சிறுகதை 1

61.06k படித்தவர்கள்
48 கருத்துகள்

சுடும் காடு

ப்படி ஆகுமென்று அவள் நினைக்கவில்லை. இவளுக்கு முதுகு காட்டிப் போகும் உருவங்களையேப் பார்த்துக்கொண்டிருந்தாள் கண்களில் நீர் தழும்ப.
“வருத்தப்படாத, தாயீ. எங்களுக்குப் பழகிப்போச்சு இதெல்லாம்”, தாத்தா ஒருவர் சமாதானப்படுத்தினார். “யம்மா... செல்லா... எங்கேருந்தோ இங்க வந்து ரெண்டு நாளுல எங்களுக்காகக் கண்ணீர் உடறயே தாயீ...”, கிழவி ஒருவர் அருகில் வந்து முகத்தை இரு கைகளாலும் வழித்தெடுத்துத் தடவினார். வழுவழுப்பான அவள் கன்னங்களில் சொறசொறப்பான கிழவியின் கைகள் படவும் தழும்பிக் கொண்டிருந்த கண்ணீர் வழிய ஆரம்பித்தது. நினைவு தெரிந்த நாளிலிருந்து உழைத்து உரமேறிக் காய்த்துப் போன கைகள். காட்டுக்குள் சுள்ளி பொறுக்கி, விறகு ஒடித்து, பழம் பறித்து, கிழங்கு தோண்டி, பச்சிலை கசக்கி...ஒவ்வொரு அணுவிலும் காடூறிய உயிர்கள் அவள் முன் நிற்பது.

நினைக்க, நினைக்கக் கோபத்திலும் ஆற்றாமையிலும் அடக்கமுடியாமல் விசும்பல் வெடித்தது அவளிடமிருந்து. சுற்றியிருந்த அந்த சனங்கள் அவளை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் தயங்கி நின்றார்கள். இருந்தவர்களில் இரண்டு மூன்று பேரைத் தவிர யாருக்கும் இன்னும் அவளிடம் பேசக்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

“சுனைனா...”

சற்றுத் தூரம் சென்றிருந்த அந்தக் குழுவிலிருந்து ஒரு குரல் இவளை சற்று ஓங்கி அழைத்தது.“மொகத்தத் தொடைச்சிட்டு போ, தாயீ. ஏற்கனவே உன்னைய கோவிச்சுக்கிட்டாங்க. எங்களுக்காக நீ இன்னும் கொஞ்சம் திட்டு வாங்க வேணாம்”, என்று அந்தக் கிழவி அவளை ஆசுவாசப்படுத்தினார்.துப்பட்டாவை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்த சுனைனா சட்டென்று கிழவியை இறுக அணைத்து விட்டு விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள் அவளை அழைத்த குரலை நோக்கி.மொழிபெயர்ப்பாளர் பணிக்கு ஒருவர் வேண்டும் மூன்று நாட்களுக்கு என்று அவள் இளங்கலை மூன்றாமாண்டு படிக்கும் சமூகவியல் துறையின் துறைத் தலைவர் அவளை அழைத்தபோது சந்தோஷமாக உற்சாகத்துடன் ஒத்துக்கொண்டாள்.

சுவீடன் நாட்டிலிருந்து வரும் ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினர்களுக்கும் அவர்கள் ஆய்வு நடத்தப்போகும் ஒரு குக்கிராமத்து மக்களுக்கும் மொழிப் பாலமாக இருக்க வேண்டும் மூன்று நாட்களுக்கு. அவர்கள் கேட்கும் கேள்வியை இவர்களிடம் சொல்லி இவர்கள் சொல்லும் பதிலை அவர்களிடம் மொழிபெயர்க்க வேண்டும். இரண்டு நாட்களாக அதைத் தான் செய்து கொண்டிருக்கிறாள். இரண்டு நாட்களாக அவளுக்கு இன்னொரு உலகம்
தெரியவந்துகொண்டிருக்கிறது.

