அத்தியாயம் 1

91.71k படித்தவர்கள்
49 கருத்துகள்

திகாலை நான்கு மணி. 

சென்னையில் இருக்கும் மொத்த பறவைகளும் கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் மீது பறப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது.

படபடவென சிறகடித்து மேலும் கீழுமாய் அலறிப் பறக்கும் அவ்வளவு பறவைகளை, இதுவரை இப்படி ஒரு காட்சியைக் கண்டதில்லை என்பதுபோல் அந்த அதிகாலையில் வெளியே வரும் அன்றாடங்களான, பேப்பர் பண்டில்களைப் பிரித்து வாகனங்களில் ஏற்றிச் செல்லும் வியாபாரிகள், பால் லாரியின் பக்கவாட்டில் நிற்கும் பூத்காரர்கள், சுகர் வந்தவர்கள், சுகர் வரக் கூடாது என்று நினைப்பவர்கள், ஒல்லியாக நினைப்பவர்கள், ஒல்லியாக இருப்பவர்கள் என நாக்குத்தள்ள நடைப்பயிற்சி மேற்கொள்ளும் ஷூவாசிகள் அத்தனை பேரும் மொத்தமாய் மேலே, வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

எல்லோர் முகத்திலும் கலவரம். இவ்வளவு பறவைகள் எங்கிருந்து இப்படி வந்தன, ஏன் இப்படி சுற்றிச் சுழல்கின்றன, என்ன அபாயம் நடக்க இருக்கிறது என்ற கேள்விகள் ஒவ்வொருவர் பார்வையிலும்.

மகன் டி-ஷர்ட்டை மாட்டிக்கொண்டு வந்திருந்த அங்கிள் மெல்ல ஆரம்பித்தார்.

“சுனாமி வந்தன்னிக்கு இப்பிடித்தான் சார். அப்போ நாங்க ட்ரிப்பில்லிக்கேன்ல இருந்தோம். ஒரே பறவைங்க சவுண்டு. கொஞ்ச நேரத்துல சுனாமி.”

“நெட்ல போட்டுருக்கான் சார். நாய், பறவை இதுங்களுக்கு எல்லாம் நேட்சுரல் கெலாமிட்டீஸ மோப்பம் பிடிக்கிற பவர் உண்டுன்னு. இப்போ டிசம்பர் மாசம்கூட இல்லையே சார். சென்னைக்குஇன்னும் என்ன எழவு பாக்கி இருக்குன்னு தெரியலையே?” 

அந்தக் கூட்டத்தை மெல்ல பயம் கவ்வியது. அதில் ஓரிருவர் தன் வீட்டிற்குத் தொலைபேசி, வெளியில் வந்து மேலே வானத்தைப் பார்க்கச் சொல்லிக்கொண்டிருந்தனர். 

கொஞ்சம் கொஞ்சமாய் இருள் பிரியத் தொடங்கியது.

டீக்கடை அடுப்பு பற்ற வைக்கப்பட, சாமிப் பாடல்கள் காற்றில் கலக்கத் தொடங்கியதும் ஓரளவு சகஜமானதுபோல் இருந்தது, கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை.

பறவைகளின் வட்டம் இப்போது சற்று குறைந்து சிதறியதுபோல் ஆனது. நேர்க்கோடாக ஒரு பறவைக்கூட்டம் பறந்தது. வில்போல் ஒரு கூட்டம் இடவலமாகக் கடந்தது.

