அத்தியாயம் 1

328.12k படித்தவர்கள்
67 கருத்துகள்

ரேந்திரன் கொதிப்பாயிருந்தான்.

அலுவலகக் கதவைத் திறந்தபோதே வெறுமை நிலவியது. ரிசப்ஷன் ஹாலில் அமர்ந்து படபடவென்று கம்ப்யூட்டரில் ஏதாவது தட்டிக்கொண்டிருக்கும் மீரா இல்லை.

அவ்வப்பொழுது அவளுடைய செருப்புகளை வந்து முகர்ந்து பார்த்துவிட்டு, தலைநிமிர்ந்து அவள் கொடுக்கும் ஒன்றிரண்டு பிஸ்கட்டுகளுக்காக வாலை ஆட்டி நிற்கும் ஜூனியர் இல்லை.

நேர் எதிரே விசிட்டர் அறையில் போடப்பட்டிருந்த சோபாக்களுக்கு துணி மாற்றிய பிறகு அதை கசக்க யாரும் வரவில்லை.

வலதுபுறம் இருந்த ராம்தாஸின் நெடிய அறை. உள்ளே டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்குத் தோதாக அவருடைய பெரிய மேஜை. அதன் ஓரத்தில் நவீன கம்ப்யூட்டர். மேஜைக்கு அடியில் சில ரகசிய பொத்தான்கள். அவருடைய சுழலும் நாற்காலி. மேஜை மீதிருந்த மூன்று நான்கு வெவ்வேறு வண்ண தொலைபேசிகள், எல்லாமே அவனைப் பார்த்து ஏளனம் செய்தன. முந்தின நாளே ராம்தாஸ் கூப்பிட்டுச் சொல்லியிருந்தார்.

“ஆபீஸில் எல்லோரும் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு மாற்றம் தேவை. அதனால் நாங்கள் எல்லோரும் ஒருநாள் விடுமுறையாக ஆந்திரா வரை போகிறோம்..”

“நான்..?” என்றான் நரேந்திரன்.

“வேலை செய்பவர்களுக்குத்தான் விடுமுறை. நீ அந்தப் பிரிவில் வரவில்லை”

“தாஸ், இது அநியாயம். வருஷத்தின் முன்னூற்று அறுபது நாட்கள் நான் வேர்வையை சிந்தி உழைக்கிறேன். இதோ இங்கே இருக்கிறதே இந்த மேஜை, நான் ரத்தம் சிந்தி நீங்கள் சம்பாதித்தது..”

அவனுடைய நகைச்சுவையை ரசிப்பது போல் சிரித்தார் ராம்தாஸ்.

“எல்லோரும் என்றால் யார் யார் தாஸ்?”

“மீரா, ஜான், அனிதா, ஜூனியர், நீ அனுமதித்தால் வைஜயந்தி”

“தாஸ்.. கடைசியில் அடி மடியிலேயே கை வைக்கிறீர்களே. வைஜயந்தியையாவது கொண்டுவிட்டுப் போங்கள். நீங்கள் எல்லோரும் திரும்பி வந்த பின் நாங்களிருவரும் ஹாலிடேக்காக எங்காவது போய் வருகிறோம்..”

ராம்தாஸ் சிரித்துக்கொண்டே பைப்பில் புகையிலையை நிரப்பினார்.

“தாஸ், அப்படி எந்த துரோகமும் செய்து விடாதீர்கள். உங்களோடு என்னை அழைத்துப் போங்கள்..” என்று வைஜயந்தி சொன்னபோது, நரேந்திரன் அவள் தொடையில் நறுக்கென்று கிள்ளினான்.

“துரோகி..” என்று ஆவேசமாய் குரல் கொடுத்தான்.

ராம்தாஸ், வைஜயந்தியின் தோளைத் தட்டிக் கொடுத்தார்.

“வேண்டாம் வைஜ். நீ நரேந்திரனோடு ஆபீசிலேயே இரு..”

“தாஸ்..” வைஜயந்தி அழகாக சிணுங்கினாள்.

