அத்தியாயம் 1

6.22k படித்தவர்கள்
2 கருத்துகள்

ஒரு சத்தியத்தின் அழுகை

சட்டாம்பட்டியில் சகல மனித ஜீவராசிகளும் கலந்துகொள்ளும் கலகநாடி அம்மன் திருவிழா துவங்கப்போகிறது என்பதை, அங்கே வரும் வெளியூர்க்காரர்கள், உள்ளூர்க்காரர்கள் சொல்லாமலே தெரிந்துகொள்ளலாம். அம்மன் கோயில் முன்பு ‘சப்பரம்’ (தேர்) நுழையும் உயரத்துக்குச் சரிந்து குவிந்த பந்தல் போடப்பட்டு, பந்தலில் ஜரிகைத் துணிகள், உள்புறத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்தன.

இந்தக் கோலாகலங்களை ரசித்துக்கொண்டே ராமசாமி தேவரும், மாயாண்டி நாடாரும் கோயிலுக்குச் சற்றுத் தள்ளியிருந்த பூவரசு மரத்தூணில் சாய்ந்து சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இருவருக்கும் முப்பத்தைந்து வயது இருக்கலாம்.

தேவர், ``சிலம்பாட்டத்துல ஒரு வீச்சு ஒரு குத்துன்னு மாறி மாறி வந்தாத்தான் எதிரி அடங்குவான்’’ என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, ஒரு டீக்கடையிலிருந்து மொத்தமாக வந்த பெரியசாமி நாடார், “உங்க வீறாப்புல்லாம் இங்கதான். காலனிக்காரப் பசங்ககிட்டே பலிக்காது” என்றார். உடனே இருவரும் பேசுவதற்கிருந்த இடைவெளியில், தேவர் தலைவர் சின்னசாமி தேவர் புகுந்து விளக்கினார்.

`பின்ன என்னப்பா, உங்க இரண்டு பேரோட வீரம் பட்டிதொட்டிப் பதினாலுக்கும் தெரியும். நீங்க ஆடாத சிலம்பா அடிக்காத ஆளா? அப்படியிருந்தும் இந்தக் காலனிக்காரப் பயலுவ, திருவிழாவ நடத்த விடமாட்டோமுன்னு சொன்னா, உங்கள பொம்பளையா நினைக்கறாங்கன்னுதான் அர்த்தம்” என்றார்.

``தேவர் சொன்னதை கவனிச்சிங்களாப்பா. இந்த ஹரிஜனப் பயலுவளும் நம்ம கோயில் உற்சவத்துல கலந்துக்குவாங்களாம். அவங்க கோயிலுக்கும் சப்பரம் போகணுமாம். இல்லேன்னா…’’

``இல்லேன்னா என்னவாம்?’’ என்றார் மாயாண்டி நாடார்.

``இல்லேன்னா ஒங்க பெண்டு பிள்ளைக கழுத்துல தாலி இருக்காதுன்னு சொல்றானுக.”

 ``அதுமட்டுமா? நம்மள மட்டந்தட்டுறதுக்காகவே சப்பரத்தை மறிக்கப் போறாங்களாம். போலீஸ்ல சொல்லலாமுன்னு நாடார் சொல்றார்’’ என்றார் உள்ளூர் பிள்ளைவாள்.

``போலீஸ்ல சொல்றதுக்கு நாம என்ன பொட்டப் பசங்களா? ராமசாமி, நீயும் நானும் கம்ப எடுத்துக்கிட்டுச் சப்பரத்துக்கு முன்னால போவோம். தடுக்க வார பயலுவள அங்கேயே காவு கொடுக்கலாம்” என்றார் மாயாண்டி நாடார்.

