிலிருந்து ஒரு முக்கிய இடத்தில் பொறுப்பேற்க இருக்கிறாள்.

கணவர் நந்தகுமாரோ பல வெற்றிப் படங்களைக் கொடுத்த மிகச் சிறந்த சினிமா படத்தயாரிப்பாளர். அவரே இயக்கவும் செய்வார். கமலினியே ஒரு முன்னாள் முன்னணி நடிகைதான். இந்நாளில் புரடியூசரின் இரண்டாம் மனைவி.

"அம்மா, கொஞ்சம் வால்யூம் குறைச்சு வைக்கிறாயா? காலையில் இதென்ன கூப்பாடு. கடுப்பா இருக்கு. இட் இஸ் அ ஷேம்! ஒரு டாக்டரின் அம்மான்னு சொல்லிக்கிறே பெருமையாய். கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாம இப்படி நாள் முழுக்க அந்த இடியட் பாக்ஸ் டிவி முன்னாலே இருக்க. நாட் குட்" என்று தாயைத் திட்டியபடியே ரிமோட்டை எடுத்து படக்கென்று டிவியை ஆஃப் செய்தாள் தாரா.

அடுத்த நொடி ஆத்திரம் தலைத் தூக்க, ``நீ யாருடி எனக்கும் சூர்யாவுக்கும் நடுவிலே’’ என்கிற மாதிரி முறைத்தபடி தட்டை படக்கென்று அருகிலிருந்த டீபாயில் வைத்தாள் கமலினி.

"சே… நான்ஸென்ஸ்! கொஞ்சம்கூட ரசனையில்லை. எங்கேயிருந்துதான் எனக்குன்னு இப்படி ஒரு பொண்ணோ... உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன் மம்மின்னு கூப்பிடுன்னு. அம்மான்னா ஏதோ பெரியம்மா சின்னம்மானு, வயசானவங்களைக் கூப்பிடுகிற மாதிரி இருக்கு. பேபி, என்னோட ரேஞ்ச் தெரிஞ்சும் இப்படி நீ சொல்லறது சரியில்லை" என்று மகளிடம் எரிச்சலாய் மொழிந்தாள் கமலினி.

"அம்மா… அம்மா… அம்மா… நீ எத்தனை முறை சொன்னாலும் எல்லா ஊரிலேயும் குழந்தைங்க 'ம்மா'னுதான் அழும். மம்மீன்னு அழாது. அதுவும் தமிழில் அம்மாங்கிற வார்த்தை எவ்வளவு இனிமையா இருக்கு கேட்க. அதைவிட்டுட்டு என்ன ஸ்டைல் வேண்டி கிடக்கு. நீ பெரிய விக்டோரியா ராணியா இருந்தாக்கூட உன் குழந்தைக்கு நீதான் அம்மாங்கிறதை மறக்க வேணாம். சரி! சரி! அவர்… அதான் அப்பா வந்தாச்சு. உன்னைக் கூப்பிடறாரு" என்று சொன்னவள்,

அந்தத் தியேட்டர் அறையிலிருந்து வெளியேறி, வரவேற்பறைக்குச் சென்றாள்.

தாரா வயது 27. பிறப்பால் ஒரு நடிகையின் மற்றும் தயாரிப்பாளரின் மகளாய் இருந்தாலும்கூட, நடிப்பென்பதை அறவே வெறுக்கும் ஒரு ஜீவன். ஆனால், அவளும்தான் என்ன செய்யமுடியும்? ஐந்தே முக்கால் அடி உயரத்தில் நிகுநிகுவென்று சந்தன சிலையாய் இருப்பவளை நிச்சயம் நடிக்கவைத்தே தீருவதற்கென்று சதா சர்வகாலமும் ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கிறதே!