“ஏன் இந்த ஓரவஞ்சனை?”

“ஓரவஞ்சனையில்லை வைஜ்.. இவ்வளவு பெரிய ஆபீஸை நரேந்திரனை மட்டும் மொத்தமாக நம்பி விட்டுவிட்டுப் போக முடியுமா?”

“தட்ஸ் எ பாயிண்ட்..” என்றாள் வைஜயந்தி.

“தாஸ், இதற்குப் பதில் எனக்கு ப்ரோமோஷன் கொடுத்து சாக்கடை கழுவச் சொல்லியிருக்கலாம்..” என்று முணுமுணுத்தான் நரேந்திரன்.

இரவு அலுவலகத்தில் படுத்திருந்தபோது சர்தார்ஜி கடையில் சாப்பிட்ட சன்னா பட்டூரா, குழப்பமான பல கனவுகளை அவன் மண்டைக்குள் கிளர்த்திக் கொண்டிருந்தது. நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும்போது ஜன்னல் கதவு பட்பட்டென்று தட்டப்பட்டது.

நிமிர்ந்து பார்த்தால், ஜன்னல் கம்பிகளில் முகம் பதித்தபடி வைஜயந்தி.

ரகசியமான குரலில் ‘ஸ்ஸ்’ என்று பாம்புச் சீறல்.

“நரேன், கதவைச் சீக்கிரம் திற..”

நரேந்திரன் கால் தடுக்க கதவை அடைந்து தாளை நீக்கினான்.

“நரேன், அம்மா நன்றாகத் தூங்கும் வரை காத்திருந்துவிட்டு நைஸாக ஓடி வந்துவிட்டேன்..”

“என்னது, ஓடி வந்துவிட்டாயா?”

“பின்னே, நீ ஆபீசில் தனியாகப் படுத்திருக்கிறாய் என்ற நினைப்பே என் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது..”

நரேந்திரன் காலடியில் யாரோ ராக்கெட்டைப் பற்ற வைத்தது போல் ஜிவ்வென்று சில வினாடிகள் விண்வெளி வரை போய் வந்தான்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“வைஜ், இப்படி ஒரு நாளுக்காகத்தான் நீ காத்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டதே. அதற்காக வீட்டிலிருந்து கிளம்பும்போது இப்படி நைட்டியுடனா கிளம்பி வருவது?”

“யாரைப் பார்க்க வருகிறேன்.. என் நரேனைத்தானே?”

“வைஜ், உடனே ராம்தாஸிற்கு ஃபோன் போடு”

“இந்த அர்த்த ராத்திரியிலா?”

“ஆமாம்.. தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பு. அது என்ன ஒரே ஒரு நாள் விடுமுறை? ஆபீஸ் ஊழியர்கள் எல்லாம் மிகவும் களைத்திருப்பார்கள். ஒரு வாரம் சுற்றிவிட்டு வாருங்கள் என்று சொல்லிவிடலாம்..”

“ச்சீய்..” என்று வைஜயந்தி அழகாக சிணுங்கினாள். அவனுடைய மார்பில் முகம் புதைத்தாள்.

நரேந்திரன் அவளுடைய முதுகில் தன் கையைப் பதித்து மெல்ல கீழே கீழே என்று விரல்களை நடத்திச் சென்றபோது தடதடவென்று மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம்.

திடுக்கிட்டு விழித்தான். ச்சே.. இத்தனை நேரம் அனுபவித்தது வெறும் கனவு. ஒருவேளை கனவில் பார்த்தது நிஜமாகப் போகிறதா? அதற்காகத்தான் கதவு தட்டப்படுகிறதா.. கதவுக்கு வெளியே நைட்டியோடு வைஜயந்தி நிற்கிறாளா?

கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்தான். ஜன்னலை நெருங்கி வெளியே எட்டிப் பார்த்தான். இருட்டில் முகம் சரியாகப் புலப்படாததால், வெளி விளக்கைப் போட்டான். போட்டதும் அதிர்ந்தான்.

