அத்தியாயம் 1

13.83k படித்தவர்கள்
14 கருத்துகள்

1

“அம்மா கமலாம்பிகே! அர்ச்சனைக்குப் பதிலாக உன்னை கல்லால் அடிக்கணும். ஆனால் நீ தாங்கிப்பே. உனக்கு அவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கு. இல்லேன்னா, இந்த ஒரு வாரமா, தட்டுலே தடவித் தடவி எடுக்கிற மாதிரி வைப்பியா? இத்தனை நாளில்லாத புது ராங்கி, புது வாழ்வு என்னடி உனக்கு இப்போ வந்துடுத்து? தர்மகர்த்தா என்னடான்னா, நீ தங்கப் படியிலே தினம் பொற்காசை அளந்துடற மாதிரி வயிறு எரியறான். அர்ச்சனைக்குச் சீட்டு சிஸ்டம் கொண்டு வந்துடணும்னு துடிக்கிறான். ஏன்னா இங்கே பக்தர் கூட்டம் பாலாஜிக்குத் தட்டுக் கெட்டுப்போறது பாரு! மாசச் சம்பளத்தை ஏழு தேதிக்குப் பட்டுவாடா பண்ண மீன மேஷம் பார்க்கறான். இவன் கொடுக்கற ஓட்டாண்டிச் சம்பளம் ஒரு மாசத்துக் காபி, அஸ்கா, பாலுக்கு முழுக்கக் காண்றதாடி? அப்படியும் ஒண்ணும் திக்கா போட்டுக் குடிக்கறதில்லே. எட்டு அடிச்சாச்சு. முழுக்க மூணு தேறல்லே. கதவைப் பூட்டிண்டு கிளம்ப வேண்டியதுதான். வா வா, நாளைக்கு உனக்கு நைவேத்யம் அன்னம் அல்ல. ஏனம் நிறைய மண், கௌரவமா மேலே துணியைப் போட்டு மூடி.”

அவள் அருண்டுவிட்ட தன் அடையாளமா, கொத்தாக நாலு பக்தர்கள் பிரத்யக்ஷமாயினர். அவர்களுள் ஒருவர் அஷ்டோத்ரம்.   

ஒருவர் சற்று ஒதுக்கமாகத் தயங்கி நின்றார். 

‘பிள்ளைவாளுக்கு என்ன வேணுமோ?”

“வெள்ளிக் கிழமை, அபிஷேகம் பண்ணி, தோம்பு சாத்தணும்.”

“அப்போ ஒரு நிமிஷம் நில்லுங்க. ஏன், உள்ளே வாங்களேன். திவ்யமா கிட்ட நின்னு தரிசியுங்க. நான் அதுக்குள், இந்த அர்ச்சனயைப் பண்ணிடறேன்.”      

“நானும் அர்ச்சனை பண்ணிக்கறேங்க. தேங்காய் பழம், வெற்றிலை வாங்கி வந்துடறேனுங்க.”

“ரொம்ப விசேஷம், சுருக்க வாங்க. ஐயா, நீங்க கையிலே தீர்த்தம் வாங்கிக்கோங்க. கோத்தரம், பேர்?”

குருக்கள் அர்ச்சனை நாமாவளிகளை உருட்ட ஆரம்பித்தார். 

            “ஓம் கமலாம்பிகே யெநம!”

            “ஓம் சிவப்ரியே யெநம!”

            “ஓம்....”

கர்மம், நாலு நாமாவுக்கே தொண்டை கம்மிப்போயிடறது. கண்டம் சற்றே பேசினா, எனக்கு இருக்கிற ராக ஞானத்துக்கு அள்ளிடுவேன். ஆனால் ஆட்டுக்கு வாலை அளந்துதானே வெச்சிருக்கு!

முதல் தட்டலுக்கே ‘பளார்’ என்று தேங்காய் சரி பாதியில் பிளந்தது. ‘பேஷ்! இன்னிக்கு, நாளைக்குச் சட்னிக்கு ஏர்வைதான். இது சரியாயிருக்கு. வாங்கிண்டு வரேன்னு போனானே, அந்த மூடி குழந்தை வாய் மாதிரியிருந்தால்?’

“என்ன குருக்களே ஒரு மூடி?”

“ஒரு மூடி குருக்களைச் சேர்ந்தது.”    

