அத்தியாயம் 1
வால் நக்ஷத்திரம்
ஓராடையில் தூமை கசிந்து பரவியது போல், நிச்சல நள்ளிரவில் முகில்களற்ற பரிசுத்த விசும்பின் கருநீலத்தைக் கீழைத் திசையில் கீற்றாய்க் கிழித்து ஜ்வலித்தது பேரொளி.
“கல்கி…! அதோ பார், தூமகேது!”
பாலக உற்சாகம் பீறிட்ட சாண்டில்யனின் கூக்குரலில், ஆழச் சிந்தையுள் அமிழ்ந்திருந்த கல்கி திடுக்கிட்டு அவன் கரம் நீட்டிய புறம் சிரமுயர்த்திப் பார்த்தாள். அணையும் அகல் விளக்கின் பிரகாசமாகக் கூடுதல் வெளிச்சம் துப்பிவிட்டு அந்த வான வாணம் வீழ்ந்தது.
“எவ்வளவு அழகான நட்சத்திரக் குப்பை!”
அது ஆகாயத்திலிருந்த சுவடை மானசீகமாக நிரப்ப முயன்று கொண்டிருந்தாள் கல்கி.
“ஏதேனுமொரு தேவகணத்தில் தென்பட்டு மறையும் உன் மார்க்கோடு போல்.”
சாண்டில்யன் இளித்தபடி சொன்னதைக் கேட்டு, அனிச்சையாகத் தன் மாராப்பைச் சரிசெய்தபடி அவனைப் பார்வையால் புகையாக்கும் உத்தேசத்துடன் முறைத்தாள் கல்கி.
“மன்னிக்கவும், தேவி!”
அந்தக் காரிருளிலும், அத்தனை ரசமில்லாத உரையாடலிலும், மாறி மாறி வெளிப்பட்ட உணர்ச்சியிலும் கூட இருவரும் துரிதம் சரியாது நடந்துகொண்டேதான் இருந்தார்கள்.
அது வனமென்றும் சொல்ல முடியாத, ஜனம் வாழும் ஊரென்றும் வரையறுக்க முடியாத அந்தரப் பிரதேசம். அந்த ராஜபாட்டையின் இருபுறமும் சீரான இடைவெளியில் மரங்கள் வந்துகொண்டே இருந்தன. மனிதர்களின் சஞ்சாரம் முற்றிலுமாய் நின்றுபோயிருந்தது.
கல்கி கொஞ்சம் அழகாய் இருந்தாள். அவள் முகம் மட்டும் பார்ப்பவர் அவளை மறந்துவிடக்கூடும். ஆனால், வதனத்தைவிட வடிவில்தான் அவளது வசீகரம் தேங்கியிருந்தது. வாங்கிய கடனைக் குற்றவுணர்வுடன் சுமந்து திரிவது போல் தலைகுனிந்த முலைகள். குறுவாள் சொருகியெடுத்தது போல் குறுகிய இடை நடுவே ஆழமறியாத நாபிக் கமலம். காவிரி விளைந்த அரிசிச் சோறு பொங்கித் தின்று கொழுத்துச் செழித்த புட்டக்கனிகள். அத்தனை இரகசியங்களையும் ஓர் எளிய புடவைக்குள் இழுத்துப் போர்த்தியிருந்தாள்.
சாண்டில்யனுக்கு உழைத்துக் காய்த்த புஜங்கள், கொழுப்பு தேங்காத அடிவயிறு, தசை இறுகிய கெண்டைக் கால். ஆண் பாலினத்தை அவ்வளவு வர்ணித்தால் போதுமானது!
கல்கியின் கழுத்தில் வியர்வை நிறமேறிய மஞ்சள் கயிற்றில் தொங்கிய தாலிப் பொன், அவர்கள் வலங்கைச் சாதி விவசாயக் குடியானவர்கள் என்று அடையாளம் சொன்னது. இருவரும் தம் தோளில் - துணியோ உணவோ - தலா ஒரு மூட்டையைச் சுமந்திருந்தனர்.
பார்ப்பவர்கள் அதிகம் சிரமமின்றி அவர்கள் புருஷன் - பெண்சாதி என்று சொல்லிவிட முடியும். அவர்களில் சிலர் பொருத்தமான ஜோடி எனப் பொறாமை கொள்ளவும் கூடும்.
பேச்சு சட்டென்று வெட்டுப்பட்டு கனத்த மௌனம் இருவரையும் ஆட்கொண்டிருந்தது. இடக்கரடக்காது உளறியதை உணர்ந்து சுதாரித்து உரையாடலை மாற்ற விரும்பினான் சாண்டில்யன். தொண்டையை விரலில் கவ்விச் செருமியபடி ராகமாய்ச் சொன்னான் -
“தூம கேது புவிக்கெனத் தோன்றிய
வாம மேகலை மங்கைய ரால்வரும்
காமம் இல்லை எனில், கடுங் கேடெனும்
நாமம் இல்லை; நரகமும் இல்லையே.”