பச்சமலை என்ற சிறு குன்றின் அடிவாரத்தில் அமைந்திருந்ததால் தங்கள் குக்கிராமத்திற்கும் அதன் பெயரையே வைத்துக் கொண்டார்கள் அந்த மக்கள். இவர்களின் மூதாதையர் அங்கு வந்து குடியேறிய காலத்தில் அடர்ந்த பசுங்காடு மூடிய குன்றாய் பச்சமலை இருந்ததாகவும், பின் வந்த காலங்களில் இவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மரங்கள் பல்வேறு தேவைகளுக்காக வெட்டப்பட்டு பச்சமலை வெறும் முட்செடிகளும் கற்பாறைகளும் மட்டும் மிச்சமிருக்கும் மொட்டை மலையாகிவிட்டதாகவும் அவர்களிடம் பேசும் போது தெரிந்துகொண்டாள். உச்சியில் மட்டும் உச்சிக் குடுமி போல் அடர் காடு கொஞ்சம் மிச்சமிருந்தது. அதை வெட்டிக் கீழே கொண்டுவருவதற்கு ஆகும் செலவு அதிலிருந்து கிடைக்கும் வருவாயை விட அதிகமானதால் அது பிழைத்திருப்பதாய் சொன்னார்கள்.

முதல் நாள் மூன்று வண்டிகளில் சுவீடன் குழுவினரும் சில உள்ளூர் அதிகாரிகளும் அவர்கள் முன் வந்திறங்கியதும் கிராமத்தவர்கள் அடித்துப் பிடித்து ஓடி வந்து நின்றார்கள். “இங்க பாருங்க, வெளிநாட்லருந்து வந்திருக்காங்க பச்சமலையைப் பார்க்கணும்னு. நல்லவிதமா பேசுங்க. அவங்ககிட்ட போயி அது இல்ல, இது இல்ல, சோறு போடு, ரோடு போடுன்னு பஞ்சப்பாட்டு பாடி மானத்த வாங்காதீங்க...என்ன?” என்று அதட்டலாக அதிகாரி ஒருவர் அறிமுகம் கொடுத்துவிட்டு இவளைக் கைகாட்டி, “இந்தப் பொண்ணு தான் நீங்க பேசறத அவங்ககிட்டயும் அவங்க பேசறத உங்ககிட்டயும் எடுத்துச் சொல்லும்”, என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொண்டார்.

அரசாங்க சார்பில்லாத மூன்றாம் நபர் தான் மொழிபெயர்ப்பாளராக வேண்டும் என்று சுவீடன் குழு உறுதியாக சொல்லிவிட்டதில் கடுப்பு அவருக்கு. ஏற்கனவே அவளிடம், “பாத்து சொல்லுமா”, என்று கேட்டுக்கொண்டிருந்தார். சுவீடன் குழுவில் ஏழு பேர் இருந்தார்கள். முதல் வேலையாக அவர்கள் பச்சமலை மீது ஏறிப் பார்க்கவேண்டும் என்றும் வழிகாட்டியாக சிலர் வேண்டும் என்றும் அவர்கள் கேட்க, இளைஞர்கள் நான்கு பேர் முன்னால் வந்தார்கள்.

கிளம்பிய குழுவுடன் இவளும் புறப்படும் போது, “ஏய் பூஞ்சு...அந்த அக்கா கூட தொணைக்கி நீ போடி”, என்று ஒரு கிழவியின் குரல் வந்து அடங்குவதற்குள் அவள் கையை ஏழு வயது சிறுமி ஒருத்தி இறுகப் பிடித்திருந்தாள். “ரொம்ப நன்றி, பாட்டி. நான் வந்து பேசறேன்”, என்று அவசரமாக, முன்னால் போன குழுவுடன் இணைந்துகொள்ள விரைந்தாள். நடந்துகொண்டே கேட்டாள், “அதென்ன பேரு பூஞ்சு? நீ என்ன பூஞ்சையாவா இருக்க? உருண்டை முகமும்
குண்டு கண்ணும் அரிசிப் பல்லும்… எவ்ளோ நல்லா இருக்கு உன்னைய பாக்கறதுக்கு...பொறந்தப்போ பூஞ்சையா இருந்தையா?” என்று அவள் சிரித்துக்கொண்டே கேட்க, அந்தக் குட்டிப்பெண் லேசாக வெட்கப்பட்டுக்கொண்டு சிரித்தாள்.