இரவெல்லாம் வண்டி ஓட்டிய களைப்பில் காரை ஓரத்தில் நிறுத்தி இருக்கையைப் பின்னோக்கித் தளர்த்தித் தூங்கிக்கொண்டிருந்த கால்டாக்ஸி ஓட்டுநர் சிட்டிபாபு மெல்ல இமைகளைப் பிரித்தான். கண்கள் பொங்கிச் சிவந்து இருந்தன. சீட்டுக்கடியில் வைத்திருந்த இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு இறங்கியவன், கொஞ்சம் கொஞ்சமாய் நடந்து, ரேஸ்கோர்ஸின் பார்க்கிங் உள்ளே ஓர் ஓரத்தை அடைந்து கண்களை நோண்டி, முகத்தைக் கழுவிக்கொண்டே சிறுநீரை எங்கு கழிக்கலாம் என நோட்டம் விட்டவன் ஒரு நொடி திகைத்து நின்றான். தலையைப் பரபரவென சொறிந்து கொண்டான். மீண்டும் தண்ணீரைக் கொண்டு முகத்தில் அடித்துக் கொண்டான். கண்களை அகல விரித்தான். 

இருள் பிரிந்து முற்றாக விடிந்து கொண்டிருந்தது. தன் ஆட்காட்டி விரலையும் கட்டைவிரலையும் கொண்டு கண்ணின் இமையைப் பிரித்து இன்னும் உற்று நோக்கிக் கொண்டே அருகில் போனான். 

செடிகளை விலக்கி எட்டிப் பார்த்தவன், “அய்ய்ய்யோ ஓஓஓஓஒ” என்று கத்தினான். அவனால் நம்பவே முடியவில்லை. அந்தச் செடியின் பின்பக்க இலைகள் முழுதும் ரத்தம் தோய்ந்து செந்நிறத்தில் காய்ந்தும் காயாமலும் அடர்த்தியாய் ஆடின.

கைகள் பின்பக்கமாகவும் ஒரு காலை மடக்கியும் இன்னொரு கால் என்ன ஆனதோ என்று தெரியாத ஒரு நிலையிலும் பி.வி.சி. வயர்களால், சதை பிய்த்துத் தெறிக்கும் அளவு இறுக்கமாகக் கட்டப்பட்டு, வெட்டுண்டு கிடந்த உடல், பார்க்கவே பீதியைக் கிளப்பியது. ஆனாலும், சிட்டிபாபுவை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தது. இல்லை, இருக்கவே இருக்காது என்பதுபோல் மீண்டும் மீண்டும் பார்த்தான். கத்திக்கொண்டே பார்த்தான். ஆம், அங்கு அப்படி சிதைந்து, வெட்டுண்டு கிடப்பது, மடமடவென வளர்ந்து வரும், ‘ஹேப்பி குழுமத்தின்’ நிறுவனர், இளம் தொழிலதிபர் கார்த்திக் அண்ணாமலை. எப்போதும் ஏதேனும் ஒரு பரபரப்புச் செய்தியில் இருக்கும் கே.ஏ.யின் சமீபத்திய பரபரப்பு, திரைப்படத்தில் நடிப்பது என்பதாக இருந்தது. 

சிட்டிபாபுவின் அலறல் கொஞ்சம் கொஞ்சமாக ரேஸ்கோர்ஸ் சுற்றுச்சுவர், கிண்டி ரயில் நிலையம் என வட்ட வடிவில் பெரிதாகி, தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவத் தொடங்கியது. 

காலை ஏழு மணியின் ரம்மியத்தைத் தொலைத்து, கடுகடுவென நின்றிருந்தது ரேஸ்கோர்ஸ் வளாகம்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

எங்கு திரும்பினாலும் மீடியா வேன்கள், ஆண்கள், பெண்கள். 

போலீஸ் உள்ளே நுழைந்து எல்லோரையும் வெளியேற்றி அந்த இடத்தையும் சூழ்நிலையையும் தன் கட்டுக்குக்குள் கொண்டு செல்லத் தொடங்கிய நேரத்தில் ரகுவின் ஜீப் அரைவட்டம் அடித்து நின்றது.

ரகு தன் பரந்த மார்பை அசைத்து வாஸிம் அக்ரம் போலான தன் அசையும் நடையில் கார்த்திக் அண்ணாமலையின் சடலத்தை நெருங்கினான். ரகுவின் உயரம் அவனை நான்கே அடிகளில் அங்கு கொண்டு போய் நிறுத்தியது. பின்னாலேயே ஓட்டமும் நடையுமாய் ரகுவிற்கு ஈடுகொடுத்து அருகில் நின்றான் ராபர்ட். 

