சிறுகதை

4.63k படித்தவர்கள்
20 கருத்துகள்

இன்று

‘வெட்டியாக உட்கார்ந்து தேவையில்லாதவற்றைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்க வேண்டாம். எழுந்து சென்று கடையைத் திறக்கலாம்’ என்று முடிவெடுத்த போது நேரம் சரியாகக் காலை ஒன்பது மணி.

நல்ல முகூர்த்த நாள். வீடு புதிதாக வெள்ளையடிக்கப்பட்டு பொருட்களெல்லாம் ஒழுங்கில்லாமல் இருந்தன. வீட்டில் யாருமில்லை. அனைவரும் மொத்தமாக ஓரிடத்தில் குவிந்திருந்தனர். ஒருவேளை அவர்கள் இப்போது என்னைத் தேடிக் கொண்டுகூட இருக்கலாம். அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படும் நிலையில் இல்லை. எழுந்து சென்று குளித்துவிட்டு வந்தேன். 

தலை லேசாக வலிப்பது போல் இருந்தது. முந்தைய இரவு முழுவதும் தூங்கவில்லை. இப்போதும் தூக்கம் வரவில்லை. ஆனால், சோர்வாக இருந்தது. ஒருவேளை மதியத்திற்கு மேல் தூக்கம் வந்தால் கடையைச் சாத்திவிட்டு வந்துவிடலாமென்று நினைத்துக் கொண்டேன். ஆனால், அதற்குள் மற்றவர்கள் வீட்டிற்கு வந்துவிடுவார்கள். அவர்கள் என்னைத் தூங்க விடுவார்களா என்று தெரியவில்லை. 

உடைகளை அணிந்துகொண்டு கடைச் சாவியை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து ஜன்னல் வழியாகவும் வாசல் வழியாகவும் இன்னும் வெவ்வேறு இடங்களிலிருந்தும் என்னையே பார்ப்பது தெரிந்தது. என்னிடம் வந்து விசாரிக்கத் தயங்கினார்கள். ஏதாவது கேட்டுவிடுவார்களோ என்று எனக்கும் அச்சமாகத்தான் இருந்தது. 

ஆனாலும், எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து வீட்டிலிருந்து ஐந்து தெரு தள்ளி மார்க்கெட் தெருவின் ஒரு குறுக்கு சந்தின் முனையிலிருந்த எனது ‘கணேஷ் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக் ஒர்க்ஸ்’ கடையை நோக்கி நடந்தேன்.

நான் வழியில் யாரையும் பார்க்கவில்லை. பலரின் கண்கள் என் மீதே இருந்ததென்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை. மெதுவாக நடந்து எனது கடைக்கு வந்து அதன் பூட்டுக்களை விடுவித்து ஷட்டரைத் தூக்கினேன். 

ஒரு கணம் மொத்த மார்கெட்டுமே அமைதியாகி எனது கடையின் ஷட்டர் சத்தம் மட்டுமே அங்கே இருப்பது போல் தோன்றியது. கடையைத் திறந்து வழக்கமாக வெளியே மக்களின் பார்வையில் படும்படி எடுத்து வைக்க வேண்டியதை எடுத்து வைத்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்து சுற்றிப் பார்த்தேன். 

அதுவரை தங்கள் பார்வைகளை என் மீது நிலைக்குத்தி அசைவற்று இருந்த உலகம் சட்டென தங்கள் பார்வையின் திசையை மாற்றி உயிர்பெற்று இயங்கத் தொடங்கியது. பலர் மிகவும் சிரமப்பட்டு என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தனர். நான் என் முன்பிருந்த மிக்சியின் மேல் பாகங்களைக் கழற்றத் தொடங்கினேன்.

என்னால் கவனத்தை ஓரிடத்தில் குவிக்க முடியவில்லை. கையிலிருந்த ஸ்குரூ டிரைவரை இரண்டு முறை கீழே போட்டேன். சுற்றி இருந்தவர்கள் அனைவரும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பது போல் ஓர் உணர்வு. என்னால் அந்த எண்ணத்தை மட்டும் தவிர்க்கவே முடியவில்லை. ஒருவேளை அது உண்மையாகவும் இருக்கலாம். 

