முன்கதை 1

364.26k படித்தவர்கள்
170 கருத்துகள்

ந்த நாவலை எழுதுவதற்கு முன்பாக எழுத்தாளன் காதரீனா தெ ஸான் ஹுவான் (Catarina de San Juan) என்ற கத்தோலிக்கப் பாதிரிப் பெண்ணைப் பற்றி ஒரு நாவல் எழுதுவதற்கான தயாரிப்பில் இருந்தான். இந்தக் காதரீனா யார் என்று பார்த்தால், 1606-இல் ஆக்ரா அரண்மனையில் ஷா ஜஹானின் ஒன்று விட்ட சகோதரியாகப் பிறந்தவள். (இறப்பு 1688) பெயர் மீர்ரா. ஷா ஜஹானுடன்தான் ஒரே அரண்மனையில் வளர்ந்திருக்கிறாள். 1617 வாக்கில் – அவளுக்குப் பத்து அல்லது பதினோரு வயதாக இருக்கும்போது போர்த்துக்கீசிய மாலுமிகளால் கடத்திச் செல்லப்பட்டு அடிமையாக விற்கப்பட்டாள். அவளை மெக்ஸிகோவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் வாங்கிச் சென்றான். மெக்ஸிகோவில் கத்தோலிக்க மதத்துக்கு மாறி, அதற்கேற்ப பெயரும் காதரீனாவாக மாறி இளம் வயதிலேயே கன்னிகாஸ்த்ரீயாக ஆனார். அப்போது அவர் பல அற்புதங்களை நிகழ்த்தியதால் மெக்ஸிகோவில் அன்றிலிருந்து இன்று வரை பிரபலமாக அறியப்படும் புனித அன்னையாக விளங்குகிறார். காதரீனா தெஸான் ஹுவானின் வாழ்க்கை வரலாற்றை அலோன்ஸோ ரமோஸ் என்ற பாதிரி மூன்று தொகுதிகளாக எழுதியிருக்கிறார்.

காதரீனா மொகலாய அரண்மனையில் பிறந்து வளர்ந்த காலகட்டத்தில் மத சகிப்புத்தன்மையைப் பொறுத்தவரை ஹிந்துஸ்தான் உலகின் முன்னுதாரண தேசமாக விளங்கி இருக்கிறது. அதே காலகட்டத்தில் துருக்கியின் உள்ளே நுழைய வேண்டும் என்றால், பயணிகளும் வணிகர்களும் பச்சை ஆடைதான் அணிய வேண்டும் என்ற சட்டம் இருந்தது என்று எழுதுகிறார் இத்தாலியப் பயணி நிக்கொலாவோ மனூச்சி. தலையைக் குனிந்தபடியேதான் பேச வேண்டும், கண்ணைப் பார்த்துப் பேசினால் சவுக்கடி, எதிர்த்துப் பேசினால் கை இருக்காது. இப்படித்தான் இருந்தது அப்போதைய துருக்கி. ஆனால் ஹிந்துஸ்தான், இப்போதைய ஒரு மெட்ரோபாலிட்டன் சிட்டி எப்படி இருக்குமோ அப்படி இருந்திருக்கிறது. நகரங்கள் மட்டும் அல்லாமல் ஹிந்துஸ்தான் முழுவதுமே. பல வெளிநாட்டுப் பயணிகளும் வணிகர்களும் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்திருக்கிறார்கள். உலகமே பொறாமைப்படும் அளவுக்குப் பணக்கார நாடாகவும் இருந்ததால், பெர்ஷியா (ஈரான்) போன்ற நாடுகளின் அரசர்கள் எப்போது வாய்ப்புக் கிடைக்கும், இந்தியாவுக்குப் போய் கொள்ளையடிக்கலாம் என்றே காத்துக் கொண்டிருந்தனர். ஆஃப்கானிஸ்தானிலிருந்து முஹம்மது கஜினி திரும்பத் திரும்ப இந்தியா வந்ததற்குக் காரணமும் இங்கே இருந்த செல்வச் செழிப்புதான். (ஷா ஜஹானின் அரண்மனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மூத்த அதிகாரிகள், தங்கள் கைகளில் முழுவதும் தங்கத்தால் ஆன தடிகளையும், அவர்களது உதவியாளர்கள் வெள்ளித் தடிகள் வைத்திருந்ததாகவும் எழுதுகிறார் மனூச்சி.)