கல்கி விழிகளை அகல விரித்தாள். கவிதை எனில் கள் ருசித்தது போலாகிவிடுவாள் என்பது அவனுக்கு நன்கு தெரியும் என்பதால், அதைக் குறி வைத்துப் பாணமெய்தான்.
“பொருள் விளங்குகிறதா?”
“ம்ம்ம்… ஓரளவுக்கு. நீதான் பொழிப்புரை சொல்லேன்.”
“வானில் தூமகேது தோன்றும்போதெல்லாம் பூமியில் பேரழிவுகள் நடந்திருக்கின்றன. போலவே, மங்கையர் மீது காமம் கொள்ளும்போதும் பெரிய கேடுகளை நிகழ்த்தும்.”
“செம்மை! நீ இயற்றியதா?”
“எனக்கு இந்த வெட்டி வேலைக்கெல்லாம் எங்கே நேரம்?”
“அதுதானே பார்த்தேன்! களி மண்ணில் பூத்த மலர் போல் தோன்றவில்லையே இது!”
“சரி சரி. இது என் ஆப்த சினேகிதன் ஒருவன் இயற்றியது.”
“ஓ!”
“ராம காதையை விருத்தத்தில் எழுதுகிறான்.”
“வீர வைஷ்ணவனோ?”
“அப்படியில்லை. வான்மீகி காப்பியத்தின் உந்துதல்.”
“அடுத்த முறை எனக்கு அவனை அறிமுகப்படுத்தி வை.”
“ம்… பார்க்கலாம்.”
“ஒரு கவிஞனைக் காதலித்துக் கைப்பிடிப்பதுதான் என் லட்சியம்.”
“இந்தச் சோழ தேசத்தில் கவிஞர்களுக்கா பஞ்சம்?”
“ஆனால் இப்படி மொழியில் விளையாடுவோர் அரிது!”
“அவன் ஏற்கனவே ஒரு தாசியைத் தீவிரமாகக் காதலிக்கிறான்.”
“சரி, கட்டிக்கொள்ளத்தான் வேண்டாம். இலக்கிய விசாரத்துக்காவது…”
சாண்டில்யன் அவசரமாய் மீண்டுமொரு முறை பேச்சை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம்.
“அந்தப் பாடலின் சூழற்பொருத்தத்தை யோசித்தாயா, கல்கி?”
“என்ன?”
“பெண் மீதான இச்சைதான் எத்தனை துயரைத் தரக்கூடியது!”
“ம்ம்ம்…”
“பெண்ணின் யோனியானது நரகக் குழியல்லவா!”
“அப்புறமேன் அதையே ஆண்கள் முகர்ந்து திரிகிறீர்களாம்?”
“அதிலிருந்துதான் வந்தோம். ஆயுள் முழுக்க மீண்டும் அதனுள் புக அலைகிறோம்.”
“ஆள் புக அது என்ன சொர்க்க வாசலா?”
கல்கி முணுமுணுத்தாள். சாண்டில்யனுக்கு அது தெளிவாய்க் கேட்டாலும், அவனிடம் அதற்குப் பதில் இருந்தாலும், வாய் மூடி வாளாவிருந்தான். எதற்கு மறுபடியும் வம்பு?
மீண்டும் நிசப்தம் அவர்களைச் சூழ்ந்தது. இந்தமுறை கல்கி அதனை உடைத்தாள்.
“ஆனால், நான் வேறொன்றை யோசிக்கிறேன்.”
“என்ன?”
“வானில் எரிநட்சத்திரம் தென்படுவது அரச குடும்பத்துக்கு ஆபத்து என்பார்கள்.”
“நீ சோதிடத்தையெல்லாம் நம்புகிறாயா?”
“இதென்ன கேள்வி? உலகமே நம்புகிறதே!”
“அப்படிப் பார்த்தால் தூமகேது இப்போது பூமிப்பந்தின் சரி பாதி சாம்ராஜ்யங்களில் தெரிந்திருக்கும். அங்கெல்லாம் உள்ள அத்தனை அரசுகளுமா ஆபத்திலிருக்கின்றன?”
“நீயென்ன நாஸ்திகனா?”
“பகுத்தறிவாளன் என்று வையேன்.”
“என்ன வித்தியாசம்?”
“நான் தெய்வமில்லை என்று சொல்லவில்லை; அறிவே தெய்வம் என்கிறேன்.”
“எனில் நீ ஆரூடங்களை எல்லாம் நம்புவதில்லையா?”
“சோதிடம் என்பதே பிராமண சூழ்ச்சிதான்.”