ரகுவின் பார்வை அங்குலம் அங்குலமாய் நகர்ந்து சடலத்தின் எலக்டிரிக்கல் வயர் கட்டுகளில் நின்றது. 

“ப்ரூட்டல்.”

ராபர்ட் ‘ஆம்’ என்பதுபோல் தலையாட்ட, ரகு தலையைக் கோதிவிடும் அழகில் சொறிந்து கொண்டான்.

மீடியாக்கள் மைக்கை ஆட்டிக்கொண்டே தங்களுக்குப் பின்னர் ரேஸ்கோர்ஸ் தெரியும் வண்ணம் கோணம் அமைத்து,

“ஏ.ஸி.பி. ரகு சம்பவ இடத்திற்கு வருகை தந்த காட்சியைப் பார்க்கிறோம். இந்த பரபரப்பான சூழலை உங்களுக்கு முதன்முதலாக நேரடியாக வழங்குவது நம்...” இத்தியாதி இத்தியாதிகள்...

“என்ன ராபர்ட், இன்னும் ஒரு ரெண்டு வாரத்துக்கு நியூஸ் ஃபுல்லா இந்தப் படம்தான் ஓடுமா?”

வராத சிரிப்பை வரவழைத்து கேட்டுக்கொண்டே அந்த இடத்தைச் சுற்றிலும் நடக்கத் தொடங்கினான். ராபர்ட் தொடர்ந்தான்.

“மோட்டிவ், க்ளூ ஏதாவது? இஸ் எனிதிங் குக்கிங்?”

தன் முன் அரைவட்டமாய் நின்றிருந்த காக்கிகளைக் கேட்டான்.

இல்லை என்பதை விதவித பாவனைகளோடு சைகையால் உணர்த்தினார்கள்.

“So, கார்த்திக் அண்ணாமலை, தி பேமஸ் எங் எனர்ஜிட்டிக் பிஸினஸ் மேன் இஸ் நோ மோர்.”

சொல்லிக்கொண்டே ராபர்ட்டை நோக்கி தலையை ஆட்டிவிட்டு ஜீப்பில் ஏறிப் போனான் ரகு.

அந்தத் தலையாட்டலுக்கான அத்தனை அர்த்தங்களையும் அறிந்த ராபர்ட், தேவையான எல்லா விவரங்களையும் சேகரிக்கும் பொருட்டு, மீண்டும் சூழலுக்குள் நுழைந்தான். 

***

மதியம் 2 மணி, அஸிஸ்டெண்ட் கமிஷனர் அலுவலகம் எவ்வித பரபரப்பும் இன்றி அமைதியாக இருந்தது. 

ரகுவிற்கு எதிரே ராபர்ட் அமர்ந்திருந்தான். 

“சார், இன்னும் எக்ஸாட் மோட்டிவ் எதுவும் தெரியல. பட், நிறைய எதிரிங்க கே.ஏ.வுக்கு. மேக்ஸிமம் ரெண்டு நாள்ல ஒடச்சுரலாம் சார்.”

கொட்டாவியை அடக்க முற்பட்டு தோற்ற ரகு, கொட்டாவியின் ஊடாகச் சொன்னான்.

“நாளைக்கே முடிஞ்சுரும். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தா பாதி க்ளியர் ஆகிரும். வீட்ல என்ன ரியாக்‌ஷன்?”

“மூணு மாசத்துக்கு முன்னாடிதான் கல்யாணம் ஆச்சு. தமிழ்நாட்டோட முக்கியமான கல்யாணம்னு பேசப்பட்ட ஆடம்பரமான மேரேஜ். வீட்ல இன்னும் அதிர்ச்சிலருந்து மீளல. இன்ஃபேக்ட் ஒரு வார்த்தைகூட யாரும் பேசல, பேச முடியல.”