சட்டாம்பட்டி பெரிய கிராமம். மேல் ஜாதிக்காரர்கள் பகுதி பகுதியாகப் பரந்திருக்க, `காலனி’ மட்டும் ஊருக்குச் சற்றுத் தொலைவில், கழற்றிப் போடப்பட்ட காலணி போல் ஒதுங்கி இருந்தது. ஆசாரிப் பகுதியில் சுடலைமாடனும், நாடார் பகுதிக்குச் சங்கிலிக் கருப்பனும், தேவர்க்கு மயானபுத்திரனும், பிள்ளை, பண்டாரங்களுக்கு ‘பிள்ளையாரும்’ குலதெய்வங்கள். ஒவ்வொரு ஜாதியினரும் தத்தம் குலதெய்வத்துக்கு உற்சவம் நடந்துவதுண்டு. இவை போதாதென்று ஊருக்குப் பொதுவாக, கலகநாடி அம்மனும் முருகனும் பொதுக் கோயில்கள்.

கலகநாடி அம்மன் விழா, ஆடி மாதத்திலே ‘ஐம்பெரும்’ விழாவாக நடக்கும். முதல் நாள் பிள்ளைகளும், பூக்கட்டி பண்டாரங்களும் ‘சைவ’ பூஜை நடத்தி, ஒர் உபன்யாசத்தை ஏற்பாடு செய்வார்கள். அடுத்த நாள், தேவர்களின் வில்லுப்பாட்டு. அதற்கடுத்த நாள் நாடார்களின் ‘கணியான்’, பிறகு ஆசாரிகள் விழா எடுப்பார்கள். இறுதி நாளில், சப்பரத்தில் கலகநாடி அம்மன் பவனி வர, மேற்கூறிய ஒவ்வொரு கோயில் முன்னாலும் சப்பரம் நிற்க, சம்பந்தப்பட்ட சாமி கோயிலில் கற்பூர ஆராதனை செய்யப்படும். கலகநாடி அம்மனின் அருள்வந்து ஆடும் சாமியாடி, ஒவ்வொரு கோயில் முன்னாலும் ஓடிப்போய் ஆடுவார். ஆடி போய், ஐப்பசியில் முருகனுக்கு சைவ பூஜை நடக்கும். இதில் எல்லா ஜாதி இந்துக்களும் ‘வரி’ கொடுத்து விழா எடுப்பார்கள். இது, பரம்பரை பரம்பரையாக நடக்கும் பழக்கம்.

இந்தப் பரம்பரை பழக்கத்தை, பரம்பரை பரம்பரையாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ‘காலனி’ ஆட்கள் மாற்ற நினைத்தார்கள். தாங்களும் கோயிலில் ஒருநாள் விழா எடுக்க வேண்டும் என்று சாடைமாடையாகக் கேட்டு, பின்னர் நேரடியாகவே கேட்டார்கள். இதற்கு முதலில் ஆதரவு கொடுத்த உள்ளூர் அரசியல்வாதிகள், பின்னர் மெஜாரிட்டி வோட்டில்லாத அவர்களைக் கைவிட்டதோடு, ஜாதி இந்துக்களோடு சேர்ந்துகொண்டார்கள். 

இதற்கிடையே தங்களுக்குக் கோயில் பாத்தியதை இல்லையானால் சப்பரத்தை மறிக்கலாம் என்று ஹரிஜன வாலிபன் கந்தசாமி, சகாக்களிடம் சொல்லிப் பார்த்த வார்த்தை, அங்கேயுள்ள ஒரு ஹரிஜன காண்ட்ராக்டர் மூலம் கிராமத்தின் ஜாதி இந்துத் தலைவர்களுக்கு எட்டியது. வரிந்துகட்டி வருவதை எதிர்ப்பதற்காக, இவர்கள் ராமசாமி தேவர், மாயாண்டி நாடார் போன்றவர்களை முன்னணியில் தள்ளும் முயற்சியில் இறங்கினார்கள்.