இரவு சாப்பிட்டது. பசிப்பது போல் இருந்தது. துயரங்களையும் துன்பங்களை எளிதில் பின்னுக்குத் தள்ளக்கூடியது பசி மட்டுமே. ஒருவேளை சிலர் அப்படியில்லை. துயரத்தின் முன் பசி ஒன்றுமே இல்லையென்று சொல்லி நடிக்கலாம். ஆனால், பசிதான் கடைசியில் வெல்லுமென்பதே நிதர்சனம். 

எனது கடைக்கு இரண்டு கடைகள் தள்ளியிருந்த டீக்கடைக்கு ஒரு குரல் கொடுத்தேன். அவர் பார்த்துவிட்டு தலையசைத்தார். தொடர்ந்து கைப்பேசி அடித்துக்கொண்டேயிருந்தது. எடுத்து அணைத்து வைத்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு அவரே கையில் டீயை எடுத்துக்கொண்டுவந்தார். வழக்கமாக கடைப்பையனிடம் தான் கொடுத்து அனுப்புவார். 

காலையிலிருந்து அவர் மண்டைக்குள் என்ன ஓடிக்கொண்டிருந்திருக்குமென்று என்னால் யூகிக்க முடிந்தது. என்னிடம் சகஜமாகப் பேசக்கூடியவர் என்பதால் கேட்டுவிடலாமென்று எண்ணியிருப்பார்.

“என்னப்பா” என்றார்.

“அவ்ளோதான்னே. வேலையப் பாக்க வேண்டியதுதான்.”         

“ரொம்ப கஷ்டமா இருக்குதுபா.”

நான் அவருக்குப் பதில் சொல்ல தொடங்கியபோது என் கடையின் பக்கவாட்டிலிருந்து ஐந்து வீடுகள் தள்ளியிருந்த ஒரு வீட்டின் வாசலில் ஆட்டோ  ஒன்று வந்து இறங்கியது. ஆட்டோவிலிருந்து இன்னும் யாரும் இறங்கவில்லை. ஆனால், அருகிலிருந்தவர்கள் சற்று அதிர்ச்சியுடன் ஆட்டோவை சூழ ஆரம்பித்தனர்.

ஏதோ வித்தியாசமாக நடப்பதுபோல் தோன்றியது. நானும் டீக்கடைக்கார அண்ணனும் உற்றுக் கவனித்தோம். ஆட்டோவிலிருந்து இருவர் இறங்கினர். இருவரும் கழுத்தில் ரோஜாப்பூ மாலை அணிந்திருந்தனர். அவன் ஜீன்ஸும் டீசர்ட்டும் அணிந்திருந்தான். அந்தப் பெண் பட்டுப்புடவை அணிந்து மணமகளைப் போலவே இருந்தாள். 

சூழ்ந்திருந்த கும்பலைத் தாண்டி அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் ஒரு நொடி நான் அதிர்ந்தாலும் சட்டெனச் சமாளித்துக்கொண்டேன். ஆனால், அருகிலிருந்த டீக்கடைக்கார அண்ணன் உலகமே இடிந்து விழுந்த மாதிரி, “தம்பி” என்று கத்தினார். மேலும் சுற்றியிருந்த கடைக்காரர்கள் தெரிந்தவர்கள் என அனைவருக்குமே அவ்வாறான அதிர்ச்சி ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை. 

பலர் அந்தப் பெண்ணையும் என்னையும் திரும்பித் திரும்பிப் பார்த்தனர். என்னுடைய எதிர்வினையைத் தெரிந்துகொள்வதில் பலருக்கும் ஆர்வமிருந்ததை என்னால் உணர முடிந்தது. ஆனால், உண்மையில் இப்போது என்ன செய்ய வேண்டுமென்றே தெரியவில்லை. கோபம்கூட வரவில்லை. ஒருவேளை  நான் என்ன செய்ய வேண்டுமென்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் புரியவில்லை.  அவளைப் பார்த்தேன். 