“எங்க ஊர்லே -”

“அது உங்க ஊர்; இது இந்த ஊர். எங்கள் ஊர். இங்கே பழக்கம் இப்படி. அதான் என்னடா புது முகமாயிருக்கேன்னு பார்த்தேன். ப்ராம்மணனுக்கு ஒரு தேய்காய் மூடிக்குப் பால் மாறாதேங்கோ. அத்தோடு உங்களைப் பிடிச்ச பாபத்தில் பாதியை நாங்கள் வாங்கிக்கறோம்னு நினைச்சுக்கோங்கோ.”

“குருக்களே, கோவிச்சுக்கப்படாது.”

“நான் கோவப்படல்லே. நம் நாடு தெய்வத்தின் இருப்பிடம்னு சொல்லிக்கறோம் ஆனால், ஆஸ்திகச் சிந்தனை எவ்வளவு க்ஷீணமடைஞ்சுபோச்சுன்னு நினைக்கறப்போ, கஷ்டமாயிருக்கு. 

“தட்சிணை கால் ரூபா வெச்சிருக்கேள். இதுக்கு நான் உடைச்சக்கடலை வாங்கிக் கொறிக்கிறதா, உருப்படறதா நீங்களே சொல்லுங்கோ. சாமிக்குப் பண்றதுன்னா, கையை யார் பின்னாலே புடிச்சு இழுக்கறாளோ? நீங்கள் கையைத் தளர்த்தினால்தான் அவள் வாரி வழங்க முடியும். வெறுங்கையை முழம் போட முடியுமா? ஆ, வாங்கிண்டு வந்துட்டேளா?” 

“அவன் கடையைக் கட்ட ஆரம்பிச்சுட்டான். அதிலேதான் சற்று தாமதம்.”

“அதனாலென்ன? இன்னிக்கு புதன்தானே! புதன் கிழமையே கொஞ்சம் டல்தான். நாளையிலிருந்து பாருங்கோ. உங்கள் அபிஷேகம் வெள்ளிக் கிழமைதானே? தோம்பு சாத்தி-? அஷ்டோத்ரமா, ஸகஸ்ரநாமமா? ஸகஸ்ரநாமம்தான் சரி. நைவேத்யத்துக்குக் காசாக் கொடுத்தாலும் சரி, சரக்காகக் கொடுத்தாலும் சரி, வீட்டிலே பண்ணிக்கொண்டு வந்துடுவேன். என்னென்னு தனியா விலை பேச முடியுமா? சுண்டல் வாஸிக்கணும்னா, தாளிதத்துலே கொஞ்சம் டால்டா காட்டினால்தான் எடுப்பாயிருக்கும். சர்க்கரைப் பொங்கல் உண்டா? சரி சரி பிள்ளைவாள், தாக்ஷண்யமே வேண்டாம். சாமான்களை நீங்களே வாங்கிக் கொடுத்துடுங்க. உங்கள்கிட்ட காசை வாங்கிட்டு அப்புறம் ‘அதிலே முந்திரிப் பருப்பு இல்லையே? நெய் எங்கே?’ இதுக்கெல்லாம் இடம் வேண்டாம். தெய்வத்துக்கு வஞ்சனையில்லாமல், என்னால் முடிஞ்சது வீட்டில் இருக்கறதையும் சேர்த்துப் போட்டு செஞ்ச வரைக்கும் நிறக்க இருக்கணும். தட்சிணை அஞ்சுக்கு மேலே உங்களிஷ்டம். நான் கசக்கிப் பிழிய மாட்டேன். இன்னிக்கு அவள் அளந்த படி இவ்வளவுதான்னு திருப்திப் பட்டுடுவேன். சுபாவம் அப்படி. பணமாவே தந்துடறேளா? இப்போ முப்பத்தஞ்சு கொடுங்கோ. அர்ச்சனை தட்சிணை தனி. நினைவிருக்கட்டும். சரி, வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஆறு மணிக்கு ‘டாண்’னு ரெடி.”

ஒரு வழியா ஆளெல்லாம் போயாச்சு. குருக்கள் நோட்டை மடித்து இடுப்பில் செருகிக்கொண்டார். சன்னதி மின்சார விளக்கைக்கூட அணைத்தாகிவிட்டது. கதவைப் பூட்டிண்டு கிளம்பவேண்டியதுதான். 

கர்ப்பக்ருஹத்தில் மட்டும் அகல் சுடர் எரிந்தது. எரியட்டும் - எரியறவரை. 