“ம்ம், நாளைக்கு அவங்க வீட்ல இருக்குற எல்லாரையும் நான் பார்க்கனும், அதுக்கு முன்னாடி எல்லா ரிப்போர்ட்ஸ்சும்.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“டன் சார்.”

“ராபர்ட், டோர் க்ளோஸ் பண்ணுங்க.”

ராபர்ட் யோசனையாய் எழுந்து சென்று ரகுவின் அறைக் கதவை மூடிவிட்டு வந்ததும்,

“மச்சி, நைட்டு என்ன ப்ளான்ரா? எப்பப் பாரு எவனாவது இப்பிடி பஞ்சாயத்தக் கூட்டுறானுங்க. நல்லா வந்தம்டா இந்த டிப்பார்ட்மெண்ட்டுக்கு.”

ராபர்ட் சிரிக்கத் தொடங்கினான்.

“ஏன்டா சொல்ல மாட்ட? காலேஜ்ல நான் உண்டு, பிஸிக்ஸ் டிப்பார்ட்மெண்ட் ப்ரியா உண்டுன்னு ஜாலியா சுத்திக்கிட்டு இருந்தேன். விட்டியா? ஐ.பி.எஸ். ஆவோம், ஆட்டுக்குட்டி ஆவோம்னு என்னையும் சேர்த்து ராத்திரி பகல்னு ப்ரிப்பேர் பண்ணவிட்டு, நீ ஏ.ஸி.பி. நான் உனக்குக் கீழன்னு இந்தா இப்பிடி ஒவ்வொரு கேஸா நாய் பாடு.”

“எனக்கும் போர் அடிக்க ஆரம்பிச்சிருச்சுடா. ஒன்னு பண்ணுவோம், இந்த கேஸ க்ளோஸ் பண்ணிட்டு ஒரு மாசம் குற்றாலம், கொடைக்கானல்னு ஏறக்கட்டுவோம். பசங்களத் தேத்து.”

“நெஜமாவா சொல்ற ரகு? பசங்க ரெடியா இருக்காங்க. எப்படா ஃபேமிலிய விட்டு வெளிய ஓடிவருவோம்னு அவனவனன் துடிக்கிறான். நம்மதான் இன்னும் கல்யாணம் காட்சின்னு இல்லாம...”

“ஆரம்பிச்சுட்டியா பொலம்ப. விடு பிஸிக்ஸ் ப்ரியாவ இந்த ஒரு மாசத்துல தேடி ஒனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். ஓக்கேயா?”

ராபர்ட் தன் மொபைலில் எதையோ எடுத்து அவன் முன் நீட்டினான்.

இது போன வாரம் ஃபேஸ்புக்ல அவ அப்லோட் பண்ணது.

ஒரு குண்டுப் பெண் தன் கணவன் மற்றும் குழந்தையோடு ஏதோ ஒரு வட இந்திய மலைவாசலில் குளுகுளுவென நின்றிருக்கும் புகைப்படம், 

உற்றுப் பார்த்த ரகு, “நல்ல வேளடா தப்பிச்ச. ப்ரியாவா இது? அவளக் கட்டி இருந்தா அவ நிழல்லயே நீ இருந்துக்கலாம் போல, அவ்ளோ குண்டாயிட்டா.”

ராபர்ட் சிரிக்க, ரகுவின் கண்கள் விரிய, “அந்த ஃபோட்டோவக் குடு.”

மொபைலைப் பிடுங்கி பெரிதுபடுத்தினான்.

அவர்களுக்குப் பின்னால் எங்கோ தள்ளி நின்றிருந்த உருவங்களைப் பெரிதாக்க, நடிகை ஸ்வேதாவின் தோளில் கை போட்டபடி நின்றிருந்தான், இன்று செத்துப்போன கார்த்திக் அண்ணாமலை.

- தொடரும்