“ஐய...போங்கக்கா...வேணும்ன்னு கேலி பேசுறீங்க என்னய... நான் ஒண்ணும் அப்பிடியெல்லாம் நல்லா இல்ல”, என்று உதடுகள் சொன்னாலும் கண்கள் சந்தோஷத்தில் மின்னின. “பூஞ்சுன்னா நீங்க பூஞ்சைன்னா நினைச்சுட்டிங்க? எம்பேரு பூம்பிஞ்சு. எல்லாரும் கூப்ட்டு கூப்ட்டு அது பூஞ்சுன்னு
ஆயிடுச்சு”, என்றாள் பூம்பிஞ்சு. சட்டென்று நின்றுவிட்டாள் சுனைனா. எப்பேர்ப்பட்ட பெயர்! ‘பூம்பிஞ்சு!’ மனதிற்குள் இரண்டு முறை சொல்லிப்
பார்த்தாள். ‘பூம்பிஞ்சு - பிஞ்சிலும் பிஞ்சு...’ மண்டியிட்டு பூம்பிஞ்சை இறுக அணைத்துக்கொண்டாள். எழுந்து நின்று அவள் கையை இறுகப்பற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

அதற்குள் முன்னால் சென்ற குழு கால்வாசி மலை ஏறியிருந்தது. பூம்பிஞ்சு வாகு பார்த்து அவளை அழைத்துச் சென்றாள். எங்கே கால் வைக்க வேண்டும் எங்கே பிடிமானம் கெட்டி என்று பார்த்துப் பார்த்து அழைத்துச் சென்றாள். இவர்கள் போய் இணையும்போது வழிகாட்டி இளைஞர்கள் நான்கு பேரும் சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்தனர்.  அவர்களுடனேயே இவளும் நின்று கொண்டாள். நால்வர் முகங்களிலும் ஒரு இனம் புரியாத கலவரம் பரவியிருந்தது.
“இவங்கல்லாம் எதுக்கு வந்திருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று ஒரு இளைஞன் தயங்கித் தயங்கி இவளிடம் கேட்டான்.

“உங்களையெல்லாம் விட சின்னவ அண்ணா, நான். சுனைனான்னு பேர் சொல்லியே கூப்பிடுங்க”, என்றவள் அவர்கள் முகங்களில் சட்டென்று படர்ந்த அந்யோன்யத்தைக் கவனித்துக்கொண்டே, “எனக்கு இன்னமும் எதுவும் தெரியாதுண்ணா. வரச்சொன்னாங்க. வந்துட்டேன்”, என்றாள். “அக்கா, இது குமாரு, இது ராசு, இது பூபதி, இது சந்திரன்” என்று பூம்பிஞ்சு அறிமுகப்படுத்தி வைத்தாள். “ஏதோ மலையெல்லாம் அளக்கறாங்களே...எதுக்குமா?” என்று பூபதி கேட்டான். “தெரியலண்ணா. இருங்க, கொஞ்சம் கவனிச்சிட்டு சொல்லறேன்”, என்று தள்ளி நின்றிருந்த குழுவின் பேச்சைக் கவனமாகக் கேட்கத் தொடங்கினாள்.

முழுதாய் வாக்கியங்கள் எதுவும் கேட்கவில்லை. வார்த்தைகளைக் காற்று பறித்துக்கொண்டு போனது. காதில் விழுந்த ஒன்றிரண்டு வார்த்தைகளைக் கொண்டு வந்திருந்த குழுவின் நோக்கத்தை உணர முயன்றாள். “மலைய எதும் வெட்டி கிட்டிக் கொண்டுபோகப் போறாங்களோ? அதிகாரிங்கல்லாம் வந்திருக்காங்க?” என்றான் பூபதி, குழுவின் செய்கைகளால் கூடிக்கொண்டே போகும் அடிவயிற்றுப் பிசைதலை அடக்க முயன்றுகொண்டு.
“அப்பிடி எதுவும் தெரியலண்ணா. ஏதோ மரம் வளக்கறதைப் பத்தி தான் பேசற மாதிரி தெரியுது”, என்றாள் சுனைனா கிடைத்த வார்த்தைகளை வைத்துத் தகவலை யூகித்தபடி.

