அத்தியாயம் 1
காணிக்குற்றம் கோடிக் கேடு – பிரயாச்சித்தம்
புஷ்பாவதி, “ஆமாம்மா! நீங்கள் சொல்வது உண்மையான சங்கதிதான். இருந்தாலும் நாங்கள் உங்களுக்கு அவ்வளவு பிரமாதமான உதவி எதையும் செய்துவிடவில்லை. அப்பேர்ப்பட்ட உதவி எதுவும் உங்களுக்குத் தேவையான நிலைமையில் நீங்களும் இருக்கவில்லை. ஆதி முதல் நாங்கள் உங்களுக்குச் செய்வதெல்லாம் வாய் வார்த்தையாகிய உதவிதான். மனசில் பிரியமிருப்பதை நாங்கள் வாய் வார்த்தையால் காட்டி, உங்களுக்கு வரும் தொந்தரவை எங்களுக்கு வந்த தொந்தரவைப்போல உணர்கிறோம். அவ்வளவுதான் நாங்கள் செய்கிறோம். வேறொன்றுமில்லை.
இதை நீங்கள் ஒரு பெரிய சங்கதியாகப் பாராட்டி ஏன் பேசுகிறீர்கள்! அது இருக்கட்டும். நம்முடைய கோகிலா வெளியில் போயிருந்தது சம்பந்தமாக என் மனசில் ஒரு சந்தேகம் உண்டாகிக்கொண்டே இருக்கிறது. சிறைச்சாலையில் இருக்கிற முதலியார் தாம் இருக்கும் இடத்துக்கு வரும்படியல்லவா கடிதம் எழுதி இருக்கிறார். நம்முடைய கோகிலா போலீஸ் இன்ஸ்பெக்டருடைய வீட்டுக்குப் போக வேண்டுய காரணமென்ன? அதுதான் எனக்கு விளங்கவில்லை. உங்கள் குடும்ப சம்பந்தமான விஷயங்களில் நான் தலையிட்டு, ரகசியங்களை அறிய முயற்சிப்பது தகாத காரியம். ஆனாலும், என் மனசை வதைத்துக்கொண்டிருக்கும் சங்கதியை உள்ளபடி வெளியிட்டு விட்டேன். உங்களுக்கு யுக்தமாகத் தோன்றினால், சொல்லலாம், இல்லாவிட்டால், சொல்ல வேண்டுமென்ற கட்டாயமில்லை என்று நிரம்பவும் நயமாகக் கூறினாள்.
உடனே கோகிலாம்மாள் தான் அன்றைய தினம் காலையில் பங்களாவிலிருந்து புறப்பட்டுச் சென்றது முதல் போலீஸ் இன்ஸ்பெக்டரது வீட்டிற்குள்ளிருந்து தந்திரமாகத் தப்பி வெளியில் வந்தது வரையிலுள்ள வரலாறு முழுதையும் விரிவாக எடுத்துக் கூறினாள். அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள் அளவற்ற பிரமிப்பும் நடுக்கமும்கொண்டாள். ஆனாலும், கோகிலாம்பாள் அத்தகைய அபாயத்திலிருந்து எவ்விதமான களங்கமுமின்றித் தப்பி வந்ததைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தவளாய் வாய்திறந்து பேசமாட்டாமல் ஸ்தம்பித்து மெளனமாக உட்கார்ந்திருந்தாள். கோகிலாம்பாள் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டரிடம் சென்றதாக புஷ்பாவதி எண்ணி இருந்தவள். ஆதலால், அவளுக்கும் அந்த வரலாறு வியப்பையும் திகைப்பையும் தந்தது. கோகிலாம்பாள் கூறியது உண்மையான வரலாறாக இருக்குமோ அல்லது தான் இருப்பதைக் கருதி அவள் அவ்வாறு பொய் சொல்கிறாளோவென்றும், புஷ்பாவதி சந்தேகித்தவளாய், அவர்களை நோக்கி, “என்ன ஆச்சரியம் இது! ஜனங்களுக்கு இவ்விதமான அபாயங்கள் நேராமல் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவர்களான போலீஸ் அதிகாரிகளே இப்படிச் செய்வதென்றால், இது வேலியே பயிரை அழிக்கிற மாதிரியல்லவா இருக்கிறது. கோகிலா சொல்லும் வரலாற்றைப் பார்த்தால், அந்த இன்ஸ்பெக்டரிடம் கோகிலா தற்செயலாகப் போய் அகப்பட்டுக்கொண்டதாக எண்ண இடமில்லையே. அவர் கோகிலாவை அடைய வேண்டுமென்று எல்லா ஏற்பாடுகளையும் ஆயத்தமாய்ச் செய்து வைத்திருந்ததாகவல்லா தோன்றுகிறது.
சிறைச்சாலையிலிருக்கும் முதலியார் கடிதத்தில் கோகிலாவை அழைத்திருக்கிறார் என்பது அவர்களுக்கு எப்படித் தெரிந்தது? அவர் எழுதிய கடிதத்தை இவர்கள் நடுவில் பிரித்துப் பார்த்திருக்க வேண்டுமென்றே எண்ண வேண்டியிருக்கிறது. இவ்வளவு அபாயமும் அந்தக் கடிதத்திலிருந்து உண்டானதாகத்தான் தோன்றுகிறது. என்ன இருந்தாலும், அவர் இந்த மாதிரிக் கடிதம் எழுதியது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அவர் நன்றாகப் படித்த புத்திசாலி. அப்படி இருந்தும் கொஞ்சமும் முன்பின் யோசியாமல் கடிதம் எழுதிவிட்டதாகத் தெரிகிறது. வீட்டில் வேறே பெரியவர்கள் இல்லையா? அவருடைய தாயார் இல்லையா? நீங்கள் இல்லையா? நீங்கள் யாராவது வரவேண்டுமென்று அவர் அழைத்திருக்கலாகாதா? அறியாத சிறு பெண்ணைத்தானா அவர் கூப்பிட வேண்டும்” என்றாள்.
அவ்வாறு புஷ்பாவதி கண்ணபிரானின் மீது குற்றம் சுமத்திப் பேசியது, கோகிலாம்பாளின் மனத்தில் சுருக்கென்று தைத்து மிகுந்த ஆத்திரத்தை உண்டாக்கியது. ஆனாலும், அவள் கூறியது நியாயமான வார்த்தையென்பதையும் அவள் உணர்ந்தவள். ஆகையால், அதற்கு எவ்வித மறுமொழியும் கொடாமல் தனது மனத்தை ஒருவாறு அடக்கிக்கொண்டவளாய்த் தனது முகத்தை அப்புறம் திருப்பிக்கொண்டாள்.