“ஒரு கற்பூர ஆரத்தி மட்டும் சௌகர்யப்படுமா?”

குருக்கள் திடுக்கிட்டுத் திரும்பினார். உருவத்தின் மங்கல் மட்டும் தெரிந்தது. 

“கற்பூரம் கொண்டு வந்திருக்கேளா?”

“இல்லையே! கடை மூடிக் கிடக்கு.”

“பரவாயில்லே. தனியா ஒரு கால் ரூபா போட்டுடுங்கோ.”       

தீபாராதனையின் வட்டமான பிரயாணத்தில் அம்பாளின் மூக்குத்தி மின்னிற்று. ‘புன்னகையில் தனிக்  கேலி தெரியறதோ? சிரிடீ சிரி! உனக்கு எப்பவும் சிரிப்புத்தானே!’ தட்டில் சுளையாக ஒரு வெள்ளி வட்டம் விழுந்தது. பெரிய வட்டம். ‘இன்னிக்கு இத்தனை நாழிக்கு நரி முழி?’ அந்தக் கேள்வியில்தான் குருக்கள் ஆளைச் சரியாகத் தலை நிமிர்ந்து பார்த்தார். 

குங்கும ப்ரஸாதம் நெற்றியில் ஏறியதும், அந்த ஆளின் முக வெளிறு தனி ‘டால்’ அடித்தது. துல்லியமான வெள்ளை ஆடை. அடுத்து நேர்ந்ததைக் குருக்கள் எதிர்பார்த்திருக்க முடியாது. கையில் மிச்சக் குங்குமத்தை அவர் குருக்கள் நெற்றியில் தீட்டினார். குருக்கள் திடுக்கிட்டுப்போனார். கூட கோபமும் மூண்டது. 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“யாரையா நீ?” 

“டேய், மணி!” ஆழ்ந்து தாழ்ந்த குரல், மிருதங்கத்தில் குமுக்காரம் கொடுத்தாற்போல், குருக்களுக்குப் பயத்தில் வயிறு சுருட்டிற்று.

“தெரியல்லியே!” முனகினார்.

“நன்னா யோசனை செய்து பார்! பின்னுக்குப் போ வெளியில் வா! இருட்டில் தடவிண்டிருந்தால் என்ன தெரியும்?”

திடீரென நெஞ்சில் ஒரு பரந்த விடிவு. குருக்களுக்கு அந்த வெளிச்சத்தில் கண்கள் அகல விரிந்தன. 

“யாரு, தர்மராஜனா? என்னப்பா தருமு, நிமிஷத்தில் கதி கலக்க அடிச்சுட்டியே!” ஆமாம், தருமுவேதான். குருக்கள் ஆசையாக அவரை அணைத்துக்கொண்டார். “அடே, எத்தனை வருஷங்களடா!” 

“இன்னமும் சந்தேகம்தானா?”

“இல்லேடா தருமு, இந்தச் சிவப்பு என்னை உஷார்ப்படுத்தியேயிருக்கணும். நம் உறவில், ஏன், சாதியிலே இந்த கலர் ஏது? நீயே ஓர் அலாதி பிறவி. வா வா, வெளியில் சற்று உட்காருவோம். நீ இப்போ எங்கே இருக்கே? எப்போ வந்தே? ஆத்துக்கு அவசியம் வரணும்டா. அவ ரொம்ப சந்தோஷப்படுவாள். ராஜா மாதிரி இருக்கேடா!

இப்படித்தாண்டா தினம் மாரடிக்கறேன். கால் ரூபா பாக்கறது கடினமாயிருக்கு. என் தரித்திரம்தான் எப்பவுமேயிருக்கு. உன்னைப் பற்றிப் பேசுடா!”

“என்னைப் பற்றி என்ன பேசணும்?”

“என்னடா பேத்தறே? நீ மறைஞ்சுபோய் முப்பத்து அஞ்சு வருஷமாறது. முப்பத்து அஞ்சு வருஷத்தை ஏப்பம் விட்டுட்டு என்ன பேசணும் என்கறே? நீ கொல்லு கொலைக்கு அஞ்ச மாட்டே.”

“அபசாரம், அபசாரம்-கோவில்லே உட்கார்ந்துண்டு…”

“ஆத்துக்கு வாயேன்டா.”

“வராமலா போறேன்? இப்போ, சொல்லாமல் வந்து தொந்தரவு கொடுக்கப்படாது.”