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

 அவளுக்கு ஏனோ இந்த சினிமா கூட்டத்தைப் பார்த்தாலே வேப்பங்காயைச் சாப்பிட்டது போல் முகம் அஷ்டகோணலாகிவிடும். கஷ்டப்பட்டு வெளிநாட்டில் டாக்டருக்கு, அதிலும் நியூரோ சைக்கியாட்டிரி மேற்படிப்பு படித்தவள். அங்கேயே பயிற்சி செய்துவந்தாள். மனநலம் மற்றும் மூளைக் கோளாறுகளைக் குணப்படுத்தும் படிப்பைப் படித்தவளுக்கு இங்கே வர விருப்பமே இல்லைதான்.

தாயின் நடிப்புத் தொழிலை அறவே வெறுத்தாள். இன்னமும்கூட எப்போதாவது பழையபடி முன்னணிக் கதாநாயகியாக வாய்ப்புக் கிடைக்கும் என்ற நப்பாசையில், அவ்வப்போது அம்மா மற்றும் அக்கா வேடங்களில் தலைகாட்டும் தாயின் சினிமா பைத்தியத்தைக் கண்டு, அவளுக்கு மிகுந்த அலர்ஜி. இத்தனைக்கும் மார்க்கெட் இருக்கும்போது ஏராளமாய் சம்பாதித்தும்கூட, கமலினிக்குப் பணத்தின் மீதான மோகம் அதிகம்தான்.

ஹோம் தியேட்டரின் கதவைத் திறந்துகொண்டு வரவேற்பறைக்கு வந்தவள், அங்கே அவள் தந்தை நந்தகுமார் ஃப்ரென்ச் விண்டோவிற்கு அருகில் இருந்த ஒரு சுழல் மெத்திருக்கையில் சாய்ந்தவாறு அந்தக் காலை நேரத்திலேயே ‘சொர்க்கம் மதுவிலே’ என்று மதுக்கிண்ணத்துடன் இருந்ததைப் பார்த்து கோபமானாள்.

"டாட்… வாட் இஸ் திஸ்! காலையிலேயே குடிக்கறீங்க" என்று முகம் சுளித்தாள் தாரா.

"ஹாய்டா குட்டி! அம்மா எங்கே? வரச்சொன்னேனே சொல்லிட்டியா?” என்றவர், மீண்டும் ஒரு மடக்கு ஸ்காட்சை ஆன் தி ராக்ஸாக அடித்தார்.

"டாட்"

"கோவிச்சுக்காதேடா குட்டிம்மா. இன்னிக்கு ஒரு இம்பார்டன்ட் ஷூட்டிங் இருக்கு. அந்த பிரணவ்குமார் கால்ஷீட் கொடுத்துட்டான். அவன் மெதுவா பன்னிரண்டு மணிக்கு ஸ்பாட்டுக்கு வந்து சேருவான். நான் என் கண்ணகிகிட்ட ஜூட் விட்டுட்டு இங்கே என் மாதவிகூடக் கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் செய்யலாம்னு வந்தேன். உனக்குத்தான் தெரியுமே, ஃபுல் போதையில்தான் என் மூளை வேலை செய்யும்னு” என்று ஒரு விதமாய் சிரித்தார்.

முதல் மனைவியைக் கண்ணகி என்றும், கமலினியை மாதவி என்றும் எப்போதும் பீற்றிக்கொள்வார்.

"டாட்! நீங்களும் உங்க லாஜிக்கும். டாட்… நீங்க என்ன பேக்கிரவுண்ட் என்பது கூடவா மறந்துபோகும். நீங்களே ஒரு டாக்டர். அதுவும் ஒரு நியூரோ சைக்கியாடிரிஸ்ட். நீங்களே இப்படிப் பொறுப்பில்லாம பேசினா எப்படி? தட் டூ மீடியால இருக்கீங்க. நல்லது கெட்டதை மக்களுக்கு எடுத்து சொல்லற ஒரு பவர்ஃபுல் இடம். அப்படி இருக்கிற நீங்க இப்படிப் பொறுப்பில்லாம இருக்கலாமா? இதையெல்லாம் பார்க்கப் பிடிக்காமத்தானே நான் யூஎஸ்லேயே இருந்தேன். வற்புறுத்தி இழுத்துக்கிட்டு வந்தீங்க. இப்போ பாருங்க" என்று படபடத்தாள் தாரா.