அவளது கிலேசத்தைக் கண்ட பூஞ்சோலையம்மாள் உடனே புஷ்பாவதியை நோக்கி, “அம்மா! அவர் பேரிலும் குற்றமே இல்லை. நான் இவளைத் தேடிக்கொண்டு போனேனல்லவா. போய் அவரைப் பார்த்துச் சங்கதியை விசாரித்தேன். போலீசார் அவரையும் ஏமாற்றி அந்தக் கடிதத்தை எழுதி வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் இவளை எப்போது பார்த்தானோ தெரியவில்லை. அதிலிருந்து அவனுக்குத் துர்ப்புத்திபிடித்துப் போயிருக்கிறது போலிருக்கிறது. அவன் வெகு தந்திரமாக இத்தனை காரியங்களையும் செய்து, கோகிலா தன்னுடைய வீட்டுக்கு வரும்படி சூழ்ச்சி செய்திருக்கிறான்” என்று கூறி கண்ணபிரானிடத்தில் தான் கேட்டுத் தெரிந்துகொண்ட வரலாறும் முழுதையும் எடுத்துக் கூறினாள். அதைக் கேட்ட. கோகிலாம்பாளின் மனதும் ஒருவித மகிழ்ச்சியடைந்தது. தனக்குக் கடிதம் எழுதிய விஷயத்தில் தனது மணாளன் மூடத்தனமாக நடந்து விட்டானென்ற அபிப்பிராயம் அவளுக்குள் இருந்து வதைத்து வந்தது. ஆகையால், அது உடனே விலகிப் போயிற்று. கண்ணபிரான் தவறான காரியம் எதையும் செய்துவிட வில்லையென்றும், போலீசார் அவனை ஏமாற்றி விட்டார்கள் என்றும் கோகிலாம்பாள் உணர்ந்துகொண்டாள்.
அந்த வரலாற்றைக் கேட்ட புஷ்பாவதி நிரம்பவும் வியப்பாகப் பேசத் தொடங்கி, “அடடா! அந்த நாய்க்கு வந்த கேடுகாலமென்ன? அவன் போலீஸ் இன்ஸ்பெக்டராய் இருந்துவிட்டால், ஊரிலிருக்கும் பெண்கள் மேலெல்லாம் தான் துராசைகொள்ளலாம் என்றும், தான் அவர்களை அபகரித்துப் போய் பலாத்காரம் செய்யலாம் என்றும் நினைத்துக்கொண்டான் போலிருக்கிறதே! நிச்சயதார்த்தம் நடந்த காலத்தில் வந்து அவரைப் பிடித்துக்கொண்டு போனானே அந்த இன்ஸ்பெக்டர் தானே!” என்றாள். பூஞ்சோலையம்மாள், “ஆம், அவனாகத்தான் இருக்க வேண்டும்” என்றாள்
புஷ்பாவதி, “அவனை நான்கூடப் பார்த்திருக்கிறேனே! அவன் பனை மரத்தைப்போலல்லவா இருந்தான். குழந்தைகள் அவனைப் பார்த்தால், அவன்தான் எமதர்மராஜனோ என்று பயந்து நடுநடுங்கிப்போய் விடுவார்களே! அவனுக்காக இப்படிப்பட்ட கேடு காலம் வந்தது! அவனுக்கு வெகு சீக்கிரம் அழிவு காலம் வந்துவிடும். போலீஸ் அதிகாரியாயிருந்தால் மாத்திரம் அவன் அக்கிரமம் செய்தால் அவன் என்றென்றைக்கும் தப்பித்துகொண்டிருக்க முடியுமா? எப்பேர்ப்பட்ட மாயாவியான இந்திரஜித்தனாலும், அவனை வெகு சுலபத்தில் வென்று அழித்துவிடக்கூடிய தந்திர ஜித்தன் ஒருவன் எப்படியும் தோன்றுவான்” என்றாள்.
அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள், “ஆமாம்மா! அக்கிரமம் நீடித்து நிற்காதென்பது பிரத்தியக்ஷமான சங்கதிதானே. அப்படித்தான் இவனுடைய கதியும் முடியும். அதுவுமன்றி நம்முடைய கோகிலா தெய்வத்துக்குச் சமதையானவள். அவளுடைய மனம் புண்படும்படி அக்கிரமம் செய்தவன் வெகு சீக்கிரத்தில் அழிந்து நாசமாய்ப் போய்விடுவான். அதையும் நாம் நம்முடைய காதால் கேட்கத்தான் போகிறோம்” என்றாள்.
புஷ்பாவதி, “இந்தப் படுபாவி இன்ஸ்பெக்டரால் ஏற்பட்ட அபாயம் அவ்வளவோடு போகாமல், சொந்த ஜனங்களுக்கு முன்பு பெருத்த அவமானமாகவும் தலை குனிவாகவுமல்லவா முடிந்துவிட்டது. இப்போது இங்கே வந்திருந்த உங்களுடைய சொந்த ஜனங்கள் எல்லோரும் கோகிலாவைப் பற்றி முற்றிலும் தப்பான அபிப்பிராயத்தோடல்லவா திரும்பிப் போயிருக்கிறார்கள். என் தமயனார் கூட அவர்களுடன் போய்விட்டதைப் பார்த்தால் அவரும் மற்றவரைப்போலத் தப்பான அபிப்பிராயம்கொண்டிருக்கிறார் என்றல்லவா தோன்றுகிறது. நீங்கள் இருவரும் ஜனங்களுக்கு முன்பு வாயை மூடிக்கொண்டு பேசாமலிருந்தது சரியல்ல. இப்போது என்னிடம் சொன்ன வரலாறு முழுதையும் நீங்கள் எல்லோருக்கும் முன்னால் தெரிவித்திருந்தால், அவர்களுடைய தப்பபிப்பிராயம் நீங்கிப் போயிருக்குமே. நல்ல சமயத்தில் பேசாமல் இருந்துவிட்டீர்களே!” என்றாள்.
பூஞ்சோலையம்மாள் சிறிதுநேரம் மெளனமாயிருந்தபின், “அம்மா! வேளைப் பிசகுக்குத் தகுந்தபடி மனிதருக்குச் சமயத்தில் நல்ல யோசனையும் படுகிறதில்லை. இன்று காலையிலிருந்தே நாங்கள் புத்திக் குறைவான காரியங்களைச் செய்ய நேர்ந்துவிட்டது. சிறைச்சாலையில் இருக்கிறவர் கோகிலாவை வரும்படி அழைத்தாரல்லவா. அவர் அழைத்திருந்தாலும், அவளை அனுப்புவது யுக்தமான காரியமல்லவென்பது என் புத்தியில்பட்டிருக்க வேண்டும். அவளை இங்கேயே வைத்துவிட்டு நான் போயிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், போலீஸ் இன்ஸ்பெக்டருடைய எண்ணத்திலும் மண் விழுந்து போயிருக்கும். எங்களுக்கும் இப்படிப்பட்ட பெரிய அவமானம் நேரிட்டிருக்காது. காணிச் சோம்பல் கோடிக் கேடு என்று சொல்வார்கள். அதுபோல ஓர் அற்ப விஷயத்தில் நாம் எச்சரிகைக் குறைவாக நடந்துவிட்டால், அது பெருத்த அநர்த்தத்தில் போய் முடிகிறது.