சட்டென்று எல்லோர் முகத்திலும் ஒரு நிம்மதி விரிந்தது. மிச்சமிருக்கும் அவர்கள் மொட்டை மலையையும் வெடி வைத்துத் தகர்த்து கல் குவாரி ஆக்கிவிடுவார்களோ என்று ஆழ் மனதில் உறுத்திய சந்தேகம் அவள் வார்த்தைகளைக் கேட்டு சின்னதொரு சந்தோஷமாக மாறி, கேட்ட தகவலின் பரிமாணங்கள் மனதில் விரிய, முகங்களில் புன்னகை அரும்பியது. இளைஞர்கள் நால்வரும் அவர்களுக்குள் உற்சாகத்துடன் பேசிக்கொண்டார்கள்.
அன்று சுனைனாவிற்கு அதிகம் வேலை இல்லை மலை மேல் இருந்த வரை. கீழே இறங்கிய பின்னர் எல்லோரையும் கூடச்சொல்லி, நாற்காலிகள் போட்டு சுவீடன் குழுவினரை அமரச்செய்து அதிகாரிகளும் சற்றுத் தள்ளி அமர்ந்துகொண்டனர்.

குழுவினரில் ஒருவர் அவளிடம் தாம் சொல்பவற்றை அவர்களிடம் மொழிபெயர்க்குமாறு வேண்டிக்கொள்ள, அன்று நடந்த உரையாடலின் சாராம்சம் பச்சமலை ‘சமுதாயக் காடு வளர்ப்பு’ திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் அதை செயல்படுத்தும் பொருட்டு களப் பார்வைக்காக அந்தக் குழு வந்திருப்பதும். காடு என்ற வார்த்தையைக் கேட்டதும் உற்சாகமான மக்கள் அவர்கள் கேட்ட தகவல்களைத் தடையின்றி அள்ளிக் கொடுத்தனர்.
இரண்டாம் நாளும் கிட்டத்தட்ட இதே நிகழ்வுகளே தொடர்ந்தன. ஆர்வத்துடன் பதில்கள் சொல்லிவந்த பச்சமலை மக்கள் குழுவினர் கேட்காமலேயே அங்கு என்னென்ன மரங்கள் நடலாம் என்ற பட்டியலையும் சொல்ல ஆரம்பிக்க, சட்டென்று இடைமறித்த அதிகாரி ஒருவர், “அதெல்லாம் தேவையில்லை. இங்க யூகலிப்டஸ் மரம் தான் நடப்போறாங்க.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

மலை முழுசும் யூகலிப்டஸ் காடு தான் வரப்போகுது”, என்றதும் மொத்த கிராமமும் உறைந்து போனது. அவர்கள் சுதாரித்து ஏதோ பேச முனைவதற்குள் குழுவினர்கள் கிளம்பிவிட்டார்கள். முகங்களில் விரிந்திருந்த மகிழ்ச்சி ‘யூகலிப்டஸ்’ என்ற ஒற்றை வார்த்தையில் கலவரமாக மாறியதன் அர்த்தம்
புரியாமல் நின்று பேச நேரமும் இல்லாமல் அவர்களுடனேயே போய் வண்டியில் ஏறினாள் சுனைனா.

மூன்றாம் நாள் வண்டியில் வராமல், வெகு சீக்கிரமே கிளம்பி டவுன் பஸ் பிடித்து நிறுத்தத்தில் இறங்கி, டவுன் பஸ் செல்லாத மீதி ஒன்றரை கிலோமீட்டரையும் நடந்து, பச்சமலை வந்து சேர்ந்தாள். “என்னம்மா கண்ணு...நீ மட்டும் இப்பிடி வேர்க்க விறுவிறுக்க நடந்து வர? என்னாச்சு, ஏதும் பிரச்சனையா?” என்று பதறிப் போய் கேட்ட ஊர் பெரிய கிழவியிடம், “அதெல்லாம் ஒண்ணும் இல்ல, பாட்டி. நேத்து நீங்கல்லாம் அவங்ககிட்ட ஏதோ சொல்ல வந்தீங்க. ஆனா அதுக்குள்ள அவங்கல்லாம் கிளம்பிட்டாங்க. இன்னைக்குத்தான் கடைசி நாள். அவங்களுக்கு முன்னால நான் வந்து உங்ககிட்ட விஷயத்தைக் கேட்டுக்கிட்டா அவங்க கூட போறப்போ அத எடுத்துச் சொல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்ல. அதான் சீக்கிரம் வந்தேன்”, என்றாள் ஊறி வடியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டே...