மார்பின் மையத்தில் முட்டுவது போல நீளமாக தாடி வளர்த்திருந்த அந்த ஆளின் தாடியிலோ அல்லது அவனுடைய கூந்தலிலோ சிடுக்கு எடுத்து இரண்டு ஒலிம்பிக் பந்தயங்களாவது முடிந்திருக்கும் என்று தோன்றியது. அவனுடைய மேல் துணியில் இரண்டு மூன்று கரப்பான்கள் சுதந்திரமாக உலவிக்கொண்டிருந்தன. கருப்பும் பழுப்புமான பற்களைக் காண்பித்து..

“ஏங்க இதுதான் நாப்பத்தி நாலாம் நம்பரா..?” என்று கேட்டான்.

“அட்ரஸ் கேட்கிற நேரமா இது..?” நரேந்திரன் கொதிப்பானான்.

“அதில்லைங்க ஐயா, சாயந்திரம் பார்த்தபோது, ராவுக்கு வா சோறு போடறேன்னு ஒரு அம்மா சொன்னாங்க. மறந்துடக் கூடாதேன்னு வாசல்ல நம்பரைப் பார்த்துக்கிட்டேன். நாப்பத்தி நாலுன்னு இருந்திச்சு. ஆனா, புது நம்பரா, பழைய நம்பரான்னு கவனிக்கல..”

“ஆமா. உன்னை வரச் சொன்னது இந்த வீட்டு அம்மாதான். ஆனால், சோறு போடுவதாகச் சொன்னதை மறந்து செத்துத் தொலைத்துவிட்டாள். சுடுகாட்டிற்கு எடுத்துப் போயிருக்கிறார்கள். அங்கே போய் வாங்கிக்கொள்..”

நரேந்திரன் படக்கென ஜன்னலை அறைந்து சாத்தினான். அதே கோபத்தோடு படுக்கையில் விழுந்து போர்வையை இழுத்துக்கொண்டான்.

பத்து நொடிகள் கூட ஆகியிருக்காது. மீண்டும் அதே ஜன்னல் தட்டப்பட்டது. இந்த முறை யார்? போய் வேகமாகக் கதவைத் திறந்தான்.

இந்த முறையும் அதே பிச்சைக்காரன்.

“ஐயா, எந்த சுடுகாடுன்னு சொல்லலியே!”

நரேந்திரனுக்கு வந்த கோபத்தில் சிகரெட்டை வாயில் வைத்தால் தானாகவே பற்றிக்கொள்ளும் அபாயம் இருந்தது.

“இதே ரோடுல போ.. அங்கே சிகப்பாய் ஒரு கட்டடம் இருக்கும். வாசலில் சாஸ்திரி நகர் காவல் நிலையம் என்று எழுதியிருக்கும். அங்கே போனால் உன்னைக் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விடுவார்கள்..”

கதவை மீண்டும் அறைந்து சாத்தினான். படுக்க முடியவில்லை. சற்று நேரம் உலாத்தினான். மீண்டும் ஜன்னல் கதவு தட்டப்பட்டது.

படக்கென்று திறந்தான்.

பிச்சைக்காரன்.

“ஐயா.. அந்த அம்மாவோட பேரை கேட்டுக்கவேயில்லையே..”

ஆனாலும் இவனுக்கு எக்கச்சக்க குசும்பு என்று நரேந்திரனுக்குத் தோன்றியது.

“மர்லின் மன்றோ என்று கேள். காட்டுவார்கள்..” என்று சொல்லிவிட்டு “இன்னொரு தடவை கதவைத் தட்டினால் சுடுகாட்டிலிருந்து நீ திரும்ப முடியாது..” என்று ஆக்ரோஷமாகச் சொல்லிவிட்டு ஜன்னலின் கொக்கியைப் போட்டான்.

கட்டிலில் போய் உட்கார்ந்ததும் ரிசீவரை எடுத்து எண்களை படபடவென்று தட்டினான். எதிர்முனையில் பிடிவாதக் குழந்தை போல டெலிபோன் மணி அலறிக்கொண்டே இருந்துவிட்டு கடைசியில் எடுக்கப்பட்டது.