உண்மையை சொன்னால் அவளை இப்போதுதான் சரியாக முழுமையாகப் பார்க்கிறேன். நேற்று மாலை மண்டபத்தில் இதே போன்றதொரு மாலையுடன் முகம் முழுக்க சிரிப்புடன் எனது தோளை உரசியபடி மணப்பெண்ணாக அருகில் அவள் நின்றுகொண்டிருந்தபோதுகூட நான் அவளைச் சரியாகக் கவனிக்கவில்லை என்பதே உண்மை. 

முழுமையாக பன்னிரண்டு மணி நேரத்திற்குள் இவ்வுலகே தலைகீழாக  மாறிவிட்டது போல் இருந்தது. அவள் இப்போது வேறு ஒருவன் மனைவியாக நின்றுகொண்டிருக்கிறாள்.

நேற்று

நான் யாருக்காகவோ அளவெடுத்து தைக்கப்பட்ட  சூட்டை அணிந்து கொண்டு, கழுத்தில் மாலையோடும் கையில் செண்டோடும் அருகில் வருங்கால மனைவியோடும் மனம் முழுக்க சந்தோஷத்தோடும் நின்றுகொண்டிருந்தேன். விடிந்தால் கல்யாணம். இப்போது ரிசப்ஷன். இது ஒரு விநோதமான சடங்காக மாறிவிட்டிருந்தது.

சொந்தங்கள் நண்பர்கள் எனப் பலரும் வரிசையாகக் கொடுத்த வாழ்த்துகளையும் பரிசுகளையும் வாங்கிவிட்டு, சாப்பிட்டு முடித்து மணமகன் அறைக்கு வந்து உட்கார்ந்தபோது மணி சரியாக பதினொன்று. 

அப்பாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மாமாக்கள் இருவர் மொய்ப் பணத்தைக் கவனமாக எண்ணிக் கொண்டிருந்தனர். எனக்கு மிகவும் சோர்வாக இருந்தாலும் தூக்கம் வரவில்லை. அறையில் நண்பர்களின் அரட்டை. மனம் முழுக்க கனவுகள். இது காதல் திருமணம் இல்லை. அவளிடம் நான் இன்னும் சரியாகப் பேசக்கூட இல்லை.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ஒவ்வொரு ஜாதிக்கென்று இருக்கும் மேட்ரிமோனியல் இணையதளங்களில் எனது ஜாதிக்கென்று இருந்த மேட்ரிமோனியல் இணையதளத்தில் பதிந்து, அப்பா இந்த இடத்தைப் பிடித்திருந்தார். புகைப்படத்திலும் பிறகு நிச்சயதார்த்தத்திலும் அவளைப் பார்த்தது. சுற்றி இருந்தவர்களின் எந்தப் பேச்சுகளும் காதில் விழவில்லை. மனம் எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தது. நேரம் பன்னிரண்டைத் தாண்டியிருந்தது.

“தூங்கறதுதானடா” என்றான் நண்பன் ஒருவன்.

“சாருக்கு இன்னிக்கி எப்படி தூக்கம் வரும்?” என்று சிரித்தான் மற்றொருவன்.

“நாளைக்கு கண்ணு முழிக்கனும்ல” என்றான் இன்னொருவன்.

திடீரென்று வெளியே ஒரு சலசலப்பு. “என்னன்னு பாருடா” என்று ஒரு நண்பனை அனுப்பினேன். போனவன் நீண்ட நேரமாக வரவில்லை. ஆனால், வெளியே சத்தம் அதிகமாக, சந்தேகப்பட்டு நானும் மற்ற நண்பர்களும் வெளியே சென்றோம். 

முதலில் சென்றவன் வேகமாக என் அருகில் வந்து, “ஒன்னும் இல்ல. வாடா” என்று என்னை உள்ளே அழைத்துச் செல்ல முயன்றான். ஆனால், தூரத்தில் என் அப்பாவும் கத்திக் கொண்டிருந்தார். நான் அவனை முறைத்தேன். அவன் தலையைக் குனிந்தபடி, “மச்சான், பொண்ணு ஓடிப்போச்சிடா” என்றான்.