“உனக்குன்னு என்னடா தனியா பண்ணப்போறோம்? ஆத்து மனுஷன் நீ!”

“வரேன். கண்டிப்பா வரேன்.”

“குடும்பத்தோடு வரணும். இப்பவே சொல்லிட்டேன். காலையிலேயே வந்துடுங்கோ. எத்தனை குழந்தைகள்?”

“ஹும்… அதுக்கெல்லாம் கொடுப்பனை இல்லை.”

இங்கிருந்தே கர்ப்பக்ருஹத்தில் அகல் சுடர் லேசாகப் படபடத்தது. மலையேறுகிறதோ?

“நீ சொல்றது விளங்கல்லியே!”

“அதிருக்கட்டும், மணி. உன்னால ஒரு தயவு ஆகணுமே!”

“மழுப்பறே!”

“சரி, மழுப்பறேன். விஷயத்துக்கு வரலாம்.”

“அதென்னடாப்பா விஷயம்?”

“வாரத்தில் ஒரு நாள் பூஜை எனக்கு வேணும்.”

மணிக்கு, சிரிப்பில் உடம்பு எல்லாம் குலுங்கிற்று. புரைக்கேறி உச்சந்தலையைத் தட்டிக்கொண்டார். சரீரம் மடி மடியாகக் குலுங்கிற்று. அந்த ஆள், இந்த அலை அடங்கும் வரை பொறுமையாகக் காத்திருந்தார்

“டேய் தருமு, நீ நல்ல தமாஷான ஆளுதான்.”

“நான் தமாஷ் பண்ணல்லே. ரொம்ப சீரியஸா இருக்கேன்.”

“என்ன தருமு, இந்த அபஸவித்துக்கெல்லாம் நீ ஆசைப்படலாமா? அதுவும் நீ.”

“இது என்ன ஐஸ்?”

“நிஜம்மாத்தாண்டா சொல்றேன். நீயே ஒரு சன்னிதானம் மாதிரிதான் இருக்கே. உன்னோடே பேசிண்டுதான் இருக்கேன். ‘டா’ போட்டுக்கறேன், அப்பப்போ தைரியத்துக்கு. நீயும் சகஜமாத்தான் பழகறே. ஆனால் உள்ளூர என்னவோ ‘திக்திக்’-”

“மணி, ப்ளீஸ்….”

“சத்யமாடா, விட்டேன்னு!”

தர்மராஜன் செவிகளைப் பொத்திக்கொண்டார். 

“விஷயத்துக்கு வரயா?”

“இது உனக்கு ஏதுக்கப்பா, விடு. இது ஒரு பிழைப்பா?”

“மணி, கத்துண்டது ஏதும் எனக்கு இன்னும் பாடம் மறந்துடல்லே. வாரத்தில் ஒரு நாள்தான் கேக்கறேன்.”

“அதெப்படி தருமு, நடக்கற காரியமாப் பேசு!”

“அப்படின்னா மாட்டேன்கறயா?” அவர் பெருமூச்செறிந்தார். 

“ஏன் கோவப்படறே, தருமு?”

“கோபமா? கோபப்பட அவசியமேயில்லை எனக்கு. இந்தப் பூஜைக் கட்டளையில் பாதிப் பங்கு எனக்கு இருக்குன்னு தெரியுமோன்னோ? தலைமுறை தலைமுறையா, குடும்ப சாஸனமே இருக்கு ஓலைச்சுவடியில், தெரியுமோன்னோ?”

“எடுத்தாரய்யா சுயரூபத்தை, யமதர்மராஜன்!”

“மணி, இது சிரிப்புச் சமாச்சாரமில்லை!”

“நீ என்னத்தையோ ஓலைச்சுவடி எதையோ சாக்ஷிக்கு இழுக்கறயே பின்னே! அதெல்லாம் எப்பவோ எரிஞ்சுபோச்சு. ஓலைச்சுவடியாவது மண்ணாங்கட்டியாவது! பழம்பாய்க்கும் குப்பைக்கும் வித்தியாசம் தெரியாமல் அப்பா காலத்துலேயே போகிக்குக் கொளுத்திட்டா!

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அவர் புன்னகை புரிந்தார். 

“அப்படி வா வழிக்கு! எப்பவுமே பெரியப்பா பிள்ளை, சித்தப்பா பிள்ளைன்னா கௌரவாள், பாண்டவாள்தானாக்கும்!”