இன்று காலையில் இவளை அனுப்பியது பெரிய தவறு. அதன்பிறகு, இன்ன சொந்தக்காரருடைய வீட்டுக்கு இவள் போனாளென்று பொய்யாக ஒருத்தருடைய பெயரைக் குறித்தது இரண்டாவது பெருத்த தவறு. இந்த இரண்டு விஷயங்களில் நானும் சரி, கோகிலாவும் சரி, இருவரும் குற்றவாளிகளே. அதற்குத் தகுந்தபடி கடுமையான தண்டனை எங்கள் இருவருக்கும் கிடைத்துவிட்டது. நான் சொன்னதுபோலவே, கோகிலாம்பாளும் வேறொரு சொந்தக்காரருடைய பெயரைச் சொல்லிவிட்டாள். அவர்கள் இருவரும் நேரில் வந்துவிட்டார்கள்.
ஐயோ நாம் இப்பேர்ப்பட்ட பொய்யைச் சொல்லிவிட்டோமே என்கிற திகிலே எங்களுடைய உயிரில் பெரும் பாகத்தையும் வாங்கிவிட்டதன்றி, நாங்கள் வாயைத் திறந்து பேசவும் மாட்டாதபடி எங்களைக் கோழைகளாக்கிவிட்டது. அதனால்தான் நாங்கள் மற்ற வரலாறுகளைச் சொல்லக்கூடாமல் போய்விட்டது. எப்போதும் தன் வினை தன்னைச் சுடுமல்லவா. அது இப்போது எங்கள் விஷயத்தில் நிஜமாக முடிந்தது. இனி என்ன செய்கிறது. வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது. எங்களுக்கு எவ்வளவு அதிகமான அவமானவும் இழிவும் ஏற்படக் கூடுமோ அவ்வளவும் ஏற்பட்டுவிட்டன. இனி நாங்கள் எங்களுடைய சொந்த ஜனங்களுடைய முகத்தில் விழிப்பதற்கே வகை இல்லாமல் போய்விட்டது” என்றாள்.
உடனே புஷ்பாவதி நிரம்பவும் பரிவாகவும் அநுதாபத்தோடும் மறுமொழி கூறத்தொடங்கி, “ஏனம்மா அப்படிச் சொல்கிறீர்கள்! நீங்கள் என்ன அப்படிப்பட்ட தலைபோகிற குற்றத்தைச் செய்துவிட்டது. ஒன்றுமில்லையே. உண்மையில் நடந்த சங்கதியைத் தக்க சமயத்தில் எடுத்துச் சொல்லத் தவறிப் போய் விட்டீர்கள். அதைத்தான் உங்கள் குற்றமாகச் சொல்ல வேண்டும். மற்றபடி நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள். திருடி விட்டீர்களா கொலை செய்து விட்டீர்களா அல்லது செய்யத் தகாத வேறு காரியத்தைச் செய்து விட்டீர்களா! நீங்கள் ஏதோ பெருத்த தவறைச் செய்துவிட்டதாக ஒரு பொய்த் தோற்றம் ஏற்பட்டுப் போய் விட்டதே தவிர வேறொன்றுமில்லை” என்றாள்.
பூஞ்சோலையம்மாள், “ஆமாம்மா! அது பொய்த் தோற்றமென்பது உங்களுக்கு மாத்திரந்தானே தெரியும். மற்ற ஜனங்களெல்லோரும் அதை நிஜமென்றுதானே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்,” என்றாள்.
புஷ்பாவதி, “இப்பொழுதுதான் என்ன மோசம் முழுகிப் போய்விட்டது. நாளைய தினம் காலையில் உங்களுடைய நெருங்கிய பந்து யாரையாவது வரவழைத்து அவரிடம் விஷயங்களையெல்லாம் வெளியிட்டு, இப்போது இங்கே வந்துவிட்டுப்போன ஒவ்வொருவருடைய வீட்டுக்கும் அவர் போய் உண்மையான வரலாற்றைச் சொல்வதோடு, அதை நீங்கள் இன்ன காரணத்தினால் இப்போது வெளியிடவில்லை என்பதையும் தெரிவித்துவிட்டு வரும்படி செய்துவிட்டால் எல்லாம் சரியாய்ப் போகிறது. யாரும் அதைப்பற்றி சம்சயம்கொள்ளமாட்டார்கள்” என்றாள்.
பூஞ்சோலையம்மாள் சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தனை செய்தபின், “ஆம், நீங்கள் சொல்வது நல்ல காரியமென்றுதான் படுகிறது. ஆனால் இன்னொரு விஷயம் இருக்கிறதல்லவா! இந்தக் கலியாணம் நிறைவேறாதிருக்கையில், அந்த மனிதர் அவ்வளவு தூரம் உரிமை பாராட்டிக் கோகிலாவுக்குக் கடிதம் எழுதியதும், அதற்கிணங்க, நான் இவளைத் தனிமையில் அனுப்பியதும் முற்றிலும் தப்பான செய்கைகள்தானே. அதை நாம் எப்படி மறுக்கமுடியும். அதைப் பற்றி எங்கள் மனிதருக்கு எங்கள்மேல் அருவருப்பும் இழிவான அபிப்பிராயமும் இல்லாமல் போகுமா?” என்றாள்.
புஷ்பாவதி, “உங்கள் பேரில் உங்கள் ஜனங்கள் எவ்வித கெட்ட அபிப்பிராயமும்கொள்ளாமல், முற்றிலும் நல்ல அபிப்பிராயத்தையேகொண்டு விடுவார்களென்று நான் சொல்லவில்லை. இப்போது எல்லோருடைய மனசிலும் மகா விபரீதமான சம்சயம் ஏற்பட்டுப் போயிருக்கிறது. அதாவது நம்முடைய கோகிலா தானே சம்மதித்து ஏதோ துன்மார்க்கமான கருத்தோடு இன்ஸ்பெக்டருடைய வீட்டிற்குப்போய் வந்திருக்க வேண்டுமென்ற தப்பபிப்பிராயம் இப்போது ஏற்பட்டிருப்பது சகஜமே. அது எவ்வளவு பெரிய தீங்கு! சிறைச்சாலையில் இருப்பவர் கடிதம் எழுதியதும், அதன்படி கோகிலாம்பாள் அவரிடம் போனாள் என்பதும், அவ்வளவு பெரிய குற்றமாகுமா? எப்படியும் கோகிலா அவரையே கட்டிக்கொள்ளப் போகிறாள் என்ற நிச்சயம் ஏற்பட்டிருக்கிறது. கலியாணச் சடங்கு முடிவதற்குள் மாப்பிள்ளையும், பெண்ணும் அன்னியோன்யமாய் ஒருவரோடொருவர் பழகிவிட்டார்கள் என்ற ஓர் ஏச்சைத் தவிர மற்றகெடுதல் எதுவும் ஏற்படாது. அந்த விபரீதமான பெரிய அவதூறுக்கும் இந்தச் சிறிய ஏச்சுக்கும் வித்தியாசம் உண்டல்லவா?” என்றாள்.