ஹிந்துஸ்தானில் இருந்த மத நல்லிணக்கத்தின் காரணமாக பல கத்தோலிக்கப் பாதிரிமார்களும் மொகலாய அரண்மனையில் அரச குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்தார்கள். ஔரங்கசீப் தன் அண்ணன் தாரா ஷிகோவைக் கொன்றதற்கும், இஸ்லாமிய மார்க்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டியதற்கும் இதுவே ஒரு காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். தாராவிடம் ஆட்சி போயிருந்தால் அவன் முழு ஹிந்துஸ்தானையும் பாதிரிகளிடம் கொடுத்திருப்பான் என்று ஔரங்கசீப் தன் கடிதம் ஒன்றில் சூசகமாகக் குறிப்பிடுகிறார்.

காதரீனா பற்றிய எழுத்தாளனின் நாவலுக்கு அலோன்ஸோ ரமோஸ் எழுதிய மூன்று தொகுதிகளும் நல்ல ஆதார நூல்களாக இருக்கும் என்றாலும், அவர் ஒரு பாதிரி என்பதால் காதரீனா பிறந்ததே கன்னி மேரியின் அருளால்தான் என்று எழுதுகிறார். காதரீனாவின் பெற்றோருக்கு இருபது ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. அவர்கள் அரண்மனைப் பாதிரி ஒருவரின் பரிந்துரையில் கன்னி மேரியைப் பிரார்த்தித்துக் கொண்டதால் பிறந்தவர் மீர்ரா என்கிறார் ரமோஸ்.  இருக்கலாம். ஆனால் எழுத்தாளனுக்கு அது பற்றி வேறு சில தரவுகள் தேவைப்பட்டன. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எழுதியவர்கள் எல்லோருமே அலோன்ஸோ ரமோஸின் தொகுதிகளையே ஆதாரமாகக் கொண்டு எழுதியிருந்தார்கள். அப்போதுதான் எழுத்தாளனின் நண்பர் ஒருவர் ஒரு அகோரி பற்றிச் சொன்னார். அவர் அக்பரின் ஆவியோடு பேசுகிறார். சரியாகச் சொல்ல வேண்டும். அவர் யாரோடு பேச வேண்டும் என்று விரும்புகிறாரோ அவருடைய ஆவி அந்த அகோரியின் உடம்புக்குள் வருகிறது. அப்போது பேசுவது அகோரி அல்ல, அந்த ஆவி. அப்படித்தான் அவர் அக்பரைத் தன் நண்பர்களுக்கு அவ்வப்போது வரவழைத்துக் காட்டுகிறார். இதில் ஏதாவது கோக்குமாக்கு இருக்குமோ, பேசுவது அக்பர்தான் என்று எப்படி நம்புவது என்று கேட்டான் எழுத்தாளன். வந்து பார் என்றார் நண்பர். 

அகோரி தன்னைப் பற்றிய எந்த விவரத்தையும் எழுதக் கூடாது என்று எழுத்தாளனிடம் சத்தியம் வாங்கியிருப்பதால், அவரைப் பற்றியோ அவருடைய ஊர் பற்றியோ இங்கேயும் அல்லது வேறு எங்கேயும் சொல்வது சாத்தியம் இல்லை. எனவே வாசகர்கள் யாரும் அந்த அகோரி பற்றிக் கேட்டு எழுத்தாளனையோ, இதன் வெளியீட்டாளர்களையோ தொல்லை பண்ண வேண்டாம். சமயங்களில் இப்படி வரும் கடிதங்கள் எழுத்தாளனை மிகவும் மன வருத்தம் கொள்ளச் செய்கின்றன. ”இருபது ஆண்டுகளாக எனக்கு சொறி சிரங்கு இருக்கிறது, சரியாகத் தூங்கியே இருபது ஆண்டுகள் ஆகின்றன. நீங்கள் எழுதியிருந்த சித்தரின் விலாசம் தரவும்.” இப்படி ஒரு கடிதம் வந்தால் பூஞ்சை மனம் கொண்ட எழுத்தாளன் என்ன செய்வான்? சித்தரோ தன்னைப் பற்றிய தகவலை யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். இப்படித்தான் இக்கட்டில் மாட்டிக் கொள்கிறான் எழுத்தாளன். எனவே யாரும் அகோரியின் விலாசம் கேட்டு எழுதி விடாதீர்கள். ப்ளீஸ்.