“அதுக்கா தாயீ இப்பிடி ஒத்தையில ஓடி வர?” என்று நெகிழ்ந்து போன பெரிய கிழவி, “ஒக்காரு தாயீ”, என்று ஒரு மர நிழலைக் காட்ட, இவள் வந்திருக்கும் செய்தி கேட்டு ஓடி வந்த பூம்பிஞ்சை இழுத்து மடியில் அமர வைத்துக்கொண்டு, “சொல்லுங்க பாட்டி”, என்றாள். கவிழ்ந்த மௌனத்தை அவளே கலைத்தாள். “நேத்து அவங்க யூகலிப்டஸ்ன்னு சொன்னதும் நீங்கல்லாம் அதிர்ச்சியாகி ஏதோ சொல்ல வந்தீங்க...”, என்று ஆரம்பித்துக் கொடுத்தாள். இதற்குள் மொத்த கிராமமும் இவளைச் சூழ்ந்திருந்தது.

“நெசமாவே அவங்க யூகலிப்டஸ் மரந்தான் நடப்போறாங்களா?” என்று யாரோ கேட்டார்கள்.

“அப்பிடித்தான் பேசிக்கறாங்க”, என்றாள்.

“ஏம்மா, இவங்களுக்கு வேற மரமே கெடைக்கலயா? காடு வளக்கணும்னா எங்ககிட்ட கேக்கறது...? தலமொறையா காட்டோட காடா வளந்து வர்றமே...”

“ஏன்? யூகலிப்டஸும் ஒரு மரம் தானே? காடா வச்சா நெறைய எண்ணெய் எடுக்கலாம்ல?” 

“ஹூம்... யூகலிப்டஸுன்னா உங்களுக்குத் தெரிஞ்சது எண்ணெய் மட்டுந்தான். அது எப்பேர்ப்பட்ட காடுகொல்லின்னு எங்களுக்குத்தான் தெரியும்”.

“காடுகொல்லியா? அதெப்பிடி? அதையும் காடா வளக்கணும்னு தான இவ்வளவு ஏற்பாடு செய்றாங்க?”

“ஏம்மா? பத்து மரத்த சேத்து நட்டு வச்சா காடாகிடுமா? காடுன்னா என்னான்னு தெரியுமா உங்கள மாதிரி நாட்டு சனத்துக்கு? மண்ணுக்கு மேல இருக்குற மரம் ஒரு பங்கு தான் தாயீ, காட்டுல. அந்த மரத்துக்கு அடில வளர்ற செடிங்க, மரத்துக்கு மேல படர்ற கொடிங்க, செடிக்கு அடில மொளக்கிற புல்லு, பூடு, மரத்துலயும் மண்ணுலயும் கண்ணுக்குத் தெரிஞ்சி, தெரியாம இருக்குற பூச்சி பொட்டுங்க, பறவைங்க, மிருகங்க, மண்ணுக்கு அடில படர்ற
வேருங்க, நெளியற புழுங்க, கருகுன இல, அழுகுன செத்தை, பூக்குற பூ, காய்க்குற பழம், மொளக்கிற இலை...அத்தனையும் சேந்ததுதான் காடு. நீங்க ஒத்த மரம் ஓராயிரத்த கொண்டாந்து நட்டு வச்சிட்டு காடு...காடுன்னா அது காடாயிடுமா? அதும் யூகலிப்டஸு மரத்தப் போயி...?” நீளப்பேசி நிறுத்தினார் பெரிய கிழவி.

வந்து விழுந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் உள்ளூர உண்டுபண்ணும் ரசாயன மாற்றத்தை உணராமலேயே கேட்டாள், “ஏன் பாட்டி, தெரியாமத்தான் கேட்கறேன்...யூகலிப்டஸ்...யூகலிப்டஸ்ன்னு அந்த மரத்த பத்தி ஒரு மட்டமாவே நீங்க பேசறதும் நினைக்கறதும் ஏன்னே எனக்குப் புரியலை. அதுவும் ஒரு மரம் தான, பாட்டி. அதுனால எவ்வளவு உபயோகம் இருக்கு? அப்புறம் ஏன் அதைப்பத்தி இப்பிடி பேசுறீங்க? அத ‘காடுகொல்லி’ன்னு வேற
சொல்றீங்க?”