அதைக்கேட்ட கோகிலாம்பாள், “நீங்கள் சொல்வது சரியான யோசனைதான். ஆனாலும் அதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. இன்ஸ்பெக்டரால் எனக்கு ஏற்பட்ட விபத்தைப் பற்றிய வரலாற்றை நாங்கள் இப்போதே வெளியிட்டிருந்தால், அது உண்மையாகப் பட்டிருக்கும். ஓர் இரவு கழித்து நாளைய தினம் போய் அதைச் சொன்னால், நாங்கள் எதோ பொய்யான சமாதானம் சொல்வதாகவும் ஜனங்கள் எண்ணலாம் அல்லவா” என்றாள்.
புஷ்பாவதி, “எல்லோருமே அப்படி எண்ணி விடுவார்களா? கபடிகளாயிருக்கும் இரண்டொருவர் அந்த மாதிரியான சந்தேகத்தைக்கொள்ளலாம். பெரும்பாலோர் அதை உண்மையென்றே ஏற்றுக்கொள்வார்கள். அந்தக் கபடிகளும் அதற்குமுன் நிச்சயமாக எண்ணியிருந்த விஷயம் சந்தேகத்துக்கு மாறிவிடுமல்லவா. ஆகையால், அதுவும் ஒரு விதத்தில் அநுகூலந்தானே” என்றாள்.
அதைக்கேட்ட கோகிலாம்பாள் மறுமொழி கூறாமல் மெளனத்தில் ஆழ்ந்துவிட்டாள். பூஞ்சோலையம்மாள் உடனே பேசத் தொடங்கி “சரி; இன்னம் இரவு முழுதும் எல்லோரும் யோசனை செய்வோம். காலையில் ஏதாவது தக்க பரிகாரம் தேடுவோம்” என்று கூறினாள்.
அதைக்கேட்ட புஷ்பாவதி, “சரி; அப்படியே ஆகட்டும். இப்போது மணி ஒன்பதுக்கு மேலிருக்கலாம் போலிருக்கிறது. வாருங்கள் போகலாம். நீங்கள் இருவரும் இன்று முழுதும் எங்கெங்கோ போய் அவஸ்தைப் பட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள். உள்ளே போய் இராத்திரி போஜனத்தை முடித்துக்கொண்டு படுத்துக்கொள்ளுங்கள். பொழுது விடியட்டும். அதன்பிறகு யோசனை செய்யலாம்” என்றாள்.
உடனே பூஞ்சோலையம்மாள், “ஆம். வாருங்கள் போவோம். எனக்கு இந்த மனவேதனையில் பசியே உண்டாகவில்லை. விருந்தாளியாக வந்திருக்கும் உங்களைக்கூட நான் இதுவரையில் விசாரிக்க முடியாமல் போய்விட்டது. வேலைக்காரிகள் உங்களுக்குத் தாகத்திற்குக்கூடக் கொடுத்திருக்க மாட்டார்கள் போலிருக்கிறது. சரி; வாருங்கள் சமையலறைக்குப் போவோம்” என்றாள்.
உடனே கோகிலாம்பாள், தனது தாயை நோக்கி, “அம்மா! நான் இராத்திரி சாப்பாட்டை இவர்களுடைய பங்களாவிலேயே முடித்துக்கொண்டு வந்துவிட்டேன். எனக்கு இப்போது உடம்பு நிரம்பவும் அவஸ்தையாக இருக்கிறது. நான் போய்ப் படுத்துக்கொள்ளுகிறேன். நீங்கள் இவர்களை அழைத்துக்கொண்டுபோய் சாப்பாடு செய்து வையுங்கள்” என்று கூறி அனுமதி பெற்றுக்கொண்டு தனது சயன அறைக்குப் போய்விட்டாள்.
புஷ்பாவதியும் பூஞ்சோலையம்மாளும் சமையலறையை நோக்கிச் சென்றனர். அவர்கள் இருவரையும் விடுத்து, நாம் கோகிலாம்பாளைத் தொடர்ந்து செல்வோம். அந்த நற்குணவதி தான் சயனித்துக்கொள்ளப் போவதாகக் கூறிவிட்டுத் தனது விடுதிக்குச் சென்று அவ்விடத்திலிருந்த மஞ்சத்தின் மீது உட்கார்ந்து சாய்ந்துகொண்டாள். ஆனாலும், தான் சயனித்துத் தூங்க வேண்டுமென்ற எண்ணத்தையே அவள்கொள்ளவில்லை. பெரிய மனிதர்களான தனது சொந்த ஜனங்கள் எல்லோருக்கும் முன்னால், தான் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் துன்மார்க்கமான சம்பந்தம் வைத்துக்கொண்டிருப்பதாய் ருஜு ஏற்பட்டுப் போனதை எண்ணி எண்ணி அந்த மடந்தையின் மனம் சகிக்கவொண்ணாத அபாரமான அவமானமும் வெட்கமும் அடைந்து சோர்ந்து தளர்ந்து ஓய்ந்து உட்கார்ந்து போய்விட்டது.
அவளது தேகம் குன்றிச் செயலற்று வீழ்ந்து போயிற்று. அபாரமான துக்கமும் அழுகையும் ஊற்றெடுத்துப் பொங்கி யெழுந்தன. அவள் தனது கைகள் இரண்டையும் வைத்துத் தனது முகத்தை மறைத்துக்கொண்டு கண்ணீர் சொரிந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கித் தன்னையும் உலகையும் முற்றிலும் மறந்து விசனக் கடலில் மூழ்கி நைந்துருகிய வண்ணம் அலங்கோலமாகக் கட்டிலில் இரண்டொரு நாழிகை காலம் சாய்ந்து கிடந்தாள்.
அவளது மனத்தில் பலவகைப்பட்ட எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன, “அடாடா! என்ன என்னுடைய ஜாதக விசேஷம்! இப்படிப்பட்ட அபாண்டமான அவதூறுக்கும் மானபங்கத்துக்கும் ஆளாகவா நான் பெண்ணாய்ப் பிறந்தேன். ஐயோ தெய்வமே! நான் மனசாலும் கெட்ட காரியத்தை எண்ணாதிருக்கையில், பெருத்த இடி போன்ற இந்தப் பொல்லாங்கு வந்து சம்பவித்து விட்டதே! இனி நாளைய தினம் ஆளை அனுப்பி எவ்விதமான சமாதானம் சொன்னாலும், இந்தக் களங்கம் இனி மறையவா போகிறது! இன்ஸ்பெக்டருடைய விஷயத்தில் நாங்கள் சொல்லியனுப்பும் சமாதானத்தை ஜனங்கள் ஒருவேளை ஒப்புக்கொண்டாலும், இவர் எனக்குக் கடிதம் எழுதியதும், அதற்கிணங்கி நான் போனதும் அசாதாரணமான விஷயங்கள்.