*** 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ந்த அறையில் பத்து பேர் இருந்தார்கள். ஒரு மூலையில் ஊதுவத்தி எரிந்து கொண்டிருந்தது. அறை முழுவதும் அத்தர் மணம். ஒரு பக்கம் சன்னமாக ஒரு பெண் குரலில் கஸல் ஒலித்துக் கொண்டிருந்தது. திண்ணை மாதிரி சற்றே உயர்ந்திருந்த மேடையில் திண்டு போட்டு அதில் கண்களை மூடியபடி அமர்ந்திருந்தார் அகோரி. மற்றவர்கள் சற்று கீழே ஜமுக்காளத்தில் அமர்ந்திருந்தார்கள். 

பேசியது அக்பர்தான். சந்தேகமில்லை. ஏனென்றால், அந்த அகோரிக்கு ஃபார்ஸி மொழி* சுட்டுப் போட்டாலும் தெரியாது என்றார் நண்பர். வட இந்தியத் தொடர்பினால் ஓரளவு உடைந்த இந்தி தெரியுமே தவிர உர்தூ கூடத் தெரியாது. இப்போது அக்பரின் ஆவியோ படு ரகளையாக ஃபார்ஸி மொழியில் வெளுத்து வாங்குகிறது.

*ஃபார்ஸி – பெர்ஷிய மொழியின் பெர்ஷியப் பெயர் ஃபார்ஸி. ஸ்பானிஷ் மொழியின் ஸ்பானிஷ் பெயர் எஸ்பான்யோல் என்பதைப் போல.

அந்த அமர்வு முடிந்ததும் எழுத்தாளன் அவன் நண்பரிடமும் அந்த அகோரியிடமும் பேசினான். அவனுடைய நாவலுக்கான – அதாவது காதரீனாவின் ஆரம்ப கால சம்பவங்களைப் பற்றி ஏன் ஷா ஜஹானிடமே கேட்கக் கூடாது என்பதுதான் அவன் யோசனை. அகோரியும் ஒப்புக்கொண்டதால் வேலை எளிதாயிற்று. அமர்வுக்கான நாள் குறிக்கப்பட்டது.  

ஆனால் அகோரியிடம் வந்தது ஷா ஜஹானின் ஆவி அல்ல என்பது ஆவி தன்னுடைய பெயரைச் சொல்வதற்கு முன்பே  யூகிக்கக் கூடியதாய் இருந்தது. ஏனென்றால், ஷா ஜஹான் ஒரு இசை வெறியர். அவரே ஒரு பாடகரும் கூட. அவர் குரலைக் கேட்டு எல்லோரும் மெய்மறந்து போவார்கள். அதனால் அந்த அறையில் கிஷோரி அமோங்கரின் 'யமன்' ராகப் பாடல் ஒன்றை மிக மெலிதாக ஒலிக்க விட்டிருந்தான் எழுத்தாளன். ஆனால், அகோரி மூலம் பேசிய ஆவியோ எடுத்த எடுப்பில் அதை நிறுத்தச் சொல்லியது. அப்போதே அவனுக்குக் குழப்பம். பிறகு கொஞ்ச நேரத்தில் அவரே பெயரைச் சொன்னதும் குழப்பம் முழுசாகத் தீர்ந்தது.    