மெல்ல ஆடி அசைந்து தன் சாடின் நைட் கவுனில் தேர் போல வந்துசேர்ந்தாள் கமலினி. அச்சு அசல் மேல்தட்டு சினிமா தாய்க்குலத்தின் அனைத்து அம்சங்களும் அவளுக்குப் பொருந்தி வரும்.

இத்தனைக்கும் சாதாரணக் குடும்பப் பின்னணிதான் கமலினிக்கு. அப்பா ஒரு பரதநாட்டிய ஆசான். முக்கால்வாசி சினிமா நாயகிகள் அவருடைய சிஷ்ய கோடிகள்.

அந்த ஒரு தொடர்பில்தான் பார்வைக்கு அழகாய் நன்றாய் நாட்டியமாடத் தெரிந்த கமலினிக்கு சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தது. அப்போது உதவி டைரக்டராக இருந்த நந்தகுமாரின் தொடர்பும் ஏற்பட்டது. அவருடன் பழக்கம் தொடர்ந்து, ஒரு கட்டத்தில் தாலி கட்டாமலேயே அவருடன் குடித்தனமும் தொடங்கிவிட்டாள்.

நந்தகுமாருக்குத் திருமணமும் திடீரென்று நிச்சயமாகியது. ஒரு தயாரிப்பாளரின் மகளான குமுதாவைக் கரம் பிடித்தார் பணத்திற்காக. சூழ்நிலை சரியில்லை என்று சொல்வதெல்லாம் தவறு என்று நினைக்கும் நந்தகுமார், தக்க சமயத்தில் கிடைத்த சூழ்நிலையைச் சரியாகக் கையாண்டு, தன் வெற்றிப்பாதைக்கு அடிக்கல் நாட்டினார், குமுதாவுடனான தன் திருமணத்தின் மூலம்.

குமுதா கொஞ்சம் உடல்நலம் சரியில்லாதவள். பணத்திற்காக அவளை மணந்து ஒரு குழந்தையையும் பெற்றுக்கொண்டார் நந்தகுமார். அவரின் திட்டப்படி, அஸ்திவாரமும் ஆழமாய் போட்டாயிற்று. அதிர்ஷ்டக் காற்று பலமாக அவர் பக்கம் வீசத் தொடங்கியது. தயாரிப்பாள மாமனார் திடீரென்று சுகக்கேட்டில் விழவும், மொத்த நிர்வாகமும் இவர் கையில் வந்துசேர்ந்தது. அதன்பின், அவர் வாழ்வில் எல்லாம் ஏறுமுகம்தான்.

கள்ளத்தொடர்பில் இருந்த கமலினியை, இரண்டாம் மனைவி அந்தஸ்தைக் கொடுத்து, பகிரங்கரமாகக் குடியும் குடுத்தனமுமாக செட்டிலாகிவிட்டார். மூத்த மனைவி குமுதா ஒரு வாயில்லாப்பூச்சி. ஆனால், அவள் பெற்ற மகள் நிலாவோ, அம்மாவுக்கும் சேர்த்து பத்து மடங்கு தேள் கொடுக்குபோல் பேசுவாள். மனைவியைப் பிடிக்காவிட்டாலும்கூட மகள் மேல் அவருக்கு ரொம்ப பாசம். ஆளை அசர அடிக்கும் அழகுடன் இருந்தாள் நிலா.

மொத்த பிடிவாதத்தையும் உடைக்கும் வலிமை, பிடித்த ஒருவரின் மௌனத்திற்கு உண்டு என்பதிற்கிணங்க, நிலா பிறந்த ஒரு சில வருடத்திலேயே கமலினியும் போட்டிக்குப் பிள்ளைப் பெற எண்ணி, தன் தொழிலுக்குப் பாதகம் வந்தாலும் பரவாயில்லை என்று எண்ணி, தாராவைப் பெற்றெடுத்தாள்.