“யம்மா, சுனய்யின்னா...நீ நாலு யூகலிப்டஸ் மரத்த சேத்தாப்புல பாத்துருக்கயா?” என்று கூட்டத்திலிருந்து யாரோ கேட்டார்கள்.

“இல்ல”.

“அதான்...அதப்பத்தி எதும் தெரியல ஒனக்கு. பொஸ்த்தத்துல படிச்சத வச்சிக் கேக்குற”.

“ஏ! செவ்வி...சும்மா இருக்கமாட்ட...அதுக்கிட்டப் போயி...நாலு மரத்தோட பேரு சொல்லச் சொன்னாக்கூட சொல்லத் தெரியாத பொண்ணு...ஆனா நமக்காக இவ்ளோ தூரம் வந்து கஷ்டப்படுது...உன் பேச்சையெல்லாம் அது கிட்டயா காட்டறது?” என்று கிழவர் ஒருவர் அதட்டவும் மற்ற சில குரல்களும் சேர்ந்து செவ்வியை அமைதியாக்கின. அதட்டிய கிழவரே தொடர்ந்தார்.

“மரங்கள்ல பல வகை இருக்குமா. அதுல யூகலிப்டஸ் மரம் மாதிரி இருக்கறது ஒரு வகை. படிச்சவுக அதோட வகைக்கு என்ன பேரு வச்சிருக்காங்களோ தெரியாது. ஆனா எங்க சனம் அதுக்கு வச்ச பேரு ‘காடுகொல்லி’. ஏன் தெரியுமா? காடுன்னா என்னான்னு கெழவி சொல்லுச்சுல்ல இப்ப...அது அத்தனையையும் இந்த ஒத்த மரம் கொன்னுடும். எப்பிடின்னு கேளு. இந்த மரத்தோட குணம் எப்பிடி தெரியுமா...எவன் செத்தாலும் நான் வாழணும்ன்னு
இருக்குற மனுசங்க மாதிரி...சுத்தி இருக்கற மரத்துக்கெல்லாம் ஒரு சொட்டுத் தண்ணி கிடைக்காம பூமில இருக்குற தண்ணி மொத்தத்தையும் தானே உறிஞ்சிக் குடிச்சிடும். இது இருக்குற இடத்துல வேற செடி, கொடி, மரம் எதும் முளைக்காது.

இது முளைக்க விடாது. அது மட்டுமா...? இதோட அடில வேற அடிச்செடி எதுவும் வளராது. இதச் சுத்தி இருக்கற நெலம் இதுல இருந்து விழுற இலை தவிர வேற எதுவும் இல்லாம வெறுந்தரையாத்தான் இருக்கும். இதோட இலையில எண்ணெய் பசை ஜாஸ்தி. அதனால தான் அதுல இருந்து அத்தனை விதமான எண்ணெய் எடுக்க முடியுது. ஆனா அதோட இன்னொரு பக்கம் தெரியுமா? ஒரு சின்னப் பொறி போதும் காட்டையே எரிச்சு சாம்பலாக்கி
சுடுகாடாக்கிடும். அதுமட்டும் இல்ல... லேசுல அதுல இருக்கற தண்ணி ஆவியாவாது. மரம், செடி, கொடில இருந்து தண்ணி ஆவியானாத்தான் காத்துல ஈரப்பதம் இருக்கும். படிச்சவங்க இத ஒத்துக்குவாங்களோ இல்லையோ...ஆனா நாங்க அனுபவப்பூர்வமா உணர்ற விஷயம் தாயீ இது...யூகலிப்டஸ் மரங்களுக்கு ஊட போனா காத்தே சுடும், கண்ணு.

அதுக செவசெவன்னு வளந்து வர்ற காலத்துக்குள்ள நெலத்தடி தண்ணியெல்லாம் குடிச்சு, சுத்து வட்டார மனுசனுக்கும் மாட்டுக்கும் மரத்துக்கும் வயலுக்கும் தண்ணியில்லாம எல்லாமே பொட்டல் காடாயிடும், ஆத்தா. யூகலிப்டஸ் நட்டா அது காடாவது, தாயீ...சாவுக்காடு தான் ஆவும்”.
கவிழ்ந்த மௌனத்தில் இலையின் சலசலப்புகள் மட்டும் இவளுக்கு மேலும் சேதி சொல்லின. தூரத்தில் வண்டிகள் வரும் ஓசை கேட்டது.
“எவன் எந்த கான்ட்ராட்டு எடுத்துருக்கானோ?” என்ற மெல்லிய குரல் ஒன்று அவள் தலைக்குள் இடித்திறங்கியது.