அகோரியிடம் வந்தது ஔரங்கசீப்பின் ஆவி. இது எப்படி நடந்தது என்பதை அவன் கேட்காமலேயே விளக்கினார் ஔரங்கசீப். அவர் விரிவாகப் பேசியதன் சுருக்கம் இதுதான்: 

சரித்திரத்தில் ஔரங்கசீப் பற்றிப் பல தவறான தகவல்கள் நிரம்பி இருக்கின்றன. ஒரு எழுத்தாளனிடம் தன் உண்மையான கதையைச் சொல்வதன் மூலம் அந்தத் தவறுகளையெல்லாம் சரி செய்யலாம் என்று நம்பி, தன் தந்தையிடம் அனுமதி பெற்று அவருக்குப் பதிலாக எழுத்தாளனைச் சந்தித்திருக்கிறார் ஔரங்கசீப். அவர் சொன்ன பல தகவல்கள் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இருக்காதா என்ன? என் ஜோதிடர் ஒரு பிராமணன் என்கிறார். அக்பர் நாமா புத்தகத்தின் முதல் தொகுதியின் ஆரம்பத்தில் அபுல்-ஃபாஸல் அக்பர் பாதுஷாவின் ஜாதகம் பற்றியே ஐம்பது பக்கம் எழுதியிருக்கிறார் இல்லையா என்று கேட்கிறார். அது மட்டும் அல்ல, நானா மதம் மாற்றினேன், இந்துக்களுக்காகக் கோவில்களைக் கட்டிக் கொடுத்தேன் என்கிறார். கட்டியதோடு மட்டுமல்ல, அவற்றைப் பராமரிப்பதற்கு மான்யங்களும் வழங்கியிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் சரித்திரத்திலிருந்து ஆதாரம் காட்டுகிறார். அந்த ஆதாரங்களை அவன் சோதித்துப் பார்த்தபோது, அவை பெரும்பாலும் சரியாக இருந்தன. என்ன ஆதாரம் என்றால், ஐரோப்பியப் பயணிகளின் குறிப்புகள் மற்றும் ஔரங்கசீப் பற்றி அவரது மரணத்துக்குப் பிறகு எழுதப்பட்ட சரித்திரங்கள். மற்ற பேரரசர்களைப் போல் ஆள் வைத்து எழுதப்பட்ட சரிதங்கள் அல்ல. ஔரங்கசீப்பின் மரணத்துக்குப் பிறகு எழுதப்பட்டவை.*

இப்படியாக ஔரங்கசீப் பண்ணிய அதிரடியால் காதரீனா பற்றி அவன் திட்டமிட்டிருந்த நாவலை ஒத்தி வைத்து விட்டு, ஔரங்கசீப்பின் கதையை அவர் சொல்லச் சொல்ல எழுத ஆரம்பித்தான். (ஆனால் அவன் மனதுக்குள் ஒரு எண்ணம் ஓடியது, அடப்பாவி, உயிரோடு இருந்தபோதுதான் தந்தையை வீட்டுச் சிறையில் வைத்தீர், ஆவியாகப் போன பிறகும் அவரைத் தள்ளி விட்டு நீர் வந்திருக்கிறீரே?)