கோயில் விழா துவங்கியது. இவர்கள் எதிர்பார்த்தது போல் எந்தக் காலனிவாசியும் கலாட்டாவுக்கு வரவில்லை. அதோடு, வழக்கமாகத் தொலைவில் நின்று விழாவை ரசிக்கும் ‘சைலன்ட் மெஜாரிட்டி’ ஹரிஜனங்களும் வரவில்லை.

இறுதி நாள் விழா!

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

பூச்சரங்கள் அலங்கரிக்கப்பட்ட சப்பரம், கலகநாடி அம்மன் சிலையைச் சுமந்துகொண்டு, வாணவேடிக்கை வெடிக்க, `ஸெட்டு’ மேளம் ஒலிக்க, ‘கணியான்’ ஆட, பொய்க்கால் குதிரைகள் தாவ, சப்பரம் ஒவ்வொரு கோயில் முன்பும் நின்று நிதானித்து, சேரிப் பக்கம்தான் ஊரை வலம் வரமுடியும். கள்ளச் சாராயம் காய்ச்சும் சில ஹரிஜனத் தலைவர்கள் மூலமாக, அவற்றைக் குடிக்கும் சில ஜாதி இந்துக்களுக்கு எட்டின செய்திகள். சர்வ சாதித் தலைவர்களுக்கு எட்டியிருந்ததால், அவர்கள் ராமசாமி, மாயாண்டி போன்ற வீரர்களைக் கத்தி அரிவாளுடன் ‘சைடில்’ அமர்த்தியிருந்தார்கள். சப்பரம், சேரிக்குச் சற்றே தொலைவில் உள்ள தடத்தில் பாதியைக் கடந்தபோது, அங்கே இருந்த புளியமரத்துக்கு அடியிலிருந்து கிட்டத்தட்ட ஐம்பது, அறுபது ‘காலனி’ ஆட்கள் சொல்லி வைத்ததுபோல் எழுந்து, சப்பரத்துக்கு முன்னால் வழிமறிப்பதுபோல் நின்றாலும், வழிமறிக்காதவர்கள் போல் வினயமாகப் பேசினார்கள்.

“எங்கள கோயில்லதான் சேர்க்கல. எங்க சுடலைமாடனுக்கும் கற்பூரம் காட்டிட்டுப் போகப்படாதா?”

இது நியாயமான கோரிக்கைதான் என்று பெரும்பாலானவர்கள் நினைத்தபோது, நாடார் தலைவர் பெரியசாமி, “இது என்னடா வழக்கமில்லாத வழக்கம்’’ என்று கடுமையாகக் கேட்டார். 

“எங்க சப்பரம், ஹரிஜன சாமிங்ககிட்ட வராது. செய்ய முடிஞ்சதைச் செய்யுங்க’’ என்றார் தேவர்கோன். 

சுடலைமாடனையே ஹரிஜனனாக்கிய வெங்கொடுமையை நினைத்து ஜாதி இந்துக்களே தவித்தபோது, கந்தசாமி பவ்யமாகக் குழைந்து பேசினான்.

“நீங்க கும்புடுற மாடனைத்தான் நாங்களும் கும்புடுறோம். ஹரிஜன சுடலமாடன்னு தனியா இல்ல. இதுமாதிரியே மனுஷனுக்கும் மனுஷனுக்கும் வித்தியாசம் பார்க்கலாமா? எங்க பொம்புளைங்களை ஒங்களுக்குக் கட்டினால் குழந்தை பிறக்காதா?’’

அவ்வளவுதான்!

“எங்க பொம்பளைங்களையாடா கேக்குற?” என்று தேவர் தலைவர் போர் முழக்கம் செய்ய, “செறுக்கி மவனுகள அடிக்காம எதுக்குவே பேசுறியரு?” என்று நாடார் தலைவர் சங்கநாதம் செய்ய, ‘சைடில்’ நின்ற மாயாண்டி நாடாரும் ராமசாமி தேவரும் வேல் கம்புகள் சகிதமாகக் கூடிய இளைஞர் பட்டாளத்துடன் ஹரிஜனங்கள் மேல் பாய்ந்தார்கள். 