ஆதலால், அது பற்றியாகிலும், ஜனங்கள் என்னைக் குறித்து இழிவான அபிப்பிராயங்கொண்டு இளக்காரமாகவும் தூஷணையாகவும் பேசுவது நிச்சயமான விஷயம்! ஆகா! நான் என்ன காரியம் செய்துவிட்டேன்! எவ்வளவுதான் துன்பம் நேருவதாக இருந்தாலும், ஜனங்களால் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்கான மார்க்கத்தை மீறித் தவறான வழியில் சென்றதனால் அல்லவா, இத்தனையும் வந்து விளைந்திருக்கின்றன. நான் செய்த பெருந் தவறுக்கு இந்தத் தண்டனை நியாயமானதாகவே இருக்கிறது. ஜனங்களையாவது, கால வித்தியாசத்தையாவது நோவது மூடத்தனமேயன்றி வேறல்ல.
நிச்சலனமாக இருக்கும் ஒரு குளத்தின் நடுவில் ஒரு சிறிய பருக்கைக் கல்லைப்போட்டாலும், அதனால் ஒன்றன் பின்னாகப் படிப்படியாய் அலைகள் எழுந்தெழுந்து வந்து கரையின்மேல் போய் மோதித் திரும்புவதுபோல, நாம் செய்யும் அற்பத் தவறு ஒன்றன் மேலொன்றாகத் தோன்றும் பல இடர்களையும், துன்பங்களையும், துயரத்தையும் தொடர்ச்சியாக நமது ஆயிசு காலம் முடிய உண்டாக்கி, நம்மை ஒழியா வேதனைக்கும் ஓயாத சஞ்சலத்திற்கும் ஆளாக்கும் என்பதும், ஒருவிதமான சிறிய காரணம், பலவிதமான வெவ்வேறு காரியங்களாக மாறிப் பாதிக்கின்றன வென்பதும் பிரத்தியக்ஷமான விஷயம். ஆதலால் இப்போது எனக்கு ஏற்படும் பெரிய அவதூறு என் ஆயிசு காலம் முடிய நீடித்து நிற்பதோடு அதற்குப் பிறகும் இந்த குடும்பத்தைப் பாதித்தே தீரும்.
இதைக் கருதித்தான், மானம் கெடவரின் வாழாமை முன்னினிதே என்று முன்னோர் இதற்கு ஒரு சிறந்த பரிகாரம் சொல்லியிருக்கின்றனர். என் பிராணபதியின் தாயார் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டுப் போனதைக் கண்டு நான் அந்த அம்மாளின் மேல் ஆயாசம்கொண்டேனே. அவர்கள் செய்யத் தீர்மானித்துக்கொண்ட காரியம் நியாயமானதென்றே இப்போது நினைக்க வேண்டியிருக்கிறது. எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் மானபங்கத்தைக் காட்டிலும், அவர்களுக்கு ஏற்பட்டது ஆயிரமடங்கு அதிகமானதென்றே சொல்லவேண்டும். தக்க பெரிய இடத்தில் தமது குமாரருக்குக் கலியாணம் செய்யத் தீர்மானித்து நிச்சயதார்த்தம் நடத்துகையில் ஆயிரக்கணக்கான கனதனவான்களின் முன்னிலையில் திருட்டுக் குற்றத்தின்மேல் அவரது புத்திரரைக் கைது செய்தது அற்ப சொற்பமான விஷயமா? அதை யார் தான் சகித்துக்கொண்டு உயிரோடு இருப்பார்கள்.
போதாக் குறைக்கு, அந்த அம்மாளே ஒரு குடிகாரத் துருக்கனுக்கு ஆசை நாயகியாயிருந்தாள் என்பதான அவதூறு ஏற்பட்டதே. அதைக் கேட்டவுடனேயே அவர்களுடைய பிராணன் போயிருக்க வேண்டும்; தப்பி நின்றது அரிய சம்பவமென்றே எண்ணவேண்டும். தமது குமாரரின் மேல் அவருக்கு இருக்கும் அபாரமான வாஞ்சையினாலும், தாம் சிறிதும் தவறு செய்யவில்லையென்ற மனோதிடத்தினாலுமே, அவர்களுடைய உயிர்போவது தடைப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, அவர்கள் தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்தது நியாயமான காரியமாகவே தோன்றுகிறது. இப்போது இன்ஸ்பெக்டர் சம்பந்தமாக எனக்கு ஏற்பட்டிருப்பது அப்படி அபாண்டமான அவதூறே, அதுபோலவே, அவர்களின்மீது ஏற்பட்டதும் அபாண்டமாகத்தான் இருக்கும். ஆயினும், முறிந்துபோன பால் மறுபடி ஒரு பொழுதும் பழைய நிலைமைக்கு வராததுபோல ஜனங்களின் மனத்தில் ஏற்பட்ட சம்சயம் சுத்தமாக மாறப் போகிறதுமில்லை. நிஷ்களங்கமான பழைய மதிப்பும் பெருமையும் தூய்மையும் உண்டாகப் போகிறதில்லையென்பதைக் கருதியே அவர்கள் தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்திருக்கிறார்கள். அவர்கள் அபாரமான உலக அநுபவமும், விவேக முதிர்ச்சியும் உடையவர்கள்.
எல்லாவற்றையும் சீர்தூக்கியே அவர்கள் இந்தத் தீர்மானத்திற்கு வந்திருக்க வேண்டுமென்பது நிச்சயம். ஆகவே நானும், எனக்கு ஏற்பட்டிருக்கும் மானபங்கத்தைப் போக்கிக்கொள்வதற்கும், இது என் குடும்பத்தாரைப் பாதிக்காமல் என்னோடு மட்டும் ஒழிந்து போவதற்கும் சாதனமாக நான் என் உயிரைவிட்டு விடுவதே உசிதமான காரியம். நான் தவறான காரியம் எதையும் செய்யவில்லையென்று ஆள்மூலமாய்ச் செய்தி சொல்லியனுப்பியும், வேறு வகையில் ருஜுப்படுத்தியும், ஜனங்களுடைய கெட்ட அபிப்ராயத்தை மாற்ற முயல்வதைவிட நான் உயிரைவிட்டு அதன்மூலமாய் நான் நிரபராதி என்று உலகத்தாருக்கு மெய்ப்பிப்பதே சுலபமானதும், உடனே கைமேல் பலனளிக்கத் தக்கதுமான காரியம்; அதைத்தான் நான் இப்போது செய்ய வேண்டும். நம்முடைய பூஞ்சோலைக்குள் ஏராளமான பெரிய கிணறுகள் இருக்கின்றன.