“என்ன?”

“ஆமாடா.”

எனக்கு ஒன்றும் புரியவில்லை. மெல்லச் சச்சரவு நடந்து கொண்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். நேராக என் அப்பாவின் அருகில் சென்றேன். அவர் இடிந்துபோய் உட்கார்ந்திருந்தார். 

என் அம்மா பெண் வீட்டாரை வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்தாள். என் அப்பா மெல்ல என் கையைப் பிடித்து, “இத்தன லட்சம் செலவு பண்ணி இப்படி ஆயி போச்சேடா” என்றார். 

எனக்கு எரிச்சலாக இருந்தது. ‘சுற்றி இத்தனை பேர் நின்று வேடிக்கை பார்க்கிறார்களே அவமானமாக இருக்கிறது’ என்று சொல்லியிருந்தால்கூட பரவாயில்லை. 

இப்போதுகூட இந்த ஆள் காசிலேயே குறியாக இருக்கிறானே என்று யோசித்துக்கொண்டிருந்த போது பெண்ணின் அம்மா “அய்யோ இத்தினி லட்சம் செலவு பண்ணி படிக்க வெச்சதுலாம் வீணாப் போச்சே, நாப்பது பவுன் நகைய வேற தூக்கினி போயிட்டாலே. மொத்தமா இந்தக் குடும்பத்த சந்தி சிரிக்க வெச்சிட்டாளே” என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள். 

பெண்ணின் சொந்தக்காரர்கள் ஆளுக்கு ஒரு போனை வைத்துக்கொண்டு விசாரிக்கும் பாவனையில் விஷயத்தை ஊர் முழுக்க தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தனர். கல்யாணத்திற்கு அட்வான்ஸ் வாங்கியிருந்தவர்களின் முகங்களில் பீதி தெரிந்தது.

நான் சுற்றிப் பார்த்தேன். பலர் என்னையே பாவமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். என் நண்பன் ஒருவன் என் தோளின் மீது கை வைத்தான். திரும்பிப் பார்த்தேன். முகத்தைச் சோகமாக வைத்திருந்தான்.

“என்னடா?”

“ரூமுக்குப் போவலாம், வா!”

“போயி...”

“இங்க நின்னு என்னடா பண்ணப்போற?”

“அதத்தான்டா நானும் கேக்கறன், இங்க இருந்து என்னப் பண்ணப்போறோம்?”

அவன் அமைதியாக இருந்தான்.

“செரி, நான் வீட்டுக்கு போறேன்” என்று புறப்பட்டேன்.

“தம்பி தம்பி” என்று பெண்ணின் சொந்தக்காரர் ஒருவர் என் கையைப் பிடித்து கொண்டார்.

“அவசரப்படாதீங்க தம்பி. எப்படியும் முகூர்த்தத்துக்குள்ள கண்டுபுடிச்சிடுவாங்க.”

“ஏங்க லூசு மாதிரி பேசறீங்க. அந்தப் பொண்ணு என்னப் புடிக்கலன்னுதானே போயிருக்கு” என்று அவர் கையை உதறி விட்டு நகர்ந்தேன். நண்பர்கள் என்னுடன் வர நகர்ந்தார்கள். அவர்களை அப்பாவுடன் இருக்கச் சொல்லிவிட்டு புறப்பட்டேன். 

பின்னால் என் அப்பா கத்திக்கொண்டிருந்தது கேட்டது, “ஒழுங்கு மரியாதையா இதுவரைக்கு ஆன செலவ எடுத்துவெச்சிட்டு யாரா இருந்தாலும் இந்த எடத்த விட்டு நகருங்க” என்றார். 

பெண்ணின் அம்மா, “ஏங்க, நாங்ககூடத்தான் செலவு செஞ்சிருக்கோம். எங்களுக்கும்தான் போச்சி” என்றாள். மண்டபம் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்ததால் எனக்கு அங்கேயே காறித் துப்பத் தோன்றவில்லை.