“ஹலோ..” என்று தூக்கக் கலக்கத்துடன் கொட்டாவி கலந்து வைஜயந்தியின் குரல் கேட்டது.

“வைஜ், நீ உடனே புறப்பட்டு வா..”

அவளுக்கு விழிப்பு வந்து, “நரேன் உனக்கு என்ன பைத்தியமா? இப்போது மணி என்ன தெரியுமா? இரவு ஒன்று..” என்று உறுமினாள்

“தெரியும் வைஜ்.. தயவு செய்து வந்து என்னைக் காப்பாற்று..”

“நரேன்.. ஆர் யூ இன் ட்ரபிள்?”

“ஆமாம்.. பெயர் தெரியாத தாடிக்காரன் ஒருவன் வந்து தொந்தரவு செய்கிறான்.. ஈகிள்ஸ் ஐ யிலிருந்து என்றைக்காவது வெளியே போய் தனியாக ஆபீஸ் திறந்தேன் என்றால் அந்த இடத்துக்கு ஜன்னல்களே இருக்காது. கதவே இருக்காது..”

“நரேன்.. ஆர் யூ மேட்?”

“இல்லை வைஜ்.. தனியாகத் தூங்க முடியவில்லை.. சேர்ந்து தூங்கலாமே.. வாயேன்”

“ராஸ்கல்.. அப்படி இப்படி சுற்றிவிட்டு கடைசியில் அங்கேதான் வருகிறாயா?”

“வைஜ்.. வைஜ்.. நீ தப்பாகப் புரிந்து கொள்ளாதே. என்னை ரூமில் வைத்துப் பூட்டிவிட்டு வெளியில் படுத்துத் தூங்கு.. ஆனால், தயவு செய்து ஃபோன் கால்களையும், காலிங் பெல்களையும் நீ கவனித்துகொள்.. எத்தனை நேரம் மனிதன் தூங்காமலேயே இருக்க முடியும்?”

“அளவுக்கு மீறி பீர் சாப்பிட்டால் அப்படித்தான்..”

“உன் மீது சத்தியமாக, என் மீது சத்தியமாக, நம் பேரக்குழந்தைகளின் மீது சத்தியமாக நான் பீர் தொடவேயில்லை.”

“பின்னே குரல் குழறுகிறது..”

“அது.. அது.. சும்மா கொஞ்சமே கொஞ்சம் ஜின்தான் சாப்பிட்டேன்”

“செருப்பால் அடி.. கழுதை..”

“வைஜ்.. ப்ளீஸ்.. வருவாயா?”

“நாட் நௌ..” என்றாள் வைஜயந்தி.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“சரி.. பத்து நிமிடம் கழித்துக் கிளம்பு..”

“விளையாடாதே நரேன். நான் நன்றாகத் தூக்கத்தில் இருந்தேன். சுகமான கனவு கண்டுகொண்டிருந்தேன்..”

“அங்கேயுமா? இங்கே கனவில் நீ வந்தாய்.. அங்கே கனவில் நான் வந்தேனா..?” நரேந்திரன் ஆவலோடு கேட்டான்.

“இல்லை. தாடி வைத்துக்கொண்டு ஒரு ஆள்தான் வந்தான்.. கதவைத் தட்டி, சோறு கிடைக்குமா என்று கேட்டான்..”

நரேந்திரன் பட்டென்று ஃபோனை வைத்துவிட்டான்.

வைத்து மூன்றாவது நொடியில் ஃபோன் ஒலித்தது.

“நரேன்.. ஆர் யூ சீரியஸ்? நிஜமாகவே உனக்கு கம்பெனி வேண்டுமா?”

“ஆம் வைஜ்.. ஒரு அரை மணி நேரம் சமாளித்துப் பார்க்கிறேன். முடியவில்லை என்றால் உனக்கு ஃபோன் செய்கிறேன். உடனே நீ புறப்பட்டு வா..”