எதிலாகிலும் ஒன்றிற்குள் விழுந்து நான் உயிரைவிட்டுவிடுகிறேன். ஊழ் வினையினால் உண்டாகும் துன்பங்களையும், துயரத்தையும் மானக் கேட்டையும், நம்முடைய புத்திசாலித்தனத்தினாலும், முயற்சியினாலும் வெல்ல வேண்டுமென்பது உலக நீதியானாலும், என் விஷயத்திலும், என் புருஷர், மாமியார் முதலியோர் விஷயத்திலும் ஏற்பட்டுள்ள ஊழ்வினைத் துன்பங்கள் மகா விபரீதமானவைகளாய் இருக்கின்றன. ஆதலால், இவைகளுக்கெல்லாம் சத்தியாக்கிரகமே மருந்து, இத்தனை இடர்களையும் நாம் எதிர்த்து நின்றாவது உயிர்வாழ ஆசைப்படுவதைவிட அவற்றை ஏற்றுக்கொண்டு உயிரைவிட்டு விடுவதே சத்தியாக்கிரகம்.
உயிரோடு கூடவே எல்லா அல்லல்களும் தொலைந்துபோம்” என்று கோகிலாம்பாள் தனக்குள்ளாகவே எண்ணமிட்டுக் கிணற்றில் விழுந்து தனது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்ற தீர்மானத்திற்கு வந்தவளாய், அதற்குப் பூர்வ பீடிகையாய் காகிதம், எழுதுகோல் முதலியவற்றை எடுத்துத் தனது தாய்க்கு ஒரு கடிதம் எழுதத் துவங்கினாள். அவ்வாறு எழுதும்பொழுது சகிக்கவொண்ணாத மனவெழுச்சியும் வாஞ்சை முதலிய உணர்ச்சிகளும் பொங்கி யெழுந்து அந்த மடந்தை எழுதிய கையை நடுக்குவித்தன. அடிக்கடி கண்ணீர்த் துளிகள் அவள் எழுதிய கடிதத்தின் மேல் விழுந்தன. தான் இறந்து போனதைக் கண்டு தனது நற்குணத்தாய் சிறிதும் பொறாமல் அலறிப் புலம்பி அழுது தனது உயிரையும்விட்டுவிடுவாளே என்ற எண்ணம் தோன்றி அந்தப் பெண்மணியின் மனத்தை முற்றிலும் வதைத்து வாட்டியது. ஆனாலும், அந்த மாது சிரோன்மணி தனது மனவுறுதியில் தளர்வுறாமல் கடிதத்தை எழுதி முடித்து அதை உறைக்குள் போட்டு ஒட்டித் தனது மேஜைக்குள் வைத்தபின் சரேலென்று எழுந்து அவ்விடத்தைவிட்டு வெளிப்பட்டாள்.
அப்பொழுது இரவு பத்துமணி சமயமாய் இருக்கலாம். எங்கும் இருளும் நிசப்தமுமே குடிகொண்டிருந்தன. பகல் முழுதும் கோகிலாம்பாளும் அவளைத் தேடிச்சென்ற பூஞ்சோலையம்மாளும் திரும்பி வராமையால் ஏற்பட்ட கவலையினாலும், சஞ்சலத்தினாலும், அதன் பிறகு சொந்த ஜனங்களை அழைத்து வரப் பல தெருக்களுக்கும் ஓடிப்போய்த் திரும்பி வந்த அலுப்பினாலும், பின்னர் சொந்த ஜனங்களுக்கெதிரில் வெளியான விபரீதச் செய்திகளைக் கேட்டதனால் ஏற்பட்ட கலவரத்தினாலும், தங்கள் எஜமானிமார்களுக்கு அன்றைய தினம் உண்டான மான பங்கத்தை உணர்ந்ததனால் ஏற்பட்ட அவமானத்தினாலும் வேலைக்காரர்கள் எல்லோரும் மிகுந்த கலக்கமும் விசனமும் தளர்ச்சியும் அடைந்து சோர்ந்து போய்த் தங்களது இராப் போஜனத்தைக்கூட நினையாமல் மறைவான இடங்களில் படுத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
சில இடங்கள் இருளடைந்திருந்தன. அந்த நிலைமையில் நமது கோகிலாம்பாள் தனது விடுதியைவிட்டு வெளிப்பட்டு, சந்தடி செய்யாமல் மெல்ல மெல்ல நடந்து பல கூடங்களையும் தாழ்வாரங்களையும் கடந்து சென்று பூஞ்சோலைக்குள் நுழையலானாள். தான் செல்வதை எவரேனும் காண்கிறார்களோவென்ற அச்சத்தினால், அந்த மடக்கொடி தயங்கித் தயங்கி நின்று திரும்பித் திரும்பி நாற்புறங்களையும் பார்த்த வண்ணம் சித்தப் பிரமைகொண்டவள் போன்ற தோற்றத்தோடு எதிரிலிருந்த தென்னஞ் சோலைக்குள் புகுந்து அப்பால் சென்றாள். அவளது தேகம் வெளிப் பார்வைக்கு அயர்ந்து செயலற்று காற்றில் பறக்கும் சருகுபோலச் சீவனற்றுத் தோன்றியதாயினும், அவளது மனத்தில் அகோரமான வலிய மல்ல யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
தோட்டத்தில் சிறிது தூரம் நடந்த சமயத்தில் அவளது கண்கள் தாமாகவே பின் பக்கம் திரும்பித் திரும்பி ஆசையோடு தங்கள் கட்டிடத்தைப் பார்த்தன. அவள் “ஐயோ! நான் பிறந்து வளர்ந்து ஓடி விளையாடி இந்தப் பதினாறு வருஷ காலம் இருந்து வந்த ரமணீயமான இந்தப் பங்களாவை நான் பார்ப்பது இதுவே கடைசி முறையல்லவா! இனி மறுபடி நான் இந்த வைபவங்களையெல்லாம் காணப்போகிறேனோ!” என்று, தனக்குத் தானே எண்ணமிட்டுக் கண்ணீர் விடுத்து நைந்திளகி உருகிய வண்ணம் மேலும் நடந்தாள். நடக்கவே, அவளது தாயான பூஞ்சோலையம்மாள் தனது சுந்தரமான இனிய வதனத்தோடு எதிரே வந்து நின்று, “கோகிலா! கண்ணூ! நான் உன்னைவிட்டுப் பிரிந்து ஒரு நிமிஷமும் உயிர் வாழ்ந்திருக்கச் சகியேன். அம்மா! நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே! நீயும், நானும் இறந்துபோய்விட்டால், ஒன்றையும் அறியாத பேதையான நம்முடைய செளந்தரவல்லி அநாதரவாக இருந்து தவிக்க நேரும்.