இன்று

வர்கள் இருவரும் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தனர். அந்தப் பையனின் அப்பா வெளியே வந்து கத்திக் கொண்டிருந்தார். அவருக்கு அந்தப் பெண் யாரென்று தெரிந்திருந்தது. அது அவர் பேச்சிலேயே தெரிந்தது. அவன் அம்மா தலையில் அடித்து அழுது கொண்டிருந்தாள். தெருவே கூட்டத்தால் அடைபட்டிருந்தது. பையனின் அப்பா கத்துவது எனக்கு நன்றாகக் கேட்டது.

“இத்தன லட்சம் செலவு பண்ணி உன்னப் படிக்க வெச்சதுக்கு என்ன செஞ்சிட்டு வந்திருக்க? ஒரு வேலைக்கு போயி குடும்பத்த காப்பாத்த துப்புல்ல, படிக்க வாங்க லோன இன்னும் அடைக்கவே ஆரம்பிக்கல. உன் தங்கச்சிக்கு ரெண்டு லட்சம் செலவு பண்ணி காலேஜில சேத்திருக்கு. இன்னும் மூனு வருஷத்துக்கு எத்தன லட்சம் கட்டனும்னே தெரியல, அதுக்குள்ள உனுக்கு கல்யாணம் ஒரு கேடு. அதுவும் வேற ஒருத்தனுக்கு கல்யாணத்துலருந்து தூக்கிட்டு வந்திருக்க. ஏம்மா, இப்ப இவன் மேல போலிஸ் கேசு குடுத்து உள்ள வெச்சிட்டா எவன்கூட போயி குடுத்தனம் நடத்துவ?”

“அதெல்லாம் யாரும் உள்ள வெக்க முடியாது, நானாத்தான் வந்தேன்” என்றாள் அவள்.

“இதெல்லாம் நல்ல வக்கனையா பேசு. போங்க போயி எங்கனா நாசாமா போங்க. யோவ், ஏன்யா என் வூட்டு முன்னால வந்து கூட்டமா நிக்கறீங்க?” என்று அவர் கத்தி முடித்ததும் கூட்டம் லேசாக நகர்வது போல் நடித்தது. 

கத்திக்கொண்டிருந்தவர் சட்டென என் முகத்தைப் பார்த்து சங்கடமாகி தலையைக் குனிந்துகொண்டு உள்ளே சென்றார். அதைப் பார்த்த அவர் மகன் வேகமாகக் கழுத்திலிருந்த மாலையைக் கழட்டிக்கொண்டே என்னை நோக்கி வந்து, “இப்ப உனுக்கு சந்தோஷமா?” என்றான். அவன் அருகிலிருந்த டீக்கடைக்கார அண்ணன் அவன் கன்னத்தில் பளாரென்று ஒன்று வைத்தார்.

“அண்ணே” என்றேன்.

“இன்னா திமிரு பாரேன். ஏன்டா, அவன் வாழ்க்கைய கெடுத்துட்டு, அவன் பொறுமயா இருந்தா இன்னா வேணா பேசுவியா? செருப்பால அடிப்பேன் நாயே.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அந்தப் பையனை அவர் அடித்ததுமே அந்தப் பெண் வேகமாக ஓடி வந்தாள். வரும்போதுதான் என்னைக் கவனித்தாள். சட்டென அவள் வேகம் குறைந்தது. கடை வாசலில் வந்து அமைதியாக நின்று கொண்டாள். தலையை உயர்த்தி என்னைப் பார்க்கவே இல்லை.

“வா, போலாம்” என்றான் அவன்.

“டேய்...”

அவன் திரும்பி என்னைப் பார்த்தான்.

“அந்த சேர்ல ரெண்டு பேரும் உக்காருங்க.”

அவன் கோபமாக என்னை முறைத்தான்.

“ங்கோத்தா... உக்காருடா” என்று குரலைக் குறைத்து கோபத்தை அதிகப்படுத்திச் சொன்னேன். இருவரும் தயங்கியபடியே உட்கார்ந்தார்கள். அதற்குள் அந்தப் பையனின் தங்கை வீட்டிலிருந்து இரண்டு மூன்று முறை எட்டிப்பார்த்துவிட்டுச் சென்றாள். 