*ஔரங்கசீப்பே தன் உரையாடலில் ஒருமுறை சொன்னது போல் அவரை ஒற்றை அடையாளத்துக்குள் குறுக்க முடியாது. ஏனென்றால், அவரது 89 ஆண்டு வாழ்வில் – 49 வருட அரசாட்சியில் அவர் எப்போதுமே ஒரே மாதிரி நடந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்வதற்கும் மிகக் கடினமான நபராகவே இருந்திருக்கிறார். அவர் 1704-இல் – தான் இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் - தன் மகன் ஆஸமுக்கு எழுதிய கடிதத்தில் ”ஒரு இந்து அதிகாரிக்காக எப்படி நீ முஸ்லீம் அதிகாரியைப் பதவியிலிருந்து நீக்கலாம்?” என்று எழுதியிருக்கிறார். 1672-இல் அவர் தனது கவர்னர்கள் அனைவருக்கும் இட்ட உத்தரவில் இந்துக்களை அரசுப் பதவியிலிருந்து தூக்கி விட்டு அந்த இடத்தில் முஸ்லீம்களை அமர்த்துமாறு கூறியிருக்கிறார். ஆனால் இந்த உத்தரவை சரிவர நடைமுறைப்படுத்த முடியவில்லை. அதிகாரிகளுக்கு முறையான தகுதியுள்ள முஸ்லீம்கள் கிடைக்காததால், குறிப்பிட்ட தகுதிக்கும் கீழானவர்களையும் அவர்கள் முஸ்லீம்கள் என்பதாலேயே நியமித்தனர். அப்படிச் செய்தும் ஔரங்கசீப்பின் ஆணையைப் பல மாநிலங்களில் சரியான தகுதியுள்ள முஸ்லீம்கள் கிடைக்காததால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இதை காஃபி கான் இந்தியாவின் வரலாறு பற்றிய தன் 'முண்ட்டகப்-அல் லுபாப்' என்ற ஃபார்ஸி நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நூலை 1768-1774-இல் மௌல்வி காத்ர்-உத்-தின் கல்கத்தாவில் வெளியிட்டார். இந்த நூலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஹெச்.எம். எலியட் மற்றும் ஜான் டாஸன் ஆகியவர்களின் 'The History of India, as Told by its Own Historians' என்றும், வில்லியம் எர்ஸ்கினின் 'History of India under Babar and Humayun' என்ற தலைப்பிலும் வந்துள்ளன. முதல் புத்தகம் எட்டு தொகுதிகள். சுமாராக 5000 பக்கங்கள். இந்தத் தொகுதிகள் 1867-1877இல் பிரசுரமாயின. வெளியிட்டவர் மொழியியல் அறிஞர் ஜான் டாஸன் (1820-81). இதற்கு ஆதாரமாக இருந்தது கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரியும் அறிஞருமான ஸர் ஹென்றி மியர்ஸ் எலியட் (1808-53).  மொகலாயர் பற்றிய பல சரித்திர நூல்கள் காஃபி கானின் மேற்படி நூலை ஆதாரம் காண்பிக்கின்றன. காரணம், காஃபி கான் ஔரங்கசீபுக்குப் பிறகு பதவிக்கு வந்த மொகலாய மன்னர்களிடமும் பணி புரிந்திருந்திருக்கிறார். அவருடைய மேற்படி நூலை ஔரங்கசீப் பார்வையிடவில்லை. அதனால் அந்த நூல் சுதந்திரமாகவே எழுதப்பட்டது என்று நாம் கொள்ளலாம். எனவே, ஔரங்கசீப் எழுத்தாளனிடம் சொன்னபடி முஸ்லீம்களையும் இந்துக்களையும் சமமாக நடத்தவில்லை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும் அவர் இந்துக்களுக்காகக் கோவில்கள் கட்டிக் கொடுத்ததும் அவரது ராணுவத்தில் இந்துக்களே அதிகம் இருந்தனர் என்பதும் உண்மைதான். – எழுத்தாளன்.  

அப்போது எழுத்தாளனுக்குள் இன்னொரு கேள்வியும் எழுந்தது. வெறுமனே ஒரு ஆவி தன் கதையைச் சொல்வதை எழுதினால் அதன் நம்பகத்தன்மைக்கு என்ன செய்வது? ஒரே ஒரு வழிதான் இருந்தது. ஒரு பக்கம் ஆவி சொல்வதையெல்லாம் பதிவு செய்து கொண்டு, பிறகு அதை ஆதார நூல்களில் சரி பார்க்கலாம். அதன்படி ஔரங்கசீப் பேசுவதை எந்திரத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் ஔரங்கசீப் மறுத்து விட்டார்.  தடயங்களை விட்டுப் போவது அவர்களின் (ஆவி) உலக நியதிகளுக்கு ஏற்புடையது இல்லையாம். அது என்ன தர்க்கமோ தெரியவில்லை. ஆனாலும் எழுத்தாளன் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த ரிஸ்வான், ஔரங்கசீப் பேசுவதை பிரதி எடுத்துக் கொடுப்பதாகச் சொன்னபோது ஆசுவாசம் அடைந்தான் எழுத்தாளன். காகிதங்களில் குறிப்பு எடுத்துக் கொள்ளலாம். அதற்கு ஔரங்கசீப் தடை சொல்லவில்லை.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

மொகலாயப் பேரரசர்கள் அனைவருமே பிராமண சோதிடர்களைத் தங்கள் அரசவையில் பெரும் பதவியில் வைத்திருந்திருக்கிறார்கள். ஔரங்கசீப் உட்பட.  பண்டிட் சந்தர்பான் பிராமணன் – முழுப் பெயரே அதுதான் –  என்பவர் 1620-களின் கடைசியிலிருந்து 1663 வரை – அதாவது, ஷா ஜஹான், ஔரங்கசீப் இருவரிடமும் ஆஸ்தான ஜோதிடராகவும் ஆஸ்தானக் கவிராயராகவும் தனிச் செயலாளராகவும் தன்னுடைய பிராமண அடையாளத்தை விட்டு விடாமலேயே இருந்திருக்கிறார். ஷா ஜஹான் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தபோது தாரா ஷிகோதான் ஆட்சியை கவனித்துக் கொண்டார். அப்போதும் சந்தர்பான் பிராமணன், தாரா ஷிகோவின் செயலாளராக இருந்திருக்கிறார்.   