அந்தப் பாவம் நம்மைத்தான் சேரும். வேண்டாம் என் தங்கமே! வீட்டுக்கு வந்து விடு” என்று கூறித் தனது மோவாயைப் பிடித்துக்கொண்டு நயந்து நிரம்பவும் வேண்டிக்கொண்டதுபோல, மானசீகமான ஒரு தோற்றம் அந்த மடவன்னத்திற்கு ஏற்பட்டது. உண்மையிலேயே தனது தாய் அங்கே வந்திருக்கிறாளோ என்று நினைத்து அஞ்சி நடுங்கிய வண்ணம் அவள் திரும்பித் திரும்பி நாற்புறங்களிலும் உற்று நோக்கி, அது வெறும் பிரமையேயன்றி உண்மையானதல்லவென்று தீர்மானித்துக்கொண்டாள். ஆயினும் பூஞ்சோலையம்மாளது கனிந்த வசீகரமான முகம் கோகிலாம்பாளின் அகக்கண்ணைவிட்டு அகலாமல் எதிரில் தோன்றிக்கொண்டே இருந்தமையால், கோகிலாம்பாளது மன இளக்கமும் கலவரமும் அதிகரித்துப் போயின.
அவள், “ஐயோ! நான் என் அறையைவிட்டுப் புறப்பட்டு வந்தபோது, அப்படியே அம்மாளுடைய படுக்கையறைக்குப் போய், அவர்களுடைய முகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டு வராமல் போனேனே! எப்போதும் ஒரே மாதிரியான வாஞ்சையோடு குழந்தை குழந்தை என்று அல்லும் பகலும் அநவரதமும் மாறாத பிரியத்தோடு கூப்பிட்டு என்னை உயிருக்குயிராய் மதித்து வரும் என் ஆருயிர்த் தாயின் இன்பகரமான வடிவத்தை இந்தக் கண்கள் இனி காணப்போகின்றனவா! அவர்களைக் காண்பதனால், என் மனம் அடையும் இன்பத்தை இனி நான் அநுபவிக்கப் போகிறேனா?
நான் இப்போதாவது திரும்பிப் போய் அவர்களுடைய முகத்தைப் பார்த்துவிட்டு வரலாமென்றால், அப்படிச் செய்தால், அதனால் என் மன உறுதி தளர்வடைந்து போய்விடுமோ என்ற நினைவு உண்டாகிறது. அல்லது, அம்மாளாவது மற்றவராவது விழித்துக்கொண்டிருந்தால், அவர்களுக்கு நான் சமாதானம் சொல்ல நேருமோ அல்லது என்னுடைய எண்ணம் நிறைவேறாமல் அவர்கள் தடுத்து விடுவார்களோ என்னவோ! ஐயோ! என் தங்கை செளந்தரவல்லியைக்கூட நான் பார்க்காமல் வந்துவிட்டேனே! ஆ! என்ன காலம் வந்து விட்டது! என்ன மானபங்கம் ஏற்பட்டு விட்டது! உயிருக்குயிரான மனிதர்களைவிட்டு ஒரே விரக்தியும் மனவுறுதியும்கொண்டு உயிரைவிட வேண்டிய மகா கஷ்டமான நிலைமை ஏற்பட்டு விட்டதே!” என்று எண்ணமிட்டு தனக்குத்தானே ஆட்சேபணை சமாதானங்கள் செய்துகொண்டு தென்னந் தோப்பைக் கடந்து கமுகு மரங்களும் பூஞ்செடிகளும் அடர்ந்திருந்த பாகத்திற்குள் நுழைந்து சிறிது தூரத்திற்கு அப்பாலிருந்த பெரிய கிணற்றை நோக்கி நடந்தாள்.
அந்த இடத்தை அடுத்தாற்போல இருந்த மணல் நிறைந்த வாவியின் கரையிலேதான் முன்னொரு நாள் கண்ணபிரானுடன் அந்த அணங்கும் தனித்திருந்து சம்பாஷித்தது. ஆதலால், அந்த நினைவு மின்னல் மின்னுவதுபோல அவளது மனத்தில் விரைவாகத் தோன்றியது. தோன்றவே, “ஐயோ! என் பிராணகாந்தருக்கும் எனக்கும் ஏற்பட்ட சம்பந்தம் கடைசியில் கிஞ்சித் போகமாக அல்லவா முடிந்து போய்விட்டது. அவருக்கும் எனக்கும் ஏதாவது சம்பந்தம் ஏற்பட்டால், அதற்குமுன் அபசகுனமாக ஏதேனும் கெடுதல் நேர்ந்துகொண்டே வந்தது.
ஆதியிலிருந்து என் மனத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. அதன் கருத்து இப்போதுதான் தெளிவாக விளங்குகிறது. நான் இப்படி அற்பாயிசாய் மாண்டு போய்விடுவேன் என்பதையும், அவரை நான் கட்டிக்கொள்ள வேண்டுமென்றும் ஏற்பாடு ஒருநாளும் நிறைவேறப் போகிறதில்லை என்பதையும் ருசிப்பிக்கும் அறிகுறிகளே அவைகள் என்பது இப்போது நன்றாய்த் தெரிகிறது! முதல் முதலில் நானும் என் தங்கையும் கடற்கரை ரஸ்தாவில் வந்துகொண்டிருந்த காலத்தில், அவரது காற்று வாடை எங்கள் வண்டியில் வீசியதுதான் தாமதம். உடனே வண்டிக்கும், குதிரைக்கும், எங்களுக்கும் பெருத்த பிராணாபாயம் வந்து நேரிட்டுவிட்டது.
பிறகு நான் இந்த இடத்தில் வந்து தனியாக உட்கார்ந்து ஊஞ்சலாடிக் கொண்டிருக்கையில் இங்கே அவர் வர, அவரது காற்று வாடை வீசியபடியால், நாகப் பாம்பினால் எனக்கு அபாயம் நேரத்தக்க மகா பயங்கரமான நிலைமை ஏற்பட்டுப் போயிற்று. அது மட்டுமா? முதன் முதலாக அவருடைய உடம்பு என்மீது பட்டதுதான் தாமதம் என் தங்கை திடீரென்று வந்து சேர்ந்தாள், என் கற்பை நான் அறவே இழந்துவிட்டேன் என்று அவள் தப்பான எண்ணங்கொண்டு என்னைத் தூற்றும்படியான நிலைமை ஏற்பட்டது. பிறகு சகல ஜனங்களுக்கும் எதிரில் மந்திரச் சடங்குகள் மூலமாய் என்னை அவருக்கு உரியவள் ஆக்க நிச்சயதார்த்தம் நடந்த காலத்தில், மகா விபரீதமான சம்பவங்கள் நேர்ந்து முதலில் அவரையும், பிறகு அவரது தாயையும் பிரித்துக்கொண்டு போய்விட்டன.