எங்கே தான் அவரது போதைக்கு ஊறுகாயாக மட்டும் மாறிவிடுவோமோ என்ற பயத்தில், எப்படியோ தந்திரமாய் காரியம் சாதித்துக்கொண்டாள் கமலினி. இத்தனை பேர் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிய நந்தகுமாரையும் கமலினியையும், அவர்கள் பெற்ற மகள் தாராவுக்குச் சுத்தமாய்ப் பிடிக்காது.

எனவே, நந்தகுமாரின் சகோதரர் கிருஷ்ணகுமாரிடமும் அவர் மனைவி சாருமதியிடமும்தான் அவள் சிறு வயது முதல் வளர்ந்தாள் அமெரிக்காவில். அவளைத் தன்னிடமிருந்து பிரித்துவிட்டதாக அப்போதும் அட்டகாசம்தான் செய்தாள் கமலினி. எல்லாம் வெளிவுலகத்துக்காக மட்டுமே. மற்றபடி அவள் கணக்கே எப்பொழுதும் வேறுதான்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அங்கேயே படித்துமுடித்து செட்டிலாகிவிடலாம் என்று நினைக்கையில்தான், நந்தகுமார் தற்போது அவளை இந்தியாவிற்கு வரவழைத்தார். சொந்தமாய் அவர்களுக்கென்று இருக்கும் ஒரு மருத்துவமனையின் தலைமையை ஏற்று நடத்துமாறு வற்புறுத்தி, அவளைக் கூட்டிவந்துவிட்டார்.

நந்தகுமாரே மருத்துவர். ஆதலால், அவருக்குப் பணம் குவியத் தொடங்கியவுடனேயே ஒரு மருத்துவமனையை ஆரம்பித்துவிட்டார். சினிமாவும் மருத்துவத் தொழிலும் பணம் கொழிக்கும் இடமாயிற்றே! அவ்வப்போது பொழுதுபோகவில்லை என்றால் மட்டும்தான் அவர் மருத்துவமனைக்குச் செல்வது. மற்றபடி தேர்ந்த மருத்துவர்களைக்கொண்டு அந்த நியூரோ ஹாஸ்பிடலை நடத்திவந்தார்.

நீலாங்கரை தாண்டியவுடன், ஒரு 10 ஏக்கர் பரப்பளவில் இருந்தது அந்த மருத்துவமனை வளாகம். அதற்குத்தான் அன்றைக்குப் பொறுப்பெடுத்துக்கொள்ள தாரா கிளம்பி நிற்கிறாள். கணவர் அருகே வந்த கமலினி, அவர் அமர்ந்திருந்த ஆசனத்தின் பிடியில் அமர்ந்து ஸ்டைலாக நந்தகுமாரின் தலையைக் கலைத்தவள்,

"என்ன டியர், இன்னிக்கு முக்கியமான வேலையா? காலையிலேயே கச்சேரியை ஆரம்பிச்சுடீங்க?" என்று செல்லமாய்ச் சிணுங்கினாள். தாயின் இந்தக் கோலத்தைக் காணச் சகிக்காமல், லேசான முகச்சுளிப்புடன் அருவருப்பாய் பார்த்தாள் தாரா.

"அம்மா, நான் ஹாஸ்பிடலுக்குக் கிளம்பறேன். இப்பவும் சொல்லறேன், எனக்குப் பிடிச்சாத்தான் வேலையை எடுத்துப்பேன். கண்டிஷன் அங்கே என்னன்னு எனக்குத் தெரியணும். அப்பா மாதிரியெல்லாம் நான் கிடையாது. பொறுப்பெடுத்துக்கிட்டா அப்புறம் எல்லாம் என் கண்ட்ரோல்லதான் இருக்கணும் சொல்லிட்டேன். யார் குறுக்கே வந்தாலும் பிடிக்காது" என்று கடுப்பாய் மொழிந்தாள்.