“ஓ.கே.. ஆனால் உன்னை வைத்துப் பூட்டிவிட்டுத்தான் நான் படுப்பேன்..”

இன்னொரு கொட்டாவி விட்டுவிட்டு மறுமுனையில் ரிசீவரை வைக்கும் சத்தம் கேட்டது.

நரேந்திரன் ஃபோனை வைத்துவிட்டு தலையணையை எடுத்து கட்டிக்கொண்டு நெற்றிவரை போர்வையை மூடிக்கொண்டான். தொலைந்து போன தூக்கமே வா.. வா..

“டிடிங்.. டிடிங்..”

அழைப்பு மணி அந்த ராக்கால அமைதியை முற்றிலுமாக சிதறடித்துக்கொண்டு ஒலித்தது.

நரேந்திரன் திடுக்கிட்டு எழுந்தான்.

“ராஸ்கல்.. அந்தப் பிச்சைக்காரன் இன்னும் போகவில்லையா? இந்த முறை அவனுக்கு நிஜமாக ஷாக் கொடுக்கப் போகிறேன்..”

பாய்ந்து மேஜையிலிருந்து துப்பாக்கியை எடுத்துக்கொண்டான். லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டான். இரண்டே எட்டில் கதவை அடைந்து படக்கென்று திறந்தான். திறந்த வேகத்தில் துப்பாக்கி எடுத்து எதிரில் இருந்தவனின் நெஞ்சில் பதித்து..

“சுட்டுப் பொசுக்கி விடுவேன்.. ராஸ்கல்..” என்றான்.

“ஐயோ..” என்று அலறி இரண்டடி பின்னால் நகர்ந்த உருவத்திற்கு தாடி இல்லை. மீசை இல்லை.

ஐயோ! அது ஒரு பெண்.. நரேந்திரன் அவசரமாக துப்பாக்கியை லுங்கி மடிப்பில் செருகிக்கொண்டான்.

“ஸா..ஸாரி.. நான் யாரோ என்று..”

“மிஸ்டர் நரேன்..?”

அந்தப் பெண்ணின் குரல் கிலுகிலுப்பை போல கொஞ்சியது.

“யெஸ்..” என்றான்.

“உங்களோடு சில நிமிடங்கள் செலவு செய்ய முடியுமா?”

“மிஸ்.. மிஸ் தானே நீங்கள்? இப்பொழுது ராத்திரி அகாலமான ஒரு மணி. இந்த நேரத்தில் நீங்கள் என்னைத் தனியே..”

“ஆம்.. இந்த நேரத்தில்தான் நான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். தயவு செய்து என்னைத் துரத்தி விடாதீர்கள்”

நரேந்திரன் மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் கதவைத் திறந்தான்.

“என் பெயர் சுகிதா..” என்று துவங்கினாள்.

இவள் நவீன பிச்சைக்காரியா, உள் நுழைந்ததும் உண்டியலை குலுக்கி நன்கொடை கேட்கப் போகிறாளா? லுங்கியை அவசரமாக தழைத்துக்கொண்டான்.

“இப்படி விசிட்டர்ஸ் ரூமில் உட்காருங்கள். இரண்டு நிமிடங்களில் வந்துவிடுகிறேன்”

அவளை உட்கார வைத்துவிட்டு அறைக்குள் பாய்ந்தான். டூத் பிரஷ்ஷை எடுத்து அதில் கொஞ்சம் பேஸ்ட்டை பிதுக்கிக்கொண்டு.. (ஏதாவது அவசியம் வந்தால் வாயில் தூக்க வாசனை வந்துவிடக் கூடாது) முகத்தை சோப்பு போட்டுத் தேய்த்து, டீ ஷர்ட்டிலும் ஜீன்ஸ் பேன்ட்டிலும் நுழைந்து ஒரே பாய்ச்சலாக மீண்டும் விசிட்டர்ஸ் ஹாலுக்குள் அவன் சென்றபோது நூறு நொடிகளே ஆகியிருந்தன.

- தொடரும்