“இது விதண்டாவாதம், சாண்டில்யா!”
“சாதுர்யமாக என் கேள்வியைக் கடந்துவிட்டாய்.”
“பதிலற்ற வினாக்களை அப்படித்தான் மழுப்புவோம்.”
“விடை பகரமுடிந்ததையும் கூட கண்டுகொள்ளாமல்தானே தவிக்க விடுகிறாய்!”
சாண்டில்யனைப் பார்த்துப் புன்னகைத்தாள் கல்கி. இடது இதழோரம் சன்னமாய்க் குழி விழுந்தது. பௌர்ணமி தவிர வேறொன்றும் துணை வராத நடுச்சாமத்தில் அக்குறுநகை அவனை அத்தனை வீழ்த்தக்கூடியதாக இருந்தது. ஒருபுறம் அது கவலையையும் தந்தது.
சிக்கல்கள் இன்றி பத்திரமாக மாநகரை அடைய வேண்டும். அவன் இயல்பாக நடையின் வேகத்தை அதிகரித்தான். அதை உணர்ந்தபோது அவளும் அவனுக்கு இணையானாள்.
பொட்டல் காடுகள், மேய்ச்சல் வெளிகள் கடந்து, இப்போது பாட்டையின் இருமருங்கிலும் அறுவடைக்குக் காத்திருக்கும் வயல்கள் தென்படத் துவங்கியிருந்தன. தொலைவில் தூர தூரமாக ஒளிப் புள்ளிகள் வீடுகள் இருப்பதைக் காட்டின. தஞ்சை நகர் சமீபித்துவிட்டது!
அந்தப் பாதையின் முன்னே சற்று தொலைவில் தீப்பந்தங்கள் கொளுத்தப்பட்டிருப்பது தெரிந்தது. தஞ்சை எல்லையின் சுங்கம். அங்கே காவலர்கள் நின்றிருப்பார்கள். நகருக்கு உள்ளே நுழைவோர், வெளியேறுவோர் அவர்கள் அனுமதி இல்லாமல் கடக்கமுடியாது.
கல்கியும் சாண்டில்யனும் பரஸ்பரம் திரும்பிப் பார்த்துக் கொண்டனர். நடையின் வேகம் குறைந்தது. கல்கி புடவைத் தலைப்பை அவசரமாய்த் தலைக்கு இழுத்து முக்காடிட்டாள்.
சிறிய குடில் அமைத்து அதனருகே கையில் வேல் தாங்கிய நான்கைந்து வீரர்கள் நின்றுகொண்டும் நடந்துகொண்டும் இருப்பது அவ்விடம் நெருங்கவும் துலங்கத் துவங்கியது.
குடிலின் உச்சியில் சிவப்புத் துகிலில் புலி உருவம் பொறித்த சோழர் கொடி படபடத்தது.
‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட’
கல்கிக்கு சிலம்பின் வரிகள் நினைவு வந்தன. மதுரையில் நுழையும் கண்ணகியையும் கோவலனையும் ‘வராதே’ என்பது போல் நகரின் வாயிலில் கட்டப்பட்டிருந்த கொடிகள் எச்சரிக்கையாகவோ, அபசகுனமாகவோ கை காட்டின. ஆனால், அவர்கள் கண்டது மீன் கொடி. புலிக் கொடி கொல்லாது, வந்தாரை வாழத்தான் வைக்கும் என்றெண்ணினாள்.
சுங்கக் குடிலுக்கு அருகே வந்ததும், கல்கி தலையைக் குனிந்து கொண்டாள். வீரர்களின் பேச்சு அறுந்தது. ஒரு வீரன் அவர்கள் இருவரையும் மறித்தான். மற்றவர்கள் அவர்களை உற்றுக் கவனிக்கத் துவங்கினர். சந்தேகத்தையும் எச்சரிக்கையையும் கைகொண்டனர்.
“நீங்கள் யார்?”
“என் பெயர் சாண்டில்யன்.”
“இது?”
“என் மனைவி.”
“பெயர் வைக்கவில்லையா?”
“கல்கி.”
“எங்கிருந்து வருகிறீர்கள்?”
“உறையூர்.”
“உன் தொழில் என்ன?”
“உளவு.”
“என்ன?”
“உழவு என்கிறார். இவருக்கு சிறப்பு ‘ழ’கரம் சரியாய் உச்சரிக்க வராது.”
கல்கி குனிந்த தலை நிமிராமல் முதல்முறை பணிவாய் இதழ் அவிழ்த்துச் சொன்னாள்.
“உனக்கு நன்றாக வருகிறது. குரலும் முதல் தர மதுவில் தேன் துளி விழுந்தது மாதிரி.”
அதற்கு இருவரும் ஒன்றும் சொல்லவில்லை. அந்த வீரனே கேள்விகளைத் தொடர்ந்தான்.