“என்னம்மா, சுனைனா...நேத்து எங்கிட்ட சொன்னபடி சீக்கிரமே வந்துட்டியா? பேசாம எங்க கூட வண்டிலயே வந்திருக்கலாம்ல?” என்றபடி வந்தார் மூத்த அதிகாரி.

“பரவால்ல, சார். அவங்ககிட்ட இவங்க சில விஷயங்கள் பேசணும்ன்னு சொன்னாங்க. கொஞ்சம் சீக்கிரம் வந்தா என்னன்னு கேட்டுவச்சிட்டு அவங்ககிட்ட சொல்லறத்துக்கு ஈஸியா இருக்கும்ன்னு தான் சீக்கிரம் வந்தேன்”, என்றாள்.

“என்ன...? என்ன விஷயமாம்? அதெல்லாம் ஒண்ணும் கேட்க வேண்டாம். எதுவா இருந்தாலும் அப்புறமா நாங்க வந்து விளக்கமா சொல்லுவோம்ல...அதுக்குள்ள என்ன?” என்று அவர் ஆத்திரப்பட, இந்த உரையாடலைக் கவனித்த சுவீடன் குழு உறுப்பினர் மற்றவர்களிடம் ஏதோ சொல்ல, ஏழு பேரும் இவர்களை நோக்கி வந்தனர்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“நீ...?” என்று ஒருவர் அவளைப் பார்த்துக் கேட்க, “சுனைனா”, என்று அவள் பதிலளித்தாள். 

“ஆம், சுனைனா. என்ன விஷயம்? எங்களிடம் நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?”

“நானல்ல. இவர்கள் சொல்ல விரும்புகிறார்கள்”. 

அதற்குள் அதிகாரி இடைமறித்து அவளிடம், “என்னத்தையாவது ஏடாகூடமா சொல்லிடாதம்மா”, என்றார். அதற்குள் இன்னொரு உறுப்பினர், “தயவுசெய்து அவளைப் பேச விடுங்கள். அவள் அவளுடைய வேலையைத்தான் செய்கிறாள்”, என்றார்.

“நன்றி, சார். இங்கே நீங்கள் எந்த வகையான காட்டை உருவாக்கப் போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள இவர்கள் விரும்புகிறார்கள்”. 

“யூகலிப்டஸ் காடு”. 

“இவர்களுக்கு அதில் சில ஆட்சேபனைகள் இருக்கின்றன, சார். யூகலிப்டஸ் மரம் காட்டிற்கு ஏற்ற மரம் இல்லை என்பது இவர்கள் கருத்து”. 

“முடிவு ஏற்கனவே தகுதியானவர்களால் எடுக்கப்பட்டுவிட்டது, மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின்”.

“ஆனால், சார், இவர்கள் தான் இந்த மண்ணின் மக்கள். அவர்களுக்கு இந்த நிலமும் இந்த தட்பவெட்பமும் நன்றாகத் தெரியும். அவர்கள் கூறுவதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டால் இந்தப் ப்ராஜெக்ட்டின் வெற்றிக்கு அது உதவுமே?” 

“எங்கள் நாட்டினர் தேவையான எல்லா ஆராய்ச்சிகளையும் முடித்துவிட்டார்கள். இரு நாட்டு அரசுகளும் அதை  உறுதி செய்தும் விட்டன. இது ஒரு சம்பிரதாயக் கள வருகை மட்டுமே. இப்போது போய் எந்தப் புதுத் தகவல்களையும் எடுத்துக்கொள்ள முடியாது”.

சுனைனாவிற்கு லேசாகக் கோபம் வரத் தொடங்கியது.

“இவை புதுத் தகவல்கள் அல்ல. இவைதான் உங்கள் ஆதாரத் தகவல்கள். இவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் நீங்கள் போட்டிருக்கும் திட்டங்களும் வகுத்திருக்கும் வரைவுகளும் எப்படி உங்கள் நோக்கங்களைப் பூர்த்தியடையச் செய்யும் என்று நினைக்கிறீர்கள்?”