சந்தர்பான், பிராமணன்தான் என்றாலும் ஃபார்ஸி மொழியின் முதல் இந்தியக் கவியாகவும், உரைநடை ஆசிரியராகவும் அறியப்படுகிறார். இத்தனைக்கும் ஃபார்ஸி மொழி சந்தர்பானின் தாய் மொழி அல்ல. கற்றுக் கொண்ட மொழி. ஆக, ஔரங்கசீப் காலத்தில் அவரது அரசவையில் முக்கியப் பொறுப்பில் இருந்த ஒரு பிராமணர் உரைநடையில் தன் சுயசரிதையை எழுதியிருக்கிறார் என்றால் அது எத்தனை அரிய பொக்கிஷம்! அதேபோல் ஷா ஜஹானின் அரசவையிலும் பிறகு ஔரங்கசீப்பின் அரசவையிலும் மருத்துவராகப் பணியாற்றிய ஃப்ரான்ஸ்வா பெர்னியே (François Bernier) (1620 – 1688) ஒரு பயண நூலை எழுதியிருக்கிறார்.  

இன்னொருவர் நிக்கலாவோ மனூச்சி (Niccolao Manucci) (1638 – 1717).  இவர் தனது சொந்த ஊரான வெனிஸை விட்டு பதினெட்டு வயதில் (1656) இந்தியா வந்தவர், பிறகு ஐம்பத்து நான்கு ஆண்டுகள் இந்தியாவிலேயே இருந்தார். மனூச்சி ஒரு மருத்துவராக இருந்ததால் ஒருமுறை ஷா ஆலமின் ஒரு மனைவிக்கு வந்த காது வலியை சரியாக்கியதால் அவர் சிபாரிசில் இவர் ஷா ஆலமுடன் இருந்து பின்னர் ஷா ஜஹான், ஔரங்கசீப் ஆகியோரின் ஐரோப்பிய உதவியாளர்களுடன் இணைந்து கொண்டார். தான் நேரில் கண்டதை நான்கு தொகுதிகளாக எழுதியிருக்கிறார். அதில் முதல் தொகுதி ஔரங்கசீப்பின் காலகட்டத்தைப் பற்றியது. ”நான் பார்க்காத, அனுபவிக்காத எதையும் என் குறிப்புகளில் எழுதவில்லை” என்கிறார் மனூச்சி. (இங்கே குறிப்படப்படும் ஷா ஆலம் முதலாம் ஷா ஆலம். அதாவது, ஔரங்கசீப்பின் இரண்டாவது மகன் முஹம்மது முவாஸமின் இன்னொரு பெயர்தான் ஷா ஆலம். தில்லியில் 1707 இலிருந்து 1712-இல் கொல்லப்படும் வரை பேரரசராக இருந்தவர்.)  

இன்னும் பல நூல்கள் இந்த நாவலுக்கு ஆதாரமாக இருந்தன. அந்த விவரங்கள் அனைத்தும் நாவலின் கடைசியில் தரப்படுகின்றன. இப்போதே கொடுத்தால் நாவலின் சுவாரசியம் கெட்டு விடும்.    

இறுதியாக, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறான் எழுத்தாளன். அது, ஃப்ரான்ஸ்வா பெர்னியே தன் பயணக் குறிப்புகளில் சொல்வது போல, ”இந்த சரித்திரம்தான் மிகவும் சரியானது என்று சொல்ல மாட்டேன். ஆனால் நிச்சயமாக மற்றவர்கள் எழுதியதை விட பிழைகள் கம்மியானதாக இருக்கும் என்பதை மட்டும் உறுதி கூறுவேன்.”  

- தொடரும்