“ஏன் இந்த அகால வேளையில் பயணம் செய்கிறீர்கள்?”
“அதிகாலையிலேயே கிளம்பினோம். தாமதமாகிவிட்டது.”
“சத்திரத்தில் தங்கி இரவைக் கழித்துவிட்டுப் பயணத்தைத் தொடர வேண்டியதுதானே?”
“தஞ்சைக்கு ப்ரம்ம முகூர்த்தத்துக்குள் போய்ச் சேர வேண்டும்.”
“இங்கே என்ன வேலை?”
“உறவினர் வீட்டில் விழா.”
“என்ன விசேஷம்?”
“இவள் தங்கை ருதுவாகி விட்டாள். சடங்குக்காகச் செல்கிறோம்.”
“இவள் பூப்பெய்தி விட்டாளா?”
வீரர்களில் சிலர் சிரித்தார்கள். சாண்டில்யன் ஒன்றும் பேசவில்லை. உணர்ச்சியேதும் காட்டாமல் நின்று கொண்டிருந்தான். கல்கி சட்டெனத் தலையைத் தூக்கி காவலனைப் பார்த்தாள். சாண்டில்யன் அவளது கையைப் பற்றி இறுக்கி அமைதிப்படுத்தினான்.
வீரர்களில் மூத்தவராகத் தெரிந்தவர் அவ்வினா எழுப்பிய வீரனை அதட்டி அடக்கினார். அவன் ஏதோ முனகினான். பின் கல்கியையும் சாண்டில்யனையும் பார்த்துக் கேட்டார் -
“உறவினர் பெயர்?”
“கிருஷ்ணப்பர்.”
“வீடு எங்கே இருக்கிறது?”
“தளிக்குளத்தார் கோயிலிலிருந்து சற்று தூரம்.”
“எப்போது ஊர் திரும்புகிறீர்கள்?”
“ஓரிரு நாளில்.”
“இனி இரவில் பயணம் செய்வதைத் தவிருங்கள். எவ்வளவு அவசர விடயமெனினும்.”
“சரி, ஐயா.”
சாண்டில்யன் அவரைப் பார்த்து மரியாதையாக இரு கரம் கூப்பி வணங்கிவிட்டு நடக்க ஆரம்பித்தான். கல்கி அவனது கையைப் பற்றிக்கொண்டு பின்தொடர்ந்தாள். மறையும் வரை தன் பின்புறத்தை அவர்கள் கண்கள் வெறித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தாள்.
சூழ்நிலை இலகுவாக்க எண்ணிய சாண்டில்யன், நினைவு வந்தவன் போல் கேட்டான் -
“கல்கி, அரச குடும்பத்துக்கு ஆபத்து என்று நிமித்தம் சொன்னாயே, அது யார்?”
“அதைச் சொல்லவே எனக்குத் தயக்கமாக இருக்கிறது.”
“அக்னி என்று உச்சரிப்பதால் நா எரிந்து விடாது.”
“ம். அது வந்து…”
“சக்ரவர்த்தி சுந்தரச் சோழரா? அவர் நல்ல ஆரோக்கியத்துடன்தானே இருக்கிறார்?”
“இல்லை, இல்லை. அவர் இல்லை.”
“பிறகு?”
“நிகழ்காலத்தைக் குறிக்கவில்லை. எதிர்காலத்தைச் சுட்டுகிறேன்.”
“இளவரசரா?”
“ஆம். வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி ஆதித்த கரிகாலர்!”
“அவர் இந்தப் பரந்து விரிந்த சோழ தேசத்தின் நிகரற்ற மாவீரர் அல்லவா!”
“அதிலென்ன சந்தேகம்!”
“அப்புறம் அவருக்கு என்ன ஆபத்து வந்துவிட முடியும்?”
“உள்ளதில் பலமானதுதான் முதலில் உடைக்கப்படும்.”
“அவர் துருவ நட்சத்திரம். வால் நட்சத்திரங்கள் அவரிடம் வாலாட்ட முடியாது.”
“அவரே வீழ்ந்து கிடக்கும் நிலவு ஒன்றுண்டு எனக் கிசுகிசுக்கிறார்களே!”
“அந்தச் சேர நாட்டு மங்கையைச் சொல்கிறாயா?”
“ஆம். ஸிதாரை.”
“அதன் பொருளும் நட்சத்திரம் என்பதுதான். வைகறையின் விண்மீன்!”
கல்கி கிழக்குத் திசைப் பக்கம் திரும்பி தூமகேது இருந்த இடத்தைப் பார்த்தாள். அந்த வெற்றிடம் பூனை முடி வேய்ந்த அவளது அடிவயிற்றில் ஓர் அச்சத்தைக் கிளர்த்தியது.
(தொடரும்...)