“ஒரு வயத்துப் பிறப்பே இப்போ அப்படித்தானிருக்கு. உனக்கு நான் ஏன் விட்டுக்கொடுக்கணும்?”

“யாரும் யாருக்கும் விட்டுக்கொடுக்க வேண்டாம். உரியது உருப்படியா கிடைச்சால் போறாதா?” மணியின் தோளை லேசாகத் தட்டினார். “ஓலைச்சுவடி உசிரோட, பத்ரமா இருக்கு தம்பி. பிள்ளை குணம் பெரியப்பாவுக்கு அப்பவே தெரியும் போல இருக்கு. என்னிடத்தில் ஒப்படைச்சுட்டுப் போயிருக்கார். என்னிடம் இருக்கு.”

“-ம்ம்ம்-? ‘டூப்’ விடறே!” ஆனால் மணிக்குக் குரல் கொஞ்சம் பின்வாங்கிற்று.

“மணி, ‘போர், அடிக்காதே. நாம் சின்னக் குழந்தைகள் அல்ல.”

“அப்பிடின்னா எங்கே காட்டு!”

“அவசியம் வரப்போ, நீ வீம்பு பிடிச்சால், காட்ற இடத்தில், காட்ட வேண்டிய சமயத்தில் காட்டுவேன். ஆனால் ஒண்ணு. ருஜீ உனக்கு அவசியம்தான்னா, தஸ்தாவேஜீ ப்ரகாரம், என் முழுப் பங்கு பாதிக் கட்டளையும் பிடுங்கிண்டுடுவேன். அதனாலே எதையேனும் ஆரம்பிச்சுட்டு முடிக்க முடியாமல் திண்டாடாதே. இப்போ கேக்கறது வாரத்தில் ஒரு நாள். நீயா இஷ்டப்பட்டுக் கொடுக்கற ஒரு நாள் வெள்ளி, விசேஷ தினங்கள் எல்லாம் நீயே வெச்சுக்கோ. என் கிழமையில் எனக்கு வரும் அபிஷேகம், மண்டகப்படி எல்லாம் உனக்கே திருப்பிடறேன். ஆனால் என் இஷ்டத்தில் விட்டுக்கொடுக்கறேன். என்ன சொல்றே?”

மணி சன்னிதானத்தை நோக்கி முஷ்டியை ஆட்டினார். 

“அடியே, இப்படி வெடி வைக்கத்தான், கொடுக்கறாப்போல `ஜீல்’ காட்டினாயா?”

“அவளை நிந்தித்தால் என்ன கிடைக்கும்? உன் எண்ணத்தைத் திருத்திக்கோ. நானும் எங்கெங்கோ சுத்தியாச்சு. இதுதான் என் ப்ரமிப்பு. ‘அடுத்துக் கெடு-’ இதுதான் ஆத்திசூடியாயிருக்கு. ஆனால் அவள் தன் அகண்ட கருணையில் எல்லாத்தையும் எப்படித் தாங்கிண்டு இருக்கா?”

“போடா ஆஷாடபூதி!”

“நீ சொல்வதிலும் உண்மையிருக்கலாம். மனசில் இருக்கிறதை வெளியில்விட்டுச் சொல்றதிலேயே உண்மையின் அந்த உரு கொஞ்சம் சிதைஞ்சுபோறது. நான் என்ன அவதாரப் புருஷனா, ஒரு அப்பு அழுக்கு இல்லாமல் இருக்க? அப்படி என் குற்றங்களையும் அவள்தான் மன்னிக்கணும்.”

“நான் பிள்ளை குட்டிக்காரன்டா!” மணி போட்ட கத்தலில் தெருவில் படுத்திருந்த நாய் தலை தூக்கித் திரும்பிப் பார்த்துவிட்டுப் படுத்தது.