யார், யாரை அடிக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரே கூக்குரல்... பெண்களின் சத்தம்! அடிப்பட்டர்களின் முனகல்கள். சாமியாடியும் ஆடமறந்து அல்லது அப்போது அது முக்கியமல்ல என்று நினைத்தவர் போல், சப்பரத்திலிருந்த ஒரு கொம்பை உருவிப் போர்க்களத்தில் இறங்கினார்.

கந்தசாமி மயக்கமாகி ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அரை மணி நேரத்துக்குள் எல்லாம் ஆய்ந்து ஓய்ந்து அடங்கியது. கந்தசாமி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டான். அங்கே பிரேத பரிசோதனைதான் நடந்தது.

மறுநாள் போலீஸ் வந்தது. அதற்கு மறுநாள் மீண்டும் சகஜ நிலைமை திரும்பியது. ‘இந்த ஊர்லயா இந்தச் சண்டை நடந்தது’ என்று ஆச்சரியப்படும்படி சேரிக்காரர்கள் ஊருக்குள் வந்தார்கள். ஊர்க்காரர்கள், ‘குடிப்பதற்காக’ச் சேரிக்குள் போனார்கள். ஊரின் ஒருமைப்பாடு மீண்டும் நிறுவப்பட்டது. கந்தசாமி எப்படிக் கொல்லப்பட்டான் என்பது இந்திரா நகர் கொலை மாதிரி ஆகிவிட்டது.

ஆடியில் இருந்து ஐப்பசி வரைக்கும்தான்…

முருகனுக்கு உற்சவம் தொடங்கி முடிந்தது. ‘படைப்பை’ எடுத்தார்கள். தேங்காய், பழங்களைக் ‘கூறு’ போட்டார்கள். கிட்டத்தட்ட 400 பங்கு. அந்த ஊர் வழக்கப்படி, ஆசாரி, பிள்ளை, பண்டாரம், நாடார், தேவர் ஆகிய ‘பஞ்ச வர்ணங்களில்’ யார் வயதில் பெரியவரோ அவரிடம் முதல் பங்கைக் கொடுப்பார்கள். இந்த வருடம் பங்கை சுப்பு நாடாருக்கு, நாடார் தலைவர் நீட்டியபோது, தேவர் தலைவர், “சுப்பு நாடாரைவிட எங்க பெருமாள் அண்ணன்தான் மூத்தவரு” என்றார். கடந்த ஒரு மாதமாக நாடார் தலைவருக்கும் இந்தத் தேவர் தலைவருக்கும் மனஸ்தாபம்.

வயதில் மூத்த நாடார், வாங்கப் போன கையை மடக்கினார். இதேபோல் வயதான தேவர், மடக்கிவைத்த கையை நீட்ட, நாடார் தலைவர் முழங்கினார்.

“எங்க சுப்பு பெரியய்யாதான் மூத்தவரு!”

“இல்ல... எங்க பெருமாள் அண்ணன்தான்.”

“தேவரே, நீங்க இப்படிப் பேசுறது நியாயமில்ல.”

“வாயை மூடும் நாடாரே! எங்க சுப்பு பெரியய்யாவுக்குப் பங்கு கொடுக்காட்டா நானே எடுக்கப் போறேன்.”

“எடுக்கிற கையை வெட்ட எவ்வளவு நேரமாகும்?”

“வெட்டிப் பாருடா!”

“கிட்ட வாடா!”