அவன் வீட்டின் முன் கூட்டம் குறைந்தது. சுற்றியிருந்தவர்களின் கண்கள் எங்கள் மீதே இருந்தன. நான் டீக்கடைக்கார அண்ணனிடம் அவர்களுக்கு டீ கொடுக்கச் சொன்னேன்.

அவர் “தம்பி” என்றார்.

“குடுங்கண்ணே.”

டீ வந்தது. முதலில் இருவரும் மறுத்தனர். பின்பு வாங்கிக் கொண்டனர். டீயை மெல்ல உறிஞ்சியபடி அந்த பெண், “நான் உங்க கிட்ட சொல்லனும்னு டிரை பண்ணேன்” என்றாள்.

“ஓ...”

“உங்க மேலதான் தப்பு. எனக்கு உங்களப் பிடிச்சிருக்கான்னு நீங்க என் கிட்ட கேக்கவேயில்ல.”

“ஆமா, என் தப்புதான்.”

இருவரும் டீ குடித்து முடித்தனர். மீண்டும் அந்த இடம் அமைதியானது. அந்தப் பையனின் தங்கை மெல்ல என் கடையை நோக்கி வந்தாள். அவர்கள் இருவரிடமும், “அப்பா உங்கள கூப்பிட்டார்” என்றாள். இருவரும் மெல்ல எழுந்து சென்றனர். இருவருமே என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. என் முகத்தைக்கூடப் பார்க்கவில்லை. வீட்டு வாசலில் போய் நின்றனர். 

அவன் அம்மா வீட்டிற்குள் அழைத்தாள். இன்னொரு பெண் தடுத்து, “மொத மொத வருது, ஆரத்தி எடு” என்றாள். அங்கே ஏதேதோ நடந்துகொண்டிருந்தது. அந்தப் பையனின் தங்கை இன்னும் போகாமல் கடையிலேயே நின்றிருந்தாள்.

“என்ன” என்றேன்.

“அம்மா, மிக்சி ரிப்பேருக்கு தந்தாங்களாமே, ரெடியான்னு கேட்டாங்க. அண்ணிக்கு டிபன் செய்யனுமாம்.”

சட்டென ஏற்பட்ட எரிச்சலை அடக்கிக்கொண்டு, “இன்னும் ரெடியாகலன்னு சொல்லு.”

“ம்… ஆமா, உங்களுக்கு கல்யாணம்னு சொன்னாங்க. என்னிக்கு? லீவுல போறதுக்கு முன்னாடி மிக்சிய கொடுத்துட்டு போங்க”

எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. அதற்குள் அந்தப் பெண்ணின் அம்மா வந்து எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றாள்.

“சீக்கிரம் வீட்டுக்குப் போ. அப்பறம் ஆறு லட்சத்தக் காணோம்னு உங்கப்பா கத்திக்கிட்டு வரப்போறாரு”

“என்ன?” என்று அவள் புரியாமல் கேட்டாள்.

“வீட்டுக்குப் போ” என்றேன்.

அவள்  போய்க் கொண்டிருந்தாள். அவள் பின்னால் பெண்ணின் குடும்பத்தார் காரில் வந்து இறங்கிக் கத்த ஆரம்பித்தனர். 

இன்னொரு காரில் என் அப்பாவும் அம்மாவும் வந்து இறங்கினர். “நான் செலவு பண்ண பணத்துக்கு பதில் சொல்லுங்க” என்று அவர் கத்துவது நன்றாகக் கேட்டது. என் திருமணம் நின்றுவிட்டது என்ற வருத்தமே அவருக்கு ஏற்படவில்லை. ஏதோ ஒரு வியாபாரம் படியவில்லை. அவ்வளவுதான் என்றே தோன்றியது. தூக்கம் வருவது போல் இருந்ததால் கடையை அடைக்கத் தொடங்கினேன்.