“ஸ்டுப்பிட்!’ அந்தச் சீறலில் மணி ‘கப்சிப்’ ஆனார். கர்ப்பக்கிருஹத்தில் சுடர் அணைந்து திரி பொசுங்கிய நாற்றம் இடம் பூராவும் பரவிற்று. அவர் எழுந்து நின்றுவிட்டார். நல்ல உயரம். புலு புலுவென்று உறைபோல் முழங்கால் வரை துல்லியமான மஸ்லின் ஜிப்பா. தரையில் புரளப் புரள மஸ்லின் வேட்டி. தலை நரை, ஒரு கறுப்புக்கூட இல்லாமல் அடர்ந்து, வெண்பட்டென மின்னிற்று. வெளுத்த நெற்றியில் குங்குமம் விழியாய்க் கனன்றது. கன்னங்கள் ஒரு மாசுமரு, சுருக்கம் இன்றி வழவழவென – இன்றுதான் க்ஷவரமோ? அவர் நின்ற நிலையில், அவரைப் பார்க்க ஏதோ நீர்வீழ்ச்சி போல் - என்னவோ மனுஷன் பயமாயிருந்தான். 

“எந்த நாள் கொடுக்கறே?”

“சனி!” என்று மணி முனகினார். 

“என்னைச் சனின்னு திட்டறயா? சனிக்கிழமை என்கிறயா?”

“சனிக்கிழமை.”

“சரி, சம்மதம். இதனால் உனக்கு ஒண்ணும் நஷ்டம் இருக்காது. கவலைப்படாதே.”

“என்ன நஷ்டமில்லை?” மணிக்கு மறுபடியும் ஸ்ருதி ஏறிற்று. “முன்பின் நமோது இல்லாமல் புசுக்குனு முளைச்சு என்னவோ என்னை மிரட்டி வாரத்தில் ஒரு நாள் பிடுங்கிண்டுட்டியே!”

“என்னிக்கேனும் ஒரு நாள், பங்கை நீ கொடுத்துத்தானே ஆகணும்? அதை ‘அபேஸ்’ பண்ணிட முடியுமா? நான் கேட்கிற என் பங்குக்குக்கூட என்னிஷ்ட பாத்யம் கிடையாதா? சந்ததி சமாச்சாரமாச்சே. நானில்லாட்டா என் வழியில் ஒரு துருத்தியான் வாரிசு கொண்டாடிண்டு வருவானே! அப்போ உன் பிள்ளைகள் அவனுக்கு ஜவாப் சொல்லியாகணுமே!”

“சரி சரி, உன் ப்ரசங்கத்தை நிறுத்திக்கலாம்!”

அவர் தோளைக் குலுக்கிக்கொண்டார். ஆமாம், பேச என்ன இருக்கிறது?

சற்று நேரம் அங்கு மௌனம் நிலவிற்று. 

படுத்திருந்த நாய் வெடுக்கென எழுந்து ஓடி இருளில் மறைந்தது. தெரு முழு வெறிச்சாகிவிட்டது. 

லாந்தர் கம்பம் கம்பமாக நின்றது. இருந்தாற்போலிருந்து மணி ஆரம்பித்தார்: “ஆமா, உன்னை ஒண்ணு கேக்கணும்.”

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவர் தலை நிமிர்ந்தார். 

“இப்படியேனும் என் வயத்தில் அடிச்சு, வாரத்தில் ஒரு கட்டை நாளையேனும் வீம்புக்குப் பிடுங்கிண்டு என்ன பலனைக் காணப்போறே? உண்மையில் இது உனக்கு உதவப்போறதா? ஏதேனும் பதில் உண்டா? இல்லே, வாயை ‘ஆவ் ஆவ்’னு ஓணான் மாதிரி திறந்து திறந்து மூடறதோடு சரிதானா?”

மணி ஏளனம் செய்வது போலவே பதில் சொல்ல யோசித்துக் கடைசியில் சொல்லாமலே ‘கம்’மாகிவிட்டார். 

‘பார்த்தையா, வாயடைச்சுப்போச்சு. எனக்கு அப்பவே தெரியும். ‘நானும் வாழ மாட்டேன். பிறத்தியானையும் வாழ விட மாட்டேன்’ – அதானே? இத்தனை நாள் எங்கேயோ ஊர் சுத்திட்டுத் திரும்பி வந்ததுக்கு அடையாளம் கல்லை விட்டெறிஞ்சு குட்டையக் கலக்கியாகணும். அதானே? சரி, வர்றேன். இன்னும் இங்கே இருந்தால் ஆத்திரம்தான் பொங்கும். ஏற்கெனவே என்னை வைத்தியன் உப்பைக் குறைக்கணும் என்கிறான்!”

மணி அங்குவிட்டு அகன்றதும் அவர் அங்கேயே உட்கார்ந்திருந்தார். நேரம் போனதே தெரியவில்லை. 

(தொடரும்...)