அதுவும்போதாதென்று, நான் அவருடைய கடிதத்தைக்கொண்டு அவரைப் பார்க்கப் போனதிலிருந்து எத்தனை தீமைகளும், என்றைக்கும் அழியாத மானக்கேடும், முடிவில் என் தலைக்குச் சீட்டும் வந்து நேரிட்டு விட்டன. நடுவழியிலேயே போலீஸ்காரன் வழியை மறிந்து முருகேசனை இழுத்துக்கொண்டு போய் விட்டான். பிறகு நான் போலீஸ் இன்ஸ்பெக்டருடைய வீட்டில் மாட்டிக்கொண்டேன். அங்கிருந்து தந்திரமாக நான் தப்பித்து வெளியில் போனால், என்னை அழைத்துப் போன காசாரி மினியனுக்கு தேக அசெளக்கியமும் புத்தி மாறாட்டமும் உண்டாகிவிட்டன. அதன் பயனாக, வண்டி தெற்கே வெகுதூரம் போக, அவ்விடத்தில் நான் சிப்பாயிகளிடம் அகப்பட்டுக்கொள்ள நேர்ந்துவிட்டது. அவையெல்லாவற்றிலும் சற்று நேரத்திற்குமுன் சகலமான சொந்த ஜனங்களுக்கு முன்பு எனக்கு ஏற்பட்ட மானபங்கம் என் உயிரை வாங்கித் தக்கதாகிவிட்டது. அன்றைய தினமாவது என் முகம் அவரது முகத்தில் படும்படி நான் விட்டிருந்ததான சிறிய தவறுக்கு நான் இடங் கொடுத்து விட்டேன். கண்டிப்பாகப் பார்த்தால் அப்போதே நான் என் கற்பை இழந்தவளாகி விட்டேன்.
அது நல்ல வேளையாக ஜனங்கள் வரையில் எட்டாமல் போய்விட்டது. இப்போது, நான் அந்த இன்ஸ்பெக்டர் விஷயத்தில் அணுவளவு கூடத் தவறான வழிக்கு இடங்கொடாமல் முற்றிலும் பரிசுத்தமாகவே திரும்பி வந்திருந்தாலும், ஜனங்களுடைய மனத்தில், நான் அடியோடு கெட்டுப் போய்விட்டேன் என்ற அபிப்பிராயம் அல்லவா ஏற்பட்டுவிட்டது. படிப்படியாக அபாயங்கள் பெருகி முடிவில் என் உயிருக்கே கால பாசம் வந்து சேரும்படி செய்துவிட்டனவல்லவா!
ஆழ்ந்து யோசிக்க யோசிக்க, இதற்கு முன் நான்கொண்டிருந்த எண்ணம் தவறானதெனத் தெரிகிறஹ்டு. அவரையும் என்னையும் சேர்த்து வைக்கவே, அபாயங்கள் எல்லாம் நேர்ந்தனவென்றல்லவா இதற்குமுன் நான் எண்ணி அவைகளைப் பற்றி வருந்தாமல் சந்தோஷமடைந்துகொண்டிருந்தேன். இப்போது பார்த்தால் எல்லாம் வேறுவிதமான அர்த்தத்தைத் தருகிறது. ரோஜா மல்லிகை முதலிய மலர்கள் புஷ்பிக்கும் சமயத்தில் புழுக்கள் சிலவற்றில் புகுந்து, அவற்றை நாசமாக்கிச் சீர்குலைந்து அடியோடு அழித்து விடுவதுபோல, என்னுடைய கற்பையும் சிறிதளவு களங்கப்படுத்தி, எனக்கும், என் குடும்பத்தாருக்கும் என்றும் விலகாத மான ஹானியையும் மதிப்புக் குறைவையும் உண்டாக்கி அடியோடு என் உயிரை வாங்குவதற்கு அவருடைய காற்றூ வாடையே காலகோடி விஷமாக ஏற்பட்டது போலிருக்கிறது.
குபேர சம்பத்தையும் அபரிமிதமான போக பாக்கியங்களையும் துறந்து நான் என் உயிரைவிட வேண்டியிருக்கிறதே என்பதைப் பற்றி நான் கொஞ்சமும் விசனப்படவில்லையானாலும், நான் என் கற்பை இழந்துவிட்டேன் என்ற தீராக் களங்கத்தையும், விபரீதமான அபவாதத்தையும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் உண்டாக்கி வைத்துவிட்டுப் போகிறேனே என்பதுதான் என்னால் தாங்க முடியாத துயர மலையாக இருந்து இப்போது என் உயிரில் பெரும் பாகத்தையும் குடித்து விட்டது. நான் செய்த பிழைக்கு பிராயச்சித்தமாக நான் என்னுடைய ஜீவ தசை முடிய அடையக்கூடிய இம்மைச் சுகம் யாவற்றையும் இழந்து, ஈசனுடைய பொன்னடியில் என்னையே நான் பலியாகக் கொடுத்து விடுகிறேன்.
அப்போதாவது, கடவுள் என் களங்கத்தை விலக்கி, நான் கன்னி கழியாத பதிவிரதையாகவே இறந்தேன் என்பதை எங்கள் சொந்த ஜனங்கள் உணர்ந்து திருப்தி அடையும்படி செய்தருளுவார் என்பதே என் உறுதியான நம்பிக்கை இதோ கிணறு வந்துவிட்டது. அதற்குள் இருக்கும் தண்ணீர் அசைவது வாவாவென்று என்னை அழைப்பதுபோலவே இருக்கிறது. மளமளவென்று போய் விழுந்து விடுகிறேன். இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் உடனுக்குடன் சரேலென்று நிறைவேற்றிவிடவேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது இடையூறு நேர்ந்துவிடும். அல்லது என் மன உறுதியில் தளர்வு ஏற்பட்டாலும் ஏற்பட்டுவிடும். நான் வெற்றுடம்போடு விழுந்தால், என் உடம்பு உள்ளே ஆழ்ந்து போகாமல் மேலே மிதக்கும், மரணாவஸ்தைக் காலத்தில் கைகள் ஒருவேளை தாமாகவே பக்கத்திலிருக்கும் படியைப் பிடித்துக்கொள்ளும்.
அந்த இடையூறுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் செய்வதைத் திருந்தச் செய்துவிட வேண்டும். ஆகையால், இதோ கிடக்கும் கருங் கல்லை எடுத்து மடியில் இறுகக் கட்டிக்கொண்டு உள்ளே விழுந்துவிடுகிறேன்” என்று கோகிலாம்பாள் தீர்மானித்துக்கொண்டவளாய் எதிரில் கிடந்த கருங்கல்லை எடுத்து மடியில் வைத்துத் தனது முன்தானையைத் தன் உடம்பில் இறுகச் சுற்றி முடிந்துகொண்டு கிணற்றின் கைபிடிச் சுவரின்மீது ஏறி நின்று, ஓரங்களில் நீண்டிருந்த படிகளில் தனது உடம்பு படாதிருக்குமாறு கிணற்றின் நடுப்பாகத்தைப் பார்த்துப் பொத்தென்று குதித்துவிட்டாள்.
- தொடரும்…