மகளின் முகச்சுளிப்பைக் கண்டு மெல்ல கைப்பிடியிலிருந்து நகர்ந்து நந்தகுமாரின் மடியில் உட்காராத குறையாய் பக்கத்தில் அமர்ந்த கமலினி, "பேபி, உன்னை அதெல்லாம் செய்யவேணாம்னுதான் நான் சொல்றேன். அப்பாவே புரடியூசர், டைரக்டர். அவர் உன்னை வச்சு படம் எடுக்கத் தயாரா இருக்கார். நீதான் இந்த வைத்தியத் தொழிலைக் கட்டிக்கிட்டுத் திண்டாடறே. வேணாம் பேபி" என்று மகளிடம் சொன்னாள்.

படக்கென்று, "ம்ம்… அப்புறம் உன்னை மாதிரி யாரையாவது செட்டப் செஞ்சிகிட்டு, அப்படியே ஸ்டெப்னியா ஸ்டெப் அப் ஆகிடணும்னு சொல்லறியா அம்மா. நெவர்" - திராவகமாய் தெறித்தன வார்த்தைகள். மகளின் இந்த வீச்சில் லேசாக அவமானமாய் உணர்ந்தாலும், உள்ளூர அவள் பொருட்டுப் பெருமையே எழுந்தது கமலினிக்கு.

'என்ன இருந்தாலும் கிருஷ்ணா தம்பி, சாருவின் வளர்ப்பாயிற்றே. ராமனில்லை அவரு. இவரு வேணா தசரதன் கணக்கா இருக்காரு. அவர் அப்படியில்லை’ என்று மைத்துனன், மனைவி சாருமதியின் மீது லேசான பொறாமை ஏற்பட்டது.

ஆம்! நந்தகுமார் அப்படியொன்றும் ஏகபத்தினி விரதரல்ல. கமலினிக்கு முன்பும் பின்பும் நிறைய உண்டு. ஆனால், கமிட்டடாக உலகறிய அறிவிக்கப்பட்டவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே. "ஸ்ஸ்… பேபி. அப்படில்லாம் பேசக்கூடாதுடா. என்ன இருந்தாலும் நான் உன் அம்மா" என்று சலித்துக்கொண்டவளை வெறுப்புடன் பார்த்தாள் தாரா.

"டாட், சொல்லுங்க நான் அங்கே வர்றேன்னு யாருக்கும் சொல்லலையே. இந்த தாம் தூம் தடபுடலெல்லாம் எனக்குப் பிடிக்காது. நேரே அட்மின் போய் பார்க்கறேன். தென்… நானே பார்த்துக்கறேன் என்ன செய்யணும்னு. சரியா?" எனத் தந்தையைக் கேட்க,

நந்தகுமார் வாய் திறந்தார். "ஓகே பேபி... அங்கே என் ஃப்ரண்ட்டின் பையன் முரளி இருப்பான். அவன்தான் அட்மினிஸ்டிரேட்டர் இப்போ. அவனைப் போய்ப் பாரு" என்று குழறலாய் முடித்துக்கொண்டார். "ஓகே" என்றவள், தாயைத் திரும்பியும் பாராமல் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு தன்னுடைய புத்தம் புதிய ஹோண்டா ஆக்டிவாவில் விரைந்தாள்.

"காரிலே போம்மா" என்று சொன்னதைக் காதில்கூட வாங்கவில்லை. காற்றிலே சென்று மறைந்தன அந்த வார்த்தைகள். அவள் சென்னை நீலாங்கரைக்கு வந்து ஒரு மாதமாகிவிட்டது. அமெரிக்காவில் இடது கை இயந்திரங்களைக் கையாண்டவளுக்கு இங்கே இன்னமும் முழுக்க பழகவில்லை. அதனால் காரை எடுக்கத் தயங்கியவள். வேறொன்றும் கணக்கிட்டுத்தான் காரைப் புறக்கணித்துச் சென்றாள்.

(தொடரும்...)