சுனைனாவிடமிருந்து வரும் இந்த வார்த்தைகளை சுவீடன் குழுவினர் யாரும் எதிர்பார்க்கவில்லையாதலால் அவர்களிடமிருந்து பதில் வருவது சற்றுத் தாமதமானது. அதற்குள் இவள் பேசுவது கண்டு அதிர்ச்சியடைந்த மூத்த அதிகாரி, “ஏ சுனைனா! என்ன பேசற நீ? இதெல்லாம் யாரு உன்ன பேசச்சொன்னது? சும்மா இருக்கமாட்ட?” என்று அதட்ட, அதற்குள் சுதாரித்த குழுவின் மற்றொருவர், “எங்களுக்கு எங்கள் நோக்கங்களும் அவற்றை அடையும் வழிமுறையும் தெரியும். இவர்கள் சொல்வதை நாங்கள் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் சொல்வதை இவர்கள் செய்தால் போதும். உன் மொழிபெயர்ப்பு வேலையையும் நீ அதோடு நிறுத்திக்கொள்வது நலம்”, என்று சற்று காட்டமாகக் கூற, அந்த மூத்த அதிகாரி, “சுனைனா! வாய மூடு. இதுக்கு மேல எதுவும் பேசாத. இதப் பேசறதுக்குத்தான் நீ இங்க சீக்கிரம் வந்தயா?” என்று சீறிவிட்டு, முகம் திரும்பிச் செல்லும் சுவீடன் குழுவினரின் பின் அவசரமாகச் சென்றார். போகும் முன், “இப்பிடி

இருந்தா நீங்கல்லாம் எப்பிடி உருப்படுவீங்க? இப்ப நடந்தத வச்சு அவங்க இதை வேண்டாம்னு திரும்பிப் போனாங்க...”, தொக்கி நின்ற வாக்கியத்தின் அர்த்தம் வார்த்தைகளின் துணையில்லாமல் எல்லோருக்கும் புரியும் என்று தெரிந்து அவர்கள் பின் விரைந்தார். இப்படி ஆகுமென்று அவள் நினைக்கவில்லை. இவளுக்கு முதுகு காட்டிப் போகும் உருவங்களைப் பார்த்தாள் கண்களில் நீர் தழும்ப. ஆங்கிலத்தில் நடந்த உரையாடல் யாருக்கும் புரியவில்லையென்றாலும் அதிகாரி அவளைத் திட்டியதிலிருந்தும் அந்த உரையாடலின் தொனியிலிருந்தும் இவர்களுக்காகப் பரிந்து பேசி அவள் திட்டு வாங்குகிறாள் என்பது பச்சமலை கிராமத்து மக்களுக்குத் தெளிவாகப் புரிந்தது.

“வருத்தப்படாத, தாயீ. எங்களுக்குப் பழகிப்போச்சு இதெல்லாம்”, என்று சமாதானப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டாள் அவள். சட்டென்று ஒடுங்கி விலகிய பச்சமலை கிராமத்தின் வழிகாட்டியாக வந்த இளைஞர்களும் அன்று வர மறுக்க, கிராமத்தினர் யாரும் இல்லாமல் ஆய்வுக் குழுவினர் மட்டும் மலை ஏற ஆரம்பித்தார்கள். இவளை அதட்டி அழைத்த குரலுக்கு அடிபணிந்து அவள் முகத்தைத் துடைத்துக்கொண்டு நடக்க ஆரம்பிக்கும் போது அவள் கையை பூம்பிஞ்சு வந்து பிடித்தாள். 

கையைப் பிடித்த பூம்பிஞ்சைப் பார்த்தாள் சுனைனா. பிறகு சரேலென்று மண்டியிட்டு அமர்ந்து அவள் கன்னங்களில் முத்தமிட்டாள். அவளிடம், “நீ இங்கயே இரு. நான் போயிட்டு வந்திடுவேன்”, என்று சொல்லிவிட்டு கையை விடுவித்துக்கொண்டுத் திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்தாள். மேல் ஏறும் உருவங்கள் உச்சியின் அடர் காட்டிற்குள் சென்று பார்வையிலிருந்து மறையும் வரை பச்சமலை கிராம மக்கள் நடந்ததைப் பற்றிப் பேசிக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உச்சிக் காட்டிற்குள் சென்ற மனிதர்கள் யாரும் அதன்பின் வெளியே வரவேயில்லை.