விவகாரம் யாரும் எதிர்பாராமல், யாரும் கலந்துரையாடல் செய்யாமல், நாடார் தலைவராலும் தேவர் தலைவராலும் வகுப்புவாதமாகியபோது, யாருக்கும் பெருமாளிடமோ அல்லது சுப்புவிடமோ யார் மூத்தவர்கள் என்று கேட்கத் தோன்றவில்லை.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

திடீரென்று பெரியசாமி நாடார் ‘பங்கை’ எடுத்து சுப்பு நாடாரிடம் நீட்டினார். உடனே தேவர் தலைவர், அதைத் தட்டிவிட்டார். தேங்காய்த் துண்டுகளும் வாழைப்பழமும் மட்டும் சிதறி ஒடவில்லை. சுப்பு நாடார் ஏற்கெனவே எண்பதைத் தாண்டியவர். சின்னசாமி தேவர் தட்டிய வேகத்தில், அந்தப் பெரியவர் நிலை குலைந்து கீழே விழ, அவர் தலை, தேங்காய்களை உடைப்பதற்காக வைத்திருந்த அரிவாளில் பட்டு, ரத்தம் நீரூற்றுப் போல் பொங்கியது. 

இதை அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த மாயாண்டி நாடாருக்கு மனசு கேட்கவில்லை. தேவர் உட்பட யாரும் எதிர்பாராமல் நடந்த இந்த அசம்பாவிதத்தைப் பார்த்ததும், மாயாண்டி நாடார், பெரியவரின் மண்டையைப் பிளந்த அதே அரிவாளை எடுத்து, சின்னசாமி தேவரை கழுத்தில் வெட்டப் போனார். குறி பார்க்கப்பட்டவர் அனிச்சையாக ஒதுங்க, அந்த அரிவாள் எதிர்பாராதவிதமாக ராமசாமி தேவரின் கையில் பட்டு அந்தக் கை கீழே தொங்கியது.

இப்போதும் எதிர்பாராமல் இன்னொன்று நடந்தது.

ராமசாமி தேவர் ஒரு கையில் அரிவாளைப் பிடுங்கி, என்ன செய்கிறோம் என்பது புரியாமலே, ஒரு வீச்சு வீசியபோது, மாயாண்டி நாடார் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அந்த வெள்ளம் கொடுத்த போதையில், ஒவ்வொருவனும் தன்னையும் அடித்துக்கொண்டான்; பிறரையும் அடித்துக்கொண்டான். சரமாரியான அரிவாள் வீச்சுகள், தெய்வ தரிசனத்துக்காகக் கூடிய மனிதனின் மிருகத்தனத்தை அங்கேதான் பார்க்க வேண்டும். முடிவில்...

நான்கு ஜாதி இந்துப் பெண்கள், கந்தசாமியின் மனைவியைப் போல ஆனார்கள்.

எல்லாம் முடிந்த பின்பு, எங்கிருந்தோ போலீஸ் வந்தது. ஒருசிலரை ஆஸ்பத்திரிக்கும், பலரை போலீஸ் நிலையத்துக்கும் கொண்டுபோனார்கள்.

இந்த வீரபுலத்தின் ஒராண்டு நிறைவு, விழா இல்லாமலே முடிந்தது. காலம் ஒடியது. கோர்ட்டில் வழக்குகள் நடந்துகொண்டிருந்தாலும், யார் யாரை வெட்டியது என்று நிரூபிக்க முடியாததால், அவை இழுபறி நிலையில் கிடந்தது.

ஒரு கை அடியோடு போன ராமசாமி தேவர், இன்னொரு கையால் வேட்டியைச் சரி செய்துகொண்டே, குளத்துக்கரையில் நடந்துகொண்டிருந்தார். ஒராண்டு காலத்துக்கு முன் அதே இடத்தில் மாயாண்டி நாடாருடன் பேசிக்கொண்டிருந்த இனிய நட்பின் கசப்பை சுவைக்க, இப்போ, எதிர்த் திசையில் இருந்து ஒரு கண் போய், தோள்பட்டை சரிந்த மாயாண்டி நாடார் வந்துகொண்டிருந்தார்.

இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கிவிட்டார்கள். கலகத்துக்குப் பிறகு இப்போதுதான், ஒருவரை ஒருவர் நேருக்கு நேராகத் தனிமையில் சந்திக்கிறார்கள். இருவர் கண்களிலும் நீர் சுரந்தது. ஒருவர் இன்னொருவரின் ஊனத்தை, அனுதாபத்தோடு பார்த்தார்கள். ஆண்டாண்டு கால நட்பும், பாசமும் நேசமும் அவர்களை நெக்குருகச் செய்தன.

பத்தடி தாண்டியதும் இருவரும் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்தபோது, குளத்தில் குளித்து முடித்த காத்தாயி, ஈரப் புடவையுடன் கரைக்கு வந்தாள். காத்தாயி, கந்தசாமியின் மனைவி. அவர்கள் இருவராலும் விதவையாக்கப்பட்ட இளம் விதவை.

காத்தாயி உரக்கக் கத்தினாள்.

“அண்ணன்மாரே… ஒங்க ரெண்டு பேரைத்தான், இங்க வாங்க. ஒங்க மேலே எனக்குக் கோபம் இல்ல, வாங்க.”

இருவரும் வந்தார்கள்.

“உங்கள நாடாரே, தேவரேன்னு கூப்புடாமல் அண்ணன்னு கூப்புட்டதுக்கு அர்த்தம் தெரியுமா? இப்ப பாத்தீங்களா? வுங்க கோயிலுல பந்தல் போட, எங்க சேரிக்காரர்தான் காண்டிராக்ட் எடுத்திருக்கார். ஒங்க சாதிக்காரங்க அங்க கூடிக் கும்மாளமாடுறாங்க. என் புருஷன் சொன்னதைத்தான் ஒங்ககிட்ட சொல்லப் போறேன். உலகத்துலெ ரெண்டே ரெண்டு சாதிதான் உண்டு. ஒண்ணு பணம் இருக்கிறவங்க சாதி. இன்னொண்ணு அது இல்லாதவங்க சாதி. இந்த ரெண்டு ஜாதிங்க தவிர வேற சாதிங்க இருக்கப்படாது. நினைச்சிப் பார்த்தால், இல்லவும் இல்லை. பணக்காரன் என்னைக்கும் பணக்காரன் கூடத்தான் சேருவான். பணக்காரன் சாதி பார்க்காதபோது, நாம ஏழைங்க சாதி பார்க்கலாமா? நாடார் அண்ணாச்சி, ஒம்ம வண்டி மாட்ட எதுக்காக வித்தீரு? தேவர் அண்ணே, ஒம்ம நிலம் போனதாலே ஒம்ம நிலைமையை நினைச்சிப் பாத்தீரா? என் புருஷன் ஒங்களுக்கு என்ன கெடுதல் செய்தாரு? சொல்லமுடியுமா?”

படபடவென்று பேசிய காத்தாயி, இப்போது குலுங்கிக் குலுங்கி அழுதாள். அந்தச் சத்திய அழுகையின் வெம்மை தாங்க முடியாமல் ராமசாமி தேவரும் மாயாண்டி நாடாரும், ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டார்கள்.

“கவலைப்படாதே காத்தாயி. நீ எங்க சாதில பிறக்காததுனாலேயோ இல்ல எங்க கூடப் பிறக்காததுனாலேயோ, நீ தங்கச்சியா இல்லாம போயிட மாட்டேன்னு எல்லாச் சாதிக்காரனுக்கும், எல்லா வகையிலேயும் நிரூபிக்கப் போறோம்’’ என்று ராமசாமி தேவர் ஒரு கையை ஆட்டிக்கொண்டு சொல்ல, மாயாண்டி நாடார் தன் பள்ளமாய்ப் போன தோளைக்குலுக்கிக்கொண்டே அதை ஆமோதிக்க, மூவரும் ஊரைப் பார்த்துப்போனார்கள்.